இஷ்ட சித்தி

ஹான்ஸ் பலாடா - ஜெர்மனி

     முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எனக்குத் தெரியவில்லை.

     ஒருநாள் பார்க்கில் நாங்கள் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபொழுது, அவள் சொன்னதுதான் எனக்கு மறக்க முடியவில்லை. "ஒவ்வொரு செப்புக் காசையும் கண்களில் எண்ணெய் விட்டுக் கொண்டு கணக்குப் பார்க்கும்படியான இந்தக் கஷ்டமில்லாதிருந்தால்..." என்றாள்.

     "இருந்தால் என்ன?" என்று அவளிடம் வியாக்யானம் செய்யும்படி கேட்டேன்.

     "இன்னும் கொஞ்சம் சாமான் வாங்கலாம்" என்றாள் இட்ஸன் பிளாஸ், எதையோ எண்ணிக்கொண்டு. எங்களுக்கு அப்பொழுதுதான் கலியாணமாயிற்று. மொத்தமாகப் பார்க்கப்போனால் கையில் தம்பிடி கிடையாது என்று சொல்லிவிடலாம். இளவயதிலே புதுக் கலியாணமாகி, (அதிலும் ஒருவர் மேலொருவர் கண்மூடித்தனமான ஆசை வைத்திருந்தால்) இந்த வறுமை எல்லாம் பிரமாதமில்லை. ஆமாம்! எங்களுக்குச் சில சமயங்களில் மனச் சோர்வு ஏற்படும். "எல்லா அதிர்ஷ்டமும் உடனே திரண்டு வந்துவிட வேண்டுமென்று கணக்கா? எப்பொழுதும் இப்படியே இருந்துவிடவா போகிறோம்?" என்று சொல்லிக் கொள்வோம்; எங்கள் சோர்வெல்லாம் பறந்துவிடும்.

     "என்ன வாங்குவாய்?" என்றேன்.

     இட்ஸன் பிளாஸ் யோசித்தாள். "நம்புகிறதென்றால், நம்புங்கள். இல்லாவிட்டால் உங்கள் இஷ்டம். நல்ல ஒரு ஜதை 'ஸ்லிப்பர்கள்' குளிருக்கு ஏற்றாற்போல் வாங்குவேன்" என்றாள்.

     "அடேயப்பா!" என்றேன்.

     அப்பொழுது நல்ல வெயில் காலம். எங்கேயாவது குளிர்ந்த ஜலமும், ஒரு சிகரெட்டும் கிடைத்தால் போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் நான்; அவளுக்கு அப்பொழுது குளிருக்கேற்ற ஒரு ஜதை 'ஸ்லிப்பர்கள்' வேண்டும்! அவளது தர்க்கம் எனக்குப் புரியவில்லை. ஆனால் இதிலிருந்துதான் வருகிற கிரிஸ்மஸுக்கு என்ன வாங்குவது என்பதைப் பற்றி அப்பொழுதே 'பிளான்' போட ஆரம்பித்து விட்டோம்.

     அவள் சொன்னாள்: "டாமி! கிரிஸ்மஸ் அவசரத்தில் கண்டபடி வேண்டாத சாமான்களை வாங்கி ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்ளாமல் இருக்க, அதற்கு இப்பொழுதே லிஸ்ட் தயார் செய்ய வேண்டும்" என்றாள்.

     அதிலிருந்து எங்களுக்குப் பிரியமானதையெல்லாம் லிஸ்ட் எடுக்க ஆரம்பித்தோம். நான் எனது கணக்குப் புஸ்தகத்திலிருந்து ஒரு கடுதாசியைக் கிழித்து, "இட்ஸன் பிளாஸுக்கு ஒரு ஜதை கம்பிளி ஸ்லிப்பர்" என்று எழுதினேன். பிறகு, பட்சபாதம் காண்பிக்கக் கூடாதல்லவா? அதற்காக அதன் கீழ் "டாமிக்கு ஒரு நல்ல புஸ்தகம்" என்று எழுதினேன்.

     "அப்படித்தான்!" என்றாள் இட்ஸன் பிளாஸ், உற்சாகத்துடன். போகிற வழியில் ஸ்லிப்பரும், புஸ்தகங்களும் மரத்தில் காய்த்துத் தொங்குகின்றன, பறிக்கவேண்டியதுதான் பாக்கி என்பதுபோல் இருந்தது.

