திருவள்ளுவர்

இயற்றிய

திருக்குறள்

உரையாசிரியர் : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 11 ...

101. நன்றியில் செல்வம்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அ·துண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல். 1001
     வீடு நிறையப் பொருளைச் சேர்த்து வைத்தும், உலோபத்தால் தானேயும் உண்ணாதவன், அப்பொருளின் உரிமையால் ஏதும் செய்யாததனால், செத்தவனுக்கே சமமாவான்.

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு. 1002
     ‘பொருளினால் எல்லாமே உண்டாகும்’ என்று அறிந்து, அதனை எவருக்கும் கொடாமல், அதன் மீது மயக்கத்தை உடையவனுக்குப் பேய்ப் பிறவிதான் ஏற்படும்.

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை. 1003
     மேன்மேலும் பொருளைத் தேடுவதையே விரும்பி, அதன் பயனாக வரும் புகழை விரும்பாத மக்கட் பிறவியானது, இப் பூமிக்கு ஒரு சுமையே அல்லாமல் வேறில்லை.

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன். 1004
     ஒரு பொருளும் கொடுத்தறியாததால் எவராலும் விரும்பி வரப்படாதவன், தான் இறந்ததன் பின்னர், இவ்வுலகிலே எஞ்சி நிற்பதற்கென்று எதை நினைப்பானோ?

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல். 1005
     இரப்போருக்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதுமாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்களுக்குக் கோடி கோடியான செல்வம் இருந்தாலும், அதனால் யாதும் பயன் இல்லை.

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான். 1006
     தானும் நுகராமலும், தகுதியானவருக்கு எதையும் கொடுத்து உதவாமலும் இருப்பவன், தான் பெற்ற பெருஞ் செல்வத்துக்கே ஒரு நோய் போன்றவன் ஆவான்.

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று. 1007
     ஏதும் இல்லாதவருக்கு எதுவும் கொடுத்து உதவாதவனது செல்வம், மிகவும் அழகிய பெண் திருமணப் பயனில்லாமல், தனியாகவே கிழவியானதைப் போன்றதாம்.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று. 1008
     வறியவராலே விரும்பி வரப்படாத உலோபியின் செல்வம், ஊரின் இடையே நிற்கின்ற ஓர் நச்சுமரமானது, நிறையப் பழம் பழுத்து விளங்குவதைப் போன்றதாகும்.

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர். 1009
     உறவினரிடம் அன்பு செய்தலை விட்டு, நுகராமல் தன்னையும் வருத்திக் கொண்டு, அறத்தையும் பாராது, ஒருவன் தேடிய பெரும்பொருளைப் பிறர் தாம் கொண்டு போவார்கள்.

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து. 1010
     புகழ்பெற்ற செல்வம் உடையவரது சிறிது காலத்திய வறுமை, மேகம் சிறிது காலம் வறுமை மிகுந்தாற் போன்ற இடைக்காலத் தன்மையை உடையதே.

102. நாணுடைமை

கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற. 1011
     இழிந்த செயல் காரணமாக நாணுதலே நன்மக்களது நாணம்; பிற மன மொழி மெய் ஒடுக்கங்களால் வரும் நாணம், குலமகளிரது நாணம் ஆகும்.

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. 1012
     ஊணும் உடையும் அவையொழிந்த பிறவும் உலகத்து மக்கள் உயிர்க்கு எல்லாம் பொதுவானவை. நன்மக்களுக்குச் சிறப்பாக அமைவது ‘நாணம்’ ஆகும்.

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு. 1013
     உயிர்கள் எல்லாம் தம் இருப்பிடமான உடம்பை ஒரு போதும் விடமாட்டா; அவ்வாறே ‘நாணம்’ என்னும் குணத்தையும் ‘சால்பு’ ஒரு போதும் விட்டுவிடாது.

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அ·தின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை. 1014
     நாணம் உடைமை சான்றோர்களுக்கு ஓர் ஆபரணம் ஆகும். அந்த நாணம் என்னும் ஆபரணம் இல்லையானால், அவரது பெருமித நடை கண்டவர்க்கு நோயாகிவிடும்.

