12. குமரன் திரும்புகிறான் தங்கள் தலைவனாகிய கொடுங்கோளூர்க் குமரன் நம்பி ஆந்தைக்கண்ணனுக்கு விட்டுக் கொடுத்து அப்படித் திடீரென்று மனம் மாறியதைச் சிறைப்பட்டிருந்த சேர நாட்டு வீரர்களில் யாருமே விரும்பவில்லை. "என்னை உங்கள் வீரர்களோடு பொன்வானி முகத்துவாரத்திற்கு அனுப்புங்கள்; வேண்டிய உதவிகளை நான் செய்கிறேன்" என்று குமரன் நம்பியே ஆந்தைக்கண்ணனிடம் முகமலர்ச்சியுடனே வேண்டியபோது யாராலும் அதை நம்ப முடியவில்லை. முதலில் ஆந்தைக்கண்ணனே அதை நம்பவில்லை. குமரனோடு வந்திருந்த சேர நாட்டு வீரர்களே அவனுடைய இந்தச் சொற்களைக் கேட்டு அவனை வெறுப்பு உமிழப் பார்த்ததையும், காறித் துப்பியதையும் கண்ட ஆந்தைக்கண்னன், 'இவன் இனத்து வீரர்களே இதற்காக இவனை வெறுப்பதால் இந்தத் தூரோகத்தை உயிருக்குப் பயந்து கொண்டு இவன் உண்மையில் தான் செய்ய முன் வருகிறான் போலும்' என்று தன் மனத்துக்குள் நினைத்தான். 'எந்த எதிரியை அவனுடன் உள்ள அவன் இனத்தவரே வெறுப்பதாகத் தெகிறதோ அந்த எதிரியைத் தனக்கு நண்பனாக்கிக் கொள்ள முடியும்' என்ற முடிவுக்கு ஆந்தைக்கண்ணன் வந்த பின் அவன் குமரனைத் தன் இனத்தவராகிய கடம்பர்களோடு பொன்வானி முகத்துவாரத்திற்கு நிலைமை அறிந்து வர அனுப்பி வைப்பது என்று முடிவு செய்து கொண்டு விட்டான். "உன் இனத்தவருக்குத் துணிந்து இப்படித் துரோகம் செய்ய முன் வருகிற நீ அடுத்த விநாடியே எனக்கும் துரோகம் செய்யத் துணியமாட்டாயே?" என்பதுபோல் ஒரு வினாவை இரண்டு மூன்று முறை குமரனிடம் ஆந்தைக்கண்ணன் வினாவினான். என்றாலும் குமரனைத் தன் காரியத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதென்ற தீர்மானம் ஆந்தைக்கண்ணனின் அந்தரங்கத்தில் ஏற்பட்டுவிட்டது. குமரனோடு சேர்ந்து சிறைப்பட்ட மற்ற வீரர்களை வைத்துக் கொண்டு குமரனை மட்டுமே தன் ஆட்களோடு ஆற்று முகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ஆந்தைக்கண்ணன் செய்யலானான். ஆந்தைக்கண்ணனின் மாபெரும் கொள்ளை மரக்கலத்தின் அருகே சிறு படகு ஒன்றும் வந்து நின்றது. சுற்றிலும் படகில் தன் ஆட்களாகிய முரட்டுக் கடம்பர்களை அமரச் செய்து நடுவே குமரனை இருக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்தான் ஆந்தைக்கண்ணன். குமரனின் காது கேட்கவே தன் ஆட்களிடம் அவ்வாறு கூறவும் செய்தான். "இந்தப் படைத்தலைவன் உங்களோடு வருகிறான் என்பதற்காக இவனையே முற்றிலும் நம்பிவிடாதீர்கள். பொன்வானி முகத்துவாரத்தை நெருங்கியதும் இவனை உடன் வைத்துக் கொண்டு என்னென்ன நிலைமைகளை அறிந்து கொள்ள முடியுமோ அதை மட்டுமே அறிந்து வாருங்கள் முகத்துவாரத்தின் வழியே கரைப் பகுதியில் அதிகமாக உள்ளே நுழைந்துவிடவும் கூடாது. அப்படிச் செய்தால் ஒரு வேளை நீங்களே இங்கே திரும்பி வரமுடியாத நிலைமைகள் ஏற்பட்டாலும், ஏற்பட்டுவிடலாம்" என ஆந்தைக்கண்ணன் தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டபோது அந்தக் கட்டளையின் ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு சொல்லின் பொருளையும், பொருளுக்குப் பின்னிருந்த