திருவள்ளுவர்

இயற்றிய

திருக்குறள்

உரையாசிரியர் : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 8 ...

பொருட்பால்

அங்கவியல்

71. குறிப்பறிதல்

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. 701
     ஒருவன் சொல்வதன் முன்பாகவே, குறிப்பால் அவன் கருத்தை அறியக் கூடியவன், வற்றாத கடலால் சூழப் பெற்றுள்ள உலகத்துக்கே அணிகலன் ஆவான்.

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். 702
     கொஞ்சமும் ஐயப்படாத வகையிலே, பிறர் உள்ளத்திலுள்ள எண்ணங்களை உணர்ந்து கொள்ளக் கூடியவனைத் தெய்வத்தோடு சமமாகக் கொள்ளுதல் வேண்டும்.

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல். 703
     ஒருவரது முகக்குறிப்பினாலேயே, அவரது கருத்துக்களை உணர்கின்றவரை, உறுப்பினுள் எதனைக் கொடுத்தேனும் துணையாக்கிக் கொள்ளல் வேண்டும்.

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. 704
     தாம் செய்வதற்குக் குறித்த ஒரு செயலைச் சொல்வதற்கு முன்பாகவே குறிப்பால் அறிந்து செய்பவர்களோடு, பிறர் நிலையால் ஒத்தாலும் பயனால் ஒப்பாகார்.

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்? 705
     ஒருவர் தம் கருத்தைக் குறிப்பால் காட்டிய போது, அதனை உணராமலிருந்தால், உடலுறுப்புக்களுள் கண் என்பது என்ன பயனைச் செய்வதாகுமோ?

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். 706
     தன்னை அடுத்திருக்கும் ஓர் உருவத்தைத் தன்னிடத்தே காட்டும் பளிங்கைப் போல, ஒருவர் நெஞ்சம் கடுத்ததனை அவரது முகமும் தெளிவாகக் காட்டிவிடும்.

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். 707
     முகத்தைக் காட்டிலும் அறிவால் மிக்கது வேறு யாதும் உண்டோ? உள்ளம் மகிழ்ந்தாலும் சினந்தாலும், தான் முந்திக் கொண்டு அதனை வெளியே காட்டிவிடும்.

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். 708
     முகத் தோற்றத்தால் ஒருவருக்கு நேர்ந்த துயரத்தை உணர்பவரைத் துணையாக அடைந்தால், அவர் எதிரே நின்றாலே போதும், எதுவுமே சொல்ல வேண்டாம்.

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். 709
     கண் பார்வையால் கருத்தை வகைப்படுத்தி உணர்பவரைத் துணையாகப் பெற்றால், ஒருவரது பகைமையையும், நட்பையும் அவரது கண்களே நமக்குச் சொல்லிவிடும்.

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. 710
     நுண்ணறிவு உடையோம் என்பவர் பிறரை அளந்தறியும் அளவுகோல் யாதென ஆராயுங்காலத்து, அப் பிறரது கண் அல்லாமல் பிற உறுப்புக்கள் யாதும் இல்லை.

72. அவை அறிதல்

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். 711
     சொல்லின் தொகையை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, தாம் சொல்லப் போவதையும் நன்றாக ஆராய்ந்தே, எதனையும் சொல்ல வேண்டும்.

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். 712
     சொல்லின் நடையை அறிந்த நல்லறிவை உடையவர்கள், தாமிருக்கும் அவையின் தன்மையைத் தெரிந்து, சொல்ல வேண்டியவற்றை உணர்ந்தே, சொல்ல வேண்டும்.

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல். 713
     தாமிருக்கும் அவையின் தன்மையை அறியாதவர்களாக, ஒன்றைச் சொல்பவர்கள் சொல்லின் வகையை அறியாதவர்கள்; அவர்களால் எதையுமே சாதிக்க முடியாது.

