(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 41
சாதாரணமானவர்களால் சந்தோஷமாக இருக்கும் போது மட்டுந்தான் நகைச்சுவையாயிருக்க முடியும். சிரமப்படும் போது கூட அசாதாரணமான நகைச்சுவை உணர்வோடு இருக்க முடிந்தவர்கள் யாரோ அவர்கள் நிச்சயம் சாதாரணமானவர்கள் இல்லை. முத்தக்காளிடம் அவளுடைய போக்கைக் கடிந்து பேசி விட்டுத் தானும் சித்ராவும் படியிறங்கிய போது 'நீ போகக் கூடாது' என்றோ 'நீ போட்டிருக்கிற பணத்தைக் கணக்குப் பார்த்து எடுத்துக் கொண்டு போ' என்றோ உபசாரத்துக்காகவாவது முத்தக்காள் தடுத்துச் சொல்லுவாள் என்று பூமி எதிர்பார்த்தது வீணாயிற்று. அவன் அப்படி கோபித்துக் கொண்டு வெளியேற வேண்டுமென்றே அந்த ஏற்பாடுகளையெல்லாம் திட்டமிட்டுச் செய்தவள் போல் பேசாமல் இருந்து விட்டாள் அவள். ஸ்கூட்டருக்காகத் தேடி வந்திருந்த பரமசிவத்தின் தம்பி அதை எடுத்துக் கொண்டு போனான். மெஸ்ஸை விட்டுத் தெருவில் இறங்கிய போது மனம் ஏதோ ஓர் ஆதரவை நாடியதாலோ, ஏதாவது ஒரு பற்றுக்கோடு வேண்டும் என்று எண்ணியதாலோ, எதனாலென்று தெரியவில்லை, பூமியினுடைய வலக்கரம் சித்ராவின் இடக்கரத்தைப் பற்றியிருந்தது. பரமசிவம் அண்ணாச்சியோடு நடந்து செல்லும் போது செய்வதைப் போலவோ, தன்னிடம் கராத்தே கற்கும் இளைஞர்கள் சிலரிடம் உற்சாகமாகப் பழகும் போது செய்வதைப் போலவோ சித்ராவிடமும் நடந்து கொண்டிருந்தான் அவன். அநிச்சையாகவும் திட்டமின்றியும் நினைப்பின்றியும் அது நடந்திருந்தது. சித்ராவும் அதை மறுக்கவோ தவிர்க்கவோ இல்லை. கைப்பிடியில் வளைகள் இடறியதால் திடீரென்று சுதாரித்துக் கொண்ட பூமி, "ஐ யாம் ஸாரி சித்ரா! ஏதோ நினைப்பில்" என்று தன் கையை விடுவித்துக் கொண்ட போதுதான் சித்ராவுக்கு வருத்தமாக இருந்தது. அவன் 'ஸாரி' சொன்னதும் கையை விடுவித்துக் கொண்டதும்தான் அவளுக்குப் பிடிக்கவில்லை. ஒரு விநாடி திரும்பிப் பார்த்தபோது முத்தக்காள் மெஸ் முகப்பிலேயே நின்றபடி தாங்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவர்கள் இருவருமே கவனித்தார்கள். சித்ரா சொன்னாள்:- "ஒரு வலுவான பாதுகாப்பை இந்த மெஸ் இழக்குதுங்கிறதைப் பற்றிய ஞாபகமே இல்லாமே அவங்க உங்களைச் சுலபமா இழந்துட்டாங்க." "பிறருக்காக கஷ்டப்படலாம், உழைக்கலாம், உதவலாம், அவமானப்பட முடியாது. அதுவும் அந்தப் பிறராலேயே தொடர்ந்து அவமானப்படுவது என்பது பொறுத்துக் கொள்ளக் கூடியதில்லை. எதற்கும் ஓர் எல்லை உண்டு சித்ரா." "அவங்க உங்களை அவமானப்படுத்தலே. இப்படி நடந்துக்கிறதன் மூலம் தன்னைத் தானே அவமானப்படுத்திக்கிறாங்கன்னு தான் நான் சொல்லுவேன்." "எப்படியானாலும் சரி, இனிமேல் நானாக அங்கே போகப் போறதில்லே?" "இதை எல்லாம் பார்த்தா நாட்டிலே விதவை மறுமணத்தைத் தீவிரமாக ஆதரிக்கணும்னு தோன்றுகிறது. சின்ன வயசிலே வாழ்க்கையை இழக்கிற பல பெண்கள் இப்பிடித்தான் வக்கரித்துப் போயிடறாங்க." "இந்த