ஆசிரியர் ஆராய்ச்சி

ஸின்கிளேர் லூயிஸ்

     டாக்டர் ஸ்லீக் பிரம்மச்சாரி; அதிலும், வழுக்கை விழவிருக்கும் வாலிபப் பிரம்மச்சாரி. அவர் இராஸ்மஸ் கலாசாலையில் சரித்திரமும் பொருளாதாரமும் கற்பித்து வந்தார். அதாவது மேடைமீது ஏறி நின்று, வாழ்க்கையின் இலட்சியமே மோட்டார் சவாரியும் காதலும் என்று நினைக்கும் சுமார் ஐம்பது மாணவர்களுக்கு (ஆண் பெண் இரு வகுப்பினர் உண்டு) கி.பி., கி.மு.க்களின் மீதும், நாணய பரிவர்த்தனை, வருமானக் குறைவு நியதி முதலிய விஷயங்கள் மீதும் அவர்கள் தம்மை மறந்த பரவசத்தால் ஆழ்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில், 'லெக்ச்சர்' அடித்துக் கொண்டிருந்தார்.

     தற்பொழுது அவர் மிகவும் தைரியமாக ஒரு பெரும் சரித்திர ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

     ஆமாம்! எல்லோரும் ஆராய்ச்சி நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் டாக்டர் ஸ்லீக் வழி வேறு. அது ஆழ்ந்த ஆராய்ச்சி. புத்தகம் முக்கால் பங்கு எழுதியாகிவிட்டது. அதற்குள்ளாகவே 15,000 மேற்கோள் குறிப்புகள் அதில் அடங்கியிருக்கின்றன. அது சரியான புத்தகம்; வெறும் மேலோட்டமான பொழுது போக்கன்று. வியாபார முறையாகப் பார்க்கப்போனால், புத்தகம் அப்படி அப்படித்தான். அதற்காகவே அந்தப் புத்தகத்திற்கு வெகு நீளமான பெயர் இட்டிருந்தார்.

     "பான் யூரப்பா நாடுகளின் உள்நாட்டு விவகாரங்கள் மீது அமெரிக்க ராஜதந்திரம்"

     சும்மா வெறுமனே மொட்டை மொழுக்கட்டையாக ஐரோப்பா என்று சொல்வதைவிட 'பான் யூரப்பா' என்ற லத்தீன் பெயர் சூட்டுவதில் ஒரு மதிப்பிருக்கிறது என்று டாக்டர் ஸ்லீக் நினைத்தார்.

     இலக்கியம் எவ்வளவுக் கெவ்வளவு ஒன்றும் புரியாமல் கடினமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது உயர்ந்தது என்று அபிப்பிராயம் உள்ளவர் டாக்டர் ஸ்லீக். பழைய செல்லரித்துப்போன தாள் கட்டுகளில் ஒளிந்து கிடக்கும் அமெரிக்காவை ஒரு மாபெரும் நாடாக நிர்மாணித்த வீராதி வீரர்களின் சரிதத்திலே அவர் தமது சித்தாந்தத்தின் பல அம்சங்களைக் கண்டுபிடித்தார்.

     ஸெனட்டர் ரைடரின் சரித்திரத்தை மறுபடியும் ஆராயும் பொழுது அவருக்கும் அவரது பண்டிதத் தன்மைக்குத் தகுதியற்ற கோபம் பிறந்தது.

