(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 40
எல்லாவற்றிலிருந்தும் விலகி எல்லாவற்றிலிருந்தும் தப்பித் தன்னை மட்டும் பத்திரப்படுத்திக் கொள்ளும் சுயநலமான ஓர் ஆண்மையாளனை விட எதிலிருந்தும் பயந்து விலகி ஓடாமல் எதிலிருந்தும் தன்னளவில் தப்பி நிற்க முயலாமல் எதிர்த்து நிற்கும் சுயநலமற்ற தீரனை அதிகம் விரும்பலாம். 'டில்லி பாபு' குபீரென்று தன்மேல் அரிவாளை ஓங்கிக் கொண்டு பாய்வான் என்று பூமி எதிர்பார்க்கவில்லை. ஆனால் கத்தியும் கையுமாக பாய்கிற பழைய போர் முறைக்கும், வெறுங்கையோடு எதிர்த்து நிற்க முடிந்த கராத்தே ஜூடோ போர் முறைக்கும் உள்ள ஒரே வேறுபாடு துரிதகதியில் தான் இருந்தது. உடம்போடும், இரத்தத்தோடும் ஊறிப் போயிருந்த அந்த துரித கதிதான் அப்போது பூமிக்குக் கைகொடுத்திருந்தது. அவசரமும் பதற்றமும் கொண்டு பாய்ந்த எதிரியின் அரிவாள் வீச்சுக்குத் தப்பிக் குனிந்து கொடுத்துப் போக்குக் காட்டி அவனை ஏமாற்றிக் காலை இடறிவிட்டுக் கீழே வீழ்த்தினான் பூமி. வெறும் முரட்டுத் தனமும், தடித்தனமும் மட்டுமே உள்ளவனாயிருந்த அந்த எதிரி நொடியில் வீழுந்து விட்டான். அவன் கையிலிருந்த இளநீர் வெட்டும் அரிவாள் எங்கோ எகிறிப் போய் விழுந்தது. மலைத்துப் போய் நின்றிருந்த சித்ரா நிம்மதியாக மூச்சு விட்டாள். முற்றிலும் எதிர்பாராத சமயத்தில் அந்த முரடன் அரிவாளை ஓங்கிக் கொண்டு பாய்ந்ததைப் பார்த்த அவளுக்குச் சப்தநாடியும் ஒடுங்கிப் போயிருந்தது. இவ்வளவு ஆபத்துக்களையும், இவ்வளவு விரோதங்களையும் பூமி வலுவில் தேடிக் கொள்கிறானே என்று அவன் மேல் சலிப்பாயிருந்தது. அதே சமயம் அதற்காகவே அவனைத் தவிர்க்க முடியாமல் விரும்பவும் வேண்டியிருந்தது. எல்லாவற்றிலிருந்தும் விலகி, எல்லாவற்றிலிருந்தும் தப்பித் தன்னைப் பத்திரப்படுத்திக் கொள்ளும் சுயநலமான ஓர் ஆண்மையாளனைவிட எதிலிருந்தும் பயந்து விலகி ஓடாமல் எதிலிருந்தும் தன்னளவில் தப்பி நிற்க முயலாமல் எதிர்த்து நிற்கும் சுயநலமற்ற தீரனை அதிகம் விரும்ப முடிந்தது. பூமி பயமே என்னவென்று தெரியாதவனாக இருந்தான். பயப்படுவது தான் பெரிய பாவம் என்று எண்ணினான் அவன். தீய சக்திகளிலிருந்து தன்னையும் தனக்கு வேண்டியவர்களையும் காத்துக் கொள்ள வேண்டும் என்று முன் நிற்பதைவிடத் தனக்கு வேண்டாதவர்களையும் தெரியாதவர்களையும் கூடக் காக்க வேண்டுமென்று அவன் முன் நின்றான். அவனுடைய இந்தக் குணம் அவளை உருக்கி நெகிழ வைத்தது. பொது வாழ்வில் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் மிகவும் அபூர்வமோ அந்த வகையைச் சேர்ந்தவன் அவன். அவனைத் தவிர்க்க முடியாது. விலக்க முடியாது. சித்ராவைப் பொறுத்தவரை அவள் ஆத்மார்த்தமாக இதை உணர்ந்தாள். சரணாகதி அடைந்து பிடிபடுவதை விட ஓடித் தப்பி விடுவது மேல் என்ற எண்ணத்தில் டில்லிபாபு பூமியிடமிருந்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கினான். அவனிடமிருந்து விவரம் அறிவதற்காக வந்திருந்த பூமியும் விடாமல் அவனைத் துரத்த வேண்டியிருந்தது. பூமி மேலும் தன்னை உதைப்பதற்காகத்தான் துரத்துகிறான் என்று நினைத்துக் கொண்டு டில்லிபாபு ஓட, அவனைப்பிடித்து அவனிடம் விவரம் சேகரிக்கா விட்டால் தேடி வந்ததே வீணாகிவிடும் என்ற