61. மதுகாம்பீர வனம் பல நாள் பிரிந்திருந்து இப்போது முதன் முறையாகச் சந்தித்த பின்னர் யூகி, உருமண்ணுவா இருவரும் கூடிச் சிந்தித்துத் தாங்கள் எல்லோரும் உடனே கோசாம்பி நகரத்துக்குப் புறப்படுவது என முடிவு செய்தனர். 'சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென்று தானும் வாசவதத்தையும் உதயணனுக்கு முன் தோன்றினால், அவன் ஏதேதோ நினைத்து மனங்குழம்பும்படி ஆகிவிடும்' என்று உருமண்ணுவாவிடம் யூகி கூறி, அவனது கருத்து யாது எனவும் வினாவினான். 'அவ்வாறு செய்வது பொருத்தம் அல்ல' என்பதே தன் கருத்து என்றும், 'மெல்ல மெல்லவே அதை உதயணன் அறியும்படி செய்ய வேண்டும்' என்றும், அவன் யாவற்றையும் ஒருவாறு தெளிந்து கொண்ட பின்பே வாசவதத்தையை அவன் முன்னால் நிறுத்த வேண்டும் என்று யூகிக்கு உருமண்ணுவா மறுமொழி கூறினான். கோசாம்பி நகரின் ஊரெல்லையில் மதுகாம்பீர வனம் என்ற ஓர் அழகான பெரிய சோலை உண்டு. அந்தச் சோலைக்கு நடுவில், நகருக்கு விருந்தினராக வரும் அரசர்கள் தங்குவதற்கென்றே எழில் மிக்க விருந்தினர் மாளிகை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. கோசாம்பி நகரத்திலுள்ள அழகான அம்சங்களில் எல்லாம் கண்டோர் மனத்தைப் பிணிக்கும் பேரழகு வாய்ந்த அம்சம், இந்த மதுரகாம்பீர வனமும் இதனுள் இருக்கும் விருந்தினர் மாளிகையும் தான். எத்தனை கோடி முறை கண்குளிரக் கண்டாலும் தெவிட்டாதது இதன் வனப்பு. இந்தச் சோலையையும் மாளிகையையும் காத்து வரும் அரண்மனைக் காவலர்களை உருமண்ணுவாவுக்கு நன்கு தெரியும். அப்போது சோலையில் உள்ள மாளிகையில் வேற்று நாடுகளிலிருந்து எந்த அரசரும் வந்து விருந்தினராகத் தங்கியிருக்கவில்லை என்பதையும் உருமண்ணுவா நன்கு அறிந்திருந்தான். எனவே, புண்டர நகரத்திலிருந்து யூகி, தத்தை, சாங்கியத்தாய் முதலியவர்களோடு புறப்பட்டுக் கோசாம்பி நகருக்கு வந்த உருமண்ணுவா, நகர எல்லையை அடைந்ததும் நேரே இந்தச் சோலைக்குள்ளே நுழைந்தான். சோலைக் காவலர்கள் உருமண்ணுவாவை வணங்கி வரவேற்றார்கள். உருமண்ணுவா அவர்களைத் தனியே அழைத்து எல்லா விவரத்தையும் கூறித் தாங்கள் அங்கே தங்கியிருப்பதோ, தங்களைப் பற்றிய மற்ற இரகசியங்களோ யாருக்கும் தெரியக் கூடாது என்றும் தெரியும்படி அவர்களும் பேசலாகாது என்றும் கூறிவிட்டு யூகி முதலியவர்களை மாளிகையில் மறைவாகத் தங்கச் செய்தான். பின்பு தான் மட்டும் தனியே அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றான். உருமண்ணுவா, வரும் செய்தியை கேட்டு அளவற்ற மகிழ்ச்சியடைந்து, அச்செய்தியைக் கொண்டு வந்த