திருவள்ளுவர்

இயற்றிய

திருக்குறள்

உரையாசிரியர் : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 13 ...

121. நினைந்தவர் புலம்பல்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது. 1201
     நினைத்தாலும் தீராத பெருமகிழ்ச்சியை எமக்குச் செய்வதனால், உண்டால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளினும் காமமே உலகத்தில் இனிமை தருவதாகும்.

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல். 1202
     யாம் விரும்புகின்ற காதலரை நினைத்தாலும், பிரிவுத் துன்பம் இல்லாமல் போகின்றது; அதனால், காமமும் எவ்வளவானாலும் ஒருவகையில் இனிமையானதே!

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும். 1203
     தும்மல் எழுவது போலத் தோன்றி எழாமல் அடங்குகின்றதே! அதனால், நம் காதலர் நினைப்பவர் போலிருந்தவர் நம்மை மறந்து நினையாமற் போயினாரோ!

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர். 1204
     எம் நெஞ்சில் காதலராகிய அவர் எப்போதுமே உள்ளனர்; அது போலவே, அவருடைய நெஞ்சில், நாமும் நீங்காமல் எப்போதும் இருக்கின்றோமோ?

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல். 1205
     தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாமல் காவல் செய்து கொண்ட நம் காதலர், நம் உள்ளத்தில் தாம் ஓயாமல் வருவதைப் பற்றி வெட்கப்பட மாட்டாரோ?

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்
உற்றநாள் உள்ள உளேன். 1206
     காதலரோடு இன்பமாயிருந்த அந்த நாட்களின் நினைவால் தான் நான் உயிரோடிருக்கிறேன்; வேறு எதனால் நான் அவரைப் பிரிந்தும் உயிர் வாழ்கின்றேன்?

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும். 1207
     அவரை மறந்தால் என்ன ஆவேனோ? அதனால், அவரை மறப்பதற்கும் அறியேன்; மறக்க நினைத்தால், அந்த நினைவும் என் உள்ளத்தைச் சுடுகின்றதே!

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு. 1208
     காதலரை எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அவர் என்மேல் சினந்து கொள்ளவே மாட்டார்; நம் காதலர் நமக்குச் செய்யும் சிறந்த உதவியே அதுதான்!

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து. 1209
     ‘நாம் இருவரும் வேறானவர் அல்லேம்’ என்று சொல்லும் அவர், இப்போது அன்பில்லாமல் இருப்பதை மிகவும் நினைந்து, என் இனிய உயிரும் அழிகின்றதே.

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி. 1210
     மதியமே! என் உள்ளத்தில் பிரியாதிருந்து, என்னைப் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காண்பதற்காக, நீயும் வானத்தில் மறையாமல் இருப்பாயாக!

122. கனவுநிலை உரைத்தல்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து. 1211
     பிரிவால் வருந்திய நான் அயர்ந்து கண் உறங்கிய போது, காதலர் அனுப்பிய தூதோடும் வந்த கனவுக்கு, யான் விருந்தாக என்ன கைம்மாறு செய்யப் போகின்றேன்!

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன். 1212
     யான் விரும்பும் போது என் கண்கள் தூங்குமானால், கனவில் வந்து தோன்றும் காதலருக்கு, யான் தப்பிப் பிழைத்திருக்கும் உண்மையைச் சொல்வேன்!

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர். 1213
     நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால் தான், என் உயிரும் இன்னமும் போகாமல் இருக்கின்றது.

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. 1214
     நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடிக் கொண்டு வருவதற்காகவே, அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் கனவில் வந்து நமக்குத் தோன்றுகின்றன.

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது. 1215
     முன்பு நனவில் கண்ட இன்பமும் அந்தப் பொழுதளவிலே இனிதாயிருந்தது; இப்பொழுது காணும் கனவும், காணும் அந்தப் பொழுதிலே நமக்கு இனிதாகவே யுள்ளது.

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். 1216
     நனவு என்று சொல்லப்படும் ஒன்று இல்லையானால், கனவில் வருகின்ற நம் காதலர் நம்மை விட்டு எப்போதுமே பிரியாதிருப்பார் அல்லவோ!

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது. 1217
     நனவில் வந்து நமக்கு அன்பு செய்வதற்கு நினையாத கொடுமையாளரான காதலர், கனவிலே வந்து மட்டும் நம்மை வருத்துவது தான் எதனாலோ?

