திருவள்ளுவர்

இயற்றிய

திருக்குறள்

உரையாசிரியர் : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 4 ...

அறத்துப்பால்

துறவறவியல்

31. வெகுளாமை

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்? 301
     தனக்குச் செல்லக்கூடிய இடத்திலும் சினத்தைக் காப்பவனே காப்பவன்; செல்லாத இடத்திலே காத்தால் என்ன? காவாதிருந்தால் என்ன?

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற. 302
     செல்லாத இடத்தில் சினம் கொள்வதனால் தீமை வரும். செல்லும் இடத்திலும் அதனிலும் தீமையானது வேறு ஏதும் இல்லை.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். 303
     எவரிடத்திலும் சினங்கொள்ளாமல், அவர் தீச்செயலை மறத்தலே நல்லது; தீமையான விளைவுகள் அச்சினத்தினாலே வந்து சேரும்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. 304
     முகமலர்ச்சியான நகையையும், அகமலர்ச்சியான உவகையையும் கொல்லும் சினத்தினும், உயிருக்குப் பகையானவை வேறு உளவோ?

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம். 305
     ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால் சினம் எழாமல் காத்துக் கொள்க; காவாதிருந்தால், அச் சினமானது அவனையே முடிவில் கொன்று விடும்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். 306
     சேர்ந்தவரைக் கொல்லும் இயல்புடைய சினமானது, ‘தன் இனத்தார்’ என்னும் பாதுகாவலான தெப்பத்தையும் சுட்டு எரித்துவிடும்.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. 307
     சினத்தையே செல்வம் என்று நினைத்து மேற்கொண்டவன் அதனாற் கெடுதல், நிலத்திலே அறைந்தவனின் கையானது நோவிலிருந்து தப்பாதது போல் உறுதியாகும்.

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. 308
     பலமாகக் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் வீழ்ந்தாற் போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதும், கூடுமானால், அவன் பால் வெகுளாமையே நன்று.

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். 309
     ஒருவன் உள்ளத்தாலும் சினத்தைப் பற்றி நினையாதவன் என்றால், அப்படிப்பட்டவன் நினைத்தது எல்லாம் உடனே அவனை வந்தடையும்.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310
     அளவு கடந்து சினத்திலே ஈடுபட்டவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தைக் கைவிட்டவரோ முற்றும் துறந்த மேலோருக்குச் சமமாவர்.

32. இன்னா செய்யாமை

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசற்றார் கோள். 311
     சிறப்பைத் தருகின்ற பெருஞ்செல்வமே பெற்றாலும், பிறருக்குத் துன்பம் செய்யாதிருத்தலே, குற்றமற்ற அறிவாளரின் கொள்கையாகும்.

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். 312
     கறுவுகொண்டு ஒருவன் துன்பம் செய்தபோதும், திரும்ப அவனுக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளரின் கொள்கை.

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும். 313
     ஏதும் செய்யாத போதிலேயே தீமை செய்தவருக்கும், பதிலுக்குத் துன்பத்தைச் செய்தால், அது பின்னர் மீளாத் துயரத்தையே தரும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். 314
     துன்பம் செய்தவரைத் தண்டித்தல், அவர் தம் செய்கையை நினைத்து வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்துவிடுதல் ஆகும்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. 315
     பிறிதோர் உயிரின் துன்பத்தைத் தன் துன்பமே போலக் கொள்ளாத இடத்தில், அறிவினாலே ஆகும் பயன் தான் ஏதும் உளதாகுமோ?

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். 316
     துன்பம் தருவன எனத் தான் உணர்ந்த ஒரு செயலைப் பிறரிடத்தே செய்தலை ஒருவன் எப்போதும் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. 317
     எவ்வளவினது ஆனாலும், எக்காலத்தில் ஆனாலும், எவருக்கும், மனத்தினாலும் பொருந்தாத துன்பங்களைச் செய்யாமலிருத்தலே சிறப்பு ஆகும்.

