அம்மா

கே. பாயில்

     பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. மலை வழியாகச் செல்லும் மாட்டடித் தடத்தைத் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று நினைப்பதும் அதிசயந்தான்.

     ஆனால் பள்ளிக்கூடம் போய்விட்டுத் திரும்ப வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் அந்தச் சின்னப் பையன், ஒரு நாள் டுரூரி சந்தியில் நின்று கொண்டு, "இடது பக்கமாகப் போகும் கிளை வழியாகச் சென்றால் ஷென்டனுக்குத் தான் போக முடியும்" என்று நிர்ப்பந்தமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் வழிகாட்டிக் கம்பத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவன் எதிரே செல்லும் வேறு ஒரு பாதை, வேறு எங்கேயோ போகிறதாம். ஆனால் அது எங்கே போகிறது என்பதை அந்த வழிகாட்டிக் கம்பம் சொல்லவில்லை என்ற விஷயம் அவன் மனதில் தட்டியது. தூரத்திலே தெரியும் அந்த மலையை ஆற அமரப் பார்ப்பதற்காக அந்தச் சின்னப் பையன் வாட்ட சாட்டமாக உட்கார்ந்து கொண்டான்.

     வாய்க்காலுக்கு அந்தப் பக்கத்தில் பச்சைப் பசேலென மெத்து மெத்தென்ற புல் நிறைய வளர்ந்து கிடந்தது. அதற்கும் அந்தப் பக்கத்தில் கொம்புங் கிளையுமாக மரங்கள் வளர்ந்து நின்றன. அவை காற்றில் எந்தப் பக்கமாகத் தலை சாய்த்து ஆடுகிறது என்பதுகூட அவனுக்குத் தெரிந்த மாதிரி இருந்தது. ஓடைக்கரையிலே இரண்டொரு வில்லோச் செடிகள் (ஒரு விதமான குளிர்ப்பிரதேச அரளி) ஈரச் சிகையைக் காற்றோட்டத்தில் கோதி ஆற்றிக் கொண்டிருப்பது போல் நின்றன.

     அந்தப் பாதை ஒரே செங்குத்தாக மலையுச்சிலே இங்கும் அங்குமாகத் தலையசைத்து நிற்கும் மரங்களை நோக்கி உயர்ந்து செல்லவில்லை. அந்த இடத்தையடையுமுன் அந்தப் பாதை, தன் நிர்க்கதியை அறிவிக்க கைகளை விரிப்பதுபோல் இரண்டு கிளைகளைக் காட்டியது. அந்தக் கிளைகளும் திசை தெரியாது, தலையசைத்தாடிக் கொண்டிருக்கும் குத்துச் செடிகளினூடே மறைந்தன. அந்தச் சின்னப் பையன் தனக்கு எதிரே கிடப்பன எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வேலியைத் தாண்டி, அப்புறம் அந்த ஓடையைத் தாண்டி, அப்புறம் அந்த மலைக்குப் போவதற்காக தன் மனதுக்குத் தைரியம் வருவித்துக் கொண்டிருந்தான்.

     மலைச்சாரல் நெடுகிலும் சாணிக் குவியல்கள் அம்பாரம் அம்பாரமாகக் குவிந்து மலைக்கு உடம்பெல்லாம் பொட்டுப் போட்டன. மனதில் வந்த தைரியம் மலையிலிருந்து இறங்கி வரும் பசு மாட்டைக் கண்டதும் பறந்தோடிவிட்டது. தண்ணீர் குடிக்க வருகிறதாக்கும் என்று நினைத்தான். அவனை அது கண்டுவிட்டதும் அசையாமல் நின்று அமைதியாகப் பார்த்தது. வேலிக்கு இந்தப் பக்கமாக நின்று கொண்டு இவனும் கண்களை உருட்டி விழித்தான். பிறகு கன்றுக் குட்டி ஏதாவது தொடருகிறதா எனக் கூர்ந்து கவனித்தான். அதன் கழுத்துத் தசையும் அலகும் அசைபோடுவதைப் பார்த்துக்கொண்டே இருந்தான். கொஞ்சம் பொறுத்து எலும்பெடுத்த பசுவொன்று அங்கு வந்தது. பையன் எழுந்து நின்று விலகி ஓடுவதற்கு முன்னால் எட்டுப் பசு மாடுகள் கரடுமுரடான பாதையில் நடமாடிக்கொண்டு இறங்கின.

