78. நரவாணன் நாடிய நங்கை கோசாம்பி நகரில் ஒவ்வொன்றாக ஆண்டுகள் கழிந்தன. ஆனால், காலத்தின் வளர்ச்சி என்பது அதன் சொந்த வளர்ச்சியாக மட்டுமா இருந்து விடுகிறது? மனிதர்களையும் அவர் தம் எண்ணங்களையும் செயல்களையும் கூடக் காலம் தானே வளர்த்துக் கொண்டு போக வேண்டும்? உதயணன் முதலியவர்களுடைய புதல்வர்களும் இப்படித் தன் போக்கான கால வேகத்தில் வளர்ந்து வளர்ந்து இளமைப் பருவம் எய்தியிருந்தனர். உதயணனுடைய புதல்வனாகிய நரவாண தத்தனும், யூகி முதலிய மற்றத் தோழர்களின் புதல்வர்களாகிய கோமுகன், அரிசிகன், பூதி, தவந்தகன் முதலியவர்களும் இளமைப் பருவத்திற்குரிய தோற்றக் கனிவையும் பொலிவையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அடைந்து வந்தனர். கல்வி, அரசியல், படையியல் முதலிய கலைகள் தக்க ஆசிரியர்கள் மூலம் அவர்களுக்குக் கற்பிக்கப் பெற்று வந்தன. தோற்றத்திலும் உடலிலும் இளமையின் வனப்பு வளர்ந்து வந்ததைப் போலவே, கலை வனப்பை வளர்க்கும் கல்வித் துறைகளிலேயும் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தனர் அவர்கள். அரசகுமாரனாகிய நரவாண தத்தன், உதயணன் இளமையில் எந்த கவர்ச்சி நிறைந்த அழகுடன் விளங்கினானோ, அதே அழகைப் பெற்றவனாக இப்போது விளங்கினான். அழகை அடிப்படையாகக் கொண்டு எழுகிற உணர்வின் மூலமாக நிகழும் காதல் என்ற கலைக்குத் தலைவன் மன்மதன். இந்த மன்மதனைப் போலவே நிகரற்ற அழகு நரவாண தத்தனிடம் அமைந்திருந்தது. இளமைக்கே உரிய பருவ உணர்ச்சிகளும் உள்ளக் கனிவும் நரவாண தத்தனுடைய தோற்றத்தில் புலப்பட்டன. அவனது நடையில் பெருமிதம் செறிந்திருந்தது. முகத் தோற்றத்தில் இளமை என்ற அந்தப் பருவத்தின் தத்துவமே அழகு வடிவமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் தான் படைப் பயிற்சிக்காகப் பழகிக் கொண்டிருந்த யானை மேல் ஏறி கோசாம்பி நகரத்திலுள்ள சில முக்கியமான வீதிகளின் வழியாகச் சென்று கொண்டிருந்தான் நரவாண தத்தன். அப்போது 'கார்மேகக் கூட்டங்களின் திரண்ட கருமைக்கு மேலே எழுந்து காட்சியளிக்கும் முழு வெண்மதி போலத் தோற்றமளிக்கின்றான், யானை மேல் வீதிகளில் உலா வந்த நரவாண தத்தன்' என்று கற்பனை செய்து உவமிக்கும் படியாக இருந்தது அவனது பவனி. பல தெருக்களைக் கடந்து அழகிலும் ஆடல் பாடலிலும் சிறந்த கணிகையர் வசிக்கும் தெருவிற்குள் நுழைந்தது நரவாணனின் யானை. கணிகையர் தெருவிடையே அவன் யானை மேற் சென்று கொண்டே இருக்கும் போது திடுமென்று ஒரு பெரிய வீட்டின் நிலா முற்றத்துச் சாளரத்திலிருந்து அழகிய பூம்பந்து ஒன்று அவனுடைய மெல்லிய மேலாடையில் வந்து விழுந்தது. மனத்தை மயக்கும் மோகனமும் இன்மணமும் மென்மையும் பொருந்திய