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். 318
     தன் உயிருக்குத் துன்பமாதலைத் தான் அறிந்து வருந்தும் ஒருவன், மற்றைய உயிர்களுக்குத் துன்பத்தைச் செய்தல் என்பது, என்ன அறியாமையாலோ?

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும். 319
     முற்பகலில் பிறருக்குத் துன்பத்தைச் செய்தால், பிற்பகலில் தமக்குத் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும் என்பதை அறிதல் வேண்டும்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். 320
     துன்பம் தருவன எல்லாம் துன்பம் செய்தவரின் மேல் சென்று சேர்வன; ஆகவே, துன்பப்படாமலிருப்பதை விரும்புகிறவர் பிறருக்குத் துன்பம் செய்யாதிருப்பர்.

33. கொல்லாமை

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும். 321
     அறச்செயல் என்பது யாதென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே; கொல்லும் செயல் பிற தீவினைகளை எல்லாம் கொண்டு வரும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322
     உள்ள உணவையும் பலரோடும் பங்கிட்டுத் தான் உண்ணும் இயல்பினை மேற்கொள்ளுதல், அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களுள் எல்லாம் மிகச் சிறந்தது!

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. 323
     ஒப்பற்ற நல்லறம் என்பது எந்த உயிரையும் கொல்லாமல் இருத்தலே ஆகும்; அதற்கு அடுத்ததாக நல்லறம் என்று கருதப்படுவது பொய்யாமை ஆகும்.

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. 324
     நல்ல ஒழுக்கம் எனப்படுவது யாதென்றால், எந்தவொரு உயிரையும் கொலை செய்யாமலிருத்தல் என்பதைக் கருதும் வாழ்க்கை நெறியே ஆகும்.

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. 325
     வாழ்வின் நிலையாமை கண்டு பற்றுவிட்டவருள் எல்லாம், கொலைப் பாவத்திற்குப் பயந்து, கொல்லாமை நெறியைப் போற்றுபவரே சிறந்தவர்கள்.

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று. 326
     கொல்லாமை ஆகிய அறத்தையே மேற்கொண்டு நடக்கிறவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைத் தின்னும் கூற்றமும் ஒரு போதும் செல்லாது.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. 327
     தன்னுடைய உயிரையே விட்டுவிட நேர்வதானாலும் கூட, தான் மற்றொன்றினது இனிய உயிரைப் போக்கும் பாவச் செயலை எவரும் செய்யக் கூடாது.

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை. 328
     கொலை செய்வதனாலே நன்மையாக வந்து சேரும் ஆக்கம் பெரிதானாலும், சான்றோருக்குக் கொன்று வரும் ஆக்கம் இழிவானதே யாகும்.

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து. 329
     கொலையையே செய்தொழிலாக உடைய மக்கள், அதன் இழிவான தன்மையைத் தெரிந்தவரிடத்தில் தாழ்ந்த செயலினராகவே தோன்றுவர்.

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். 330
     நோய் மிகுந்த உடலோடு உயிரும் போகாமல் வருந்தித் துன்புறுகின்ற வாழ்வை உடையவர், பிற உயிர்களை அவற்றின் உடலிலிருந்து போக்கியவரேயாவர்.

34. நிலையாமை

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. 331
     நிலைத்து நில்லாத பொருள்களை எல்லாம் நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான அறிவுடைமை மிகவும் தாழ்ந்ததாகும்.

கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. 332
     பெரும்பொருள் வந்தடைதல், கூத்தாடுமிடத்திலே கூட்டம் வந்து கூடுவதைப் போன்றதாகும்; அது போய்விடுவதும் அக்கூட்டம் கலைவதைப் போன்றதே.

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். 333
     நிலைத்து இராத தன்மையுடையது செல்வம்; அதனை ஒருவன் அடைந்தால், அது நிலைப்பதற்கான அறமான செயல்களை அப்போதே செய்ய வேண்டும்.

