திருவள்ளுவர்

இயற்றிய

திருக்குறள்

உரையாசிரியர் : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 3 ...

அறத்துப்பால்

இல்லறவியல்

21. தீவினை அச்சம்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. 201
     தீய செயலைச் செய்தலாகிய இறுமாப்பைத் தீவினையாளர்கள் அஞ்சமாட்டார்கள்; ஆனால், மேலோர்கள் தீயவைகளைச் செய்வதற்கு அஞ்சுவார்கள்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். 202
     தீய செயல்கள் பிறர்க்கும் தமக்கும் தீமை விளைவித்தலால், தீயசெயல்களைத் தீயினும் கொடியதாகச் சான்றோர் நினைத்து அஞ்சுவார்கள்.

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். 203
     நமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. 204
     பிறனுக்குக் கேடு செய்வதைப் பற்றி மறந்தும் நினைக்கக் கூடாது. நினைத்தால், அப்படி நினைத்தவனுக்குக் கேடு செய்ய அறமே நினைக்கும்.

இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. 205
     ‘இவன் துணையிலன்’ என்று ஒருவனுக்குத் தீமையைச் செய்யாதிருக்க வேண்டும்; செய்தால், மீண்டும் இவனே யாதும் துணை இல்லாதவன் ஆவான்.

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். 206
     துன்பம் தருவனவான தீவினைகள் தன்னைத் தொடர்ந்து வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறரிடம் ஒரு போதும் செய்யாதிருப்பானாக.

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். 207
     எத்தகைய பகைமை உடையவரும் தப்பிப் பிழைப்பர்; தீவினையாகிய பகையோ, ஒருவனை விடாமல் பின்பற்றிச் சென்று துன்பத்தைச் செய்யும்.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று. 208
     தீய செயல்களைச் செய்தவர் கெடுதல் உறுதி என்பது, நிழல் தன்னை விடாமல் வந்து தன் காலடியிலேயே தங்கி இருத்தலைப் போன்றதாகும்.

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால். 209
     ஒருவன், தன்னைத் தான் விரும்பி வாழ்பவனானால், அவன் எத்தகையதொரு தீய செயல்களிலும் ஒருபோதுமே ஈடுபடாமல் இருப்பானாக!

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். 210
     ஒருவன், தவறான வழியிலே சென்று தீய செயல்களைச் செய்யாதிருப்பானானால், அவன் கேடற்றவன் ஆவான் என்று தெளிவாக அறியலாம்.

22. ஒப்புரவு அறிதல்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு. 211
     மழைக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? உலக நன்மையைக் கருதிச் சான்றோர் செய்யும் கடமைகளும் அவ்வாறே, கைம்மாறு விரும்பாதவைகளே!

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. 212
     தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்.

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. 213
     ஒப்புரவைப் போலப் பலருக்கும் நன்மையான வேறொரு பண்பை இவ்வுலகத்திலும், தேவர்களின் உலகத்திலும் பெறுவது அருமை ஆகும்.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். 214
     ‘எவ்வுயிரும் ஒத்த தன்மையானது’ என்று அறிந்து உதவி செய்து வாழ்பவனே உயிர் வாழ்கின்றவன்; ஒப்புரவற்ற மற்றவன், செத்தவருள் வைத்துக் கருதப்படுவான்.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. 215
     உலகினர் எல்லாரும் விரும்புமாறு, உதவி செய்து வாழும் பேரறிவாளனுடைய செல்வமானது, ஊருணியிலே நீர் நிரம்பினால் போலப் பலருக்கும் பயன்படுவதாகும்.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். 216
     செல்வம் நல்ல பண்பு உடையவனிட்ம சென்று சேர்தலானது, ஊருக்குள்ளே பழமரம் பழுத்திருப்பது போலப் பலருக்கும் பயன் தருவதாகும்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். 217
     செல்வமானது பெருந்தகுதி உடையவனிடம் சேர்தல், பிணி தீர்க்கும் மருந்தாகிப் பயன் தரத் தவறாத மருந்துமரம் போல எப்போதும் பயன் தருவதாகும்.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். 218
     ஒப்புரவு செய்தலாகிய கடமையை அறிந்த அறிவாளர்கள், அதற்கேற்ற பொருள்வசதி இல்லாத காலத்திலும் முடிந்தவரை உதவத் தளர மாட்டார்கள்.

