திருவள்ளுவர்

இயற்றிய

திருக்குறள்

உரையாசிரியர் : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 7 ...

பொருட்பால்

அரசியல்

61. மடியின்மை

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும். 601
     ஒருவன் வந்து பிறந்த குடியென்னும் அணையா விளக்கானது, சோம்பல் என்னும் மாசு படரப்பட, ஒளி மழுங்கி, முடிவில் அணைந்து போய்விடும்.

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர். 602
     தாம் பிறந்த குடியை மேன்மேலும் உயர்ந்த குடியாக உயர்த்த விரும்புகிறவர்கள், சோம்பலை அறவே விலக்கி, முயற்சியாளராக விளங்க வேண்டும்.

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து. 603
     விலக்க வேண்டிய சோம்பலைத் தன்னிடத்தே கொண்டிருக்கும் அறிவற்றவன், பிறந்த குடியின் பெருமையானது, அவன் அறிவதற்கு முன்பாகவே அழிந்துவிடும்.

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு. 604
     சோம்பலிலே ஆழ்ந்துவிட்டுச் சிறந்த முயற்சிகளிலே ஈடுபடாமல் இருப்பவருடைய குடிப்பெருமையும் கெட்டு, குற்றமும் நாளுக்கு நாள் பெருகும்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். 605
     சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம் என்னும் நான்கும், தாம் அழிந்துவிடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம்.

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது. 606
     நாடாளும் தலைவருடைய தொடர்பு இயல்பாக வந்து கிடைத்த காலத்திலும், சோம்பல் உடையவர்கள், அதனால் எந்தவிதமான சிறந்த பயனையும் அடைவதில்லை.

இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். 607
     சோம்பலை விரும்பி, நல்ல முயற்சிகளைக் கைவிடுகிறவர்கள், கடுமையாகப் பிறர் இகழ்ந்து பேசுகின்ற சொற்களைக் கேட்கின்ற நிலைமையை அடைவார்கள்.

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும். 608
     நல்ல குடியிலே பிறந்தவனிடம், சோம்பல் என்பது சேர்ந்து விடுமானால், அது அவனை, அவன் எதிரிகளுக்கு விரைவில் அடிமைப்படுத்தி விடும்.

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும். 609
     ஒருவன், தன்னிடமுள்ள சோம்பலை ஒழித்துவிட்டான் என்றால், அவன் தன் குடும்பத்தை நடத்துவதில் ஏற்பட்ட குற்றங்கள் எல்லாம் நீங்கிவிடும்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. 610
     சோம்பல் இல்லாத அரசன், தன் அடியாலே உலகத்தை அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு எல்லாம், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்றுவிடுவான்.

62. ஆள்வினை உடைமை

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். 611
     இச்செயலை நம்மாலே செய்ய முடியாதென்று தளர்ச்சி கொள்ளாமல் இருக்கவேண்டும்; இடைவிடாத முயற்சியானது அதனைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும்.

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 612
     ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையிலே விட்டவரை உலகமும் கைவிடும்; ஆதலால், செய்யும் செயலிடத்திலே முயற்சியற்றிருப்பதை விட்டுவிட வேண்டும்.

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு. 613
     ‘எல்லாருக்கும் உதவி செய்தல்’ என்னும் செருக்கானது, விடாத முயற்சி உடையவர்கள் என்னும் பண்பிலேதான் நிலைத்திருப்பது ஆகும்.

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். 614
     போருக்கு அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள வாளிடத்தில் ஆண்மைச் செயல் எதுவும் தோன்றாததுபோல, விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்ற தன்மையும் கெட்டுப் போகும்.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண். 615
     தன் இன்பத்தை விரும்பாமல், எடுத்த செயலை முடிப்பதையே விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் ஆவான்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். 616
     இடைவிடாத முயற்சியானது ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமையோ, அவனிடத்து இல்லாமையை உண்டாக்கும்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள். 617
     சோம்பல் இல்லாதவனின் முயற்சியிலே தாமரையாளான திருமகள் சென்று வாழ்வாள்; சோம்பலிலே கருநிறம் உடைய மூதேவிதான் சென்று வாழ்வாள்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. 618
     நல்ல விதி இல்லாமலிருத்தல் என்பது குற்றம் ஆகாது; அறிய வேண்டியவைகளை அறிந்து முயற்சி செய்யாமல் இருப்பதே ஒருவனுக்குப் பழி ஆகும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். 619
     தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்துவிடும்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். 620
     சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச் செய்பவர் ஆவார்கள்.

