திருவள்ளுவர்

இயற்றிய

திருக்குறள்

உரையாசிரியர் : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 10 ...

பொருட்பால்

அங்கவியல்

91. பெண்வழிச் சேறல்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது. 901
     தன் மனையாள் விரும்புகிறபடியே வாழ்கின்றவர், சிறந்த அறப்பயன்களையும் அடையார்; பொருள் செய்தலுக்கு முற்படுகின்றவர் இகழ்ந்து ஒதுங்கும் பொருளும் அதுவே.

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும். 902
     தன் ஆண்மையைப் பேணாது, மனையாளது பெண்மையையே விரும்புகிறவன் செல்வம், இவ்வுலகத்து ஆண்பாலர்க்குப் பெரியதோர் நாணமாக வெட்கம் தரும்.

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும். 903
     தன் இல்லாளிடத்தே தாழ்ந்து போவதற்கு ஏதுவான ஒருவனது அச்சம், அ·து இல்லாத நல்லோர்களிடையே செல்லும் காலத்தில், எப்போதும் நாணத்தையே தரும்.

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று. 904
     தன் மனையாளுக்கு அஞ்சி வாழும் மறுமைப்பயனை இல்லாத ஒருவனுக்கு, செயலைச் செய்யும் செயலாண்மை இருந்த போதிலும், அது நல்லோரால் மதிக்கப் படாது.

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். 905
     தன் மனையாளுக்கு எப்போதும் அஞ்சுகின்றவன், தான் தேடிய பொருளேயானாலும், அதனால் நல்லவர்களுக்கு நல்ல செயல் செய்வதற்கும் அச்சங் கொள்வான்.

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர். 906
     தன் இல்லாளின் மூங்கில் போன்ற தோளைக் கண்டதும் அஞ்சுகிறவர்கள், வீரத்தால் சுவர்க்கம் பெற்ற அமரரைப் போல வாழ்ந்தாரானாலும், ஆண்மையற்றவரே.

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. 907
     தன் இல்லாள் ஏவியபடியே செய்து திரிகின்ற ஒருவனது ஆண் தன்மையைக் காட்டிலும், நாணத்தையுடைய அவளது பெண் தன்மையே மேலானதாகும்.

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட் டாங்கு ஒழுகு பவர். 908
     தம் மனையாள் விரும்பிய படியே நடப்பவர்கள், தம்முடைய நண்பர்களின் குறைகளைத் தீர்க்கமாட்டார்கள்; மறுமைக்கு உதவும் எந்த அறத்தையுமே செய்ய மாட்டார்கள்.

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல். 909
     அறச்செயலும், அது முடிப்பதற்கு ஏதுவான பொருளைச் செய்தலும், பிறவான இன்பச் செயல்களும், தம் மனையாள் ஏவலைச் செய்வாரிடத்தில் உள்ளனவாகா.

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல். 910
     கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சமும், அதனால் ஆகிய செல்வமும் உடைய வேந்தர்க்கு, மனையாளைச் சேர்ந்து நடப்பதனால் உண்டாகும் பேதைமை உண்டாகாது.

92. வரைவின் மகளிர்

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். 911
     அன்பால் விரும்பாமல், அவன் தரும் பொருளையே விரும்பும் மகளிரது, அவனையே அன்பால் விரும்பியது போலப் பேசும் பேச்சும், அவனுக்குப் பின்னர்த் துன்பம் தரும்.

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல். 912
     ஒருவனிடமுள்ள பொருளின் அளவை அறிந்து, அதனை அடையும் வரை பண்பைப் பற்றிப் பேசும் பண்பில்லாத மகளிரது நடத்தையை, ஆராய்ந்து விட்டு விடுக.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று. 913
     கொடுக்கும் பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்யான முயக்கமானது, பிணம் எடுப்பவர் இருட்டறையில் முன் அறியாத பிணத்தைத் தழுவியது போலாகும்.

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர். 914
     இன்பமாகிய பொருளை இகழ்ந்து, பொருளையே விரும்பும் பொதுமகளிரது இழிந்த இன்பத்தை, அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவாளர் விரும்பார்.

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர். 915
     இயற்கையான மதிநலத்தால் மாட்சிமைப்பட்ட அறிவினை உடையவர்கள், பொருள் தருவார்க்கெல்லாம் பொதுவான ஆசைகாட்டும் மகளிரது இழிவான நலத்தைத் தீண்டார்.

