16 இறைமுடிமணி அவர்களைத் தம்முடைய புதுக் கடைக்கு வரவேற்று உட்கார வைத்துச் சந்தனம் கல்கண்டு கொடுத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவர்கள் புறப்படுவதற்கு முன், "கொஞ்சம் இப்பிடி வர்றியா விசுவேசுவரன்? உங்ககிட்ட ஒரு நிமிஷம் தனியாப் பேசணும்" - என்று சர்மாவைக் கூப்பிட்டார் இறைமுடிமணி. சர்மா எழுந்திருந்து இறைமுடிமணியோடு சென்றார். கடைக்கு வலது பக்கம் காலியாயிருந்த புல்தரையில் நின்று கொண்டு அவர்கள் இருவரும் பேசினார்கள். "அகமத் அலி பாய்க்கு நீ இந்த இடத்தை விடலேங்கிற கோபத்திலே அந்தச் சீமாவையன் ஊர் பூராத் துஷ்பிரசாரம் பண்ணியிருக்கான். நான் ஏதோ அக்கிரகாரத்து வாசிகளைச் சண்டைக்கு இழுக்கறதுக்காகத்தான் இங்கே கடை போட்டிருக்கேனாம். என் கடையிலே அக்கிரகாரத்து ஆளுங்க யாரும் சாமான் செட்டு வாங்கப்படாதுன்னு வேற இந்த ஊர் பூராப் பிரச்சாரம் பண்ணியிருக்கான் அந்த ஆளு. நான் நல்லவனுக்கு நல்லவன். பொல்லாதவனுக்குப் பொல்லாதவன். வியாபாரத்துக்காகக் கொள்கையைக் காத்திலே பறக்கவிடற ஆளு நான் இல்லே. அதே சமயத்திலே கடைக்கு வியாபாரத்துக்கு வர்றவங்க தலைமேலே எல்லாம் அரிப்பெடுத்துப் போய் வலிந்து என் கொள்கையைத் திணிக்கிறவனும் இல்லை. வியாபாரத்தை எப்பிடி நியாயமா வளர்க்கணுங்கிறது எனக்குத் தெரியும். ஆயிரம் சீமாவையரு வந்தாலும் என்னை ஒண்ணும் பண்ணிட முடியாது." "அதெல்லாம் சரிதான் தேசிகாமணி! உன் உரிமையிலே நான் தலையிடறேன்னு தப்பா நெனைச்சுக்காதே. இந்த இடமோ மடத்துக்குச் சொந்தம். சூழ்நிலையோ முழுக்க முழுக்கத் தெய்வபக்தியுள்ள மனுஷாளுது. இங்கே நடத்தப் போற ஒரு பலசரக்குக் கடைக்கு இந்தப் பேரு, இந்தப் படம் எல்லாம் ஒரு விதத்திலே பெரிய எடைஞ்சலா இருக்கும்னு படலியா உனக்கு?" "இடைஞ்சலா இருந்தா இருக்கட்டும்பா! அதுக்காக ஒவ்வொரு இடத்துலே நடத்தற கடைக்கும் ஒவ்வொரு வேஷம் போடற ஆளு நான் இல்லே. வியாபார நஷ்டத்தை விடக் கொள்கை நஷ்டத்தைப் பெரிசா மதிக்கிறவன் நான்..." - ஆவேசமாக இதைச் சொன்னார் இறைமுடிமணி. இறைமுடிமணியின் அந்த ஒருமைப்பாடு; கள்ளங்கபடமில்லாத கொள்கைப் பிடிவாதம் எல்லாமே சர்மாவுக்குப் பிடித்திருந்தாலும் சீமாவையரின் எதிர்ப்பில் சில கலகங்கள் இன்றோ நாளையோ அங்கே விளையக் கூடும் என்றே எதிர்பார்த்தார் அவர். "நீ சொல்றது நியாயம்தான் தேசிகாமணி! உன் கொள்கையை, நீ விரும்பற படத்தை, உன்னோட வியாபார ஸ்தலத்திலே நீ வச்சுக்கறது எந்த விதத்திலேயும் தப்பில்லே. சீமாவையர் பண்ற