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல். 714
     அறிவினாலே ஒளியுடையவர் முன்பாகத் தாமும் அறிவொளியினர் ஆக வேண்டும்; அறிவிலாதவர் முன்பாக, சுண்ணாம்பு வண்ணங் கொள்ளுதல் போல ஆகிவிட வேண்டும்.

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. 715
     அறிவால் முதிர்ந்தவர் அவையிலே, அவர்கள் கருத்துக்களைக் கேட்டறியும் முன்பாக எதையும் சொல்லாத அடக்கமானது, சிறந்த நன்மை தருவதாகும்.

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. 716
     விரிந்த அறிவு நுட்பங்களை அறிந்தவர் முன் சென்று பேசிக் குற்றப்படுதல், ஆற்று வெள்ளத்தில் நீந்துபவன், இடையிலே நிலை தளர்ந்தால் போன்றதாம்.

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. 717
     குற்றம் இல்லாமல் சொற்களின் பொருள்களைத் தெரிவதற்கு வல்லமை உடையவர்களிடையே, கற்றறிந்த கல்வியறிவு மேலும் விளக்கம் பெற்றுத் தோன்றும்.

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. 718
     சொல்லின் பயனை உணர்கின்றவர்களின் முன்பாக ஒன்றைச் சொல்லுதல், நல்ல பயிர் வளருகின்ற பாத்தியினுள்ளே, நீர் சொரிந்தாற் போலப் பெரும்பயன் தருவதாகும்.

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார். 719
     நல்ல அறிவாளர்கள் கூடியுள்ள அவையிலே, அவர்களுக்கு நன்றாகப் பதியுமாறு சொல்லுகிறவர்கள், புல்லறிவினர் கூட்டத்திலே, மறந்தும் பேசாதிருக்க வேண்டும்.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். 720
     தம் போன்ற அறிவுடையவர்கள் அல்லாதவரின் முன்பாக ஒன்றைப் பற்றி விரிவாகப் பேசுதல் அங்கணத்துள்ளே அமுதத்தைக் கொட்டியது போலப் பாழாகிவிடும்.

73. அவை அஞ்சாமை

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். 721
     சொற்களின் தொகை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, வலியவர் அவையிலே வாய்சோர்ந்து எதனையும் பேசமாட்டார்கள்.

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். 722
     ‘கற்றவர்களுள் கற்றவர்’ என்று புகழப்படுகின்றவர்கள், கற்றவர் அவையின் முன், தாம் கற்றதை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு எடுத்துச் சொல்லக் கூடியவர்களே ஆவர்.

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். 723
     போர்க்களத்தின் நடுவே அஞ்சாமல் சென்று சாவையும் ஏற்பவர்கள் பலர்; ஆனால், கற்றோர் அவையிலே சென்று பேசக் கூடிய அஞ்சாமை உடையவர்கள் மிகமிகச் சிலரே!

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல். 724
     தாம் கற்றவைகளைக் கற்றோர்கள் மனங்கொள்ளும்படியாகச் சொல்லி, தம்மிலும் மிகுதியாகக் கற்றவர்களிடம், தாமும் எஞ்சிய மிகுதியைக் கேட்டுக் கொள்ளல் வேண்டும்.

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. 725
     அவையினருக்கு அஞ்சாமல், அங்கே எழும் கேள்விகளுக்கு விடை சொல்லும் பொருட்டு, அதற்கு வேண்டிய நூல்களைப் பொருள்நயம் அறிந்து கற்றுக் கொள்ளல் வேண்டும்.

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. 726
     அஞ்சாமை இல்லாதவர்க்கு அவர் ஏந்தியுள்ள வாளினால் என்ன பயன்? நுட்பமான அறிவையுடையவர் அவையிலே பேச அஞ்சுபவர்க்கு நூலறிவாலும் பயன் இல்லை.

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல். 727
     பகைவர் நடுவே புகுந்த, பேடியின் கையிலேயுள்ள கூர்மையான வாள் பயன்படாததைப் போல, அவையில் பேசுவதற்கு அஞ்சுகிறவன் நூலறிவும் பயன்படாது.