     வெயில் காலமும் சென்று கிரிஸ்மஸ் பண்டிகை வரும் பனிக்காலமும் ஆரம்பித்து விட்டது. எங்கள் லிஸ்ட்டும் ஏராளமாக வளர்ந்து வருகிறது. "ரொம்ப ஜாஸ்தியிருந்தால் என்ன? எவ்வளவுக்கு ஜாஸ்தியிருக்கிறதோ அவ்வளவுக்குப் பொறுக்க முடியும். அதில் வாங்க முடியாத பொருள்களை அடித்து விடுகிறது. ஆசைப்படுவதற்குக் கூலி உண்டா? என் இஷ்டம்போல் நான் பிரியப்படலாமல்லவா?"

     "உம்!" என்று சிறிது துணிகரமாகவே தலையை ஆட்டினேன்.

     "அப்படித்தான்! எனக்கு ஒரு பட்டு கவுன் (நல்ல ரகம்)" என்று சிரித்துக் கொண்டு நின்றாள்.

     "அதெல்லாம் சரிதான்... உனக்குத்தான்..." என்று வழவழாவென்று ஆரம்பித்தேன்.

     "நீங்கள்தான் இஷ்டம்போல் பிரியப்படலாம் என்றீர்களே!" என்றாள்.

     "அதெல்லாம் கிடக்கட்டும். எனக்கு ஒரு ரேடியோ ஸெட் வேண்டும்" என்று நான் எழுதிவிட்டு, அவள் முகத்தைப் பார்த்தேன்.

     பிறகு எங்கள் இருவருக்குள்ளும், இரண்டிலும் எது மிகவும் அவசியமானது என்பது பற்றி சாஹஸத்துடன் தர்க்கம் நடந்தது. ஆனால், இன்னும் ஐந்து வருஷம் வரையாவது இதெல்லாம் நடக்காத பேச்சு என்று எனக்குத் தெரியும்.

     ஆனால் மேற்சொன்ன பனிக்காலச் சம்பவம் ரொம்பப் பின்னால் நடந்தது. நாங்கள் பார்க்கை விட்டு வரும்பொழுது வேனிற்காலம். எங்கள் இரண்டு ஆசைகளையும் ஒரு துண்டுக் கடுதாசியில் எழுதியாகிவிட்டது. இட்ஸன் பிளாஸுக்கு மூக்கு கொஞ்சம் பெரிது. சந்தோஷமோ, கோபமோ ஏற்பட்டுவிட்டால் மூக்கு சிவந்து விடும். அதனால் தான் அடிக்கடி மூக்கைச் சொறிவாள். அவள் மூக்கைப் போல கண்களும் மிகக் கூர்மையானவை. எப்பொழுது பார்த்தாலும் துருதுருவென்று இருக்கும். "இதோ பாருங்கள், ஒரு கிரிஸ்மஸ் குரோஷன்" என்று கால் நுனியால் சுட்டிக் காட்டினாள். (குரோஷன் ஒரு ஜெர்மன் நாணயம்.)

     "கிரிஸ்மஸ் குரோஷன்?" என்று குனிந்து எடுத்துவிட்டு, "இதோ போய் சிகரெட் வாங்கி வருகிறேன்!" என்றேன்.

     "என்னிடம் கொடுங்கள். இது கிரிஸ்மஸ் குரோஷன்! கிரிஸ்மஸ் உண்டியல் பெட்டிக்கு!" என்றாள்.

     "ஸ்ரீமதியவர்களே, தங்களிடம் கிரிஸ்மஸ் உண்டியல் பெட்டி எங்கு இருக்கிறது?" என்றேன்.

     "பெட்டிக்கென்ன? ஒன்று கிடைக்காமலா போகிறது?" என்று வானத்தைப் பார்த்தாள். நட்சத்திரங்களிலிருந்து உண்டியல் பெட்டி விழாது என்பது நிச்சயம்.