வம்பைப் பத்தி நீ எங்கிட்டச் சொல்ல வந்ததாலே உன் சிநேகிதன்கிற முறையிலே உனக்கு என் யோசனையைச் சொன்னேன். அவ்வளவுதான். உன்னை நான் எதுவும் வற்புறுத்தறதா நீ நினைச்சுக்க வேண்டாம். நீ இஷ்டப்படறபடி உன் கடையை நடத்த உனக்கு உரிமை இருக்கு." "என்ன நடந்துகிட்டுருக்குங்கிறதை உங்கிட்டச் சொல்லிடணும்னுதான் இதைச் சொன்னேன்" - என்று கூறி அந்த உரையாடலுக்கு அதோடு முற்றுப்புள்ளி வைத்தார் இறைமுடிமணி. அப்போது அவரைப் போலவே கருஞ்சட்டை அணிந்த நண்பர்கள் நாலைந்து பேர் கடைக்கு வரவே அவர்களை வரவேற்றுப் பேசி உபசரித்து அனுப்பிவிட்டு மறுபடியும் இறைமுடிமணி சர்மா நின்றுகொண்டிருந்த புல்தரைக்குத் திரும்பி வந்தார். "நீ மட்டும் வந்து தலையைக் காட்டிட்டுப் போயிடாமத் தம்பியையும், இந்தப் பிரெஞ்சுப் பெண்ணையும் உன் கூடக் கூட்டியாந்ததுலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி விசுவேசுவரன்! நானே கண்டிப்பா எல்லாரும் வரணும்னு தான் நேரே வந்து சொல்லிப் போட்டு வந்தேன்." - சிறிது நேர மௌனத்துக்குப் பின் சீமாவையர் தம்மிடம் நேருக்கு நேர் வந்து கூப்பாடு போட்டு மிரட்டியதைப் பற்றி இறைமுடிமணியிடம் கூறினார் சர்மா. "அட அவன் கிடக்கிறான் விட்டுத் தள்ளப்பா... அந்த ஆளுக்கு அழிவுகாலம் வந்திரிச்சுன்னுதான் நினைக்கிறேன்..." - என்று வெறுப்போடு பதில் வந்தது இறைமுடிமணியிடமிருந்து. சர்மா, ரவி, கமலி எல்லாரும் இறைமுடிமணியிடம் சொல்லி விடை பெற்றுக்கொண்டு புறப்பட இருக்கையில் தற்செயலாகக் கடையின் பெஞ்சில் ஒரு மூலையில் அடுக்கியிருந்த புத்தகங்களை எடுத்துப் புரட்டினான் ரவி. 1. ஆதிசங்கரரும் அவரது தத்துவங்களும் - பிரும்மஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய சாஸ்திரி எழுதியது. 2. போதாயனீயமும் பாஞ்சராத்ர வைகானஸ வழிபாட்டு முறைகளும் - உபயவேதாந்தி ஸ்ரீ வைஷ்ணவ சண்டமாருதம் - பிரதிவாதி பயங்கரம், கோளூர் கோபாலாச்சாரியார் எழுதியது. 3. அண்ட கோள விருத்தி - மதுரைத் தமிழ்ச்சங்கக் கலாசாலைப் பிரதம ஆசிரியர் ஸ்ரீ உ.வே. திருநாராயணய்யங்கார் சுவாமிகள் இயற்றியது. என்று மூன்று புத்தகங்கள் அடுக்காக இருந்தன. "என்ன தம்பீ? அப்படிப் பார்க்கறீங்க? நம்பளுது தான். படிக்கிறத்துக்காக எடுத்து வச்சிருக்கேன்" - என்று அர்த்த புஷ்டியோடு சிரித்துக் கொண்டே ரவியிடம் சொன்னார் இறைமுடிமணி. "ஒண்ணுமில்லே... சும்மா பார்த்தேன்" என்று கூறி விட்டுப் புறப்பட்டான் ரவி. தெருமுனை