எண்ணத்தில் பூமி துரத்த, ஓர் ஓட்டப்பந்தயமே நடந்தது. கடைசியாக பூமி டில்லியைப் பிடித்து விட்டான். டில்லியை நன்றாக உதைத்த பின் மெல்ல ஒரு நுனி பிடிபட்டது. மோட்டார் சைக்கிளில் பெண்களைத் துரத்தி செயின், வளைகளைத் திருடிக் கொண்டு ஓடுவது, வீடுகளில் புகுந்து திருடுவது, பஸ்கள், ரயில்கள், சினிமாக் கூடங்கள், கோயில்கள் ஆகிய இடங்களில் பிக்பாக்கெட் அடிப்பது இந்த வேலைகளுக்கான இளைஞர்கள் கூட்டம் ஒன்றை மன்னாரு தயாரித்து வைத்திருக்கிறான் என்றும், அதன் தலைமை அலுவலகம் எண்ணூருக்கு அப்பால் கடலில் சிறிது தொலைவு உள்ளே போனால் ஏறக்குறைய தீவு போல அமைந்த குக்கிராமம் ஒன்றில் இருக்கிறது என்றும் டில்லிபாபு கூறினான். இந்த தகவல்களை தன்னிடமிருந்து தெரிந்து கொண்டதாக யாரிடமும் மூச்சு விடக் கூடாதென்று பூமியிடம் சத்தியம் பண்ணச் சொல்லி மன்றாடினான் டில்லி. இந்தத் திருடும் கூட்டத்தில் தானும் இருந்ததாகவும் இதற்காக பல ஆட்களைத் தானே மன்னாருவிடம் சேர்த்து விட்டிருப்பதாகவும், அப்படித் தன்னால் சேர்த்து விடப்பட்டுத்தான் இப்போது காணாமல் போயிருக்கும் மைலாப்பூர் பையனும் மன்னாருவிடம் இணைந்தான் என்றும் டில்லி மேலும் தகவல் தெரிவித்தான். பூமிக்கும் சித்ராவுக்கும் இளநீர் வெட்டிக் கொடுத்து உபசரித்தான் டில்லி. இரண்டு இளநீருக்கும் எவ்வளவு பணம் என்று கேட்டு டில்லி எவ்வளவோ மறுத்துச் சொல்லியும் கேட்காமல் உடனே பணம் கொடுத்து விட்டான் பூமி. டில்லிக்கு அவன் அப்படிச் செய்ததில் வருத்தம்தான். தான் பூமியின் மேல் அரிவாளை ஓங்கிக் கொண்டு பாய்ந்து அது பலிக்காமல் போய்த் தோற்று நின்ற வெட்கத்தில் கூசிக் குறுகிப் போயிருந்தான் டில்லி. மன்னாரு எப்படி இவ்வளவு அக்கிரமங்களைச் செய்து கொண்டே இப்படிச் சர்வ வல்லமையோடு தப்பி வாழ முடிகிறதென்ற அதிசயத்தை அவன் டில்லியிடம் வினவிப்பார்த்த போது டில்லிக்கு அந்தக் கேள்வியே புரியவில்லை. காரணம் எது நியாயம், எது அநியாயம் என்றே அப்போது புரியாதவனாக இருந்தான் டில்லி. பணம் சேர்ப்பதற்காக - வசதியாக வாழ்வதற்காக - சௌக்கியமாயிருப்பதற்காக எதையும் செய்யலாம் என்பது மட்டுமே டில்லிக்குத் தெரிந்திருந்தது. அதற்கு மேல் நியாய அநியாயங்களைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. புதிதாகத் தெரிந்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை. சுருக்கமாக ஒரு விஷயத்தை அவன் பூமியிடம் சொன்னான். "முன்னாடி ஆட்சியிலே இருந்தவங்களுக்கும் அவரு தோஸ்த். இப்ப ஆள்றவங்களுக்கும் தோஸ்த். மன்னாரு இல்லாட்டி இங்கு ஆட்சிங்களே இருக்காது. யார் ஆண்டாலும், அவங்கெல்லாம் மன்னாருவோட 'பினாமி'யாத்தான் பேருக்கு ஆள்றாங்க..." "சட்டம், போலீஸ் இதெல்லாம் கூடவா?" "அதெல்லாத்தையுங் காட்டிப் பணம், அடியாள், சாராயம்லாம் தான் முக்கியம். இன்னிக்கு ஒருத்தன் நாற்காலியிலே குந்திகினு கீறான்னா அதுக்கு மன்னாருதான் ஆணி வேரு மாதிரி! ஆணி வேரு பட்டுப்பூட்டா அல்லாமே பூடும்." இந்திய ஜனநாயகத்துக்கே புதிய விளக்கம் கொடுத்தான் டில்லி. அரசியல் சட்ட வித்தகர்களின் விளக்கங்கள் வியாக்கியானங்களை விட டில்லி கொடுத்த விளக்கம் தான் நடைமுறை உண்மையாயிருக்குமோ என்று பூமிக்கே பிரமையாயிருந்தது. டில்லி கொடுக்கிற