அந்தப் பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு தலை நிமிர்ந்து, மேலே பந்து விழுந்த சாளரத்தை அண்ணாந்து பார்த்தான் நரவாணன். மேலே சாளரத்தை நோக்கி நிமிர்ந்த நரவாணனின் கண்கள் அங்கேயே நிலைத்துவிட்டன. சாளரத்தின் வழியாகக் கீழே யானை மேலிருக்கும் அவனைப் பருகிவிடுவது போல நோக்கிக் கொண்டிருந்தாள் ஓர் அழகிய நங்கை. மாடத்தின் இடையே வெகு உயரத்தில் அமைந்திருந்த சாளரத்தில் தெரிந்த அந்த அழகு ததும்பும் மதிமுகம் நரவாணனுக்குத் தெளிவாக விளங்காவிடினும் மங்கலாகத் தென்பட்டது. அதுவும் ஒரே ஒரு கணந்தான்! அடுத்த கணம் வெட்கம் மேலிட்டதனாலோ, பயத்தினாலோ அந்த யுவதி அங்கிருந்து மறைந்து விட்டாள். அவள் மறைந்த பின்பும் மயங்கிய மனத்தினனாய்த் தெரு, சூழ்நிலை முதலியவற்றையும் மறந்து அதே சாளரத்தைச் சற்று நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் நரவாணன். அவனது கையில் அதே மிருதுவான பூம்பந்து புரண்டதைப் போலவே, அவனுடைய நெஞ்சில் அவளைப் பற்றிய மென்மையான நினைவுகள் புரண்டன. சிறிது நேரம் அந்த மாளிகை, மாடம், சாளரம் முதலியவற்றைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அருகிலிருந்த சோலை ஒன்றை அடைந்தான் அவன். சோலையில் இடவகன் மகனாகிய கோமுகனைச் சந்தித்தான். எடுப்பாக ஏறி வந்த யானையிலிருந்து இறங்கி, பந்தும் கையுமாகத் தன்னை நோக்கி வரும் நரவாணனை வியப்பு கலந்த நோக்குடனே கோமுகன் வரவேற்றான். நரவாணன் கோமுகனுக்கருகில் அமர்ந்து பந்தை, அவனுக்குக் காட்டி நடந்த நிகழ்ச்சி முழுவதையும் அவனிடம் விவரித்தான். கோமுகன் அதைக் கேட்டவுடன் நரவாணனைப் பார்த்து மென்முறுவல் பூத்தான். நரவாணன் தான் கொண்டு வந்திருந்த பந்தை, அப்போதே கோமுகனிடம் அளித்து அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்களை அறிந்து வந்து தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். கோமுகன் அந்தப் பந்தைக் கையில் வாங்கிப் பார்த்தான். 'அதைப் பிடித்து விளையாடிய இளம்பெண், அப்படி விளையாடிய போது கைகளிர் ஈரச் சந்தனம் பூசிக் கொண்டிருந்தவளாயிருக்க வேண்டும்' என்று அனுமானிக்க அதில் இடமிருந்தது. பந்தில் அதைப் பிடித்திருந்த சிறு விரல்களின் சந்தனக் கறை படிந்திருந்தது. 'அந்தப் பந்தையும் அதன் மேல் படிந்திருக்கும் இளம் பெண் விரல்களின் சந்தனக் கறையையும் கொண்டே அதை விளையாடிய பெண் யார் என்பதைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம்' என்ற நம்பிக்கை கோமுகனுக்கு ஏற்பட்டது. அந்தப் பந்துக்குரியவளைக் கண்டுபிடித்து விடலாமென்று நரவாணனுக்குக் கோமுகன் ஆறுதலும் உறுதியும் கூறினான். கோமுகனைச் சந்தித்து