63. இடுக்கண் அழியாமை

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அ·தொப்ப தில். 621
     துன்பங்கள் வரும் போது, மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக; துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். 622
     வெள்ளமாகப் பெருகிவருகின்ற துன்பங்களும், அறிவு உடையவன் தன் உள்ளத்திலே நினைத்த போது, அவனை விட்டு மறைந்து போய்விடும்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். 623
     இடையூறுகள் வந்த போது அதற்காக வருந்தாத மனத்தெளிவு உள்ளவர்கள், துன்பத்துக்குத் துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுவார்கள்.

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 624
     தடைப்படும் இடங்களில் எல்லாம், தளர்ந்து விடாமல் வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப் போன்ற ஊக்கம் உடையனுக்கு நேரிடும் துன்பங்களே துன்பம் அடையும்.

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும். 625
     மேன்மேலும் துன்பங்கள் வந்தாலும், நெஞ்சம் கலங்காதவனுக்கு நேர்ந்த துன்பமானது, தானே துன்பப்பட்டு அவனிடமிருந்து விலகிப் போகும்.

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர். 626
     ‘பொருள் அடைந்தோம்’ என்று அதனைப் போற்றிக் காப்பதற்கு அறியாதவர்கள், வறுமைக் காலத்தில் ‘பொருளை இழந்தோம்’ என்று துன்பம் அடைவாரோ?

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். 627
     இவ்வுடலானது துன்பங்களுக்கு இலக்கானது என்று அறிந்து அதற்கு வரும் துன்பங்களுக்கு உள்ளம் கலங்காமல் இருப்பவர்களே மேலோர்கள்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன். 628
     இன்பம் உண்டாகிய போது அதனை விரும்பாதவனாக, துன்பம் வருதலும் இயல்பு என்று உணர்பவன், எந்தக் காலத்திலும் துன்பம் அடைய மாட்டான்.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். 629
     இன்பமான காலத்திலும் இன்பத்தை நுகர விரும்பாதவன் எவனோ, அவன், துன்பமான காலத்திலும் எத்தகைய ஒரு துன்பமும் அடைய மாட்டான்.

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு. 630
     துன்பமே தனக்கு இன்பமானது என்று கருதித் தொழிலைச் செய்பவன், அவன் எதிரிகளும் அவன் முயற்சியை விரும்பும் சிறந்த நிலைமையை அடைவான்.

அரசியல் முற்றிற்று

அங்கவியல்

64. அமைச்சு

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. 631
     ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும், ஏற்ற காலத்தையும், செய்யும் வகையையும், செயலின் அருமையையும் நன்கு சிந்திப்பவனே, நல்ல அமைச்சன்.

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு. 632
     மனவலிமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்று அறிந்திருத்தலும், விடாமுயற்சியும், ஐம்புலன்களின் தூய்மையும் சிறந்திருப்பவனே, அமைச்சன்.

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு. 633
     பகைவரோடு சேர்ந்துள்ளவரைப் பிரித்தலும், தம்மவரைப் பிரிந்து போகாமல் காத்தலும், பிரிந்து போயினவரை முயன்று மீண்டும் சேர்த்தலும் வல்லவனே, அமைச்சன்.

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு. 634
     எதனையும் நன்கு ஆராய்ந்து அறிதலும், ஆராய்ந்த பின்பே செய்தலும், எதனையும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லுதலும் வல்லவனே, நல்ல அமைச்சன்.

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. 635
     நீதி நெறிகளைத் தெரிந்து, பொருள் நிரம்பிய சொல்லை உடையவனாய், எப்போதும் செயலாற்றும் திறனை நன்கு அறிந்தவனாய், இருப்பவனே, நல்ல அமைச்சன்.

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. 636
     இயல்பான நுண்ணறிவும், அதனோடு சேர்ந்த நூலறிவும் உடையவரான அமைச்சர்களின் எதிராக, எந்த நுட்பமான சூழ்ச்சிகளும் நிற்கமுடியாமல் போய்விடும்.

