(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 9
விருப்பமும் வசதியும் இல்லாதவனை வழி மறித்துக் கொள்ளைக்காரர்கள் திருடினால் அது வழிப்பறி. விருப்பமும் வசதியுமில்லாதவனை இக்கால அரசியல்வாதி வற்புறுத்திப் பணம் பறித்தால் அதற்குப் பெயர் வசூல். சித்ராவும் அவளுடைய தோழி தேவகியும் புறப்பட்டுப் போன பின்பும் நெடுநேரம் வரை பூமி அவர்களைப் பற்றிய நினைவில் திளைத்திருந்தான். கிரீன் ரூமைத் தேடி வந்து ஆர்வம் குன்றாமல் வேறு பலரும் பூமியைப் பாராட்டினார்கள். சிங்கப்பூரில் புக்கிட்டிமா சாலையில் உள்ளே சென்யீ செல்ஃப் டிஃபன்ஸ் ஸ்கூலையும் அதன் மாஸ்டரான சென்யீயையும் நன்றியோடு நினைவு கூர்ந்தான் அவன். சீனரான சென்யீ கராத்தே, ஜூடோ, குங்ஃபூ மூன்றிலும் மகா நிபுணர். அவரது சைனீஸ் ஸ்டைலில் வேகமும் பாய்ச்சலும் அதிகம். துரித கதியான அந்த முறையில் பூமியை உருவாக்கியவர் சென்யீ மாஸ்டர்தான். வீட்டுச் சுவரிலே மாட்டித் தன் பெற்றோர் படங்களைப் பயபக்தியோடு வழிபட்டு வந்ததைப் போல சென்யீ மாஸ்டரின் படத்தையும் வழிபட்டு வந்தான் பூமி. உடம்பு நன்றாக வளைகிற இளமையிலேயே இந்த தற்காப்புக் கலைகளை அவனுக்கும் பல இளைஞர்களுக்கும் கற்றுக் கொடுத்த பெருமை சென்யீ மாஸ்டருடையது. அன்று அவர் தனக்குக் கற்பித்த அதே ஆர்வம் குன்றாத உற்சாகத்தோடு இன்று வேறு பல இளைஞர்களுக்குப் பூமி அந்தக் கலையைக் கற்பித்து வளர்த்து வந்தான். அன்று பாலாஜி நகர் பள்ளி விழாவில் கராத்தே நிகழ்ச்சி நடந்த பின் மேலும் பல புதிய இளைஞர்கள் தங்களுக்கும் கற்றுக் கொடுக்குமாறு பூமியைத் தேடி வந்தார்கள். கராத்தே, குங்ஃபூ பற்றி வெளிவந்திருந்த இரண்டோர் ஆங்கிலத் திரைப்படங்கள் வேறு இளைஞர்களிடையே அவற்றைக் கற்கும் மோகத்தை அதிகமாக்கியிருந்தன. நடுவில் ஒருநாள் காலை பள்ளிக்குப் போவதற்காக பஸ் ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்த போது சித்ராவை மீண்டும் சந்தித்தான் பூமி. "சுளையாக ஆறு மாத அட்வான்ஸ் வாங்கிய பின்னும் வெள்ளையடித்து துப்புரவு செய்து, போனது வந்ததைச் சரிபார்த்து ஒழுங்கு பண்ணிக் குடுக்க முடியாதுங்கறார் வீட்டுச் சொந்தக்காரர்" - என்று அப்பர் சுவாமி கோயில் தெரு வீட்டு உரிமையாளரைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டாள் சித்ரா. தான் அவளுடைய சார்பில் அந்த வீட்டு உரிமையாளரைத் தேடிச் சந்தித்து வற்புறுத்துவதாக சித்ராவுக்கு வாக்களித்தான் பூமி. அடுத்த நாள் காலையிலேயே அப்பர் சுவாமி கோயில் வீட்டு உரிமையாளரைப் பார்த்து அதை வற்புறுத்திச் சொல்லியும் விட்டான். அவரும் ஏறக்குறைய அவனுடைய கோரிக்கைக்கு சம்மதித்த மாதிரியே பதில் சொல்லியிருந்தார். அடுத்த நாள் மாலை அருள்மேரி கான்வென்ட் பள்ளி விடுகிற நேரத்துக்குப் பூமியே ஆட்டோவில் அவளைத் தேடிச் சென்றான். வீட்டுக்காரர் வெள்ளையடிப்பதோடு போனது வந்ததைச் சரி செய்து கொடுப்பதற்கும் சம்மதித்து