உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) ... தொடர்ச்சி ... பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லித் தலைமகன் செலவு அழுங்கியது
நெஞ்சம்! நினைப்பினும், நெல் பொரியும் நீள் அத்தம், 'அஞ்சல்!' என ஆற்றின், அஞ்சிற்றால்; அஞ்சி, புடை நெடுங் காது உறப் போழ்ந்து அகன்று நீண்ட படை நெடுங் கண் கொண்ட, பனி. 76
பனி - கண்ணீர் "என் உள்ளம் இவளை அஞ்ச வேண்டாம் எனக் கூற எண்ணினாலும், பிரிவை நினைத்து அச்சம் கொண்டதை முகக்குறிப்பால் உணர்ந்த தலைவியின் கண்கள் நீரைக் கொண்டன. ஆதலால் இவளை நான் பிரிந்து செல்வது இயலாத ஒன்று" எனத் தலைவன் கூறினான். வினை முற்றிய தலைமகன் தலைமகளை நினைத்த இடத்து, தலைமகள் வடிவு தன் முன் நின்றாற் போல வந்து தோன்ற, அவ் வடிவை நோக்கிச் சொல்லி, ஆற்றுவிக்கின்றது
வந்தால்தான், செல்லாமோ - ஆர் இடையாய்! - வார் கதிரால், வெந்தால்போல் தோன்றும் நீள் வேய் அத்தம், தந்து ஆர் தகரக் குழல் புரள, தாழ் துகில் கை ஏந்தி, மகரக் குழை மறித்த நோக்கு? 77
குழல் - கூந்தல் மகரம் - சுறாமீன் குழை - காதணி "சிறிய இடையையும், மணமிக்க கூந்தல் அவிழ்ந்து தொங்க, நெகிழ்ந்த ஆடையை வலக்கையால் பற்றிக் கொண்டு, காதில் மகரக் குழையாட மருண்ட பார்வையுடன் தோன்றும் உன் தோற்றத்தைப் பார்த்தத் தலைவன், வெப்பம் மிகுந்த பாலை வழியில் திரும்பி உன்னிடம் செல்லும் செலவை ஒழிப்போமா? ஒழியோம். உன்னுடன் வருவோம். எனவே நீ இரங்க வேண்டாம்" எனக் கூறினான். 'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
ஒரு கை, இரு மருப்பின், மும் மத, மால், யானை பருகு நீர் பைஞ் சுனையில் காணாது, அருகல், வழி விலங்கி வீழும் வரை அத்தம் சென்றார், அழிவிலர் ஆக, அவர்! 78
மருப்பு - தந்தம் "பெரிய யானை தண்ணீர் இல்லாமல், அந்தச் சுனையை விட்டு அகலாமல் விழுந்து கிடக்கும் பாலை வழியில் சென்ற நம் தலைவர் எத்தகைய துன்பமும் இல்லாமல் திரும்புவாராக" எனத் தலைவி தோழிக்குக் கூறினாள். பருவம் காட்டி, தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
சென்றார் வருதல், செறிதொடி! சேய்த்துஅன்றால்; நின்றார் சொல் தேறாதாய், நீடு இன்றி, வென்றார் எடுத்த கொடியின் இலங்கு அருவி தோன்றும் கடுத்த மலை நாடு காண்! 79
கடுத்த - வேனிலால் வறண்ட "பல வளையலை அணிந்தவளே! வேனிலால் வறண்ட இம்மலை நாடு கார்கால மழையால் நீர் வீழ்ச்சி பெருகிக் காணப்படுகிறது. பொருளுக்காகப் பிரிந்த தலைவர் திரும்பி நம்மிடம் வருதல் தொலைவில் இல்லை. இன்று இரவில் தலைவனைக் கண்டு மகிழ்வாயாக" எனத் தோழி தலைவியிடம் கூறியது.
உருவ வேல் கண்ணாய்! ஒரு கால் தேர்ச் செல்வன் வெருவ, வீந்து உக்க நீள் அத்தம், வருவர், சிறந்து பொருள் தருவான் சேட் சென்றார் இன்றே; இறந்து கண், ஆடும், இடம். 80
வெருவி - அஞ்சி "வேலைப் போன்ற கண்களை உடையவளே! என் இடது கண் துடிக்கிறது. அச்சத்தைத் தரும் பாலை வழியில் பொருளைத் தேடிச் சென்ற தலைவர் இன்றே வருவார். ஆதலால் நீ துன்பம் உறாது இருப்பாயாக" எனத் தோழி தலைவியிடம் கூறினாள். தலைமகள் இற்செறிப்புக் கண்ட பின்னை, அவள் நீங்கிய புனம் கண்டு, ஆற்றானாய் மீள்கின்ற தலைமகன் சொல்லியது; சுரத்திடைச் சென்ற செவிலித்தாய் சொல்லியதூஉம் ஆம்
கொன்றாய்! குருந்தே! கொடி முல்லாய்! வாடினீர்; நின்றேன் அறிந்தேன்; நெடுங்கண்ணாள் சென்றாளுக்கு என் உரைத்தீர்க்கு, என் உரைத்தாட்கு, என் உரைத்தீர்க்கு,என் உரைத்தாள் மின் நிரைத்த பூண் மிளிர விட்டு? 81
பூண் - அணிகலம் மிளிர - ஒளிவிடும்படி "கொன்றை, குருத்த, முல்லை போன்ற மரம், கொடிகளே நீங்கள் வாடி இருக்கிறீர்கள். இதற்குக் காரணம் நீங்கள் தலைவியுடன் உரையாடியதே! நீங்கள் தலைவிக்கு யாது கூறினீர்? அவள் உமக்கு யாது கூறினாள்?" எனத் தலைவன் ஆற்றாமையால் வினவினான். தலைமகனது செலவுக் குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகினது இயற்கை கூறி, ஆற்றாது உடன்படுத்துவித்தது
ஆண் கடன் ஆம் ஆற்றை ஆயுங்கால், ஆடவர்க்குப் பூண் கடனாப் போற்றிப் புரிந்தமையால், பூண் கடனாச் செய் பொருட்குச் செல்வரால்; - சின்மொழி! - நீ சிறிது நை பொருட்கண் செல்லாமை நன்று. 82
நை - துன்பம் "தலைவியே! பொருள் தேடுதல் ஆண் மகனது கடமை என்று பெரியோர் வகுத்த நெறி. அத்தகைய கடமைக்காக நம் தலைவர் சென்றுள்ளார். ஆதலால் நீ சிறிது காலம் பிரிவால் வருந்தும் வகையில் புகாமல் ஆற்றியிருப்பது நல்லதாகும்" என்று தோழி உரைத்தாள். தலைமகன் செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது
செல்பவோ? சிந்தனையும் ஆகாதால்; நெஞ்சு எரியும்; வெல்பவோ, சென்றார் வினை முடிய? - நல்லாய்! இதடி கரையும்; கல் மா போலத் தோன்றும்; சிதடி கரையும், திரிந்து. 83
இதடி - காட்டெருமை சிதடி - வண்டு தலைவி தோழியிடம் "காட்டு எருமைகள் பிரிந்து, கற்கள் பரவி நிற்கும், சிள் வண்டுகள் திரியும் இடமான பாலை வழியில் எவரேனும் செல்வரா? செல்ல நினைத்த நெஞ்சு எரியும். பாலை வழியே காரியம் முடிய போய் மீளுதல் வெற்றியை அடைவரோ! அடையார். எனவே நம் தலைவர் பொருள்வயின் பிரிதல் பொல்லாத ஒன்றாகும்" எனத் தலைவி தோழியிடம் கூறினாள்.