நரவாணன் தன்னிடம் இருந்த பந்தை அளித்து, அதற்குரியவளைக் கண்டுபிடித்துக் கூறுமாறு வேண்டிக் கொண்டு சென்றதிலிருந்து, கோமுகன் தனது சிந்தனை, செயல் இரண்டினாலும் அதே வேலையை மேற்கொண்டு அலைந்தான். இதன் பயனாக அந்தப் பந்தைப் பற்றிய பெரும்பான்மையான விவரங்களை அதற்குரிய இடத்தில் சென்று விசாரித்துக் கோமுகன் கண்டறிந்து கொள்ள முடிந்தது. கோசாம்பி நகரத்துக் கணிகையர் தெரு, 'கலைகளின் இருப்பிடம்' என்று கூறுமாறு விளங்குவது. ஆடல், பாடல், முதலிய நுண்கலைகளையே வாழ்க்கையின் நிலையாகக் கொண்ட எண்ணற்ற பல கணிகையர் அங்கே வாழ்ந்து வந்தனர். அவர்களில் தலைமை சான்றவளாகவும் சிறப்பு மிக்கவளாகவும் விளங்கியவள் கலிங்கசேனை. அந்தக் கலிங்கசேனைக்கு ஒரு மகள் இருந்தாள். அழகுக்கென்றே படைப்புக் கடவுள் படைத்த பெண்ணாக இவளைக் கூறலாம். இவளுக்கு மதனமஞ்சிகை என்று பெயர். இவள் தன் வீட்டின் மேல் மாடத்திலுள்ள நிலா முற்றத்தின் உள்ளே பந்து விளையாடிக் கொண்டிருந்த போதுதான் கை தவறி மாடத்துச் சாளரத்தின் வழியாகப் பந்து கீழே விழுந்துவிட்டது. அவ்வாறு கீழே நழுவிய பந்துதான், தெருவில் யானை மேல் சென்று கொண்டிருந்த நரவாண தத்தன் மடியில் வந்து விழுந்தது. 'பந்து கீழே விழுந்து விட்டதே' என்று திகைத்தே அந்தப் பெண்ணும் சாளரத்திலிருந்து தெருவை எட்டிப் பார்த்திருக்கின்றாள். அதே சமயத்தில் நரவாணனும் மேலே சாளரத்தைப் பார்த்திருக்கின்றான். அப்போது இருவர் உள்ளமும் ஒன்றாகிக் கலந்திருக்கின்றன. இருவர் அன்பும் கலந்திருக்கின்றன. பந்து நழுவி விழுந்து காதலை படைத்திருக்கின்றது. 'நழுவியது பந்து ஒன்று மட்டுமல்ல! பார்த்த இரண்டு உணர்வுகளும் கூட நழுவியிருக்கின்றன' என்று கோமுகன் அறிந்து கொண்டான். பின்பு மதனமஞ்சிகையின் வடிவத்தைத் தான் அறிந்தபடி ஓவியமாக வரைந்து கொண்டு போய், நரவாண தத்தன் அந்த ஓவியத்தைக் காணும்படி செய்தான் கோமுகன். ஏற்கனவே சாளரத்தில் கண்டிருந்த வடிவத்தினிடம் தன் உள்ளத்தைப் பறி கொடுத்திருந்த நரவாணன், இப்போது ஓவியத்தில் அவள் வடிவத்தையே முற்றிலும் கண்டவுடன், அவள் மேல் பெருவிருப்பம் கொண்டான். காதல் ஆசையாக முதிர்ந்து வளர்ந்தது. 'மணந்தால் இத்தகைய எழிற் செல்வியையே மணக்க வேண்டும்' என்று நரவாணன் மனத்தில் எழுந்த ஆர்வம் முற்றிக் கனிந்தது. கோமுகனிடம் இந்த எண்ணத்தை மறைக்காமல் வெளிப்படையாகக் கூறி, இதற்கான உதவியையும் அவனே செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டான் நரவாணன். நரவாணனின் விருப்பத்தைத் தானே பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அன்பும் ஆசையும் கொண்டு, கோமுகன் அதைச் செய்வதற்கு இணங்கிப் புறப்பட்டான். |