     "இப்படிச் செய்வோம். கிரிஸ்மஸ் பிரஸென்டிற்கு எவ்வளவு செலவழிக்க முடியும் என்று கணக்குப் போடுவோம். 50 மார்க்குகள் ஏறக்குறைய" என்றேன். (ஜெர்மன் பிரதம நாணயம் மார்க்குகள் நமக்கு ரூபாய் போல.)

     "ஐயோ பாவம்" என்றாள்.

     "கிரிஸ்மஸ் வருமுன் இன்னும் 6 முறை சம்பளம் வாங்கலாம். ஒவ்வொரு தடவையும் எட்டரை மார்க்குகள் மிச்சம் பிடித்தால் போதும். சரி, இப்பொழுது அந்தக் குரோஷனைக் கொடு, போய் சிகரெட் வாங்கி வருகிறேன்" என்று, கிரிஸ்மஸ் உத்தேச விகித பட்ஜட் சமர்பித்துவிட்டு, உபமானியங்கள் கேட்டுக் கொண்டு நின்றேன்.

     "அதெல்லாம் முடியாது, குரோஷன் கிரிஸ்மஸ் நிதியைச் சேர்ந்தது. மேலும் உங்களுக்கு, இவ்வளவு பெரிய உங்களுக்கு, என்ன அசட்டுத்தனமாய்ப் புத்தி போகிறது; அதற்கெல்லாம் வேறு செலவு இருக்கிறது" என்று ஸ்ரீமதி இட்ஸன் பிளாஸ் டிமாண்டு மசோதாவை ஏகமனதாக நிராகரித்து விட்டார்.

     "அப்படியா? அதென்ன?" கேலியாகக் கேட்டேன்.

     அதற்குள் இட்ஸன் பிளாஸுக்கு ஊடல் ஏற்பட்டு விட்டது. ரொம்பக் கோபம் போல் முறுக்காக முன்னால் எட்டி நடந்தாள். நான் பின் தொடர்ந்தேன். கொஞ்ச நேரம் கழிந்ததும் தெருக்களுக்குள் பிரவேசித்தோம். அவள் தெருவின் ஒரு கோடியில் நடந்தாள். கொஞ்ச தூரம் சென்றதும், "ஏ! அம்மாளு!" என்று கூப்பிட்டேன். தெருவில் போகிறவர்கள் எங்களைத் திரும்பிப் பார்த்தார்கள். தலையைத் திருப்பிக் கொண்டு நடந்தாள்.

     போகும்பொழுதே அவளுக்குப் புது நினைப்பு ஏற்பட்டு விட்டது. வீட்டிலே கிடக்கும் கட்டிப் பால் டின்களை உண்டியலாக உபயோகித்தால்! அதை அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

     "ரொம்பக் கெட்டிக்காரத்தனம். டின்னுக்குள் மிஞ்சி நாறும் பால் அழுக்குக்குள் ஆறு மாதம் பணத்தைப் போட்டு வைத்தால் மிகவும் நன்றாகத்தான் மணக்கும்" என்றேன்.

     உடனே அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. 'மறுபடியும் வேதாளம் முருங்க மரத்தில் ஏறிக்கொண்டது' என்ற மாதிரி, தெருவின் மற்ற கோடிக்குச் சென்று விட்டாள்.

     என் பங்கிற்கும் ஒரு புது நினைவு வந்தது. ஆபீசில் கிரிஸ்மஸ் போனஸ் கொடுப்பார்களே, அது அத்தனை நேரம் ஞாபகத்துக்கு வராமலே போய்விட்டது.

     ஐம்பது மார்க் கிரிஸ்மஸ் போனஸ். ஓடியே போய் அவளிடம் சொன்னேன். முதலில் என் தலையைத் தின்று விடுவதுபோலப் பார்த்தாள். என்னைப் போன்ற முட்டாளுக்கு போனஸ் யார் கொடுக்கப் போகிறார்கள் என்று நினைப்பது போல் இருந்தது. இரண்டு பேரும் விஷயத்தைப் புனராலோசனை செய்தோம். கடைசியில் அவள் அபிப்ராயம் இதுதான்; "போனஸ் கிடைக்காதென்றே பாவனை பண்ணுவோம் - ஆனால் போனஸ் இருந்தால்! - " என்றாள். பின்பு சமாதானம் அன்று, சமரஸம்.