திரும்பியதும் தந்தையிடம் கேட்டான் அவன். "இதெல்லாம் ராகு காலத்திலே புதுக்கடை தொடங்கற ஒருத்தர் படிக்கிற புஸ்தகங்களான்னு நெனைக்கறப்போ ரொம்ப ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்குப்பா!....." "இதிலே ஆச்சரியமென்ன? எல்லா விஷயங்களையும் வெறுப்பில்லாமத் தெரிஞ்சுக்கணும்கிற சுத்தமான ஞான வேட்கை அவனுக்கு உண்டு. அவனோட இந்த முரண்பாடுகளுக்கு நடுவேயும் ஒரு முழுமை இருக்கு." "அவை ரொம்பவும் ரம்யமான முரண்பாடுகளா இருக்குப்பா! இவரையும் நினைச்சுண்டுத் தெருத் திண்ணையிலே ஊர்ச் சோம்பேறிகளோட சீட்டாடிண்டே புகையிலையைக் குதப்பித் துப்பிண்டு இருக்கிற சீமாவையரையும் நினைச்சா, ஞான வேட்கைக்கும் ஜாதிக்கும் சம்பந்தமே இல்லேன்னு கூடத் தோண்றதே? இல்லையா?" - ரவி கேட்டான். சர்மா அதற்கு அப்போது உடனே அவனிடம் பதில் எதுவும் சொல்ல வில்லை. ரவியின் வினாவுக்குத் தந்தை பிறகு பதில் சொல்லாவிட்டாலும் அந்த வினாவைப் பற்றி அவர் சிந்திக்கிறார் என்பதே அவனுக்குத் திருப்தியாக இருந்தது. அதை உடனே அவர் பதில் சொல்லி மறுப்பார் என்று அவன் எதிர்பார்த்தது தான் நடக்கவில்லை. ***** அவர்கள் மூவரும் வீடு திரும்பியதுமே சீமாவையரின் துஷ்பிரசார வலிமை சர்மாவுக்குத் தெரியும்படியான நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. ரவியும், கமலியும், சர்மாவும் வீட்டுப்படியேறி உள்ளே நுழைந்தபோதே திண்ணையில் அக்ரஹாரத்தின் மூன்று தெருக்களையும் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் சர்மாவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். சர்மா அப்படியே அவர்களை வரவேற்று முகமன் வார்த்தைகள் கூறி அவர்களோடு திண்ணையில் அமர்ந்து கொண்டார். ரவியும் கமலியும் அவர்களுக்கு ஊடே நடந்து அவர்களைக் கடந்துதான் வீட்டுக்குள்ளேயே செல்ல வேண்டியிருந்தது அப்போது. வந்திருந்தவர்களின் முகங்களை ஒவ்வொன்றாகப் பார்த்த போதே சர்மாவால் அவர்கள் எதற்கு வந்திருக்கக்கூடும் என்பதைச் சுலபமாகவே அனுமானித்துக் கொள்ள முடிந்தது. பஜனை மடம் பத்மநாப ஐயர், வேத தர்ம சபைக் காரியதரிசி ஹரிஹர கனபாடிகள், கர்ணம் மாத்ருபூதம், மிராசுதார் சுவாமிநாதன் ஆகியோர் வந்திருந்தார்கள். ஹரிஹர கனபாடிகள்தான் முதலில் ஆரம்பித்தார். "எப்போ அது பொதுச் சொத்துன்னு ஆச்சோ அப்போ நீர் ஸ்ரீ மடத்துக்கு வேண்டியவா நாலு பேரைக் கலந்து பேசி - அக்ரஹாரத்து மனுஷாளே யாராவது கடைகிடை வச்சுப் பராமரிக்கத் தயாரா இருக்காளா, இல்லியான்னு முதல்லே தெரிஞ்சுண்டு அப்புறம் வெளியிலே வாடகைக்கு விட வேண்டாமோ?" சர்மா பொறுமையாக இதற்குச் சமாதானம் சொன்னார். ஆனால் அப்போது அங்கு வந்திருந்த யாரும் அவரது சமாதானத்தை ஏற்கவில்லை. "ஒரு டெண்டர் நோட்டிஸ் ஒட்டி ஏலம் போட்டு இன்னும் அதிக வாடகைக்கு விட்டிருக்கலாம். தெய்வ பக்தியில்லாத மனுஷாளுக்கு விட்டிருக்க வேண்டாம்" என்றார் பஜனை மடம் பத்மநாபன். "ஸ்ரீ மடத்திலே எழுதிக் கேட்ட்துக்கு மனுஷா யாராயிருந்தாலும் பரவாயில்லை. வாடகை ஒழுங்காகக் குடுக்கற யோக்கியமான பார்ட்டிக்கு விடலாம்னு பதில் வந்தது. அதான் விட்டேன்." - "இத்தனை பெரிய ஊர்ல அந்தச் சூனாமானாக்காரன் தான் யோக்கியமானவனா உமக்குக் கிடைக்கணுமோ?" "ஒருத்தர் யாரு என்கிறதை விட எப்படிப்பட்டவர்ங்கிறது தான் ரொம்ப முக்கியம்." "அதையேதான் உம்மைத் திருப்பிக் கேக்கறோம்! எப்படிப்பட்டவர்னு தெரிஞ்சுதான் அவனுக்கு இந்த எடத்தை விட்டீரா?" விவாதம் வளர்ந்தது. அவர்கள் அனைவரும் சீமாவையரால் தூண்டிவிடப்பட்டுப் புறப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகவே தெரிந்தது. போகிற போது சர்மாவைக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்துவிட்டு எழுந்திருந்து போனார்கள் அவர்கள். அன்று பிற்பகலில் சர்மா ஏதோ காரியமாகப் பூமிநாதபுரம் புறப்பட்டுப் போயிருந்தார். வசந்தி வந்திருந்தாள். ஒரு வாரத்தில் தான் பம்பாய் போக வேண்டியிருக்கும் என்று அவள் தெரிவிக்கவே கமலி அவளிடம் சில யோசனைகள் கேட்டாள். கமலிக்கு யோசனைகள் கூறியதோடு காமாட்சி மாமி கட்டிக் கொள்கிற மாதிரிப் புடைவை கட்டிக் கொள்வது எப்படி என்று அவளே வற்புறுத்திக் கேட்கவே அதையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தாள் வசந்தி. அப்போது ரவி எங்கோ வெளியே போயிருந்தான். ஆகவே மனம் விட்டுப் பேசிக்கொள்ள அவர்களுக்கு வசதியாயிருந்தது. சர்மாவின் குடும்பத்தைப் போன்ற மிகவும் வைதீகமான குடும்பங்கள், பழக்க வழக்கங்கள் - நடை முறைகள் பற்றிப் புத்தகங்களில் படித்தும் ரவியிடம் கேட்டும் கமலி நிறைய அறிந்திருந்தும், சில நுணுக்கமான சந்தேகங்கள் அவளுக்கு இன்னுமிருந்தன. அப்படிப்பட்டவற்றை அவள் வசந்தியிடம் இப்போது கேட்டறிந்தாள். அதில் ஒன்று மிகவும் நாசூக்கானது. வசந்தி அதற்குத் தெளிவாகவே பதில் சொன்னாள். கமலியை முன்னெச்சரிக்கை செய்தும் வைத்தாள். "அப்படி நாட்களில் இந்த வீட்டு வழக்கப்படி பின்னால் கொல்லைப்பக்கம் தனி