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு. 219
     ஒப்புரவாகிய நல்ல பண்பை உடையவன் பொருளற்று வறுமை உடையவனாதல், செய்யத் தகுந்த உதவிகளைச் செய்யவியலாது வருந்துதலே ஆகும்.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அ·தொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. 220
     ஒப்புரவினாலே கேடு வரும் என்றால், அந்தக் கேடானது தன்னை விற்றாவது ஒருவன் பெறுவதற்குத் தகுந்த சிறப்பை உடையதாகும்.

23. ஈகை

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. 221
     வறுமையானவர்க்கு ஒரு பொருளைத் தந்து உதவுவதே ஈகை; பிறருக்குத் தருவது எல்லாம் எதிர்ப்பயனை எதிர்பார்த்துத் தருவது ஆகும்.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. 222
     ‘நல்ல அறச்செயலுக்கே’ என்றாலும், பிறரிடம் இரந்து பெறுவது தீமையே; மேலுலகம் இல்லையானாலும் பிறருக்குக் கொடுத்து உதவுதலே நன்மையானது.

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. 223
     ஒருவன் வந்து, ‘நான் யாதும் இல்லாதவன்’ என்று தன் துன்பத்தைச் சொல்லும் முன்பாகவே, அவனுக்கு உதவும் தன்மை உயர்ந்த குடிப்பிறப்பாளனிடம் உண்டு.

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு. 224
     உதவியை நாடி வந்து இரந்தவருடைய மகிழ்ச்சியான முகத்தைக் காணும் வரைக்கும், இரந்து கேட்கப்படுதலும் ஈகையாளனுக்குத் துன்பம் தருவதேயாகும்.

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். 225
     பசியைப் பொறுத்துக் கொள்பவரது ஆற்றலே சிறந்த ஆற்றலாகும்; அதுவும் அப்பசி நோயை உணவளித்து மாற்றுவாரின் ஈகைக்குப் பிற்பட்டதே ஆகும்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அ·தொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. 226
     எதுவுமே இல்லாத ஏழையரின் கொடிய பசிநோயைப் போக்க வேண்டும்; அதுதான் பொருள்பெற்றவன் தன் பொருளைச் சேமித்து வைக்கும் இடமும் ஆகும்.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. 227
     பலரோடும் பகுத்து உண்ணுகின்ற பழக்கம் உடைய கொடையாளனைப் ‘பசி’ என்கின்ற தீய நோயானது சென்று தீண்டுதல் என்பதே அருமையாகும்.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். 228
     தாம் சேர்த்துள்ள செல்வத்தைக் காப்பாற்றி வைத்துப் பின் இழந்துவிடும் கல்நெஞ்சர்கள், பிறருக்குக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியமாட்டார்களோ?

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். 229
     தாம் முயன்று தேடி நிரப்பி வைத்துள்ளதைத் தாமே தனியாக உண்டு மகிழ்வது என்பது, வறுமையால் பிறரிடம் சென்று இரத்தலை விடத் துன்பம் தருவதாகும்.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. 230
     சாதலைக் காட்டிலும் துன்பமானது யாதுமே இல்லை; பிறருக்குக் கொடுத்து உதவ நினையாத கடைப்பட்டவனைப் பொறுத்தமட்டில் அப்படிச் சாதலும் இனியதே ஆகும்.

24. புகழ்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. 231
     உள்ளதைப் பலருக்கும் பகுத்துக் கொடுத்துப் புகழோடு வாழவேண்டும்; அப்படிப்பட்ட வாழ்வு அல்லாமல் ‘உயிருக்கு ஊதியம்’ என்பது வேறு யாதும் இல்லை.