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். 637
     செயலைச் செய்யும் முறைகளை நூலறிவால் அறிந்திருந்த போதும், அதனை உலகத்தின் இயற்கையையும் அறிந்து அதற்கேற்றபடியே முறையாகச் செய்ய வேண்டும்.

அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன். 638
     அறிந்து சொல்பவரின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல், தானும் அறிவில்லாதவனான அரசனானாலும், அவனுக்கும் உறுதி கூறுதல் அமைச்சரது கடமையாகும்.

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும். 639
     அருகில் இருந்தவாறே தன் அரசனுக்குப் பழுதினைக் கருதும் மந்திரியை விட, எழுபது கோடிப் பகைவர் ஏற்படுவதையும் அந்த அரசன் பொறுத்துக் கொள்ளலாம்.

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். 640
     முறையாக ஆராய்ந்து அறிந்து உணர்ந்த போதிலும் செயல் திறமை இல்லாதவரான அமைச்சர்கள், முடிவில்லாத செயல்களையே செய்வார்கள்.

65. சொல்வன்மை

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று. 641
     நாவன்மை என்னும் சிறப்பைப் பெற்றிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். அந்தச் சிறப்பு மற்றெந்தச் சிறப்பினுள்ளும் அடங்காத ஒரு சிறந்த சிறப்புமாகும்.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. 642
     மேன்மையும் கெடுதியும் பேச்சினாலேயே வருவதனால் சொல்லிலே சோர்வு உண்டாகாதபடி எப்போதும் ஒருவன் தன்னைக் காத்துப் பேணி வருதல் வேண்டும்.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். 643
     கேட்பவர் உள்ளத்தைப் பிணிக்கும் தன்மை உடையவாயும், பகைவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் சொல்லப்படுவதே சிறந்த சொல்வன்மை ஆகும்.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். 644
     கேட்பவரது மனப்பான்மையை அறிந்தே எந்தச் சொல்லையும் சொல்லவேண்டும்; அப்படிச் சொல்வதை விட மேலான அறமும் பொருளும் யாதும் இல்லை.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 645
     தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பே, அந்தச் சொல்லை யாவரும் சொல்ல வேண்டும்.

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். 646
     தாம் சொல்லும் போது பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லும் போது அதன் பயனை அறிந்து ஏற்றுக் கொள்ளுதலே மேன்மையில் குற்றமற்றவரது கொள்கை.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 647
     சொல்வன்மை உடையவன், சொற்சோர்வு இல்லாதவன், சபைக்கு அஞ்சாதவன், ஆகிய ஒருவனைப் பேச்சில் வெல்லுவது என்பது, எவருக்குமே அருமையாகும்.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். 648
     கருத்தை நிரல்படக் கோத்து, இனிய முறையில் சொல்வதற்கு வல்லவர்களைப் பெற்றால், இவ்வுலகம் அவர்கள் ஏவியதைக் கேட்டு, விரைந்து தொழில் செய்யும்.

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். 649
     குறையில்லாத சில சொற்களாலே தம் கருத்தை விளக்கிச் சொல்வதற்கு அறியாதவர்களே, பல சொற்களைச் சொல்வதற்கு எப்போதும் விரும்புவார்கள்.

இணர்ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். 650
     தாம் கற்றவைகளைப் பிறரும் அறியும்படியாக விளக்கிச் சொல்லத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் வீசாத மலரைப் போன்றவர்கள் ஆவர்.

66. வினைத்தூய்மை

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும். 651
     துணைவர்களால் உண்டாகும் நன்மை செல்வத்தை மட்டுமே தரும்; செய்யும் செயலின் செம்மையோ ஒருவன் விரும்பிய எல்லாவற்றையுமே தரும்.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. 652
     புகழுடன் கூடியதாகவும் நன்மை தருவதாகவும் அமையாத செயல்களை, எந்தக் காலத்திலும், ஒருவன் செய்யாமல் நீக்கி விட வேண்டும்.

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர். 653
     மேலாக உயர்வதற்கு நினைக்கின்றவர்கள், தங்களுடைய மதிப்பைக் கெடுக்கும் எந்த ஒரு செயலையும் எப்போதும் செய்யாமல் இருக்க வேண்டும்.

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். 654
     கலக்கம் இல்லாத அறிவை உடையவர்கள், தாம் இடையூறுகளுக்கு உட்பட நேர்ந்த காலத்திலும், இழிவான செயல்கள் எதையுமே செய்ய மாட்டார்கள்.