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். 334
     வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்பவரைப் பெற்றால், ‘நாள்’ என்பது ஒரு கால அளவு போலத் தன்னைக் காட்டி உயிரை அறுக்கும் வாள் என்பது விளங்கும்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். 335
     நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டு விக்குள் மேலாக எழுந்து வருவதற்கு முன்பாகவே, நல்ல செயல்களை விரைவாகச் செய்ய வேண்டும்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. 336
     ‘நேற்று உள்ளவனாக இருந்த ஒருவன், இன்று இல்லை’ என்னும் நிலையாமையாகிய பெருமையை உடையது தான் இந்த உலகம் ஆகும்.

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. 337
     அடுத்த பொழுதில் உயிர் வாழும், வாழாது என்பதைத் தெரியாதவர்கள் நினைப்பது, கோடியும் அல்ல; அதன்மேலும் அளவற்ற பலவாகும்.

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. 338
     தான் இருந்த கூடானது தனித்துக் கிடக்கவும், பறவை பறந்து வெளியேறிப் போய்விட்டது போன்றதுதான் உடலோடு உயிருக்குள்ள தொடர்பு.

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. 339
     ஒருவன் செயலில்லாமல் தூங்குவதைப் போன்றது சாக்காடு; அவன் மீண்டும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்வது போல்வதே பிறப்பு.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. 340
     உடலினுள் ஒரு மூலையிலே குடியிருந்த உயிருக்கு, நிலையாக நுழைந்து தங்கியிருப்பதற்குரிய தகுதிவாய்ந்த ஓர் இடம் அமையவில்லை போலும்!

35. துறவு

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். 341
     எந்த எந்தப் பொருளில் ஆசை கொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ, அந்த அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை.

வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல. 342
     துன்பம் இல்லாத வாழ்வை விரும்பினால், ஆசைகளை எல்லாம் விட்டுவிட வேண்டும்; அப்படி விட்டு விட்ட பின் இவ்வுலகில் அடையக்கூடிய இன்பம் பலவாகும்.

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு. 343
     ஐந்து வகையான புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டிய பொருளாசைகளை ஒருசேர விட்டு விட வேண்டும்.

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து. 344
     ஒரு பொருளின் மீதும் ஆசை இல்லாததே தவநெறியின் இயல்பாகும்; ஆசை உள்ளதானால் மீளவும் உலக போகத்தில் மயங்கியதே யாகும்.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. 345
     பிறவியாகிய துன்பத்தை ஒழிக்க முயல்பவருக்கு உடம்பும் மிகையான ஒரு பொருள்; ஆகவே, மற்றைய ஆசைத் தொடர்புகள் எல்லாம் எதற்காகவோ?

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். 346
     உடலை ‘யான்’ எனவும், பொருள்களை ‘எனது’ எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன், வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான்.

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. 347
     பொருள்கள் மீதுள்ள பற்றுகளையே இறுகப் பற்றிக் கொண்டு ஆசையை விடாதவர்களுக்குத் துன்பங்களும் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும்.

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். 348
     அனைத்தையும் துறந்தவர்களே மேலான நிலையினர் ஆவர்; மற்றையோர் மயங்கி ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர்களே ஆவர்.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். 349
     பற்றுகள் அறுந்துபோன அப்பொழுதே பிறப்பாகிய பந்தமும் அறுந்து போகும்; மேலும், உலக நிலையாமையும் அப்போது காணப்படும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. 350
     பற்று இல்லாதவனான இறைவனது பற்றினை மட்டுமே பற்றுக; உலகப் பற்றுகளை விடுவதற்காக, அதனையே எப்போதும் விடாமல் பற்றிக் கொள்க.