காவலனிடம் உடனே அவனை அழைத்து வருமாறு அனுப்பினான் உதயணன். தனக்கு வாக்களித்தபடியே உருமண்ணுவாவை விடுதலை செய்து அனுப்பிய தருசகனின் பெருந்தன்மையை தன் மனத்திற்குள்ளே எண்ணிப் பாராட்டிக் கொண்டான் உதயணன். அவன் அவ்வாறு எண்ணிக் கொண்டே இருக்கும் போது உருமண்ணுவா உள்ளே நுழைந்தான். உதயணன் ஆறாத மகிழ்ச்சியோடு அவனைத் தழுவிக் கொண்டு இனிய மொழிகளால் வரவேற்றான். சங்க மன்னர்களிடம் சிறைப்பட்ட பின்பு நடந்த நிகழ்ச்சிகளைக் கூறும்படி, உதயணன் கேட்டுக் கொள்ளவே, உதயணனுக்கு அவற்றை விவரித்துக் கூறலானான் உருமண்ணுவா. தருசகனுடைய தூதுவர்கள் சங்க மன்னர்களிடம் வந்தது தொடங்கி, அவர்கள் பண்புடனே நடந்து கொண்டு தன்னை விடுவித்து அனுப்பியது வரை உருமண்ணுவா யாவற்றையும் கூறி முடித்தான். சாதகன் தன்னிடத்தில் வந்து யூகியின் திருமுகத்தைக் கொடுத்தது, தான் புண்டர நகரம் சென்று யூகி முதலியவர்களை அழைத்துக் கொண்டு வந்து மதுகாம்பீர வனத்திலே தங்க வைத்திருப்பது முதலிய செய்திகளை மட்டும் அப்போது உதயணனிடம் கூறாமல் மறைத்து விட்டான். உதயணனுக்கு இவற்றைக் கூறிய பின் உருமண்ணுவா வயந்தகனைத் தனியே அழைத்துச் சென்று அவனிடம் சில இரகசியமான சூழ்ச்சித் திட்டங்களை விவரித்து, அவை நிறைவேற்றுவதற்குப் பூரணமாக ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொண்டான். அத் திட்டங்கள் யாவும் யூகி, தத்தை, சாங்கியத்தாய் ஆகியோர்களைப் பிறர் சந்தேகம் அடைந்து திகைத்து விடாதவாறு வெளிக் கொணருவதைப் பற்றியவையே ஆகும். 'உதயணனை அதற்கேற்ற முறையில் பக்குவப்படுத்துவதற்கு அவனோடு அந்நிலையில் மிகவும் நெருங்கிப் பழகிவரும் வயந்தகனே ஏற்றவன்' என்று அறிந்த உருமண்ணுவா அவனுடைய உதவியை நாடினான். உருமண்ணுவாவைச் சந்திப்பதற்கு முன்னால் உதயணனது மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை, அதற்கு முன்பே நடந்த சில நிகழ்ச்சிகளைக் கொண்டு அறிய வேண்டியது இங்கே அவசியம் ஆகிறது. உருமண்ணுவா கோசாம்பி நகருக்கு வருவதற்கு முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகளே அவை. அருஞ்சுகன் மூலம் கோடபதி திரும்பக் கிடைத்ததிலிருந்து வாசவதத்தையைப் பற்றிய நினைவுகளை மனத்திலிருந்து நீக்க முடியாமல் தவித்தான் உதயணன். அந்தப் பழைய நினைவுகளால், அவனுக்குப் பதுமையின் மேலிருந்த அன்பு கூடச் சிறிது குறைந்திருந்தது. அவளிடத்தில் சில நாட்களாக அவன் பாராமுகமாகவே நடந்து கொண்டான். கோடபதி என்ற யாழ் திரும்பக் கிடைத்ததிலிருந்து அவன் அவ்வாறு தன்னிடம் பற்றின்றி நடந்து கொள்வதைப் பதுமையும் ஓரளவு