     அவன் பாதையில் நின்றுகொண்டு, அவை தலைகுனிந்து தண்ணீர் குடிப்பதைப் பார்த்தான். அவை தலையை நிமிர்த்தினபோது தாடி மயிரில் தண்ணீர் முத்துக் கோத்தது. வாயோரத்திலிருந்து இழைவிட்டமாதிரி செள் ஒழுகிற்று. அவை மூக்கை விரியத் திறந்து கொண்டு தண்ணீர் பருகிய போதெல்லாம் மொடமொடவென்று குமிழிகள் தண்ணீர் மட்டத்தில் குதித்துத் தெறித்தன. வேலிக்கு இந்தப் புறத்தில் நின்று கொண்டு பார்ப்பதில் பெருமை ஒன்றும் இல்லை என்பது அவனுக்குத் தெரியும். மனிதர்கள், வீரம் என்ற வார்த்தைகள் அவனுக்கு அன்னியமானாலும் அந்தப் பெரிய மிருகங்களைக் கண்டதும் படக்குப் படக்கென்று நெஞ்சுக்குள் இருந்துகொண்டு பறையடித்துக் கொண்டிருக்கும் வஸ்து சின்னப் பொட்டைக் குட்டிக்குத்தான் அணிகலன் என்பதை அவன் அறிவான். அப்பா செத்து எட்டு வருஷங்கள் ஆகிறது. அவர் எப்படியிருப்பார் என்பதுகூட அவனுக்குத் தெரியாது.

     அவனுடைய அம்மாவைப் பற்றி நினைத்திருந்தது வேறு ஒரு தினுசு. எத்தனை காலமாகத்தான் அவள் 'செத்துப் போயிருக்கா' என்ற விஷயம் அவனுக்குத் தெரியவே தெரியாது. திரும்பி ரோடில் ஏறி நடந்து போன போது அவன் அவளைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். நடக்கும்போது சோர்வால் அவனுடைய கால்கள் தரையில் இழுபட்டன. அவை இடையிடையே திடீர் திடீரென்று புழுதியை எழுப்பின. பாதம் மரத்துக் குழைந்தது. அவளிடம் திரும்பிச் செல்ல வழி கண்டுபிடிக்க முடியுமோ முடியாதோ என்பதில் கூட அவனுடைய மனம் அசதி காட்டிக் கொண்டது. 'அத்தையம்மா' பீட்டுஸ்கீடு என்று நினைத்தான். பசுமாடுகள் வாலை முறுக்கித் தத்தம் முதுகுகளில் பலமாக அடித்து ஈ விரட்டின. அத்தையம்மா பீட்டுஸ்கீடு.

     அத்தையம்மாள் வீட்டு வெளிமுற்றத்தில் நின்ற புஷ்பச் செடிகள் முன்னால் உட்கார்ந்துகொண்டு புஷ்பங்களை நோண்டிக் கொண்டிருந்தாள். அவனை ஏறிட்டுப் பார்த்து விட்டு நெற்றியை மறைத்த வைக்கோல் பனெட்டை புறங்கையால் உயரத் தள்ளிக் கொண்டான்.

     பையன் விசையாட்டமாக வெளிக்கேட்டில் ஒற்றைக் காலை வைத்து ஊசலாடி உள்ளே வந்தான். "டுரூரி சந்தியிலிருந்து தெரிகிறதே, இந்த மலைக்கு எப்பவாவது போயிருக்கிறாயா?" என்று கேட்டான்.

     கேட்டதைக் காதிலேற்காமல் தலையை அசைத்தாள்.