கள்ளிஅம் காட்ட கடமா இரிந்து ஓட, தள்ளியும் செல்பவோ, தம்முடையார் - கொள்ளும் பொருள் இலர் ஆயினும், பொங்கெனப் போந்து எய்யும் அருள் இல் மறவர் அதர்? 84
கடமா - காட்டுப்பசு இரிந்து - பின்வாங்கி "வழிப்பறிக் கொள்ளையர் பாலை நிலத்தில் திடீரெனத் தோன்றி கொல்வர். கள்ளிச் செடிகள் வளர்ந்த காட்டில் காட்டுப் பசுக்கள் பின் வாங்கி ஓடுமாறு செல்வாரோ? செல்லமாட்டார். தலைவர் பொருள் தேட பாலை வழியில் செல்வது நல்லதாகாது" என்று தலைவி கூறினாள். தலைமகனைத் தோழி செலவு அழுங்குவித்தது
'பொருள் பொருள்' என்றார் சொல் பொன் போலப் போற்றி, அருள் பொருள் ஆகாமை ஆக; அருளான், வளமை கொணரும் வகையினான், மற்று ஓர் இளமை கொணர இசை! 85
இசை - புகழ் "எல்லாவற்றையும் இனிதாய் முடிக்க வல்ல பொருளே! தலைவியிடம் காட்ட வேண்டிய அருளும் வேண்டாத காரியமாய்ப் போயினும் போக. நீ பல வளங்களைத் தரும் பொருளைக் கொண்டு அன்பு மிக்கு பின்னால் நாம் பெற இயலாத வேறோர் இளமையை அங்கிருந்து கொண்டு வருவதற்கு உடன்படுவாயாக!" என்று தலைவனிடம் தோழி கூறினாள். தலைமகள் தோழிக்குச் செலவு உடன்படாது சொல்லியது
ஒல்வார் உளரேல், உரையாய்! - 'ஒழியாது, செல்வார்' என்றாய்; நீ சிறந்தாயே! - செல்லாது அசைந்து ஒழிந்த யானை, பசியால், ஆள் பார்த்து, மிசைந்து ஒழியும் அத்தம் விரைந்து. 86
அசைந்து - வருந்தி மிசைந்து - தின்று "தோழியே! பசியால் இறந்து கிடக்கும் யானையை உடைய பாலையில் நம் தலைவர் செல்வது உறுதி என்று மொழிந்தாய். நீ எனக்கு உண்மையான தோழியாய் ஆனாய் என்றாலும் ஆற்றுவார் எவரேனும் இருந்தால் அவர்க்குக் காதலற் செயலைச் சென்று கூறுவாயாக! என்னிடம் கூற வேண்டியதில்லை!" என்று தலைவி சொன்னாள். புணர்ந்து உடன்போக்கு நயப்பித்த தோழிக்குத் தலைமகள் உடன்பட்டுச் சொல்லியது
ஒன்றானும் நாம் மொழியலாமோ - செலவு தான் பின்றாது, பேணும் புகழான் பின்; - பின்றா வெலற்கு அரிதாம் வில் வலான், வேல் விடலை, பாங்காச் செலற்கு அரிதாச் சேய சுரம்? 87
பின்றா - பின் வாங்காத சேய்மை - தொலைவு விற்போரில் வல்லவனான தலைவன் துணையாய் வரப் பாலை நிலத்து வழி செல்வதற்கரிது என்று ஒன்றையேனும் நாம் சொல்லலாமோ? முடியாது. நம் தலைவனின் பின் செல்லுதல் நல்ல ஒழுக்கத்தினின்று தவறுவது இல்லையாம். புணர்ந்து உடன் போவான் ஒருப்பட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது
அல்லாத என்னையும் தீர, மற்று ஐயன்மார் பொல்லாதது என்பது நீ பொருந்தாய், எல்லார்க்கும், வல்லி ஒழியின், - வகைமை நீள் வாட் கண்ணாய்! - புல்லி ஒழிவான், புலந்து. 88
புல்லுதல் - தழுவுதல் "தலைவன் என்னைத் தழுவிக் கொண்டு செல்ல வேண்டிய உள்ளத்தில் மாறுபட்டு நீங்குவதற்கு வல்லவன். ஆனால் நம் ஐயன்மார் கூறும் ஆண்மைக்குப் பொருந்தாத மொழிகளின்று என்னையும் என் தலைவனையும் நீக்கி, எம்மிடம் தீமையுண்டு என்ற எண்ணத்தைப் போக்கி, எல்லாருக்கும் நல்லவளாய்ப் பொருந்தியிருப்பாயாக!" என்று தோழியிடம் தலைவி கூறினாள். சுரத்திடைச் சென்ற செவிலிக்குத் தலைமகனையும் தலைமகளையும் கண்டமை எதிர்ப்பட்டார் சொல்லி, ஆற்றுவித்தது
நண்ணி, நீர் சென்மின்; நமர் அவர் ஆபவேல், எண்ணிய எண்ணம் எளிதுஅரோ, எண்ணிய வெஞ்சுடர் அன்னானை யான் கண்டேன்; கண்டாளாம், தண்சுடர் அன்னாளை, தான். 89 "கதிரவனைப் போன்ற தலைவனை நானும், சந்திரனைப் போன்ற மங்கையை இவளும் பார்த்தோம். இவர்கள் நம்மவராயின் விரைந்து செல்வீராக" என்று எதிரில் வந்த கணவன் மனைவியர் செவிலியிடம் கூறினர். 'தன்னும் அவனும்' என்பதனுள், 'நன்மை தீமை' என்பதனால், நற்றாய் படிமத்தாளை வினாயது
வேறாக நின்னை வினவுவேன்; தெய்வத்தான் கூறாயோ? கூறும் குணத்தினனாய், வேறாக - என் மனைக்கு ஏறக் கொணருமோ? - எல்வளையைத் தன் மனைக்கே உய்க்குமோ, தான்? 90
உய்த்தல் - செலுத்துதல் "தேவராட்டியே! என் மகளை அழைத்துச் சென்ற தலைவன் என் இல்லத்தில் மணவிழாச் சிறப்புப் பொருந்துமாறு அவளைத் திரும்பக் கொணர்வானோ? அல்லது தன் வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பானோ? கூறுவாயாக" என்று நற்றாய் கூறினாள். தலைமகன் செலவு உடன்படாத தலைமகள் தோழிக்குச் சொல்லியது
கள்ளி, சார், கார் ஓமை, நார் இல் பூ நீள் முருங்கை, நள்ளிய வேய், வாழ்பவர் நண்ணுபவோ - புள்ளிப் பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்து, ஆண்டு, இருந்து உறங்கி, வீயும் இடம்? 91
வம்பு - புதிய வீதல் - உறங்குதல் "பருந்துகள் கழுகுகளுடன் வழியில் செல்பவரின் பொருளைப் பறித்துக் கொள்ள வேண்டி எதிர்பார்த்து கிடைக்காமையாலே உறங்கி விழுகின்றன. ஓமை மரங்களும், முருங்கை மரங்களும் மிக்க மூங்கில் புதர்களும் பொருந்தியுள்ளன. அப் பாலை வழியில் வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புவர் செல்ல நினைப்பாரோ? நினையார்!" என்று தலைவி தோழியிடம் சொன்னாள்.
செல்பவோ, தம் அடைந்தார் சீர் அழிய - சிள் துவன்றி, கொல்பபோல் கூப்பிடும்; வெங் கதிரோன் மல்கி, பொடி வெந்து, பொங்கி, மேல் வான் சுடும்; கீழால் அடி வெந்து, கண் சுடும்; -ஆறு? 92
துவன்றி - நெருங்கி "சிள் என்ற வண்டுகள் ஓசையால் மற்றவரைக் கொல்வது போல் ஒலிக்கும்படியானதும், சூரியன் வெம்மை மிகுந்து வானத்தைக் கொதிக்கச் செய்யும் தரையில் செல்பவர் அடிகள் வேவ, அவர்தம் கண்களைச் சுடச் செய்வதுமான பாலை நிலத்தின் வழியே தம்மை ஆதரவாகக் கொண்ட மனைவியர் சிரப்பழியத் துன்பம் அடையுமாறு கணவர் செல்வாரோ?" என்று தோழியிடம் தலைவி கூறினாள். 4. முல்லை பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது
கருங் கடல் மாந்திய வெண் தலைக் கொண்மூ இருங் கடல் மா கொன்றான் வேல் மின்னி, பெருங் கடல்- தன்போல் முழங்கி, தளவம் குருந்து அணைய, என்கொல், யான் ஆற்றும் வகை? 93
மாந்திய - பருகிய கொண்மூ - மேகம் "மாமரத்தின் வடிவம் உடைய சூரனை அழித்த முருகனின் வேலைப் போன்று மின்னி, கடல் அலை ஆரவாரம் செய்தலால், செம்முல்லைக் கொடிகள் குருந்த மரத்தைச் சேர்ந்து படரும் கார் காலத்தைக் கண்டு நான் பொறுத்துக் கொள்வது எவ்வாறு?" எனத் தலைவி தோழியிடம் கூறினாள்.