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார். 728
     நல்லவர்கள் அவையிலே, அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி நல்ல பொருள்பற்றிப் பேசத் தெரியாதவர்கள் பலவகையான நூல்களைக் கற்றவரானாலும் பயன் இல்லாதவரே!

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார். 729
     தாம் பல நூல்களைக் கற்று அறிந்திருந்தாலும், நல்லறிவு உடையவர் அவையிலே பேசுவதற்கு அஞ்சுகிறவர்கள் கல்லாதவரினும் கடைப்பட்டவர்கள் ஆவர்.

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். 730
     அவைக்கு அச்சமடைந்து, தாம் கற்றவற்றை அவையினர் ஏற்கும் வண்ணம் சொல்ல முடியாதவர்கள், அறிவுள்ளவரே என்றாலும், அறிவற்றவர்களுக்கே சமமாவார்கள்.

74. நாடு

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு. 731
     நாட்டு மக்களின் தேவைக்குக் குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே, நல்ல நாடாகும்.

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு. 732
     பெரும் பொருள் பெருக்கத்தால் அனைவராலும் விரும்பத் தகுந்ததாகியும், கேடுகள் இல்லாததாகியும், மிகுதியான விளைச்சலை உடையதாகியும் விளங்குவதே, நல்ல நாடு.

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு. 733
     வேற்று நாட்டாரையும் தாங்குவதற்கான நிலையில், அவரைத் தாங்கிக் காத்தும், தம் அரசனுக்குரிய இறைப்பொருளை முழுவதும் கொடுத்தும் காப்பதே, நல்ல நாடாகும்.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. 734
     நீங்காத பசித்துன்பமும், தீராத நோய்களும், மேல்வந்து தாக்கும் பகைவர்களும் தன்னைச் சேராமல், வலிமையோடும் வளமோடும் விளங்குவதே, நல்ல நாடாகும்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு. 735
     பலவாகப் பிரிந்து இயங்கும் கூட்டங்களும், நாட்டைப் பாழாக்கும் உட்பகையும், வேந்தனைத் துன்புறுத்தும் கொலை வெறியுள்ள குறுநில மன்னரும், இல்லாதது நாடு.

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை. 736
     பகைவராலே கெடுதல்களை அறியாததாய், இயற்கையின் மாறுபாடுகளால் கெட்டவிடத்திலும் வளம் குன்றாமலிருக்கும் நாடு தான், நாடுகளுள் சிறந்த நாடாகும்.

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. 737
     கீழ்நீரும் மேல்நீரும் என்னும் இருநீர் வளமும், வளம் வாய்ந்த மலைகளும், ஆறுகளும், வலிமையான அரண்களும், ஒரு நாட்டிற்கு வேண்டிய உறுப்புக்களாம்.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. 738
     மக்கள் நோயில்லாமலிருத்தல், செல்வம் உடைமை, விளைபொருள் பெருக்கம், இன்பந்தரும் கவின்கலைகள், நல்ல காவல் என்னும் இவ் ஐந்துமே, நாட்டிற்கு அழகு!

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு. 739
     வேற்று நாடுகளை எதற்கும் வேண்டாதபடி, எல்லா வளமும் கொண்டதே நல்ல நாடு என்பர்; பிறர் உதவியை நாடி அதனால் வளமை வரும் நாடு, நாடே ஆகாது.

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. 740
     மேற்சொல்லியவை எல்லாம் சிறப்பாகவே அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி நடத்தும் வேந்தன் பொருத்தமில்லாமலிருக்கும் நாடு, பயனற்ற நாடு ஆகும்.

