உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
இந்தப் பல் விவகாரம் மைக்கேல் ஜோஷெங்கோ - ருஷ்யா எங்கள் சகா எகோரிச்சுக்குப் பல், தொந்திரவு கொடுத்து வந்தது. என்ன காரணத்தினாலோ விழ ஆரம்பித்தது. காலம் என்ற ஒன்று இருக்கே, அதற்கும் இந்த விவகாரத்துக்கும் சம்பந்தமிருக்கலாம். வருஷங்களும் ஓடி மடிகின்றன. மனுஷ சரீரமும் நைந்துபோக ஆரம்பிக்கிறது. எலும்புகளும் ஒடிய ஆரம்பிக்கின்றன. பல்லுக்கும் அதே கதிதானே! சுருக்கமாகச் சொல்லப்போனால், ஐவான் எகோரிச் ஸாசகெவ் பற்களை ஒவ்வொன்றாக இழக்க ஆரம்பித்தார். இவர் எங்களோடு வந்து வசிக்க ஆரம்பித்து சுமார் ஒரு வருஷ காலமிருக்கும். பேச்சு முற்றியபோது அவருடைய பற்களில் ஒன்று வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பது வாஸ்தவந்தான். ஆனால் மற்றவையெல்லாம் சுய இஷ்டத்தின் பேரிலேயே வெளியேற ஆரம்பித்தன. அவை 'சம்பவங்களுக்காக'க் காத்திருக்கவில்லை. அடை சுவைக்கும்போது அவை ஒடிந்து விழுந்தன. சம்பள விகிதம்பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தபோது சில நொறுங்கின; அல்லது யாருமே இல்லாத சமயத்திலும் அவை வெளியேறின. மிகவும் ஆச்சரியப்படத்தக்கதுதான். சொற்ப காலத்தில் அவர் ஆறு பற்களை இழந்தார். ஆனால் எங்கள் எகோரிச் இதைக் கண்டு கவலை கொள்ளவில்லை. பொக்கை வாய்ப் பயம் அவருக்குக் கிடையாது. அவர் இன்ஷுர் செய்து கொண்டிருந்தார். அவருக்குத் தேவையான சமயத்தில் வேறு பல் ஒரு ஸெட் வந்து சேரும். அதை நினைக்க நினைக்க அவருக்கு ஆனந்தம் குதி போட்டது. "பல் விவகாரத்திலே நமக்குக் கஞ்சத்தனமே கிடையாது. யாரும் பல்லைத் தட்ட வந்தால் எனக்கு அதை இழக்க எப்போதும் சம்மதந்தான். எந்தப் பயலும் அடிக்க வந்தால் மூக்கிலோ முஞ்சியிலோ குத்துவிட அனுமதிப்பதில்லை. ஆனால் இந்தப் பல் விவகாரம் வேறே. அதைப் பற்றிக் கவலையே கிடையாது. எங்களைப்போல இன்ஷுர் செய்து கொண்டவர்களுக்கெல்லாம் ஆபத்தே கிடையாது" என்று எகோரிச் தம்முடைய கொள்கையை சாயனம் செய்து கொண்டிருப்பது வழக்கம். பல் ஆறு போனதும், மூலாதார ரிப்பேருக்காக ஏற்பாடு பண்ணுவது என்று தீர்மானித்தார். இன்ஷுரன்ஸ் கடுதாசிகளை எடுத்துக்கொண்டு ராஜாங்கப் பல் ஆஸ்பத்திரிக்கு நடையை நீட்டினார். பல் ஆஸ்பத்திரியிலே அவரைப் பார்க்கச் சந்தோஷம் என்றார்கள். "ஒரு ஸெட் செய்து கொடுக்கத் தயார்தான். உங்களுக்கு எத்தனை பல் போச்சு. அடாடா... குறைந்த பட்சம் எட்டுப்பல் போனால்தான் செய்து கொடுக்க வேண்டும் என்பது எங்கள் சட்டம். உமக்கு அதைவிட ஜாஸ்தி போயிருந்தால் உம்முடைய அதிர்ஷ்டம். எங்கள் துரதிர்ஷ்டம் எட்டுக்கும் குறைந்திருந்தால் எங்களால் உமக்கு எதுவும் செய்து தருவதற்கு சாத்தியப்படாது. சில்லறை வேலைகளை வைத்துக் கொண்டு நேரத்தை வீண்படுத்த ஆஸ்பத்திரியால் முடியாது. இன்ஷுரன்ஸ் சம்பந்தமான சட்டம் எல்லாம் அந்தப்படிதான்." "எனக்கு ஆறு பல் போச்சு" என்றார் எகோரிச். "காம்ரேட், என்ன செய்யலாம்? ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கு. நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லையே. எட்டு விழுகிறவரை நீ காத்திருக்க வேண்டியதுதான்" என்றார்கள். எகோரிச்சுக்கு ரொம்பக் கோபம் வந்தது. "நான் சுத்தியை வைத்துப் பல்லைத் தட்டிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களா? உங்கள் அர்த்தம் தான் என்ன?" "நீர் பல்லைகில்லைத் தட்டிக் கொண்டிருக்க வேண்டுவதில்லை. இயற்கையின் போக்கில் நீர் தலையிடலாமா? நீர் காத்திருக்க வேண்டும். அதிர்ஷ்டமிருந்தால் இரண்டு மூன்று தானே விழுந்து விடக்கூடும்." ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பி வீட்டுக்கு வரும்போது எகோரிச் மனம் நிலை கொள்ளவில்லை. இந்தப் பல் விவகாரத்தில் அவ்வளவு நிச்சயமிருந்தது அவருக்கு. ஆனால் இப்பொழுது பார்க்கப் போனால் எல்லாம் ஏகக் குளறுபடியான சிக்கலாகக் கிடக்கிறது. இந்த அதிர்ஷ்டக் குந்தகமான அந்தப் பற்கள் விழும்வரை காத்திருப்பது என்று தீர்மானித்து மனதைச் சாந்தப்படுத்திக் கொண்டார். ஒன்று வெகு சீக்கிரத்தில் விழுந்தது. இன்னொரு பல்லுடன் எகோரிச் கொஞ்சகாலம்... தச்சனுடைய அரத்தை வைத்துப் பல்லுக்கு மெருகு கொடுக்க முயன்றார். அது ஆட்டம் கொடுத்து ஈறை விட்டு வெளியே கழன்று விழுந்தது. எகோரிச் கால்கொண்ட வேகத்தில் ஆஸ்பத்திரிக்கு ஓடினார். "இப்பொழுது - சட்டப்படி எட்டுப் பல் விழுந்தாச்சு" என்று அறிவித்தார். "ரொம்ப நல்லது. வேலையை இனிமேல் ஆரம்பிப்போம். இந்த எட்டுப் பல்லும் ஒரே இடத்தில் விழுந்திருக்கிறதா எப்படி? எட்டுப் பல்லும் ஒரே வரிசையில் விழுந்திருக்க வேண்டும் என்பது எங்கள் சட்டம். ஒரே வரிசையில் இல்லாவிட்டால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது; இங்கொன்றும் அங்கொன்றுமாக விழுந்திருக்கும் பற்களைப் பற்றிக் கவனிக்க முடியாது. உமக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறோம். திக்காலுக்கு ஒன்றாக விழுந்திருந்தால் உம்மால் இன்றும் சுவைத்துச் சாப்பிட முடியு"மென்றார்கள். "அவை ஒரே இடத்திலிருந்து விழவில்லை" என்றார் எகோரிச். "அப்படியா? ரொம்ப வருத்தப்படுகிறோம். நாங்கள் எதுவும் செய்வதற்கில்லை." இதற்கு என்ன பதில் சொல்வது என்று எகோரிச்சுக்குப் புரியவில்லை. மீந்து நின்ற பல்லை நெற நெறவென்று கடித்துக்கொண்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தார். எதிர்பாராத விதமாய் எப்படி வந்து முடிந்து விட்டது? இனிமேல் நமக்கென்ன கவலை என்ற நம்பிக்கையில் நிம்மதியாக ஜீவித்து வந்தார். ஆனால் இப்பொழுது நம்பிக்கையெல்லாம் நாசமாய்ப்போச்சு. அன்றிலிருந்து எகோரிச் ஜீவியமே மாறியது. இப்பொழுது ரொம்பவும் அமரிக்கையாகக் காலத்தைக் கழிக்கிறார். திரவ பானமாகத்தான் ஆகாரம். தினசரி மூன்று முறை பல் விளக்க ஆரம்பித்துவிட்டார். இந்த மாதிரியில் பல் ஆஸ்பத்திரிச் சட்டம் ஒரு நல்ல காரியத்தைச் செய்தது! |