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு. 1015
     பிறரது பழியையும் தம்முடைய பழியையும் சமமாக மதித்து நாணுபவரை, உலகத்தார், ‘நாணத்திற்கே உறைவிடம் இவர் தாம்’ என்று சிறப்பித்துச் சொல்வார்கள்.

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர். 1016
     உயர்ந்தோர், தமக்கு வேலியாக நாணத்தைக் கொள்வார்களே அல்லாமல், அகன்ற இவ்வுலகத்தைத் தமக்கு வேலியாகக் கொள்வதை விரும்ப மாட்டார்கள்.

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர். 1017
     நாணத்தையும் உயிரையும் ஒருங்கே காப்பாற்ற முடியாத போது, சான்றோர்கள் உயிரை விட்டு விடுவார்கள்; உயிரைக் காப்பதற்கு நாணத்தை விட மாட்டார்கள்.

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து. 1018
     கேட்டவரும் கண்டவரும் நாணமின்றிப் பழிக்கத் தான் நாணாதவன் ஆனால், அந் நாணானது, அவனை விட்டு அறம் நீங்கி போகத் தகுந்த குற்றத்தை உண்டாக்கிவிடும்.

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை. 1019
     ஒருவனது ஒழுக்கத் தவறினால், அவன் குடிப்பெருமை ஒன்றே கெட்டுவிடும்; ஒருவனிடம் நாணமில்லாத தன்மை நின்றபோது, அது அவன் நலத்தை எல்லாமே சுடும்.

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று. 1020
     தன் மனத்திலே நாணமில்லாத மக்களின் இயக்கம், மரப்பாவை யந்திரக் கயிற்றாலாகிய தன் இயக்கத்தால் உயிருள்ளது போல் மயக்குவது போன்றதாகும்.

103. குடிசெயல்வகை

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல். 1021
     ‘என் குடியை உயரச் செய்வதற்கான செயல்களைச் செய்வதில் ஒருபோதும் கை ஓயமாட்டேன்’ என்னும் பெருமையைப் போல, ஒருவனுக்கு சிறந்த பெருமை தருவது வேறில்லை.

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி. 1022
     ‘முயற்சியும், நிறைந்த அறிவும்’ என்று சொல்லப்பட்ட இரண்டினையும் உடைய, இடைவிடாத கருமச் செயலால், ஒருவனது குடிப்பெருமை தானே உயர்வு அடையும்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். 1023
     ‘என் குடியைப் புகழால் உயரச் செய்வேன்’ என்று அதற்கேற்ற செயல்களிலே ஈடுபடும் ஒருவனுக்கு, தெய்வமும் மடியை உதறிக் கொண்டு முன் வந்து உதவி நிற்கும்.

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு. 1024
     தம் குடியை உயர்த்துவதற்கு இடைவிடாமல் முயல்கிறவர்களுக்கு, அதன் வழிபற்றி அவர் ஆராயும் முன்பே, தெய்வ உதவியால், அது தானாகவே முடிந்துவிடும்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. 1025
     குற்றமாகிய செயல்களைச் செய்யாமல், தன் குடியை உயரச் செய்து நடக்கிறவனின் சுற்றமாக விரும்பி, உலகத்தார் எல்லாருமே சென்று அவனைச் சூழ்வார்கள்.

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல். 1026
     ‘ஒருவனுடைய நல்லாண்மை’ என்பது, தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையை, அவன், தன்னிடம் உளதாக ஆக்கிக் கொள்ளுதலே ஆகும்.

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. 1027
     அமரகத்தில் வன்கண்மை உடையவரே போரைத் தாங்குவார்; அதுபோலக் குடியிற் பிறந்தவர் பலரானாலும், வல்லமை உடையவரே அதனைத் தாங்கிக் காப்பவர்.

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும். 1028
     தம் குடியினை உயரச் செய்பவர் அதனையே கருதவேண்டும்; மற்றுக் காலத்தைப் பார்த்து, மானத்தையும் கருதினால், குடி கெடும்; ஆகவே அவருக்குக் காலநியதி இல்லை.