75. அரண்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள். 741
     பகைவருக்கு அஞ்சாமல் மேற்சென்று போரிட வல்லவர்களுக்கும் அரண் செல்வம்; அஞ்சி உள்ளேயிருந்து தம்மைக் காத்துக் கொள்ள நினைப்பவருக்கும் அரண் செல்வம்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண். 742
     நீலமணி போன்ற நீரினையுடைய அகழியும், வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மரநிழலாற் செறிந்த காடும் கொண்டுள்ளதே, பாதுகாப்பான நல்ல அரண்!

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல். 743
     ‘உயரமும், அகலமும், உறுதியும், பகைவரால் நெருங்குவதற்கு அருமையும் என்னும் நான்கும், சிறப்பாக அமைந்ததே அரண்’ என்று போரியல் நூல்கள் கூறும்.

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண். 744
     காக்க வேண்டும் இடத்தினால் சிறிதானதாகவும், உள்ளே பெரிதான பரப்பை உடையதாகவும், பகைவரது மன ஊக்கத்தை முற்றும் அழிக்க வல்லதே நல்ல அரண் ஆகும்.

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண். 745
     பகைவராலே கைப்பற்றுவதற்கு அரியதாயும், தன்னிடத்தே கொண்டுள்ள உணவுப் பொருள்களை உடையதாயும், அகத்தாரது போர்நிலைக்கு எளியதாயும் அமைந்ததே அரண்.

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண். 746
     அகத்தாருக்குத் தேவையான எல்லாம் பொருள்களையும் உடையதாய், அழிவிடத்து உதவிக்காக்கும் நல்ல காவல் மறவர்களையும் கொண்டதாய், விளங்குவதே அரண்.

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண். 747
     சூழ்ந்து முற்றியும், திடீரெனத் தாக்கியும், வஞ்சனைகளாலே உள்ளிருப்போரை வசப்படுத்தியும், பகைவரால் கைப்பற்றுவதற்கு இயலாத அருமையுடையதே அரண்!

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண். 748
     வந்து சூழ்ந்துள்ள பகைவரது பெரும்படையையும், உள்ளிருப்போர் இடம்விட்டுப் பெயராமல் நிலைத்து நின்றபடியே வெல்லும் அமைப்பை உடையதே, அரண்.

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண். 749
     முற்றுகையிட்ட பகைவர்கள் போர்முனையின் முகப்பிலேயே அழிந்து போகுமாறு, போர்த்தொழிலில் வீறுபெற்றுச் சிறந்த காவல் மறவர்களையும் கொண்டதே அரண்!

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண். 750
     எத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும், அரண்காக்கும் மறவர்கள் போர்வினைச் சிறப்பு இல்லாதவரானால், அந்த அரணும் பயனற்று அழிந்து போகும்.

76. பொருள் செயல்வகை

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். 751
     ஒரு பொருளாக மதிப்பதற்குத் தகுதியில்லாதவரையும், பிறர் மதிக்கும்படியாகச் செய்யக் கூடிய பொருளை அல்லாமல் உலக வாழ்வுக்குச் சிறந்த பொருளாவது யாதும் இல்லை.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. 752
     பொருள் இல்லாத வறியவரை எல்லாருமே இகழ்ச்சியாகப் பேசுவார்கள்; செல்வம் உடையவரையோ எல்லாரும் சிறப்புச் செய்து போற்றுவார்கள்.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. 753
     ‘பொருள்’ என்னும் நந்தா விளக்கமானது, தன்னை உடையவர் எண்ணிய தேயங்களுக்கும் சென்று, அவர் பகையாகிய இருளைப் போக்கும் வல்லமை உடையதாகும்.

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். 754
     தீய வழிகளால் அல்லாமல், பொருள் தேடும் திறனை அறிந்து தேடியதனால் வந்தடைந்த செல்வமானது, அறவாழ்க்கையையும், இன்பத்தையும் ஒருங்கே கொடுப்பது ஆகும்.

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல். 755
     ‘அருள்’ என்னும் இயல்போடும், மக்களின் அன்போடும் பொருந்திவாராத பொருட் பெருக்கத்தைத் தீயவர் புரள்வதற்கு விலக்கி விட்டுவிட வேண்டும்.