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். 916
     தம் அழகால் செருக்கடைந்து, தம் புன்மையான நலத்தை, விலை தருவாரிடம் எல்லாம் பரப்பும் பொது மகளிர் தோளினை, தம் புகழை நினைக்கும் உயர்ந்தோர் தீண்டமாட்டார்.

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள். 917
     நெஞ்சிலே பொருள் மேல் ஆசைகொண்டு, அதைப் பெறக் கருதிப் பொருள் தருபவரோடு உடலால் கூடியிருக்கும் மகளிரது தோள்களை, நெஞ்சமில்லாதவர்களே சேர்வர்.

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. 918
     வஞ்சித்தலில் வல்ல மகளிரது முயக்கத்தை, அவ் வஞ்சனையை ஆராய்ந்து அறியும் அறிவுடையவர் அல்லாத பிறருக்கு, ‘அணங்குத் தாக்கு’ என்று சொல்வார்கள்.

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு. 919
     உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் எவரையும், விலை தந்தால் தழுவுகிற மகளிரது மெல்லிய தோள்கள், அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகம் ஆகும்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. 920
     எப்போதும் கவர்த்த மனத்தையுடைய மகளிரும், கள்ளும், சூதும், என்னும் மூன்று தொடர்புகளும், திருமகளால் கைவிடப்பட்டவருக்கு நெருங்கிய நட்பு ஆகும்.

93. கள்ளுண்ணாமை

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார். 921
     கள்ளின் மேல் ஆசை கொண்ட அரசர்கள், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தம் முன்னோரால் அடைந்திருந்த புகழ் என்னும் ஒளியையும் இழந்து விடுவார்கள்.

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார். 922
     அறிவை மயக்கும் கள்ளை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக; நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்பினால் கள்ளை உண்பாராக!

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி. 923
     எது செய்தாலும் உவப்படையும் தாயின் முன்பும் கள்ளுண்டு களித்தல் இன்னாததாகும்; அவ்வாறானால், குற்றம் எதனையுமே பொறாத சான்றோர்களின் முன் என்னவாகும்.

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. 924
     ‘கள்’ என்னும் யாவரும் இகழும் பெருங்குற்றத்தை உடையவரை, ‘நாண்’ என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள், பார்ப்பதற்கும் அஞ்சி முகத்தைத் திருப்பிக் கொள்வாள்.

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல். 925
     தன் கைப்பொருளைக் கொடுத்துத் தன்னுடலை மறக்கும் அறியாமையைக் கொள்ளுதல், அவன் பழவினைப் பயனையே தனக்குக் காரணமாக உடையதாகும்.

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். 926
     உறங்கினவர், அறிவிழந்திருப்பதால் செத்தாரினும் வேறானவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் எப்போதும் நஞ்சு உண்டவரின் வேறானவர் அல்லர்.

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர். 927
     கள்ளை மறைவாக உண்டு, அதன் களிப்பினாலே தம் அறிவை இழந்தவர்கள், உள்ளூரில் வாழ்பவரால், அவர் மறைவை அறிந்து எள்ளி நகையாடப் படுவர்.

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். 928
     கள்ளை உண்டபொழுதே, முன் ஒளித்த குற்றம் மிகுதியாக வெளிப்படுமாதலால், மறைவாகக் கள்ளை உண்டு, ‘யான் உண்டு அறியேன்’ என்று பொய் கூறுவதைக் கைவிடுக.

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று. 929
     கள்ளுண்டு களித்தவனைக் காட்டி ‘இ·து நினைக்கும் ஆகாது’ என்று கூறித் தெளிவித்தல், நீரினுள் மூழ்கினான் ஒருவனை விளக்கினால் தேடுவதைப் போல் முடியாத செயலாகும்.

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. 930
     கள்ளுண்பவன், தானுண்ணாதபோது, உண்டு களித்த பிறனைக் காண்பான் அல்லவோ! அப்படிக் காணும் போது, தன் நிலையும் இப்படித்தான் என்று நினைக்க மாட்டானோ?

94. சூது

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. 931
     தான் வெல்பவன் ஆனாலும் சூதாடலை விரும்ப வேண்டாம். அவ் வெற்றியால் வரும் பொருளும், தூண்டில் இரும்பினை இரையென்று நினைத்து மீன் விழுங்கினாற் போன்றதே.

