உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சித்திரவதை எர்னஸ்ட் டாலர் "உனக்கு இன்னும் ஏதாவது விருப்பம் இருக்குமா?" சாகக் கிடக்கும் வாலிபனைப் பார்த்து ஸ்டட்கார்ட் இரகசியப் போலீஸ் உத்தியோகஸ்தர் இவ்வாறு கேட்டார். வாலிபனுடைய 'வெறிச்சோடிய' கண்கள் ஜன்னலின் கம்பிகள் வழியாகத் தெரியும் வானத்தின் துண்டத்தைச் சதுரம் சதுரமாக அறுத்துக் காட்டுவதில் விழுந்தன, - பார்க்கவில்லை. வெளியே சிறையின் முற்றத்தில் குதிரை மசாலி மரம் நிறையப் பூத்துக் காய்த்து நிற்கிறது. அந்தக் காய்கள் தின்பதற்கு ரொம்ப ருசியாக இருக்கும் என்று நினைத்தான். 'நன்றாகப் பழுத்தால் வாயில் வந்து விழுகிறது. ஏன் வயிறு கொண்ட மட்டும் தின்று தீர்க்கலாமே, ஏன் அகப்பட்டுக் கொள்ளும்படியாக நடந்து கொண்டேன்...?' "நான் சொல்வது என்ன, புரிகிறதா?" என்றார் மறுபடியும் அந்த அதிகாரி "உனக்கு என்னவாவது வேண்டுமா?" "ஆமாம் எனக்கு ஒன்று வேண்டும்" என நினைத்தான் வாலிபன். "...அல்லது நான் வேண்டாததும் உண்டு. மறுபடியும் ஜெயிலுக்கு வர விரும்பவில்லை. அடித்து மிதித்து உதைத்துக் காறி நீங்கள் உமிழ்வதை நான் விரும்பவில்லை; நான் ஜன்னல் வழியாக வெளியே குதித்திருந்தால் விளையாட்டுக்குக் குதித்தேன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளுவீர்களாக்கும்..." "நீ சாகுமுன் உன் தாயாரைப் பார்க்க வேண்டுமா?" என்றார் அந்த அதிகாரி. "அந்த வார்த்தைதான். ஏன் அதையே அவன் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? நான் சாகவேண்டும் என்பதை அவன் சொல்லியா தெரியவேண்டும்? என் மூஞ்சிக்கெதிரே அந்த வார்த்தையைச் சொல்லுவதென்றால் என்ன அற்பமான தந்திரம், - அற்பமான தந்திரம்... "நான் சாகமாட்டேன்... வீட்டுக்குத்தான் போகப் போகிறேன்... "ஆமாம், எங்கம்மாவைப் பார்க்க வேணும் என்று ஆசையாகத்தான் இருக்கிறது; அதை நினைக்க வேண்டும் என்றால்... நல்ல பயல் போலிருக்கிறது. யதார்த்தமாகவே சொல்லுகிறானா..." அவன் அந்த வெறிச்சோடிப்போன கண்களைத் திருப்பி உத்தியோகஸ்தனைப் பார்த்துத் தலையை அசைத்தான். "நான் அவளை அப்பொழுதே ஆள் அனுப்பிக் கூப்பிட்டு விட்டேனே; எந்த நிமிஷமும் வந்துவிடுவாள்; இன்னும் ஒரு கேள்விக்குப் பதில் தெரியவேண்டும். உன்னிடம் அந்தத் துண்டுப் பிரசுரங்களை யார் கொடுத்தார்கள்?" உத்தியோகஸ்தன் பதிலுக்காகக் காத்திருந்தான். "அப்படியா?" என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டான் வாலிபன்; வாய் குமட்டியது... சீ... அப்பொழுதும் சத்தம் போடாமல் இருக்க வாயில் அழுக்குத் துணியை வைத்துத் திணித்தார்கள்; இப்பொழுது 'ஊளையிட'ச் சொல்லுகிறார்கள்; தோழர்களைக் காட்டிக் கொடுக்கச் சொல்லுகிறார்கள்... சீ...! சீ!... "நான் ஒண்ணும் சொல்லப் போவதில்லை." "உங்கம்மாவை நினைத்துப்பாரு..." வாலிபன் மோட்டு வளையை நோக்கினான். அவன் இன்னும் நான்கு மணி நேரம் உயிரோடிருப்பான். நான்கு மணி நேரத்தில் எத்தனையோ கேள்வி போடலாம். மூன்று நிமிஷத்திற்கு ஒரு கேள்வி என்று வைத்துக் கொண்டாலும், எண்பது கேள்வி கேட்கமுடியும். உத்தியோகஸ்தன், தகுதி வாய்ந்த உத்தியோகஸ்தன். அவனுக்கு வேலை 'கரதலைப் பாடம்' - இதற்குமுன் எத்தனையோ பேரை விசாரித்திருக்கிறான் - சாகக் கிடக்கிறவர்களைக் கூட, எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான். அப்புறம் வேலை எளிது. சிலரிடம் இரைந்து பேச வேண்டும். சிலரிடம் 'குசுகுசு' என்று காதோடு காதாகக் கேட்க வேண்டும்; சிலரைப் பயமுறுத்த வேண்டும்; சிலரைத் 'தாஜா'ப் பண்ணவேண்டும். "எல்லாம் உன் நன்மைக்குத்தான்" என்றான் உத்தியோகஸ்தன். வாலிபன் வேறு கேள்விகளைக் கேட்கவேயில்லை. மௌனமாகக் கிடந்தே செத்துப் போனான். மறுநாள் பத்திரிகைகளில் "ஸ்டட்கார்டைச் சேர்ந்த தொழிலாளியான டி - என்பவனை இரகசியப் போலீஸார் ஆத்திரமூட்டும் பிரசுரங்களை வழங்கியதற்காகக் கைது செய்ய முயற்சிக்கையில், மூன்றாவது மாடியிலிருந்து வெளியே விழுந்து விட்டான். வெளிமுற்றத்தில் இடுப்பு எலும்பு நொறுங்கிப் போய் அவன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவன் சில தினங்களுக்கு அப்புறம் ஜெனரல் ஆஸ்பத்திரியில் சிறை வார்டில் காலமானான்" என்ற குறிப்புக் காணப்பட்டது. |