     குரவர் கிலீவ்லண்ட் அமெரிக்கக் குடியாட்சியின் தலைமைப் பதவி ஏற்ற முதல் வருஷம் ஸெனட்டர் லேகேயட் ரைடர் அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் ஏற்படவிருந்த யுத்தத்தைத் தடுத்தவர். அக்காலத்தில் அரசாங்கக் காரியதரிசியாகவும், பிரான்ஸில் அமெரிக்க ஸ்தானிகராகவும் பிரக்யாதி பெற்றிருந்தார் என்பது டாக்டர் ஸ்லீக்கிற்குத் தெரியும். ஸெனட் சபை அங்கத்தினராக இருந்தபொழுதுதான் அவர் ரைடர் ஹாங்கிலின் மசோதாவைப் பெற்றுப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்துச் சட்டமாக்கி, அமெரிக்கக் கோதுமை வியாபாரத்தைப் பாதுகாத்தார். மேலும் ஸெனட்டர் ரைடர் எழுதிய 'ஆயுதப் பரிகரணத்திற்கு வழி', 'ஆங்கிலோ அமெரிக்க சாம்ராஜ்யம்' என்ற இரண்டு புத்தகங்கள் வெறும் பிரச்சாரப் பிரசுரங்கள் அல்ல; அந்தக் காலத்தில் அவரைப் போல் அரசியல் ஞானம் படைத்த பன்னிரண்டு பேர் இருந்திருந்தால் - போயர் யுத்தம் மட்டுமா? ஸ்பானிய - அமெரிக்க யுத்தம், உலக மகா யுத்தம் என்ற இந்த ஜெர்மன் சண்டை எல்லாம் ஏற்படாது தடுத்திருக்கலாமே?

     டாக்டர் ஸ்லீகிற்கு ஆராய்ச்சியிடையில் கோபம் வந்த காரணத்தைச் சொல்லுகிறேன், கேளுங்கள். ஸெனட்டர் ரைடர் செத்துப் போனாரா, இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்று, உடனே ஞாபகம் வரவில்லை.

     பிறகு ஆராய்ச்சி செய்ததில் உண்மை அவரைத் திடுக்கிட வைத்தது. ஸெனட்டர் ரைடர் சாகவில்லை! உயிருடன் இருக்கிறார்! 92 வயதான பழுத்த கிழம். அக்காலத்தில் அவரது சேவையைப் பிரமாதமாகப் பாராட்டிய தேசம் அவரைப் பற்றி மறந்துவிட்டது.

     இப்படித்தானா அமெரிக்கா தன் தவப் புதல்வர்களை ஆதரிப்பது? - ஆனால் இது ஜனநாயக யுகம்.

     ஒருவாரம் வரை அமெரிக்கப் பத்திரிகைகள் அட்மிரல் டூயின்யை நெப்போலியன், நெல்ஸன், பேயார்டு எல்லாரும் திரண்டு உருவெடுத்த மாபெரும் வீரன் என்று ஏக அமர்க்களப் படுத்திவிட்டு, அப்புறம் சாகும் வரை, சந்து சந்தாகப் பிய்த்துக் கொண்டிருந்தன. டாக்டர் ஸ்லீகிற்கு மனம் கசந்துவிட்டது.

     அமெரிக்காவிலே ஒரு நாடக ஆசிரியன் ஏதோ ஒரு சமயம் பிரபலம் அடைந்துவிட்டான் என்றால், அன்றோடு அவனுக்குப் பிடித்தது சனியன். அதற்கப்புறம் அவனது நாடகங்களை ஒன்றுவிடாது பார்க்க ரஸிகர்கள் திரள் திரளாக வருவார்கள். எதற்காகத் தெரியுமா? அது மோசமாக இருக்காதா என்ற நம்பிக்கைதான்.

     டாக்டர் ஸ்லீகிற்குப் பிரமாதமான கோபம். தமது புத்தகத்தின் முடிவுரையில் ஸெனட்டர் ரைடர் புகழுக்கு மறுமலர்ச்சியளிக்க அமெரிக்கப் பொதுமக்களுக்குச் சவுக்கடி கொடுக்கவேண்டும் என்று கருதினார். ஸெனட்டர் ரைடர் சாகுமுன் புத்தகம் வெளிவந்து அவரது உள்ளத்தைக் களிப்பிக்கும் என்ற சிறிய ஆசை டாக்டர் மனதில் எங்கோ மூலையில் ஒட்டிக் கொண்டிருந்தது.