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். 756
     உடையவர் இல்லாததாலே வந்து சேர்ந்த செல்வமும், சுங்க வரியாக வந்த பொருளும், பகைவரை வென்று பெற்ற திறைப் பொருளும், வேந்தனின் உரிமைப் பொருளாகும்.

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. 757
     ‘அன்பு’ என்னும் தாய் பெற்றெடுத்த ‘அருள்’ என்னும் குழந்தையானது. ‘பொருள்’ என்கின்ற செல்வம் படைத்த செவிலித்தாயால் வளர்க்கப்பட வேண்டும்.

குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை. 758
     தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது, குன்றின்மேல் ஏறி நின்று யானைப் போரைக் கண்டாற் போல், துன்பமின்றி இன்பம் தருவதாகும்.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எ·கதனிற் கூரிய தில். 759
     பகைவரின் மனச் செருக்கை அழித்து வெற்றிபெரும் ஆயுதம், பொருளைக் காட்டிலும் கூர்மையானது வேறில்லை. ஆதலால், பொருளை எப்போதும் தேடிக் கொள்ள வேண்டும்.

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு. 760
     சிறந்த வழியோடு வந்த பொருளை மிகுதியாகத் தேடிக் கொண்டவர்களுக்கு, எண்ணப்படும் மற்றையவாகிய அறமும் இன்பமும் ஒருங்கே வந்து வாய்க்கும் பொருள்களாகும்.

77. படை மாட்சி

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை. 761
     நால்வகை உறுப்புக்களாலும் முறையாக அமைந்து, களத்திற்படும் துன்பங்கட்கு அஞ்சாமல் பகைவரை வெல்லும் படையே, செல்வங்களுள் சிறந்த செல்வம்.

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது. 762
     போரில் நேரிட்ட அழிவுக்கு அஞ்சாமல் பகைவர் மேற் செல்லும் ஆண்மை, வழிவழிப் புகழோடு விளங்கும் தொல்படைக்கே இயல்வதாகும்.

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். 763
     பகைப்படைகள் எலிகளைப் போலக் கடலாகத் திரண்டு வந்து ஆரவாரித்தாலும், சிறிய தொல்படை நாகத்தைப் போல மூச்சுவிட்டதும், அது முற்றவும் அழிந்துபோம்.

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை. 764
     மனத்தின் உறுதியிலே அழிவற்றதாய், பகைவரது வஞ்சனைகளுக்கு உட்படாததாய், வழிவழித் தொடர்ந்து வந்த வன்கண்மை உடையதாய் விளங்குவதே, சிறந்த படை.

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை. 765
     கூற்றம் சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், அதனோடும் சென்று பொருந்தி, எதிர்த்துப் போரிட்டு வெல்லும் ஆற்றல் உடையதே, சிறந்த படை ஆகும்.

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு. 766
     மறப்பண்பும், மானவுணர்வும், நன்னெறியே பற்றிச் செல்லுதலும், மன்னனால் தெளியப்பட்ட சிறப்பும் என்னும் நான்கும், படைக்குச் சிறந்த பாதுகாப்பு ஆகும்.

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து. 767
     மேல்வந்த போரைத் தாங்கிநின்று, பகைவரை மேற்சென்று வெல்லும் வகைகளை ஆராய்ந்து, அவர்களின் தூசிப்படையைத் தாக்கி அழித்து மேற்செல்வதே, படை ஆகும்.

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும். 768
     போரிடுகின்ற தறுகண்மையும், அதற்கு வேண்டிய ஆற்றலும் இல்லாதிருந்தாலும், ஒரு படை தனது அணிவகுப்பினாலேயே பகைவரை வெற்றி அடைந்துவிடும்.