மாதிரிப் பெண்கள் கையில் ஏற்கனவே ஓர் ஆண்பிள்ளை கஷ்டப்பட்டது மட்டும் போதாது என்கிறாய்! புதிதாய் இன்னொருவனும் மாட்டிக் கொண்டு சிரமப்பட வேண்டுமா என்ன?" இதைக் கேட்டு அவள் சிரித்தாள். பூமியின் நகைச்சுவையை அவள் இரசித்தாள். உல்லாசமாக இருக்கும் போது நகைச்சுவையாகப் பேசுவதை விடச் சிரமப்படும் போது நகைச்சுவையாகப் பேசும் பூமியின் இயல்பைப் பலமுறை தனக்குத்தானே கவனித்து வியந்திருக்கிறாள் அவள். சாதாரணமானவர்களால் சந்தோஷமாக இருக்கும் போது மட்டுந்தான் நகைச்சுவையாயிருக்க முடியும். சிரமப்படும் போது கூட அசாதாரணமான நகைச்சுவை உணர்வோடு இருக்க முடிந்தவர்கள் யாரோ அவர்கள் நிச்சயம் சாதாரணமானவர்கள் இல்லை என்று ஒரு மன இயல் விளக்க நூலில் எப்போதோ படித்திருந்தாள் சித்ரா. அவன் முத்தக்காளின் மெஸ்ஸிலிருந்து ஒதுங்கி அல்லது ஒதுக்கப்பட்டு வெளியேறி விட்டான் என்பதில் சித்ராவுக்கு ஏற்பட்ட உள்ளார்ந்த மகிழ்ச்சி அளவிட முடியாததாயிருந்தது. யாரோ முன்னேறுவதற்காக அவன் சிரமப்படுவது இனி இல்லை என்ற உணர்வை இப்போது அவள் தீர்மானமாக அடைந்திருந்தாள். கட்டிப் போட்டிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு சுதந்திரமாக வெளியே வந்துவிட்ட உணர்வுதான் அவளுக்கு இப்போது இருந்தது. மெயின் ரோட்டில் ஆஞ்சநேயர் கோயிலருகே வந்ததும் பூமி அவளைக் கேட்டான். "நல்ல பசி! மகாபலிபுரத்திலே டில்லியிடம் இளநீர் சாப்பிட்டதுதான். மெஸ்ஸில் சிற்றுண்டி சாப்பிடலாம் என்று திரும்பினேன். முத்தக்காள் உள்ளே நுழையும் போதே அதில் மண்ணைப் போட்டு விட்டாள். வா! இங்கே பக்கத்தில் ஏதாவது ஹோட்டலில் சாப்பிடலாம்! உனக்கும் பசிக்கும் என்று நினைக்கிறேன். "ஹோட்டல் வேண்டாம்! பத்து நிமிஷம் பொறுத்துக் கொள்ளுங்கள். வீட்டுக்குப் போய் அருமையான வெங்காய உப்புமா கிளறிச் சுடச்சுடத் தருகிறேன்." "உன்னைச் சிரமப்படுத்த வேண்டாம்னு பார்த்தேன்." "இப்ப நீங்க என்னைச் சிரமப்படுத்தினால் தான் எனக்கு மகிழ்ச்சியாயிருக்கும். என்னைச் சிரமப்படுத்த வேண்டாம்னு ஒதுங்கினாத் தான் உண்மையிலே வருத்தப்படுவேன்." "ஒதுங்கலே... ஆனால்..." "ஒண்ணும் தட்டிச் சொல்லாதீங்க... வீட்டுக்குப் போகலாம் வாங்க..." இப்படிச் சொல்லிக் கொண்டே தன்னிச்சையாக அவள் அவன் வலக்கரத்தைப் பற்றி அவனை இழுத்தாள். அந்தப் பிடியிலிருந்து அவனும் தன்னை விடுவித்துக் கொள்ள முயலவில்லை. "ஸாரி! அவசரத்தில்..." என்று அவள் தன் கையை விடுவித்துக் கொண்ட போது "ஸாரி எல்லாம் வேண்டாம் சித்ரா! நீ எந்தத் தப்பும் பண்ணிடலே. நான் உன்னோடு வீட்டுக்கு வருகிறேன். வா போகலாம்!" என்று பூமி சிரித்துக் கொண்டே சம்மதித்தான். "நான் வெங்காய உப்புமா ரொம்பப் பிரமாதமாக கிளறுவேன், தெரியுமோ உங்களுக்கு?" "அதெல்லாம் ஒன்றும் தெரிய வேண்டாம் சித்ரா. நீ கிளறினாலே அது பிரமாதமாகத்தான் இருக்கும் எனக்கு." அவள் மணக்க மணக்க