(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 4
ஒன்றை மறக்க முயன்றால் அது முன்னை விட அழுத்தமாக நினைவுக்கு வருவதும், ஒன்றை நினைக்க முயன்றால் அது முன்னை விட வேகமாக மறந்து போவதும் நம் மனத்தின் விசித்திரக் குணங்களில் ஒன்றாயிருக்கிறது. சித்ராவுடன் கூட யார் பேசவேண்டும், யார் பேசக்கூடாது, யார் பழக வேண்டும், யார் பழகக் கூடாது, யார் உடன் நிற்கலாம், யார் உடன் நிற்கக் கூடாது என்பதை எல்லாம் பற்றித் திடீரென்று தனக்கு ஏன் இவ்வளவு அக்கறை உண்டாயிற்று என்று எண்ணிய போது பூமிநாதனுக்கே வியப்பு ஏற்பட்டது. தனக்குத் தானே அவளிடம் கொண்டாடிக் கொள்ளும் இந்த உரிமைக்கு என்ன காரணம் என்று சிந்திக்கத் தொடங்கினான் அவன். ஓர் அழகிய சுறுசுறுப்புள்ள நளினம் நிறைந்த இளம் பெண்ணின் மேல் அவளுடைய சம்மதமும் அங்கீகாரமும் இன்றியே ஓர் ஆணுக்கு இப்படி ஏற்படும் பற்றும் உரிமைகளும் மிகவும் இங்கிதமாக அர்த்தப்படுத்திக் கொள்ளவே வழி வகுக்கும். இந்த விதமாக ஓர் ஆணின் மேல் பெண்ணோ, பெண்ணின் மேல் ஆணோ எடுத்துக் கொள்ளும் அக்கறைகளும், உரிமைகளும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஒரே விதமாக அர்த்தப்படுவதுதான் இதுவரை உலக வழக்கமாக இருந்திருக்கிறது. அங்கே திரு.வி.க. லெண்டிங் லைப்ரரி முகப்பில் சித்ராவையும் இன்னோர் இளைஞனையும் சேர்த்துப் பார்த்த திகைப்பில் திளைத்திருந்த பூமிநாதன் பின்புறமிருந்து நண்பன் பரமசிவத்தின் குரலைக் கேட்டுத் திரும்பினான். "என்ன பூமி! இங்கே இப்படி நடுத் தெருவிலே நின்று கொண்டு?" "உன்னைத்தான் தேடி வந்தேன். நீ கடையில் இல்லை. காபி குடிக்கப் போனதாக உன் தம்பி முருகேசன் சொன்னான்." "வா! கடைக்குப் போகலாம்" - பூமியையும் உடனழைத்துக் கொண்டு பரமசிவம் கடையை நோக்கி நடந்தான். தனது புத்தகம் வழங்கு நிலையத்தை அவன் கடை என்றே வழக்கமாகக் குறிப்பிட்டு வந்தான். அவர்கள் இருவரும் கடையை அடைவதற்குள் சித்ராவும் அவளோடு உடனிருந்த இளைஞனும் வேலை முடிந்து வடபுறமாகத் திரும்பி பாலாஜி நகருக்குள்ளே புகுந்திருந்தார்கள். பின்னால் தொடர்ந்து வேகமாக நடந்து சென்று அவளோடு பேசலாமா அல்லது கைதட்டிக் கூப்பிடலாமா என்கிற அளவு பூமியின் மனம் விரைந்தும், செயலளவில் இரண்டுமே சாத்தியமாக இருக்கவில்லை. கொச்சையான பரபரப்புடன் பின் தொடர்ந்து ஓடிச்சென்று அவளைத் தடுத்து நிறுத்திப் பேசுவதும் நாகரிகமாகப் படவில்லை. கைத்தட்டித் திரும்பிப் பார்க்க வைப்பதும், நாகரிகமாகத் தோன்றவில்லை. அவ்வளவிற்கு அவசரமான காரியம் எதுவும் அவளிடம் தனக்கு இருப்பதாகவும் அவனுக்குத் தெரியவில்லை. ஒரு கணம் கட்டுப்பாட்டோடு சிந்தித்துப் பார்த்த போது பக்குவமிழந்து தவிக்கும் தம் மனத்தின் மேலேயே எரிச்சலாக வந்தது அவனுக்கு. மனத்தை அவள் சென்ற திசையிலிருந்தும் அவளைப் பற்றிய நினைவிலிருந்தும் மீட்க முயன்றான் பூமிநாதன். படிப்பதற்காக எடுத்துக் கொண்டு போக வேண்டிய புதுப் புத்தகங்களை எடுத்த பின் பரமசிவத்தின் அருகே சென்று இரும்பு மடக்கு