36. மெய் உணர்தல்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. 351
     உண்மையில் பொருளற்றவைகளைப் பொருளாகக் கருதி உணர்கின்ற மயக்கத்தினாலேயே, சிறப்பற்ற பலவகைப் பிறப்புக்களும் உண்டாகின்றன.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. 352
     மயக்கம் நீங்கிய குற்றமற்ற மெய்யறிவு உடையவர்களுக்கு அவ்வுணர்வு, இருளிலிருந்து விடுபட்டு அடைகின்றதான இன்பத்தையும் கொடுக்கும்.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து. 353
     ஐயத்திலிருந்து நீங்கித் தெளிவுபெற்ற மெய்யறிவாளருக்கு, இவ் வையகத்தினும், வானம் மிகவும் அண்மையானதும் உறுதியானதும் ஆகும்.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. 354
     மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு, ஐம்புலன்களின் உணர்வுகளை எல்லாம் முறைப்படியே பெற்றுள்ள போதிலும் பயன் யாதும் இல்லை.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355
     எப்பொருள் எத்தகைய தன்மையோடு தோன்றினாலும் மயங்காமல், அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே அறிவாகும்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. 356
     கற்க வேண்டிய கல்வியைக் கற்று, மெய்ப்பொருளையும் அறிந்தவர், மீண்டும் இவ்வுலகில் பிறவிகளைத் தாம் எடுத்து வராத நெறியை மேற்கொள்வார்கள்.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. 357
     என்றும் உளதான மெய்ப்பொருளை உள்ளம் ஆராய்ந்து அறிந்து விட்டதானால், மீளவும் தனக்குப் பிறப்பு உள்ளதென்று அவன் எண்ண வேண்டாம்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. 358
     பிறப்புக்குக் காரணமான அறியாமைகள் நீங்குவதற்குச் சிறப்பான துணை எனப்படும் செம்பொருளை முயன்று காண்பதே மெய்யுணர்வு ஆகும்.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய். 359
     எல்லாப் பொருள்களுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்குரிய துன்பங்கள் திரும்பவும் வந்து சாரமாட்டா.

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். 360
     காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை மூன்றின் பெயர்களைக் கூட உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால், பிறவித் துன்பமும் கெடும்.

37. அவா அறுத்தல்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. 361
     எல்லா உயிருக்கும் எக்காலத்திலும் பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்றதான வித்து, ‘அவா’ என்பதுதான் என்று ஆன்றோர் கூறுவர்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். 362
     ஒருவன் எதையேனும் விரும்புவதானால், பிறவாமை என்பதையே விரும்ப வேண்டும்; அந்த நிலை அவா இல்லாத நிலையை விரும்பினால் வரும்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அ·தொப்பது இல். 363
     அவாவற்ற தன்மைபோலச் சிறந்த செல்வம் இவ்வுலகில் யாதும் இல்லை; எவ்விடத்தும் அதற்கு இணையானதான செல்வமும் யாதும் இல்லை.

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். 364
     தூய்மையான நிலை என்பது அவாவில்லாத நிலையே ஆகும். அந்த நிலை, வாய்மையையே விரும்பி நடந்தால் தானாகவே நம்மை வந்து சேரும்.

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர். 365
     பற்று அற்றவர் என்பவர்கள் அவா அற்றவரே; அவா அறாத மற்றையவர் எல்லாரும் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா. 366
     ஒருவனை அவன் தளர்ச்சி கண்டு வஞ்சிப்பது அவா ஆகும்; அதனால், அவாவுக்குப் பயந்து ஒதுங்கி வாழ்வதே மேன்மையான அறநெறி ஆகும்.

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும். 367
     அவாவினை முழுவதும் அறுத்து விட்டால், கெடாமல் வாழ்வதற்கான நல்வினைகள், தான் விரும்பியபடியே வந்து ஒருவனுக்கு வாய்க்கும்.

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அ·துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். 368
     அவா இல்லாதவருக்குத் துன்பம் என்பதும் இல்லையாகும்; அவா உள்ளதானால் துன்பமும் ஒழியாமல் மேன்மேலும் வந்து கொண்டே இருக்கும்.

