64. பிரச்சோதனன் தூது பதுமாபதி சென்ற பின் வாசவதத்தையிடம் அவளுடைய குணங்களைப் பலவாறு பாராட்டிக் கூறினான் உதயணன். 'குணத்திலும் அழகிலும் பதுமை உன்னைப் போலவே இருக்கிறாள் என்பதற்காக நான் அவளை மணந்து கொண்டேன்' என்றும், மேலும் பலவிதத்திலும் பதுமையைப் பற்றி உதயணன் தன்னிடத்தில் புகழ்ந்து கூறவும் அதுவரை பொறாமை என்பதையே நினையாமலிருந்த வாசவதத்தைக்கும் மெல்ல மெல்ல பொறாமை ஏற்பட்டு விட்டது. பதுமையை அவன் தன்னோடு ஒப்பிட்டுப் பாராட்டியதை அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. தத்தையின் கண் இமைகள் சிவந்தன; உதடுகள் துடித்தன; முகத்தில் கடுமை பரவியது. வெடுக்கென்று உதயணனைச் சுட்டுவிடுபவளைப் போலத் திரும்பிப் பார்த்தாள் அவள். வாசவதத்தை சினங்கொண்டிருக்கிறாள் என்பதை அவனறிந்து கொண்டான். பேச்சை மாற்றிப் பலவகை உபாயங்களினாலே அவள் சினத்தைத் தணிக்க முயன்றான் அவன். ஆனால், அவை யாவும் அவள் சினத்தைப் பெருக்குவதற்குத்தான் பயன்பட்டனவே தவிர, சிறிதளவும் குறையச் செய்யவில்லை. இறுதியாக, "மற்ற விதங்களில் பதுமை உன்னை ஒத்திருப்பினும் உன் பெண்மைக்கு நிகர் நீயேதான்" என்று கூறிய பின்பே உதயணனால் அவளுடைய சினத்தை ஒருவாறு தணியச் செய்ய முடிந்தது. வாசவதத்தை வந்து சில தினங்களான பின்னால், கோசாம்பி நகரத்து அரண்மனையில் ஒரு பெரிய பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தான் உதயணன். பிரிந்து ஒன்று கூடிய தன் நண்பர்களை எல்லாம் பாராட்டித் தான் செலுத்த வேண்டிய நன்றியைச் செலுத்தி விட வேண்டும் என்பதே அவன் நோக்கம். யூகியையும் வாசவதத்தையையும் தான் திரும்பப் பெற்றுவிட்ட மகிழ்ச்சியோடு அந்த விழாவும் சிறப்புற நிகழ வேண்டும் என்று அவன் ஆசையுற்றதனாலேயே, ஏற்பாடுகளை உடனே செய்யுமாறு தன் சேனாபதிகளுக்கு ஆணையிட்டிருந்தான். அரசவையில் ஐம்பெருங் குழுவினரும் எண் பேராயத்தினரும், அமைச்சர்களும் மிகப்பெரிய செல்வர்களும் நெருங்கி நிறைந்து கூடியிருந்தனர். உருமண்ணுவாவை அழைத்து அன்றிலிருந்து தன்னுடைய பிரதம சேனாபதியாக அவனை நியமித்திருப்பதாக அறிவித்தான் உதயணன். பன்னூறாயிரம் பொன்னுக்குக் குறைவில்லாத வருவாய்களை உடைய ஊர்களையும் உயரிய பாதுகாப்புப் படைகளையும் அவன் வசம் ஒப்புவித்தான். பதுமைக்கு நெருங்கிய தோழியும் அழகிற் சிறந்த இளங் கன்னியுமான இராசனை என்பவளை உருமண்ணுவா மணந்து கொள்வதற்கு ஏற்ற மங்கலத் திருநாளையும் ஏற்பாடு செய்தான். பாராட்டுத் திருவிழாவிற்கு இடையே மங்கலமான ஒரு நாளில் உருமண்ணுவாவுக்கும் இராசனைக்கும் திருமணம் நடந்தேறியது. பின் இலாவாண நகரம், சயந்தி நகரம், இரண்டையும் பிரதம சேனாபதியாகிய அவன் ஆண்டு வருமாறு