75. இயக்கன் வரவு உருமண்ணுவா கூறிய யோசனை இதுதான்! "முன்பு சிறுவயதில் நாம் இதே கோசாம்பி நகரில் வசித்து வந்த போது ஒரு நாள் நண்பர்களாக ஒன்று கூடிக் காட்டுக்கு வேட்டையாடச் சென்றோம் அல்லவா? அப்போது காட்டில் வெகு தொலைவு அலைந்து திரிந்து களைத்த பின், நீர் வேட்கையால் வருந்தித் தண்ணீர் இருக்குமிடம் தெரியாமல் திகைத்துத் திண்டாடிக் கலங்கிப் போனோம்! அந்தச் சமயத்தில் குபேரனுக்கு ஏவல் செய்யும் இயக்கர்களில் ஒருவனாகிய நஞ்சுகன் என்பவன் வந்து நமக்குத் தண்ணீர் கொடுத்துக் காப்பாற்றினானே! அந்தச் சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவன் அன்று நம்மை விட்டுப் பிரியும் போது 'இப்போது ஏற்பட்டாற் போல உங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படுகிற காலங்களில் எல்லாம் என்னை நினையுங்கள்! நான் வந்து உங்களுக்கு வேண்டியதை எல்லாம் உதவுகின்றேன்' என்று அன்புடன் கூறிவிட்டுத் தன்னை நினைப்பதற்குரிய மந்திரத்தையும், என்னை மட்டும் தனியே அழைத்து என்னிடம் கூறிவிட்டுப் போனானல்லவா? அந்த மந்திரத்தை உச்சரித்து அவனை இப்போது இங்கே வரவழைத்து விட்டால் இயக்கனாகிய அவனால் நம் காரியம் நிச்சயமாக நிறைவேறிவிடும்" என்று உருமண்ணுவா தன்னிடம் கூறிய போது அந்தக் காரியம் முக்காற் பங்கு வெற்றியடைந்து விட்டதாகவே எண்ணி மகிழ்ந்தான் உதயணன். உடனே இயக்கனை நினைத்து வரவழைப்பதற்குரிய மந்திரத்தை ஒரு தனி ஏட்டில் எழுதி உதயணனிடம் கொடுத்தான் உருமண்ணுவா. அந்தப் பழைய நிகழ்ச்சியும் அவ்வளவு நாள்களுக்கு முன்பு கேட்டிருந்த மந்திரமும் உருமண்ணுவாவின் நினைவுத் திரையிலே சலனமும் அழிவும் இன்றி அப்படியே இருந்தது தான் உதயணனுக்கு பேராச்சரியத்தை உண்டாக்கியது. அந்த ஆச்சரியம் ஒருபுறம் இருக்க, அவன் எழுதிக் கொடுத்த மந்திரத்தை மதிப்போடும் பயபக்தியோடும் தூய்மையான நிலையில் ஓதினான் உதயணன். ஓதிச் சிறிது நேரத்திற் கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு காட்டிலே சந்தித்திருந்த நஞ்சுகன் என்னும் பெயரையுடைய அந்த இயக்கன் உதயணன் முன்பு தோன்றி நட்புணர்ச்சியோடு அவனை வணங்கினான். இயக்கனை உதயணனும் மகிழ்ச்சியோடும் பெருமதிப்போடும் வரவேற்றான். நஞ்சுகன் தான் யார் என்பதையும், தன்னைப் பற்றிய பழைய வரலாற்றையும், தாங்கள் முன்பு காட்டில் சந்திக்க நேர்ந்த நிகழ்ச்சியையும் மறுபடி உதயணனுக்கு நினைவுபடுத்தினான். "நீ பிரச்சோதனனுடைய மாய யானையால் சிறைப்பட்டுப் பிணிப்புண்டிருந்த போதும் மகத நாடு சென்று மாணகனாக மறைந்து வாழ்ந்த போதும் என்னை நினைத்து என் உதவியை நாடியிருக்கத் தக்க துன்பங்கள் உனக்கு எத்தனையோ ஏற்பட்டிருப்பதை நான் அறிவேன். ஆயினும் அந்தக் காலத்தில் எல்லாம் என்னை எண்ணி, என் உதவியை நாடாத நீ இப்போது மட்டும் என் உதவியை நாடுவதற்குக் காரணம் என்ன?" என்று