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை. 769
     தேய்ந்து சிறுகுதலும், மனம்நீங்காத வெறுப்பும், பொருளில்லாத வறுமையும் இல்லாமலிருந்தால், அந்தப் படை தவறாமல் எந்தப் பகையையும் வெற்றி கொள்ளும்!

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல். 770
     நிலையான மறவர்களை மிகுதியாக உடையதானாலும், ஒரு படையானது, தன் தலைவர்கள் திறமையில்லாதவர்களாக இருந்தால், பயனற்று அழிந்துவிடும்.

78. படைச் செருக்கு

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர். 771
     பகைவரே! என் தலைவனின் முன்னே எதிர்த்து வந்து நில்லாதீர்; அவன் முன்னர் எதிர்த்து வந்து நின்று, களத்தில் வீழ்ந்துபட்டு, நடுகற்களாக நிற்பவர் மிகப் பலர்.

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. 772
     காட்டு முயலைக் குறிதவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்பினைக் காட்டிலும், யானைமேல் எறிந்து குறிதவறிய வேலினைத் தாங்குதலே படைமறவருக்கு இனிதாகும்.

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எ·கு. 773
     ‘பேராண்மை’ என்பது பகைவர்க்கு அஞ்சாமல் எதிர் நின்று போரிடும் ஆண்மையே; அவருக்கு ஒரு கேடு வந்தவிடத்து உதவிநிற்கும் ஆண்மையோ, அதனிலும் சிறந்ததாகும்.

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். 774
     தன் கைவேலினைக் களிற்றின் மீது எறிந்துவிட்டுப் படைக்கலமின்றி வருபவன், தன்னுடம்பில் தைத்திருந்த பகைவரின் வேலைப் பறித்து மகிழ்ச்சி அடைவான்!

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. 775
     பகைவர் மீது சினந்து பார்த்த கண்கள், அவர் தம் கைவேலை எறிந்த காலத்தினும், வெகுட்சியை மாற்றி இமைக்குமானால் மறவருக்கு இழிவுதரும் அல்லவோ!

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து. 776
     கழிந்து போன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே படை மறவனாவான்.

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து. 777
     உலகைச் சூழ்ந்து பரவும் புகழையே விரும்பி, உயிரை வெறுத்துப் போரிடும் ஆண்மையுள்ள மறவரின் காலிலே, விளங்கும் கழல்களே அழகு உடையவாகும்.

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர். 778
     போர்க்களத்திலே தம் உயிருக்கும் அஞ்சாமல் போரிடும் படை மறவர்கள், தம் அரசனே தடுத்தாலும், தம் மனவூக்கத்தில் சிறிதும் குறைய மாட்டார்கள்.

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர். 779
     தாம் உரைத்த சூளுரையிலிருந்து தப்பாமல் போரினைச் செய்து, அதனிடத்தில் சாகிறவரை, எவர்தாம் சூளுரை பிழைத்ததற்காகத் தண்டிப்பவர்கள்!

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து. 780
     தம்மைப் பேணியவரின் கண்கள் நீர் சிந்தும்படியாகக் களத்தில் சாவைத் தழுவினால், அத்தகைய சாவு ஒருவன் இரந்தும் கொள்ளத்தகுந்த சிறப்பினை உடையதாகும்.

79. நட்பு

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு. 781
     நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை; நட்பைப் போலச் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை.

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. 782
     நல்ல தன்மையுள்ளவரோடு கொண்ட நட்பானது, வளர்பிறை போல நாளுக்குநாள் வளரும்; பேதைகளின் நட்பு, தேய்பிறைபோல நாளுக்குநாள் தேய்ந்து போகும்.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. 783
     நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவது போல், பழகப் பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு. 784
     நட்புச் செய்து கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று; அவர் மிகுதியாகத் தவறு செய்யும் போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும். 785
     நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிப் பழகுதல் வேண்டியதில்லை; இருவரிடமும் உள்ள ஒத்த உணர்ச்சிகளே, நட்பு என்னும் உரிமையைத் தந்துவிடும்.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. 786
     உள்ளம் கலக்காமல், முகத்தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி நட்புச் செய்வது நல்ல நட்பு ஆகாது; நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்பு செய்வதுதான் நல்ல நட்பு.