     "நீயுந்தான் வந்தாச்சே; இந்தத் தகரத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக்கொண்டு வாயேன்" என்றாள்.

     அந்தச் சின்னப் பையன் புத்தகங்களைக் கீழே வைத்தான்.

     "பொஸ்தகங்களைக் கண்ட கண்ட எடத்திலே போடாதே. வீட்டுக்குள்ளே வரப்போ எல்லாம் கேட்டில் ஊஞ்சலாடிக்கிட்டுத்தான் வரணுமோ" என்றாள்.

     "டுரூரி சந்திப் பக்கத்திலிருந்து தெரியுதே, அந்த மலைக்கி நீ போயிருக்கிறாயா?" என்றான் அந்தச் சின்னப் பையன்.

     "எனக்குத் தண்ணி எடுத்தாரப் போறியா இல்லையா?" என்றாள் அத்தையம்மாள் பீட்டு.

     பையன் தகரத்தை எடுத்துக்கொண்டு நடந்தான். அவன் எங்கும் சுற்றிப் பார்த்துக்கொண்டு நடந்தான். உயரக் குருவி கத்திற்று. மரம் தலையைத் தலையை ஆட்டிற்று. வீட்டுமேலே கொடி சரம் சரமாப் படர்ந்திருக்கு... இம்மாதிரி நானா காரியங்களைப் பரிசீலனை செய்துகொண்டு நடந்ததினால் ஒரு முளைக்கொம்பு தடுக்கிக் கீழே விழுந்தான்.

     "எழுந்திரு" என்றான் ரெய்னால்ட்ஸ்.

     அந்தச் சின்னப் பையன் முழங்காலைத் தடவிக் கொண்டு எழுந்து உட்கார்ந்து ரெய்னால்ட்ஸ் பூட்ஸ் நுனியைக் கசப்போடு பார்த்தான். அவனுக்கு ரொம்பவும் நன்றாகத் தெரிந்த மனிதன் ரெய்னால்ட்ஸ் ஒருவன் தான். அவன் வேஸ்ட்கோட் போட்டிருந்தான். மஞ்சளும் கருப்பும் கலந்த வேஸ்ட்கோட். அத்தையம்மாள் வீட்டுத் தோட்டத்திலே புல் கடாக வளர்ந்துவிட்டால், வீட்டுக் குதிரைகளை தை தையென்று ஓட்டிக் கொண்டு அவ்வளவு புல்லையும் அறுத்து எறிகிறவன் ரெய்னால்ட்ஸ். பூனைக்குட்டிகளைத் தண்ணீருக்குள் முக்கிக் கொன்று விடுவதில் கெட்டிக்காரன். முசலுக்கு அவன் ஒரு அறை வைத்தால் போதும்; காலி. இதுவுமில்லாமல் அவனுக்கு நீந்தத் தெரியும். அவன் தண்ணீரில் நீந்தும்போது நெஞ்சுச்சதை முண்டு முண்டாக உருண்டு நெளியும். பந்தாடும் புல் தரிசில் அவன் நின்று கொண்டிருந்தான். அவன் காலடியில் அந்தச் சின்னப் பையன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அப்போது ரெய்னால்ட்ஸுக்கு மூஞ்சி கோபத்தால் சிவந்திருந்தது. கையில் குதிரைச் சவுக்கு வைத்திருந்தான். இன்னொரு கையால் வேறு ஒரு பயலைப் பிடித்திருந்தான்.

     "இந்தப் பயலைப் பாரு" என்று அத்தையம்மாளைக் கூட மதிக்காமல் சத்தம் போட்டுச் சொன்னான். "இந்தப் பயல் இங்கே பழத்தைத் திருட வந்தான்."