விட்டார் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான். அதைக் கேட்டு அவள் மகிழ்ச்சி அடையக் கூடும். அவள் பள்ளி முடிந்து வெளியே வர ஐந்து மணியாயிற்று. எதிர்பாராதவிதமாக பூமி தனக்காகக் காத்திருக்கக் கண்டதும் அவளுக்கு ஒரே ஆச்சரியம். பூமியின் அருகில் வந்ததும் "சவாரியை விட்டுவிட்டு எப்பொழுது பார்த்தாலும் இங்கே என்னைத் தேடிக் கொண்டு வந்தீர்களானால் தொழில் என்ன ஆவது?" என்று கடிந்து கொள்கிறாற் போன்ற செல்லமான தொனியில் விசாரித்தாள் சித்ரா. பூமி புன்னகையோடு அதற்கு மறுமொழி தயாராக வைத்திருந்தான். "இன்றைக்கு காலை ஒரு மணிக்குள்ளேயே நல்ல சவாரி! போதுமான வசூல் ஆகிவிட்டது. இப்பொழுதே வண்டியை மடக்கி நிறுத்தி விடலாம்." "உங்கள் அதிர்ஷ்டம் அப்படி! என் துரதிர்ஷ்டம் முழுச் சம்பளத்துக்கு கையெழுத்துப் போட்டுவிட்டுப் பாதிச் சம்பளம் மட்டுமே கையில் வாங்குற சம்பள நாள் இன்றைக்கு." "நான் தான் அன்றைக்கே சொன்னேனே, நர்சரி கான்வென்ட் பள்ளிகளில் வேலை பார்க்கும் அனைவரும் சேர்ந்து ஒரு வலுவான யூனியன் அமையுங்கள் என்று. இந்த காலத்தில் தீமைகளுக்கு எதிரான அணியமைத்து ஒன்றுபடுவதன் மூலம் தான் தீமைகளை ஒழிக்க முடியும்." "அது அவ்வளவு சுலபமில்லை! எல்லாமே வேலைக்குப் பயந்தவர்கள். யூனியன் அது இது என்று இறங்கி - இருக்கிற வேலையும் போய் விட்டால் என்ன செய்வதென்று நழுவுகிற சுபாவம் தான் அதிகம். நாங்களாவது அரைச் சம்பளம் வாங்கிக் கொண்டு முழுச் சம்பளத்துக்குக் கையெழுத்துப் போடுகிறோம். வெளியே வேலைத் தேடித் தவித்துக் கொண்டிருக்கும் புதியவர்கள் 'கால் சம்பளம் தந்தாலே போதும்' முழுச் சம்பளத்துக்கும் கையெழுத்துப் போட்டுத் தருகிறோம் என்கிற அளவுக்கு மோசமாயிருக்கிறார்கள்." "இங்கேயே நின்று பேசிக் கொண்டிருப்பானேன்? போகலாமே?" "எங்கே போவ?" "எங்கே வேண்டுமானாலும் போகலாம்" - என்று கையைக் காட்டி அவளை ஆட்டோவில் ஏறிக் கொள்ளச் சொன்னான் பூமி. "மீட்டர் போட்ட சவாரியா? சும்மாவா? அது தெரிந்த பின்புதான் ஏற வேண்டும்." இப்படிக் கேட்டுவிட்டுச் சிரித்தாள் சித்ரா. "பழகியவர்களைப் பார்த்தால் இதில் மீட்டர் வேலை செய்யாது." "கோளாறா? பழக்க தோஷமா?" "பழக்க தோஷத்தினால் வந்த கோளாறு என்று தான் வைத்துக் கொள்ளுங்களேன்." அவள் ஆட்டோவில் ஏறிக் கொண்டாள். ஆட்டோ கிளம்பியது. அடுத்த கால் மணி நேரத்தில் ஆட்டோ நாகேஸ்வரராவ் பூங்காவின் முன்னால் போய் நின்றது. "என்னைப் பொறுத்தவரை இந்தப் 'பார்க்' இல்லை என்றால் மயிலாப்பூரே இல்லை" என்றான் பூமி. "ஆமாம்! வெங்கட்நாராயணா ரோடில் உள்ள பார்க்கையும் இந்தப் பார்க்கையும் விட்டால் இந்த ஊரிலேயே வேறு நல்ல பார்க்குகள் கிடையாது." அவளை இறக்கிவிட்டுவிட்டு ஆட்டோவை உரிய இடத்தில் கொண்டு போய் நிறுத்தி விட்டான் பூமி. உள்ளே புல்வெளியில் அதிகக் கூட்டமில்லாத இடமாகப் பார்த்து அமர்ந்து