     ஸெனட்டரின் பிரசங்கங்களையும், அவர் காலத்து மாதப் பிரசுரங்களிலுள்ள படங்களையும் படித்தும் பார்த்தும் டாக்டருக்கு அவரிடம் நெடுநாள் பழகியது போல ஒரு பிரமை ஏற்பட்டது.

     செனட்டர் ரைடருக்குக் கடிதங்கள் எழுதிப் பல புரியாத விவரங்களைப் பற்றிக் கேட்கவேண்டும் என்று டாக்டருக்கு ஆசை. இதுவரை பிரசுரிக்கப்படாத, அந்த விக்டோ ரியா அரசி பிரசிடென்ட் ஹாரிசனுக்கு எழுதிய கடிதத்தில் நியூ பவுண்ட்லாந்து முத்துக்குளிப்பு இடங்களைப் பற்றி என்ன எழுதியிருந்தாள்? இதைப்போல ஆயிரம் விஷயங்கள்... ஒன்றா, இரண்டா? அவருக்கு எப்படி எழுதுவது? இங்கிலாந்தின் பிரதம மந்திரியான கிடாட்ஸ்டனையே ஒரு சமயத்தில் அந்த ஆசாமி, 'எங்கேயாவது தொலை' என்று சொன்னவராச்சே! இவர் கடிதத்தையா பொருட்படுத்தப் போகிறார்.

     ஆசை யாரை விட்டது? ஸெனட்டர் ரைடரின் விலாசத்திற்காக, பல டைரக்டரிகளை எல்லாம் புரட்டிப் பார்த்தார். ஒன்றிலும் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று ஒரு வழியும் தோன்றவில்லை. தமக்கு மேல் உயர்ந்த பதவி வகிக்கும் ஆசிரியர் ஸ்ரீ மங்க் என்பவரிடம் விசாரித்தார்.

     "என்ன டாக்டர் ஸ்லீக், இது தெரியாதா? ஸெனட்டர் ரைடர் எந்தக் கல்லறையின் கீழ் வசிக்கிறாரோ? அவர் செத்து எத்தனை காலமாகிறது! கி.பி. ஆயிரத்துத் தொளாயிரத்து ஒன்றாம் வருஷம் அவர் இறந்து போனதாக எனக்கு ஞாபகம்!" என்றார் ஆசிரியர் ஸ்ரீ மங்க்.

     டாக்டர் ஸ்லீகுக்கு ஹிம்சை முறைகளில் கடுகளவாவது நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் அந்தக் கணக்கில் அவரது மனப்போக்கு நீக்ரோவர்களை உயிருடன் இழுத்து வந்து, 'லிஞ்சிங்' மரியாதை நடத்தும் (அதாவது துடிக்கத் துடிக்க உயிருடன் வதைத்துக் கொல்வது) அமெரிக்க மகாஜனங்களில் அவரும் ஒருவர்தான் என்பதை நிரூபித்துவிட்டது. ஆனால் ஸ்லீக் பண்டிதரல்லவா? செயலில் தீவிரமாக மனத்தை இறங்க விடாது கட்டுப்படுத்தும் தீரரல்லவா?

     கடைசியாக டாக்டர் ஸ்லீகிற்கு ரைடரின் விலாசமும் கிடைத்தது. முயற்சியுடையார் வர்க்கத்தின் பயன் கிட்டியது.

     மதுவிலக்குத் தடைச் சங்கத்தின் நிர்வாகஸ்தர்கள் லிஸ்டில் "லேபேயட் ரைட்டர் (ஒரு காலத்தில் அமெரிக்க ஸெனட்டின் அங்கத்தினர்) விக்லி, (மேற்கு) வெர்மாண்ட்" என்று காணப்பட்டது. விலாசம் தெரிந்தது என்ற உற்சாகத்தில் ஒரு டோ ஸ் புகையிலை அதிகமாயிற்று.

     பின்பு ஒரு வாரப் பத்திரிகையில் பின்வரும் விளம்பரத்தைப் படித்தார்.

