26. விரிசிகையின் பேதைமை அப்போது உதயணன் அமர்ந்த இடத்தருகில் உள்ள அந்த ஆசிரமத்தில் கோப்பெருந்தேவியுடன் அரசாட்சியைத் துறந்து முதுபருவத்தினனான ஓர் அரசனும் அவன் தேவியும் தவம் இயற்றிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு விரிசிகை என்னும் பெயருடன் கூடிய அழகு மிக்க மகள் ஒருத்தி உண்டு. விரிசிகை கன்னிப் பருவத்தினள். அவளும் தன் பெற்றோருடன் அதே ஆசிரமத்தில் வசித்து வந்தாள். இயற்கை வனப்புள்ள அந்த மலைச் சாரலில் வளர்ந்ததனால் விரிசிகை கள்ளங் கபடமற்ற தூய உள்ளமுடையவளாக இருந்தாள். ஆசிரமத்திலுள்ள பூஞ்செடிகளின் மீது அவளுக்குக் கொள்ளை அன்பு. அவைகளில் பூக்கும் மலர்களைக் கண்டு மகிழ்வதிலும் கொய்வதிலும் விரிசிகைக்குத் தனி இன்பம். இயற்கையின் நடுவிலேயே பிறந்து வளர்ந்ததனாலோ என்னவோ அங்குள்ள இயற்கைக் காட்சிகளின் ஒவ்வோர் வனப்பும் அவளிடமும் பூரணமாகக் காணப்பட்டன. தவ ஒழுக்கமுடைய ஆடவர்களை ஒழிய வேறு ஆடவர்களையோ இளைஞர்களையோ அதுவரை அவள் தன்முன் அங்கே கண்டதே இல்லை. ஆசிரமத்திற்குரிய சோலையில் மாலை தொடுக்க ஏற்ற பல வகை மலர்களையும் தழைகளையும் முற்றிய அரும்புகளையும் கொய்து வரலாம் என்ற கருத்துடன் அன்று அங்கு வந்த விரிசிகை, அசோக மரத்தடியில் அழகே வடிவாக அமர்ந்திருக்கும் உதயணனைக் கண்டாள். இப்போது வயந்தகன் கூட அவனுடன் இல்லை. எங்கோ பக்கத்திற்கு சென்றிருந்தான். 'காமன் காமன் என்று எல்லோரும் அழகிற் சிறந்தவனாகக் குறிப்பிடுகின்றார்களே? அது இதோ அமர்ந்திருக்கும் இந்த நம்பிதானோ' என்று விரிசிகை நினைத்தாள். அவன் மேல் இன்னதென்று புரியாத ஒரு விதமான பற்று அவளையறியாமலே அவளுக்கு ஏற்பட்டது. எல்லோரும் அறிந்த மொழியில் கூறினால் மையல் என்று அதற்குப் பெயர். கையிலிருந்த பவழத்தினாலாகிய பாவை பந்து முதலிய விளையாடற் கருவிகளை ஓரிடத்தில் வைத்துவிட்டுச் சோலை சென்று, போதும் மலரும் பூந்தழையுமாக விரிசிகை விரவிற் கொய்யத் தொடங்கினாள். கொய்து முடித்த பின் கொய்த மலர்களை இரண்டு உள்ளங்கைகள் நிறைய ஏந்திக் கொண்டு நேரே உதயணனிடம் வந்தாள். காலடியோசை கேட்டுத் தலை நிமிர்ந்தான் உதயணன். எதிரே திருமகள் போல நின்று கொண்டிருந்தாள் விரிசிகை. அப்போது அவள், அவனைப் பார்த்த மிரண்ட விழிநோக்கின் மருட்சியிலும் ஒரு தனி அழகு நிழலிட்டது. "நானும் என் பாவையும் சூடிக் கொள்ள மாலை வேண்டும். இவைகளை மாலையாகத் தொடுத்துக் கொடுங்கள்". தேனினும் இனிய குரலில் இவ்வாறு கூறிக்கொண்டே, உள்ளங்கைகள் நிறைய இருந்த மலரையும் அரும்பையும் தழைகளையும் விரிசிகை அவனுக்கு முன்னே குவித்தாள். உதயணனுக்கு ஒரே வியப்பாயிருந்தது. 