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு. 1029
     தன் குடி குற்றம் அடையாமல் காக்க முயல்பவனின் உடம்பு, அம்முயற்சித் துன்பத்திற்கே ஓர் கொள்கலமோ? அ·து ஒழிந்து, அது இன்பத்திற்கும் கொள்கலம் ஆகாதோ?

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி. 1030
     துன்பம் வரும்போது, அதனைத் தாங்கிக் காக்கவல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியானது, துன்பமாகிய நவியம்புகுந்ததனால் வீழ்கின்ற மரம்போலத் தானும் வீழ்ந்து படும்.

104. உழவு

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. 1031
     உழவின் வருத்தத்தைக் கண்டு, பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் ஏருடையவரையே உலகம் உணவுக்கு எதிர்பார்த்தலால், உழவே மிகவும் சிறந்தது.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅ· தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. 1032
     உழவை விட்டுப் பிற தொழில்களைச் செய்வாருக்கும் உணவுப் பொருள்களைத் தந்து தாங்குவதனால், உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். 1033
     யாவரும் உண்ணுவதற்கு உணவைத் தந்து, தாமும் உண்டு வாழ்பவரே உரிமை வாழ்வினர்; மற்றையவர் பிறரைத் தொழுது உண்டு, அவர் பின் செல்கின்றவரே யாவர்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். 1034
     உழுதலால் நெல்லுடையவரான கருணையாளர், பலவேந்தர் குடைநிழலது ஆகிய உலகம் முழுவதையும், தம் அரசனின் குடைக்கீழ் வந்து சேரக் காணும் சக்தியுடையவர் ஆவர்.

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர். 1035
     உழவரான முயற்சியைச் செய்து உண்பதனையே இயல்பாக உடையவர், பிறரைத் தாம் இரவார்; தம்பால் வந்து இரப்பவர்க்கும் அவர் வேண்டியதைத் தருவார்கள்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை. 1036
     உழவர்களின் கை உழாது மடங்கிவிடுமானால், ‘யாவரும் விரும்பும் உண்வையும் கைவிட்டோம்’ என்று துறந்தவர்க்கும், அவ்வறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

தொடிப்புழுதி க·சா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். 1037
     ஒரு பலப் புழுதியானது காற்பலமாக ஆகும்படி உழுது காய விடுவானானால், அதனிடம் செய்த பயிர், ஒரு பிடி எருவு இடுதலையும் வேண்டாமலே நன்றாக விளையும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. 1038
     பலகால் உழுதலினும், எருப்பெய்து வளப்படுத்துதல் சிறந்தது; இவ்விரண்டும் செய்து களையும் எடுத்தபின், பயிரைக் காத்தல், நீர் பாய்ச்சுவதிலும் நல்லதாகும்.

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும். 1039
     நிலத்துக்கு உரியவன் நாள்தோறும் சென்று பார்த்து, வேண்டியவை செய்யாது சோம்பினால், அந்த நிலமும், அவன் மனைவியைப் போல, அவனோடு பிணங்கி விடும்.

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். 1040
     ‘யாம் வறியோம்’ என்று சொல்லிச் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் என்று உயர்த்திப் பேசப்படும் நல்லாள் தன்னுள்ளே சிரித்துக் கொள்வாள்.

105. நல்குரவு

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. 1041
     ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப் போலத் துன்பந்தருவது, அந்த வறுமையேயன்றி, யாதுமில்லை.

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். 1042
     வறுமை என்னும் ஒரு பாவி ஒருவனிடம் வந்துவிட்டால், அவனுக்கு இம்மையிலுள்ள உலகவின்பமும், மறுமையின் சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும்.

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை. 1043
     வறுமை எனப்படும் கேடானது, ஒருவனுடைய பழைய குடும்பச் செல்வத்தையும், அதன்மேல் அக்குடும்பத்திற்கு உண்டான பெரும்புகழையும் கெடுத்துவிடும்.