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. 655
     ‘என்ன செய்தோம்’ என்று பின்னர் வருந்தக் கூடியதான செயல்களைச் செய்யவே கூடாது; செய்துவிட்டால், பின்னர் அதைப்பற்றி வருந்தாமலிருப்பது நன்று.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. 656
     தன்னைப் பெற்ற தாயின் பசித் துன்பத்தைக் கண்ணால் கண்ட போதிலும், மேலோர்கள் பழிக்கும் செயல்களை ஒருவன் செய்யவே கூடாது.

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. 657
     பழிகளைச் செய்து, அதனாலே வந்தடைந்த செல்வப் பெருக்கத்தை காட்டிலும், சான்றோர்களது வறுமையின் மிகுதியே மிகவும் சிறந்ததாகும்.

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். 658
     செய்யத் தகாதவை என்று சான்றோரால் விலக்கப்பட்ட செயல்களைக் கடிந்து ஒதுக்காமல் செய்தவர்களுக்கு, அவை நன்மையாக முடிந்தாலும், துன்பத்தையே தரும்.

அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. 659
     பிறர் அழும்படியாகச் செய்து பெற்றுக் கொண்ட செல்வம் எல்லாம், நாம் அழும்படியாக அகன்று போகும்; நல்ல வழியில் வந்தவற்றை இழந்தாலும் பின்னர் பயன் தரும்.

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. 660
     தீய வழிகளாலே பொருளைச் சேர்த்து ஒருவனைக் காப்பாற்றுதல் என்பது, பசுமண் கலத்தினுள் நீரைப்பெய்து அதைக் கசியாமல் காப்பாற்றுவது போன்றதாகும்.

67. வினைத்திட்பம்

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. 661
     மேற்கொண்ட செயலைச் செம்மையாக முடிக்கும் திறமை என்பது, ஒருவனது மனவலிமையே; பிற வலிமைகள் எல்லாம் சிறந்த வலிமைகள் ஆகா.

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662
     ஆராய்ந்து அறிந்தவர்களின் கொள்கையானது, இடையூறு வரும் முன்பாகவே விலக்கிக் கொள்ளுதலும், வந்தால் மனம் தளராமையும் ஆகிய, இரண்டு வழிகளே ஆகும்.

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும். 663
     செயலில் ஆண்மையாவது, முடிந்தபின் வெளியே புலப்படுமாறு அதுவரை மறைத்துச் செய்வதாம்; இடையில் வெளிப்பட்டால், அது தீராத துன்பத்தையே தரும்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். 664
     ‘இதனை இப்படி யிப்படிச் செய்வோம்’ என்று சொல்லுதல் எல்லாருக்கும் எளிதாகும்; சொல்லியபடி செய்து முடித்தலோ, மிகவும் அருமையாக இருக்கும்.

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். 665
     எண்ணத்தாலே சிறந்த மனவுறுதி கொண்டவர்களது தொழில் திறமையானது, மன்னன் மனத்திலும் சென்று பதிவதனால், பலராலும் நன்கு மதிக்கப்படும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். 666
     ஒரு செயலைச் செய்வதற்கு நினைத்தவர்கள், தாம் எண்ணிய எண்ணத்திலே உறுதி உடையவர்களானால், நினைத்ததை நினைத்தபடியே செய்து, வெற்றி அடைவார்கள்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. 667
     உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சாணிபோல நின்று காப்பவரையும் உலகம் உடையது; அதனால் ஒருவரது சிறிதான உருவத்தைப் பார்த்து இகழக் கூடாது.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல். 668
     மனம் கலங்காமல் தெளிவோடு மேற்கொண்ட செயலில், இடையிலே சோர்வில்லாமலும், காலம் கடத்தாமலும் ஈடுபட்டு விரைவாகவே செய்ய வேண்டும்.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. 669
     முதலிலே வருகின்ற துன்பங்களால் வருத்தம் அடைய நேர்ந்தாலும், முடிவிலே இன்பம் தருகின்ற செயல்களை மனத்துணிவுடனே செய்து முடிக்க வேண்டும்.

எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. 670
     எந்த வகையிலே உறுதி உடையவரானாலும், செய்யும் செயலிலே மனவுறுதி இல்லாதவர்களை உலகம் மதியாது; சிறந்தோராகவும் ஏற்றுக் கொள்ளாது.

