திருவள்ளுவர்

இயற்றிய

திருக்குறள்

உரையாசிரியர் : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 2 ...

அறத்துப்பால்

இல்லறவியல்

11. செய்ந்நன்றி அறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.101
     தான் எதுவுமே செய்யாதிருக்கவும், பிறன் தனக்குச் செய்த உதவிக்கு, இவ்வுலகமும் வானுலகமும் ஈடாக முடியாது.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. 102
     காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறிதே என்றாலும், அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.103
     பயனைக் கருதாதவர் செய்த உதவியின் நன்மையினை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலையும் விட அளவினால் மிகப் பெரியதாகும்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.104
     உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவே ஒருவன் நன்மை செய்தாலும், அதனைப் பனையளவாக உளங் கொண்டு போற்றுவார்கள்.

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.105
     உதவியானது அதன் அளவையே எல்லையாக உடையது அன்று; அது, உதவி செய்யப்பட்டவரின் பண்பையே தனக்கு அளவாக உடையதாகும்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.106
     மனமாசு இல்லாதவரின் நட்பினை ஒரு போதும் மறக்கலாகாது; துன்பக் காலத்தில் உறுதுணையாக உதவியவரின் நட்பையும் விடலாகாது.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.107
     தம்முடைய துன்பத்தை ஒழித்தவரின் நட்பினை, ஏழேழ் பிறப்பினும் மறவாது நினைந்து போற்றுவர், நன்றியுடையோர்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.108
     ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது; ஆனால், அவர் செய்த தீமையை அன்றைக்கே மறந்து விடுவது மிகவும் நல்லது.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.109
     ஒருவர் நம்மைக் கொன்றாற் போன்றதொரு துன்பத்தைச் செய்தாலும், அவர் முன்பு செய்த நன்மை ஒன்றை நினைத்தாலும் அத் துன்பம் கெடும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.110
     எந்த நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்; ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.

12. நடுவு நிலைமை

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின். 111
     ஒவ்வொரு பகுதிதோறும் முறையோடு பொருந்தி நடைபெறுமானால், ‘தகுதி’ என்று கூறப்படும் நடுவுநிலைமையும் நல்லதே ஆகும்.

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 112
     செம்மை உடையவனின் பொருள் வளமையானது இடையிலே அழிந்து போகாமல், அவன் வழியினர்க்கும் உறுதியாக நன்மை தரும்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல். 113
     நன்மையே தருவது என்றாலும், நடுவுநிலைமை தவறுதலால் வருகின்ற வளத்தை, அப்போதே உள்ளத்திலிருந்து போக்கி விட வேண்டும்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். 114
     ஒருவர் தகுதியாளர், மற்றவர் தகுதியற்றவர் என்று உரைப்பது எல்லாம், அவரவரது எஞ்சி நிற்கும் புகழும் பழியும் என்பனவற்றால் காணப்படும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. 115
     பொருள் கேடும், பொருள் பெருக்கமும் வாழ்வில் இல்லாதன அல்ல; நெஞ்சத்தில் என்றும் நடுவுநிலைமை கோணாதிருப்பதே சான்றோர்க்கு அழகாகும்.

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். 116
     தன் நெஞ்சமானது நடுவுநிலைமையிலிருந்து விலகி, தவறு செய்பவன், ‘யான் இதனால் கெடுவேன்’ என்பதனையும் அறிந்து கொள்வானாக!

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. 117
     நடுவுநிலைமையோடு நன்மையான செயல்களிலே நிலைத்திருப்பவனின் தாழ்ச்சியையும் கேடு என்று உலகம் ஒரு போதும் கொள்ளாது.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. 118
     தன்னைச் சமனாகச் செய்து கொண்டு, பொருளைச் சீர்தூக்கிக் காட்டும் துலாக்கோல் போல அமைந்து, ஒரு பக்கம் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்.

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின். 119
     உள்ளத்திலே கோணுதலற்ற பண்பை முடிவாகப் பெற்றிருந்தால், சொற்களில் கோணுதல் இல்லாதிருத்தலும் செப்பமாக உணரப்படும்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். 120
     பிறர் பொருளையும் தமதேபோலக் கருதிக் கொண்டு ஒழுகுதல், வாணிகத்தைச் செய்வார்க்குரிய நல்ல வாணிக மரபாகும்.