நஞ்சுகன் உதயணனை நோக்கி கேட்டான். "அப்போது ஏற்பட்ட அந்தத் துன்பங்களெல்லாம் எங்களுடைய மனித யத்தனத்தினாலேயே தீர்த்துக் கொள்ளக் கூடியவனவாக இருந்தன. மனித யத்தனத்தினால் இயலும் எளிய காரியங்களுக்காக உன்னை அழைப்பானேன் என்று வாளா இருந்துவிட்டோம். இப்போது வாசவதத்தையின் இந்த ஆசையை நிறைவேற்றுவது எங்கள் யத்தனத்திற்கு அப்பாற்பட்டது என்று தெரிந்ததனால் தான் உன்னை விரும்பி அழைத்தோம்" என்று நஞ்சுகனது வினாவுக்குச் சமாதானம் கூறினான் உதயணன். "அரசே உனக்குப் பிறக்கப் போகும் புதல்வன் சாதாரணமானவன் அல்லன்! வித்தியாதரர்கள் வாழும் பேருகலத்தாலும் விரும்பப்படுகின்றவன் அவன். அத்தகைய சிறந்த புதல்வனின் கருவை உன் மனைவி தாங்கியிருக்கின்றாள். நீ அவள் விருப்பத்தை இப்போது பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமே. முன்னால் முத்தியடைந்த பத்திராபதி என்னும் யானை, இப்போது குபேரனிடத்தில் தெய்வ கன்னிகையாகப் பிறவியெடுத்து வாழ்ந்து வருகின்றாள். அவள் உனக்கு ஏதாவது ஓர் பெரிய உதவியைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாளாகையினால் தத்தையின் இந்த ஆசையை நீ அவளைக் கொண்டே நிறைவேற்றிக் கொள்ளலாம். பத்திராபதி முன் பிறவியில் யார் என்பது உனக்கு இன்னும் விளங்கியிருக்காது. அவள் பத்திராபதியாகப் பிறந்ததே ஒரு சாபத்தினால் தான். அந்த வரலாற்றை இப்போது நான் உனக்குக் கூறுகின்றேன் கேட்பாயாக! முன்பொரு காலத்தில் விந்தியமலைக்கு அருகிலுள்ள நருமதையாற்றின் கரையில் பருப்பதம் என்ற மலையில் குபேரன் தன் உரிய மகளிர் சிலருடனே தங்கியிருந்தான். குபேரனுக்கு உரிய தெய்வ மகளிர் பத்திரை முதலிய ஒன்பது பேர்கள். அவர்களில் ஒருத்தியாகிய பத்திராபதி என்பவளை அழைத்து அருகிலுள்ள சோலைக்குச் சென்று மலர் தளிர் முதலியன கொய்து கொண்டு வருமாறு குபேரன் அனுப்பினான். சோலைக்கு மலர் கொய்வதற்குச் சென்ற பத்திராபதி அங்கே ஓரிடத்தில் ஓர் ஆண் யானையும் பெண் யானையும் களிப்புடனே கூடிய நிலையில் இருந்ததைக் கண்டு மனோ விகாரமுற்று விரகதாபம் கொண்டாள். அந்த நிலையில் அவள் தன் செயலை மறந்ததைக் கண்டு குபேரன், ஆற்ற முடியாத சினத்தினால் மண்ணுலகிற் சென்று பெண் யானையாகப் பிறக்குமாறு அவளுக்குச் சாபம் அளித்துவிட்டான். பத்திராபதி அஞ்சி நடுங்கியவளாய்க் கலங்கிய உள்ளத்தோடு, 'எனக்கு எப்போது இச் சாபத்திலிருந்து விடுதலை?' என்று குபேரனை வினவினாள். 