பகல் பருகிப் பல் கதிர் ஞாயிறு கல் சேர, இகல் கருதித் திங்கள் இருளை, பகல் வர வெண் நிலாக் காலும் மருள் மாலை, - வேய்த்தோளாய்! - உள் நிலாது, என் ஆவி ஊர்ந்து. 94
வேய் - மூங்கில் திங்கள் - சந்திரன் "பகற்பொழுது மறைந்து, நிலவானது தோன்றி ஒளியை வெளியிடும் அத்தகைய மயக்கத்தை அளிக்கக் கூடிய மாலைப் பொழுதில் என் உயிர் வெளிப்பட்டு என்னுள் நிற்பதில்லை!" எனத் தலைவி தோழியிடம் கூறினாள். தோழி தலைமகளைப் பருவம் காட்டி வற்புறுத்தியது
மேல் நோக்கி வெங் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி, கான் ஓக்கம் கொண்டு, அழகா - காண், மடவாய்! மான் நோக்கி!- போது ஆரி வண்டு எலாம் நெட்டெழுத்தின்மேல் புரிய, சாதாரி நின்று அறையும், சார்ந்து. 95
சாதாரி - முல்லைப் பாட்டு அறையும் - ஒலிக்கும் "இளமையும் மருண்ட பார்வையும் உடைய தலைவியே! சூரியன் மேல்முகமாக உட்கொண்ட மேகம் கீழ்முகமாக பெய்த மழையால் முல்லை செழித்தது. வண்டுகள் நீண்ட ஓசையுடைய எழுத்தின் ஒலியின் மீது விருப்பம் கொண்டு ஒலிக்கச் 'சாதாரி' என்ற பண்ணானது அந்த ஒலியின் சார்பாகக் கொண்டு நிலைத்து ஒலிக்கும். அதை நீ காண்பாய்!" எனத் தோழி தலைவியிடம் கூறியது. மாலைப் பொழுது கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
இருள் பரந்து ஆழியான்தன் நிறம்போல், தம்முன் அருள் பரந்த ஆய் நிறம் போன்று, மருள் பரந்த பால் போலும் வெண் நிலவும், - பை அரவு அல்குலாய்! - வேல் போலும், வீழ் துணை இலார்க்கு. 96
பை - பாம்பின் படம் அரவு - பாம்பு தலைவி தோழியை நோக்கி "கண்ணன் தன் வலிமையைப் பெருக்க பகைவர்களின் யானையின் மீது செலுத்திய சக்கரத்தைப் போன்று சூரியன் மேற்கில் மறைய இருள் எங்கும் சூழ்ந்தது. பலராமனின் வெண்மையான நிறம் போன்றும் பாலின் நிறத்தைப் போன்றும் விளங்கும் சந்திரனும், விரும்பப்படும் காதலர்களைப் பக்கத்தில் கொள்ளாத மங்கையர்க்கு வேலைப் போன்று துன்பத்தைத் தரும்" எனக் கூறினாள்.
பாழிபோல் மாயவன் தன் பற்றார் களிற்று எறிந்த ஆழிபோல் ஞாயிறு கல் சேர, தோழியோ! மால் மாலை, தம்முன் நிறம்போல் மதி முளைப்ப, யான், மாலை ஆற்றேன், இனைந்து. 97
கல் - மலை பற்றார் - பகைவர் மதி - சந்திரன் தலைவி தோழியை நோக்கி, "கதிரவன் மேற்கில் மறைய மயக்கத்தைத் தரும் மாலைக் காலத்தில் பலராமனின் வெண்மையான நிறம் போன்று சந்திரன் தோன்ற, அதனால் நான் பெற்ற மயக்கத்தை நினைத்து ஆற்ற முடியாதவளாக உள்ளேன்" என்றாள். 'பருவம் அன்று' என்று வற்புறுத்திய தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது
வீயும் - வியன் புறவின் வீழ் துளியான், மாக் கடுக்கை; நீயும் பிறரொடும் காண், நீடாதே; - ஆயும் கழல் ஆகி, பொன் வட்டு ஆய், தார் ஆய், மடல் ஆய், குழல் ஆகி, கோல் சுரியாய், கூர்ந்து. 98
கடுக்கை - கொன்றை கழல் - கழற்சிக்காய் சுரி - துணை "கொன்றை மரமானது நீர்த்துளிகளால் சிறுமியர் விளையாடும் காயாகத் தோன்றி, பொன்னால் செய்யப்பட்ட சூதாடு கருவியாக முதிரச் செய்து, பூமாலை போன்று மலர்ந்து, பெண் கூந்தல் போல காய்க்கச் செய்து முடிவில் கொம்பாய் மாறி அழியச் செய்துவிடும். நீ உடனே சென்று பார்ப்பாயாக!" எனத் தலைவி தோழியிடம் கூறியது.
'பொன் வாளால் காடு இல் கரு வரை போர்த்தாலும் என்? வாளா' என்றி; - இலங்கு எயிற்றாய்! - என் வாள்போல் வாள் இழந்த, கண்; தோள் வனப்பு இழந்த; மெல் விரலும், நாள் இழந்த, எண் மிக்கு, நைந்து. 99
எயிறு - பல் வாள் - ஒளி "மழையால் மரம் செடி மூடப்பட்டாலும் இதனால் என்ன பயன்? இது கார்காலம் அன்று எனச் சொல்லி நிற்கின்றாய். என் மேனியின் ஒளியும் கண்களும் ஒளி இழந்தன. தலைவனைப் பிரிந்தமையால் என் விரல்கள் நாட்களை எண்ணித் தேய்கின்றன. என் தோள்களும் அழகை இழந்துவிட்டன" என்று தலைவி தோழியிடம் கூறினாள். பருவம் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது
பண்டு இயையச் சொல்லிய சொல் பழுதால்; மாக் கடல் கண்டு இயைய மாந்தி, கால்வீழ்த்து, இருண்டு, எண் திசையும் கார் தோன்ற, காதலர் தேர் தோன்றாது; ஆகவே, பீர் தோன்றி, நீர் தோன்றும், கண். 100
மாந்தி - பருகி பீர் - அச்சம் "மழை பெய்து காணப்பட்டும், தலைவனது தேர் தோன்றவில்லை. முன்பு நம்மைப் பிரிந்து சென்றபோது அவருக்கு இணங்க வேண்டும் என்பதற்காகக் கார் காலத்தில் திரும்பி வருவேன் என்று கூறிய உறுதிமொழி தவறியது. என் கண்களும் நீரைத் தோற்றுவிக்கின்றன" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
வண்டுஇனம் வெளவாத ஆம்பலும், வார் இதழான் வண்டுஇனம் வாய் வீழா மாலையும், வண்டுஇனம் ஆராத பூந் தார் அணி தேரான்தான் போத வாராத நாளே, வரும். 101
தார் - மாலை "வண்டுகள் மொய்க்காத ஆம்பல் என்ற பெயரையுடைய புல்லாங்குழலும், வண்டுகள் தேனைப் பருக எண்ண விரும்பாத மாலைப் பொழுதும் வண்டுகள் விரும்பாத நெட்டிப் பூக்கள் முதலியவற்றால் செய்த மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட தேரையுடைய தலைவன் என்னிடம் வராத நாட்களிலேயே அவை என்னை வந்து துன்புறுத்தும்" எனத் தோழிக்குத் தலைவி சொன்னாள்.