13. அடக்கம் உடைமை

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். 121
     அடக்கமானது அதனை உடையவனை அமரருள் சேர்த்து வைக்கும்; அடங்காமையோ பேரிருள் ஆகிய நரகிற் சேர்த்துவிடும்.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. 122
     அடக்கத்தைச் செல்வமாகப் பேணிக் காத்து வருக; உயிருக்கு ஆக்கந் தருவது அதனினும் மேம்பட்ட செல்வம் பிற யாதுமில்லை.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். 123
     அறிய வேண்டுவன அறிந்து நல்வழியிலே அடக்கத்தோடு நடக்கும் பண்பைப் பெற்றால், அதன் செறிவை அறிந்து மேன்மையும் உண்டாகும்.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. 124
     தன் நிலையிலிருந்து திரிந்து போகாமல் அடங்கி இருப்பவனின் தோற்றமானது, மலையைக் காட்டிலும் மிகப் பெரிதான உயர்வு உள்ளதாகும்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. 125
     பணிவாக நடத்தல் என்பது எல்லார்க்கும் நன்மையானதாகும். அவருள்ளும் செல்வர்க்கு அதுவும் ஒரு செல்வத்தைப் போன்ற சிறப்பினதே யாகும்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. 126
     ஆமையைப் போல, ஐம்பொறிகளையும் இந்த ஒரு பிறப்பிலே அடக்கிக் கொள்ளுதலில் வல்லவனானால், அதனால் எழுமையும் பாதுகாப்பு உண்டு.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 127
     எவற்றைக் காத்தவராயினும் தன் நாவைத் தவறாமல் காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பம் அடைவர்.

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். 128
     தீய சொற்களாலே வந்தடைந்த பொருளாகிய நன்மை ஒன்றாயினும் ஒருவனிடம் இருந்தாலும், அதனால் எல்லா நன்மையும் இல்லாமற் போய்விடும்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. 129
     தீயினாலே சுடப்பட்ட புண் உள்ளே ஆறிவிடும்; ஆனால், நாவினால் சுட்ட வடுவானது உள்ளத்தில் ஒரு போதும் மறையவே மறையாது.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 130
     சினத்தைக் காத்து, கல்வி கற்று, அடங்கி வாழ்தலையும் மேற்கொள்பவனின் செவ்வியை, அவன் வழியில் சென்று அறமானது பார்த்திருக்கும்.

14. ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். 131
     ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதனால், அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் காக்கப்படும்.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. 132
     வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும்; பலவும் ஆராய்ந்து கைக்கொண்டு தெளிந்தாலும், ஒழுக்கமே உயிருக்குத் துணையாகும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். 133
     ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மை; ஒழுக்கம் கெடுதல் இழிந்த பிறப்பின் தன்மையாகி விடும்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134
     கற்றதை மறந்தாலும் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம்; ஆனால், வேதமோதுவான் பிறப்பால் வந்த உயர்வு, அவன் ஒழுக்கம் குன்றினால் கெடும்.

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு. 135
     பொறாமை உடையவனிடத்திலே ஆக்கம் அமையாதது போல, ஒழுக்கம் இல்லாதவன் வாழ்க்கையிலும் உயர்வு இல்லை!

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. 136
     மன வலிமை உடையவர், ஒழுக்கம் குன்றுதலால் குற்றம் நேரிடுதலை அறிந்து, ஒழுக்கத்திலிருந்து ஒரு போதுமே, பிறழ மாட்டார்கள்.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. 137
     ஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவார்கள்; ஒழுக்கக் கேட்டால் அடையத் தகாத பழியை அடைவார்கள்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். 138
     நல்ல ஒழுக்கமானது இன்பமான நல்வாழ்வுக்கு வித்தாக இருக்கும்; தீய ஒழுக்கமோ எக்காலத்தும் துன்பத்தையே தரும்.

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். 139
     தீய சொற்களைத் தவறியும் தம் வாயினாற் சொல்லும் குற்றம், நல்ல ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒரு போதும் பொருந்தாத பண்பாகும்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். 140
     உலகத்தாரோடு பொருந்தி ஒழுகும் தன்மையை அறியாதவர், பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர்.

15. பிறனில் விழையாமை

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். 141
     பிறனுக்கு உரியவளான ஒருத்தியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்து அறமும் பொருளும் ஆராய்ந்தவரிடத்து இருப்பது இல்லை.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். 142
     நல்ல அறநெறியை மறந்து கீழான வழியிலே சென்றவர் எல்லாரினும், பிறன்மனைவியை இச்சித்து, அவன் வீட்டு வாயிலில் நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார். 143
     சந்தேகப்படாமல் தெளிந்து நம்பியர் வீட்டில் தீமையைச் செய்து நடப்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர்.

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். 144
     தினையளவேனும் தம் பிழையை ஆராயாமல் பிறன் இல்லத்தே செல்லுதல், எவ்வளவு சிறப்புடையவர் ஆயினும் என்னவாக முடியும்?

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. 145
     இது செய்வதற்கு எளிது எனக் கருதி பிறன் மனைவிபால் செல்கின்றவன், எக்காலத்தும் மறையாமல் நிலைத்து நிற்கும் பழியை அடைவான்.

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். 146
     பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை நாடிச் செல்பவனிடமிருந்து எப்போதும் நீங்காதனவாம்.

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன். 147
     அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்விலே வாழ்பவன் என்பவன், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாதவனே ஆவான்.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. 148
     பிறன் மனைவியை இச்சித்துப் பார்க்காத பேராண்மை, சான்றோர்க்கு அறன் மட்டுமன்று; நிரம்பிய ஒழுக்கமும் ஆகும்.

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார். 149
     அச்சந்தரும் கடல் சூழ்ந்த இவ்வுலகிலே ‘நன்மைக்கு உரியவர் யார்?’ என்றால், பிறருக்கு உரியவளின் தோளைத் தழுவாதவரே ஆவர்.

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. 150
     அறத்தையே கருதாமல் ஒருவன் அறமல்லாதனவற்றையே செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாதிருத்தலே நல்லதாகும்.

16. பொறையுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151
     தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப் போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச் சிறந்த பண்பாகும்.

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. 152
     அளவு கடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும்; அதனை நினையாமலே மறந்து விடுதல் அதனிலும் நன்மையாகும்.

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. 153
     வறுமையுள்ளும் வறுமையாவது விருந்தைப் போற்றாமல் விடுதல்; வலிமையுள்ளும் வலிமையாவது அறிவிலார் செயலைப் பொறுத்தல் ஆகும்.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும். 154
     நிறை உடையனாயிருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், அவன் பொறையுடைமையைப் போற்றிக் கைக்கொள்ள வேண்டும்.

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. 155
தமக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரை ஒரு பொருளாக எவரும் மதியார்; ஆனால், பொறுத்தவர்களைப் பொன்போற் பொதிந்து வைப்பார்கள்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். 156
     தீங்கு செய்தவர்களை தண்டித்தவர்களுக்கு அன்று ஒரு நாளைக்கே இன்பம்; ஆனால், பொறுத்தவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் உண்டு.

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. 157
     தகுதியில்லாதவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், அதனால் மிகவும் மனம் நொந்து அவருக்குத் தீமை செய்யாதிருத்தல் நல்லது.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். 158
     செருக்கு மிகுதியால் தீமை செய்தவர்களை தாம், தம்முடைய பொறுமை என்னும் தகுதியினால் வென்று விட வேண்டும்.

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். 159
     எல்லை மீறி நடப்பவரின் வாயிற் பிறக்கும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள், துறவியர் போலத் தூய்மையாளர் ஆவர்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். 160
     உணவு உண்ணாமல் நோன்பு கொள்பவர், பிறர் சொல்லும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையிலே தான் பெரியவர் ஆவர்.

17. அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. 161
     தன் நெஞ்சில் பொறாமை எண்ணம் இல்லாத தன்மையினையே, ஒருவன் தனக்கு உரிய வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். 162
     ஒருவன் எவரிடத்திலும் எப்போதும் பொறாமை இல்லாமல் இருக்கின்ற தன்மையைப் பெறுவானாயின், மேலான பேறுகளில் அதற்கு இணையாகச் சிறந்தது எதுவும் இல்லை.