நாற்காலியைப் பிரித்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்த பூமியிடம் பரமசிவம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான். "அம்மா இல்லாததாலே வீட்டிலே பல புதுப் பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். இனிமேல் உனக்குச் சிரமம் தான்." "நான் சின்ன வயதிலிருந்தே தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவன். திடீரென்று அந்த அரவணைப்பையும் இழந்திருப்பதால் பாதி படித்துக் கொண்டிருக்கும் போது இருட்டிவிட்ட மாதிரி சிரமமாயிருக்கிறது." "அந்தச் சிரமத்தை நீ மெல்ல மெல்ல மறந்துவிடப் பழக வேண்டும் பூமி!" "மறப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை பரமசிவம்! ஒன்றை மறக்க முயன்றால் அது முன்னை விட அழுத்தமாக நினைவுக்கு வருவதும், ஒன்றை நினைக்க முயன்றால் அது முன்னை விட வேகமாக மறந்து போவதும் நம் மனத்தின் விசித்திர குணங்களில் ஒன்றாயிருக்கிறது!" பரமசிவத்திடம் தான் கூறிய இந்த வாக்கியங்கள், தாயின் ஞாபகம், சித்ராவின் ஞாபகம் இரண்டிற்குமே பொருத்தமாக அமைவதைத் தானே உணர்ந்தான் பூமி. பரமசிவன் கேட்டான், "நீ நடந்துதான் வந்தாயா? ஆட்டோ என்ன ஆயிற்று? ரிப்பேருக்கு நிற்கிறதா? அல்லது..." "நாலைந்து நாளைக்கு நான் ஓட்ட வேண்டாம்னு பேட்டை நண்பர்களாகச் சேர்ந்து பேசி, வேறு ஆளை ஓட்டச் சொல்லி ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்." "சில சமயங்களில் வேலை செய்யாமல் இருப்பதை விட வேலை செய்வது தான் நிம்மதியைக் கொடுக்கும்." "நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை பரமசிவம்! துறுதுறுவென்று ஓடியாடி வேலை செய்கிறவனைச் சும்மா இருக்கச் சொல்வதுதான் சிரமமாயிருக்கிறது." "உன்னைப் போல் சுபாவமுள்ளவனுக்கு அது நிச்சயம் சிரமமாகத்தான் இருக்கும் பூமி!" "லெண்டிங் லைப்ரரி எப்படி இருக்கிறது? புதுப் புத்தகங்கள் வாங்கிச் சேர்க்க வேண்டும் என்றாயே? எப்போது செய்யப் போகிறாய்?" என்று பரமசிவத்தை விசாரித்தான் பூமி. "டெலிவிஷனும், சினிமாவும் வந்த பின் 'டீப் ரீடிங்' என்பது போல ஆழ்ந்து ஈடுபட்டு படிக்கிற பழக்கமே போய்விட்டது. பத்திரிகைகளும் தங்கள் பங்குக்கு 'டீப் டீப்' ஹேபிட்டைக் கொன்றுவிட்டன. உணவோ வைட்டமின் சத்துள்ள ஆகாரங்களோ தேடாமல் சோர்வு வரும் போதெல்லாம் பீடியோ டீயோ குடித்தே காலந் தள்ளுகிற ஒரு விவரம் புரியாத கூலிக்காரனைப் போல் தமிழ் வாசகனும் வெறும் பக்கங்களைப் புரட்டுகிற பழக்கத்திலேயே படிப்பை முடித்துக் கொண்டு விடுகிறான். சிந்தித்துப் படிப்பதும் படித்துச் சிந்திப்பதும் போய்விட்டன. என்னைப் போல் நூல் வழங்கு நிலையம் நடத்துகிறவனுக்கு இது போதாத காலம் பூமி?" "வெறும் ஜனநாயகம் மட்டும் வளர்ந்து, அறிவும் சிந்தனையும் வளராமல் போவது ஒரு தேசத்தின் துரதிர்ஷ்டங்களில் எல்லாம் பெரிய துரதிர்ஷ்டம். அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனை முன்னேற்றத்திற்கும் பயன்படாத ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் விட அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனை முன்னேற்றத்திற்கும் பயன்படுகிற சர்வாதிகாரமும் அடக்கு முறையும் கூட நல்லது என்று நினைக்கத் தோன்றிவிட்டது" - என்று பூமிநாதன் கூறிய போது அவன் குரலில் கடுமை ஏறியிருந்தது. கலை - இலக்கிய விஷயங்களில் பூமிக்கும் பரமசிவத்துக்கும் நடுவே கருத்து ஒற்றுமை இருந்தது. ஆகவே அந்த உரையாடலில் சுவை இருந்தது. பூமியும் பரமசிவமும் பேசிக் கொண்டிருந்தபோதே பரமசிவத்தின் தம்பி முருகேசன், "அண்ணே? அவங்க வந்திருந்தாங்க... இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க" என்று நான்காக மடிக்கப்பட்ட துண்டுக் கடிதம் ஒன்றைப் பரமசிவத்திடம் நீட்டினான். பரமசிவம் அதை வாங்கிப் பிரித்துப் படித்துவிட்டுப் பூமியின் பக்கமாகத் திரும்பி, "இன்றைக்கு எட்டு மணிக்கு டெலிவிஷன் பார்க்கணும்! இங்கே வழக்கமாகப் புஸ்தகம் எடுத்துப் படிக்கிற கஸ்டமர் ஒருத்தர் 'படிக்கும் பழக்கம்' என்கிற கலந்துரையாடல்லே பங்கு கொண்டு பேசறாங்களாம். முடியுமானால் நீயும் வரலாம்" என்றான். "எங்கே போய்ப் பார்க்கணும்?" "இங்கே தான் பக்கத்துல - கருமாரி டி.வி. டீலர்ஸ்னு தெரிஞ்ச டெலிவிஷன் விற்பனைக் கடை ஒண்ணு இருக்கு. அங்கே போய்ப் பார்க்கலாம்." பூமிக்கும் ஒரு மாறுதலாக இருக்கும் என்று பட்டதனால், பரமசிவத்தோடு சிறிது நேரம் செலவிடலாம் என்று தோன்றியது. தெருவில் வால்போஸ்டர் படிப்பது, தினசரியில் தலைப்புக்கள் படிப்பது தவிரப் பொறுமையாக எதையும் ஆர அமரப் படிக்கவே முடியாதபடி ஜனங்களின் இரசனையை எல்லாருமாகச் சேர்ந்து மந்தப்படுத்தி வைத்திருக்கிற காலத்தில் படிக்கும் பழக்கத்தைப் பற்றி டெலிவிஷனில் ஒரு கலந்துரையாடல் என்பதே புதுமையாயிருந்தது. "நம்மூர் டெலிவிஷனில் அப்படியெல்லாம் உருப்படியான காரியங்களைக் கூட பண்ணுகிறார்களா என்ன? நம்பவே முடியவில்லையே? நான் சிறு வயதில் சிங்கப்பூர் டி.வி.யில் ஏராளமான பயனுள்ள நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன் பரமசிவம்!" "உன் சந்தேகம் நியாயமானதுதான் பூமி! டெலிவிஷன் என்றால் பிரபலஸ்தர்களின் மூஞ்சிகளைக் காண்பிக்க மட்டுமே அது ஏற்பட்டிருக்கிறது என்கிற ஓரம்சத் திட்டத்தில் செயல்படும் நமது டி.வி.யில் சமயா சமயங்களில் தவறிப் போய் இப்படிச் சில நல்ல நிகழ்ச்சிகளும் நேர்ந்து விடுகின்றன." "இன்று நமது கலை இலக்கியத் துறைகளில் தவறுகள் தான் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. நல்லது தவறிப் போய் எங்காவது நேருகிறது. தவறுகள் திட்டமிட்டுத் தவிர்க்கப்படுவதில்லை. நல்லவைகள் முன்னேற்பாட்டோடு செய்யப்படுவதில்லை; தவிர்க்கப்படுகின்றன!" "சத்ய விசுவாசமில்லாதவர்களின் எண்ணிக்கை கலை இலக்கியத் துறைகளில் அதிகமாயிருக்கிறது." "அப்படிப்பட்டவர்களின் தொகை இன்று எதில்தான் அதிகமாக இல்லை." "சத்ய விசுவாசம், கடின உழைப்பு, வாக்கு நாணயம், தொழில் நாணயம் எல்லாம் உள்ளவர்கள் இன்று இடையூறாகக் கருதப்படுகிறார்கள்." இவ்வாறு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபின், டெலிவிஷனில் 'படிக்கும் பழக்கம்' கலந்துரையாடல் பார்ப்பதற்காகப் பரமசிவமும், பூமியும் கிளம்பிச் சென்றார்கள். கடையை முருகேசன் கவனித்துக் கொண்டான். அவர்கள் கருமாரி டி.