நெடுநேரம் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். சித்ராவும் அவனும் இலட்சியம் முதல் அரசியல் வரை சகல எல்லைகளிலும் உரையாடினார்கள். சித்ரா ஒரு யோசனை சொன்னாள். "நேரமாகிவிட்டது. இனிமேல் நான் வீட்டில் போய்ச் சமைக்க முடியாது. நீங்களும் வாருங்கள்! இங்கேயே ஏதாவது நல்ல ஹோட்டலாகப் பார்த்து இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு போய்விடலாம்." பூமி உடனே அவளுக்கு முத்தக்காள் மெஸ்ஸைப் பற்றியும் அதன் வீட்டுப்பாங்கான சமையல் தரத்தைப் பற்றியும் சொன்னான். அவளும் ஒப்புக் கொண்டாள். இரவு எட்டு அல்லது எட்டரை மணிக்கு மேல் போனால் முத்தக்காள் மெஸ்ஸில் கூட்டம் குறைந்துவிடும். அதுவரை பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் போகலாம் என்று தீர்மானித்துக் கொண்டார்கள் அவர்கள். முத்தக்காள் மெஸ்ஸில் முன்கூடத்தில் மேஜை நாற்காலி எல்லாம் உண்டு என்றாலும் உள்ளே ஓர் அறையில் பந்திப்பாய் விரித்து நாலைந்து பேர் தரையில் சம்பிரதாயமாக உட்கார்ந்து சாப்பிடவும் வசதி இருந்தது. இந்த உட்கார்ந்து சாப்பிடுகிற வசதி மூலம் வீட்டுப் பாங்கான மெஸ் சாப்பாட்டை மேலும் வீட்டுப் பாங்கானதாக்கிக் கொள்ள முடியும் என்பது பூமியின் கருத்து. அதனால் அவன் எப்போது மெஸ்ஸுக்கு வந்தாலும் தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிற அந்தரங்க அறையையே விரும்புவது வழக்கம். இந்த விவரங்களைப் பூமி சொல்லக் கேட்டபின் சித்ராவும் தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிற இடத்தையே விரும்பினாள். அவர்கள் அங்கே சாப்பிடப் போய்ச் சேர்ந்த போது கூட்டம் குறைந்து முத்தக்காள் சாவகாசமாக இருந்தாள். "வா தம்பி?" என்று பூமியை வாய் நிறைய வரவேற்றாள் முத்தக்காள். பூமி சித்ராவைப் பற்றி முத்தக்காளுக்கு எல்லா விவரமும் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தான். முத்தக்காள் அவர்களை மிகவும் பிரியமாக அமர வைத்துத் தானே உணவு பரிமாரினாள். "கலியாண விருந்துக்கு உக்கார வைக்கிற மாதிரி உங்களை உட்கார வச்சிருந்தாலும் இங்கே பரிமாறுகிற சாப்பாடு என்னவோ காய்ச்சல்காரனுக்குச் சமைச்ச மாதிரி பத்தியச் சாப்பாடுதான்" என்று நடுவே முத்தக்காளே பணிவாகச் சொல்லிக் கொண்டாள். ஆனால் பூமி அதை உடனே மறுத்து விட்டான். "மற்ற விதமான சாப்பாடுதான் இந்த ஊரில் எங்கே வேண்டுமானாலும் கிடைக்குமே முத்தக்கா! இந்த மாதிரிக் கமகமன்னு மணக்கிற மணத்தக்காளி வற்றல் குழம்புக்காகவும், ஜீரக ரசத்துக்காகவும் தானே இங்கே உன்னைத் தேடி வருகிறோம்?" "அதெல்லாம் உனக்குத் தெரியும்ப்பா! நீ சொல்றே... இந்தத் தங்கச்சி மொதமொதலா வருது. தப்பா நினைச்சுக்கப் போகுது. அதுக்காவத்தான் நான் சொல்றேன்" என்று சித்ராவைப் பார்த்துச் சொன்னாள் முத்தக்காள். "எனக்கு இந்த மாதிரி ஹோம்லி மீல்ஸுன்னா ரொம்பப் பிடிக்கும்" என்றாள் சித்ரா. அந்தச் சமயத்தில் வெளியே தேடிப் பார்த்துவிட்டு