     பயத்தால் முகம் சிவந்துகொண்டு வாய் கோணி எச்சிலைச் சொட்டிய அந்த வாண்டுப்பயல் மீது சூரிய வெளிச்சம் துலாம்பரமாக விழுந்தது. அதைப் பார்த்ததுமே அந்தச் சின்னப் பையன் விம்மி விம்மி அழ ஆரம்பித்தான். தன் கண்களிலிருந்து வழியும் கண்ணீரைத் துடைக்கக் கைகளை முகத்தில் சேர்த்தினான். அவன் கை கிடுகிடுவென்று கோழைத்தனம் ஏந்தி நடுங்கியது.

     "அந்தப் பயலை என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டான். பீதியால் குரலோசை இரகசியம் பேசியது.

     "வெளுக்கப் போகிறேன். அவங்க அப்பங்காரன் அவனுக்குக் குடுக்க வேண்டியதை நான் குடுக்கப் போறேன். நான் விடப்போறதில்லை. செம்மையாகக் குடுக்கப் போறேன் அத்தையம்மா" என்று எஜமானியம்மாளைப் பார்த்துத் திரும்பிச் சொன்னான். அந்தப் பயலை நன்றாக இறுகப் பிடித்துக்கொண்டு வெயிலில் நின்றான்.

     "இங்கே வச்சு அடிக்காதே. அந்தக் கழுதைகள் வீச்சு வீச்சென்று கத்தும்" என்றாள் அத்தையம்மாள். பெகோனியாச் செடியில் அடர்ந்து வளர்ந்து கொண்டிருந்த இலைகளை சர்வ ஜாக்கிரதையாக வெட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அவள் உதடு இறுக மூடியிருந்தது. இளகவில்லை. "லாயத்துக்குக் கூட்டிக்கொண்டு போய்விடு. இந்தப் புளுகுணிகள் நேத்து ராத்திரி அவ்வளவு ஸ்ட்ராபெரியையும் அடித்துக்கொண்டு போய்விட்டதுகள். சாப்பாட்டுக்கு வைக்க மருந்துக்கு ஒரு பழம் இல்லெடா ரெய்னால்ட்ஸ்."

     "அத்தையம்மா, அவனை அடிக்கவேண்டாம்னு சொல்லுங்க" என்றான் அந்தச் சின்னப் பையன்.

     பூக்கள் மீதுதான் வைத்த பார்வையை அவள் மாற்றினாள். அந்தச் சின்னப் பையன் அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான்.

     "வேண்டாமே, வேண்டாமே, ஆஹா அத்தையம்மா தயவு செய்து வேண்டாமே!"

     பையன் அமைதியாகத்தான் பேசினான். "ஆஹா" என்று அவன் வயதிக்கு மீறின வார்த்தையை உபயோகித்தது அவளை நிலைதடுமாற வைத்தது. அது சர்ச்சின் வார்த்தை, காவியத்தின் குரல்.

     "ஆ! அவன் திருட்டுப்பயல் இல்லியா... திருடறபசங்களை..."

     அந்தச் சின்னப் பையனின் பார்வை அவன் தன்னுடைய சிறு முஷ்டியை அவள் முகத்தெதிரே காட்டுவது மாதிரி இருந்தது.

     "அத்தையம்மா, அத்தையம்மா, தயவு செய்து ஆஹா தயவுசெய்து அடிக்கவாண்டாம்னு சொல்லுங்க" என்றான் அந்தச் சின்னப் பையன்.

     நாள் முழுவதும் கரையாமல் கன்னத்தில் ஒதுக்கிக் கொள்ளக்கூடிய முட்டாசி மாதிரி தோட்டமும் வெளியும் மெதுவாக இளம் பாகமாக இருந்தது.

     அத்தையம்மாள் அவனுக்கு இட்ட செல்லப் பெயர் ஸ்கீடு. செல்லப் பெயரைச் சொல்லித்தான் அழைத்தாள். ஆனால் அவள் குரலில் காகம் கரைந்தது.

     "டேய் நீ போய் உன் வேலையைப் பாருடா. ரெய்னால்ட்ஸ் அவன் வேலையைப் பார்க்கட்டும். தண்ணி எடுத்துக்கொண்டு வா என்று உனக்கு நான் எத்தனை தடவைதான் சொல்லுகிறது" என்றாள்.