     நான் ஏன் சர்க்கார் மாதிரி இப்படிச் சிக்கனக் கத்தியை அடிக்கடி உபயோகிக்க வேண்டியிருக்கிறதென்ற காரணத்தைக் கூறவில்லையே. கிரிஸ்மஸ் செலவு ஒரு புறம் இருக்கட்டும். எங்கள் பொக்கிஷச் செலவாணியில் திடீரென்று பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கும் பாங்க் விடுமுறை அமுலுக்குக் கொண்டு வர வேண்டியிருப்பதற்கும் காரணம், நான் ஒரு பத்திரிகை ஆபீஸில் வேலை பார்த்து வந்ததுதான். எங்கள் பத்திரிகை ரொம்பச் சின்ன விஷயம். நான் அதிலே விடியற்காலம் ஏழு மணிக்கே போய் விட்டால் அதிலிருந்து 'லோக்கல்' செய்திகள் பிரசுரிக்கப்படும் பக்கம் என் பொறுப்பில் விடப்படும். நான் உபபத்திராதிபர், சமயா சமயங்களில் கம்பாசிட்டர் இத்தியாதி உத்தியோகங்களை ஏற்று, எனது பக்கத்தை நிரப்பி விடுவேன். இந்த மகத்தான சேவைக்காக எனக்கு அந்தக் காரியாலயத்தில் 80 மார்க்குகள் சம்பளம் கொடுக்கப்படுகிறது. எனது ஆசிரியர், மற்ற பக்கங்களை ரேடியோ புரோகிராம், ஆசிரியருக்குக் கடிதம், இத்தியாதி விஷயங்களால், ஒரு நொண்டி டைப்ரைட்டர் யந்திரத்தை வைத்துக் கொண்டு நிரப்பிவிடுவார்.

     நான் என் காலை வேலைகளை நிறைவேற்றியபின், பிழைத்திருந்தால், கமிஷன் ஏற்பாட்டில் விளம்பரமும் வாசகர்களும் சேகரிப்பேன். இதுதான் என் வருமானம். இதற்கும் மேலாக, இந்த ஊர் தேகாரோக்கியச் சங்கத்தின் வியாதி நிதியின் பொக்கிஷதார். அங்கத்தினர் சந்தா, நிதிக்கு அளிக்கப்படும் உதவி மானியம் இவற்றில் 3% எனது சிரமத்திற்குச் சம்பாவனை. எங்களூர் நகர அமைப்பு போர்டு, யாத்திரிகர் போர்டு - இவற்றிற்கு கௌரவ காரியதரிசியும் நான் தான். இதிலே எனக்குச் செலவும் பெருமையும்தான் மிச்சம்; அத்துடன் ஏதாவது 'பெரிதாக' வந்தால், என்னைக் கவனிப்பதாக போர்டின் ஒரு வாக்குத்தத்தமும் வெகு காலமாக இருந்து வருகிறது.

     ஆகையால், எனக்கு வேலையில்லாக் கஷ்டம் ஒன்றும் இல்லை. இவ்வளவு வேலையாலும், நானும் என் மனைவியும், உயிரை உடலுடன் ஒட்டவைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோ ம். 'வாங்குவது' என்ற வார்த்தை எங்கள் அகராதியில் கிடையாது. அதனால் பெரும்பாலும் எங்கள் தினசரி வாழ்க்கையில் உடல் களைப்பும் ஏமாற்றமும் மிச்சம்.

     என்னதான் நாங்கள் சிரித்து உற்சாகப்பட்டுக் கொண்டிருந்தாலும், எங்கள் கிரிஸ்மஸ் உண்டியல் பெட்டி இன்னும் கற்பனை உலகத்திலிருந்து கீழே இறங்கவில்லை.

     அன்று ஒருநாள் வீட்டுக்குள் நுழைந்த பொழுது இட்ஸன் பிளாஸ் ஒரு நிலக்கரித் துண்டும் கத்தியுமாக நின்று கொண்டிருந்தாள்.

     "என்ன வேலை நடக்கிறது?" என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டு வினவினேன்.