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். 232
     புகழ்ச்சியாகப் பேசுகிறவர் பேசுகின்றவற்றுள் எல்லாம், இரப்பவர்க்கு ஒன்றைக் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழே எப்போதும் நிலையானது.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். 233
     உயர்ந்த புகழ் அல்லாமல், உலகத்திலே ஒப்பற்ற ஒரு பொருளாக அழிவில்லாமல் நிலைத்து நிற்கக்கூடியது யாதுமே இல்லை.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. 234
     உலகத்தின் எல்லைவரை பரவி நிற்கும் புகழுக்குரிய செயலை ஒருவன் செய்தால், வானுலகமும் தேவரைப் போற்றாது; அப் புகழாளனையே விரும்பிப் போற்றும்.

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. 235
     புகழால் மேன்மை பெறக்கூடிய கேடும், செத்தும் புகழால் வாழ்ந்திருக்கும் சாவும், அறிவிற் சிறந்தோருக்கு அல்லாமல், பிறருக்கு ஒரு போதுமே கிடையாது.

தோன்றின் புகழொடு தோன்றுக அ·திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. 236
     உலகத்தார் முன்பாக ஒருவன் தோன்றினால் புகழோடுதான் தோன்ற வேண்டும்; புகழ் இல்லாதவர் தோன்றுவதை விடத் தோன்றாமற் போவதே நல்லது.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்? 237
     தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள், தம்மை நொந்து கொள்ளாமல், நம்மை இகழ்கின்ற உலகத்தாரை நொந்து கொள்வது எதற்காகவோ?

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின். 238
     தமக்குப் பின்னரும் எஞ்சி நிற்கும் புகழைப் பெறாமல் விட்டு விட்டால், அதுவே உலகத்தார்க்கு எல்லாம் பெரிய வசையாகும் என்பார்கள்.

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம். 239
புகழ் இல்லாதவனுடைய உடம்பைத் தாங்கிக் கொண்டிருந்த பூமியுங் கூட, வசையில்லாத வளமான பயனைத் தருவதில் குறைபாடு அடையும்.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர். 240
வசை இல்லாமல் வாழ்கின்றவரே முறையாக வாழ்பவர் ஆவர்; புகழ் இல்லாமல் வாழ்கின்றவரே உயிரோடிருந்தும் உயிர் வாழாதவர் ஆவர்.

துறவறவியல்

25. அருள் உடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. 241
     அருளாகிய செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம்; பொருள்களாகிய பிற வகைச் செல்வங்கள் எல்லாம் இழிந்தவரிடத்திலும் உள்ளனவே!

நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அ·தே துணை. 242
     நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க; பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும்.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். 243
     இருள் அடர்ந்திருக்கும் துன்ப உலகமாகிய நரகத்துக்குச் செல்லுதல், அருள்பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு ஒரு போதுமே இல்லையாகும்.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. 244
     நிலைபெற்ற உலகத்தில் உள்ள உயிர்களைக் காத்து, அருள் செய்து வாழ்கின்றவர்களுக்குத் தம் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை!

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி. 245
     அருள் கொண்டவராக வாழ்பவர்களுக்கு எந்தத் துன்பமுமே இல்லை; காற்று உயிர் வழங்குதலால் வாழும் வளமான பெரிய உலகமே இதற்குச் சான்று.

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார். 246
     அருள்தலிலே இருந்து விலகித் தீயவைகளைச் செய்து வாழ்கிறவர்களே, உறுதிப் பொருளை இழந்து தம் வாழ்க்கைக் குறிக்கோளையும் மறந்தவராவர்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247
     பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகிலே இன்பமான வாழ்க்கை இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகத்து வாழ்வும் இல்லை யாகும்.

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது. 248
     பொருள் இழந்தவர்களும் ஒரு காலத்தில் பொருள் வளம் அடைவார்கள். அருள் இல்லாதவரோ அதை இழந்தால் வாழ்வை இழந்தவரே; மீண்டும் அடைதல் அரிது.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். 249
     அருள் இல்லாதவன் செய்யும் தருமத்தை ஆராய்ந்தால், தெளிவில்லாதவன் மெய்ந்நூலிற் கூறப்பெற்ற உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றதே!

வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து. 250
     தன்னை விட மெலிவானவர் மேல் பகைத்துச் செல்லும் போது, தன்னை விட வலியவர் முன்பாகத் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைவிற் கொள்ள வேண்டும்.

