8 சினிமா உலகைப் பொறுத்தவரை அவள் ஆணவத்தை அதுவரை யாரும் தட்டிக் கேட்கவில்லை. சினிமா அவளுக்குச் சேர்த்துக் கொடுத்திருந்த புகழும் செல்வமும் அந்த உலகிற்கு வெளியேயும் அவள் ஆணவம் செலாவணியாகும்படி செய்திருந்தது என்பதே உண்மை. கடந்த காலக் கணக்கு என்ற பழைய பாக்கியில் குப்பையரெட்டி மட்டுமே மீதமிருந்தான். அவனைப் பழிவாங்க அவன் ஆள் அகப்படவில்லை. மேலே ஏறுவதற்கு உயரங்களே மீதமில்லாத அத்தனை உயரத்தில் இப்போது அவள் இருந் தாள். அதனால் தான் சலிப்பாயிருந்தது. முயற்சியும் ஊக்கமும் அற்றிருந்தன. இன்னும் அடைவதற்கு என்று எந்த வசதியுமே மீதமில்லாத அத்தனை வசதிகளில் அவள் திளைத்துக் கொண்டிருந்தாள். அதனனால் வாழ்க்கையைப் பற்றிய தாகம் எதுவுமே இல்லை. மந்தமாக இருந்தது. உலகில் எல்லாரும் அவளைக் காதலித்தார்கள். அவள் காதலிக்க எதுவுமே யாருமே மீதமில்லைபோல் தோன்றியது. சுலபாவுக்குச் சில மேல் வர்க்கத்துக் குடும்பத் தலைவிகள் சிநேகிதமாயிருந்தார்கள். அவர்களில் இரண்டொருவர் வீட்டுக்கு அவள் அடிக்கடி போவாள். அவள் வீட்டுக்கும் அவர்கள் வருவார்கள். மனம் விட்டுப் பேசுவார்கள். இப்படி அவர்கள் சந்திப்பின் போது பல விஷயங்களைப் பற்றிய பேச்சு வரும். ஆண்கள் யாரும் கூட இல்லாத சமயங்களில் பால் உணர்வு கவர்ச்சி - பிறரை மயக்கும் அழகு - எல்லாம் பற்றிக் கூட அவர்கள் நேரம் போவது தெரியாமல் பேசி இருக்கிறார்கள். விவாதித்திருக்கிறார்கள். இத்தகைய சிநேகிதிகளில் ஒருத்திதான் கோகிலா. ஒரு சிமெண்ட் கம்பெனி உரிமையாளரின் நடுத்தர வயது மனைவி. படித்தவள். அவளும், சுலபாவும் தங்கள் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வதுண்டு. ஒரு முறை கோகிலா தன் கணவர் ஊரில் இல்லாத சமயமாகப் பார்த்துச் சுலபாவை டின்னருக்கு அழைத்திருந்தாள். கோகிலா, சுலபா இருவருமே எப்போதாவது ‘பிராந்தி’ குடிப்பது உண்டு. கோகிலாவுக்குச் சுலபாவின் பழக்கம் இது எனத் தெரியும். நடித்துக் களைத்து வீடு திரும்பினால் அயர்ந்து உறங்க இது தேவை என்று ஆரம்பித்து அப்புறம் இது பழக்கமாகிவிட்டது. கோகிலா ஏதோ பிரசவத்துக்குப்பின் மருந்தாக ஆரம்பித்து அப்புறம் மேல்தட்டு சிநேகிதத்தில் பழக்கமாக்கிக் கொண்டு விட்டாள். அர்பன் சொஸைட்டி ஹேபிட்டாக வந்துவிட்டது. இவர்கள் தனியே சந்தித்த விருந்தின்போது இரண்டு ரவுண்டு சுகமான பிஸ்கட் பிராந்தி உள்ளே கதகதவென்று இறங்கியதும் - சூடு வேலை செய்தது. கோகிலா சுலபாவைக் கேட்டாள், “பார்த்தவுடன் இவனை அநுபவித்துவிட வேண்டும் என்று எந்த ஆண்பிள்ளையாவது உன்னை நினைக்கச் செய்திருக்கிறானா?” “சினிமாவைப் பொறுத்தவரை அப்படி ஆசைப்பட்டு நினைக்க இடைவெளியோ அவகாசமோ கிடையாது கோகிலா! புகழ்பெறுகிறவரை நீ ஆசைப்படி வாய்ப்பே கிடையாது. உன்னை ஆசைப்படுகிற வசதியுள்ளவர்களைத் திருப்திப்படுத்துவதற்கே நேரம் போய்விடும்.” “ஆசை, காதல், இச்சை எல்லாமே வறண்டு போய்விடும் என்கிறாயா?” “மற்றவர்கள் அநுபவம் எப்படியோ, என் அநுபவம் அப்படித்தான். விரக்தி அடையும் அளவு நான் கசந்து போயி ருக்கிறேன். இப்படி முன்னுக்கு வர என்னைக் கசக்கிப் பிழிந் திருக்கிறார்கள்.” “நெஞ்சைத் தொட்டுச் சொல் சுலபா? இது உறுதி தானா?” “தற்போதுள்ள