முத்தக்காளை காணாமல் ஏமாந்த இரண்டு மூன்று பேர் அவளைத் தேடி உட்பக்கமாக அந்த அறை வாயிலுக்கு வந்து நின்றார்கள். பீப்பாய் மாதிரி முன்னால் துருத்திய வயிறும் தோளிலிருந்து தரை வரை தொங்கும் துண்டுமாக ஒரு மீசைக்காரர் கையில் நோட்டுப் புத்தகம் பேனா சகிதம் மற்றவர்களுக்குத் தலைமை வகித்து வந்த மாதிரி அங்கே அட்டகாசமாக எதிரே வந்து நின்றார். அதிகார தோரணையில் வினவினார். "இந்த ஹோட்டல் ஓனரு யாரு?" "ஏன்! நான் தான்? உங்களுக்கு என்ன வேணும்?" "இந்தாம்மா! நம்ம தலைவருக்கு மணிவிழா வருது! அவருக்கு எடைக்கு எடை வெள்ளி குடுக்கிறதா முடிவு பண்ணியிருக்கிறோம். இந்த வார்டிலே வசூல் நடக்குது. வெத்திலை பாக்குக்கடை, பெட்டிக்கடை, பிளாட்பாரம் கடை எல்லாரும் வசூலுக்குக் குடுத்திருக்காங்க." "இந்த மெஸ்ஸை வியாபாரத்துக்காகவோ லாபத்துக்காகவோ நான் நடத்தலீங்க. என் புருஷன் இந்தப் பேட்டையிலே டாக்ஸி ஓட்டிக்கிட்டிருந்திச்சு. என்னை நிராதரவா விட்டிட்டு அது போனப்புறம் இந்த வட்டாரத்து டாக்ஸி ஆட்டோ டிரைவருங்க யோசனைப்படி நான் இந்த மெஸ்ஸை நடத்திக்கிட்டிருக்கேன். வசூலுக்கெல்லாம் தர்ர மாதிரித் தொழிலா இதை நான் நடத்தலே." "அப்படிச் சொல்லக் கூடாது, தந்தாகணும். தலைவர் மனம் வச்சா இந்த மெஸ்ஸையே நீங்க இங்கே நடத்த முடியாமல் பண்ணிடுவாரு! ஜாக்கிரதை." இதுவரை பொறுமையாகவும் நிதானமாகவும் இலையைப் பார்த்துக் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த பூமி தலை நிமிர்ந்தான், வந்தவனைக் கேட்டான். "நீ யாருப்பா?" "நான் தான் மணிவிழாச் செயலாளன் மறவை மதியழகன்." "சொந்தக் கையாலே உழைச்சுப் பிழைக்கணும்னு இங்கே ஒரு விதவைக்கு இருக்கிற சுயமரியாதை கூட உனக்கு இல்லியே! வசூல்னு பிச்சைக்கு வர்ர மாதிரி வந்து நிக்கிறியே அப்பா!" என்று பூமி கூறியதும், "நீ யாரு அதைக் கேக்க? வெளியிலே வா உன்னைப் பேசிக்கிறேன்" என்பதாகச் சீறினான் மறவை மதியழகன். அவனும் பிறரும் வெளியேறிய பின்னர் பூமி சித்ராவை நோக்கிச் சொன்னான்: "விருப்பமும் வசதியும் இல்லாதவனை வழிமறித்துக் கொள்ளைக்காரர்கள் திருடினால் அது வழிப்பறி. விருப்பமும் வசதியும் இல்லாதவனை இக்கால அரசியல்வாதி வற்புறுத்திப் பணம் பறித்தால் அதற்குப் பெயர் வசூல்." "விளக்குமாற்றுக்குப் பெயர் பட்டுக்குஞ்சம் என்கிற மாதிரிதான்" - இது சித்ரா. "நீ சும்மா இரு தம்பீ! உனக்கு எதுக்கு இந்த வம்பு?" என்று பூமியை அந்தச் சண்டையில் ஈடுபடவிடாமல் விலக்க முயன்றாள் முத்தக்காள். "எங்களைப் போன்ற டிரைவர்களுக்காகத்தானே நீங்கள் இந்த மெஸ்ஸையே நடத்துகிறீர்கள்? உங்களுக்கு வரும் பகை எங்கள் பகைதான்" என்று கூறியபடியே எழுந்து கைகழுவி விட்டு வெளியே அவர்களை தேடிச் சென்றான் பூமி. வெளிப்புறம் மறவை மதியழகன் கும்பல் அவனைப் பந்தாடிவிடும் வெறியுடன் கொக்கரித்துக் காத்துக் கொண்டிருந்தது. சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|