68. வினை செயல்வகை

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. 671
     ஒரு செயலைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவு, மனத்தில் துணிவு பெறுவதே ஆகும்; அவ்வாறு துணிவு கொண்ட பின், அதனைச் செய்யாமல் காலம் கடத்துதல் தீமையாகும்.

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. 672
     காலம் கடந்து செய்வதற்கு உரிய செயல்களைக் காலம் தாழ்த்தியே செய்ய வேண்டும்; கடத்தாமல் செய்வதற்குரிய செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். 673
     செய்யக்கூடிய இடங்களில் எல்லாம் செயலைச் செய்வது நன்மையே; செய்ய இயலாத போது, அதை முடிப்பதற்கேற்ற வழிகளை ஆராய்ந்த பின்பே செய்தல் வேண்டும்.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். 674
     செய்யும் செயலையும், ஒழிக்கும் பகையையும், குறைவிடாமல் செய்துவிட வேண்டும்; அவற்றின் மிச்சம் தீயின் ஒழிவைப் போலப் பெருகிப் பெருங்கேடு உண்டாக்கிவிடும்.

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். 675
     வேண்டிய பொருள், கருவிகள், தக்க காலம், செயலறிவு, உரிய இடம் என்னும் ஐந்தையும் மயக்கமில்லாமல் ஆராய்ந்து கொண்ட பின்னரே, செய்தல் வேண்டும்.

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். 676
     செயலின் முடிவைப் பற்றியும், இடையில் வரும் இடையூறுகளைப் பற்றியும், முடித்த பின் அடையும் பெரும்பயனையும் ஆராய்ந்தே ஒரு செயலைச் செய்தல் வேண்டும்.

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். 677
     ஒரு செயலைச் செய்வதற்குரிய செயல்முறையாவது, அதனை முன்பே செய்து முடித்துத் தெளிந்தவனிடம் கேட்டறிந்து, அவைகளைத் தாமும் மேற்கொள்ளுதல் ஆகும்.

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. 678
     மதநீரால் கன்னம் நனையும் யானையைக் கொண்டு, வேறான யானையைக் கட்டுவதைப் போல, பழகிய செயலின் அறிவைக் கொண்டே பிற செயல்களையும் செய்தல் வேண்டும்.

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல். 679
     மாறுபட்டவரையும் தம்முடன் பொருந்துமாறு செய்து செயலிலே ஈடுபடுதல், நண்பருக்கு நல்லவை செய்வதிலும் மிகவும் விரைவாகச் செய்வதற்கு உரியதாகும்.

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. 680
     ஒன்றைச் செய்யும் வல்லமை இல்லாதவருள், பயந்து இடையில் குறைப்பட்டவர்கள், பெரியோரைப் பணிந்து கேட்டு, அவர் கூறியபடி நடந்து கொள்ள வேண்டும்.

69. தூது

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. 681
     தன் நாட்டின் மீது அன்பும், உயர்ந்த குடிப்பிறப்பும், வேந்தன் விரும்புகின்ற உயர்ந்த பண்புகள் அமைதலும் தூது உரைப்பவனுக்கு வேண்டிய பண்புகள்.

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. 682
     தன் நாட்டிடத்திலே அன்பும், தெளிவான அறிவும், எதையும் ஆராய்ந்து பேசும் சொல்வன்மையும், தூது உரைப்பவனுக்கு இன்றியமையாத மூன்று தகுதிகள்.

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. 683
     அரசியல் நூல்கள் அறிந்தவருள் தான் வல்லவனாதலும், வேல் வீரர்களுள் வெற்றித்திறனைக் கொண்டவனாக இருத்தலும், தூது உடையவனுக்கு வேண்டிய சிறந்த தகுதிகள்.

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு. 684
     இயல்பாகவே அமைந்த நுண்ணறிவும், தோற்றக் கவர்ச்சியும், ஆராய்ந்து பெற்ற கல்வியறிவும் என்னும் இம்மூன்றின் செறிவை உடையவனே தூது உரைப்பவன் ஆவான்.

தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது. 685
     விரிக்காமல் தொகுத்துச் சொல்லியும், இன்னாச் சொற்களை நீக்கியும், கேட்கும் மாற்றார் மகிழுமாறு சுவைபடச் சொல்லியும், தன் நாட்டிற்கு நன்மை விளைவிப்பவனே தூதன்.