மான் எங்கும் தம் பிணையோடு ஆட, மறி உகள, வான் எங்கும் வாய்த்து வளம் கொடுப்ப, கான் எங்கும் தேன் இறுத்த வண்டோடு, 'தீ, தா' என, தேராது, யான் இறுத்தேன், ஆவி இதற்கு. 102
பிணை - பெண் மான் மறி - மான் குட்டி "தோழியே! முல்லை நிலத்தில் ஆண் மான் பெண் மான் மற்றும் குட்டிகளுடன் கூடிக் குதிக்க, மழை பெய்து வளம் உண்டாக்கக் காடெல்லாம் வண்டுகள் வண்டுகளுடன் சேர்ந்து தீ, தா என்று ஒலித்ததால், நான் தெளிவின்றிக் கார் வந்தும் தலைவர் வரவில்லையே என்று மயங்கி என் உயிரைக் கடமையாய்த் தந்து வருந்துகின்றேன்" என்று தலைவி கூறியது. 'பருவம் அன்று' என்று வற்புறுத்தின தோழிக்குத் தலைமகள், 'பருவமே' என்று அழிந்து சொல்லியது
ஒருவந்தம் அன்றால், உறை முதிரா நீரால்; கருமம்தான் கண்டு அழிவுகொல்லோ? - 'பருவம்தான் பட்டின்றே' என்றி; - பணைத் தோளாய்! - கண்ணீரால் அட்டினேன், ஆவி அதற்கு. 103
ஒருவந்தம் - உறுதி "மூங்கில் போன்ற தோள்களை உடைய தோழியே! கார் காலம் என்பது வரவே இல்லை என்று சொல்லி என்னைத் தேற்றுகிறாய். அந்தப் பருவம் அல்லாப் பருவத்துக்கு என் உயிரைப் பருவம் என்று எண்ணிக் கண்ணீரை நீராய்க் கொண்டு தாரை வார்த்துத் தந்தேன்" என்று தலைவி கூறியது. பருவம் கண்டு அழிந்த கிழத்தி கொன்றைக்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது
ஐந்து உருவின் வில் எழுதி, நால் திசைக்கும், முந்நீரை, இந்து உருவின், மாந்தி, இருங் கொண்மூ, முந்து உருவின் ஒன்றாய், உரும் உடைத்தாய், பெய் வான்போல், 'பூக்கு' என்று, கொன்றாய்! கொன்றாய், எற் குழைத்து. 104
கொண்மூ - சோலை "கொன்றை மரமே! ஈச்சம் பழத்தினைப் போன்ற நிறத்தினை உடைய மேகம் இடி இடித்து மழை பெய்கிறது. நீ என்னைக் கொல்வதைப் போல, தழைத்துப் பூத்தலைச் செய்வேன் என்று பூ பூத்து என்னைக் கொன்று விடுகின்றாய்" என்று கொன்றை மரத்தைப் பார்த்துக் கூறினாள். பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார், கொல்லை தரு வான் கொடிகள் ஏறுவ காண் - முல்லை பெருந் தண் தளவொடு தம் கேளிரைப்போல், காணாய், குருந்தம் கொடுங்கழுத்தம் கொண்டு. 105
கேளிர் - உறவினர் "என் தோழியே! மழையினால் முல்லைச் செடிகள், செம்முல்லைச் செடிகளுடன் கூடிக் குருந்த மரங்களைத் தம் உறவான கணவரை மங்கையர் அணைத்து இருப்பதைப் போல அம்மரங்கள் ஒடுங்கி நிற்குமாறு உறுதியாய்ப் பற்றி ஏறுவதை நீ காண்பாயாக!" என்று தோழி தலைவியிடம் கூறினாள். வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது
என்னரே, ஏற்ற துணை பிரிந்தார்? 'ஆற்று' என்பார் அன்னரே ஆவர், அவரவர்க்கு; முன்னரே வந்து, ஆரம், தேம் கா வரு முல்லை, சேர் தீம் தேன் கந்தாரம் பாடும், களித்து. 106
கா - சோலை "தோழியே! சந்தனச் சோலையில் வண்டுகள் கூடிக் காந்தாரம் என்ற பண்ணைப் பாடுகின்றன. இம்மை மறுமை துணையாய்க் கொண்ட காதலியரைப் பிரிந்தவர் கொடியவர். அவ்வாறு பிரிந்து வருந்தும் காதலியை ஆற்றி இரு என்று கூறுபவர் பிரிந்த காதலரை விடக் கொடியவர். எனவே என்னை ஆற்றி இரு என்று கூறிய நீ கொடியவள்" என்று குறிப்பால் தலைவி கூறினாள். பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது
கரு உற்ற காயாக் கண மயில் என்று அஞ்சி, உரும் உற்ற பூங் கோடல் ஓடி, உரும் உற்ற ஐந் தலை நாகம் புரையும் அணிக் கார்தான் எம்தலையே வந்தது, இனி. 107
கணம் - தொகுதி புரைய - ஒப்ப தோழி தலைவியைப் பார்த்து, "ஐந்து தலை நாகம் கருக் கொண்ட காயாம் பூவை ஆண்மயில் தோகை என்று எண்ணி அஞ்சியது. இடியால் தாக்கப் பெற்ற பூக்களை உடைய வெண் காந்தளின் பக்கத்தில் ஓடி அந்த வெண் காந்தளைப் போன்றே காணப்படும். அத்தகைய கார்காலமானது இனி நம்மிடத்தையே குறிக்கோளாகக் கொண்டு வருந்திட வந்தது" என்று கூறினாள். 'பருவம் அன்று' என்று வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாது சொல்லியது
கண் உளவாயின், முலை அல்லை, காணலாம்; எண் உளவாயின், இறவாவால்; எண் உளவா, அன்று ஒழிய, நோய் மொழிச் சார்வு ஆகாது; - உருமுடை வான் ஒன்று ஒழிய, நோய் செய்தவாறு. 108
உரும் - இடி தலைவி, "தோழியே! மழையால் மலர்ந்த முல்லைச் கொடிகள் கண் இல்லாமையால் காணவில்லை. ஆயின் தோழி, நீ அந்த முல்லை போன்றவள் அல்லள் உனக்குக் கண் இருப்பது உண்மையானால், என் துன்பம் கண்டு நீ சிரிப்பதை விட்டு, அதைக் காணலாம். காதலன் இத்தனை நாளில் வருவேன் எனக் குறிப்பிட்டுச் சென்ற நாள் கணக்குத் தவறாதிருக்க இஃது அந்தக் கார்ப் பருவம் இல்லையென்றால் இந்த மழையானது தொடர்ந்து பெய்யாது. என்னை ஆற்றுவிக்க உன் உள்ளத்தினின்று தோன்றியவையே அல்லாது எனக்கு ஆதரவாக இராது" என்றாள். பருவம் கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
என்போல் இகுளை! இருங் கடல் மாந்திய கார் பொன்போல் தார் கொன்றை புரிந்தன; - பொன்போல் துணை பிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர்; தோன்றார், இணை பிரிந்து வாழ்வர், இனி. 109
மாந்திய - பருகிய "என் உயிர் போன்றவளே! முகில்கள் மழை பொழியும் பொருட்டு பெரிய கடல் நீரைப் பருகி கருத்து காணப்பட்டன. கொன்றை மலர்கள் வரிசையான மாலையாய்க் கொண்டு விளங்கின. காதலர் திரும்பி வந்து காதலியுடன் இன்புறுத்துகின்றனர். பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற தலைவர் திரும்பி வராமல் இருக்கின்றார்" என்று தலைவி கூறினாள்.
பெரியார் பெருமை பெரிதே! - இடர்க்கண் அரியார் எளியர் என்று, ஆற்றா, பரிவாய், தலை அழுங்க, தண் தளவம் தாம் நகக் கண்டு, ஆற்றா, மலை அழுத, சால மருண்டு. 110
தளவம் - செம்முல்லை இடர் - துன்பம் "தோழியே! நம் துன்பத்தைப் பார்த்து செம்முல்லைச் செடிகள் அற்ப குணத்தால் நகைத்தவாறு பூத்தன. மலைகளோ தலைவர் தொலைவில் உள்ளாரே என்று எண்ணி மழை நீரைக் கண்ணீராய்க் கொண்டு வாய்விட்டு அழுதன. எனவே பெருந்தன்மைக் குணம் உண்மையில் கொண்டாடத் தக்கவையாகவே விளங்கும்" என்று தலைவி கூறினாள்.
கானம் கடி அரங்கா, கைம்மறிப்பக் கோடலார், வானம் விளிப்ப, வண்டு யாழாக, வேனல், வளரா மயில் ஆட, வாட்கண்ணாய்! சொல்லாய், உளர் ஆகி, உய்யும் வகை. 111
கடி - சிறந்த வான் - ஒளி "முல்லை நிலம் நாடக அரங்காகவும், முகில் இடிக்குரலான பாடலைப் பாடவும், வண்டுகள் இசைக்கவும், மயில் ஆடவும், வெண்காந்தள் கைகளை அசைக்கவும், பொருந்திய இக்கார் காலத்தில் காதலரைப் பிரிந்த காதலியர் இறவாமல் நிலை பெற்றுப் பிழைக்கக் கூடிய வழி இருந்தால் கூறு!" என்று தலைவி தோழியிடம் கூறியது. பருவம் காட்டி, தோழி, தலைமகளை வற்புறுத்தியது
தேரோன் மலை மறைய, தீம் குழல் வெய்து ஆக, வாரான் விடுவானோ? - வாட்கண்ணாய்! - கார் ஆர் குருந்தோடு முல்லை குலைத்தனகாண்; நாமும் விருந்தோடு நிற்றல், விதி. 112
வெய்து - கொடியது தோழி தலைவியிடம் "சூரியன் மறைந்து மாலைக் காலம் உண்டானது. ஆயரின் குழல் இசை கொடியதாக விளங்கின. குருத்த மரங்களும், முல்லைக் கொடிகளும் பூத்தன. இது தலைவன் குறிப்பிட்ட பருவமாகும். நம் தலைவன் வாராமல் கைவிடுவானோ! கைவிடான் அவன் வரவை நோக்கி விருந்து செய்து காத்திருத்தல் நம் கடமையாகும்" என்று கூறினாள். பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
பறி, ஓலை, மேலொடு கீழா, இடையர் பிறியோலை பேர்த்து, விளியா, கதிப்ப, நரி உளையும் யாமத்தும் தோன்றாரால் - அன்னாய்! - விரி உளை மான் தேர் மேல் கொண்டார். 113