     அந்தச் சின்னப் பையன் அவள் காலடியில் விழுந்து விட்டான். மன்றாடிக் கெஞ்சினான்.

     அத்தையம்மாள் முகம் கருத்தது. அவன் கெஞ்சம் அவள் வாயிலிருந்து வசவை வாரி இறைத்ததுதான் மிச்சம். தோட்டமே நாற்றமெடுக்கும்படி கொட்டித் தீர்த்து விட்டாள். ரெய்னால்ட்ஸ் திருட்டுப் பயலைப் பிடித்து இழுத்துக்கொண்டு அந்தப் பக்கமாகப் போய் விட்டான். அந்தச் சின்ன பையன் அவள் காலடியில் கிடந்து செயலற்ற கோபத்தால் பல்லைக் கடித்துக் கரும்பிக் கொண்டிருந்தான். அவன் கோபம் அப்பாவிப் புல்லின்மேல் பாய்ந்தது.

     "டேய் இதைக் கேட்டுக்கோ" என்று அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கினாள். "இன்னிக்கு உங்க சித்தப்பா வரப்போறார். வீட்டிலே நீ இப்படிக் கத்திக் கொண்டு கிடந்தால் அவர் என்ன நினைப்பார்? அவர் யார் தெரியுமா... சோல்ஜர். ஆம்பிளெப் பையன் இப்படி அழறதானா அவமானமா இல்லே? அவருக்கும் இதைப் பார்த்தா சகிக்காது."

     அந்தச் சின்னப் பையன் அசையாது கிடந்தான்.

     "சித்தப்பான்னா?"

     "அப்பாவோட தம்பி" என்றாள் அத்தையம்மாள். "நீளமா மீசை வச்சிருப்பார். நீளமாப் பட்டாக் கத்தி வச்சிருப்பார்."

     பொழுதும் மங்க ஆரம்பித்தது. அந்தச் சின்னப்பையன் பாதைக்கு வந்து நடக்க ஆரம்பித்துவிட்டான். அப்பா கூடப் பிறந்த சித்தப்பா வருகிறார் என்பது மட்டுந்தான் அவன் நினைப்பிலிருந்தது. ஒவ்வொரு மரமும் ஒரு பெரிய எதிரியாகத் தோன்றும்படி அதையே நினைத்துக் கொண்டு நடந்தான். காலில் மாட்டியிருந்த ஷூலேஸ் அவிழ்த்துக் கொண்டு அவன் கணுக்காலைச் சுருண்டு கவ்வ, இருளில் வெருண்டு தள்ளாடினான்.

     டுரூரி சந்திக்கு வந்ததும் தைரியமாக வேலிக்கிடையில் பாம்பு மாதிரி நெளிந்து கொடுத்துக் கொண்டு நுழைந்துவிட்டான். ஓடையைத் தாண்டிக் குதித்தான். இச்சத்தம் அவன் காதில் கற்றுண்ட வீணை மாதிரி ஜிவ்வென்று ஒலித்தது. அவன் பயப்படவேயில்லை. அவன் ஓடின வேகத்தில் நாலைந்து ஜீவன்கள் வெருண்டு ஓடின. அவை புல்லுக்கிடையில் ஓடி மறைவதைப் பார்த்துக் கொண்டு நின்றான். கீழே ஓடையில் ஜலம் கண்ணாடி மாதிரி பளபளத்தது. வில்லோச் செடிகளும் ஓடையில் ஏற்றுண்ட மென்மையான காற்று போலிருந்தது.

