(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 38
அறியாமை, பணத்தாசை, பொறாமை மூன்றும் ஒன்று சேர்ந்துவிட்டால் அப்புறம் உண்மையைக் கண்களிலிருந்து மறைப்பதற்கு வேறு எதுவுமே தேவையில்லை. பூத்தொடுப்பதை விட வேகமாக அவள் மனம் உள்ளே நினைவுகளைத் தொடுத்து அலங்கரித்துக் கொண்டிருக்கிறது என்பதை முகத்திலிருந்து கண்டறிய முடிந்தது. முத்தக்காள் தன் வார்த்தைகளின் மூலம் சித்ராவின் பூப்போன்ற இதயத்தை எவ்வளவு தூரம் குத்திக் கிழித்துக் குதறியிருக்கிறாள் என்பதைப் பூமியால் அப்போது உய்த்துணர முடிந்தது. அந்த அநுமானமே அவன் மனத்தை என்னவோ செய்தது. தான் வெளியே சென்றிருந்த நேரத்தில் சொற்களாகிய கூரிய அம்புகளால் முத்தக்காள் சித்ராவைத் துளைத்தெடுத்து அவள் இதயத்தை ரணமாக்கியிருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு பூமி அவள் மீது பரிவு கொண்டிருந்தான். அவன் சிரித்துக் கொண்டே அப்போது அவளைக் கேட்டான். "உலகம் எதையுமே கவனிக்காமல் எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருப்பது போல் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அது உண்மையில்லை. நெருங்கிப் பழகுகிற அல்லது பழக முயல்கிற ஒவ்வோர் ஆணையும் பெண்ணையும் அது விஷமத்தனமான கண்களோடு கூர்ந்து கவனிக்கத் தவறுவதில்லை." "உண்மைதான்! அசத்தியமாகப் பழகுகிறவர்களை மட்டுமின்றிச் சத்தியமாகவும் நியாயமாகவும் பழகுகிறவர்களையும் கூட அது விஷமத்தனமாகத்தான் பார்க்கிறது." "வேறு விதமாகப் பார்ப்பதற்கு அது இன்னும் பழக்கப்படவில்லை. பக்குவமோ, நாகரிகமோ அடையவும் இல்லை." "உலகம் காதலிப்பவர்களைப் பொறுத்துக் கொள்கிறது. நேரடியாக உடனே ஏற்றுக் கொண்டுவிடத் துணிவதில்லை." "நாம் நெருங்கிப் பழகுகிறோம். காதலர்களின் சராசரி அசட்டுத்தனங்கள் அல்லது சேஷ்டைகளில் கூட நமக்கு அக்கறையில்லை. ஆனால் நம்மையும் பழகிய தராசில் அவர்கள் ஏற்கனவே நிறுத்திப் பழகிய விதத்தில் தான் நிறுத்துகிறார்கள். நாம் அப்படி இருக்கிறோமா இல்லையோ என்பது ஒரு புறமிருக்க அவர்கள் அப்படி நிறுத்தே பழகியிருக்கிறார்கள் என்பது தான் இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது." இதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் சித்ரா மௌனமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையில் எவ்வளவோ அர்த்தங்களும், கேள்விகளும், பதில்களும், தகவல்களும் இருந்தன. பூமிக்கு அவை புரிந்தன. சில விநாடிகள் தயங்கிய பின் அவன் உறுதியாக அவளுக்குச் சொன்னான். "மற்றவர்கள் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்வதைப் பற்றியோ, புரிந்து கொள்ளாமலே இருப்பதைப் பற்றியோ நான் கவலைப் படவில்லை. ஆனால் நமக்குள் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காகப் பெருமைபடுகிறேன்." "அதனால்தான் முத்தக்காள் பேசிய எதனாலும் நான் கோபப்படவில்லை. எதிர்த்துப் பதில் பேசவும் இல்லை." "அறியாமை, பணத்தாசை, பொறாமை மூன்றும் ஒன்று சேர்ந்து விட்டால் அப்புறம் உண்மையைக் கண்களிலிருந்து மறைப்பதற்கு வேறு எதுவுமே தேவையில்லை." "இத்தனை பெரிய காரண காரியங்களும் விளக்கங்களும் கூடத் தேவை இல்லை. முத்தக்காளைப் போலக் கணவனை இழந்த நடுத்தர வயதுப் பெண் அப்படித்தான் இருக்க வேண்டிய நிலைமை என்றாலே