'நாணமும் பயமுமில்லாமல் ஓர் ஆண்மகனிடம் வந்து, 'எனக்குப் பூத்தொடுத்துக் கொடுக்க வேண்டும்' என்று கேட்கிற பெண்ணும் இருக்க முடியுமா?' என்று இந்த நிலையை வியந்தான் அவன். மலரை எடுத்து, அவள் கொடுத்த நார்ச் சுருளை வாங்கி மாலை கட்டத் தொடங்கிய போது, அவள் அணிவதற்காக என்று அந்த மாலையை உருவாக்குகிறோம் என்ற இன்ப உணர்வு உதயணனுக்கு ஏற்பட்டது. மாலை மிக அழகாகவும் அமைந்தது. பாவைக்காகத் தனியே சிறிய மாலை ஒன்றும் அவன் தொடுத்திருந்தான். அவன் கைகள் விரைவாக மாலை தொடுப்பதைப் பார்த்து விரிசிகை வியந்து கொண்டிருந்தாள். அப்படித் தன்னை நோக்கிக் கொண்டிருந்த அவளை நன்றாகப் பார்த்து, அவள் ஓர் அரசகுமாரி போலத் தோன்றுவதையும் பிற இலட்சணங்களையும் கொண்டு அரசர் குடிப்பிறந்தவள் என்றே தேர்ந்தான் உதயணன். மாலைகளைத் தன் மேலாடையிலிருந்து எடுத்துப் புன்முறுவலுடன் விரிசிகை கையில் அளித்தான். மாலைகளைப் பெற்றுக் கொண்ட விரிசிகை, அவற்றை அணிந்து கொள்ள அறியாமல் பூக்கள் உதிரும்படி சிதைப்பது கண்டு, அவளுக்கு மாலை அணிந்து காட்ட விரும்பினான் உதயணன். அவளைத் தன் பக்கத்தில் அழைத்து மடிமேல் இருத்தி, நீண்ட கூந்தலில் வட்ட வடிவாக அந்த மாலையைச் சூட்டி அழகு செய்த பின் "மெல்ல செல்க" என்று கூறி அவளை அனுப்பினான். கள்ளமற்ற அந்தக் கன்னிப் பெண்ணும் அவன் மடியில் அமர்ந்ததனால் புதிய களிப்பு மிக்கதொரு உணர்வைப் பெற்றது போலிருந்தது. கொடிபோல வளர்ந்து பருவ வனப்பு நிறைந்து விளங்கிய விரிசிகை, மலைப் பகுதியில் வசிப்போர், அணியும் எளிய சிறிய உடையே அணிந்திருந்தாள். பருவ வளம் ஒவ்வோர் அங்கங்களிலும் பொலிவுற்றுத் தோன்றிய அவளை மடியில் இருத்திக் கொண்டிருந்த அந்தச் சிறுபொழுது, உதயணனுக்கு மறக்க முடியாதபடி நினைவில் நின்றுவிட்டது. உதயணன் தன் மடியிலிருந்து விரிசிகையை எழச் சொல்லிய அதே நேரத்தில், காஞ்சனை பின் தொடரப் பல நிறப் பூக்களைக் கொய்து கொண்டு அங்கே வந்து சேர்ந்தாள் வாசவதத்தை. உதயணன் மடியில் அழகான இளம் பெண் ஒருத்தி கூந்தலில் மாலை சூடிய வண்ணம் அமர்ந்திருந்து விட்டு எழுவதைக் கண்ட தத்தைக்கு ஒரு விநாடி உள்ளமே துடிப்பற்று நின்றுவிடும் போலிருந்தது. யார் யாரோ வருவதைக் கண்ட விரிசிகை ஒன்றும் புரியாது எழுந்து பயந்து கொண்டே ஆசிரமத்தின் உள்ளே ஓடிவிட்டாள். தத்தை கண்கள் சிவக்க உதடுகள் துடிதுடிக்கச் சினத்துடன் உதயணனை நெருங்கினாள். பக்கத்திலிருந்த காஞ்சனமாலையிடம் தத்தை சீற்றத்தோடு கூறிய சொற்கள் உதயணன் காதில் விழுந்தன. "காஞ்சனை என்னை இப்போதே என் தந்தையின் நகருக்குக் கொண்டு போய் விட்டுவிடச் சொல்! தனக்கு மிகப் பக்கத்தில் உள்ள தாமரைப் பொய்கையிற் பொழுதோடு மலர்ந்து புதுமைச் செவ்வியோடு விளங்கும் தாமரை மலரிலுள்ள தேனை உண்ணாது, தொலைவிலிருக்கும் நெய்தற் பூவில் தேனுண்ண விரும்பி அதனை நாடிச் செல்லும் வண்டு போன்றவர்கள் ஆடவர். இவ்வுண்மையை யான் இன்று அறிந்தேன்" என்று இவ்வாறு கூறிவிட்டு உதயணனை அணுகவும் விரும்பாதவள் போலப் பக்கத்திலுள்ள ஒரு பொழிலில் கோபத்தோடு புகுந்தனள் வாசவதத்தை. தத்தையின் ஊடற்குறிப்பை உதயனனுக்கு அறிவிப்பவள் போல அவனை ஏறிட்டுப் பார்த்தாள் காஞ்சனமாலை. கீழே