26. புலால் மறுத்தல்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்? 251
     தன் சதையைப் பெருக்குவதற்குத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன், எப்படி உயிர்களுக்கு எல்லாம் அருள் செய்பவனாக இருக்க முடியும்?

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252
     பொருள் உடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அவ்வாறே, அருள் உடையவர் ஆகும் தகுதி ஊனைத் தின்பவர்க்கும் இல்லை.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். 253
     ஒன்றன் உடலைச் சுவையாக உண்டவரது மனம், கொலைக் கருவியை ஏந்தினவரது நெஞ்சத்தைப் போலப் பிறவுயிருக்கு அருள் செய்தலைப் பற்றியே நினையாது.

அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல். 254
     கொல்லாமையே அருள் ஆகும்; ஓர் உயிரைக் கொல்லுதலோ அருளில்லாத தன்மை; அதன் ஊனைத் தின்னலோ சற்றும் முறையில்லாத செயல் ஆகும்.

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. 255
     உயிர்களின் நிலைத்த வாழ்வு ஊனுண்ணாத இயல்பில்தான் உள்ளது; ஊன் உண்டால், நரகம் அவனை வெளியே விட ஒரு போதும் தன்னுடைய கதவைத் திறவாது.

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். 256
     புலாலைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தார் கொல்லாதிருந்தால், எவரும் விலைப்படுத்தும் பொருட்டாக உயிரைக் கொன்று ஊனைத் தரமாட்டார்கள்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின். 257
     புலால் பிறிதோர் உயிரின் புண் என்று உண்பவர், அதனைத் தாம் பெற்ற போதும் உண்ணாமல் இருக்கும் நல்ல ஒழுக்கம் உடைய இயல்பினராதல் வேண்டும்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258
     பிறிதோர் உயிரின் உடலிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை, குற்றத்திலிருந்து விடுபட்ட அறிவாளர்கள் ஒரு போதும் உண்ணவே மாட்டார்கள்.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259
     அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக் கொன்று, அதன் உடலைத் தின்னாமலிருத்தல் மிகவும் நன்மையானதாகும்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். 260
     கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை, எல்லா உயிர்களும் கைதொழுது தெய்வமாக நினைத்துப் போற்றும்.

27. தவம்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. 261
     தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், பிறவுயிருக்குத் தாம் துன்பஞ் செய்யாமலிருத்தலும் ஆகிய அவ்வளவினதே தவத்திற்கு உள்ளதான வடிவம் ஆகும்.

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அ·திலார் மேற்கொள் வது. 262
     தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவமும் கைகூடும்; தவப்பயன் இல்லாதவர்கள் அதனைத் தாமும் மேற்கொள்வது வீணான முயற்சியே!

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். 263
     துறவியர்க்கு உணவு முதலாயின தந்து உதவுதலின் பொருட்டாகவே, இல்லறத்தார்கள் துறவுநெறியைத் தாம் மேற்கொள்ள மறந்தனர் போலும்!

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். 264
     பொருந்தாத பகைவரைத் தண்டித்தலும், தம்மை விரும்பும் அன்புடையவரை உயர்த்துதலும் தவ வாழ்வினால் மிகவும் எளிதாக வந்து கைகூடும்.

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். 265
     வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறுகின்றதனால், செய்வதற்குரிய தவம் இவ்விடத்திலேயே விரைவாகச் செய்யப்படுவதற்கு உரியதாகும்.

தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. 266
     தம் உயிருக்கு நன்மை செய்பவர் தவம் செய்பவரே யாவர்; மற்றையோர், ஆசைகளுக்கு உட்பட்டுத் தம் உயிருக்குத் தீமைகளைச் செய்பவர்களே ஆவர்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 267
     சுடச்சுட ஒளிவிடும் பொன்னே போல, துன்பம் சுட்டு வருத்த வருத்த, தவஞ்செய்பவருக்கும் உண்மையான அறிவுடைமையானது மேன்மேலும் ஒளிபெற்று வரும்.