     "உஸ்! சத்தம் போடாதீர்கள். லோகம் பூராவும் எத்தனை துஷ்டர்கள் இருக்கிறார்கள் என்று தெரியாது போல் இருக்கிறது!" என்று கதவைச் சுட்டிக் காண்பித்தாள்.

     நாங்கள் ஒட்டுக் குடித்தனம் தான் இருக்க முடியும்; அப்படித்தான் இருக்கிறோம். அவள் காட்டிய இடம் எங்கள் பக்கத்து ஆசாமி ஜாலி ரோஜர் வசிக்கும் அறை.

     "என்ன விசேஷம்?" என்றேன் நான் மீண்டும்.

     எனக்கு, சதியாலோசனை பந்தாவில், காதோடு காதாக இரகசியம் அறிவிக்கப்பட்டது. உலகத்திலே திருடர்களும் துஷ்டர்களும் ஜாஸ்தியாம். எங்கள் பொக்கிஷத்தைச் சூறையாடிக்கொண்டு போய்விடுவார்களாம். அதற்காக ஒரு நிலக்கரித் துண்டை இரண்டாக அறுக்கிறது; இரண்டு பாகங்களையும் குடைகிறது. மறுபடியும் செக்டோ டைன் வைத்து ஒட்டிவிடுகிறது. உடனே எங்கள் இரகசிய கிரிஸ்மஸ் உண்டியல் செய்தாகிவிட்டதாம். பிறகு அதன்மேல் ஒரு பக்கத்தில் ஒரு துவாரம் போட்டு, அதன் வழியாகப் போட்டுக் கொண்டே வருவது. (என்னத்தைப் போடுவது என்று அவள் சொல்லவில்லை.)

     "பின்பு கிரிஸ்மஸ் சமயத்தில் அதை உடைத்து... பிறகு என்னவென்பது உங்களுக்குத்தான் தெரியுமே!" என்றாள்!

     "உனக்கென்ன பைத்தியமா? இந்த வருஷம் போனஸ் கீனஸ் கிடையாது என்று ஹீபர் சொல்லுகிறான். முதலாளி வருமானம் இல்லை என்று நர மாமிச பட்சணி மாதிரி இருக்கிறாராம்!" என்றேன்.

     "அப்படியா சேதி! கிரிஸ்மஸ் அன்றைக்கு யார் மண்டையில் நிலக்கரித் துண்டு விழுந்து உடையப் போகின்றதோ!" என்று மோட்டுக் கூரையைப் பார்த்துக்கொண்டு சொன்னாள்.

     நான் தான் உங்களுக்கு முந்தியே சொல்லவில்லையே, ஹெர்பிரஸ்போல்டு எங்கள் பத்திரிகை ஆசிரியர். ஆசாமி வற்றல் பேர் வழி. ஆனால், பேச்சு மட்டும் ஏழு காலம் தலைப்பு மாதிரி இருக்கும். அவருடைய ஆணித்தரமான பேச்சுக்கள், அபிப்பிராயங்கள் எல்லாம் காரியாலய நிர்வாகத்தில் மட்டிலும் செல்லாது. அதற்கெல்லாம் ஹெர் ஹீபர்தான் தகுந்த ஆசாமி. ஆசாமியைப் பார்த்தாலே போதும் - நடமாடும் பெருக்கல் வாய்ப்பாடுதான். பொக்கிஷம் கணக்கு எல்லாம் அவர் கையில்தான். கம்பெனியின் வலது கை அவர்.

     இவரிடம் கிரிஸ்மஸ் போனஸைப் பற்றிக் கொஞ்சம் ஆராய்ச்சி நடத்தினேன், ஏதாவது பலனுண்டாவென்று. "உனக்கென்ன பைத்தியமா! நஷ்டமாகி வரும் கம்பெனியில் வேலை பார்ப்பது என்றால் என்ன என்று உனக்குத் தெரியாதா? புது வருஷச் சீட்டை ஆரம்பிக்குமுன் கம்பெனி குளோஸ் ஆகாவிட்டால் உன் அதிர்ஷ்டம்!" என்றார்.