     எழுத்தாளருக்கு ஏற்ற இடம் ஸ்கைபீக்,
     விக்லி வாடகைக்கு விடப்படும் (வாடகை சரசம்)

என்று கண்டிருந்தது.

     வேனிற்கால விடுமுறை ஆரம்பித்ததும் டாக்டர் ஸ்லீக் விக்லிக்குப் பிரயாணமானார். எழுத்தாளரல்லவா?

     அந்த வாடகைக்கு விடப்படும் எழுத்தாளருக்கு ஏற்ற இடம் விக்லியில் ஒரு மாஜி - குதிரை லாயம் தற்பொழுது இள நீல வர்ணம் பூசப்பட்டு, 'ஷெல்லி' என்ற நாம கரணம் சூட்டப்பட்டுக் கோலாகலமாக விளங்கியது. 'ஷெல்லி' என்பது ஓர் ஆங்கில மகாகவியின் பெயர்.

     டாக்டர் ஸ்லீக் 'ஷெல்லி' வாசத்தில், பிரமாதமாக லயித்து விடாவிட்டாலும், மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் இத்யாதி வர்க்கத்தைச் சேர்ந்தவரல்லவா?

     முதல் சாப்பாடு நடக்கும்பொழுதே வீட்டுக்காரனிடம் மெதுவாக, "ஸெனட்டர் ரைடர் இங்குதான் வசிக்கிறாரோ?" என்று ஒரு கேள்வி போட்டார்.

     "அதோ தெரிகிறதே, அந்த மலைச் சிகரத்திலேதான் வசிக்கிறார். இங்கிருந்து நாலு மைல்தான் இருக்கும். அவரிடம் வேண்டுமானால் கூட்டிப்போகிறேனே அதிருக்கட்டும், சாயங்காலம் பஜனைக்கு நீர் கட்டாயம் வரவேண்டும்" என்றான் வீட்டு முதலாளி.

     சாயங்காலம் எட்டு மணியிருக்கும். டாக்டர் ஸ்லீக், லொகார்னோ ஒப்பந்தத்தையும், வெர்ஸேல்ஸ் உடன்படிக்கையையும் ஒரு கோர்வையாக முடிச்சுப்போட்டு வைக்க விடப்படாமல் பஜனைக்கு இழுத்துச் செல்லப்பட்டார்.

     பெரிய டாக்டரல்லவா! அங்கே ஆட்கள் எல்லாரும் அவரைச் சூழ்ந்து பஞ்சரிக்க ஆரம்பித்தனர். அதிலும் ஒரு உபாத்தினிப் பெண் - சிறிது அழகுள்ளவள் - இந்தப் பஞ்சரிப்புத் தொழிலில் மிகவும் சிரத்தை காண்பித்தாள்.

     வேனிற்காலம் முழுமையுமாவது அதாவது விடுமுறை முழுதுமாவது, எழுத்தாளனாக வாத்தியார் தொழிலுக்கு லீவு கொடுப்பதென்ற முடிவிற்கு வந்த டாக்டர் ஸ்லீக், தமது ஆராய்ச்சியில் மனத்தைத் திருப்பித் தப்பித்துக் கொண்டார்.

     மறுநாள் டாக்டர் ஸ்லீக்கும், வீட்டுக்காரனும் ஸெனட்டர் ரைடர் வாசஸ்தலத்திற்குச் சென்றனர். மாஜி ஸெனட்டர் தொண்ணூற்றிரண்டு வயதானவரானாலும் நல்ல முரடர் என்பதை டாக்டர் உணர்ந்தார். 'அறிவும் திடமும் ஒருங்கே அமையப் பெற்றவர் போலும்' என்று எண்ணினார் டாக்டர் ஸ்லீக்.

     இருவரும் அறிமுகமாக்கப்பட்டுச் சம்பாஷித்தனர்.

     டாக்டர் ஸ்லீக், மெதுவாகத் தான் வந்த உத்தேசத்தைக் கூறினார்; அதிலும் இடை இடையே நயமாக 'ஆங்கிலோ - அமெரிக்க சாம்ராஜ்ய' என்ற புத்தகத்தை வர்ணித்தார்.