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். 369
     அவா என்கின்ற துன்பத்தினுள் கொடிய துன்பமானது கெடுமானால், வாழ்வில், இன்பம் இடையறாமல் வந்து வாய்த்துக் கொண்டிருக்கும்.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். 370
     ஒருபோதும் நிரம்பாத அவாவினைக் கைவிட்டால், அந்தப் பொழுதிலேயே, பெரிதான இன்பவாழ்வை அந்நிலைமையானது தானாகவே தந்துவிடும்.

ஊழியல்

38. ஊழ்

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. 371
     ஆவதற்குரிய ஊழ் வந்தால் சோர்வில்லாத முயற்சிகள் தோன்றும்; கைப்பொருள் போவதற்குரிய ஊழ் வந்தால் சோம்பல் தோன்றும்.

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. 372
     இழப்பதற்கான ஊழ் ஒருவனைப் பேதையாக்கும்; ஆவதற்கான ஊழ் வந்தால் ஒருவனது அறிவை விரிவாக்கி அவனுக்குப் பல நன்மைகளைத் தரும்.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும். 373
     நுண்மையான நூல்கள் பலவற்றை முயன்று கற்றாலும், ஊழின் நிலைமைக்குத் தகுந்தபடி உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. 374
     ஊழின் காரணத்தால் உலகத்து இயற்கையானது இருவேறு வகைப்படும்; செல்வராதல் வேறு ஊழ்; தெளிவான அறிவினராதல் வேறு ஊழ் ஆகும்.

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. 375
     செல்வம் தேடும் முயற்சிக்கு, நல்லூழால் தீயவும் நல்லவையாவதும், தீயூழால் நல்லவைகளும் தீயவை தருகின்ற தன்மையவாதலும் உண்டு.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. 376
     வருந்திக் காப்பாற்ற முயன்றாலும் நல்லூழ் இல்லாத போது எதுவுமே ஆகாது; கொண்டு போய் வெளியே சொரிந்தாலும் நல்லூழிருந்தால் தம் பொருள் போகாது.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. 377
     ஊழை வகுத்தவன் வகுத்துவிட்ட வகைப்படி அல்லாமல் கோடியாகப் பொருள் தொகுத்தவர்க்கும் அவற்றைத் துய்த்தல் என்பது அரிதாகும்.

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின். 378
     வந்தடைவதான இன்பங்கள் வந்து சேராமற் போகுமானால் துய்க்கும் பொருள் இல்லாதவர்கள் தம்முடைய ஆசைகளைத் துறப்பார்கள்!

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்? 379
     ஊழால் நன்மைகள் விளையும்போது, அவற்றை நல்லவையாகக் காண்பவர்கள், அ·து இல்லாத கேடு காலத்தில் துன்பப்படுவதுதான் எதற்காக?

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். 380
     ஊழைக் காட்டிலும் பெரிதும் வலிமையானவை யாவை உள்ளன! மற்றொன்றை வலியது என்று கருதினாலும், அங்கும் ஊழே முன்வந்து நிற்கும்!

பொருட்பால்

அரசியல்

39. இறைமாட்சி

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. 381
     படை, குடி, விளைபொருள், அமைச்சர், நண்பர், அரண் என்னும் ஆறு உறுப்புக்களையும் சிறப்பாகப் பெற்றவன் அரசருள் சிங்க ஏறு ஆவான்.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. 382
     அஞ்சாமை, எளியோர்க்குக் கொடுத்து உதவும் ஈகை, அறிவு, ஊக்கம், என்னும் நான்கும் குறைவில்லாமல் இருப்பது வேந்தருக்கு இயல்பு ஆதல் வேண்டும்.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு. 383
     நாடாளும் மன்னனுக்கு, விரைவாகச் செயலைச் செய்தலும், அதனை அறியும் அறிவும், செய்யும் துணிவும் என்னும் மூன்று திறனும் நீங்காமல் இருக்க வேண்டும்.