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. 1218
     தூங்கும் போது கனவிலே என் தோள்மேலராகக் காதலர் வந்திருப்பார்; விழித்து எழும் போதோ, விரைவாக என் நெஞ்சில் உள்ளவராக ஆகின்றார்!

நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர். 1219
     கனவிலே காதலரை வரக்காணாத மகளிரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் குறித்து வருத்தப்பட்டு, மனம் நொந்து கொள்வார்கள்.

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர். 1220
     ‘நனவிலே நம்மைவிட்டுப் பிரிந்து போனார்’ என்று அவரைப் பற்றி இவ்வூரார் பழித்துப் பேசுகின்றார்களே! இவர்கள் எம்போல் கனவில் தம் காதலரைக் காண்பதில்லையோ?

123. பொழுதுகண்டு இரங்கல்

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. 1221
     பொழுதே! நீ மாலைக் காலமே அல்லை; காதலரோடு கூடியிருந்து, பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரையுண்ணும் முடிவு காலமே ஆவாய்!

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை. 1222
     மயங்கிய மாலைப்பொழுதே! எம்மைப்போலவே நீயும் துன்பமுற்றுத் தோன்றுகிறாயே! நின் துணையும் என் காதலரைப் போலவே இரக்கம் இல்லாததோ!

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும். 1223
     பனி தோன்றிப் பசந்துவந்த மாலைக் காலமானது, எனக்கு வருத்தம் தோன்றி மென்மேலும் வளரும்படியாகவே இப்போது வருகின்றது போலும்!

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். 1224
     காதலர் அருகே இல்லாத போது, கொலை செய்யும் இடத்திலே ஆறலைப்பார் வருவதைப் போல, இம் மாலையும் என் உயிரைக் கொல்வதற்காகவே வருகின்றதே!

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை? 1225
     காலைப் பொழுதுக்கு யான் செய்த நன்மைதான் யாது? என்னை இப்படிப் பெரிதும் வருத்துகின்ற மாலைப் பொழுதுக்கு யான் செய்த தீமையும் யாதோ?

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன். 1226
     மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்யும் என்பதை, காதலர் என்னை விட்டுப் பிரியாமல் கூடியிருந்த அந்தக் காலத்தில் யான் அறியவே இல்லையே!

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய். 1227
     காலையிலே அரும்பாகித் தோன்றி, பகலெல்லாம் பேரரும்பாக வளர்ந்து, மாலைப் பொழுதிலே மலர்ந்து மலராக விரிகின்றது. இந்தக் காமமாகிய நோய்.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை. 1228
     நெருப்பைப் போலச் சுடுகின்ற மாலைப் பொழுதுக்குத் தூதாகி, ஆயனுடைய புல்லாங்குழலின் இசையும், என்னைக் கொல்லும் படையாக வருகின்றதே!

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. 1229
     அறிவு மயங்கும் படியாக மாலைப்பொழுது வந்து படர்கின்ற இப்பொழுதிலே, இந்த ஊரும் மயங்கியதாய், என்னைப் போலத் துன்பத்தை அடையும்.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர். 1230
     பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைத்து, பிரிவுத் துன்பத்தாலே போகாமல் நின்ற என் உயிரானது, இம் மாலைப் பொழுதில் நலிவுற்று மாய்கின்றதே!

124. உறுப்புநலன் அழிதல்

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண். 1231
     இந்தத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்றுவிட்ட காதலரை நினைத்து அழுவதனாலே, என் கண்கள், தம் அழகிழந்து நறுமலர்களுக்கு நாணின.

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண். 1232
     பசலை நிறத்தைப் பெற்று நீரைச் சொரியும் கண்கள், நம்மை முன்பு விரும்பிய நம் காதலர், இப்போது அன்பு செய்யாததைப் பிறருக்கும் சொல்வன போல் உள்ளனவே!

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். 1233
     காதலரோடு கூடியிருந்த நாட்களிலே பூரித்திருந்த தோள்கள் மெலிவடைந்து, அவருடைய பிரிவைப் பிறருக்கு நன்றாகத் தெரிவிப்பவை போல் உள்ளனவே!

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். 1234
     தமக்கு துணையான காதலரைப் பிரிந்ததால், தம் பழைய அழகுகெட்டு வாடிய தோள்கள், தம் பசிய தொடிகளையும் சுழலச் செய்கின்றனவே!