யாமம் - இரவு விளி - அழைத்தல் "என் தாய் போன்றவளே பறி என்ற படுக்கை கீழாகக் கொண்டு ஆட்டு மந்தையைக் காப்பவர் ஆயர்கள். அவர்கள் ஆடுகளைப் பிரிக்கக்கூடிய கருவியான பிறியோலையை அசைத்துக் காட்டி அழைத்து அதட்ட, ஆடுகளைக் கொல்ல எண்ணிய நரிகள் அச்சம் கொண்டு கதறுகின்ற நள்ளிருள் பொழுதாக ஆகியும் குதிரை பூட்டப்பட்ட தேர்மீது சென்ற தலைவர் திரும்ப வந்தாரில்லை!" என்று தலைவி தோழியைப் பார்த்துச் சொன்னாள். பருவம் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, தோழி குருந்த மரத்திற்குச் சொல்லுவாளாய், 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது
பாத்து, படு கடல் மாந்தி, பல கொண்மூ, காத்து, கனை துளி சிந்தாமை, பூத்து, - குருந்தே! - பருவம் குறித்து, இவளை, 'நைந்து வருந்தே' என்றாய், நீ வரைந்து. 114
கொண்மூ - சோலை துளி - மழைத்துளி "குருந்த மரமே! மழை நன்றாகப் பெய்யாமலேயே மலர்களை நிரப்பி, இது கார்ப் பருவமோ! என்று எண்ணும்படி என் தலைவியைத் தணித்து உடல் மெலிந்து துன்பம் அடையச் செய்தாய்" என்று தோழி தலைவியின் காதில் விழும்படி இது கார்ப்பருவம் அன்று என்று கூறினாள். வினை முற்றி மீண்ட தலைமகன், தலைமகட்குத் தூது விடுகின்றான், தூதிற்குச் சொல்லியது
படும் தடங் கண் பல் பணைபோல் வான் முழங்கல் மேலும், கொடுந் தடங் கண் கூற்று மின் ஆக, நெடுந் தடங் கண் நீர் நின்ற நோக்கின் நெடும் பணை மென் தோளாட்கு, 'தேர் நின்றது' என்னாய், திரிந்து. 115
கூற்று - எமன் பணை - மூங்கில் "மேகம் இடிக்க மின்னல் தலைவியை வருத்த அதைப் பொறுக்காத தோழியே! என் தேர் திரும்பி வந்து நின் இல்லத்து வாயிலில் நிற்கிறது எனக் கூறுவாயாக" என்று தலைவன் தோழியிடம் கூறியது. பருவம் கண்டு, ஆற்றாளாய தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி தான் ஆற்றாளாய்ச் சொல்லியது
குருந்தே! கொடி முல்லாய்! கொன்றாய்! தளவே! முருந்து ஏய் எயிறொடு தார் பூப்பித்திருந்தே, அரும்பு ஈர் முலையாள் அணி குழல் தாழ் வேய்த்தோள் பெரும் பீர் பசப்பித்தீர், பேர்ந்து. 116
எயிறு - பல் வேய் - மூங்கில் "குருந்த மரமே! கொடி முல்லையே! கொன்றை மரமே! முல்லைச் செடியே! தலைவியின் அழகிய கூந்தல் தாழ்ந்து புரள்கின்ற மூங்கில் போன்ற தோள்களை, பீர்க்கம் பூவின் நிறம் போல பசலை திரும்பவும் பூக்கச் செய்தீர்! இது என்ன கொடுமை" என்று தோழி கூறியது. தலைமகளைத் தோழி பருவம் காட்டி, வற்புறுத்தியது
கத நாகம் புற்று அடையக் கார் ஏறு சீற, மத நாகம் மாறு முழங்க, புதல் நாகம் பொன் பயந்த, வெள்ளி புறமாக; - பூங்கோதாய்! - என் பசந்த, மென் தோள், இனி? 117
கதம் - கோபம் கோதை - கூந்தல் "நாகங்கள் புற்றில் சேரும்படியாக இடி இடிக்க, அதற்கு எதிராக மத யானை ஒலிக்கவும், புதர்கள் சூழப்பட்ட புங்கைமரம் பூக்களைப் பூக்கவும் கார்காலம் வந்தது. காதலரும் வருவார். மென்மையான தோள்கள் எக்காரணத்தால் பசலைப் பூத்தன" என்று தலைவியைத் தோழி ஆற்றினாள். 'பருவம் அன்று' என்று, வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்துச் சொல்லியது
கார் தோன்றிப் பூவுற்ற காந்தள் முகை, விளக்குப் பீர் தோன்றித் தூண்டுவாள் மெல் விரல்போல்; நீர் தோன்றி, தன் பருவம் செய்தது கானம்; - தடங் கண்ணாய்! - 'என் பருவம் அன்று' என்றி, இன்று. 118
முகை - அரும்பு கானம் - முல்லை "பீர்க்கம் பொன் நிறம் போன்ற மலர்களையும், காந்தள் அரும்புகள் கார்த்திகை மலர் மீது பொருந்தியும், முல்லைநிலம் மழையால் நிரம்பியும் தனக்குரிய கார்ப்பருவத்துடன் விளங்குகின்றன. அவ்வாறு இருக்க தலைவர் வருவதாகக் கூறிய கார்ப்பருவம் அன்று என்று நீ எவ்வாறு கூறுகின்றாய்" என்று தலைவி தோழியிடம் வினவுதல்.
'உகவும் கார் அன்று' என்பார், ஊரார்; அதனைத் தகவும் தகவு அன்று என்று ஓரேன்; தகவேகொல்? வண் துடுப்பு ஆய், பாம்பு ஆய், விரல் ஆய், வளை முரி ஆய், வெண் குடை ஆம், - தண் கோடல் வீந்து. 119
ஓரேன் - அறியேன் கோடல் - வெண்காந்தள் "என் தோழியே! இந்த ஊரில் உள்ளவர் கார்ப் பருவம் அன்று என்று உரைப்பர். வெண்காந்தள் துடுப்பைப் போல் அரும்பி பின்பு பாம்பைப் போல் அரும்பு நீளப் பெற்று, கைவிரல் போன்று விரிந்து வளையும் தளிர் போன்ற இதழ்களைக் கொண்டு கீழ் முகமாக மடிந்து வெண்மையான குடை போன்று காணப்பட்டுக் கார்ப் பருவம் இது என்பதை வலியுறுத்தும். அங்ஙனம் இருக்க இதனைக் கார்ப் பருவம் அன்று என்பது தக்கதோ?" எனத் தோழியை நோக்கித் தலைவி வினவினாள்.
'பீடு இலார்' என்பார்கள் காணார்கொல்? - வெங் கதிரால் கோடு எலாம் பொன் ஆய்க் கொழுங் கடுக்கை, காடு எலாம், அத்தம் கதிரோன் மறைவதன்முன், வண்டொடு தேன், துத்தம் அறையும், தொடர்ந்து. 120
பீடு - பெருமை கோடு - கிளை "கொன்றை மலர்கள் பூக்க முல்லைக்காடு எங்கும் வண்டுகள் கூடித் துத்தம் என்ற பண்ணைப் பாடும். இதைப் பருவம் அல்லாப் பருவத்தினைக் கண்டு வருந்தும் இழிகுணம் உடையவர்கள் என நம்மைக் குறைகாணும் இந்த ஊரவர் இது கார்ப் பருவம் தான் என்று அறிய மாட்டாரோ!" என்று தலைவி தோழியை வினவினாள்.
ஒருத்தி யான்; ஒன்று அல பல் பகை, என்னை விருத்தியாக் கொண்டன - வேறாப் பொருத்தின், மடல் அன்றில், மாலை, படு வசி, ஆம்பல், கடல், அன்றி, கார், ஊர், கறுத்து. 121
வசி - மழை கறுத்து - சினந்து "தோழி! நான் ஒருத்தியாய் இருந்தும், துணையை விட்டுப் பிரிந்த அன்றில் பறவையும், மாலையும், மழையும், ஆம்பல் குழல் ஓசையும், கடலும், கார்முகிலும், எனக் கூறப்பட்ட பல பகைகளும் என் மீது ஊர்ந்து என்னை வருத்துவதே தம் தொழிலாகக் கொண்டுள்ளன. இதற்கு நான் என் செய்வேன்" என்று தலைவி கூறினாள்.
கானம் தலைசெய, காப்பார் குழல் தோன்ற, ஏனம் இடந்த மணி எதிரே, வானம் நகுவதுபோல் மின் ஆட, நாணா என் ஆவி உகுவது போலும், உடைந்து. 122
ஏனம் - பன்றி "முல்லைத் தழைக்க, ஆயர் புல்லாங்குழல் ஓசை எழுப்ப, மின்னல் ஒளிவிட இந்நிலையைக் கண்டும் இறவாமையால் நாணம் இல்லாத என் உயிர் தூளாகி உதிர்ந்து விழுவது போல் உள்ளன" என்று தலைவி தோழியிடம் கூறினாள். குறித்த பருவத்தின்கண் வந்த தலைமகனைப் புணர்ந்திருந்த தலைமகள் முன்பு தன்னை நலிந்த குழல் ஓசை அந்திமாலைப் பொழுதின்கண் கேட்டதனால், துயர் உறாதாளாய்த் தோழிக்குச் சொல்லியது
இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும்; உம்மையே ஆம் என்பார் ஓரார்காண்; - நம்மை எளியர் என நலிந்த ஈர்ங்குழலார், ஏடி! தெளியச் சுடப்பட்டவாறு! 123
ஓரார் - ஆராயாதார் ஏடி - தோழி "தோழி! குழல் ஓசை பலரும் அறிய சுட்டுத் துளைப்பட்ட முறையைக் காண்பாய்! ஒருவன் செய்த தீவினை இப்பிறவியிலேயே பயனைத் தரும். இதை அறியாதவரே இத்தீவினை மறுபிறவியில் பயன் அளிக்கும் என்று கூறுவர்" என்று தலைவி தோழியிடம் கூறியது. 5. மருதம் பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
செவ்வழி யாழ்ப் பாண்மகனே! சீர் ஆர் தேர் கையினால் இவ் வகை ஈர்த்து உய்ப்பான் தோன்றாமுன், - இவ் வழியே ஆடினான், ஆய் வயல் ஊரன்; மற்று எங்கையர் தோள் கூடினான், பின் பெரிது கூர்ந்து. 124
செவ்வழி - மருத நிலப்பண் "யாழை உடைய பாணனே! மருத நிலத்துக்குரிய தலைவன் என் மகன் பிறப்பதற்கு முன்னம் இவ்வீட்டில் தங்கினான். என் மகன் பிறந்த பின்பு எனக்குத் தங்கையரான பரத்தையர் தோள்களில் மிகவும் விரும்பிப் புணர்ந்து மகிழலானான். ஆதலால் நான் தலைவனுக்குத் தகுந்த தலைவி அல்லேன்!" எனக் கூறி வாயில் மறுத்தாள்.