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு. 384
     அரசநெறியிலிருந்தும் வழுவாமலும், நெறியல்லாதவைகளை நாட்டை விட்டு நீக்கியும், மறமாட்சியில் தாழ்ச்சியின்மை என்னும் மானமும் உடையவனே அரசன்.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. 385
     பொருள் வருவாய்க்கான வழிகளை உண்டாக்கலும், வரும் பொருளைச் சேமித்தலும், பாதுகாத்தலும், நாட்டின் நலத்துக்குத் தக்கபடி செலவிடுதலும் வல்லதே அரசு.

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். 386
     தன்னைக் காண வருவார்க்குக் காட்சிக்குத் தான் எளியனாயும், கடுஞ்சொல் சொல்லாதவனாயும் அரசன் விளங்கினால், அவன் நாட்டை உலகமே உயர்வாகக் கூறும்.

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு. 387
     இனிமையான சொல்லோடு, துன்புறுவார்க்கு வேண்டியதைக் கொடுத்தும் காப்பாற்றவல்ல அரசன், தன் மனத்தில் கருதியவாறே உலகமும் அமையும்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். 388
     முறைமையோடு ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன், அம் மக்களுக்குத் தெய்வம் என்று சொல்லப்படும் உயர்நிலையிலே வைத்து மதிக்கப்படுவான்.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. 389
     சான்றோர்கள் கண்டித்துச் சொல்வது கேள்விக்கு வெறுப்பாயிருந்தாலும், பொறுத்து, அக்குறைகளை நீக்கும் பண்புள்ள வேந்தனின் குடைநிழலில், உலகம் தங்கும்.

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. 390
     கொடையும், இரக்க குணமும், செங்கோன்மையும், குடி காத்தலும் என்னும் நான்கையும் சிறப்பாகப் பெற்றவன் வேந்தர்க்கு எல்லாம் ஒளிவிளக்கு ஆவான்.

40. கல்வி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. 391
     கற்பதற்குத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392
     ‘எண்’ என்று சொல்லப்படுவதும், ‘எழுத்து’ என்று கூறப்படுவதும், என்னும் இவை இரண்டும், இவ்வுலகில் வாழும் உயிர்களுக்குக் ‘கண்’ என்பார்கள்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். 393
     ‘கண்’ உடையவர் என்று உயர்வாகக் கூறப்படுவோர் கற்றவரே ஆவர்; கல்லாதவர்கள் தம் முகத்தில் இரண்டு புண் உடையவர்கள் ஆவர்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். 394
     எல்லாரும் மகிழும் வகையிலே கூடியிருந்து, ‘இனி என்று மீளக் கூடுவோம்’ என்று எண்ணும்படியாகப் பிரிதல் கல்வியறிவினரது செயல் ஆகும்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். 395
     செல்வர்களின் முன்னே உதவி கேட்கும் எளியவர் பணிவோடு நிற்பது போல, ஆசிரியரிடம் பணிந்து நின்று கற்றவரே சிறந்தவர்; கல்லாதவரோ கடையர்!

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. 396
     மணலிலே தோண்டும் கிணற்றில், தோண்டிய அளவுக்கே நீர் ஊறும்; மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்றதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும்.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. 397
     கற்றவனுக்கு எந்த நாடும் நாடாகும்; எந்த ஊரும் ஊராகும்; இதுவே உண்மையாக இருந்தும் ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமலிருப்பது எதனால்?

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. 398
     ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புக்களிலும் அவனைப் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும்.

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். 399
     தாம் இன்பம் அடைவதாகிய கல்வியினாலே உலகத்தாரும் இன்பம் அடைவதைக் கண்டு, கற்றறிந்தவர், மேன்மேலும் தாம் கற்பதையே விரும்புவார்கள்.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. 400
     ‘அழிவில்லாத சிறந்த செல்வம்’ என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன் பொருள் மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகா.