28 மறுநாள் விசாரணைக்காக கோர்ட் கூடிய போது இந்த வழக்கின் தனித் தன்மையை உத்தேசித்து மேலும் சில சாட்சியங்களை விசாரிக்க விசேஷமாக அநுமதிக்க வேண்டும் என்றும், வழக்கை முடிவு செய்ய அது மிகமிக உபயோகமாக இருக்கும் என்றும் எதிர்த்தரப்பு வக்கீல் வேண்டியபோது வேணு மாமா எழுந்திருந்து அதை ஆட்சேபித்தார். ஆனால் நீதிபதி அதற்கு அனுமதியளித்ததோடு, "அவரது சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்யும் உரிமையும் வசதியும் உங்களுக்கு இருக்கும் போது கவலை எதற்கு?" என்று வேணு மாமாவுக்கு உணர்த்தினார். அன்றைக்கு எதிர்த்தரப்பு வக்கீல் என்னென்ன சாட்சியங்களை விசாரிப்பார் - வழக்கை எப்படி எப்படித் திரித்துக் கொண்டு போக முயல்வார் என்பதை எல்லாம் அப்போதே வேணு மாமாவால் ஓரளவு அநுமானம் செய்து கொள்ள முடிந்திருந்தது. சப்-ஜட்ஜ் கூறியது போல் எதிர்த்தரப்பு சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்து வகையாக மடக்கலாம் என்ற நம்பிக்கையோடு அதற்கு இசைந்து அமர்ந்தார் அவர். வழக்கு எப்படிப் போகிறதென்று அறியும் ஆவலுடன், கமலி, சர்மா, ரவி, வசந்தி எல்லாரும் அங்கே கோர்ட்டில் வந்து அமர்ந்திருந்தார்கள். பொது மக்களும் முதல் நாள் போலவே அன்றும் கூட்டமாக வந்திருந்தார்கள். இந்து சமயப் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் எதையும் கமலி அறியாதவள் என்பதை நிரூபிப்பதற்காகத் தயாரிக்கப்பட்டது போல் அமைந்திருந்தது முதல் சாட்சி. சிவன் கோவில் பிரதான வாயிற் காவற்காரரான முத்து வேலப்ப சேர்வை என்பவர் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒருநாள் மாலை கமலி காலில் செருப்புக்களுடன் கோயிலில் நுழைந்ததாகச் சாட்சியமளித்தார். அது நிர்ப்பந்தித்து வற்புறுத்தி வலுக்கட்டாயமாகத் தயாரித்த சாட்சி என்பது முதலிலேயே தெளிவாகத் தெரிந்தது. வேணு மாமா அந்தக் கோயில் வாட்ச்மேனைக் குறுக்கு விசாரணை செய்தார். முதலில் அது நடந்த நாள் நேரம் முதலியவற்றை மறுபடி விசாரித்தார். வாட்ச்மேன் அதற்குப் பதில் கூறியபின், "அப்படித் தரிசனத்துக்கு வந்தபோது கமலி தனியாக வந்தாளா? வேறு யாரும் உடன் வந்தார்களா?" என்று கேட்டார். "வேறு யாரும் உடன் வரவில்லை" என்று அவனிடமிருந்து பதில் வந்தது. "உன் கடமைப்படி நீ காலில் செருப்புடன் உள்ளே போகக் கூடாது என்று அவளைத் தடுத்தாயோ இல்லையோ?" "நான் தடுக்கத்தான் தடுத்தேன். ஆனால் அவங்க 'அப்பிடித்தான் போவேன்'னு - என்னை மீறி உள்ளே நுழைஞ்சிட்டாங்க." "நீ எந்த மொழியில் தடுத்தாய்? அவங்க எந்த மொழியில் மாட்டேன்னு பதில் சொன்னாங்க..." "நான் தமிழ்லேதான் சொல்லித் தடுத்தேன். அவங்க தான் என்னமோ புரியாத பாஷையிலே பேசினாங்க." "புரியாத பாஷையிலே பேசினாங்கன்னு சொல்றியே? அப்பிடியானால் அவுங்க சொன்னது, 'செருப்பைக் கழற்றாமே அப்பிடித்தான் உள்ளே போவேன்'னு அர்த்தமுள்ளதா உனக்கு எப்பிடிப் புரிஞ்சுது...?" "இல்லீங்க அவங்க... தமிழ்லேதான் பேசினாங்க..." "முதல்லே புரியாத பாஷையிலே பேசினாங்கன்னு நீ சொன்னது நிஜமா? அல்லது இப்போ தமிழ்லே தான் பேசினாங்கன்னு சொல்றியே, இது நிஜமா?" திகைத்துப் போன சாட்சி முழித்தார். பதில் சொல்லவில்லை. கூண்டில் கையைப் பிசைந்து கொண்டு நின்றார். வேணு மாமா குறுக்கு விசாரணையை முடித்துக் கொண்டு தமது இடத்தில் போய் அமர்ந்தார். தம்முடைய அடுத்த சாட்சிக்கு ஆயத்தமானார் எதிர்த்தரப்பு வக்கீல். அடுத்து சிவன் கோவில் அர்ச்சகர்கள் மூவரும் ஒவ்வொருவராகச் சாட்சி சொல்ல வந்தார்கள். முதல் சாட்சி கைலாசநாதக் குருக்கள், ஐம்பத்தெட்டு வயதானவர். சிவாகமங்களிலே தேர்ந்த ஞானமுள்ளவர். சங்கரமங்கலம் சிவன் கோவிலில் பிரதம அர்ச்சகராயிருந்தார் அவர். அவர் சாட்சிக் கூண்டில் ஏறிக் கடவுள் சாட்சியாக உண்மை பேசுவதாகச் சத்தியப் பிரமாணம் செய்த போது வேணு மாமா, சர்மா எல்லாருக்குமே மிகவும் வேதனையாயிருந்தது. இத்தனைப் பெரியவர், இவ்வளவு படித்தவர் பொய்ச் சாட்சி சொல்லத் துணிந்து வந்து விட்டாரே என்று உள்ளூற மனம் வருந்தினார்கள் அவர்கள். "அந்தப் பிரெஞ்சுப் பொண்ணுக்கு நம்ம சாஸ்திரம் சம்பிரதாயம் ஒண்ணும் தெரியாததோட அதை எல்லாம் அவ கொஞ்சமும் மதிக்காதவள்னும் தெரியறது. நான் சுவாமி சந்நிதியிலே அவளுக்குக் குடுத்த 'விபூதி - வில்வதளம்' எல்லாத்தையும் அவ உடனே காலடியிலே போட்டு மிதிச்சதை என் கண்ணாலேயே பார்த்தேன்" - என்று சாட்சியம் அளித்தார் கைலாசநாதக் குருக்கள். "குருக்களே! நீங்க இதை மனப்பூர்வமாகத்தான் சொல்றேளா? அல்லது ஏதாவது நிர்ப்பந்தத்துக்காகவா?" -வேணு மாமா இப்படிக் கேட்கத் தொடங்கியதை எதிர்த்தரப்பு வக்கீல் ஆட்சேபணை செய்தார். அடுத்து மேலும் இரண்டு அர்ச்சகர்கள் இதே போல் கமலி கோயில் முறைகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டதாகவும், கோயில் பிரகாரத்தில் விவரந் தெரியாமல் அவள் அப்பிரதட்சணமாகச் சுற்றியதாகவும் சாட்சியம் அளித்தார்கள். "அப்படிப் பிரகாரத்தில் சுற்றும் போது அவள் தனியாயிருந்தாளா? வேறு யாராவது கூட இருந்தார்களா? எந்தத் தேதியன்று என்ன நேரத்தில் அது நடந்தது?" - என்று எல்லாரிடமுமே அடுத்தடுத்து ஒரே கேள்வியைக் கேட்டார் வேணு மாமா. எல்லாரும் ஒரே தேதி நேரம் கூறியதோடு கமலியைத் தாங்கள் தனியேதான் கோவிலில் பார்த்ததாகவும் தெரிவித்தார்கள். வேணு மாமா எல்லோரிடமும் ஏன் தேதி