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. 932
     பெறுவோம் என்னும் ஆசையால் நூற்றுக்கணக்காக இழந்து வறியவராகும் சூதருக்கும், பொருளால் நன்மைகளை அடைந்து வாழ்கின்ற நெறியும் ஒன்று உளதாகுமோ?

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும். 933
     உருளும் சுவற்றின் மீது கட்டப்படும் பந்தயப் பொருளை இடைவிடாது சொல்லிச் சூதாடுமாயின், ஈட்டிய பொருளும், வருவாயும் எல்லாம் எதிரிகளிடம் போய்ச் சேர்ந்துவிடும்.

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல். 934
     தன்னை விரும்பியவருக்குப் பலவகைத் துன்பங்களையும் செய்து அவரிடமுள்ள புகழையும் கெடுக்கும் சூதைப் போல், வறுமையைத் தரக்கூடியது வேறு எதுவும் இல்லை.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார். 935
     முன்காலத்திலே செல்வம் உடையவராயிருந்தும், தற்போது இல்லாதவரானவர்கள், சுவற்றினையும், அ·தாடும் களத்தினையும், கைத்திறனையும், மேற்கொண்டு விடாதவரே.

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார். 936
     சூதென்னும் முகடியினாலே விழுங்கப்பட்டவர்கள், இம்மையிலே வயிறார உணவைப் பெறுவதுடன், மறுமையில் நரகத் துன்பத்திலும் சிக்கி வருந்துவார்கள்.

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின். 937
     நல்லது செய்வதற்கு என்னும் காலமானது சூதாடு களத்தில் கழியுமானால், அது, தொன்று தொட்டு வந்த அவன் செல்வத்தையும் நல்ல பண்புகளையும் கெடுத்துவிடும்.

பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது. 938
     பொருளையும் கெடுத்து, பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்து, சூதானது, ஒருவனை இருமையும் துன்பத்திலே ஆழ்த்தி விடும்.

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின். 939
     சூதாடலை வேடிக்கை என்று கருதிச் செய்வானானாலும், ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்னும் இவை ஐந்துமே, அவனை அடையாமற் போய்விடும்.

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர். 940
     இழக்கும் போதெல்லாம், மேன்மேலும் விருப்பங் கொள்ளுகின்ற சூதனைப் போல், உடம்பும் துன்பத்தால் வருந்த வருந்த மேன்மேலும் அதனை விரும்பும்.

95. மருந்து

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. 941
     ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும், மருத்துவ நூலோர் வாதம் முதலாக எண்ணி வகுத்த மூன்றும் நோயைச் செய்யும்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். 942
     முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு ‘மருந்து’ என்னும் எதுவுமே வேண்டாம்.

அற்றால் அறவறிந்து உண்க அ·துடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. 943
     முன்னுண்டது அற்றபின், உண்பதனையும் அளவாக உண்ண வேண்டும்; அதுவே பெறுவதற்கரியதான இந்த மானிட யாக்கையை நெடுங்காலத்திற்குக் காப்பாற்றும் வழி.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. 944
     முன்னுண்டது அற்றதை அறிந்து, மிகவும் பசித்து, உடலிலே மாறுபாட்டைச் செய்யாத உனவுகளைத் தெரிந்தெடுத்து, உண்டு வருதல் வேண்டும்.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. 945
     உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவையும், தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவினாலே உண்பானானால், அவனுக்குப் பிணிகளால் துன்பமில்லை.

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய். 946
     அளவுக்குச் சிறிது குறைவாகவே உண்பவனிடம் இன்பம் நீங்காமல் நிற்பது போல, அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோயும் நிலைத்து நிற்கும்.

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். 947
     பசித் தீயின் அளவாலே அல்லாமல், காலமும் அளவும் அறியாதபடி பெருமளவு உண்டானானால், அவனிடத்திலே எல்லையில்லாமல் நோய்களும் வளரும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். 948
     குணங்குறிகளால் நோயைத் துணிந்து, அதன் காரணத்தையும் தெளிந்து, தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வகை பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும்.

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். 949
     மருத்துவத்தைக் கற்றறிந்தவன், நோயாளியின் சக்தியையும், நோயின் தன்மையையும், காலத்தின் இயல்பையும், நன்கு கருதிப் பார்த்தே சிகிச்சை செய்ய வேண்டும்.

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து. 950
     பிணிக்கு மருந்தாவது, பிணியுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்கு உதவும் மருந்துகள், அதனை இயற்றுபவன் என்னும் நான்கு பாகுபாடு உடையதாம்.