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. 686
     கற்பன கற்றறிந்து, அவரது கடும்பார்வைக்கு அஞ்சாமல், சொல்வதை அவர்கள் மனத்திற் பதியும்படி சொல்லிக் காலத்தோடு பொருந்துவதை அறிபவனே தூதன்.

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. 687
     தன் கடமையை அறிந்து, நிறைவேற்றும் காலத்தையும் கருத்திற் கொண்டு, ஏற்ற இடத்தையும் தெரிந்து, நன்றாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதன்.

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. 688
     நடத்தையிலே தூய்மையும், தக்க துணைவரை உடைமையும், மனத்திலே துணிவு உடைமையும் ஆகிய இம்மூன்றினையும் வாய்த்திருப்பவனாக விளங்குதலே தூதனின் பண்பு.

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன். 689
     தன் அரசன் சொல்லியனுப்பியதைப் பிற வேந்தரிடம் சென்று உரைப்பவனாகிய தூதன், வடுப்படும் சொல்லை வாய் சோர்ந்தும் சொல்லாத திறன் உடையவனாக இருக்க வேண்டும்.

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. 690
     தன் உயிருக்கே முடிவைத் தந்தாலும், அதற்கு அஞ்சித் தன் கடமையிலே குறைவுபடாது; தன் வேந்தனுக்கு நன்மை தரும் உறுதிப்பாட்டை செய்து முடிப்பவனே தூதன்.

70. மன்னரைச் சேர்ந்தொழுகல்

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். 691
     மாறுபடும் வேந்தரைச் சேர்ந்து வாழ்கின்றவர்கள், அவரை விட்டு மிகவும் நீங்காமலும், மிகவும் நெருங்காமலும், தீயில் குளிர்காய்பவரைப் போலப் பழகிவர வேண்டும்.

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும். 692
     மன்னர் விரும்புகின்ற பொருள்களைத் தானும் விரும்பாதிருக்கும் தன்மையானது, அம்மன்னராலே நிலைத்திருக்கும் செல்வங்களை ஒருவனுக்குத் தருவதாக விளங்கும்.

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. 693
     அரசன் சினம் கொண்டால் அவனைத் தெளிவித்தல் அரிதானதால், அரசனைச் சார்ந்திருப்பவர், பொறுத்தற்கரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து. 694
     அறிவாற்றலில் சிறந்த பெரியவர்கள் கூடியுள்ள அரசவையில் இருக்கும் போது, காதோடு காதாகப் பேசுவதையும், பிறரோடு சேர்ந்து சிரிப்பதையும், நீக்கிவிட வேண்டும்.

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. 695
     அரசனின் மறைவான பேச்சுக்களைக் கேளாமலும், அதன் தொடர்பாக எதுவும் சொல்லாமலும் இருந்து, அவனாகச் சொன்னால் மட்டுமே கேட்டல் வேண்டும்.

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல். 696
     அரசனது உள்ளக்குறிப்பை அறிந்து, காலத்தையும் கருத்திற் கொண்டு, அரசனுக்கு வெறுப்புத்தராத சொற்களை, அவன் விரும்பிக் கேட்கும்படி சொல்ல வேண்டும்.

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். 697
     அரசன் விரும்புகிற செய்திகளை மட்டும் அவனிடம் சொல்லியும், அவனுக்குரியவை அல்லாதன பற்றி அரசனிடம் சொல்லாமற் கைவிடுதலும் வேண்டும்.

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். 698
     ‘இளையவர்’ என்று கருதியோ, ‘இனமுறை’ என்று கருதியோ இகழாமல், நிலைபெற்ற அறிவுடன் அரசனிடம் நடந்து கொள்ளுதல் வேண்டும்.

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். 699
     ‘தாம் அரசராலே மதித்துக் கொள்ளப்பட்டோம்’ என்றும், அவர் ஏற்றுக் கொள்ளாத செயல்களைக் குற்றம் இல்லாத அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். 700
     ‘மிகப் பழைய காலத் தொடர்புடையோர்’ என்று நினைத்துப் பண்பில்லாத செயல்களைச் செய்பவனின் நெருக்கமான உரிமை, அவனுக்கே கெடுதல் தரும்.