     பால் காய்ச்சிச் செடியின் காய்கள் அவள் முழங்காலில் உராய்ந்தன. ஒரு விட்டில் அவனுடைய கன்னத்தை வருடிக் கொண்டு பறந்தது. வீட்டுக்குள் விட்டில் ஒன்றைப் பார்த்ததுமே அவன் முதுகுக்குள் பயம் ஈட்டி கொண்டு பாய்ச்சும். ஆனால் இங்கே இந்த இருட்டிலே அது அவனுக்குப் பயமூட்டவில்லை. அவன் புல் தரையின் மேல் உட்கார்ந்து கொண்டான். வீட்டில் அனல் அடுப்பு முன்னால் அடைவாக உட்கார்ந்திருப்பது போல இருந்தது அவனுக்கு. அந்தத் திறந்த வெளியில் மூச்சுப்போல் பிறந்த காற்று வீட்டில் அவன் கழுத்தில் குளிருக்காக சுற்றிக் கட்டப்படும் கம்பளி மயிர்ப் பட்டி மாதிரி வெதுவெதுப்பாக இருந்தது.

     அவன் அங்கேயே கிடந்து உறங்கிவிட்டானா அல்லது அத்தனை நேரமும் முழித்துக்கொண்டு கிடந்தானா என்பது அவனுக்கே தெரியாது. ஆனால் அவன் உட்கார்ந்த சிறிது நேரத்தில் அந்தப் பசுமாடுகள் எல்லாம் இருட்டுக்குள் இருந்து பிறந்து ஓடையை நோக்கி நடப்பதைக் கண்டான். அவை மெதுவாக நடந்து சென்றன. அவைகளின் தலைகள் முன்னங்கால் முன்பாகக் கட்டப்பட்ட வெண்கலமணி போல் தொங்கிக் கிடந்தன. அவை ஓயாமல் அசைபோட்டுக் கொண்டே நடந்தன. அவை வாய் ஓய்வதெல்லாம், மெதுவாகத் தலையை நிமிர்த்தி அம்மா என்று திரண்டு வந்து இருளூடே கத்துவதற்கே.

     அவை அடித்தொண்டையினின்றும் அப்படிக் கத்துவது அந்தச் சின்னப் பையனுக்கு அழகாக இருந்தது. அவனும் அப்படிக் குரல் எடுத்துப் பார்த்தான். மாடு மாதிரி தலையை ஏந்தி நிமிர்த்த முயன்றான். மூக்கைப் பசுவின் சிவந்த நாசிகள் போல அகலமாக்கிக்கொள்ள முயன்றான். அவை அறுவடைக் காலத்துச் சிவப்புச் சந்திரன் போலிருந்தன.

     மலையை விட்டு இறங்குகையில் அவை அவசரங் காட்டவில்லை. இரவு கொழிக்கும் இருளில் நடமாடித் திரிவதில் அவை ஆவல் காட்டின. அவை குதிரைகளாக இருந்திருந்தால், தன் நடமாட்டத்தில் சொற்ப சப்தத்தைக் கேட்டிருந்தால் பயந்துகொண்டு ஓடிவிட்டிருக்கும் என்று அந்தச் சின்னப் பையன் நினைத்தான். ஆனால் அந்தப் பசுமாடுகள் அவன் காலடியின் அருகில் புல்லைக் கறும்பிக்கொண்டு நடந்தன. அவனிருக்கும் மோப்பத்தை அவை பொருட்படுத்தவில்லை எனவிருந்தது. அவன் எப்படி அசைந்தாலும் அவை வெருளவில்லை. மாடுகளுக்கு அவன் இப்படியும் அப்படியும் திரும்புவதெல்லாம் சர்வ சாதாரணம் போலும். அவனுக்கு அருகில் நின்ற பசுமாட்டின் முன்னங்கால்களை அவன் தடவிக் கொடுத்தான். அதைக் கண்டு அவை வெருளவில்லை. அதற்குப் பதிலாக அவன் கழுத்தை முகர்ந்து கொடுத்தது. மாட்டின் மூச்சு அவன் முகத்தில் வீசியதும் அவன் உள்ளம் கிளுகிளுத்தது.