கூறித் தான் அழைக்கும் போது மட்டும் தலை நகருக்கு வந்து தங்கினால் போதுமென்று ஆணையிட்டான் உதயணன். கணவனும் மனைவியுமாக அவர்களிருவரும் இலாவணத்திலுள்ள பெற்றோரைப் பேண வேண்டுமென்று கூறி அவர்களை வாழ்த்தி வழி அனுப்பினான். விடைபெற்ற பின் உருமண்ணுவாவும் புதிய பதவியுடனும் புதிய மனைவியுடனும் கோசாம்பியில் யாவரிடமும் சொல்லிக் கொண்டு இலாவாண நகரத்திலுள்ள தன் பெற்றோரைக் கண்டு ஆசி பெறப் புறப்பட்டான். தான் கூப்பிட்டனுப்பும் வரை அவன் இலாவாணத்திலிருந்து கொண்டே சயந்தி, இலாவாணம் ஆகிய இரு நகரங்களின் ஆட்சியையும் கவனித்து வரவேண்டும் என்பது உதயணன் அவனுக்கு இட்டிருந்த பணி. கோசாம்பியில் பாராட்டு விழா தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. யூகி, சேதி நாடு முழுவதையும் தன் அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்டு ஆளவேண்டும் என்று உதயணன் அதை அவனுக்கு அன்புடனே அளித்தான். இடவகன் என்ற நண்பனுக்கு முனையூர் முதலாக உள்ள ஐம்பது சிறு நகரங்களைப் பரிசிலாக வழங்கி அப்பகுதிகளிலுள்ள சிற்றரசர்களைப் புட்பக நகரத்தில் இருந்து மேற்பார்வை செய்யுமாறும் தான் அழைக்கின்ற சமயங்களில் மட்டும் கோசாம்பி நகரத்திற்கு வந்து போகுமாறு கூறி அவனைப் பாராட்டி அனுப்பினான் உதயணன். வயந்தகனுக்கு அன்பளிப்பாக வனம் நிறைந்த நகரங்கள் பதினொன்றையும் அளித்து, நாள் ஒன்றிற்கு ஆயிரம் கழஞ்சுப் பொன் வேதனத்திற்குரியவனாக்கித் தன்னை விட்டு என்றும் பிரியாமல் தன் அருகிலேயே இருக்குமாறு வைத்துக் கொண்டான். இசைச்சன் முதலிய மற்றெல்லா நண்பர்களுக்கும் இதே அளவிற் சிறப்பான அன்பளிப்புக்களையும் பாராட்டுக்களையும் நல்கினான். இன்னும் தான் உஞ்சை நகரத்தில் இருந்த போதிலும் மற்ற சந்தர்ப்பங்களிலுங் கூட தனக்கும் தன் நண்பர்க்கும் உதவிகள் செய்தவர் எவராயினும் அவரையெல்லாம் தான் காண விரும்புவதாக எல்லா இடங்களிலும் முரசறைந்து தெரிவிக்கச் செய்தான். உஞ்சை நகரத்திலும் பிற இடங்களிலும் தனக்கும் யூகிக்கும் அரும் பெரும் உதவிகள் செய்துள்ள 'சாதகன்' என்னும் குயவனுக்கும் பலவகைப் பரிசில்கள் அளித்துக் கோசாம்பி நகரத்தின் தலைமைக் குயவனாவதற்குரிய பெருங்குயப் பட்டத்தை அவனுக்கு அளித்தான். தானும் தன் நண்பரும் மகதநாடு சென்று மறைந்து வசித்த போது உடன் வந்து உதவிய பலர்க்கும் அவரவர்க்கேற்ற பெருஞ் சிறப்புக்களைச் செய்தான். பின்பு தன் தாயை அவளிருக்கும் இடத்திற் சென்று கண்டு, அவள் விரும்பிய எல்லாவகைத் தானங்களுக்கும் ஏற்ற பொருள்களை வழங்குமாறு செய்தான். ஒரு நாட்டையே தன் தாயின் தானத்திற்காகக் கொடுத்தான் உதயணன். பிற்பாடு தன் பட்டத்துத் தேவிமார்களான வாசவதத்தைக்கும், பதுமாபதிக்கும் வேண்டிய