நேரம் கேட்கிறார் என்பது எதிர்த்தரப்பு வக்கீலுக்குப் புலப்படாமல் பெரிய புதிராயிருந்தது. அடுத்தபடியாகப் பஜனை மடம் பத்மநாப ஐயர், வேததர்ம பரிபாலன சபை காரியதரிசி ஹரிஹர கனபாடிகள், கர்ணம் மாத்ருபூதம், மிராசுதார் சுவாமிநாதன் ஆகிய நால்வரும் "கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ள ரதி மன்மத சிற்பத்தின் கீழே அந்தச் சிற்பத்தில் எப்படி ரதியும் மன்மதனும் கட்டித் தழுவிக் கொண்டிருந்தார்களோ அதே போலக் கமலியும், ரவியும் பகிரங்கமாகக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததாகவும் நாலு பேராகச் சேர்ந்து தரிசனத்துக்காகப் போயிருந்த தங்கள் கண்களில் கோயிலின் புனிதத் தன்மைக்குப் பொருந்தாத இந்த அருவருக்கத்தக்க ஆபாசக் காட்சி தென்பட்டதாகவும்" ஒவ்வொருவராகக் கூண்டிலேறிச் சாட்சி கூறினார்கள். இந்த ஆபாசக் காட்சியைக் கண்டு அந்தச் சமயத்தில் பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்த மற்ற ஆஸ்திகர்களின் மனம் புண்பட்டு அவர்கள் வருந்திக் கூறியதைத் தாங்கள் கேட்டதாகவும் மேலும் சாட்சிகள் தெரிவித்தார்கள். அதைக் கேட்டுக் கமலி, ரவி, சர்மா, வசந்தி ஆகியோருக்கு அந்த அபாண்டப் பழியையும் புளுகையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் நெஞ்சு குமுறியது. வேணு மாமா மட்டும் புன்முறுவலோடு எழுந்திருந்து தன் குறுக்கு விசாரணையைத் தொடங்கினார். அந்த நான்கு பேரிடமும் கிளிப்பிள்ளை போல ஒரே கேள்வியைத் தான் திரும்பத் திரும்பக் கேட்டார் அவர்: "ரதி மன்மத சிற்பம் சங்கரமங்கலம் சிவன் கோவிலின் எத்தனையாவது பிரகாரத்தில் இருக்கிறது? எந்தத் தேதியில் எந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது?" "ரதி, மன்மத சிற்பம் சிவன் கோவிலின் இரண்டாவது பிரகாரத்தின் வடக்கு மூலையில் இருக்கிறது" என்று சொல்லிவிட்டுத் தேதியும் நேரமும் சொல்லத் தயங்கினார், முதலில் குறுக்கு விசாரணைக்கு ஆளான பஜனை மடம் பத்மநாப ஐயர். உடனே வேணு மாமா, "காலில் செருப்புடன் நுழைந்ததாக வாட்ச்மேன் சொன்ன அதே தேதியில் தான் இதுவும் நடந்ததா? அல்லது வேறு தேதியா?" - என்று குறுக்கிட்டு விசாரித்தார். "வாட்ச்மேன் கூறிய சம்பவம் நடந்த அதே தேதியில் அதே நேரத்தில்தான் இதுவும் நடந்தது" - என்று சாட்சியிடமிருந்து பதில் கிடைத்தது. மற்ற மூன்று சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்தபோதும் இதே பதில்தான் அவர்களிடமிருந்து கிடைத்தது. கடைசியாக ஒரு தர்மகர்த்தர் சாட்சியம் அளித்தார். "கோவில் திருப்பணிக்கு என்று கமலியின் பேரில் அளிக்கப்பட்ட ரசீது கமலியால் நேரில் பணம் கொடுத்து வாங்கப்பட்டது அன்று என்றும் வேறு