உணர்ந்திருந்தாள். ஒரு நாள் அவன் யாழ் வாசித்துக் கொண்டிருந்த போது அவனது பற்றற்ற நிலையில் மனத் துயரந் தாங்கமாட்டாமல் அவனிடம் ஒன்று வேண்டிக் கோண்டாள் பதுமை. "கோடபதி என்ற இந்தத் தெய்வீக யாழினால் தான் நீங்கள் நளகிரியின் மதத்தை அடக்கினீர்கள்! அன்றியும், நீங்கள் அல்லும் பகலும் நினைத்துருகும் அந்த வாசவதத்தைக்கு இதனால் தான் யாழிசையைக் கற்பித்திருக்கிறீர்கள்! தயவு கூர்ந்து தங்கள் அடியாளாகிய எனக்கும் இந்த அற்புத யாழினால் இசையைக் கற்பியுங்கள்! இது என் அன்பான வேண்டுகோள்" என்று கூறினாள். பதுமையின் இந்த வேண்டுகோளை உதயணன் ஒரு பொருட்டாக மதித்து மறுமொழி கூறவே இல்லை. அவள் 'வாசவதத்தை கற்ற இந்த யாழை நானும் கற்பேன்' என்று கூறிய சொற்களின் ஒலி நெருப்பிலே காய்ச்சிய வேல்போல் அவன் மனத்திலே பாய்ந்தது. அச் சொற்களால் தத்தையைப் பற்றிய சிந்தனையில் பின்னும் ஆழ்ந்து இலயித்துப் போன அவன், மனமுருகிக் கண்ணீர் சிந்தினான். அவனுடைய துயரம் பெருகுவதைக் கண்டு, தத்தையைப் பற்றித் தான் அப்போது அவனிடம் குறிப்பிட்டதே தவறு என்பதை உணர்ந்து கொண்டாள் பதுமை. தன்னுடைய முதல் மனைவியாகவும் ஆருயிர்க் காதலியாகவும் இருந்து மறைந்து போன அவளைப் பற்றி அவன் அவ்வாறு நினைப்பது இயற்கையே என்றும் எண்ணினாள் பதுமை. அவன் இப்படி மனம் வருந்தியிருக்கும் இந்த நிலையில் தான் அவனிடம் கோபங்கொண்டு பிணங்குவது கூடப் பொருந்தாது என்று எண்ணித் தற்செயலாக அங்கிருந்து எழுந்து செல்பவளைப் போலக் குறிப்பறிந்து அவனைத் தனிமையில் விடுத்துச் சென்று விட்டாள் அவள். பதுமை சென்ற சற்றைக்கெல்லாம் வயந்தகன் அங்கே உதயணனைக் காண வந்தான். அவன் வரவையும் ஒரு பொருட்டாக மதித்து வரவேற்கவில்லை உதயணன். "பிரிந்து சென்ற வாசவதத்தையை எண்ணிப் பதுமையின் மேல் பாராமுகமாக நடந்து கொள்ளுதல் தகுமா? அவள் என்ன பிழை செய்தாள்? அவள் மேல் வெறுப்பு ஏன்?" என்று அன்போடு குழைந்த குரலில் வயந்தகன் கேட்டபோது, அதற்கும் அவனிடமிருந்து மறுமொழியே பிறக்கவில்லை. பழைய நினைவுகளை எண்ணியும் அரற்றியும் படுக்கையின் பஞ்சணை மேல் சிறு குழந்தையைப் போல அழுது புரண்டு கொண்டிருந்தான் உதயணன். இந்த நிலையைக் கண்டு வயந்தகன் மேலும் பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து சென்று விட்டான். உதயணனும் அதே நிலையில் இரவு உணவு கூட உட்கொள்ளாமல் உறங்கிவிட்டான். விடியற்காலை நேரத்தில் ஒரு கனவு கண்டு விழித்துக் கொண்ட போது தான் அவன் மறுபடி தன் நினைவைப் பெற்றான். பாற்கடலிலிருந்து, வெண்ணிறத்து இளங்காளை ஒன்று உள்ளே