     ஹெர் பிரஸ்போல்டு என் அபிப்பிராயத்தை ஆதரிக்காமல், காரியாலயத்தில் கிரிஸ்மஸ் போனஸ் கேட்பதைப் பற்றி ஒரு 'தலையங்கம்' என்னிடம் உபதேசம் செய்ய ஆரம்பித்து விட்டார். இந்த உபதேசங்கள் எங்கள் கிரிஸ்மஸ் லிஸ்ட் கடுதாசிகளை அந்தரத்தில் பறக்கவிட்டன. கம்பளி ஸ்லிப்பர், புஸ்தகம், ரேடியோ ஸெட், கிரிஸ்மஸ் வாத்து - எல்லாம் என்னைவிட்டு அகன்று செல்வதை எனது மனக்கண் முன் கண்டேன்.

     கிரிஸ்மஸ் வாத்து! இந்தச் சந்தர்ப்பத்தில் தான் நான் உங்களுக்கு ஒரு புது நண்பரை அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அவர் தான் சாக்ஷாத் ஜாலி ரோஜர்ஸ் - அவர் உண்மைப் பெயர் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் வைத்த காரணப் பெயர் அது. அவரைத் தெரிந்து கொள்ளுமுன் பூகோள சாஸ்திரீக ரீதிப்படி எங்கள் வீட்டின் அமைப்பைக் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டும். நாங்கள் இருந்த இடம் மச்சு. அதிலே வடதுருவத்திலே ஜாலி ரோஜர்ஸ்; மரத்தட்டிக்கு இப்புறத்தில் நாங்கள். தாடியும், காற்று வாக்கில் பறக்கும் மீசையுமுள்ள உயர்திரு காட்டுமிராண்டியார்தான் என்று அவரைச் சொல்ல வேண்டும். ஸ்ரீமான் ஜாலி ரோஜர்ஸ் தொழில் குடிப்பது, சண்டை போடுவது. அவகாசம் கிடைத்த பொழுது அவர் முனிஸிபல் மின்சார சாலையில் வேலை செய்துவைத்தார். அது உபதொழில் அன்று, பொழுது போக்கு. இவரைவிட நெருங்கிய நண்பர் எங்களுக்குக் கிடையாது. அவர் படுக்கையில் திரும்பிப் படுத்தார் என்றால் எங்களுக்குக் கேட்கும்.

     நாங்கள் கிரிஸ்மஸ் பண்டிகைக்கு வாத்து வாங்குவது பற்றித் தர்க்கித்துக் கொண்டிருப்பதை அவர் கேட்டு விட்டார்.

     அவள் (என் மனைவி) வீட்டிலும் எங்கள் வீட்டைப் போல்தானாம். 12 பவுண்டு கூஸ் வாத்து வாங்குவார்கள். விவாதத்தின் போக்கில் 12 பவுண்டு கூஸ் வாத்து (எடை குறைந்தால் எலும்பும் தோலுமாகத்தான் இருக்கும்) எங்கள் இருவர் சாப்பாட்டிற்கும் கொஞ்சம் ஜாஸ்தியென்று எங்களுக்குப் பட்டது. அதனால் நாங்கள் சின்ன வாத்து வாங்குவது என்று முடிவு கட்டினோம். கூஸ் வாத்து டெமி அளவு என்றால் சின்ன வாத்து கிரௌன் சைஸ். அது இருவருக்கும் போதும் என்பது நிச்சயம்; ஆனால் அதை எங்கு வாங்குவது... என்ன விலைக்கு...?

     இந்தச் சந்தர்ப்பத்தில் பூகம்ப அதிர்ச்சியும், எரிமலை நெருப்பைக் கக்கும் உறுமலும் கேட்டது. சுவரில் இருந்த காரைகள் கூடப் பொத்துப் பொத்தென்று விழுந்தன. ஒரு கையில் கால் சட்டையைப் பொத்தான் மாட்டாதபடி பிடித்துக்கொண்டு, ஸ்ரீ ஜாலி ரோஜர்ஸ் பிரசன்னமானார்.

     "நான் வேணுமானால் கிரிஸ்மஸ் பட்சி வாங்கி வருகிறேன்" என்று எங்களைப் பார்த்து திருதிருவென்று விழித்தார்.