ஒருவர் பணத்தைக் கொடுத்து கோயிலுக்கு வராமல் வெளியிலேயே கமலியின் பெயருக்கு அந்த ரசீதை வாங்கிக் கொண்டிருக்க வேண்டும்" - என்றும் அவரது சாட்சியத்தில் கூறப்பட்டது. ரசீதிலிருக்கும் கையெழுத்தும் தம்முடையதுதான் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். உடனே வேணு மாமா எழுந்திருந்து, "ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நன்கொடை வசூலுக்கான ரசீதுகளைத் தவிர நூறு ரூபாய்க்கு மேற்பட்ட வசூல் வேலையைத் தேவஸ்தான ஆபீஸே கோவிலுக்குள் வைத்துத்தான் செய்ய வேண்டும் என்று திருப்பணி நிதி வசூல் குழுவில் தீர்மானம் போட்டீர்களா இல்லையா?" - என்று கேட்டு மடக்கியதும் தர்மகர்த்தா திணறிப் போனார். நிதி வசூல் குழுவில் போடப்பட்ட அந்த இரகசியத் தீர்மானம் இவருக்கு எப்படித் தெரிந்தது என்பதே அவரது திணறலுக்குக் காரணம். 'கமலி கோவிலுக்குள் வந்து தேவஸ்தான அலுவலரிடம் பணத்தைச் செலுத்தி அந்த ரசீதை வாங்கவில்லை. வெளியே யாரோ அவள் பெயரில் பணத்தைக் கட்டி வாங்கிய ரசீது அது' - என்ற தமது பொய்ச் சாட்சியம் அடிபட்டுப் போனதைத் தர்மகர்த்தா அந்த நிமிஷமே உணர்ந்தார். வற்புறுத்தித் தயாரிக்கப்பட்ட எல்லாச் சாட்சியங்களும் தவிடு பொடியாகும்படி வாதத்தைத் தொடர்ந்தார் வேணு மாமா. "கனம் கோர்ட்டாரவர்களே! கைலாசநாதக் குருக்கள் முதலிய மூவரும் நிர்ப்பந்தத்துக்குப் பயந்து இங்கே இதுவரை பொய்ச் சாட்சி சொன்னார்கள் என்பதை இதோ இந்த ஒலிப்பதிவு நிரூபிக்கும்!" - என்று சொல்லி காஸெட் ரெக்கார்டரை எடுத்து 'ஆன்' செய்தார் வேணு மாமா. எள் போட்டால் எள் விழுகிற ஓசை கேட்கும் அவ்வளவு அமைதியோடு கோர்ட்டு அதைக் கேட்டது. அந்த எதிர்பாராத ஒலிப்பதிவுச் சாட்சியம் அனைவரையுமே பிரமிக்க வைத்து விட்டது. டேப் ஒருமுறை ஓடி முடிந்ததும் சாட்சியத்துக்குப் பயன்படும் பகுதியை மறுமுறையும் போட்டுக் காட்டினார் வேணு மாமா. கமலியின் குரல் ஒலியோடு கூடிய ஸ்லோகம் முடிந்தவுடன், "இவ ஸ்லோகம் சொல்லிண்டிருக்கறதைக் கேட்டப்போ சரஸ்வதி தேவியே வந்து சொல்லிண்டிருக்காளோன்னு தோணித்து. இவளுக்கு எதிராக கோர்ட்டிலே வந்து சாட்சி சொல்லணும்னு எங்களைக் கூப்பிட்டு நிர்ப்பந்தப்படுத்தறா சுவாமி!" "ஆசார அநுஷ்டானம் தெரிஞ்ச நம்ம மதஸ்தர்களை விட அதிக ஆசார அநுஷ்டானத்தோடவும் அடக்க ஒடுக்கமாகவும் இவ கோவில்லே நடந்துண்டான்னு சொல்லணும்." "கோர்ட்டிலே வந்து என்ன சொல்லுவேனோ தெரியாது. ஆனா இதுதான் சத்தியம். நிர்ப்பந்தத்துக்காகவும் பொழைப்புக்காகவும் கோயில் எக்ஸிக்யூடிவ் ஆபீஸர் சொல்றதுக்காகவும் சீமாவையருக்காகவும் பயந்து அவா வக்கீல் என்ன சொல்லிக் குடுக்குறாரோ அதை அங்கே வந்து