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான். 163
     பிறனுடைய ஆக்கத்தைக் கண்டதும், அதனைப் பாராட்டாமல் பொறாமைப்படுகிறவன், தனக்கு அறனும் ஆக்கமும் சேர்வதை விரும்பாதவனே ஆவான்.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து. 164
     ‘பொறாமை’ என்னும் தவறான எண்ணத்தால் துன்பமே உண்டாவதை அறிந்து, அறிவாளர், பொறாமையால் தீவினைகளைச் செய்ய மாட்டார்கள்.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது. 165
     பொறாமை உடையவரைக் கெடுப்பதற்கு எந்தப் பகையும் வேண்டாம்; அதுவே போதும்; பகைவர் கேடு செய்யத் தவறினாலும், அது தவறாமல் கேட்டைத் தந்துவிடும்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.166
     இன்னொருவன் பிறனுக்குக் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப்படுகிறவனின் குடும்பம், உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாமல் கெடும்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். 167
     பொறாமை உடையவனைக் கண்டு திருமகள் வெறுத்து, அவனைத் தன் தமக்கையான மூதேவிக்குக் காட்டி, தான் அவனை விட்டு நீங்கிப் போய்விடுவாள்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். 168
     பொறாமை என்னும் ஒப்பற்ற கொடிய ‘பாவி’, ஒருவனது செல்வத்தையும் கெடுத்து, அவனைத் தீய வழியிலும் செல்லும்படி செலுத்திவிடும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். 169
     பொறாமை கொண்ட நெஞ்சத்தானின் ஆக்கமும், பொறாமையற்ற சிறந்தவனுடைய கேடும், மக்களால் எப்போதும் நினைக்கப்படும்.

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். 170
     உலகில் பொறாமையினால் மேன்மை அடைந்தாரும் இல்லை; பொறாமை இல்லாததால் பொருள் பெருக்கத்தில் குறைந்த வறுமையானவரும் இல்லை.

18. வெஃகாமை

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். 171
     நடுவுநிலைமை இல்லாமல், பிறரது நல்ல பொருளைக் கவர்வதற்கு நினைத்தால், அவன் குடும்பம் கெட்டுப் போவதுடன், அவனுக்கு என்றும் அழியாத குற்றமும் வந்து சேரும்.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். 172
     நடுவுநிலைமை தவறுவதற்கு வெட்கப்படுகிறவர்கள், கவர்தலால் வந்தடையும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யவோ மாட்டார்கள்.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். 173
     நிலையான இன்பத்தை விரும்புகிறவர்கள், கவரும் பொருளால் வரும் சிறிய இன்பத்தை விரும்பி, அறன் அல்லாத செயல்களைச் செய்ய மனம் விரும்பமாட்டார்கள்.

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். 174
     ஐம்புலன்களையும் வென்ற குறை இல்லாத அறிவாளர்கள், ‘யாம் பொருளில்லாதேம்’ என்ற வறுமை நிலையிலும் பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்கள்.

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். 175
     ஒருவன் எவரிடத்திலிருந்தும் பொருளைக் கவர நினைத்துப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமாகவும் விரிவானதாகவும் வளர்ந்த அவனது அறிவால் ஏதும் பயனில்லை.

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும். 176
     அருளை விரும்பி நல்லொழுக்கத்திலே நிலைத்து நின்றவன், பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயல்களைச் செய்ய நினைத்தால், கெட்டுப் போய்விடுவான்.

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். 177
     பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வதால் வரும் ஆக்கத்தை எவருமே விரும்ப வேண்டாம்; செயல் அளவில் அதன் பயன் நன்மையாவது என்பது எப்போதும் அரிதாகும்.

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். 178
     ஒருவனது செல்வ வளம் குறையாமல் இருப்பதற்குரிய வழி யாதென்றால், அவன் பிறன் பொருளைக் கவர விரும்பாதிருத்தலே ஆகும்.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. 179
     அறத்தை அறிந்து, பிறன் பொருளைக் கவர விரும்பாத அறிவுடையாரை, திருமகள், தான் சேர்வதற்குரிய திறன் தெரிந்து சென்று அடைவாள்.

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு. 180
     வரும் துன்பத்தை நினையாமல் பிறர் பொருளைக் கவர விரும்பினால், அது கெடுதலைத் தரும்; அதனை விரும்பாதிருத்தல் என்னும் பெருமையே வெற்றியைத் தரும்.

19. புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. 181
    அறத்தைப் பற்றி வாயாலும் சொல்லாதவனாய், ஒருவன் தீய செயல்களையே செய்து வந்தாலும், ‘அவன் பிறனைப் பழித்துப் புறங்கூறாதவன்’ என்பது இனிதாகும்.