அறை ஒண்ணு இருக்கு. அதிலே போய் இருந்துக்க வேண்டியது தான். நிறையப் புஸ்தகம் எடுத்து வச்சுக்கோ. படி, குளிக்கிற நாள் வர வரை ஒரு ஜெயில் மாதிரி தான்னு வச்சுக்கோயேன்." தான் காமாட்சியம்மாளுக்குத் திருப்தியாக நடந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஒவ்வொன்றாய்த் தூண்டித் தூண்டி விசாரித்து அறிந்து கொண்டாள் கமலி. தான் அந்தி விளக்கு ஏற்றியதனால் காமாட்சியம்மாள் செய்த சிறு பூசல், ரவியின் தந்தை தன்னிடம், 'ஒருவருஷத்துக்கு மேல் இந்த வீட்டிலே இருக்க உனக்கு வசதிப்படுமா?' என்று தன்னைக் கேட்டது எல்லாவற்றையும் வசந்தியிடம் மனம் விட்டுச் சொல்லிய பின்பே ஒவ்வொன்றாக யோசனை கேட்டிருந்தாள் கமலி. ரொம்பச் சிரமமா இருந்தா எங்க வீட்டு மாடிக்குப் போயிடு. நான் அப்பாட்டச் சொல்லிட்டுப் போறேன்" என்று வசந்தி கூறியதற்குக் கமலி ஒப்புக் கொள்ளவில்லை. "பார்க்கலாம். அதற்கு அவசியம் நேராது வசந்தி!" என்றாள் கமலி. புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொண்டிருப்பதைத் தவிரப் பூஜை, புனஸ்காரங்கள் பற்றியும் வசந்தியிடம் நிறையக் கேட்டறிந்து கொண்டாள் கமலி. "நீ கொல்லைப் பக்கத்து அறையில் போய் உட்கார்றப்போ பாருவை வேணும்னா ஸ்கூலுக்கு லீவு போடச் சொல்லி உனக்குத் துணைக்கு வச்சுக்கோ. பல்லாங்குழி, சோழி எல்லாம் ஆடலாம்" என்று சிரித்த படி கூறினாள் வசந்தி. "துணை எதற்கு? எனக்கென்ன பயமா?" என்று கேட்டாள் கமலி. அவள் விரும்பியபடி அன்று முன்னிரவில் அவளைப் பூமிநாதபுரத்திலிருந்த பெரிய சிவன் கோயிலுக்கு அழைத்துப் போனாள் வசந்தி. கையில் தேங்காய்ப்பழம். பூ ஊதுவத்தி அடங்கிய பூஜைக்கூடையுடன் வெள்ளைக்காரி ஒருத்தி புடவையும் குங்குமத் திலகமுமாகக் கோவிலுக்கு வந்ததைப் பெரிய அதிசயமாகப் பார்த்தார்கள் சங்கரமங்கலம், பூமிநாதபுரம் கிராமத்து மக்கள். கோவிலிலிருந்த சிற்பங்களைப் பற்றி அவற்றின் திருவிளையாடல் கதைக் குறிப்புகளை எல்லாம் வசந்தி கமலிக்கு விளக்கிக் கூறினாள். வசந்தியோடு கர்ப்பக் கிரகத்துக்கு நெருக்கமாக ஆலயத்திற்குள் சென்று சர்மாவின் குடும்ப ஷேமத்துக்காக என்று அர்ச்சனையும் செய்து வழிபட்டுப் பிரசாதம் வாங்கிக் கொண்டு திரும்பினாள் கமலி. பூமிநாதபுரம் சிவன் கோவிலும் அதன் அழகும் அமைதியும் ஆயிரங்கால் மண்டப முகப்பிலிருந்த சிற்பங்களும் கமலிக்கு மிக மிகப் பிடித்திருந்தன. துளசி மாடம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
முடிவுரை
|