நிலைமையைச் சொல்கிறேன். எந்த ஆண்பிள்ளையும் எனக்கு அழகனாகத் தெரியவில்லை. யாரைப் பார்த்தாலும் மிருக இச்சையுள்ள ஓர் இயந்திரமாகவே கண்ணுக்குப் படுகிறான் கோகிலா. அந்த முதல் குப்பைய ரெட்டி தொடங்கி எல்லாருமே திருட்டுப் பயல்கள்.” “இது தற்காலிகமான கோபம். இன்னும் நீ சந்யாசினி ஆகிடவில்லை. உன்னை ஆசைப்படாத யாராவது எதிர்ப் பட்டால் ஒருவேளை நீ அவன் மேல் ஆசைப்படலாம் சுலபா!” “என்னைச் சுற்றி அத்தனை நிதானமும் பொறுமையுமுள்ள நிஜமான ஆண்மகன் யாருமே இல்லையடி கோகிலா...” “இதுவரை நீ சந்தித்த ஆண்களில் யாருமே உனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை என்கிறாயா?” “நிர்ப்பந்திக்கப்பட்ட சந்தோஷங்கள் எல்லாம் நிஜமான சந்தோஷங்கள் ஆவதில்லை.” “யாரும் ஏற்பாடு செய்யாமல் - ஒரு பெண்ணுக்கு ஆணிடமோ, அல்லது ஆணுக்குப் பெண்ணிடமோ ஏற்படுகிற சுயேச்சையான யதேச்சையான உல்லாஸம் என்பதை நீ ருசித்ததே இல்லை என்றா சொல்கிறாய்?” “குப்பைய ரெட்டி என்கிற படுபாவியிடம் சிக்கியிரா விட்டால் அந்த உல்லாஸம் எனக்கும் கிடைத்திருக்கலாமோ என்னவோ?” “காமம் சம்பந்தமான எல்லா அசல் மகிழ்ச்சிகளுமே சுயேச்சையானவை. யதேச்சையானவை. தற்செயலானவை! மழையையும், காற்றையும் போல இயல்பானவை.” “எனக்கு அதை எல்லாம் புரிந்துகொள்ளவே வாய்த்த தில்லை.” “தற்செயலாக நம்மேல் வீசும் தென்றலின் ஓர் இழை, நிலவின் ஒரு கீற்று, மழையின் ஒரு துளி போன்றது அசலான சந்தோஷம்.” “நான் உடல்களை நிறையச் சந்தித்திருக்கிறேன். சந்தோஷம் என்பது மனசைப் பொறுத்தது இல்லையா?” “மனசோடு கூடிய உடம்புதான் சந்தோஷம் சுலபா! உடம்புகள் மூலமாகத்தான் மனசுகளின் சந்தோஷம் உணரப் பட முடியும்.” “மனசால் தவறு என நினைத்தபடியே இரண்டு உடம்புகள் அசல் சந்தோஷத்தை அறிய முடியாது, உணர இயலாது.” “ஒருவரை வெல்கிறோம் என்ற உணர்வோடு அடைகிற மகிழ்ச்சியும் சமமானதில்லை.” “காதலில் முழு மகிழ்ச்சிக்கு இருவருமே சமமாகத் தோற்க வேண்டும், இருவரில் ஒருவர் மட்டுமே ஜெயித்து விடுவது போல அடைவது இன்பமல்ல. வேட்டை. வேட்டையில் தான் குறிவைத்த மிருகத்தை வலையில் பிடித்து வீழ்த்துவார்கள்.” “வேட்டையில் பிடிபட்ட மிருகம் போல வாழ்ந்து விட்டதாகச் சொல்கிறாய் சுலபா! உனக்கென்று தனியாக ஆசைகள் எதுவும் இல்லையா?” “உண்டு கோகிலா! உன்னிடம் சொன்னால் நீ ஒரு வேளை என்னைத் தப்பாக எண்ணிக் கொள்ள நேரிடும்.” “அசடே? இதில் தப்பாக நினைக்க என்ன இருக்கிறது? நான் என் மனசைத் திறந்து உன்னிடம் பேசுகிறேன். நீ உன் மனசு விட்டு என்னிடம் பேசமாட்டேனென்கிறாய்?” “அன்றரும்பிய மலராகப் பரிசுத்தமாக - ஆண்கள் யாரும் தீண்டாத கன்னியாக இருந்த என்னை விலை கொடுத்து ஒவ்வொருவராக வேட்டையாடினார்கள். முப்பது வயது முடிவதற்குள்ளேயே எண்பது வயது மூப்பை என்னுள் திணித்தார்கள். என் மனத்தின் இயல்பான ஆசை ஊற்றுக் கண்களை எல்லாம் அடைத்தார்கள். பணத்தால் - புகழால் அந்த இனிய ஊற்றுக் கண்கள் அடைபட்டுப் போயின.” “நீ சொல்வது முழு உண்மை இல்லை சுலபா! உனக்குள் இன்னும் ஏதோ ஓர் ஆசை இருக்க வேண்டும். அதை நீ மறைக்கிறாய்.” “எப்படி? எதனால் நீ இதை அநுமானிக்க முடிகிறது?” “உன்னிடம் எல்லாவற்றின் மேலும் வெறுப்பும் கசப்பும் நிரம்பியிருக்கின்றன. எல்லாவற்றையும் வெறுப்பவர்கள் ஏதாவது