4. அமைச்சர் கூறிய செய்தி மறுநாள் வைகறையில் நீராடிக் காலை வேளையில் காத்திருந்த குமரனை அமைச்சரின் தூதுவர்கள் வந்து அழைத்துச் சென்றார்கள். கம்பீரமான தோற்றமும் எதிரே வந்து நிற்பவர்களை ஊடுருவிப் பார்க்கும் கண்களுமாக அமைச்சர் அழும்பில்வேள் பார்வையில் பட்டதுமே குமரன் அவருக்குப் பொருத்தமான வார்த்தைகளைப் பொருத்தமான இடத்தில் பதில் தரவேண்டிய எச்சரிக்கையைத் தன் மனதிற்கு அளித்தான். வேளாவிக்கோ மாளிகையின் நடு மண்டபத்தில் அங்கும் இங்குமாக உலாவிக்கொண்டே சிந்தித்துக் கொண்டிருந்த அழும்பில்வேள் அதே நிலையில்தான் குமரனை வரவேற்றார். "படைத்தலைவரே ஓர் - இரவு தாமதிக்க வைத்துவிட்டேன். ஒரு வேளை கொடுங்கோளூர்ப்படைக் கோட்டத் தலைவருக்கு என்மேல் சிறிது கோபம் கூட உண்டாகியிருக்கும் போல் தோன்றுகிறது..." "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மதியூகியான தாங்கள் எதை உடனே செய்யவேண்டும், எதைச் சிறிது தாமதித்துச் செய்யலாம் என்பதை என்னைவிட நன்கு அறிந்திருப்பீர்கள்." இதைக் கேட்டுப் பதில் ஒன்றும் கூறாமல் அவன் முகத்தையே சில விநாடிகள் மௌனமாகக் கூர்ந்து நோக்கினார் அவர். அவனுடைய அந்தப் புகழ்ச்சி விநயத்தின் அடியாகப் பிறந்த உண்மைப் புகழ்ச்சியா? அல்லது வஞ்சப் புகழ்ச்சியா என்று கொடுங்கோளூர்க் குமரனின் கண்களில் தேடினார் அவர். பின்பு சுபாவமாகக் கேட்கிறவர் போல் அவனைக் கேட்கலானார்:- "நம்முடைய தூதுவர்கள் கொடுங்கோளூருக்கு வந்திருந்த சமயத்தில் நீயும் கூடப் படைக்கோட்டத்தில் இல்லை போலிருக்கிறது." "ஆம்! பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காகச் சென்றிருந்தேன்." "என்ன பாதுகாப்பு ஏற்பாடுகளோ?" - இதற்கு மறுமொழி கூறுவதற்குச் சொற்கள் கிடைக்காமல் குமரனுக்கு நாக்குழறியது. அவனுடைய அந்தப் பலவீனத்தை மேலும் தொடர்ந்து தாக்காமல், "அதனால் என்ன குமரா? பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தக்க சமயம் பார்த்துக் கவனித்துச் செயல்பட வேண்டியதும் உன் கடமைதானே?" என்று அந்தப் பேச்சையும் சுபாவமாகத் திருப்பினார். அடுத்தாற்போல அவர் கேட்ட கேள்விதான் பெருஞ்சந்தேகத்தைக் கிளரச் செய்வதாயிருந்தது. "ஆமாம்! உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும் குமரா! கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்திற்கு அருகே ஓர் அழகிய பூந்தோட்டம் உண்டல்லவா?" "ஆம்! உண்டு." "அந்தப் பூந்தோட்டம் முன்போலவே இப்போதும் செழிப்பாயிருக்கிறதா? கொடுங்கோளூர் நகரத்தில் எனக்கு மிகவும் விருப்பமான இடம் இயற்கையழகு கொழிக்கும் அந்தப் பூந்தோட்டம் தான்." இப்போதும் மறுமொழி கூற நாக்குழறியது அவனுக்கு. "என் வயதுக்கும் முதுமைக்கும் இப்படிப்பட்ட அழகிய பூங்காக்களில் பிரியம் வைப்பது அவ்வளவாகப் பொருத்தமில்லை என்று