மாக் கோல் யாழ்ப் பாண்மகனே! யானைப் பாகனார் தூக்கோல் துடியோடு தோன்றாமுன், தூக்கோல் தொடி உடையார் சேரிக்குத் தோன்றுமோ, -சொல்லாய்! - கடி உடையேன் வாயில் கடந்து? 125
கோல் - கைத்தடி "பாணனே! மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டு யானைக்கு ஓட்டும் கருத்தாவான என் மகனார் கொட்டும் தூக்கோல் துடியுடனே அவன் பிறப்பதற்கு முன் தலைவனால் மணந்து கொள்ளப்பட்ட வாழ்வையுடைய என் வீட்டு வாயிலைத் தாண்டித் தூய்மை வளைவுகளையுடைய வளையல் அணிந்த பரத்தையரின் இருப்பிடத்துக்குப் போய்க் காணப்படுகிறாரே! என் சொல்லுக்கு மாறுண்டாயின் கூறுவாய்!" என்று தலைவி சொன்னாள்.
விளரி யாழ்ப் பாண்மகனே! வேண்டா; அழையேல்; முளரி மொழியாது, உளரிக் கிளரி, நீ, பூங் கண் வயல் ஊரன் புத்தில் புகுவதன்முன், ஆங்கண் அறிய உரை. 126
முளரி - முட்செடி "யாழைக் கையில் கொண்ட பாணனே! விரும்பப்படாத செய்தியைக் கொண்டு வராதே! கொடிய சொற்களை இங்குக் கூறாதே! இந்த இடம் விட்டுப் புறப்படுவாயாக! தலைவன் பரத்தையர் இல்லத்தில் புகுவதற்கு முன்பு, அங்குச் சென்று, அப்பரத்தையர் அறிந்து மகிழும்படி அவர்களுக்குச் சொல்வாயாக!" என்று தலைவி வாயில் மறுத்தாள்.
மென் கண் கலி வயல் ஊரன்தன் மெய்ம்மையை எங்கட்கு உரையாது, எழுந்து போய், இங்கண் குலம் காரம் என்று அணுகான்; கூடும் கூத்து என்றே அலங்கார நல்லார்க்கு அறை. 127
கலித்தல் - ஒலித்தல் தலைவி பாணனை நோக்கி, "மருத நிலத்தூரனின் உண்மைச் சொற்களை இங்கு எமக்குக் கூறியவாறு காலத்தைத் தழைக்க வேண்டா! இந்த உலகத்தில் நல்ல குலத்தில் வந்த மனையாளைச் சேர்ந்து களித்தல் புண்ணுக்கு இடும் கார மருந்தைப் போன்று கொடியது என்று, தலைவன் நினைத்து அவளை நெருங்காது, பரத்தையர் புணர்ச்சி இன்பம் தரும் என்று எண்ணி அவர்களுடன் சேர்ந்து வாழும்படியான, குடும்பத்திற்கு ஏற்றமில்லாத அலங்காரப் பொம்மையாகிய, தம்மை அலங்கரித்தலையே பணியாகக் கொண்ட பரத்தையர்க்கு நீ சொல்வாயாக!" எனக் கூறினாள். (இது முதல் துறைக் குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை)
செந்தாமரைப் பூ உற நிமிர்ந்த செந்நெல்லின் பைந் தார், புனல்வாய்ப் பாய்ந்து ஆடுவாள், அம் தார் வயந்தகம்போல், தோன்றும் வயல் ஊரன் கேண்மை நயந்து அகன்று ஆற்றாமை நன்று. 128
பைந்தார் - இளமையான அழகிய மாலை "செந்தாமரை மலருடன் ஒன்றாக வளர்ந்து நிற்கின்ற செந்நெல் பயிரினது பசுமையான கதிர்க்குலைகளையுடைய ஆற்று நீரில் குதித்து விளையாடும் பரத்தையரின் மார்பில் அணிந்துள்ள அழகிய மாலையின் வயப்பட்ட அவளது மனம் போல விளங்கும் தலைவனின் நட்பினின்றும் நீங்கித் துன்பத்துடன் வாழ்தல் நல்லதாகும்!" என்று தலைவி சொன்னாள்.
வாடாத தாமரைமேல் செந்நெல் கதிர் வணக்கம் ஆடா அரங்கினுள் ஆடுவாள் ஈடு ஆய புல்லகம் ஏய்க்கும் புகழ் வயல் ஊரன்தன் நல் அகம் சேராமை நன்று. 129
புல்லகம் - வண்டு ஆடா அரங்கினுள் - அரங்கேற்ற மேடை "மலர்ந்த தாமரை மலரிடத்தே செந்நெற் கதிர்கள் வணங்கி ஏங்குமாறு கூத்தியர் ஆடும் ஆற்று நீரில் நீராடுபவளாக உள்ள பரத்தையர் பலரும் தழுவும் தலைவனின் மார்பைத் தழுவாமை நல்லதே ஆகும்" என்று தலைவி தனக்குச் சொல்லியது.
இசை உரைக்கும், என் செய்து? இர நின்று அவரை; வசை உரைப்பச் சால வழுத்தீர்; பசை பொறை மெய்ம் மருட்டு ஒல்லா - மிகு புனல் ஊரன்தன் பொய்ம் மருட்டுப் பெற்ற பொழுது. 130
சால - மிகுதி பசை - அன்பு வசை - பழி "மருத நிலத்தாரின் பொய்யான மொழிகளைக் கேட்டது போதும். என்னிடம் தலைவன் செய்யும் காதல் செயல்களே அவனது புகழைத் தெரிவிப்பவை. புணர்ச்சி எண்ணி நிற்பவரை உம் புகழ்ச் சொற்களே இகழ்ச்சியை எடுத்துக் காட்டும்படி போற்றிக் கூறாது சொல்லுங்கள்" என்று தலைவி வாயில் வந்தவனிடம் கூறியது.
மடங்கு இறவு போலும் யாழ்ப் பண்பு இலாப் பாண! தொடங்கு உறவு சொல் துணிக்க வேண்டா; முடங்கு இறவு பூட்டுற்ற வில் ஏய்க்கும் பூம் பொய்கை ஊரன் பொய் கேட்டு உற்ற, கீழ் நாள், கிளர்ந்து. 131
முடங்கு - வளைந்த "மடங்கிய இறால் மீனைப் போன்று யாழையுடைய பண்புகள் இல்லாத பாணனே! தலைவன் பொய் மொழிகளைக் கேட்டு அறிந்து சென்ற நாட்செய்திகளை எடுத்துச் சொல்லி எமக்குள் தொடங்கப் பெற்றுள்ள உறவின் தன்மையை உன் சொற்களால் துணிய வேண்டியது இல்லை. யாம் நன்றாய் அறிவோம்!" எனத் தலைவி பாணனிடம் கூறினாள்.
எங்கையர் இல் உள்ளானே பாண! நீ பிறர் மங்கையர் இல் என்று மயங்கினாய்; மங்கையர் இல் என்னாது இறவாது, இவண் நின் இகந்தேகல் பின்னார் இல் அந்தி முடிவு. 132
அந்தி - மாலை "பாணனே! பிறரான பரத்தையர் வீடு என்று எண்ணி நீ வந்து விட்டாய். பரத்தையின் வீட்டில் மண விழாத் தொடங்கும் வேளையாம். என் இல்லத்தைப் பரத்தையர் இல்லம் என்று எண்ணாது நீங்கி பரத்தையர் மனைக்குச் செல்வாயாக!" என்று தலைவி பாணனிடம் கூறினாள்.
பாலை யாழ்ப் பாண் மகனே! பண்டு நின் நாயகற்கு மாலை யாழ் ஓதி வருடாயோ? காலை யாழ் செய்யும் இடம் அறியாய்; சேர்ந்தாய்; நின் பொய்ம்மொழிக்கு நையும் இடம் அறிந்து, நாடு. 133
சேந்தல் - சுருங்கல் நையும் - நெகிழும் "யாழை உடைய பாணனே! முன்பு உன் தலைவனுக்கு மாலைப் பண்ணைப் பாடித் தொண்டு செய்தது இல்லையோ! காலைப் பண்ணைப் பாடும் நிலையைத் தெரியாதவனாய் வாடாத உன் பொய்ச் சொற்களுக்கு மனம் நெகிழும்படியான இடத்தை அறிந்து செல்வாயாக!" என்று தலைவி பாணனிடம் கூறினாள்.
கிழமை பெரியோர்க்குக் கேடு இன்மைகொல்லோ? பழமை பயன் நோக்கிக் கொல்லோ? கிழமை குடி நாய்கர் தாம் பல பெற்றாரின் கேளா, அடி நாயேன் பெற்ற அருள். 134
கிழமை - உரிமை "பெரியவர்க்கு உரியார் எனப் பாராட்டும் தன்மை நீங்காது போக்கினாலோ, பழையவை மக்களுக்குப் பலவகையிலும் பயன்படுபவை என நினைத்துப் பார்த்தாலோ, பல குடிமக்கள் தலைவர்களைப் பெற்றவரைப் போலத் தாழ்மை கொண்ட யான், உறவு போன்று வாயிலாக வருவதற்குக் காரணமாய் அமைந்த தலைவி அருளானது எனக்கு வாய்த்தது" என்று விறலி தோழியிடம் கூறினாள்.
என் கேட்டி ஏழாய்! இரு நிலத்தும் வானத்தும், முன் கேட்டும் கண்டும், முடிவு அறியேன்; பின் கேட்டு, அணி இகவா நிற்க, அவன் அணங்கு மாதர் பணி இகவான், சாலப் பணிந்து. 135
அணங்கு - தெய்வம் "பெண்ணே! தலைவன் தலைவியின் பின் போய் அவள் ஏவியதைச் செய்கிறான். அவள் ஆணையைத் தட்டாமல் நடக்கிறான். இதற்கு முன் இத்தகைய நிலையை நான் அறியேன்" என்று காமக்கிழத்தி தோழியிடம் கூறினாள்.
எங்கை இயல்பின் எழுவல்; யாழ்ப் பாண் மகனே! தம் கையும் வாயும் அறியாமல், இங்கண் உளர உளர, உவன் ஓடிச் சால, வளர வளர்ந்த வகை. 136
சால - மிகுதி "பாணனே! என் மகன் மழலைச் சொல்லால் மகிழ்ந்து, வளர்ந்த முறையால், பரத்தையுடன் கூடிய தலைவன் போன்று கிளர்ச்சி அடைந்து வாழ்கிறேன். எனக்கு ஒரு குறையும் இல்லை" என்று தலைவி கூறினாள்.
கருங் கோட்டுச் செங் கண் எருமை, கழனி இருங் கோட்டு மென் கரும்பு சாடி, வரும் கோட்டால் ஆம்பல் மயக்கி, அணி வளை ஆர்ந்து, அழகாத் தாம் பல் அசையின, வாய் தாழ்ந்து. 137
கோடு - கொம்பு "எருமை வயல்களில் விளைந்த கரும்பை மோதி, கொம்புகளால் ஆம்பல் மலர்களைக் கலக்கி, குவளை மலர்களைத் தின்று அசைப் போடுவதைக் காண்பாயாக" என்று தலைவி தோழிக்குக் கூறினாள்.
கன்று உள்ளிச் சோர்ந்த பால் கால் ஒற்றி, தாமரைப்பூ அன்று உள்ளி அன்னத்தை ஆர்த்துவான், சென்று உள்ளி, 'வந்தையா!' என்னும் வகையிற்றே - மற்று இவன் தந்தையார் தம் ஊர்த் தகை. 138
ஆர்தல் - உண்ணுதல் "கன்றை நினைத்து எருமைகள் மடிசொரிய, அப்பாலானது தாமரை மலரில் உள்ள அன்னப்பறவைகள் உண்பிக்க வேண்டி வாய்க்காலாக ஓடி தாமரைக் குளத்தை வந்தடைந்ததைக் கண்டவர் இஃதென்ன அழகிய காட்சி என்று ஆச்சரியப்படும் மேன்மையுடையது" என்று தலைவி மகனைப் புகழ்வதுபோல் தந்தையைப் (தலைவனை) புகழ்ந்து தோழியிடம் கூறினாள்.
மருதோடு காஞ்சி அமர்ந்து உயர்ந்த நீழல், எருதோடு உழல்கின்றார் ஓதை, குருகோடு தாராத் தோறு ஆய்ந்து எடுப்பும் தண் அம் கழனித்தே - ஊராத் தேரான் தந்தை ஊர். 139
ஓதை - ஒலி குருகு - நாரை தாரா - வாத்து "மேல் அமர்ந்து செல்ல முடியாத சிறு தேரினை உடைய என் மகனின் தந்தையின் ஊர், மருத மரங்களுடன் காஞ்சி மரங்கள் வானளாவிய நிழலில் உழவர்கள் இருக்க, நாரை, வாத்துகள் ஒலியுடன் கலந்து காணும் குளிர்ந்த வயல்களுடன் கூடியதாகும்" என்று தலைவி தோழியிடம் கூறியது.
மண் ஆர் குலை வாழையுள் தொடுத்த தேன் நமது என்று உண்ணாப் பூந் தாமரைப் பூ உள்ளும்; - கண் ஆர் வயல் ஊரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள், மயல் ஊர் அரவர் மகள். 140
வண்ணம் - அழகு "மண்ணில் படிந்த குலையினை உடைய வாழை மரத்திடையே வைக்கப்பெற்ற தேனினை நம்முடையது என்று உண்டு மயக்கமுற்ற மருத நிலத்தூரனின் மகள் மருத நிலத்தலைவன் அழகைக் கண்டு மாலையைத் தொடுப்பாள்" என்று தோழி செவிலிக்குக் கூறியது.
அணிக் குரல்மேல் நல்லாரோடு ஆடினேன் என்ன, மணிக் குரல்மேல் மாதராள் ஊடி, மணிச் சிரல் பாட்டை இருந்து அயரும் பாய் நீர்க் கழனித்தே - ஆட்டை இருந்து உறையும் ஊர். 141
சிரல் - சிச்சிலிப் பறவை அயர்தல் - வாடுதல் "மணியொலி போன்ற குரலையுடைய மேன்மையான தலைவி, அழகிய பரத்தையுடன் நான் விளையாடினேன் என்று நினைத்து ஊடல் கொண்டு உள்ளத்தை அடக்கி இருக்கிறாள். அத் தலைவியின் ஊரானது சிச்சிலிப் பறவை பாடும் வயல்களுடன் கூடியது" என்று தலைவன் பாணனிடம் கூறினான்.
தண் கயத்துத் தாமரை, நீள் சேவலைத் தாழ் பெடை புண் கயத்து உள்ளும் வயல் ஊர! வண் கயம் போலும் நின் மார்பு, புளி வேட்கைத்து ஒன்று; இவள் மாலும் மாறா நோய் மருந்து. 142
கயம் - குளம் மால் - மயக்கம் "குளிர்ந்த குளத்தில் மலர்ந்துள்ள தாமரை மலரிலேயுள்ள பெரிய ஆண் அன்னப்பறவைக்குக் கீழ்ப்படியும் இயல்புடைய பெண் அன்னப்பறவை நீரில் இருந்து நினைக்கும்படியான மருதநிலத் தலைவனே! உன் மார்பானது உன்னுடன் கூடி வாழ்கின்ற இவளது மயக்கத்தை நீங்காத காமநோய்க்கு மருந்தாகிப் புளியம் பழத்தினிடம் மக்கள் அடையும் ஆசை போன்று மேலும் விரும்பும் மேன்மை உடையதாகும்" என்று தோழி தலைவனிடம் கூறினாள்.
நல் வயல் ஊரன் நறுஞ் சாந்து அணி அகலம் புல்லி, புடை பெயரா மாத்திரைக்கண், புல்லியார் கூட்டு முதல் உறையும் கோழி துயில் எடுப்ப, பாட்டு முரலுமாம், பண். 143
புல்லுதல் - தழுவுதல் "வளமிக்க மருதத் தலைவனின் மணமிக்க சந்தனக்குழம்பு அணியப்பெற்ற மார்பின் கண்ணே நம் தலைவி அன்புடன் கூடியிருந்து, விட்டு விலகாத வேளையில், நெற்கூடு உச்சியில் தங்கியிருக்கும் சேவல் கூவி எழுப்ப, அதனால் எழுந்த வண்டினங்கள் இசையுடன் பாடலைப் பாடத் தொடங்கிவிடும்" என்று தோழி செவிலிக்குக் கூறினாள்.
