11 மறுநாள் அவள் வேலைக்குப் போனபோதும் நாகரிகம் இல்லாமல் அவள் மனசு புரியாமல் சுலபா அதே பேச்சை மீண்டும் தொடங்கினாள். “ஏண்டீ யாரோடவோ சுத்தறியே? உன் அங்கிளுக்குத் தெரியுமாடீ? இதெல்லாம் ஏதாவது வம்புலே கொண்டு போய் விட்டுடப் போவுது? ஜாக்கிரதை” - என்று சுலபா தேவையின்றித் தலையை நுழைத்து உரிமை எடுத்துக் கொண்டது கவிதாவுக்கு அறவே பிடிக்கவில்லை. எஜமானி பத்து வாக்கியம் பேசினால் கவிதா பதிலுக்கு அரை வாக்கியம் சொன்னாள். “என்ஃபிரண்டு ரொம்ப நல்லவரும்மா... அங்கிளுக்குத் தெரியும்” - என்று பதில் சொல்லிவிட்டு வழக்கமான வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். தான் அதுபற்றி விசாரிப்பதே கவிதாவுக்குப் பிடிக்கவில்லை என்பதைச் சுலபா புரிந்து கொண்டாள். அதனல் அவளது ஆத்திரம் மேலும் அதிகமாயிற்று. அவள் தன்னைப் பொருட்படுத்தவில்லையோ என்று எண்ணியதும் சுலபாவின் ஈகோ கிளர்ந்தெழுந்து விசுவரூபம் எடுத்து விட்டது. ‘காதல் விஷயத்தில் தலையிடவோ அட்வைஸ் கூறவோ உனக்கென்ன யோக்கியதை?’ - என்பதாகக் கவிதா தன்னைப் பற்றி எண்ணுகிறாளோ என்று சந்தேகம் வந்தவுடன் சுலபாவின் ஆணவமும் ஆத்திரமும் சீறிப் படம் எடுத்தன; சுலபா ஆடிட்டருக்கு ஃபோன் செய்து பேசினாள். “லீவு போட்டுட்டு எவனோ கண்டவனோட எல்லாம் சுத்திக்கிட்டிருக்காளே?” - என்று தடாலடியாகப் பேசினாள். ஆடிட்டருக்கே சுலபா பேசிய விதம் பிடிக்கவில்லை. ஆடிட்டர் சொன்னர்: “இதெல்லாம் நாம ஒண்ணும் கன்டிக்க முடியாது சுலபா. கவிதா இந்தக் காலத்துப் பெண்... ஒருத்தர் சொல்லிக் கேட்கிறவள் இல்லே. இப்ப முளைச்சதுகள் எல்லாம் அடங்கவா செய்யிது?” அவள் இந்தக் காலத்தவள் என்று கனகசபாபதி சொல்லிய விதத்திலிருந்து தன்னை ஹைதர் காலத்து மனப்பான்மையுள்ளவள் போல அவர் சித்திரிக்க முயல்வது சுலபாவுக்கு எரிச்சலூட்டியது. தன் இளமையையோ, அழகையோ இப்படிக் குறைத்து மதிப்பிடும் எந்த உரையாடலையும் அவள் ஒப்பியதுமில்லை உடன்பட்டதுமில்லை. மறுக்காமல் விட்டதுமில்லை. “நாம மட்டும் போன நூற்றாண்டிலியா இருக்கோம்? நாமளும் இந்தக் காலத்திலே தானே இருக்கோம் ஆடிட்டர் சார்?” “இருக்கோம்! ஆனால் பெரியவங்க சொல்றதை இந்தக் காலத்து பசங்க எங்கேம்மா கேட்கிறாங்க? நீயே சொல்லு...” மீண்டும் மீண்டும் சுலபாவுக்கும் கவிதாவுக்கும் நடுவிலேயே ஒரு தலைமுறைக் காலம் இடைவெளிப்படுவது போலக் கனகசபாபதி பேசியது அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆத்திர மூட்டிவிட்டது. “எதுக்கும் கண்டிச்சு வையுங்க சார்! இங்கே வேலை பார்க்கிறதனாலேதான் நான் கவலைப்பட வேண்டியிருக்கு... இன்னாரோட