     அந்தச் சமயத்தில்தான் அவன் தடவிக் கொடுத்த பசு முழங்கால்களை உடம்படியில் முடக்கிக் கொண்டு தரையில் படுத்தது. இருட்டில் அதன் உருவம் முழுவதும் அவனுக்குத் தெரியவில்லை. அது அசை போடுகிற மாதிரியிலும் மூச்சு விடும் தோரணையிலுமிருந்து அது படுத்துக்கொண்டு விட்டதென்று நினைத்தான். அதனண்டையில் இன்னும் சற்று நெருங்கினான். அது கண்டுகொண்டது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. அதன் கழுத்தைத் தடவிக்கொடுத்த போதும் அது அசையவில்லை. விரைத்துக்கொண்டு நன்றாக வளைந்து சுருண்டிருக்கும் அதன் காதுகளை உள்ளங்கை கொண்டு தடவினான். அது இதமாகக் காதுகளைத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

     அந்தச் சின்னப் பையன் அதன் மேல் சாய்ந்து படுத்துக் கொண்டான். தன்னுடைய ஒல்லியான முதுகை அதன் எலும்பில் சாத்திக்கொண்டான். அது அசை போட்டு அசை போட்டு மடக்கு மடக்கென்று உள்ளே தள்ளுவதை அவனுடைய தேகம் ஸ்பரிசித்தது. அலை புரள்வது போல சுருண்டோ டும் அசைவு அதன் சதைக் கோளங்களில் புரண்டு சென்றது. அந்தச் சின்னப்பையன் பசுமாட்டின் கழுத்தில் தன் முகத்தை வைத்துக்கொண்டான். பசு போடும் அசை அவன் காதில் இன்பகரமாக ஒலித்தது. மனதில் குளுமை கண்டது. வாயிலிருந்து செல்லும் உணவை எதிரேற்கும் வயிற்றில் பிறக்கும் நாதம் அவன் காதுக்கும் கேட்டது. தழையிலே அது உண்ணக்கூடிய வயலட், குளோவர் செடிகள் அதன் முன்னாலே படர்ந்து கிடப்பதைக் கைகளால் தொட்டுப் பார்த்து அறிந்தான். அதன் மடியில் படுத்துக் கிடக்கும்போது, அதன் மடியில் நிறைந்துள்ள பாலை நினைத்தான்.

     இந்த வயல் வெளியில் அந்தப் பசுமாட்டின் பேரில் சாய்ந்து கொண்டிருப்பது எவ்வளவு சுகமாக இருக்கிறது என நினைத்தான். இவன் இவ்வாறு நினைத்துச் சோர்ந்து கிடக்கும்போது திடீரென்று தலையை உலுப்பி அவன் விலாவில் பலமான அடி கொடுத்தது. அவனுடைய குழம்பிய மனம் நிதானப்பட்டபோது ஈ எதுவும் அதைத் தொந்தரவுபடுத்தி இருக்கவேண்டும், இல்லாவிட்டால் அப்படிப் பலமாக அடிக்கக் காரணமில்லை என்று நினைத்தான். அது தனது முகத்தைத் திருப்பி அவனுடைய கைமீது உராய்ந்து கொடுத்துக் கொண்டபோது இந்த நினைப்புத்தான் அவன் மனதிலிருந்தது. தாய்ப் பூனை குட்டிகளை மோந்து கொடுக்கிற மாதிரி அதன் மூச்சு அவன் மேல் தாக்கியது. அந்தக் காற்றே அவனைத் தூக்கிக்கொண்டுபோய் வயலுக்கு அப்பால் தள்ளிவிடும் என்று நினைத்தான். மோப்பம் பிடித்துத் திருப்தியடைந்த ஒவ்வொன்றையும் சுரசுரப்பான நாவால் குளோவர் தண்டுகளை நக்குவது போல நக்கிக் கொடுத்தது. அது முடிந்ததும் அவன் சட்டையை நக்கிக் கொடுத்தது. பிறகு கழுத்து காது, தலை, தலையிலுள்ள மயிர் எல்லாவற்றையும் நக்கிக் கொடுத்தது. வேறு யாராவது இந்த மாதிரிச் செய்திருந்தால் அந்தச் சின்னப் பையனுக்குத் தோலே உரிந்து போயிருக்கும். அவ்வளவு பரிவுடன் நக்கிக் கொடுத்தது.