     நாங்கள் திடுக்கிட்டு நின்றோம். இட்ஸன் பிளாஸ் மூக்கைத் தடவிக்கொண்டு உபசார வார்த்தைகளை முணுமுணுத்தாள். நான் நாஸுக்காக கூஸ் வாத்து வாங்குவதா அல்லது வான்கோழி வாங்குவதா என்று முடிவு கட்டப்படவில்லை என்பதை விளக்கினேன்.

     அவ்வளவுதான், "அசடுகள்!" என்றார். வீடு அதிரக் கதவைச் சாத்திக்கொண்டு போய்விட்டார். ஆனால் மனுஷர் நல்லவர். மனத்தில் கல்மிஷமில்லை. அன்றொருநாள் நான் ஆபீசிற்குப் போயிருந்தபொழுது என் மனைவி, கிரிஸ்மஸ் சொக்கப்பனைக்காக ஜாதிக்காய்ப் பலகையில் ஆணிகளை அடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, அதை அவளிடம் வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, "நான் பேஷான மரம் ஒன்று செய்து தருகிறேன்" என்று சொல்லிவிட்டு ச் சென்றாராம்.

     போனஸ் விஷயத்தைப் பற்றி ஆபீசில் எனது முற்றுகை பலனளிக்காததினால், எங்கள் பொக்கிஷ நிலைமையைப் பற்றிச் சிறிது ஆராய்ச்சி நடத்தினோம். இது இட்ஸன் பிளாஸிற்கு லேசான காரியம் அன்று. அவளிடம் ஒவ்வொரு செலவிற்கும் தனிப்பட்ட பொக்கிஷம் உண்டு. வீட்டுச் செலவு நிதி, விறகு நிதி, புதுச்சாமான் நிதி, வாடகை நிதி, கிரிஸ்மஸ் நிதி - இவ்வளவும் சேர்ந்து பொருளாதார நெருக்கடியால் குழம்பி, பட்ஜெட் திட்டத்தில் வரவிற்கு மிஞ்சிய செலவைத்தான் காண்பிக்கும்.

     கிரிஸ்மஸ் உறை பனியும் வந்தது. இருந்ததை வைத்துக்கொண்டு சாமான்கள் வாங்கினோம். வீட்டிலே வந்து வெகுநேரம் கழிந்த பிறகுதான் இட்ஸன் பிளாஸ் வாங்கின காலர், எங்களுடைய 'ரோரிங் ரூப்பர்ட்' என்ற ஊளையிடும் அடுப்புச்சாமி பிள்ளைக்கு அர்ப்பணமாகிவிட்டது என்று தெரிந்தது. வீட்டிலே பணம் கொழிக்கிறது, மூன்று மார்க் காலர்தான் அடுப்பெரிக்க.

     மறுநாள் ஆபீசிற்கு விடியற்காலம் புறப்பட்டேன். அன்றைக்குத் தேதி 14. என்னுடைய அதிர்ஷ்ட எண் 14 என்றால் இரட்டிப்பு அதிர்ஷ்டமல்லவா!

     எங்கள் ஆபீசில் நெடுங்காலமாகப் பெருக்குகிறவன் பிரௌ லெனஸ் (பிரௌ என்றால் ஸ்ரீமதி) தொண்டு கிழவி. குழந்தை குட்டிகள் கைநிறைய. நான் போகும்பொழுது அவள் பெருக்கிக்கொண்டு இருந்தாள்.

     என்னைக் கண்டாலே தன் கதையைச் சொல்லாமல் இருக்க மாட்டாள். பேச்சுவாக்கில், "இந்த வருஷம் போனஸ் கிடையாது" என்றேன். அவ்வளவுதான்.

     "நான் ஹீபரிடம் பேசுகிறேன்" என்று சொல்லிவிட்டு, படபடவென்று போனாள்.

     ஹீபரிடம் போய் நன்றாகப் பேசினாள். ஹெர் பிரஸ் போல்டு தலையங்கம் எல்லாம் அவளிடம் பிச்சை வாங்க வேண்டும். இந்தச் சப்தத்தைக் கேட்டு உள் நுழைந்த பிரஸ் போல்டும், அவளுக்கு அனுசரணையாகப் பேசினார்.

     "இந்தக் குறும்புக்கெல்லாம் யார் காரணம் என்று தெரியும். அந்த ஆசாமி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று உறுமினார் ஹெர் ஹீபர். எனது இரண்டாவது படையெடுப்பும் பலனளிக்கவில்லை.