பெர்ஸனல் செகரெட்டரியாம்... இப்பிடிக் கண்டபடி சுத்தறாளாம்னு பேராயிடிப்படாது.” “சொல்றேன். நாம சொல்லத்தான் சொல்லலாம். அப்புறம் கேட்கிறதும் கேட்காததும் அவள்பாடு” - என்று சமாதானம் சொல்லி ஃபோனை வைத்தார் ஆடிட்டர். ஏற்கனவே சுலபாவிடம் வேலைக்குச் சேருவதற்கு முன்னால் கவிதாவுக்கு ஒரு ஸ்பெஷல் கிளாஸே நடத்தியிருந்தார் அவர். அவளுக்கு எது எது பிடிக்கும் எது எது பிடிக்காது என்று படித்துப் படித்துக் கவிதாவிடம் சொல்லியிருந்தார் அவர். “அங்கே வேலை பார்க்கிற வரையில் அவளை விட அழகாகத் தோன்ற முயலாதே! அவளை விட நீ அழகானவள் என்பதை மறந்துவிடு, அவளைவிட நல்ல சேலை உடுத்தாதே! நல்ல நகை அணியாதே! அவள் மனத்தில் அப்படி எண்ணம் வந்துவிட்டதோ நீ தொலைந்தாய்! எந்த முனையிலும் சுலபாவின் ஈகோவை இலேசாகக் கூட வடுப்படுத்த முயலாதே... அது உனக்கு ஆபத்துக் கவிதா.” “அதுக்காக நான் அவலட்சணமாக மாறிவிட முடியுமா?” “மாறவும் வேண்டாம்! ஒன்றும் வேண்டாம். அவள் ஈகோவை அப்படியே ஒப்புக் கொள். அதற்குப் பணிந்து வணங்குவது போல் பாவனை செய், ‘மேடம் யூ லுக் ஸோ ப்யூட்டிஃபுல்’ என்பது போல் அவ்வப்போது நடுநடுவே அவளிடம் சொல்லிவை! உன் சொந்த அழகைச் சொந்த வாலிபத்தை மெல்ல மறந்து விடு.” . “இது என்ன உத்தியோகமா அல்லது தண்டனையா?” “இரண்டும் தான் கவிதா.” “ஒரு சம்பளத்திற்கு நாலு வேலே பார்க்கச் சொல்லுகிறீர்களே?” “என்ன செய்வது கவிதா! இவள் ஒரு‘மென்டல் கேஸ்’. இப்படி எல்லாம் கவனமாக நடக்காவிட்டால் நீ இவளிடம் நீண்ட காலம் வேலை பார்க்க முடியாது.’’ “இவளைத் திருப்திப்படுத்த நான் என்னைக் கிழவியாக்கிக் கொள்ள முடியுமா?” “யார் ஆக்கிக் கொள்ளச் சொன்னர்கள்? சுலபாவின் இளமையை நீ மறுக்க முயலாதே என்று தானே சொன்னேன்.” “இதன் அர்த்தம்?” “அவள் இளமையைக் கொண்டாடு உன் இளமையை மறந்து விடு.” “அது எப்படி மாமா சாத்தியம்?” “அது நிச்சயமாக சாத்தியம் கவிதா! நாம் மறந்து விடு வதனால் நமது இளமையும் அழகும் குன்றிவிடப் போவதில்லை. தான் அழகு என்று இடைவிடாமல் நினைத்து அதையே எண்ணி மாய்ப்பவர்கள்தான் மூத்துப் போகிறார்கள். ஞாபக மில்லாமல் விடப்படும் எந்த அழகும் அப்படி மூப்பதில்லை. கவனித்துப் பராமரிக்கப்படும் எத்தனை மல்லிகைப் பதியன்கள் பூக்காமலே போகின்றன! யாரும் கவனிக்காத எத்தனை வன மல்லிகைகள் தாமாகப் பூத்துக் கொட்டுகின்றன.” அவரது வாதம் சரியாகவே இருந்தது. அவள் மறுத்துப் பேசவில்லை. சுலபாவிடம் வேலைக்கு ஒப்புக்கொள்ள இசைந்தாள். பழைய இந்த விவாதங்கள் எல்லாம் இப்போது கவிதாவுக்கு மீண்டும் நினைவு வந்தன. சுலபாவின் குணசித்திரத்தை