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. 787
     நண்பனுக்கு அழிவு வரும்போது அதை விலக்கி, அவனை நிலைபெறச் செய்து, தன்னையும் மீறிய அழிவின் போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. 788
     ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவது போல, நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் நல்ல நட்பு.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. 789
     ‘நட்பு என்பது நிலையாகத் தங்கியிருக்கும் இடம் யாது?’ என்றால், மனவேறுபாடு இல்லாமல், முடிந்த இடமெல்லாம், இணைந்து நின்று காத்து பேணும் நிலையாகும்.

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. 790
     ‘இவர் எமக்கு இப்படிப்பட்டவர்’, ‘யாம் இவருக்கு இத்தன்மைவர்’ என்று, நட்பின் அளவைச் சொன்னாலும், அந்த நட்பு தன் சிறப்பை இழந்து போகும்.

80. நட்பாராய்தல்

நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. 791
     நன்றாக ஆராயாமல் நட்புச் செய்வதைவிடக் கெடுதி எதுவும் இல்லை; அப்படி நட்புச் செய்தபின் கைவிடுதல், நட்பை விரும்புவோரால் முடிவதும் இல்லை.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். 792
     பலப்பல வகையாலும் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்த பின் கொள்ளாத நட்பானது, தானே முடிவில் சாக வேண்டிய அளவுக்குப் பெரும் துயரத்தைத் தந்துவிடும்.

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. 793
     ஒருவன் குணத்தையும், அவன் பிறந்த குடியின் சிறப்பையும், அவன் குற்றங்குறைகளையும், நிலையாக அவனோடு இருக்கும் தோழர்களையும் அறிந்தே, நட்புச் செய்ய வேண்டும்.

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. 794
     உயர்ந்த குடியிலே பிறந்தவனும், பழிச்சொற்களுக்கு வெட்கப்படுகிறவனும் ஆகிய ஒருவனை, எந்தப் பொருளைக் கொடுத்தானாலும் நட்பாக்கிக் கொள்ள வேண்டும்.

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல். 795
     நாம் தவறு செய்யும் பொழுது கடுமையாகப் பேசியும், மேலும் செய்யாதபடி தடுத்தும், உலக நடையை அறிவதற்கு வல்லவரின் நட்பினையே கொள்ள வேண்டும்.

கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். 796
     ஒருவனுக்கு கெடுதல் உண்டாவதாலும் ஒருவகை நன்மை உண்டு; அது, நண்பரின் உறவை அளந்து அறியும் அளவுகோலாக அது விளங்குவதுதான்.

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல். 797
     ஒருவனுக்கு ஊதியமாவது யாதென்றால், அறிவற்றவர்களோடு அறியாமல் கொண்ட நட்பினை, அவரைப்பற்றித் தெரிந்த அப்பொழுதிலேயே விட்டுவிடுதல் ஆகும்.

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. 798
     உள்ளம் சிறுமை கொள்ளும்படி எதனையுமே நண்பனைக் குறித்து எண்ணக்கூடாது; அல்லல் காலத்திலே கைவிட்டுப் போனவர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும். 799
     நாம் கெட்டுப் போன காலத்திலே, நம்மைக் கைவிட்டு விலகிப் போனவரின் நட்பைப் பற்றிச் சாகிற காலத்திலே நினைத்தாலும், நம் உள்ளம் வேதனையால் எரியும்.

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. 800
     குற்றம் இல்லாத நல்லோர்களின் நட்பையே கொள்ளவேண்டும்; தகுதியில்லாத கீழோரின் நட்பினை, ஒன்றைக் கொடுத்தாவது விட்டுவிடுதல் வேண்டும்.