அங்கவியல் முற்றிற்று

ஒழிபியல்

96. குடிமை

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. 951
     செம்மையும் நாணமும் ஒன்று சேர்ந்து பொருந்தி விளங்குதல் என்பது, நல்லகுடியிற் பிறந்தவரிடம் இல்லாமல் பிறரிடத்தில் அவரது இயற்கையாக அமைந்திருப்பதில்லை.

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். 952
     நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிக்கு உரிய நல்ல ஒழுக்கங்கள், வாய்மை காத்தல், பழிக்கு அஞ்சி நாணுதல் என்னும் மூன்றிலும், ஒரு போதுமே தவறமாட்டார்கள்.

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு. 953
     எக்காலமும் திரிபில்லாத குடியில் பிறந்தவர்களுக்கு வறியவரிடம் முகமலர்ச்சியும், உவப்போடு தருதலும், இன்சொல் உரைத்தலும், இகழாமையும் உரியவாம்.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். 954
     பலவாக அடுக்கிய கோடி அளவுக்குப் பொருள் பெற்றாலும், நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிப்பெருமைக்குக் குறைவான எதனையும் செய்ய மாட்டார்கள்.

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று. 955
     தொன்றுதொட்டே வருகின்ற பழங்குடியிலே பிறந்தவர்கள், தாம் கொடுத்து உதவும் பொருள் சுருங்கிய போதும், தம் பண்பிலே குறைய மாட்டார்கள்.

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார். 956
     ‘வசையில்லாமல் வருகின்ற நம் குடி மரபினோடு ஒத்து வாழக் கடவோம்’ என்று கருதி வாழ்பவர்கள், வறுமையிலும் தகுதி குறைந்ததைச் செய்ய மாட்டார்கள்.

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. 957
     உயர் குடியிலே பிறந்தவர்களிடம் தோன்றும் குற்றம், அளவால் சிறிதானாலும், விசும்பிடத்து மதியிலே தோன்றும் மறுவைப் போல உலகத்தாரால் அறியப்படும்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். 958
     குடிச்சிறப்போடு வருகின்றவனிடத்தே அருளில்லாத தன்மை தோன்றிற்றானால், அவனை அக் குடிப்பிறப்பு உடையவன் தானோ என்று கருதி உலகம் ஐயப்படும்.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். 959
     நிலத்தின் இயல்பினை அதனிடம் முளைத்த முளை காட்டும்; அவ்வாறே, நல்ல குலத்தில் பிறந்தவர்களது இயல்பினை அவர் வாய்ச்சொற்கள் எடுத்துக் காட்டும்.

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு. 960
     ஒருவன், தனக்கு நன்மைகளை விரும்பினால் பழிக்கு நாணம் உடையவனாதலை விரும்ப வேண்டும்; குலனுடைமையை விரும்பினால், பணிவோடு நடத்தல் வேண்டும்.

97. மானம்

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். 961
     மிகவும் இன்றியமையாத சிறப்புக்களை உடையவாயினும், உயர்குடியில் பிறந்தவர், தாழ்ச்சி வரும்படியான செயல்களைச் செய்யாமல் விட வேண்டும்.

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர். 962
     தமக்குச் சிறப்பையே தருமானாலும், தம் குடியின் சிறப்புக்குப் பொருந்தாத செயல்களை, புகழும் மானமும் நிலைப்பதை விரும்புகிறவர்கள் செய்ய மாட்டார்கள்.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. 963
     உயர் குடியிலே பிறந்தவர்களுக்கு, நிறைந்த செல்வம் உண்டானபோது, பணிவுடைமை வேண்டும்; செல்வம் சுருங்கி வறுமை உண்டாகும்போது உயர்வு வேண்டும்.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. 964
     நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் உயர்வான நிலையை விட்டுத் தாழ்ந்த விடத்து, தலையைவிட்டு அகன்று விழுந்த மயிரைப் போல இழிவு அடைவார்கள்.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின். 965
     குடிப்பிறப்பாலே குன்று போல உயர்ந்த பெருமையை அடைந்தவர்களும், குன்றியளவு தகுதியற்ற செயல்களைச் செய்தாரானால் தாழ்ச்சி அடைவார்கள்.

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை. 966
     தன்னை இகழ்பவர்களின் முன்பாக மானமிழந்து நிற்கும் நிலைமை புகழையும் தராது. மற்றும் புத்தேளிர் நாட்டிலும் கொண்டுபோய்ச் சேராது; அதனால் என்ன பயன்?