மாமா கனக சபாபதி எத்தனை கனகச்சிதமாக எடை போட்டு முடித்திருக்கிறார் என்று உணர்ந்தபோது கவிதாவுக்கு வியப்பாகவே இருந்தது. வெறும் உடல் நோயாளிகளிடம் கூட நர்ஸாக இருந்து விடலாம். அது மிகவும் எளிய காரியம். தாங்கள் நோயாளிகள் என்று தாங்களே உணராத மன நோயாளிகளிடம் உதவியாளராயிருப்பது பயங்கரமானது. தான் ஒரு மனநோயாளி என்பது சுலபாவுக்கே தெரியாது. அதை அவளுக்குத் தெரி விக்கவும் கூடாது. அவளுடைய அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் கவிதாவே அடிக்கடி நற்சான்றிதழ் கொடுக்கிற காரியத்தையும் செய்தாக வேண்டியிருந்தது. சிரமமாகத்தான் இருந்தது. சுலபாவின் முரண்டுகளுக்கும் அறியாமைக்கும் ஏற்ப இசைந்து பழகுவது கவிதாவுக்குப் பழகி இருந்தாலும் சமயா சமயங்களில் ஒரே மேக்காலில் ஒரு நொண்டிமாட்டோடு சேர்ந்து இழுக்கிறாற்போல உணர்ந்தாள் கவிதா. கவிதாவுக்கு ஆங்கிலமும் இந்தியும் நன்றாகப் பேசவரும். சுலபாவுக்குத் தெலுங்கும் தமிழும் மட்டுமே வரும். ஆங்கிலம் வராது. இந்தி தெரியாது. பிறரிடம் கவிதா இந்தியும் ஆங்கிலமும் பேசுமுன் எஜமானிக்கு அது உகப்பாக இருக்குமா இல்லையா என்று பார்த்து யோசித்துத் தயங்கிப் பேச வேண்டியிருக்கும். எஜமானிக்குப் பிடித்தால் பேசவேண்டும். பிடிக்காவிட்டால் பேசாமல் இருக்க வேண்டும். படப்பிடிப்புக்காக அவர்கள் வெளிநாடு போயிருந்தபோது சுலபசவின் முன்னிலையில் ஒரு வெள்ளைக்காரனிடம் கவிதா சரமாரியாக ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்ததைக் கவனித்துப் பொறுமையின்றி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க உடன் அமர்ந்திருந்தாள் சுலபா. கவிதாவே தன்னை அம்போ என்று விட்டுவிட்டு இன்னேர் ஆண்மகனிடம் இணைந்து பேச ஆரம்பித்தது சுலபாவுக்குப் பிடிக்கவிலலை. அதுவும் தனக்குத் தெரியாத மொழியில் படு லாகவமாக அவள் தன்னைப் பொருட்படுத்தாமல் இன்னொருத்தனிடம் தனக்கு முன்பாகவே பேசியது அவளுக்குக் கடுப்பாயிருந்தது. காட்டுமிராண்டித்தனமாக நடுவே குறுக்கிட்டு, “என்னடி உனக்குத்தான் இங்கிலீஷ் தெரியும்னு பொளந்து கட்டிக்கிட்டிருக்கியா” - என்றாள். கவிதாவுக்குச் சை என்றாகிவிட்டது. குறுக்கிட்டுப் பேசுமுன் “ஸாரி ஃபார் த இண்டரெப்ஷன்” என்று ஆயிரம் வருத்தமும் மன்னிப்பும் கூறிவிட்டு மற்றவர்கள் உரையாடலில் குறுக்கிடுகிற அதிநாகரிக நாட்டில் சுலபாவோட கூடச் சென்றதே பாவம் என்று பட்டது கவிதாவுக்கு. சுலபா ஒவ்வொரு நேரம் ஒவ் வொரு மூடில் இருந்தான். அவளைத் தேடிவந்து யாராவது ஆங்கிலத்தில் பேசினால் அதைத் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்ல