கோபமிகுதியால் தத்தை அங்குமிங்குமாகச் சிதறிவிட்டுச் சென்ற பூக்கள் விழுந்து கிடந்தன. அவளுடைய ஊடற்சினத்தின் அளவைச் சிதறப்பட்டுக் கிடந்த அந்த மலர்களும் ஒருவாறு எடுத்துக் காட்டின. இந் நிகழ்ச்சி நடக்கும் போது மலைச் சாரலுக்கு விழாவிற்காக வந்திருந்த சாங்கியத் தாயும் தற்செயலாக அங்கே வந்து சேர்ந்தாள். அவளைக் கண்ட தத்தை, தான் ஒதுங்கிச் சென்ற பொழிலில் இருந்து தன்னைத் தன் தந்தையிடம் கொண்டு போய் விடுமாறும், உதயணன் இயல்பு இவ்வளவு இழிவாக இருக்கும் என்று தான் கருதவில்லை என்றும் வருந்திக் கூறிக் கொண்டிருந்தாள். இதைக் கேட்ட சாங்கியத் தாய் அவள் சினத்தை எவ்வாறு தணிப்பது என்று சிந்தித்த வண்ணம் இருந்தாள். தத்தைக்கும் உதயணனுக்கும் வேண்டியவளாகிய சாங்கியத் தாய் இப்போது இருவரில் யாரை முதலில் சமாதானப்படுத்துவதெனத் தயங்கினாள். அப்போது உதயணன் அவள் ஊடலைத் தணிக்கக் கருதி எழுந்தான். 'கள் உண்ண வேண்டும் என்று எழுந்த வேட்கை நோயை அதை உண்டுதானே தீர்த்துக் கொள்ள வேண்டும்? அதுபோலத் தன் காரணமாக உண்டான ஊடலை தான் தானே தீர்க்க வேண்டும்' என்று இந்த நினைவுடன் தத்தை சினத்துடன் புகுந்த சோலைக்குள் உதயணனும் புகுந்தான். அவனைக் கண்டதும் தத்தை வேறொரு புறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். உதயணன் அவளைப் பலவாறு இரந்து இனிய மொழிகளால் வேண்டினான். அவளை மெல்ல நெருங்கிக் கலைந்திருந்த கூந்தலைத் திருத்திக் கொண்டே சினத்தைத் தணிக்க முயன்றான். தத்தையோ அவனை வெறுப்பவள் போல ஒதுங்கிச் சென்றாள். அவள் ஊடலைத் தணிப்பது அவ்வளவு எளிதாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அபோது தத்தையின் ஊடல் தானாகத் தணிவதற்கு ஏற்ற நிகழ்ச்சி ஒன்று தற்செயலாக நடந்தது. மலைச்சாரலில் இருந்த வளர்த்தியான மரமொன்றிலிருந்து ஒரு பெரிய குரங்கு திடீரென்று அங்கே தத்தையின் அருகில் குதித்து வந்தது. காண்பதற்கு அஞ்சத்தக்க தோற்றமுடைய அக் குரங்கு திடுதிப்பென்று குதித்தது கண்டு பயந்து நடுங்கிய தத்தை, தன் ஊடலை மறந்து உதயணனைக் கட்டித் தழுவிக் கொண்டாள். அச்சத்தினால் ஏற்பட்ட இந்தத் தழுவுதலினால் உதயணன் மேல் தான் கொண்ட சினத்தையும் ஊடலையும் தத்தை மறந்துவிட்டாள். தத்தையின் எழிலும் இன்பமுமே உதயணனை அரசியலையும் தன் ஆண்மையையும் இழக்கச் செய்திருந்தன என்பதை நன்கு உணர்ந்திருந்த உதயணனுடைய உயிர்த்தோழர்கள், ஏற்கெனவே யூகி இட்டிருந்த திட்டப்படி அவளை அவனிடமிருந்து பிரித்து, யூகியின் ஆதரவில் சில காலம் மறைவாகத் தங்கியிருக்கும்படி செய்யக் கருதினர். உண்டாட்டுவிழா ஒருவாறு முடிவுற்றது. மக்கள் நகர் மீண்டனர். உதயணனையும் தத்தையையும் மலைச்சாரலுக்குப் பக்கத்தில் உள்ள இலாவாண நகரத்து அரண்மனையில் சில நாள் தங்கி வாழும்படி ஏற்பாடு செய்திருந்தனர். தன் திட்டம் நிறைவேற யூகி அந்த ஏற்பாட்டை நண்பர்கள் மூலமாகச் செய்வித்திருந்தான். |