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. 182
    அறத்தையே அழித்துத் தீமைகளைச் செய்து வருவதைக் காட்டிலும், இல்லாதபோது ஒருவனைப் பழித்துப் பேசி, நேரில் பொய்யாகச் சிரிப்பது தீமையாகும்.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும். 183
    பிறர் இல்லாத போது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, இறந்து போதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல். 184
    நேரில் நின்று இரக்கம் இல்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசுக; நேரில் இல்லாத போது பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் எடுத்துச் சொல்லக் கூடாது.

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும். 185
    அறநூல்கள் கூறும் உள்ளமுள்ளவனாக ஒருவன் இல்லாத தன்மையினை, அவன் புறங்கூறுகின்றதான அந்த இழி செயலால் தெளிவாக அறியலாகும்.

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். 186
    பிறனைப் பின்னால் பழித்துப் பேசுபவன், அவனுடைய பழிச் செயல்களுள்ளும் இழிவானதைத் தெரிந்தெடுத்துக் கூறிப் பிறரால் மிகவும் பழிக்கப்படுவான்.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். 187
    ‘மகிழ்ச்சியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை’ என்று தெளியாதவரே, பிறர் தம்மைவிட்டு விலகுமாறு பழித்துப் பேசி, தமக்குள்ள நண்பரையும் பிரித்து விடுவர்.

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு. 188
    நெருங்கிய நட்பினரின் குற்றத்தையும் புறத்தே பேசித் தூற்றும் இயல்பினர், அயலாரிடத்து எப்படி மோசமாக நடந்து கொள்வார்களோ?

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. 189
    ஒருவன் இல்லாததைப் பார்த்து, அவனைப் பற்றி இழிவான சொற்களை உரைப்பவனையும், அறத்தைக் கருதியேதான் உலகம் தாங்கிக் கொண்டிருக்கின்றதோ?

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 190
    அயலாரின் குற்றங்களைக் காண்பது போலவே தம் குற்றங்களையும் காண்பாரானால், நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ?

20. பயனில சொல்லாமை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். 191
    பலரும் வெறுக்கும்படி பயனில்லாத சொற்களையே சொல்லும் ஒருவன், உலகினர் எல்லாராலுமே இகழ்வாகப் பேசப் படுவான்.

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது. 192
    பலபேர் முன்பாகப் பயனற்ற பேச்சைப் பேசுதல், நன்மை அல்லாத செயலை நண்பர்களிடத்தில் செய்வதை விடத் தீமையானது ஆகும்.

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை. 193
    பயன் இல்லாத ஒன்றைப் பற்றியே விரிவாகப் பேசும் ஒருவனது பேச்சானது, ‘அவன் நல்ல பண்பில்லாதவன்’ என்பதை உலகுக்கு அறிவிக்கும்.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. 194
    பயனோடு சேராத பண்பற்ற சொற்களைப் பலரோடும் சொல்லுதல், எந்த நன்மையும் தராததோடு, உள்ள நன்மையையும் போக்கிவிடும்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். 195
    நல்ல பண்பு உடையவர்களும், பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்களானால், அவர்களுடைய சிறந்த தன்மையும் சிறப்பும் நீங்கிப் போகும்.

பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல். 196
    பயனில்லாத சொற்களையே விரும்பித் தொடர்ந்து பேசுபவனை, ‘மனிதன்’ என்றே சொல்லக் கூடாது; மக்களுள், ‘பதர்’ என்றே கொள்ளல் வேண்டும்.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. 197
    நன்மை இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனில்லாத சொற்களை எப்போதுமே சான்றோர் சொல்லாமலிருத்தல் நல்லது.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். 198
    அருமையான பயன்களை ஆராய்கின்ற அறிவாளர்கள், பெரும் பயன் இல்லாத சொற்களை ஒருபோதுமே சொல்ல மாட்டார்கள்.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர். 199
    மனமயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவை உடையவர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும் கூட ஒரு காலத்திலும் சொல்ல மாட்டார்கள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். 200
    சொன்னால், பயன் தருகின்ற சொற்களையே யாவரும் சொல்லுக; பயனில்லாத சொற்களை ஒருபோதுமே எவரும் சொல்லாதிருக்க வேண்டும்.