தொனியையும் அதற்குப் பின்னாலிருந்த அரசதந்திரக் குறிப்புகளையும் குமரன் நம்பி கூர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருந்தான். "கடம்பர்களே! நாம் கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால் நமது முற்றுகையைக் கரையிலிருந்து எதிர்த்து முறியடிக்க வேண்டிய சேரநாட்டுக் கொடுங்கோளூர்க் கோட்டையின் படைத்தலைவனே நமக்குத் துணையாக கரைவரை வரப்போகிறான் என்பது எவ்வளவு பெரிய உதவி என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். வீரர்களில் யாராவது உயிருக்குப் பயந்து அல்லது பொன்னைப் பொருளை நயந்து துரோகிகளாக மாறுவார்கள். நாமோ, ஒரு கூட்டத்தின் தலைவனே துரோகியாக மாறி நமக்கு உதவி புரிய முன்வருமாறு சந்தர்ப்பத்தை உண்டாக்கிவிட்டோம்" என்று கொள்ளைக் கூட்டத் தலைவன் கூறியபோது அதைக் கேட்டு தனக்குள் நகைத்துக் கொண்டான் குமரன் நம்பி. குமரன் நம்பியோடு உடனிருந்தவர்களோ வெறுப்பையும் கடந்து 'இப்படியும் ஒரு பச்சைத் துரோகம் உண்டா?' என்று வெறுக்கும் எல்லையிலிருந்து விரக்தி எல்லைக்குப் போய் நினைக்கத் தொடங்கியிருந்தார்கள். அவர்களுடைய வெறுப்பையோ, விரக்தியையோ பொருட்படுத்தாமல் கடம்பர்களோடு ஆற்று முகத்திற்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டான். போகும்போது தன்னுடன் வந்த சேர வீரர்களை நோக்கி, 'போர்க்களத்திலும், ஆபத்தான சூழ்நிலைகளிலும் குறிப்பறிதல் மிக மிக அவசியம்' என்று கூறிய வாக்கியத்துக்கு என்ன அர்த்தம் எனப் புரிந்து கொள்ள முயன்றனர். குமரன் நம்பி அந்த வாக்கியத்தை எதற்காக என்ன பொருளில் தங்களை நோக்கிக் கூறிவிட்டுச் சென்றான் என்பதைப் புரிந்து கொள்ள அவர்கள் பெருமுயற்சி செய்ய வேண்டியிருந்தது. கரையை நோக்கிப் புறப்படுவதற்கு முன் குமரன் நம்பி வேண்டிக் கொண்டிருந்தபடி அவனுடைய கைகளைப் பிணித்திருந்த கட்டுக்களை அவிழ்த்து விடுமாறு ஆந்தைக்கண்ணன் கட்டளையிட்டான். கட்டளையிட்டவன் குமரனிடம் எச்சரித்தான்: "உன் உதவியை நாடுகிற சமயத்தில் கைகளைப் பிணித்துச் சிறை வைத்துக் கொண்டு நாடக்கூடாதென்று சற்று முன் நீ கூறினாய்! அதனால் உன் கட்டுக்களை அவிழ்க்கச் செய்துவிட்டேன். இந்த நிலையை நீ தவறாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றால் உயிரோடு தப்ப மாட்டாய் என்பதை மட்டும் நீ நினைவு வைத்துக்கொண்டால் போதும்." "நான் தான் அப்பொழுதே கூறினேனே கடம்பர் தலைவரே! உங்களை எதிர்த்து யாராலும் நயவஞ்சகம் புரியமுடியாதென்பது எனக்குத் தெரியாதா என்ன? எதைச் செய்ய வேண்டுமோ அதை நான் அவசியம் செய்வேன் என்ற நம்பிக்கையோடு என்னை அனுப்புங்கள்" என்றான் குமரன் நம்பி. படகு கரையை நோக்கிப் புறப்பட்டது. குமரன் நம்பியைக் கட்டவிழ்த்து விட்டுவிட்டாலும் படகில் அவனைச் சுற்றி வாளேந்திய முரட்டுக் கடம்பர்கள் அமர்ந்து கொண்டார்கள். அவர்களோ எண்ணிக்கையில் ஐவர். அவனோ ஒருவன். அவர்களிடம் கருவிகளும் படைக்கலங்களும் இருந்தன. அவனோ வெறுங்கையனாக ஆக்கப்பட்டிருந்தான். கரை நெருங்க நெருங்கக் குமரன் நம்பியின் சிந்தனை விரைவாக வேலை செய்தது. கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்களிலேயே சிறைப்பட்டுத் தங்கிவிட்ட தன் நண்பர்கள் வேறு தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார்களே என்ற கவலையும் அவன் மனத்தில் இருந்தது. கரைக்கு அருகில் வந்து படகில் அவனைச் சூழ இருந்த கடம்பர்கள் அவனைச் சுற்றி நெருக்கமாக வலை பின்னினாற் போல இன்னும் நெருக்கமாக உட்கார்ந்தார்கள். அவனிடம் கேள்விகளையும் கேட்கத் தொடங்கினார்கள். "முகத்துவாரத்தை ஒட்டியோ, கரை ஓரத்திலோ எங்கும் சேரநாட்டுப் படைவீரர்கள் ஆயுதங்களோடு மறைந்திருப்பார்களோ? உள்ளதைக் கூறு...! எங்களிடம் எதையாவது மறைத்துப் பொய் கூறினாயோ உன் உயிர்தான் போகும்..." "சேரநாட்டில் இப்போது வீரர்கள் இருந்தால்தானே மறைந்திருந்து உங்களைத் தாக்க முடியும்? சேரநாட்டில் தான் இப்போது வீரர்களே இல்லையே? எல்லா வீரர்களும் வடக்கே குயிலாலுவப் படையெடுப்பில் அல்லவா இருக்கிறார்கள்?" என்று குமரன் நம்பி அவர்களுக்கு மறுமொழி கூறினான். "ஆற்றுமுகத்திலிருந்து நகரத்திற்குள் போகும் நீர் வழியின் இருபுறமும் ஒரே மரஞ்செடி கொடிகளாகப் பசும் புதர் அடர்ந்திருக்கும் அல்லவா?" "ஆமாம்! அடர்ந்திருக்கும்." "அந்தப் புதர்களிடையே ஆற்றுக்கால் வழியே படகில் நாம் சென்று திரும்ப இடையூறு எதுவும் கிடையாதே?" "ஏன் இப்படி அடிக்கடி ஐயப்படுகிறீர்கள்? ஆற்றின் இருபுறமும் பசுமை செழித்து அடர்ந்திருப்பது நல்ல வளத்தின் காரணமாகத் தானேயன்றி வீரர்கள் மறைந்திருந்து தாக்குவதற்காக அன்று." "அதற்காகச் சொல்ல வரவில்லை. சேர நாட்டில் மிகக் குறைந்த வீரர்கள் தான் இருப்பதாக நீயே கூறியதால் தந்திரமான வழிகளில் அன்றி வேறு விதங்களில் அவர்கள் பகைவர்களை எதிர்த்துச் சமர் புரிய முடியாது. தந்திரமாகச் சமர்புரியும் வழிகளில் இதுவும் ஒன்று. இரு புறமும் நெருங்கிய மரக்கூட்டங்களிடையே உள்ள பொன்வானியாற்றுக் கால் வழியே நாம் போகிறபோது நம்மை வளைக்க முடியுமென்றுதான் இதைக் கேட்டோம். இதற்கு நீ சொல்லும் மறுமொழியிலிருந்து தான் நாம் உள்ளே எவ்வளவு தூரம் போகலாம் அல்லது போகக்கூடாது என்பதைப் பற்றி ஒரு முடிவு செய்யலாம்." "என்னை நம்பி நான் எவ்வளவு தூரம் உங்களை அழைத்துச் செல்கிறேனோ அவ்வளவு தூரம் நீங்கள் பயமின்றி வரலாம்." குமரன் இவ்வாறு கூறும் போது அவர்கள் சென்ற படகு பொன்வானி முகத்துவாரத்திற்குள் நுழைந்திருந்தது. கடம்பர்கள் குமரனின் முகத்தையே வைத்த விழி வாங்காமல் நோக்கினர். அவன் உண்மையாகவே தங்களுக்கு எல்லாவற்றையும் காண்பிக்க அழைத்துக் கொண்டு போகிறானா அல்லது ஏமாற்றுகிறானா என்பதில் இன்னும் அவர்களுக்குச் சந்தேகம் தீரவில்லை. "பெருமரக்கலங்களைக் கரையிலிருந்து சிறிது தொலைவில் ஆழமான கடற்பகுதியிலேயே நிறுத்தி வைத்துவிட்டுச் சிறுசிறு படகுகளில் பொன்வானி, அயிரை, பேரியாறு மூலம் சேர நாட்டு நகரங்களில் அங்கங்கே கொள்ளையிட நுழைந்தால் எங்களை எதிர்க்கப் போதுமான வீரர்கள் இருக்கிறார்களா அல்லது எங்கள் நோக்கம் ஈடேறுமா?" என்று குமரனிடமே மறுபடியும் கேட்டான் ஒரு கடம்பன். எதிரியின் படைத் தலைவன் தங்களிடம் தற்காலிகமாகச் சிறைபட்டிருக்கும் வேளையில் அவனிடமே இந்தக் கேள்விகளைக் கேட்பது எந்த அளவு உறுதியானது, எந்த அளவு ஆபத்தானது என்பதைக் கூடப் புரியாத மனநிலையோடு அவர்கள் கேள்வி கேட்பதைக் கண்டு குமரனுக்குச் சிரிப்புத் தான் வந்தது. ஆனால் தன் உள்ளுணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்களுக்குத் தைரியமும், நம்பிக்கையும் ஊட்டிக்கொண்டே சென்றான் அவன். பொன்வானி முகத்துவாரத்தின் நெடுந்தூரம் கரைக்குள்ளே அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விட்டனர். இன்னும் சிறிது உள்ளே சென்றால் கொடுங்கோளூர் நகரமே வந்துவிடும் என்ற நிலைமைக்கு முன்னேறிச் சென்று விட்டார்கள். "உள்ளே செல்லச் செல்ல நிலைமைகளை நீங்கள் இன்னும் நன்றாக அறியலாம்" - என்று குமரன் புன்முறுவலோடு அவர்களுக்கு கூறினான். புதர் அடர்ந்திருந்த ஓரிடம் வந்ததும் படகு மேலே போவதை விரும்பாமல் அங்கேயே நிறுத்தி விட்டார்கள் கடம்பர்கள். "ஆற்றின் இருபுறமும் வீரர்கள் யாரும் மறைந்திருக்கவில்லை என்பது உறுதியானால் தான் இந்த இடத்திற்கு மேலே நாம் போகலாம்" என்றார்கள் அவர்கள். "என்னை அதற்காக என்ன செய்யச் சொல்லுகிறீர்களோ, அதை நான் செய்கிறேன்" - என்றான் குமரன். "நீயே ஒரு விநாடி கரையில் இறங்கிப் பார்த்துச் சொல்! வீரர்கள் யாராவது தென்பட்டால் படைத்தலைவன் என்ற முறையில் அவர்களைத் திரும்பப் போகச் சொல்லிக் கூறிவிடலாம். நாங்களே இறங்கிப் புதர்களில் தேடினால் வீரர்கள் மறைந்திருப்பார்களாயின் அவர்களுக்கும் எங்களுக்கும் கைகலப்பு மூளும்" - "இறங்கிப் பார்ப்பதில் எனக்கு மறுப்பு ஒன்றும் இல்லை. ஆனால் அதே சமயத்தில் நீங்கள் என்னை நம்ப வேண்டும். இறங்கிப் பார்ப்பதற்குப் பதில் நான் தப்பி ஓடி விடுவேனோ என்று என் மேலேயே உங்களுக்குச் சந்தேகம் வந்துவிடக் கூடாதல்லவா?" இதைக் கேட்டதும் படகிலிருந்த கடம்பர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். குமரன் அவ்வாறு வெளிப்படையாகத் தன்னுடைய மனத்திலிருந்ததைக் கேட்டதே அவர்களுடைய சந்தேகத்தைத் தணித்துவிட்டிருந்தது. அவர்கள் அவன் கரையிறங்கிப் புதர்களில் வீரர்கள் மறைந்திருக்கிறார்களா என்பதைப் பார்க்கச் சொன்னார்கள். அவ்வாறு அவர்கள் முதன் முறை கூறிய போது அவன் வாளா இருந்து விட்டான். மூன்றாவது முறையும் வற்புறுத்திய போதே படகை ஒதுக்கச் சொல்லிக் கரையில் மெல்ல இறங்கினான். இவ்வாறு தயங்கித் தயங்கி அந்தக் காரியத்தை அவன் செய்ததனால் அவனுக்குத் தங்களிடமிருந்து தப்பி ஓடும் எண்ணம் இல்லை என்பது போல் அவர்கள் புரிந்து கொண்டார்கள். ஆனாலும் அவர்கள் கையிலே உருவி வைத்தபடி இருந்த கொடுவாள்கள் இன்னும் அப்படியே இருந்தன. கரையிறங்கிய குமரன் புதரில் மெல்ல மெல்ல மறைந்தான். சில விநாடிகள் அவன் தென்படவில்லை. கால் நாழிகைக்குப் பின் மறுபடியும் புதர் சலசலத்தது. குமரன் திரும்பினான். குமரன் மட்டுமல்ல, அவனுக்குப் பின் ஒவ்வொருவராகப் பல சேர வீரர்களும் வந்தனர். |