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும். 1044
     இழிவான செயல் பிறவாத குடும்பத்தாரிடமும், அது பிறப்பதற்கு ஏதுவான சோர்வு என்னும் நிலைமையானது வறுமையை உண்டாக்கிவிடும்.

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். 1045
     வறுமை எனப்படும் துன்பம் ஒன்றின் உள்ளாகவே, உலகத்தாரால் சொல்லப்படும் பலவகைப்பட்ட துன்பங்கள் எல்லாம் சென்று அடங்கிவிடும்.

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும். 1046
     நல்லவான பொருள்களைத் தெளிவாக அறிந்து சொன்னார் ஆனாலும், வறுமைப்பட்டவர் சொல்லும் சொற்கள், பொருள் பயவாதவாய்ச் சோர்வு பட்டுவிடும்.

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். 1047
     அறத்தோடு பொருந்தாத வறுமையை உடையவன், தன்னைப் பெற்ற தாயாராலுங்கூட, ஓர் அயலானைப் போலக் கருதிப் பார்க்கப் படுவான்.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு. 1048
     நேற்றுக் கொன்றது போலத் துன்பஞ் செய்த வறுமையானது, இன்றும் என்னிடத்தே வந்துவிடுமோ? வந்தால், இனி யான் யாது செய்வேனோ?

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது. 1049
     மந்திரமும் மருந்தும் முதலியவற்றின் உதவியாலே நெருப்பிற் கிடந்தும் உறங்கலாம்; ஆனால் வறுமை வந்த போது, எதன் உதவியாலும் உறக்கம் வருவதில்லை.

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. 1050
     பொருளில்லாத வறுமையாளர் செய்யக்கூடியது முற்றத்துறத்தலே; அதனைச் செய்யாதிருப்பது, பிறர் வீட்டு உப்புக்கும் காடிக்கும் தாம் எமனாவதே யாகும்.

106. இரவு

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று. 1051
     தகுதியுள்ளவரைக் கண்டால், அவர்பால் இரந்து கேட்கலாம்; அவர் தம்மிடம் ஏதும் இல்லையென்று ஒளிப்பாரானால், அவருக்குப் பழியேயன்றிக் கேட்பவருக்குப் பழியில்லை.

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். 1052
     ஈவாரது நல்லுணர்வால் இரந்த பொருள்கள் துன்பமின்றி வருமானால், அவ்வாறு இரந்து நின்றதும், ஒருவனுக்கு உலகில் இன்பம் தருவதாகும்.

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து. 1053
     ஒளிப்பதறியாத நெஞ்சமுடைய மானம் அறிபவரின் முன்னே போய் நின்று, அவரிடம் ஒரு பொருளை இரந்தாலும், அப்படி இரப்பதும் வறியவர்க்கு ஓர் அழகு ஆகும்.

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு. 1054
     தமக்கு உள்ளதைக் கனவிலும் ஒளிப்பதற்கு அறியாதவரிடம் சென்று, ஒரு பொருளை வறியவர் இரந்து கேட்பதும், ஈதலைப் போலவே சிறந்ததாகும்.

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது. 1055
     முன்னால் நின்ற போதே அருளோடு அவருக்கு உதவுகிறவரும் இருப்பதனாலேதான், உயிரைக் காக்கும் பொருட்டாக இரக்கும் சிலரும் உலகில் உள்ளனர்.

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும். 1056
     உள்ளதை ஒளிக்கும் மனநோய் இல்லாதவரைக் கண்டால், மானம் விடாமல் இரப்பவருக்கு, அவர் வறுமைத் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே அவரை விட்டுப் போய்விடும்.

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து. 1057
     தம்மை அவமதித்து இழிவாய்ப் பேசாமல் பொருள் தருவாரைக் கண்டால், இரப்பவரது நெஞ்சமும் மகிழ்ந்து, உள்ளுக்கு உள்ளாகவே உவப்பது உண்டு.

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று. 1058
     வறுமையால் இரப்பவர் இல்லையானால், குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகினரின் போக்கும் வரவும், மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்றுவந்தாற் போன்றதாகும்.