உனக்குத் தோன்றலாம் குமரா! பூங்காக்களையும், பொழில்களையும் உன் போன்ற மீசை அரும்பும் பருவத்து வாலிபப் பிள்ளைகள் தான் நன்றாக அனுபவிக்க முடியும் என்றாலும் என் போன்ற முதியவர்களுக்கு இயற்கையழகின் மேலுள்ள பிரியம் ஒரு நாளும் போய்விடுவதில்லை." அந்தப் பூங்காவைப் பற்றி அவருடைய பேச்சு வளர வளர அவனுடைய பயம் அதிகமாகியது. பேச்சு எங்கே எப்படி வந்து முடியும் என்பதை அவனால் கணிக்க முடியாமல் இருந்தது. தன்னை வரச்சொல்லியிருந்த காரியங்களை எல்லாம் விட்டுவிட்டு எதற்காக இப்படிப் பூங்காவைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார் என்பது புரியாமல் தவித்தான். எதற்காகச் சுற்றி வளைத்து அந்தப் பேச்சை இழுக்கிறார் என்பது புரிந்தது போலவும் இருந்தது. அதே சமயத்தில் அவர் ஒருவித உள்ளர்த்தமும் இல்லாமல் சுபாவமாகப் பேசுவது போலவும் இருந்தது. எனவே தடுமாற்றம் தெரியாதபடி அவருக்கு முன் நிற்க இயலாமல் தவித்தான் அவன். அவரோ பேச்சை மீண்டும் இயல்பாகத் திருப்பினார். "எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால் அத்தகைய அழகிய பூங்காக்களும், பொழில்களும், வாவிகளும், நீரோடைகளும் நிறைந்த கொடுங்கோளூர் நகரத்தை நாம் உயிரைக் கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும். கொடுங்கோளூர் நகரில் தான் சேர நாட்டிலேயே புகழ்பெற்ற இரத்தின வணிகர்களெல்லாரும் இருக்கிறார்கள். இந்தச் சேர நாட்டிலேயே அழகான பெண்களும் கொடுங்கோளூரில் தான் இருக்கிறார்கள். அது மட்டும் அன்று குமரன் நம்பீ! உன்னைப் போல் வாளிப்பான உடற் கட்டுள்ள சுந்தர வாலிபர்களும் கூடக் கொடுங்கோளூரில்தான் இருக்கிறீர்கள்" என்று கூறி நிறுத்திவிட்டு அந்த வார்த்தைகள் கொடுங்கோளூர்க் குமரன் நம்பியை எந்த அளவுக்கு நிலைதடுமாற வைத்திருக்கின்றன என்று கவனிக்கத் தொடங்கினார் அழும்பில்வேள். அவருடைய சொற்களைத் தாங்குவதைக் காட்டிலும் பார்வையைத் தாங்குவதைக் கடுமையாக உணர்ந்தான் குமரன் நம்பி. "அமைச்சர் பெருமானுக்கு என்ன காரணத்தினாலோ இன்று என் மேல் அளவு கடந்த கருணை பிறந்திருக்கிறது. என்னையும் ஒரு பொருட்டாக மதித்துப் புகழுவதைக் கேட்டு வெட்கமாக இருக்கிறது." "பொதுவாக வீரர்கள் எதற்கும் வெட்கப்படக் கூடாதென்று சொல்லுவார்கள். வீரர்களே நாணமும் வெட்கமும் படக் கூடாதென்றால் வீரர்களுக்கெல்லாம் தலைவனாகிய படைத்தலைவன் நிச்சயமாக வெட்கப்படக் கூடாது." "அமைச்சர் பெருமான் என்னைக் கூப்பிட்டனுப்பிய கட்டளையை அறிந்து கொள்ள மிகமிக ஆவலாயிருக்கிறேன்." "அதை நான் சொல்லித்தான் இனி நீ அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்லையே? கொள்ளைக் கூட்டத்தாரிடம் இருந்து மகோதைக் கரை நகரங்களைக் காக்கவேண்டும். நேற்றிரவு நான் இங்கிருந்து கொடுங்கோளூர்வரை மாறுவேடத்தில் நகர் பரிசோதனைக்காகச் சென்று வந்தேன். உன்னை இங்கே வரச்சொல்லிவிட்டு - உனக்குத் தெரியாமல் நான் கொடுங்கோளூர் சென்றதற்காக நீ என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். நான் அனுப்பியிருந்த தூதர்களோடு கூடவே நீயும் வந்திருந்தால் இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டேன் நான். விநாடிக்கு விநாடி கொடுங்கோளூரைப் பற்றிக் கவலைப்படும்படியான செய்திகள் வந்து கொண்டே இருந்தன. அதற்கேற்றாற்போல நீயும் அங்கிருந்து வராமற் போகவே எனக்கு ஒன்றும் புரியவில்லை. தலைநகரிலிருந்து கொடுங்கோளூருக்கு வரும் பெருஞ்சாலையில் நான் செல்லவில்லையாதலால் உன்னையும் இடை வழியில் சந்திக்க வாய்ப்பில்லை. கொடுங்கோளூருக்கு நான் போயிருந்தபோது கேள்விப்பட்ட ஒரு செய்தி என்னைப் பெருங்கலக்கத்துக்கு ஆளாக்கிவிட்டுவிட்டது." "அப்படி என்ன பரபரப்பான செய்தி அது? நேற்று முன்னிரவில்தானே நானும் அங்கிருந்து புறப்பட்டேன்? எந்தச் செய்தியையும் நான் கேள்விப்படவில்லையே?" "என்ன செய்வது? நீ அங்கிருந்து புறப்பட்ட போது அப்படிப்பட்ட செய்தி எதைப்பற்றியும் நீ கேள்விப்பட நேரவில்லை. நான் போயிருந்த போது கேள்விப்பட நேர்ந்து விட்டது." "என்ன நடந்தது கொடுங்கோளூரில்?" "பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை! சேர நாட்டிலேயே அழகான பெண்கள் கொடுங்கோளூரில்தான் இருக்கிறார்கள் என்று கூறிப் பெருமைப்பட்டேனே?" "ஆம்! பெருமைப்பட்டீர்கள். அதற்கும் கொடுங்கோளூரில் நேற்றிரவு நடைபெற்ற சம்பவத்திற்கும் என்ன தொடர்பு?" "தொடர்பு இருப்பதனால் தான் சொல்கிறேன் குமரன் நம்பி! கொடுங்கோளூரிலேயே அழகிற் சிறந்த பெண்ணொருத்தியைக் கடற்கொள்ளைக்காரர்கள் கொண்டு போய் விட்டார்கள்! அதை நினைக்கும் போதுதான் வயிற்றெரிச்சலாக இருக்கிறது." "அப்படி ஒன்றும் நடந்திருப்பதற்கே சாத்தியமில்லையே? ஏனென்றால் நான் அங்கிருந்து புறப்படும்போதே கொள்ளை மரக்கலங்கள் கடலில் வெகுதூரத்தில் அல்லவா இருந்தன?" "என்ன நடந்தது? எப்படி அந்தப் பெண்ணைச் சிறைப்பிடித்துக் கொண்டு போனார்கள் என்பதே ஒருவருக்கும் தெரியவில்லை. கடற்கரைப் பக்கமாக உலாவப் போனவளைக் காணவில்லை என்று இரத்தின வணிகர் மனம் குமுறிக் கொண்டிருக்கிறார்." "என்ன? இரத்தின வணிகரா?" "ஆம்! கொடுங்கோளூரிலேயே பெரிய இரத்தின வணிகரின் மகளான அமுதவல்லியைத்தான் காணவில்லை. கடற்கொள்ளைக்காரர்களான ஆந்தைக்கண்ணனின் ஆட்கள்தான் சிறைப்பிடித்துக் கொண்டு போயிருக்க வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள்." "ஆ" என்ற அலறல் குமரனின் வாயில் சொல்லாக ஒலிக்கத் தொடங்கித் தடைப்பட்டது. அவன் முகத்திலிருந்த தடுமாற்றத்தைக் கவனித்த அமைச்சர் பெருமான், "ஏன் இவ்வளவு பதற்றமடைகிறாய்? உனக்கு கொடுங்கோளூர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைத் தெரியுமோ?" என்று கேட்டுவிட்டு அவன் நிலையைக் கூர்ந்து கவனிக்கலானார் அமைச்சர். |