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். 1235
     தொடிகளும் கழன்று வீழ, தம் பழைய அழகும் கெட்டுப் போன தோள்கள், நம் துன்பத்தை அறியாத கொடியவரின் கொடுமையை ஊரறியச் சொல்கின்றனவே!

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. 1236
     தொடிகள் கழன்று வீழ்ந்து, தோள்களும் மெலிந்ததனால், காண்பவர் மனம் நொந்தவராக, அவரைக் ‘கொடியவர்’ என்று கூறக்கேட்டு, யானும் வருந்துவேனே!

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து. 1237
     நெஞ்சமே! கொடியவராகிவிட்ட காதலருக்கு என் வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச் சொல்லி உதவியைச் செய்ததனால், நீயும் பெருமை அடையாயோ!

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். 1238
     தழுவியிருந்த கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பசிய தொடியணிந்த இப் பேதைமை உடையவளின் நெற்றியும் பசலை நிறத்தை அடைந்துவிட்டதே!

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண். 1239
     முயக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிதான மழை போன்ற கண்களும் அழகிழந்து, பசலை நிறம் அடைந்து விட்டனவே!

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு. 1240
     காதலியின் ஒளியுள்ள நெற்றி பசலை நிறம் அடைந்ததைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலை நிறமும் மேலும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது!

125. நெஞ்சொடு கிளத்தல்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து. 1241
     நெஞ்சமே! இந்தத் துன்பம் தரும் நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாயினும் ஒன்றை நினைத்துப் பார்த்து, எனக்கு நீயாயினும் சொல்ல மாட்டாயோ?

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு. 1242
     நெஞ்சமே! அவர்தாம் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்கவும், நீ மட்டும் அவரையே எப்போதும் நினைந்து நினைந்து வருந்துவது பேதைமை ஆகும்.

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல். 1243
     நெஞ்சமே! என்னுடன் இருந்தும் அவரையே நினைந்து வருந்துவது ஏன்? இத் துன்பநோயைச் செய்தவரிடம் நம்மேல் அன்புற்று நினைக்கும் தன்மை இல்லையே!

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று. 1244
     நெஞ்சமே! நீ அவரிடம் போகும் போது, இக்கண்களையும் அழைத்துப் போவாயாக! அவரைக் காண வேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர். 1245
     நெஞ்சமே! நாம் விரும்பி நாடினாலும், நம்மை நாடாத அவர், நம்மை வெறுத்து விட்டார் என்று நினைத்து, அவரைக் கைவிட நம்மால் முடியுமோ?

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. 1246
     என் நெஞ்சமே! ஊடிய போது ஊடலுணர்த்திக் கூடுகின்றவரான காதலரைக் கண்டால், நீ பிணங்கி உணரமாட்டாய்; பொய்யான சினம் கொண்டு தான் காய்கின்றாய்!

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு. 1247
     நல்ல நெஞ்சமே! ஒன்று காமத்தை விட்டுவிடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. 1248
     என் நெஞ்சமே! நம் துன்பத்தை நினைந்து இரங்கி வந்து அவர் அன்பு செய்யவில்லை என்று ஏங்கிப் பிரிந்த காதலரின் பின்னாகச் செல்கின்றாயே, நீ பேதைமை உடையை!

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு. 1249
     என் நெஞ்சமே! காதலர் நம் உள்ளத்துக்குள்ளேயே இருப்பவராகவும், நீதான் அவரை நினைத்து யாரிடத்திலே போய்த் தேடிச் செல்கின்றாயோ?

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின். 1250
     நம்மோடு சேர்ந்திருக்காமல் நம்மைப் பிரிந்து சென்றவரை நம் நெஞ்சிலேயே உடையவராய் நாம் இருக்கும் போது, இன்னும், நாம் அழகிழந்து வருகின்றோமே!

126. நிறையழிதல்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு. 1251
     ‘நாணம்’ என்னும் தாழ்பொருந்திய ‘நிறை’ என்னும் கதவினைக் காமம் ஆகிய கோடறியானது உடைத்துத் தகர்த்து விடுகின்றது.