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை. 1059
     தம்மிடம் வந்து ஒரு பொருளை இரந்து கொள்பவர் எவரும் இல்லாத போது, கொடுப்பதற்கு விரும்புகிறவர்களுக்கும், இவ்வுலகத்திலே என்ன புகழ்தான் உண்டாகும்!

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி. 1060
     இரப்பவன் ஒரு போதும் தனக்குத் தராதவனை வெகுளாமல் இருக்க வேண்டும்; பொருள் வேண்டிய பொழுது வந்து உதவது என்பதற்கு அவன் வறுமையே சான்றாகும்.

107. இரவச்சம்

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும். 1061
     தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் உவப்போடு கொடுத்துதவும் கண்போன்றவரிடமும் சென்று இரந்து நிற்காமல், வறுமையைத் தாங்குதல் கோடி நன்மை தருவதாகும்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். 1062
     முயற்சி செய்து உயிர் வாழ்தல் என்றில்லாமல், இரந்தும் ஒருவன் உயிர் வாழ்தலை, இவ்வுலகைப் படித்தவன் விதித்திருப்பானானால், அவனும் எங்கும் அலைந்து கெடுவானாக!

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில். 1063
     வறுமைத் துன்பத்தை முயற்சிகளால் நீக்கக்கடவோம் என்று நினையாமல், இரந்து நீக்க நினைக்கும் வன்மையைப் போல வன்மையுள்ளது பிறிது யாதும் இல்லை.

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு. 1064
     நுகர் பொருள் இல்லாமல் வறுமைப்பட்டபோதும், பிறர்பால் சென்று இரத்தலுக்கு உடன்படாத மனவமைதி, உலகமெல்லாம் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையது.

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில். 1065
     நெறியோடு கூடிய முயற்சியாலே கொண்டு வந்தது, தெளிந்த நீரைப் போலத் தோன்றும் புல்லரிசிக் கஞ்சியே யானாலும், அதனை உண்பதை விட இனியது வேறு யாதும் இல்லை.

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில். 1066
     வேட்கை மிகுதியாலே சாகும் பசுவுக்கு இரக்கங்கொண்டு ‘நீர் தருவீராக’ என்று இரந்தாலும், அதனைப் போல நாவிற்கு இழிவான ஒரு செயல் யாதும் இல்லை.

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று. 1067
     ‘உமக்கு இரக்க வேண்டுமானால், உள்ளதை ஒளிக்காமல் மறைப்பவரிடம் சென்று இரக்காதீர்கள்’ என்று இரப்பவரை எல்லாம் யான் இரந்து வேண்டுகின்றேன்.

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும். 1068
     வறுமைக் கடலைக் கடப்பதற்குக் கொண்ட இரத்தல் என்னும் தோணியானது செல்லும் போது, இடையிலே கரத்தல் என்னும் பார் தாக்கினால் உடைந்து போய்விடும்.

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும். 1069
     இரந்து நிற்பதன் கொடுமையை நினைத்தால், எம் உள்ளம் கரைந்து உருகும்; அவர்க்கு இல்லை என்றவர் தன்மையை நினைத்தால், அந்த உருக்கமும் காய்ந்து போகும்.

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். 1070
     ஒளிப்பவர் ‘இல்லை’ என்று சொன்னதுமே, இரப்பவர் உயிர் போய்விடுகின்றது; ஒளிப்பவர் உயிர் பின்னும் நிற்றலால் அது எங்கே புகுந்து ஒளிந்திருக்குமோ!

108. கயமை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். 1071
     வடிவமைப்பால் கீழ்மக்களும் மக்களைப் போன்றிருப்பார்கள்; அவரைப் போல ஒப்புமையான ஒன்றை வேறிரண்டு சாதிக் கண் யாம் எங்கும் கண்டதில்லை.

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர். 1072
     தமக்கு உறுதியானவை இவை என்று அறிவாரை விட, அவை அறியாத கீழ்மக்கள் நன்மையுடையவர்; அவர் போல, இவர் தம் நெஞ்சத்தில் கவலையில்லாதவர் ஆதலால்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். 1073
     தேவரைப் போலவே, தம்மை நியமிப்பவர் இல்லாமல், தாம் விரும்புவன செய்து ஒழுகுதலால், கயவரும் தேவரும் ஒரே தன்மையுடையவர் ஆவர்.