ஒப்பிக்கிற பாவத்தைப் பண்ணனும் சுவாமி! நீங்க எங்களைத் தப்பாப் புரிஞ்சுக்கப்படாது. எங்களைத் தொந்தரவு பண்ணி நிர்ப்பந்தப்படுத்தறா, வேறு வழி இல்லை." ஒலிப்பதிவை சப்-ஜட்ஜ் கூர்ந்து கேட்டார். ஏதோ குறித்துக் கொண்டார். தங்களுக்கு எதிராக்ச் 'சதி செய்து விட்ட' தங்கள் குரலையே கேட்டுக் குருக்கள்மார் மூவரும் ஆடு திருடின கள்ளர்கள் போல விழித்தனர். "இது உங்கள் குரல் தானே?" - வேணு மாமா குருக்களைக் கேட்டார். குருக்களில் எவரும் அதை மறுக்க முடியாமல் இருந்தது. "என் வீட்டிற்கு வந்திருந்தபோது கமலியைப் பற்றி நீங்களாகவே முன்வந்து என்னிடம் இவ்வாறு நல்லபடி கூறியது உண்மைதானே?" ரெக்கார்டரிலிருந்து ஒலித்தது தங்கள் குரல்தான் என்பதையோ தாங்கள் அவ்வாறு கூறியிருந்ததையோ அவர்கள் மறுக்கவில்லை. "இந்த ஒலிப்பதிவு குருக்கள் மூவரையும் பயமுறுத்தி எங்கேயோ கடத்திக் கொண்டு போய்ப் பதிவு செய்ததாக இருக்க வேண்டும் என்றும் கொலை மிரட்டலுக்குப் பயந்து அவர்களை இப்படிப் பேசச்சொல்லி பதிவு செய்திருக்கிறார்கள்" என்றும் வழக்குத் தொடுத்திருந்தவர்களின் சார்பில் கூறப்பட்ட வாதத்திற்குப் போதிய ஆதாரமில்லாமற் போகவே நீதிபதி அதை ஏற்கவில்லை. முற்றிலும் எதிர்பாராத விதமாக இந்தக் காஸெட் ரெக்கார்டர் சாட்சியம் வரவே குருக்கள் மூவரும் ஸ்தம்பித்துப் போய்விட்டனர். அதன்பின் அவர்களால் எதையும் மறுக்க முடியவில்லை. மேற்கொண்டு புதிய பொய்களைப் பேசும் திராணியோ அல்லது தெம்போ அப்போது அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. மிகவும் 'டிரமடிக்' ஆக அந்தக் காஸெட் ரெக்கார்டர் சாட்சியத்தை வழக்கில் கொண்டு வந்து அனைவரையும் திணற அடித்திருந்தார் வேணு மாமா. சாட்சிகளும் இதை எதிர்பார்க்கவில்லை. எதிர்த்தரப்பு வக்கீலும் இதை எதிர்பார்க்கவில்லை. தங்களுடைய பலவீனமான ஒரு பேச்சு இப்படிப் பதிவு செய்யப்பெற்று வைக்கப்பட்டிருக்கிறது என்பது சாட்சிகளுக்கே தெரியாமலிருந்ததுதான் அதிலிருந்த இரகசியம். இந்தத் திருப்பம் வழக்கின் போக்கையே மாற்றிவிட்டது. எதிர்த்தரப்பு வக்கீலுக்கு ஏறக்குறைய நம்பிக்கையே போய்விட்டது. எதிர்த்தரப்பு வக்கீலின் முகம் வெளிறியது. காஸெட் ரெக்கார்டர் சாட்சியம் முடிந்தவுடன் வேணு மாமா தமது கட்சிக்காரர் ஸௌந்தர்ய லஹரி கனகதாரா ஸ்தோத்திரம், பஜ கோவிந்தம் முதலிய நூல்களை பிரெஞ்சு மொழியில் பெயர்த்திருப்பதையும் அதற்காக இந்து மதாசாரியர்களான மகான்களின் ஆசியையும், பாராட்டையும் அவர் பெற்றிருப்பதையும் கூறி ஸ்ரீ மடம் மானேஜர் அது சம்பந்தமாகச் சர்மாவுக்கு எழுதியிருந்த கடிதத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார். ரதி