ஒன்றின் மேல் ஆசைப்படுகிறவர்களாக இருப்பார்கள் என்பது மனத் தத்துவம். பரிபூரணமான துறவிகள்தான் எதையும் வெறுக்காமல் விரும்பவும் - எதையும் விரும்பாமல் விட்டுவிடவும் முடிந்தவர்கள். நீ துறவியைப் போல் பேசுகிறாய், ஆனால் துறவியில்லை. பிஞ்சிலே பழுத்தவள் - ஐமீன் பழுக்க வைக்கப் பட்டவள். உன் வெறுப்புக்கள் மேலாக மிதப்பவை. அவை அப்படி மிதக்கக் காரணமான ஆசைகள் அடி நீராகத் தேங்கியிருக்கின்றன என்பதுதான் உண்மை.” “இதெல்லாம் எப்படிச் சொல்கிறாய் கோகிலா? ஜோசியமா?” “ஃப்ராய்டிலிருந்து ஹக்ஸ்லி வரை எவ்வளவு படித்திருப்பேன்? உன் மனசை அப்படியே எக்ஸ்ரே எடுத்து வைக்க என்னால் முடியும்டி சுலபா?” “நீ அவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியமில்லை கோகிலா! நான் மறைத்தால் தானே நீ எக்ஸ்ரே எடுக்க முயல வேண்டும்? நானே சொல்லி விடுகிறேன். உள்ளதை அப்படியே சொல்லி விடுகிறேன். என்னை இரத்தவெறி பிடித்தவள் - காமாந்தகாரி என்றெல்லாம் முடிவு செய்து விடாதே. உண்மையைச் சொன்னேன் என்று மட்டுமே சந்தோஷப்படு! வேறுவிதமாக எண்ணாதே.” “நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன். சொல்லு! உண்மைகள் எப்படி இருந்தாலும் விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவை. அவைகளை உண்மைகளாக மட்டுமே பார்த்துவிட்டு விலகிவிட எனக்குத் தெரியும்! உண்மைகளைப் பிரதிபேதம், பாட பேதம் பார்த்து ஆராய எனக்குப் பைத்தியமில்லை.” “என்னுடைய அந்தரங்கம் குரூரமானது என்று நீ என்னைக் கேவலமாக நினைக்கலாம்.” “சந்தோஷங்கள் குரூரமானவை அல்ல, ஆனால் குரூரமான ஆசைகள் இருக்க முடியும். அவற்றை விமர்சிப்பதற்காக நான் வினாவவில்லை...” “என்னை முதல்முதலாக மற்றவர்கள் கெடுத்துப் பாழாக்கிய மாதிரி ஐம்புலன்களையும் அடக்கி ஆசைகளைக் கட்டுப் படுத்தி விலகி வாழும் இளைஞர்களாகத் தேடிக் கெடுத்துவிட வேண்டும் என்கிற வைரம் பாய்ந்த பழிதீர்க்கும் எண்ணம் என்னுள் அடிமனத்தில் உண்டு.” “உன்னைக் கெடுத்தவர்கள் பணத்தோடு வந்து அதைச் செய்தார்கள்.” “உண்மை! அன்று என்னிடம் பணம் இல்லை. அழகு மட்டும் இருந்தது. நான் கெட்டேன். இன்று என்னிடம் பணம் இருக்கிறது. அழகு இருப்பதாக மற்றவர்கள் சொல்கிறார்கள். பணத்தைச் செலவழித்துப் பெண்களைத் தேடி வந்து கெடுக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? பணத்தைச் செலவழித்து ஆண்களைக் கெடுத்துப் பழி தீர்க்க வேண்டும் என்று எனக்குள்ளும் ஒரு தணியாத வெறி உண்டு.” “ஏற்கெனவே நீ சினிமா மூலம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறாய் என்று உனது கடுமையான விமர்சகர்கள் சொல்லலாம்.” “சொல்கிறார்கள். ஆனால் அதன் மூலம் பழிதீர்த்து விட்ட திருப்தி எனக்குள் ஏற்படவில்லையே?” “அப்படியானால் அந்த ஒரு திருப்திக்கு நீ கொடுக்க விரும்பும் விலை என்ன சுலபா?” “ஆண்வர்க்கத்தைப் பழி வாங்கி முடித்து விட்டேன் என்ற திருப்தி கிடைக்குமானால் என் முழுச் சொத்துச் சுகங் களை இழக்கக் கூட நான் தயாராயிருப்பேன் கோகிலா! அதன் பின் வாழ்க்கையே கூடி எனக்கு அவசியமில்லை. என்னுடைய இலட்சியமே முடிந்து விட்ட மாதிரி...” கண்களில் நீர் மல்கச் சொன்னாள் சுலபா. |