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். 1074
     கீழ்மக்கள் தம்மிலும் கீழாக நடப்பவரைக் கண்டால், அந்தக் கீழ்மையில் தாம் அவருக்கு மேம்பட்டிருப்பதைக் காட்டித் தமக்குள் இறுமாப்பு அடைவர்.

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது. 1075
     ‘அரசரால் துன்பம் வரும்’ என்னும் அச்சமும் கீழ்மக்களது ஆசாரத்துக்குக் காரணம்; அ·து ஒழிந்தால், விரும்பப்படும் பொருள் வரும் போது, சிறிது உண்டாகும்.

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். 1076
     கேட்ட மறைவான செய்திகளைப் பிறரிடம் தாங்கிக் கொண்டு போய்ச் சொல்வதனால், கீழ்மக்கள் செய்தியறிவிக்க அறையப்படும் பறை போன்றவர்கள் ஆவர்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு. 1077
     தம் கன்னத்தை நெரிப்பதாக வளைந்த கையினர் அல்லாதவருக்கு, கீழ்மக்கள், தாமுண்டு கழுவிய ஈரக்கையைக் கூட உதறமாட்டார்கள்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். 1078
     குறையைச் சொன்னதும் இரக்கங்கொண்டு உதவுவதற்கு மேலோர் பயன்படுவார்கள்; கரும்பைப்போல் வலியவர் நெருக்கிப் பிழிந்தால் கயவர் அவருக்குப் பயன்படுவர்.

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். 1079
     பிறர் நன்றாக உடுப்பதையும் சுவையோடு உண்பதையும் கீழ்மகன் கண்டால், அவற்றைப் பொறாமல், அவர் மேல் வடு உண்டாக்கவும் முயல்வான்.

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து. 1080
     ஒரு துன்பம் வந்துவிட்டால், அதுவே காரணமாகத் தம்மை விரைவில் பிறருக்கு விற்பதற்குக் கயவர் உரியவராவர்; அதுவன்றி வேறு எத்தொழிலுக்கும் உரியராகார்.

ஒழிபியல் முற்றிற்று

பொருட்பால் முற்றிற்று

காமத்துப்பால்

களவியல்

109. தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. 1081
     இவ் வடிவம் தேவமகளோ? சிறந்த அழகு மயிலோ? அல்லது, கனவிய குழையையுடைய ஒரு மானுடப் பெண் தானோ! புரியாமல் என் நெஞ்சம் மயங்குகின்றதே!

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து. 1082
     என்னை அவள் நோக்கினாள். என் பார்வைக்கு எதிராகவும் பார்த்தாள்! அந்தப் பார்வை, தானே தாக்கி வருத்தும் அணங்கு, தானையையும் கொண்டது போல் உள்ளதே.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு. 1083
     ‘கூற்று’ என்பதனை இதன்முன்னர் அறியேன்; இப்போது அறிந்துவிட்டேன்; அது, அழகிய பெண்ணின் வடிவோடு பெரியவாய் அமர்த்த கண்களையும் உடையது.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண். 1084
     தன்னைக் கண்டவரின் உயிரை உண்ணுகின்ற தோற்றத்தோடு, பெண்களில் சிறந்தவளான இந்தப் பேதைக்குக் கண்களும் அமர்த்தனவாக அமைந்து உள்ளனவே!

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து. 1085
     இளமைப் பருவத்தவளான இவளது பார்வை, வருத்தும் கூற்றமோ! பிறழும் கண்ணோ! மருளும் பிணையோ! இம்மூன்று தன்மையையும் தன்பால் கொண்டிருக்கிறதே!

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண். 1086
     விளைவான இவள் புருவங்கள் செம்மையாயிருந்து விலக்கினவானால், அவற்றைக் கடந்து, இவள் கண்களும் நாம் நடுங்கும் துயரைச் செய்ய மாட்டாவே!