     ஸெனட்டர் பழைய கதையைப் பேசினார். கிழவர்கள் பேச ஆரம்பித்தால் உலகத்தில் அவற்றிற்கு முற்றுப் புள்ளிதான் உண்டா! அவர் பேச்சில் எட்வர்ட் அரசர் என்ன, பிரஞ்சு ஆசிரியர் அனதோல் பிரான்ஸ் என்ன, லார்டு ஹால்டூடன் என்ன, பெரிய பெரிய ஆசாமிகள் எல்லாரும் தண்ணீர் பட்டபாடுதான். அந்த இரண்டு மணி நேரமும் டாக்டர் ஸ்லீக் உலகத்துப் பெரியார்களுடனெல்லாம் உறவாடினார்.

     ஸெனட்டர் வீட்டு விருந்தும் அவரது பேச்சு மாதிரி இருக்கும் என்று எண்ணினார். அன்று டாக்டர் ஸ்லீகிற்கு அது ஒரு பெருத்த ஏமாற்றம்.

     அவர் போன பிற்பாடும் ஸெனட்டர் ரைடருக்கு உற்சாகம் குறையவில்லை. பாட்டில்கள் போடவேண்டும் என்ற விருப்பம். ஆனால் அவருடைய தேகசுகத்தைப் பாதுகாக்கும் நர்ஸ் இல்லாவிட்டால் என்ன நடந்திருக்குமோ! பழைய ராஜிய முறைப்படி ஸெனட்டர் ரைடருக்கும் அவரது நர்ஸுக்கும் அன்று ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது.

     (1) ஒரு பாட்டிலுக்குப் பதில் ஒரு கிளாஸ் குடிப்பது.

     (2) இரவு முழுவதும் விழிப்பதற்குப் பதில் 11 மணி வரை விழித்திருப்பது.

     நீடித்த ராஜீய நோக்கம் படைத்தவரல்லவா? மேலும் சாம்ராஜ்யங்களுக்காக சமரசத்திற்கு உடன்பட்ட தீரரல்லவா? அந்த இளம் போதையில் டாக்டர் ஸ்லீகிற்குத் தமது உடமை முழுவதையும் எழுதிவைத்து அவரைத் தூக்கிவிட வேண்டுமென்று கூட நினைத்துவிட்டார்.

     இரண்டாம் முறையாக ஸெனட்டரைப் பார்க்கச் சென்றபொழுது டாக்டர் ஸ்லீகிற்கு, கிராமபோனுக்குச் சாவிகொடுத்து ஒரு பிளேட்டையே மறுபடியும் வைத்துக் கேட்பது போல் இருந்தது. ஆனால் இன்று சமாசாரங்கள் எல்லாம் அதே மோஸ்தரில் சென்றாலும் அதில் சாராயக் கிடங்கு வாசனை அதிகமாகவே அடித்தது. டாக்டர் ஸ்லீகின் பொறுமைக்கும் எல்லை ஒன்று உண்டு. அன்று அவர் மனம், பேச்சில் செல்லாது அந்த உபாத்தினிப் பெண் மீதே சென்றது.

     ஸெனட்டர் பேச்சைத் திருப்பி ஒரு சாவி கொடுத்தார். அந்தப் பழைய கடிதம், வெளிவராத விக்டோ ரியா மகாராணியின் அந்தரங்கக் கடிதம்! டாக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது!

     "என்றாவது அதை ஒருமுறை பார்க்கலாம்" என்றார் ஸெனட்டர்.

     ஆனால் மறுபடியும் ஸெனட்டர் பேச்சு சாரமற்ற குடி வெறியில் விழுந்தது.

     டாக்டர் ஸ்லீகிற்குத் தப்பித்தால் போதுமென்றாகிவிட்டது.

     செலவு பெற்றாகிவிட்டது.