ஆடல் மகளிர், பாடல் மகளிர், பிற அலங்காரப் பொருள்கள் முதலியவற்றைப் பகுத்து அளித்து அவர்களை மகிழ்வித்தான். புதிய பல அணிகலன்களையும் அவர்களுக்காகச் செய்வித்து வழங்கினான். பாராட்டு விழா நிகழ்ந்து முடிந்த பின், கோசாம்பி நகரத்து அரண்மனை வாழ்வு இன்பமும் அமைதியுமாகக் கழிந்து வந்தது. அவ்வாறிருக்கும் போது ஒருநாள் யூகியும் உதயணனும் தனித்திருந்து உரையாடிக் கொண்டிருந்த நிலையில், அரண்மனை வாயிற்காவலன் வந்து உஞ்சை மன்னர் பிரச்சோதனனிடமிருந்து தூதுவர்கள் வந்திருப்பதாகக் கூறினான். உதயணன் உடனே பெருமகிழ்ச்சியுற்றுத் தூதுவர்களைத் தகுந்த மரியாதைகளோடு உள்ளே அழைத்து வருமாறு காவலனுக்கு ஆணையிட்டான். யூகியும் தானுமாக அவர்களை வரவேற்பதற்கும் ஆயத்தமாயினான். தூதுவர் கூட்டத்திற்குப் பதுமை என்னும் பெயரையுடைய பெண் ஒருத்தி தலைமை தாங்கி வந்திருந்தாள். நீதி நூல்களிலும் அரசியல் நூல்களிலும் முதிர்ந்த அறிவும் பயிற்சியும் உடையவள் அந்தப் பெண். தூதுவருக்கு வேண்டிய எல்லாப் பண்புகளும் அவள்பாற் பொருந்தியிருந்தன. காண்பதற்கு அழகும் கவர்ச்சியும் அளிக்கவல்ல வனப்பான தோற்றத்துடனே விளங்கினாள் அவள். அவளுடன் கூட வேறு கலைஞர்களும் உஞ்சை நாட்டு அரசியலறிஞரும் பிரச்சோதனன் தன் மகள் தத்தைக்குப் பரிசிலாக அனுப்பிய பொருள்களும் தோழிப் பெண்களும் வந்திருந்தனர். ஐம்பது தேர்களையும் அழகிய தோழிப் பெண்கள் ஓராயிரவரையும், வாசவதத்தையின் செவிலித்தாய் நற்றாய் முதலியவர்கள் அன்போடு கொடுத்தனுப்பியிருந்த அணிகலப் பேழைகளையும், கிளி, அன்னம் முதலியனவாக வாசவதத்தை விளையாடி முன்பு வளர்த்த பறவைகளையும், இன்னும் பல எண்ணற்ற பரிசிற் பொருள்களையும் அவளுக்கெனக் கொண்டு வந்திருந்தாள் தூதி பதுமை. உதயணனும் யூகியும் உஞ்சை நகரத்திலிருந்து வந்திருந்த அந்தத் தூதுவர் குழுவை எதிர்கொண்டு வரவேற்றனர். பதுமை என்னும் தூதி, உதயணனையும் யூகியையும் வணங்கிய பின்பு பிரச்சோதன மன்னன் கொடுத்தனுப்பியிருந்த திருமுகத்தை உதயணனிடம் அளித்தாள். சங்கு, சக்கரம் முதலிய உருவங்களின் முத்திரை வைக்கப்பெற்று அரக்குப் பொறியிட்டு மூடப் பெற்றிருந்த அந்தத் திருமுகத்தை உதயணன் பெற்றுக் கொண்டான். பிறருக்குக் கொடுத்தலைத் தவிரப் பிறரிடமிருந்து வாங்குதலறியாத அவன் கை, பதுமையினிடமிருந்து வாங்கிய திருமுகத்தை ஆவல் துடிக்கும் உள்ளத்தோடு பிரிக்கலாயிற்று. பிரச்சோதனன் எழுதியிருக்கும் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் அவன் மனத்தைப் போலவே கைகளும் முந்தின. அந்த ஆர்வம் அவன் முகச்சாயையிலும் ஒளிர்ந்தது. அவன் அந்தத் திருமுகத்தைக் கையில் வாங்கியதும் ஆசையோடு படிக்கலானான். |