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். 268
     ‘தான்’ என்னும் செருக்கானது தன்னிடமிருந்து நீங்கிய தவவலிமை பெற்றவனை, உலகத்தில் செறிந்துள்ள உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும்.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. 269
     தவநெறியாலே ஆத்ம வலிமையைப் பெற்ற மகான்களுக்குத் தம்மிடத்தே வருகின்ற கூற்றத்தையும் எதிராக நின்று வெற்றி கொள்வதற்கு முடியும்.

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். 270
     உலகில் மெய்யறிவு அற்றவர்கள் பலராகியதன் காரணம், தவம் செய்பவர் சிலராகவும், தவம் செய்யாதவர் பலராகவும் இருப்பதுதான்.

28. கூடா ஒழுக்கம்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். 271
     வஞ்சக மனத்தினனது பொய்யான நடத்தையைக் கண்டு, அவனுடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து பூதங்களும் தம்முள்ளே சிரித்துக் கொண்டிருக்கும்.

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின். 272
     தன் நெஞ்சம், தான் அறிந்து செய்யும் குற்றத்திலேயும் ஈடுபடுமானால், அத்தகையவனது வானளாவிய தவத்தோற்றமும் என்ன பயனைச் செய்யும்?

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. 273
     மனவலிமை இல்லாதவன் மேற்கொள்ளும் வலிய தவத்தோற்றம், பசு, புலியின் தோலைப் போர்த்துச் சென்று பயிரை மேய்ந்தாற் போன்றதாகும்.

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. 274
     தவக் கோலத்திலே மறைந்து கொண்டு தீயசெயல்களைச் செய்தல், கொலை குறித்த வேடன் புதரின் பின் மறைந்து நின்று பறவைகளை வலைவீசிப் பிடிப்பது போன்றதாகும்.

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும். 275
     பற்றுகளை விட்டேம் என்பவரது பொய்யான தீய ஒழுக்கம், ‘என்ன செய்தோம்?’ என்று வருந்தும்படியான பலவகைத் துன்பங்களையும் தரும்.

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். 276
     நெஞ்சிலே ஆசையை விடாதவர்களாய், வெளியே ஆசை அற்ற ஞானிகளைப் போலக் காட்டி மக்களை வஞ்சித்து வாழ்பவரினும் கொடியவர் எவருமே இலர்!

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து. 277
     புறத்தோற்றத்திலே குன்றிமணியின் நிறம்போலச் செம்மையான தோற்றம் உடையவர் என்றாலும், உள்ளத்தில் குன்றிமணியின் மூக்குப்போலக் கரியவரும் உள்ளனர்.

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். 278
     மனத்துள்ளே இருப்பது குற்றமாகவும், மாண்பு உடையவர் போல நீராடி, மறைவாக வாழ்வு நடத்தும் மாந்தர்களும் இந்த உலகிற் பலர் ஆவார்.

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல். 279
     நேரானாலும் அம்பு கொடுமை செய்வது; வளைவானாலும் யாழ்க்கோடு இன்னிசை தருவது; மனிதரையும் இப்படியே அவரவர் செயல்தன்மை நோக்கியே அறிதல் வேண்டும்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். 280
     உலகம் பழித்த தீயசெயல்களை ஒழித்துவிட்டால் உயர்வுதானே வரும்; உயர்வு கருதி மயிரை மழித்துக் கொள்ளலும் நீள வளர்த்தலும் செய்ய வேண்டாம்.

29. கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 281
     உலகினரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன் எத்தகைய பொருளையும் களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும்.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். 282
     ‘பிறன் பொருளைக் கள்ளமாகக் களவாடிக் கொள்வோம்’ என்று ஒருவன், தன் உள்ளத்தால் நினைத்தாலும் அந்த நினைவு கூடத் தீமையானதே.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும். 283
     களவாலே வந்தடையும் செல்வமானது அளவு கடந்து பெருகுவது போலவே, எதிர்பாராமல், எல்லாம் வந்தது போல, விரைந்து ஒழிந்தும் போய்விடும்.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். 284
     களவு செய்வதிலே உண்டாகும் முதிர்ந்த விருப்பமானது, அதனால் வரும் விளைவுகளின் போது தீராத துன்பத்தைத் தருவதாகவே விளங்கும்.