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். 1087
     இந்த மாதின், சாயாத முலைகளின் மேலாக இடப்பட்டுள்ள துகில், அவையும் என்னைக் கொல்லாதபடி காத்தலால், மதகளிற்றின் முகபடாத்தைப் போன்றதாகும்.

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு. 1088
     போர்க்களத்துக்கு வராதவரும், பிறருக்கு நேர்ந்ததைக் கேட்டு அஞ்சுவதற்கு ஏதுவான என் வலிமையெல்லாம், இவளின் ஒளிவீசும் நெற்றிக்கே உடைந்து போயிற்றே!

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து. 1089
     மானின் பிணைபோன்ற மடநோக்கினையும், உள்ளத்தே நாணத்தையும் உடையவளான இவளுக்கு, இவையே சிறந்த அழகாக, வேறும் அணிபூட்டி அழகுபடுத்தல் ஏனோ?

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று. 1090
     தன்னை உண்டவருக்கு மகிழ்ச்சியைச் செய்வதல்லாமல், அடப்பட்ட தவறானது, காமத்தைப் போலக் கண்டவருக்கு மகிழ்வைச் செய்யும் ஆற்றலுடையது இல்லையே!

110. குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. 1091
     இவள் மையுண்ணும் கண்களில் இருவகைப் பார்வைகள் உள்ளன; ஒன்று என்னிடத்து நோய்செய்யும் பார்வை; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும் பார்வை.

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது. 1092
     என்னை அறியாமல் என் மேல் நோக்குகின்ற இவள் அருகிய நோக்கமானது, காம உறவிலே சரிபாகம் ஆவதன்று; அதனிலும் மிகுதியானது ஆகும்.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அ·தவள்
யாப்பினுள் அட்டிய நீர். 1093
     அன்போடு என்னை நோக்கினாள்; பின் எதனையோ நினைத்தாள் போல நாணித் தலைகவிழ்ந்தாள்; அக்குறிப்பு, எங்களின் அன்புப்பயிருக்கு வார்த்த நீராயிற்று.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். 1094
     யான் தன்னைப் பாராத போது என்னை நோக்கி அவள் மெல்ல நகுவாள்; யான் பார்க்கும் பொழுதோ எனக்கு எதிராகப் பாராள்; தலைகவிழ்ந்து நிலத்தையே பார்ப்பாள்!

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும். 1095
     என்னையே குறிப்பாக கொண்டு பார்த்தல் அல்லாமலும், தான் ஒரு கண்ணை, ஒரு பக்கமாகச் சாய்த்தாள் போலவும் நோக்கி, தன்னுள்ளாகவே அவள் நகுவாள்!

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும். 1096
     புறத்தே நம்மை விரும்பாதவரைப் போலச் சொன்னாரானாலும், தம் உள்ளத்தில் நம்மைச் சினவாதவரின் சொற்கள் பயனாகுதல், விரைவில் உணரப்படும்.

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. 1097
     நம்மை உள்ளத்திலே சினவாதவரின் சொல்லும், சினந்தார் போலப் பார்க்கும் பார்வையும், அயலார்போல் உள்ளத்திலுள்ள ஒரு குறிப்பாலே வருவன.

அசையியற்கு உண்டாண்டோர் ஏர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும். 1098
     அவளை இரப்பது போல யான் பார்த்த போது, அதனால் நெகிழ்ந்தவளாய் மெல்ல நகைத்தாள்; அதனால் அசையும் இயல்பு உடையவளுக்கு நன்மைக் குறிப்பும் உண்டு.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள. 1099
     முன் அறியாதவரைப் போலத் தம்முள் பொது நோக்காகவே ஒருவரையொருவர் பார்த்தலும், தம் உள்ளத்திலே காதல் உடையவரிடம் காணப்படும் தன்மை ஆகும்.

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல. 1100
     காமத்திற்கு உரிய இருவருள், ஒருவர் கண்ணோடு மற்றவர் கண்ணும் தம் நோக்கத்தால் ஒத்ததானால், அவர் வாய்ச் சொற்களால் எந்தப் பயனுமில்லை.