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில். 1252
     காமம் என்று சொல்லப்படும் ஒன்று கொஞ்சமேனும் கண்ணோட்டமே இல்லாதது; அ·து என் நெஞ்சத்தை இரவிலும் ஏவல் செய்து ஆள்கின்றது.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும். 1253
     யான் காமநோயை என்னுள்ளேயே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவோ, என் குறிப்பின்படி மறையாமல், தும்மல் போலத் தானே புறத்து வெளிப்பட்டு விடும்.

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும். 1254
     இதுவரையில் நிறையோடு இருப்பதாகவே நினைத்திருந்தேன்; ஆனால், என் காமம், என்னுள் மறைந்திருந்த எல்லையைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றதே!

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று. 1255
     தம்மை வெறுத்தவர் பின்னே அவர் அன்பை வேண்டிச் செல்லாத பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் ஒரு தன்மையே அன்று.

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர். 1256
     வெறுத்துக் கைவிட்ட காதலரின் பின் செல்லுதலை விரும்பிய நிலையிலே இருப்பதனால், என்னை அடைந்த இக் காமநோயானது எத்தன்மை உடையதோ!

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின். 1257
     நாம் விரும்பிய காதலரும், காமத்தால் நமக்கு வேண்டியவற்றைச் செய்தாரானால், நாமும் ‘நாணம்’ என்று குறிக்கப்படும் ஒன்றையும் அறியாதேயே இருப்போம்.

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. 1258
     பல மாயங்களையும் அறிந்த கள்வனாகிய காதலனின் பணிவான சொற்கள் அல்லவோ, அன்று, தம் பெண்மை என்னும் அரணை உடைக்கும் படையாய் இருந்தன.

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு. 1259
     ஊடுவேன் என்று நினைத்துச் சென்றேன்; ஆனால், என் நெஞ்சம் என்னை மறந்து அவரோடு சென்று கலந்து விடுவதைக் கண்டு, அவரைத் தழுவினேன்.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல். 1260
     தீயிலே கொழுப்பை இட்டாற் போல உருகும் நெஞ்சை உடையவரான மகளிருக்கு, ‘இசைந்து ஊடி நிற்போம்’ என்று, ஊடும் தன்மைதான் உண்டாகுமோ!

127. அவர்வயின் விதும்பல்

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல். 1261
     அவர் வருவாரென வழியையே பார்த்துக் கண்களில் ஒளியும் கெட்டன; அவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின.

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து. 1262
     தோழி! அவரைப் பிரிந்து வருந்திருக்கும் இன்றைக்கும், அவரை மறந்தால், என் தோள்கள் அழகுகெட்டு மெலியும்; என் தோள் அணிகளும் கழலும்படி நேர்ந்துவிடும்.

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன். 1263
     வெற்றியை விரும்பி, ஊக்கமே துணையாக, வேற்று நாட்டிற்குச் சென்றுள்ள காதலர் திரும்பி வருதலைக் காண்பதற்கு விரும்பியே, இன்னும் உயிரோடுள்ளேன்.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு. 1264
     முன்னர்க் கூடியிருந்த காம இன்பத்தையும் மறந்து, பிரிந்து போனவரின் வரவை நினைத்து, என் நெஞ்சம் மரக்கிளை தோறும் ஏறி ஏறிப் பார்க்கின்றதே!

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு. 1265
     என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக; அவ்வாறு கண்ட பின் என் மெல்லிய தோள்களில் உண்டாகியுள்ள பசலைநோயும் தானாகவே நீங்கிப் போய்விடும்.

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட. 1266
     என் காதலன் ஒரு நாள் மட்டும் என்னிடம் வருவானாக; வந்தால், என் துன்ப நோய் எல்லாம் தீரும்படியாக, அவனோடு, இன்பத்தை நானும் பருகுவேன்.

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன். 1267
     என் கண் போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது தழுவிக் கொள்வேனோ? அல்லது ஆவலோடு கலந்து இன்புறுவேனோ? என்ன செய்வேன்?

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து. 1268
     வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக; யானும், என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப் பொழுதில், அவளோடு விருந்தை அனுபவிப்பேன்.

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. 1269
     தொலைவிடத்துக்குப் போய் பிரிந்து சென்ற காதலர் வரும் நாளை மனத்தில் வைத்து ஏங்கும் மகளிருக்கு, ஒரு நாள் தானும் ஏழுநாள் போல் நெடியதாகக் கழியும்.