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று. 967
     தன்னை இகழ்பவரின் பின்னே சென்று பொருள் பெற்று, அதனால் உயிர்வாழ்தலைவிட, இறந்தவன் என்று சொல்லப் படுதலே ஒருவனுக்கு நன்மை ஆகும்.

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து. 968
     தம் குடிக்குரிய பெருந்தன்மை அழியும் நிலையில், தான் இறந்து போகாமல், மானம்விட்டு உடம்பைக் காப்பது பிறவிப் பிணிக்கு ஏற்ற மருந்தாகுமோ?

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். 969
     தன் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால், அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள்.

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு. 970
     தமக்கு ஓர் இழிவு வந்த போது உயிரை விட்டு விட்ட மானமுள்ளவரது புகழ்வடிவினை, எக்காலத்திலும் உலகத்தார் கைதொழுது போற்றித் துதிப்பார்கள்.

98. பெருமை

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அ·திறந்து வாழ்தும் எனல். 971
     ஒருவனுக்குப் பெருமை, ‘பிறரால் செய்வதற்கரியதைச் செய்வேன்’ என்னும் மனவூக்கமே; இழிவாவது, ‘அதனைச் செய்யாமலே உயிர் வாழ்வேன்’ என்று நினைப்பதாகும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். 972
     எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒரு போதும் ஒத்திருப்பதில்லை.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். 973
     செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார்; அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார்.

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. 974
     கவராத மனத்தையுடைய மகளிர், நிறையிலே வழுவாமல் தம்மைத் தாமே காத்து ஒழுகுதலைப் போல, பெருமையும், தன்னைத்தான் காப்பவனிடமே உளதாகும்.

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல். 975
     பெருமை உடையவர்கள், தாம் வறுமையான போதும், பிறரால் செய்வதற்கு அருமையான தம் செயல்களை விடாமல் செய்து முடிக்கும் வலிமை கொண்டவராவர்.

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு. 976
     ‘இத்தகையவரான பெரியோரை வழிபட்டு அவரியல்பை நாமும் அடைவோம்’ என்னும் நல்ல நோக்கம், மற்றைச் சிறியார் மனத்தில் ஒரு போதும் உண்டாகாது.

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின். 977
     தகுதியான பெரியாரிடம் அமைந்திருக்கும் சிறப்பு, பொருந்தாத சிரியவர்களிடத்தேயும் சேருமானால், தகுதியை விட்டுத் தருக்கினிடத்தே அவரைச் செல்லச் செய்யும்.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. 978
     பெருமை உடையவர் தருக்கியிராமல் பணிவாகவே நடந்து வருவார்கள்; மற்றைச் சிறுமை உடையவரோ எப்போது தம்மை வியந்து புனைந்து பேசி வருவார்கள்.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். 979
     பெருமை குணம் ஆவது, காரணம் உள்ள போதும் தருக்கின்றி அமைந்திருத்தல்; சிறுமைக்குணமாவது பெருமை அற்ற போதும் தருக்கி, முடிவில் நின்றுவிடலாகும்.

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். 980
     பெருமை உடையவர், பிறரது மானத்தைப் பேசி, அவமானத்தை மறைப்பார்கள்; சிறுமை உடையவரோ, பிறரது குணத்தை மறைத்து, குற்றத்தையே கூறுவார்கள்.

99. சான்றாண்மை

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. 981
     ‘நமக்கு இது தகுவது’ என்று அறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் அவருடைய இயல்பாகவேயிருக்கும் என்பார்கள்.

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று. 982
     சான்றோர்களின் சிறப்பாவது, அவர் குணநலங்களால் வந்த சிறப்பே; அ·து ஒழிந்த பிற நலன்கள் எல்லாம், எந்நலத்தினும் சேர்வதான ஒரு நலனே ஆகாது.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண். 983
     அன்பும், நாணமும், யாவரிடத்தும் ஒப்புரவு செய்தலும், கண்ணோட்டமும், வாய்மையும், சால்பென்னும் பாரத்தைத் தாங்கும் ஐந்து தூண்கள் ஆகும்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. 984
     ‘தவம்’ ஓர் உயிரையும் கொல்லாத அறத்தினிடத்தது; சால்பு, பிறரது குற்றத்தை அறிந்தாலும், வெளியே சொல்லித் திரியாத நல்ல குணத்தினிடத்து.