     அப்போதுதான் அரித்த சந்திரன் மரங்களுக்கு மேலே வந்தது. 'அம்மாப் பசு' சமிக்ஞை எதுவும் இல்லாமலே திடீரென்று எழுந்து நின்றது. காலை நிமிர்த்திக் கொடுத்துக் கொண்டது. எல்லையற்ற ஏக்கம் அந்தச் சின்னப் பையன் உள்ளத்தில் பாய்ந்தது. அந்தப் பசு மெதுவாக வாலை ஆட்டிக்கொண்டு சென்றுவிட்டது. பையனும் மனதில்லாமல் மலையிலிருந்து இறங்கிவர ஆரம்பித்தான். சந்திரனொளியில் உலகம் முழுவதுமே மறுபடியும் திரும்பி வர ஆரம்பித்தது. மரங்கள் இருட்டிலிருந்து வெளி வந்தன. கடல் போல் புல் அலையாடியது. தண்ணீர்க்கரையை அடைந்ததும் அந்தச் சின்னப்பையன் சற்று நின்றான். ஓடையின் மத்தியில் உடைபட்ட சந்திரன் அசைவாடிக் கொண்டிருந்தான். அதன் ஓரத்தருகில் கை கொடுத்து அதை அப்படியே தண்ணீரிலிருந்து தூக்கிவிடக் குனிந்து முயன்றான். சில நிமிஷங்கள் கழித்து பழையபடியும் அந்தச் சின்னச் சந்திரன் அசைவாடிக் கொண்டிருந்தான். அந்தச் சின்னப் பையனுடைய கைகள் ஈரம்பட்டுக் குளிரெடுத்தது.

     அந்தச் சின்னப் பையன் வேலியைத் தாண்டிப் புழுதி படிந்த பாதை வழியாக நடந்தான். அந்த விபரீத வெளிச்சத்தில் பழைய பாதைத் தடங்கள் தெரிந்தன. வீட்டின் வெளிக்கேட் அருகில் வந்தபோது ஏதோ ஒரு விதமான மனிதப் பிராயத்துப் பீதி அவனைக் கவ்வியது. அவன் கதவைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே புகுந்து நடந்தான். முன் மேடையில் யாரோ ஒரு மனிதன் புகைக்குழாய் பிடித்தபடி உலாத்திக் கொண்டிருந்தான். அந்த மனிதனும் தோட்டத்தைப் பார்த்துவிட்டுத் தன்னுடைய நடமாட்டத்தை நிறுத்திக் கொண்டான்.

     "ஹல்லோ?" என்றான். அவனுக்கு மீசையில்லை.

     "நீதான் சித்தப்பாவா?" என்றான் அந்தச் சின்னப் பையன்.

     "சரியாகக் கண்டுபிடிச்சிட்டியே!" என்றார் சித்தப்பா.

     "என்னை அடிக்கமாட்டியே" என்றான், சின்னப்பையன்.

     "சித்தப்பான்னா அப்படித்தான் செய்யணுமா?" என்றார் அவர்.

     "நான் ஓடியே போனேன்; எங்கப்பா இருந்தா என்னை இப்ப அடிப்பார்" என்றான் அந்தச் சின்ன பையன்.

     "என்னடா ரொம்பப் பெரிய மனுஷனாட்டமா" என்றார் சித்தப்பா.

     அந்தச் சின்னப் பையன் அவரையே பார்த்துக் கொண்டு மௌனமாக நின்றான். சித்தப்பா தலையைத் திருப்பிப் பின்புறமாகப் பார்த்தார்.

     "கொஞ்ச தூரம் இந்த ரோட்டில் நடந்துவிட்டு வரலாம் வாரியா?" என்று கீழ்த் தொண்டையில் கேட்டார் சித்தப்பா.