உப்புமாக் கிளறிக் கொடுத்து அவன் அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே வெளியே போயிருந்த அந்தக் கிழவி திரும்பி வந்துவிட்டாள். சித்ரா அவளுக்கும் உப்புமாவை ஒரு தட்டில் கொண்டு வந்து கொடுத்தாள். அவளோ, "என் பையனைக் கண்டு பிடிச்சுத் தேடிக்குடுங்க" என்று அழுது புலம்பத் தொடங்கினாள். முத்தக்காளை உதறியது போல் இந்தக் கிழவியை உதறப் பூமி துணியவில்லை. அவளே தேடிக் கண்டு பிடித்துக் கொடுத்த மகாபலிபுரம் டீக்கடை டில்லிபாபுவின் முகவரியிலிருந்து தெரிந்து கொண்ட புதிய விவரங்களை வைத்துக் காணாமல் போன பையனைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்று பூமியே யோசித்திருந்தான். சொல்லப்போனால் இந்தப் பையனை வேலைக்குச் சேர்த்தது, இவன் காணாமல் போன பிறகு இவனைத் தேடி அலைந்தது, எல்லாமாகச் சேர்ந்துதான் முத்தக்காளுக்கு அவன் மேல் கோப மூட்டியிருந்தன. இப்போது முத்தக்காளிடமிருந்து விலகி வந்த பின்பும் இந்தக் கிழவிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் பூமியின் மனத்தில் முன்னை விட வலுவாகி இருந்தது. பூமி அப்போது உடனே புறப்படத் தயாரானான். சித்ரா அவனைத் தடுத்தாள். "இப்போது வேண்டாமே! காலையில் விடிந்ததும் உங்களிடம் கராத்தே படிக்கும் பிள்ளைகள் சில பேரையும் உடனழைத்துக் கொண்டு போய் வாருங்கள்" என்றாள் சித்ரா. தாமதம் காரியத்தை அழித்துவிடும் என்று கருதிய பூமி அவள் கூறியதை ஏற்கவில்லை. ஆனால் அவள் கூறியபடி தன்னிடம் கராத்தே கற்கும் சீடப் பிள்ளைகள் சிலரை உடனழைத்துக் கொள்ள மட்டும் சம்மதித்தான். மூன்று பேர் மட்டும் ஓர் ஆட்டோவிலேயே என்ணூர் வரை போவதென்று முடிவாயிற்று. எண்ணூரில் ஆட்டோவை விட்டுவிட்டுப் படகோ, அல்லது கட்டுமரமோ பிடித்துக் கடலுக்குள்ளே போய் அந்தக் கிராமத்தை அடைவது என்றும் ஏற்பாடாகியிருந்தது. படகு கிடைக்கவில்லை என்றால் கரையோரப் பகுதி மீனவர்கள் யாரையாவது பிடித்து அவர்கள் உதவியோடு மீன் பிடிக்கும் கட்டுமரத்தில் கடலுக்குள் போவதற்கும் துணிந்திருந்தார்கள். பூமியும் மற்ற இருவரும் எண்ணூர் போய்ச் சேரும்போது இரவு மணி ஒன்பதரைக்கு மேலிருக்கும். ஒரு டீக்கடை அருகே ஆட்டோவை நிறுத்திப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுக் கடலுக்குள் போகப் படகு அல்லது கட்டுமரம் தேடிய போது அந்த நள்ளிரவில் இவர்கள் ஏன் கடலுக்குள் போக ஆசைப்படுகிறார்கள் என்பது அங்கிருப்பவர்களுக்குப் புரியவில்லை. அவர்களிடமிருந்து ஏராளமான குறுக்குக் கேள்விகள் பிறந்தன. கடைசியில் கட்டுமரத்து ஆட்கள் இருவர் இவர்களை யாரோ கடத்தல்காரர்கள் என்று எண்ணிக் கொண்டு பண ஆசையுடன் வரச் சம்மதித்தனர். பூமிக்கு அவர்களது அந்த அநுமானம் அருவருப்பூட்டியது. ஆனால் அதை முதலிலேயே மறுத்தால் அவர்கள் கடலுக்கு வர மறுப்பார்களென்றும் தோன்றியது. சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|