போதும்." "உலகில் முதன் முதலில் ஆணும் பெண்ணும் கவலைப்படாமல் பழகியிருக்க வேண்டும். இப்படி வம்பும், கலகமும், வந்த பிறகே தற்காப்புக்காக திருமணம் என்ற ஏற்பாடு வந்திருக்க முடியும்." "கதவுக்குப் பூட்டு, கடனுக்கு உத்திரவாதப் பத்திரம், நீதிக்கு மன்றம் என்றெல்லாம் ஏற்பட்டது போலத்தான் திருமணம் என்கிறீர்களா?" "நான் சொல்லவில்லை. பழைய தமிழ்ப் புலவர்களே சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். பொய்யும், வழுவும், ஏமாற்றுதலும் தோன்றி நம்பிக்கையின்மை ஏற்பட்ட பின்னே கலியாணம் என்ற உத்திரவாதம் உலகில் ஏற்பட்டதாம்." "நீங்களும் நானும் ஒருவரை ஒருவர் எவ்வளவுதான் நம்பினாலும் முத்தக்காள் நம் இருவரையுமே நம்பவில்லை." "உண்மையில் அவள் தன்னையே நம்பவில்லை. நான் அப்படிப் பட்டவர்கள் மேல் கோபப்படுவதற்குப் பதில் பரிதாப்பபடவே செய்கிறேன்." "அறிவுள்ள யாவரும் அறியாமை நிறைந்தவர்களுக்காக இரங்குவதும், பரிதாபப்படுவதும் ஒரு சமூக நாகரிகம்." அவளுடைய இந்தப் பொறுமை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு பெண்ணுடன் இன்னொரு பெண்ணுக்கு உள்ள சர்ச்சையில் இருவருமே சண்டை போடுகிறவர்களாக இருந்து விட்டால் அதை முடித்து வைப்பதும் தீர்த்து வைப்பதும் சிரமமான காரியங்கள். அந்த வரையில் முத்தக்காளிடம் இருந்த அநாகரிகம் சித்ராவிடம் இல்லை என்பது அவனுக்கு நிம்மதியளித்தது. அன்று அவனும் சித்ராவும் வழக்கத்தை விட அதிகமாகப் பல விஷயங்களைப் பற்றி மனந்திறந்து பேசிக் கொண்டார்கள். சித்ரா முத்தக்காளைப் பற்றி தன் கணிப்புக்களையும் அநுமானங்களையும் தயங்காமல் அவனிடம் எடுத்துக் கூறினாள். "அந்த அம்மாளுக்குத் தன்னோடு பழகுகிறவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியவில்லை. நீங்களோ நானோ அவர்களுடைய வரவு செலவுகளையும் லாப நஷ்டங்களையும் மட்டுமே கவனித்துக் கொண்டு மற்றவை எதையும் கவனிக்காமல் இருக்க வேண்டும். மற்றவற்றையோ, மற்றவர்களையோ கவனித்தாலே அவர்கள் தன்னையும் தன்னுடைய நலன்களையும் கவனிக்காமல் இருக்கத் தொடங்கி விட்டார்களோ என்ற சந்தேகமும் பயமும் அந்த அம்மாளுக்கு வந்து விடுகிறது. இப்படிப்பட்டவர்களோடு தொடர்ந்து பழகுவதே சிரமமான காரியம்! நீங்கள் எப்படித்தான் தொடர்ந்து பழகுகிறீர்களோ? எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது." இந்தக் கணிப்பைக் கேட்டுப் பூமி வியப்படைந்தான். அப்படியே முத்தக்காளின் குணச்சித்திரத்தைக் கச்சிதமாக வரைந்து காட்டியிருந்தாள் சித்ரா. அவள் முத்தக்காளைப் பற்றிக் கூறியதில் ஒரு வார்த்தை கூட மிகையில்லை என்பது அவனுக்கே நன்கு புரிந்தது. ஆனாலும் அப்போதும் கூட முத்தக்காளை விட்டுக் கொடுக்காமல் தான் சித்ராவுக்கு மறுமொழி கூறினான் அவன். "புரிகிறது! ஆனாலும் வேறு வழியில்லை. இந்த அம்மாளையும், இந்த உண்வு விடுதியையும் இலக்காக வைத்து நாம் விரோதித்துக் கொள்ள நேர்ந்துவிட்ட சமூக விரோதச் சக்திகளை இறுதிவரை எதிர்த்துப் போரிடுவதென்று நான் முடிவு செய்து விட்டேன்." "நீங்கள் முடிவு செய்ததைப் பற்றி அவர்கள் கவலைப்படவோ பொருட்படுத்தவோ தயாராயில்லை. வியாபாரத்தில் லாபம் கிடைப்பதாயிருந்தால் சமூக விரோத சக்திகளோடு கூட அட்ஜஸ்ட் செய்து கொள்ள அவர்கள் தயாராயிருக்கிறார்கள். நமக்கும் முத்தக்காளுக்கும் இந்த