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால். 1270
     பிரிவுத் துயரம் தாங்காமல் உள்ளம் உடைந்து அழிந்து போய்விட்டால், அவரைப் பெறுவதனால் என்ன? பெற்றால் தான் என்ன? அவரோடு பொருந்தினால் தான் என்ன?

128. குறிப்பறிவுறுத்தல்

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு. 1271
     நீதான் மறைந்தாலும், நின் மறைப்பையும் கடந்து, நின் கண்கள் எனக்குச் சொல்ல முற்படுகின்ற ஒரு செய்தியும் நின்னிடத்தில் உள்ளதாகும்.

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது. 1272
     கண் நிறைந்த பேரழகும், மூங்கில் போலும் அழகிய தோள்களும் கொண்ட என் காதலிக்கு, பெண்மை நிறைந்த தன்மையோ பெரிதாக உள்ளது.

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு. 1273
     நூலில் கோத்த மணியினுள்ளே காணப்படும் நூலைப் போல, என் காதலியின் அழகினுள்ளேயும் அமைந்து, புறத்தே விளங்குகின்ற குறிப்பும் ஒன்று இருக்கின்றது.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. 1274
     அரும்பினுள்ளே அடங்கியிருக்கின்ற மணத்தைப் போல, என் காதலியின் புன்முறுவலின் உள்ளே அடங்கியிருக்கும் உள்ளத்தின் குறிப்பும் ஒன்று உள்ளது.

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. 1275
     செறிந்த தொடியுடையவளான என் காதலி செய்துவிட்டுப் போன கள்ளமான குறிப்பானது, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் ஒரு மருந்தையும் உடையதாய் இருந்தது.

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து. 1276
     பெரிதாக அன்பைச் செய்து, விருப்பம் மிகுதியாகுமாறு கலத்தல், அரிதான பிரிவைச் செய்து, அன்பில்லாமல் விட்டுப் பிரியும் உட்கருத்தையும் உடையதாகும்.

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை. 1277
     குளிர்ந்த நீர்த் துறைக்கு உரியவனாகிய நம் காதலன் நம்மைப் பிரிந்ததனை, நம்மைக் காட்டிலும், நம் கைவளையல்கள் முன்னதாகவே உணர்ந்து தாமும் கழன்றனவே!

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து. 1278
     நேற்றுத்தான் எம் காதலர் எம்மைப் பிரிந்து சென்றனர்; யாமும், அவரைப் பிரிந்து ஏழுநாட்கள் ஆகியவரைப் போல மேனி பசலை படர்ந்தவராய் இருக்கின்றோமே!

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அ·தாண் டவள்செய் தது. 1279
     தன் தோள்வளைகளை நோக்கி, மென்மையான தோள்களையும் நோக்கி, தன் அடிகளையும் நோக்கி, அவள் செய்த குறிப்பு உடன்போக்கு என்பதே ஆகும்.

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு. 1280
     கண்ணினாலே காம நோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்கும்படி இரத்தல், பெண் தன்மைக்கு, மேலும் சிறந்த பெண் தன்மை உடையது என்று சொல்லுவர்.

129. புணர்ச்சி விதும்பல்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு. 1281
     நினைத்த பொழுதிலே களிப்படைவதும், கண்டபொழுதிலே மகிழ்ச்சி அடைவதும் ஆகிய இரண்டு நிலையும், கள்ளுக்குக் கிடையாது; காமத்திற்கு உண்டு.

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்
காமம் நிறைய வரின். 1282
     பனையளவு பெரிதாகக் காமம் நிறைந்து வரும்பொழுது, காதலரோடு தினையளவுக்குச் சிறிதாகவேனும் ஊடிப் பிணங்காமல் இருத்தல் வேண்டும்.

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண். 1283
     என்னைப் பேணி அன்பு செய்யாமல் புறக்கணித்து, தான் விரும்பியபடியே அவன் செய்தாலும், என் காதலனைக் காணாமல் என் கண்கள் அமைதி அடையவில்லையே!

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு. 1284
     தோழி! நான் அவரோடு ஊடுதலையே நினைத்துச் சென்றேன்; ஆனால் என் நெஞ்சமோ, அதை மறந்துவிட்டு, அவரோடு இணைந்து கூடுவதிலேயே சென்றதே!