வீற்றிருக்கிற வெண்டாமரை மலர் ஒன்றை, அம்மலர் பற்றிய உண்மையைத் தன்வசம் கூறிய பின்னர், தெய்வ மகள் ஒருத்தி வந்து தனக்கே அளிப்பது போலக் கனவு கண்டான் உதயணன். கனவின் முடிவில் அவன் விழித்துக் கொண்டான். அந்நேரம் விடிவதற்கு உரிய நேரம் என்பதைக் கண்டு, கனவின் பயனை அறியும் ஆவல் ஏற்பட்டது அவனுக்கு. விடிந்ததும் புறநகரில் உள்ள தவப்பள்ளிக்குச் சென்று அங்கிருந்த முனிவர் ஒருவரிடம் தன் கனவைக் கூறி அதன் பயனையும் உடனே தனக்கு உரைக்குமாறு வேண்டிக் கொண்டான். முனிவர் அவன் விருப்பப்படியே கனவின் பயனை உரைத்தார். அவர் கூறிய பயனைக் கேட்டு மகிழ்ச்சியும் வியப்பும் ஒருங்கே தோன்றியது உதயணனுக்கு. "உதயணன்! நீங்கள் யாவரும் இறந்து போய்விட்டதாகக் கருதியிருக்கும் வாசவதத்தை, உண்மையில் இன்று வரை உயிரோடு இருக்கிறாள். அவள் இறந்து விட்டாள் என்ற தவறான எண்ணம் உனக்கு இருக்குமானால் அதை இப்போதே மாற்றிக் கோள். இன்று அல்லது நாளை மாலைப் பொழுதுக்குள் வாசவதத்தையை எப்படியும் நீ அடைந்தே தீருவாய். அது மட்டுமல்ல விரைவில் அவளிடத்தில் உனக்கு ஒரு புதல்வன் பிறப்பான். அப்புதல்வன் தேவருலகையும் ஆளும் வாய்ப்புடையவன். வெண்தாமரைப் பூ வாசவதத்தையையும், அதில் வீற்றிருக்கும் இளங்காளை உனக்குப் புதல்வன் பிறக்கப் போவதையும், பூவைத் தெய்வமகள் உன் கையில் அளித்தது தத்தையை விரைவில் நீ அடையப் போவதையும் குறிப்பிடுகின்றன. நீ கண்ட கனவின் பொருள் இதுதான்" என்று கூறி விளக்கினார் முனிவர். இச் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் பூரிப்புக் கொண்ட மனநிலையோடும் அந்த முனிவரிடம் விடை பெற்றுக் கொண்டு அரண்மனை திரும்பினான் உதயணன். அவன் அரண்மனை திரும்பிய சிறிது நேரங்கழித்துத் தான் உருமண்ணுவா அவனைச் சந்தித்தது நிகழ்ந்தது. எனவே சிந்தனைக் குழப்பமின்றி மனமகிழ்ச்சியும், நிறைந்த எண்ணமும் பொருந்திய நிலையிலிருந்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அவனைச் சந்தித்து விட்டு வயந்தகனைத் தனியே அழைத்து விவரம் கூறி உதவி நாடினான் உருமண்ணுவா. உடனே வயந்தகன் உதயணனுக்குக் கோடபதி திரும்பக் கிடைத்த வரலாற்றையும் அதனால் அவன் மனம் தத்தையைப் பற்றிய பழைய நினைவுகளில் சிக்கிக் குழம்பியிருப்பதையும் உருமண்ணுவாவுக்கு விவரித்தான். 'உதயணன் கோடபதியால் வாசவதத்தையைப் பற்றிய நினைவாகவே இருக்கிறான்' என்பது தன் காரியத்தின் வெற்றிக்கு ஏற்றதாகத் தோன்றவே, வயந்தகனுக்கு உருமண்ணுவா மறைவான திட்டம் ஒன்றைக் கூறி, அதன்படி யாவற்றையும் ஏற்பாடு செய்து நடத்தும்படி உரைத்தான். |