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை. 985
     ஒரு செயலை முடிப்பவரது ஆற்றலாவது, துணையாகுபவரைப் பணிமொழியால் தாழ்ந்தும் கூட்டிக் கொள்ளுதல்; சால்புடையார் தம் பகைவரை ஒழிக்கும் படையும் அதுவே.

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல். 986
     சால்பாகிய பொன்னின் தரத்தை அறிவதற்கான உரைகல், தம்மினும் உயர்ந்தாரிடம் ஏற்கும் தோல்வியை, இழிந்தவரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. 987
     தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிய செயல்களைச் செய்யாதவரானால், ‘சால்பு’ என்று சிறப்பாகக் கொள்ளப்படுவது தான், என்ன பயனை உடையதாகுமோ?

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின். 988
     ‘சால்பு உடைமை’ என்னும் பண்பு ஒருவனிடம் உறுதி பெற்றிருந்தால், அவனுக்கு வரும் வறுமைத் துன்பங்களும், அவனுக்கு இழிவான நிலைமையைத் தந்துவிடாது.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார். 989
     சால்புடைமை என்னும் கடலுக்குக் கரை என்று சொல்லப்படும் பெரியோர்கள், ஏனைய கடல்களும் கரையுள் நில்லாமல் காலம் திரிந்த போதும், தாம் நிலைதிரிய மாட்டார்கள்.

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை. 990
     பல குணங்களாலும் நிறைந்தவரும் தம் தன்மைகளில் குன்றுவார்களானால், இந்தப் பெரிய பூமி தானும் தன் பாரத்தைத் தாங்காததாய் அழிந்து போகும்.

100. பண்புடைமை

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. 991
     எல்லாரிடத்தும் எளிய செவ்வியராதல் உடையவருக்கு பண்புடைமை என்னும் நன்னெறியினை அடைந்து சிறப்படைதலும், எளிதென்று சொல்லுவார்கள்.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. 992
     பிறர்மேல் அன்புடைமையும், உலகத்தோடு அமைந்த குடியிலே பிறத்தலும், ஆகிய இவ்விரண்டும் ஒத்து வருதல் பண்புடைமையால் என்று உலகத்தார் சொல்லுவர்.

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. 993
     உடம்பால் ஒருவரோடு ஒருவர் ஒத்திருத்தல், ஒருவனுக்கு நல்லவரோடு சமநிலையைத் தந்துவிடாது; செறியத் தகுந்த பண்பால் ஒத்திருத்தலே சமநிலை தரும்.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு. 994
     நீதியையும் அறத்தையும் விரும்புதலால், பிறருக்கும் தமக்கும் பயன்படுதலை உடையவரது பண்பினை, உலகத்தார் அனைவரும் போற்றிக் கொண்டாடிப் புகழ்வார்கள்.

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. 995
     தன்னை இகழ்தல் விளையாட்டின் போதும் துன்பமானது. ஆகவே, பாடு அறிவாரிடத்து, பகைமை உள்ளவிடத்திலும் இகழ்தல் இன்றி, இனிய பண்புகளே நிறைந்திடும்.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். 996
     பண்புடையாரிடத்தே படுதலால் உலகியல் எப்போதும் உளதானதாய் வந்து கொண்டிருக்கின்றது; அங்ஙனம் இல்லையானால், அது மண்ணினுட் புகுந்து மாய்ந்து விடும்.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். 997
     நன்மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்கள், அரத்தைப் போலக் கூர்மை உடையவர் என்றாலும், ஓரறிவேயுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்.

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை. 998
     தம்மோடும் நட்பினைச் செய்யாதவராகப் பகைமையையே செய்து நடப்பவரிடத்தும், தாம் பண்புடையவராக உதவி புரியாதிருத்தல், சான்றோருக்குக் குற்றமாகும்.

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். 999
     பண்பில்லாமையாலே ஒருவரோடு கலந்து பேசி உள்ளம் மகிழ மாட்டாதவர்களுக்கு, மிகவும் பெரிய இந்த உலகமானது பகற்பொழுதிலும் இருண்டு கிடப்பதாகும்.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று. 1000
     பண்பில்லாதவன் முன்னை நல்வினையாலே பெற்ற பெருஞ் செல்வமானது, நல்ல ஆவின்பால் கலத்தின் குற்றத்தால் திரிதல் போல, ஒருவருக்கும் பயன்படாமல் போகும்.