மன்மத சிற்பத்தின் கீழ்க் கமலியும் ரவியும் தழுவி முத்தமிட்டுக் கொண்டிருந்ததாகவும் பஜனை மடம் பத்மநாப ஐயர் முதலியோர் கூறிய சாட்சியத்தை வேணு மாமா மிகச் சுலபமாகவே மறுக்க முடிந்தது. அவர்கள் சொன்ன தேதி நேரமும், வாட்ச்மேன் கமலி செருப்புக் காலுடன் கோவிலுக்குள் நுழைந்ததாகக் கூறிய தேதி நேரமும், குருக்கள் அவள் பிரசாதத்தைக் காலடியில் போட்டு மிதித்ததாகக் கூறிய தேதியும் நேரமும் - ஒன்றாக இருப்பதைச் சுட்டிக்காட்டி "முன் இரு சாட்சிகளும் அந்த நாளில் அதே நேரத்தில் கமலி மட்டும் தான் தனியாகக் கோயிலுக்குள் வந்தாள் என்று கூறும்போது மற்றவர்கள் அவள் ரவியோடு ரதிமன்மத சிற்பத்தின் கீழ் அலங்கோலமாகச் சேர்ந்து நின்றதைப் பார்த்ததாக கூறுவது கட்டுக்கதை. சாட்சியங்கள் முரண்படுகின்றன. அதை எல்லாம் விடப் பெரிய விஷயம் இந்த சாட்சிகள் சிவன் கோவிலுக்குப் போய் வருடக்கணக்கில் ஆகிறதென்றும் கோயிலில் எது எங்கிருக்கிறது என்றே இவர்களுக்கு மறந்து போய்விட்டது என்றும் இவர்கள் சாட்சியத்திலிருந்தே தெரிகிறது. சிவன் கோவில் ரதி மனமத சிற்பம் இரண்டாவது பிரகாரத்தில் இருக்கிறது என்றும் அதன் கீழ் தான் கமலியையும் ரவியையும் ஆபாசமான நிலையில் சேர்ந்து பார்த்ததாகவும் இவர்கள் கூறினார்கள். ஒருவேளை வாய் தவறிச் சொல்கிறார்களோ என்று மறுபடியும் நான் கேட்டேன். மறுபடி கேட்டபோது கூட எல்லோரும் இரண்டாவது பிரகாரத்தில் என்று தான் பதில் சொன்னார்கள். சங்கரமங்கலம் சிவன் கோவிலில் ரதி மன்மதன் சிற்பம் இருக்குமிடம் மூன்றாவது பிரகாரம் என்பது பிரசித்தமான உண்மை. இதிலிருந்தே இவர்கள் கூறிய நிகழ்ச்சி என் கட்சிக்காரரை அவமானப் படுத்த வேண்டுமென்று திட்டமிட்டு இட்டுக் கட்டியது என்பது தெரிகிறது" - என்று வேணு மாமா கூறியபோது, "நிகழ்ச்சிக்கு இடமான பிரகாரம் இரண்டாவதா, மூன்றாவதா என்பதல்ல இங்கு வாதம். சம்பந்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் அநாசாரமாகவும் ஆபாசமாகவும் நடந்து கொண்டார்கள் என்பதுதான் முக்கியம்" - என்று குறுக்கிட்டார் எதிர்த்தரப்பு வக்கீல். அதற்குமேல் பேச எதுவுமில்லாதது போல் அமர்ந்துவிட்டார் அவர். மேற்கொண்டு ஏதாவது சொல்ல வேண்டுமா என்று எதிர்த்தரப்பு வக்கீலிடம் கேட்கப்பட்டது. பேருக்குப் பழைய குற்றச் சாட்டுக்கள் சிலவற்றையே திரும்பக் கூறிவிட்டுக் கோவிலில் சம்ப்ரோட்சணம் விரைவில் நடக்கும்படி உத்தரவாக வேண்டுமென்று மீண்டும் கோரினார் எதிர்த்தரப்பு வக்கீல். தீர்ப்புக்குரிய நாளாக ஒரு வாரம் கழித்து ஒரு நாளைக் குறிப்பிட்டுக் கூறினார் நீதிபதி. துளசி மாடம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
முடிவுரை
|