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 285
     பொருள் தேடுதலையே நினைத்துப் பிறர் சோர்ந்திருக்கும் காலத்தைப் பார்க்கும் கள்வரிடத்தே, அருளைக் கருதி அன்புடையவராதல், சான்றோரிடமும் இல்லை.

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். 286
     களவுநெறியின் கண் மிக முதிர்ந்த ஆசையுடையவர்கள் எல்லாரும், தம் வருவாயின் அளவுக்குத் தகுந்தபடி ஒழுக்கத்தோடு வாழ இயலாதவர்களே.

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல். 287
     ‘களவு’ எனப்படும் இருள்படர்ந்த அறிவாண்மையானது, அளவறிந்து வாழும் ஆற்றலை விரும்பிய நன்மக்களிடத்திலே ஒருபோதும் இல்லை யாகும்.

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. 288
     அளவறிந்து வாழ்தலை அறிந்தவரின் நெஞ்சத்திலே ‘அறம்’ நிற்பது போல, களவுத்தொழிலை அறிந்தவரின் நெஞ்சிலே ‘வஞ்சகம்’ எப்போதும் நிலைத்திருக்கும்.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். 289
     களவு அல்லாத, பிற நல்ல முயற்சிகளைச் செய்து பொருள் தேடி வாழ்தலைத் தெளியாதவர்கள், அளவு கடந்த செலவுகளைச் செய்து அக்களவாலேயே அழிவர்.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு. 290
     களவு செய்வார்க்கு, உடலில் உயிர் நிலைக்கும் காலமும் தவறிப் போகும்; களவு செய்யாதவர்க்குத் தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது.

30. வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். 291
     ‘வாய்மை’ என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி யாதொரு சொல்லையும் எப்போதும் சொல்லுதல் ஆகும்.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். 292
     குற்றமே இல்லாத நன்மையைத் தருவது என்றால், பொய்யான சொற்களும் கூட வாய்மையின் இடத்தில் வைத்துச் சிறப்பாகக் கருதத் தகுந்தவை ஆகும்.

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். 293
     ஒருவன், தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைப் பற்றிப் பொய்த்துப் பேசாதிருப்பானாக; அப்படி பொய்த்த பின்னர், அவன் நெஞ்சமே அவனைச் சுடும்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன். 294
     உள்ளத்தால் பொய்யாது நடந்து வருவானாயின், அவன் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பவன் ஆகும் சிறந்த உயர்வைப் பெறுவான்.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. 295
     மனத்தோடு பொருந்திய வாய்மையையே ஒருவன் சொல்லி வருவானானால், அவன் தவத்தோடு தானமும் செய்பவரினும் மிகவும் சிறந்தவன் ஆவான்.

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும். 296
     பொய்யாமை போலப் புகழ் தருவது ஏதும் இல்லை; அதில் தளராமல் உறுதியாயிருப்பது ஒருவனுக்கு எல்லா அறத்தின் சிறப்பையும் தரும்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. 297
     பொய்யாமை என்னும் அறத்தையே பொய்யாகாது தொடர்ந்து செய்து வந்தால், பிற அறச்செயல்கள் ஏதும் செய்யாத போதிலும் கூட, அது நன்மையைத் தரும்.

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். 298
     புறவுடலின் தூய்மை நீராலே ஏற்படும்; உள்ளத்தின் தூய்மையானது, ஒருவன் வாய் திறந்து சொல்லும் அவனது வாய்மையாலே அடையப்படும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. 299
     புறவிருளைப் போக்கும் எல்லா விளக்கும் சிறந்த விளக்கு ஆகாது; சான்றோர்க்குப் பொய்யாமையாகிய விளக்கே அவற்றினும் சிறந்த விளக்காகத் தோன்றும்.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. 300
     யாம் மெய்ப்பொருளாக அறிந்தவற்றுள் எல்லாம், வாய்மையினும் எத்தன்மையாலும் சிறப்பான பொருள் இந்த உலகத்திலே வேறு எதுவும் இல்லை.