வி. டீலர்ஸ் கடையில் போய் அமர்ந்த போது, அங்கே ஏற்கெனவே ஷோ ரூம் விளம்பரத்துக்காக ஒரு டெலிவிஷன் இயங்கிக் கொண்டிருந்தது. டி.வி. விற்பனையாளர் நெற்றியில் பத்துக் காசு அளவு பெரிய குங்குமப் பொட்டுடன் உற்சாகமாக்த் தோற்றமளித்தார். இவர்களை உற்சாகமாக வரவேற்றார். டி.வி.யில் யாரோ படு உற்சாகமாகக் கரும்பலகையில் அன்னா, ஆவன்னா எழுதி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். "அனா, ஆவன்னாவையே இரண்டு வருஷமா விடாம நடத்தறாங்க..." "நியாயந்தான்! மிகப் பல விஷயங்களிலே நாம் இன்னும் அனா, ஆவன்னா நிலைமையைக் கடந்து முன்னேறவே இல்லையே?" "முன்னேற்றம் முற்போக்குன்னெல்லாம் பேசறவங்கள்ளாம் இப்ப உங்க மாதிரி அரும்பு மீசையும் கருகரு தாடியும் வளர்க்கிறீங்க! இல்லியா பரமசிவம் சார்?" என்று டி.வி. விற்பனையாளர் பரமசிவத்தை மடக்கினார். "தாடி மீசை வைத்தவர்கள் எல்லாம் தீவிரவாதிகளோ என்று சாருக்கு நிரந்தரமாகவே ஒரு சந்தேகம் பூமி!" என்று டெலிவிஷன் விற்பனையாளரைச் சுட்டிக் காட்டிப் புன்னகை புரிந்தான் பரமசிவம். சரியாக இரவு எட்டு மணிக்கு டெலிவிஷனில் அந்த நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பூமிக்கு மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. படிக்கும் பழக்கம் கலந்துரையாடலைத் தொடங்கியவளே சித்ராதான்! "அடடே! சித்ராவா?" என்று பூமி உற்சாகம் மேலிட்டுக் கூறவும், "சித்ராவை உனக்குத் தெரியுமா பூமி!" என்ற பரமசிவம் வியப்போடு வினவினான். சித்ராவும் தானும் சந்திக்க நேர்ந்ததைச் சுருக்கமாகப் பரமசிவத்துக்கு விளக்கினான் பூமி. கடைப் பெயரும், நடத்துபவர் பெயரும் சொல்லாமல், "எனக்குப் புத்தகம் தரும் லெண்டிங் லைப்ரரி உரிமையாளர் நல்ல இலக்கிய இரசனை உள்ளவர். தரமான படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் இணையற்றது" என்று கலந்துரையாடலின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டாள் சித்ரா. பூமி பரமசிவத்தைப் பெருமிதமாகப் பார்த்தான். கலந்துரையாடல் தொடர்ந்தது. சித்ராவே மேலும் விவரித்தாள். "சமயத்தில் ஓர் ஆட்டோரிக்ஷா டிரைவர் என்னை வியப்பிலேயே மூழ்க அடித்துவிட்டார். சவாரி கிடைக்காத நேரங்களிலும், காத்திருக்கும் நேரங்களிலும் தான் படிப்பதற்கு வைத்திருப்பதாக நிரத்சௌத்ரி, பாரதியார், ராஜாராவ் போன்றவர்களின் நூல்களை ஸீட்டுக்கு அடியிலிருந்து எடுத்துக் காண்பித்த அந்தப் பட்டதாரி ஆட்டோ ரிக்ஷா டிரைவரைச் சந்தித்த போது படிக்கும் பழக்கம் வளர்ந்து எல்லா மட்டங்களிலும் பரவியிருப்பதாக உணர்ந்து மகிழ்ந்தேன் நான்." பரமசிவம் பூமியின் பக்கம் திரும்பி மகிழ்ச்சியோடும் புன்முறுவலோடும் பார்த்தான். அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும் சிரிப்பதும் ஏனென்று புரியாமல் டி.வி. கடைக்காரர் குழம்பினார். சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|