'உன்னைப் பிரச்சோதன மன்னன் பத்திராபதி என்ற இதே பெயருக்குரிய யானையாக வளர்த்து உதயணனுக்கு அளிப்பான். உதயணன் வாசவதத்தையோடு உஞ்சை நகரிலிருந்து தப்பி ஓடும்போது இருளில் பெருந்தொலைவு சென்ற பின் காலகூடம் என்ற சுடு நோயால் நீ இறந்து வீழ்வாய். அப்போது இறந்து வீழ்ந்த உன் காதுகளில், உதயணன் பஞ்ச மந்திரத்தை உபதேசிப்பான். அதன் பின் நீ பழைய தெய்வ கன்னிகை பத்திராபதியாக மாறிப் பிறந்து இங்கே வருவாய்' என்று குபேரன் அன்று பத்திராபதிக்குச் சாப விடுதலை கூறினான். பின்பு இதன்படியே நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்து முடிந்தது உனக்கும் தெரியும். இப்போது அதே பத்திராபதியால் தான் உன் மனைவி வாசவதத்தை கருக் கொண்டிருக்கிறாள். பத்திராபதிக்குப் பஞ்ச மந்திரத்தை உபதேசித்ததற்காக, உன் மேல் நன்றி கொண்டு குபேரனிடம் உனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டுமென்று வரம் கேட்டு அவள் இவ்வாறு செய்துள்ளாள். அவளுடைய ஏற்பாட்டின்படி குபேரன், சௌதர்மேந்திரன் என்னும் வித்தியாதரன் மூலமாகச் சோதனன் என்னும் முனிவனை உன் மகனாக அவதரிக்குமாறு ஏற்பாடு செய்திருக்கிறான். எனவே அதே பத்திராபதியை இப்போது நீ இந்த உதவிக்காக அழைத்தால் வானிற் பறக்க வேண்டும் என்ற உன் மனைவியின் மயற்கை உடனே நிறைவேறிவிடும்" என்று சொல்லிப் பத்திராபதியை அழைப்பதற்குரிய மந்திரத்தையும் அவனுக்குக் கூறிவிட்டுச் சென்றான் நஞ்சுகன் என்ற அந்த இயக்கன். இதைக் கேட்டு உதயணன் கவலை நீங்கப் பெற்று மகிழ்ந்தான். வாசவதத்தை விரும்பியபடியே அவளுக்குப் பறக்கும் ஊர்தியைச் செய்து தருவதற்கு இயலும் என்ற மனத் திருப்தியோடு அதற்கான முயற்சிகளைத் தொடங்கினான் அவன். தனக்கு நண்பனாகிய இயக்கன் நஞ்சுகன் பத்திராபதியை நினைத்து அழைப்பதற்குரிய மந்திரத்தைக் கூறிவிட்டுச் சென்ற பின், உதயணன் அதே மந்திரத்தை எண்ணி இடைவிடாமல் உருவேற்றத் தொடங்கினான். பத்திராபதியின் உதவியால் தத்தையின் ஆசையை நிறைவேற்றிவிடலாம் என்ற விருப்பமே இதற்குக் காரணமாகும். இதே சமயத்தில் உதயணனுடைய அமைச்சர்களும் வாளா இருக்கவில்லை! அங்கங்கே நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்த திறமை வாய்ந்த தச்சர்களை வரவழைத்து, 'வானிற் பறந்து சென்று பல இடங்களையும் காணுவதற்குப் பயன்படும் இயந்திரம் ஒன்றை உங்களால் இயற்ற முடியுமா?' என்று கேட்டு வந்தனர். ஆனால், அவ்வாறு அழைக்கப்பட்டு வந்த தச்சர்களில் எவரும் தங்களால் அதைச் செய்வது சாத்தியமில்லை என்றே கூறினர். எல்லாரும் அது முடியாத காரியம் என்று சொல்லி ஒருமுகமாக கையை விரித்துவிட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில், உதயணன் தன்னை எண்ணித் தன் உதவியை நாடுகின்றான் என்பதைப் பத்திராபதி உணர்ந்தாள். உடனே தான் சென்று உதயணனுக்கு உதவ வேண்டும் என்ற அவா அவளுக்கு ஏற்பட்டது. இளமையான தச்சன் ஒருவனைப் போலத் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு உடனே உதயணனைச் சந்திக்கக் கோசாம்பி நகருக்குப் புறப்பட்டாள் பத்திராபதி. 'ஒரு காலத்தில் தனக்கு நிரம்ப உதவி செய்தவனுக்கு, இன்று தானே உதவி செய்வதற்குச் செல்கிறோம்' என்றெண்ணி பெருமிதம் கொண்டு மகிழ்ந்தாள் அவள். |