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து. 1285
     மை எழுதும் போது, எழுதும் கோலைக் காணாத கண்ணின் தன்மையைப் போல, என் காதலனைக் கண்டபோது, அவன் குற்றங்களையும் யான் காணாமற் போகின்றேனே!

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை. 1286
     என் காதலனைக் காணும் போது, அவர் போக்கிலே தவறானவற்றையே காணமாட்டேன்; அவரைக் காணாத போதோ, தவறல்லாத நல்ல செயல்களையே யான் காணேன்.

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து. 1287
     ஓடும் வெள்ளம் இழுத்துப் போகும் என்பதை அறிந்தும் அதனுள் பாய்கின்றவரைப் போல, ஊடுதல் பயனில்லை என்பதை அறிந்தும், நாம் ஊடுவதால் பயன் என்ன?

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு. 1288
     கள்வனே! இழிவு வரத்தகுந்த துன்பங்களையே செய்தாலும், கள்ளுண்டு களித்தவருக்கு மென்மேலும் ஆசையூட்டும் கள்ளைப் போல், நின் மார்பும் ஆசையூட்டுகிறதே!

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். 1289
     அனிச்சமலரைக் காட்டிலும் காமம் மிக மென்மையானது; அதன் தன்மை அறிந்து, அதன் சிறந்த பயனையும் பெறக் கூடியவர்கள், உலகத்தில் சிலரே யாவர்.

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று. 1290
     கண் நோக்கத் தளவிலே பிணங்கினாள்; பின், என்னைக் காட்டிலும் தான் தழுவுவதிலே விருப்பம் கொண்டவளாகத் தன் பிணக்கத்தையும் மறந்து, அவள் கலங்கினாள்.

130. நெஞ்சொடு புலத்தல்

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது. 1291
     நெஞ்சமே! அவர் நெஞ்சமானது நம்மை மறந்து அவர் விருப்பத்தையே மேற்கொள்வதைக் கண்ட பின்னரும், நீதான் எமக்குத் துணையாகாதது தான் எதனாலோ?

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. 1292
     என் நெஞ்சமே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்ட போதும், அவர் வெறுக்க மாட்டார் என்று நினைந்து அவரிடமே செல்கின்றாயே! அதுதான் எதனாலோ?

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல். 1293
     நெஞ்சமே! நீ நின் விருப்பத்தின்படியே அவர் பின்னாகச் செல்லுதல், துன்பத்தாலே கெட்டுப் போனவருக்கு நண்பராக யாருமே இல்லை என்பதனாலோ?

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று. 1294
     நெஞ்சமே! நீதான் ஊடுதலைச் செய்து அதன் பயனையும் நுகரமாட்டாய்; இனிமேல் அத்தகைய செய்திகளைப் பற்றி நின்னோடு ஆராய்பவர் தாம் எவரோ?

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. 1295
     அவரைப் பெறாத போதும் அஞ்சும்; பெற்ற போதும் பிரிவாரோ என்று அஞ்சும்; இவ்வாறு என் நெஞ்சம் நீங்காத துயரையே உடையதாகின்றது.

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு. 1296
     அவரைப் பிரிந்த நாளில், தனியே இருந்து நினைத்த போது, என் நெஞ்சம் எனக்குத் துணையாகாமல், என்னைத் தின்பது போலத் துன்பம் தருவதாக இருந்தது!

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு. 1297
     காதலரை மறக்கவியலாத, என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்தோடு சேர்ந்து, மறக்கக் கூடாததாகிய நாணத்தையும் நான் மறந்தேனே!

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. 1298
     ‘பிரிந்த கொடுமையாளரை இகழ்ந்தால் இழிவாகும்’ என்று நினைத்து, அவர் மேல் உயிர் போலக் காதல் கொண்ட என் நெஞ்சம், அவரது உயர் பண்புகளையே நினைக்கிறதே!

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி. 1299
     தாம் உரியதாக அடைந்திருக்கும் நம் நெஞ்சமே தமக்குத் துணையாகாத பொழுது, ஒருவருக்குத் துன்பம் வந்த காலத்தில், வேறு எவர் தாம் துணையாவார்கள்.

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி. 1300
     தாம் சொந்தமாக உடைய நெஞ்சமே தமக்கு உறவாகாத போது, அயலார் உறவில்லாதவராக அன்பற்று இருப்பது என்பதும் இயல்பானதே ஆகும்.