அவன் கூறும் பதில்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்ல என்று கவிதாவின் உதவி அவளுக்குத் தேவைப்பட்டது. அப்படி வேளைகளில் எல்லாம் கவிதா தயங்காமல் ரெடிமேடாக உடன் முன்வந்து தனக்கு உதவ வேண்டும் என்று சுலபாவே எண்ணினாள். கட்டளையும் இட்டாள். ஆனால் கவிதா எபபோதாவது தானே சுயேச்சையாகச் சுலபாவுக்குத் தெரியாத சில விஷயங்கள் தனக்குத் தெரியும் என்று தற்செயலாகக் காட்டிக் கொள்ள முயன்றால் கூட அவளுக்குப் பொறுக்காது, கோபம் வந்துவிடும். “உனக்கு எல்லாம் தெரியுது... .இங்கிலீஷ்லே பேசலாம் இந்தியிலே பேசலாம்கிற திமிர்டீ” - என்று சுரீர் என ஆரம்பித்து விடுவாள். முதல் முதலாகச் சுலபாவுக்கு இந்தியில் டூப் குரல் கொடுக்கக் கூடக் ‘கவிதா’வையே ஏற்பாடு செய்யலாம் என்று யோசனை கூறினார் ஒரு தயாரிப்பாளர். ஏனென்றால் கவிதாவின் இந்தி நன்றாயிருந்தது. கொஞ்சம் முயன்று ஓர் இந்தி ஆசிரியரை விட்டுப் பழக்கினால் அவள் வடநாட்டுக்காரர்களைப் போலவே சகஜமாக இந்தி பேசுவாள் என்று தோன்றியது. சுலபாவுக்கோ இந்தி உச்சரிப்பு அறவே வரவில்லை. கவிதாவுக்குக் கூடக் குரல் தானம் செய்ய ஆசை தான். அது தானமுமில்லை. கணிசமான வருமானமும் கிடைக்கும் என்று தெரியவந்தது. சுலபா என்ன நினைத்தாளோ எப்படிப் புரிந்து கொண்டாளோ. கடைசி நிமிஷத்தில் அந்தத் தயாரிப்பாளரைக் கூப்பிட்டு, “கவிதாவைத் தொந்தரவு பண்ணுதிங்க... நல்லா இந்தி பேசற ஒரு வடக்கத்திப் பொண்ணையே குரலுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள். இதில் கவிதாவுக்கு ஏமாற்றம் தான். மாமாவிடம் போய்ச் சொன்னாள்: “எனக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும்! இந்தி பேச வராத வேற சில ஆர்ட்டிஸ்ட்டுக்கும் குரல் கொடுக்கக் கூப்பிடுவாங்க! என் குரலும் உச்சரிப்பும் பிரமாதமா ‘சூட்’ ஆகும்னு அவங்களே டெஸ்ட் பண்ணி முடிவு சொல்லிட்டப்ப இவ திடுதிப்னு குறுக்கிட்டுக் கூடாதுன்னுட்டாளே?” “நல்ல வேளை! நீ தப்பிப் பிழைத்தாய். அவளுக்குப் பிடிக்காததை நீயாக ஒப்புக் கொண்டு செய்ய ஆரம்பித்து அப்புறம் சித்திரவதை அநுபவிப்பதைவிட முதலிலேயே விட்டுப் போனதற்காகச் சந்தோஷப்படு” என்றார் மாமா. இவை எல்லாம் அநுபவங்கள் என்றாலும் கவிதாவின் ஏமாற்றங்களைப் படிப்படியாக வளர்க்க இவை போதுமானவையாக இருந்தன. எஜமானியின் விரக்தி வெப்பத்திற்கு அருகிலேயே தொடர்ந்து இருந்தால் தானே வாடிக் கருகி விடுவோமோ என்ற எண்ணம் கவிதாவுக்குள் வளர்ந்தது. எஜமானியின் ஈகோவை நிறைவு செய்யத் தன் ஈகோவை வலிந்து அடக்குவது கவிதாவுக்கே பிடிக்கவில்லை. |