     கிழவனார் தமது கம்பளிச் சால்வையிலிருந்து ஒரு நீண்ட தஸ்தாவேஜை எடுத்தார். "இதற்கு உலகில் ஆறு நகல்கள்தான் இருக்கின்றன. வேண்டுமானால் பாரும்!" என்று கொடுத்தார். "இதுதான் பாரிஸ் கம்யூனின் அந்தரங்கத் தகவல்!" என்றார்.

     டாக்டர் புறப்பட்ட அவசரத்தில் புரட்டிப்பார்த்தார். இருந்தாலும் முன்பே பத்திரிகைகளில் வெளிவந்த விஷயத் தொகுதிதான் என்று பட்டது. திரும்பினார்.

     இனி, போனபின் எழுத முடியுமா? வழியிலே ஸ்ரீமதி உபாத்தினியைச் சந்தித்தார். அவளுடன் உலாவச் சென்று விட்டார்.

     இரண்டு நாட்கள் கழித்து ஸெனட்டரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.

     டாக்டர், 'வரச் சௌகரியமில்லை' என்றார்.

     "இரவு விருந்திற்காவது."

     "அப்படியானால் சரி."

     மறுநாள் விருந்தை மறந்து டாக்டர் ஸ்லீக் ஸ்ரீமதி உபாத்தினியம்மாளுடன் உலாவச் சென்று விட்டார். அவருக்கு ரைடர் விலங்கிலிருந்து தப்பியதால் காதல் நினைப்பும் ஏற்பட்டது. இப்படி அவர்கள் ஸெனட்டரை மறந்து குதூகலமாகப் பொழுது போக்கினார்கள்.

     அங்கு...

     ஸெனட்டர் ரைடர் வெகுநேரம் காத்திருந்தார். அவர் கையில் ஒரு நீண்ட கடிதம் இருந்தது. அதே கடிதம் - பழைய இரகசியக் கடிதம் - விக்டோ ரியா மகாராணியின் கடிதம்.

     அதன் தலைப்பில் "எனது நண்பன் எல். ரைடருக்கு - பி.ஹாரிஸன்" என்று அமெரிக்கக் குடியரசினுடைய தலைவரின் கையெழுத்து இருந்தது.

     ரைடர் வெகுநேரம் காத்திருந்தார்.

     டாக்டர் ஸ்லீக் வரவில்லை. அவரைப் பற்றிய தகவலும் கிடைக்கவில்லை.

     இருட்டி நெடுநேரமாகிவிட்டது; நம்பிக்கை குறைந்தது. வேலைக்காரன் பார்க்க வந்தான். "அவரைக் காணவில்லை" என்ற தகவல் கிடைத்தது.

     "முட்டாள் பயல்! அந்த வேலைக்காரப் பயல் ஏன் காத்திருந்து அழைத்து வரக்கூடாது? இந்த மலைக்காட்டில் அவர் வழி தவறியிருந்தால்..." என்றார்.

     "நர்ஸைக் கூப்பிடு" என்று கட்டளையிட்டார்.

     நர்ஸ் வந்ததும் திடுக்கிட்டுவிட்டாள்.

     ஸெனட்டரின் தலை சோர்ந்து கவிழ்ந்து விட்டது.

     "என்னைப் படுக்கைக்குக் கொண்டுபோய் விட மாட்டாயா? எனக்கு என்னமோ போல் வருகிறது" என்றார்.

     நர்ஸ், அவருடைய போர்வை எல்லாம் சரியாகப் போட்டு கைத்தாங்கலாக எடுக்க முயற்சிக்கையில் அவரது கண்கள் எல்லாவற்றையும் கடைசியாகப் பார்ப்பதுபோல் நின்றன.

     ஸெனட்டருக்குத் திடீரென்று தைரியம் வந்தது. தன்னிடமிருந்த கடிதத்தைப் பரபரவென்று கிழித்தெறிந்தார்.

     அவ்வளவுதான். அவருடைய சீட்டும் கிழிக்கப்பட்டது.