விளக்கப்படி பார்த்தால் அப்போது தான் ஓர் ஆட்சியையும், அரசாங்கத்தையுமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பதாகப் பூமிக்குத் தோன்றியது. இந்தப் போராட்டத்தில் எதிரியைக் கண்டு பிடிப்பதே சிரமமாயிருக்கும் என்று குழப்பம் உண்டாயிற்று. வில்லன்களின் அந்தரங்கமான இரகசியத் தயவினால் கதாநாயகனாக வாழும் ஒரு கதையில் முடிவு எப்படிக் கிடைக்கும்? வில்லன் ஜெயித்தாலும், கதாநாயகன் ஜெயித்தாலும் வெற்றி வில்லனுக்குத்தானே? வில்லன்களுக்குப் பினாமிகளாகத்தான் பல கதாநாயகர்களே இருக்கிறார்களோ என்று புதிய கவலை பிறந்தது அவனுக்கு. நல்லவன் கெட்டவன் என்று பிரித்துப் பார்க்கும் பழைய பார்வையை விட உழைக்கிறவன், சுரண்டுகிறவன் என்று இப்படிப் பார்க்கிற புதிய பார்வையினால் உலகத்துக்கு நலம் கிடைக்கலாமே என்று எண்ணினான் அவன். உலகில் இப்படி இரண்டு வர்க்கங்கள் மோதினால் தான் நியாயம் பிறக்குமோ என்று சிந்திக்கத் தோன்றியது. டில்லி பயத்தினாலும், வாங்கிய உதையாலுமே பூமிக்கு 'தோஸ்த்' ஆகி விட்டான். 'கரும்புப் போல் கொல்லப் பயன்படும் கீழ்' - என்ற திருவள்ளுவரின் கருத்து பூமிக்கு நினைவு வந்தது. சிலருக்கு வெறும் வார்த்தைகளாலேயே புரிகிற பொருள் வேறு சிலருக்கு அடி உதைகளால் தான் புரிகிற நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாதென்று பட்டது. சிலருக்கு வார்த்தைகள் புரிந்தன. வேறு சிலருக்கு அடி உதைகள் தான் புரிந்தன. டில்லியிடம் விடைபெற்றுக் கொண்டு அவன் தெரிவித்த இரகசியங்களை யாரிடமும் தெரிவிப்பதில்லை என்ற உறுதிமொழியையும் கூறிவிட்டுப் பூமி சித்ராவுடன் சென்னை திரும்பினான். அவர்கள் மெஸ்ஸை அடைந்த போது இரவு ஏழு மணி ஆகியிருந்தது. வழக்கத்தை மீறி அவனும் சித்ராவும் உள்ளே நுழைகிற போதே முத்தக்காள் எதிர் கொண்டு வந்து சீறினாள். "இப்பிடியே சினிமாவில் வர்ற காதலன் காதலி மாதிரி ஊர் சுத்திக்கிட்டிருந்தா மெஸ் நிர்வாகத்தை யார் கவனிப்பாங்க?" சுற்றிலும் வேலையாட்கள், சர்வர்கள், கஸ்டமர்கள் எல்லாரையும் வைத்துக் கொண்டு ஒரு சிறிதும் நாகரிகமே இல்லாமல் அவள் இப்படிப் பேசியது பூமிக்குப் பிடிக்கவில்லை. பத்திரமாக ஊரிலிருந்து வரவழைத்து உட்கார்த்திய சொந்தக்க்காரப் பையனை நம்பி அவள் தங்களிடம் தாறுமாறாகப் பேசுகிறாள் என்பதும் புரிந்தது. பதிலுக்கு அவனும் கடுமையாக அவளை எதிர்த்துக் கேட்டான். "நீங்கள் பேசுவதைப் பார்த்தால் நானும் இவளும் உங்களிடம் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள் என்று நினைத்துக் கொண்டு பேசுவதாகப் படுகிறது. நாக்கைக் கட்டுப்படுத்திப் பேசப் படித்துக் கொள்ள வேண்டும் நீங்கள்." "சம்பளம் வேணும்னா அதையும் எடுத்துக்கலாமே? யார் வேண்டாம்னாங்க?" "உங்களிடம் கூலிக்கு வேலை பார்க்க நான் வரவில்லை. உங்கள் கஷ்ட காலங்களில் உதவ முன் வந்தேன்." "இங்கே யாரும் அப்பிடிக் கஷ்டப்பட்டுத் தவிக்கலியே?" "அப்படியா? இனி மறுபடி நீங்களே வந்து கூப்பிட்டாலொழிய இந்த வாயிற்படியை மிதிக்க நான் தயாராயில்லை" என்று அப்படியே சித்ராவுடன் படியிறங்கினான் பூமி. முத்தக்காள் எடுத்தெறிந்து பேசியது அவனைப் பொறுமை இழக்கும்படி செய்திருந்தது. சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|