அரத்தம் உடீஇ, அணி பழுப்பப் பூசி, சிரத்தையால் செங்கழுநீர் சூடி, பரத்தை நினை நோக்கிக் கூறினும், 'நீ மொழியல்' என்று, மனை நோக்கி, மாண் விடும். 144
உடீஇ - உடுத்தி "தலைவ! பரத்தை வசை கூறினாலும் ஒன்றும் கூறாது திரும்புக!" என்று தோழர்கள் அறிவுரை கூறினார்கள். மேலும் "நீ வாழும் இந்த இல்லத்தை நோக்கி உன் குலம் விளங்க மேன்மை அடைய தலைவி சேடியை அனுப்பி இருக்கிறாள். அதைக் காண்பாயாக" என்று தலைவனிடம் தோழர்கள் கூறினர்.
பாட்டு அரவம், பண் அரவம், பணியாத கோட்டு அரவம், இன்னிவை தாம் குழும, கோட்டு அரவம் மந்திரம் கொண்டு ஓங்கல் என்ன, மகச் சுமந்து, இந்திரன்போல் வந்தான், இடத்து. 145
அரவம் - ஒலி ஓங்கல் - ஓங்குதல் "பாக்களைப் பாடும் ஒலியும், இசையும், கொம்பான குழலின் ஒலியும், இசைக்கும் இந்த நேரத்தில், வாசுகி சுற்றிக் கடைந்த மந்திரமலையைப் போன்று தன் மகனைப் பெற்ற தலைவன், இந்திரனைப் போல் தலைவியின் இடப்பாகத்தில் வந்து நின்றான்" என்று தோழி கூறினாள்.
மண் கிடந்த வையகத்தோர் மற்றுப் பெரியராய் எண் கிடந்த நாளான் இகழ்ந்து ஒழுக, பெண் கிடந்த தன்மை ஒழிய, தரள முலையினாள் மென்மை செய்திட்டாள், மிக. 146
தரளம் - முத்து வையகம் - உலகம் "சான்றோர் புகழும்படி குறுகிய வாழ்நாளில் பெண்ணின் பெருமை நிலைத்திருக்கும்படி முத்து மாலையை அணிந்த தலைவி, எளிமை, இனிமை, அன்பு இவற்றை இல்வாழ்க்கையாகக் கொண்டு வாழ்கிறாள்" என்று தலைவனிடம் வாயிலோன் கூறினான்.
செங் கண் கருங் கோட்டு எருமை சிறுகனையா அங்கண் கழனிப் பழனம் பாய்ந்து, அங்கண் குவளை அம் பூவொடு செங் கயல் மீன் சூடி, தவளையும் மேற்கொண்டு வரும். 147
பழனம் - மருதம் "எருமை கண்களைப் போன்ற குவளை மலர்களுடனே, சிவந்த கயல் மீன்களையும் சூடிக் கொண்டு தவளையை முதுகில் சுமந்து வைத்துக் கொண்டு வருகிறது என்னே வியப்பு" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
இருள் நடந்தன்ன இருங் கோட்டு எருமை, மருள் நடந்த மாப் பழனம் மாந்திப் - பொருள் நடந்த கல் பேரும் கோட்டால் கனைத்து, தம் கன்று உள்ளி, நெல் போர்பு சூடி வரும். 148
மா - சிறந்த கனை - ஒலி "இருள் நடப்பது போல் கொம்புகள் கொண்ட எருமைகள், கண்டோர்க்கு மன மயக்கத்தை தரும் குவளை மலரை உண்டு, தன் கன்றுகளை நினைத்து நெற்கதிர்ப் போர்களைச் சூடிக் கொண்டு வரும்" என்று தலைவி தோழியிடம் கூறினாள்.
புண் கிடந்த புண்மேல் நுன் நீத்து ஒழுகி வாழினும், பெண் கிடந்த தன்மை பிறிதுஅரோ; பண் கிடந்து செய்யாத மாத்திரையே, செங்கயல்போல் கண்ணினாள் நையாது தான் நாணுமாறு. 149
கயல் - மீன் "தலைவ! நீ மனு என்ற அரசனின் அறநெறியானது உன்னைவிட்டு நீங்கும்படி தீய ஒழுக்கத்தைக் கொண்டு வாழ்ந்தாலும் உன் கயல் போன்ற கண்களை உடைய தலைவி ஊடலை மேற்கொண்டு வருந்தாமல் நாணம் அடையும் வகையில், பெண்மையாகிய பேரரசுக் குணம் அவளிடம் பொருந்திக் கிடக்கும் தன்மை இவ்வுலகத்தில் காண முடியாத புதியதாய் உள்ளது" என்று பெரியவர்கள் தலைவனிடம் உரைத்தது.
கண்ணுங்கால் என்கொல்? கலவை யாழ்ப் பாண் மகனே! எண்ணுங்கால், மற்று இன்று; இவளொடு நேர் எண்ணின், கடல் வட்டத்து இல்லையால்; கல் பெயர் சேராள்; அடல் வட்டத்தார் உளரேல் ஆம். 150
கல் - நடுகல் "பாணனே! இவளுக்கு ஒப்பானவரை எண்ணிப் பார்த்தால் கடல் சூழ்ந்த இவ்வுலகில் காண இயலாது. நடுகல்லிடத்தே பெயர் சேரப்பெறாத மேல் உலகப் பெண்கள் இருப்பாராயின் இவளுக்கு ஒப்பாவார்" என்று தலைவன் பாணனிடம் உரைத்தான்.
சேறு ஆடும் கிண்கிணிக் கால் செம் பொன் செய் பட்டத்து, நீறு ஆடும் ஆயது இவன் நின் முனா; வேறு ஆய மங்கையர் இல் நாடுமோ? - மாக் கோல் யாழ்ப் பாண் மகனே! - எங்கையர் இல் நாடலாம் இன்று. 151
நீறாகும் - புழுதிபடியும் மா - சிறந்த "பாணனே! காலில் கிண்கிணி அணிய, நெற்றிச் சுட்டி புழுதி படும்படி எம்மகனுடன் வீட்டின் முன், பரத்தையுடன் விளையாடுவது போல் தலைவன் விளையாட விரும்பான். ஆதலால் நீ வீணாக வாயில் வேண்டாதே" என்று தலைவி கூறினாள்.
முலையாலும், பூணாலும், முன்கண் தாம் சேர்ந்த விலையாலும், இட்ட குறியை உலையாது நீர் சிதைக்கும் வாய்ப் புதல்வன் நிற்கும், முனை; முலைப்பால் தார் சிதைக்கும்; வேண்டா, தழூஉ. 152
பூண் - அணிகலம் தார் - மாலை "தலைவ! பரத்தையர்கள் தம் மார்பாலும் அணிகளாலும் உன் மார்பில் பொறுத்திசைத்த குறியானது கெடாத வண்ணம் என் முன் வந்து நிற்கின்றாய். உமிழ்நீரைச் சிந்தும் வாயை உடைய என் மகன் உண்ணும் கொங்கையின் பால், உன்னைத் தழுவினால், வெளிப்பட்டு அழிந்து விடும். எனவே என்னைத் தழுவிக் கொள்ளுதல் வேண்டியது இல்லை" என்று தலைவி கூறினாள்.
துனி, புலவி, ஊடலின் நோக்கேன்; தொடர்ந்த கனி கலவி காதலினும் காணேன்; முனிவு அகலின், நாணா நடுக்கும்; நளி வயல் ஊரனைக் காணா, எப்போதுமே, கண். 153
முனிவு - வெறுப்பு "தொடர்புடைய இன்பமாகிய கனியினைத் தலைவனுடன் கலந்த அந்த அன்பு மிக்க காலத்திலும் காணப் பெற்றதில்லை. ஆகவே மருதத் தலைவனை என் கண்கள் எப்போதும் காண விரும்பவில்லை. அப்படி இருக்கவும், வருத்தம் மிக்க மனவேறுபாட்டைப் பொதுவான ஊடலைப் போல் நினைத்துப் பேசுதல் எதற்காக" என்று தலைவி தோழியிடம் வினவினாள். சிறப்புப் பாயிரம்
முனிந்தார் முனிவு ஒழிய, செய்யுட்கண் முத்துக் கனிந்தார் களவியல் கொள்கைக்கு அணிந்தார்- இணை மாலை ஈடு இலா இன் தமிழால் யாத்த திணைமாலை கைவரத் தேர்ந்து.
முனிந்தார் - வெறுத்தார் அகப்பொருளாகிய களவியற் கொள்கைகளை வெறுத்தவர்களின் வெறுப்பு விலகி விரும்பும்படி இனிய முத்துக்களைக் கொண்டு தொடுத்த மாலையினைப் போன்று, ஈடு இணை இல்லாத இன்ப வெண்பாக்களால் கோத்தது இந்த திணை மாலையாகும். |