அடிப்படை வித்தியாசம் இருக்கிறது." "பணலாபத்தால் மனிதத் தன்மை இழப்பவர்களை நம்பி எந்தப் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்த முடியாது!" "சீக்கிரமே நம்முடைய முத்தக்காள் விஷயத்திலும் அது நிரூபணமாகப் போகிறது பாருங்கள்." சித்ரா இவ்வாறு கூறியிருந்தாலும் பூமி முத்தக்காள் அவ்வளவு தூரம் துணிந்து தங்களை விரோதித்துக் கொள்வாள் என்பதை அப்போது நம்பவில்லை. மெஸ்ஸில் வேலை பார்த்த ஒரு பையன் காணாமற் போனதற்காகத் தானே வேலை மெனக்கெட்டுத் தேடி அலைவது அவளுக்குப் பிடிக்காமலிருக்கலாம். தானும் சித்ராவும் மிகவும் நெருக்கமாகப் பழகுவது அவளுக்குப் பிடிக்காமலிருக்கலாம். அந்தப் பழக்கத்தை அவளால் பொறுத்துக் கொள்ள முடியாமலும் இருக்கலாம். ஆனால் அதற்காக அவள் தன்னுடைய விரோதத்தைத் தேடிக் கொள்ள முன்வருவாள் என்று அவனால் நம்ப முடியவில்லை. சித்ரா உறுதியாகக் கூறினாள்: "நானும் நீங்களும் அவர்கள் கிழித்த கோட்டைத் தாண்டாமல் அவர்கள் இழுத்த இழுப்புக்கு வரமாட்டோமென்று புரிந்து விட்டால் ஹோட்டல் நிர்வாகத்துக்குக் கூட வேறு ஏற்பாடு செய்யத் தயங்க மாட்டார்கள்." "இது அதிகப்படியான கற்பனை சித்ரா! கொஞ்சம் மிகைப்படுத்தி நினைப்பதன் விளைவு இது. முத்தக்காளுக்கு அத்தனை துணிவு கிடையாது என்பதை நான் அறிவேன்." "போகப் போகத் தெரிந்து கொள்வீர்கள்." இந்த உரையாடல் முடிந்து அன்று காலை ஒன்பது மணியளவில் மறுபடி மெஸ்ஸுக்குத் திரும்பிய போதே பூமிக்குச் சித்ரா கூறியது பலித்திருப்பது புரிந்தது. அவன் மெஸ்ஸில் நுழைந்த போது முகத்தில் பளீரென்று விபூதி குங்குமப் பொட்டுடன் காதில் பூ அணிந்த இளைஞன் ஒருவன் கல்லாப்பெட்டியில் அமர்ந்து கேஷ் டேபிள் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தான். முத்தக்காள் அவனருகே ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். பூமிக்கு மிகவும் வேண்டிய சர்வர் ஒருவன் பூமி கேட்காமலே அவனருகில் வந்து தணிந்த குரலில் விவரம் தெரிவித்தான். பூமி உள்ளே வந்ததைப் பார்த்தும் முத்தக்காள் பாராமுகமாக இருந்தது தெரிந்தது. "அவன் அம்மாவுக்குத் தூரத்து உறவுக்காரப் பையனாம். ஒத்தாசையா இருந்து கவனிச்சிக்கணும்னு தந்தி குடுத்து வரவழைச்சிருக்காங்க. இன்னிக்கிக் காலம்பர ரயில்லே தான் இங்கே வந்து சேர்ந்தான்." பூமி, சித்ராவின் கணிப்புப் பலித்து விட்டதை எண்ணி வியந்தான். பெண்களின் மனப்போக்கு ஆண்களுக்குப் புரிவதை விட வேகமாகப் பெண்களுக்குப் புரிந்து விடும் அதிசயத்தை உணர்ந்து திகைத்தான் அவன். தன்னை விட விரைந்து முத்தக்காளுடைய மனப்போக்கைச் சித்ரா புரிந்து கொண்டு விட்டதை அவனால் வியக்காமலிருக்க முடியவில்லை. 'சரி! இதை நாம் பெரிதாகப் பொருட்படுத்த வேண்டியதில்லை. போகப் போகப் பார்க்கலாம்' என்று ஸ்டோர் ரூம் பக்கம் போனான் பூமி. ஸ்டோர் ரூம் பூட்டியிருந்தது. "ஸ்டோர் ரூம் சாவி கேஷ் டேபிளிலே இருக்குங்க" என்றான் சரக்கு மாஸ்டர். "போய் வாங்கி வா" என்று அங்கிருந்து ஒரு வேலையாளை அனுப்பிவிட்டு அறைவாசலில் காத்திருந்தான் பூமி. சாவியை வாங்கச் சென்றவர் உடனே திரும்பி வரவில்லை. சிறிது நேரம் பிடித்தது. நேரம் ஆக ஆகப் பூமிக்குப் பொறுமை பறிபோய் எரிச்சல் மூண்டது. சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|