     கிரிஸ்மஸ் சம்பவத்திற்குக் குழந்தைகள் இல்லாவிட்டால் முடியுமா? அதற்காக நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றிப் பேசி ஆறுதலடைந்தோம். ஆனால் குழந்தையும் எங்களுக்கு வந்தது.

     அன்று டிசம்பர் 18. நல்ல குளிர். பகலில் நல்ல வெளிச்சமும் இல்லை. கதவுக்கு வெளியே ஒரு சிறு குழந்தையின் அழுகை மாதிரி சப்தம் கேட்டது. மனைவி கதவைத் திறந்து பார்த்தாள். வெளியே, குளிரால் விறைத்து, மெலிந்த, அழுக்குப் பிடித்த வெள்ளைப் பூனைக்குட்டி ஒண்டிக்கொண்டு நின்றது. அதற்கு ரம்பிள்ஸ்டில்ஸிகின் என்று ஒரு நீண்ட பெயர் வைத்தாள்.

     இருபத்தி மூன்றாம் தேதியும் வந்தது; அன்று நாங்கள் இருவரும் முதல் முதலாகச் சண்டை போட்டுக் கொண்டோம்.

     கிரிஸ்மஸிற்கு முதல் நாளும் பிறந்தது. 10 மணிக்கு ஹீபர் முதலாளியைப் பார்க்கச் சென்றார். அவருக்காகக் காத்திருக்கும் பொழுது ஸினிமா டிலக்ஸ் தியேட்டர் விளம்பரத்தை வேண்டுமென்றே மோசமாக எழுதி வைத்தேன். சுண்டின கருவாடு மாதிரி மூஞ்சியை வைத்துக்கொண்டு ஹீபர் திரும்ப வந்தார்.

     என்னைப் பார்த்து, "ம்யூலர், மறுபடியும் லட்விக் கம்பெனியைப் போய்ப் பார். அவர் என்னமோ கால் பக்கம் என்றாராம்; நீ அரைப் பக்கம் என்று எழுதிக் கொண்டு வந்துவிட்டாயாம்; உன் வேலையே இப்படித்தான்" என்றார்.

     நான் இட்ஸன் பிளாஸை நினைத்துக் கொண்டே தெரு வழியாய் நடந்தேன். கடைசியில் நான் சொன்னதுதான் உண்மை. லட்விக் கம்பெனிக்காரர் சரியாக ஞாபகப்படுத்திக் கொண்டு ஒப்புக்கொண்டார்; திரும்பி வந்தேன்.

     "வந்து விட்டாயா! அவர்களும் கம்பெனி என்று வைத்து நடத்துகிறார்களே! இந்தா, இதில் கையெழுத்துப் போடு. கடைசியாக அவரிடம் பேசிச் சரிக்கட்டி விட்டேன்" என்றார் ஹீபர்.

     போனஸ்!

     50 மார்க் நோட்டை அப்படியே பிடுங்கிக் கொண்டு வீட்டுக்கு ஓடினேன்.

     "சீக்கிரம் லிஸ்ட் போட்டுக்கொண்டு ஆபீசிற்கு வா; அங்கிருந்து போவோம்" என்று சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த இட்ஸன் பிளாஸிடம் கூறிவிட்டு ஓடிவந்தேன்.

     ஆபீசிற்கு வந்ததுதான் தாமதம். சுடுமூஞ்சி ஹீபரும், "ம்யூலர்! ஞாயிற்றுக் கிழமைகளில் பொழுது போக்கிற்குக் கூட உன்னைப்போல் பைத்தியக்காரனாக ஆடமாட்டேன்" என்று மொணமொணத்தார்.

     இரண்டு மணிக்கு ஹீபர் ஆபீஸை விட்டுச் சென்றார். இட்ஸன் பிளாஸும் வந்தாள். பிரௌ லென்ஸை ஆபீசில் (நிர்வகிக்க!) காவல் வைத்துவிட்டுப் போனேன். விவரமாகச் செலவு வகைகளைச் சொல்ல நேரமில்லை. மறுபடியும் திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட்படி 48.50 மார்க்குகள் செலவாயிற்று. ஜாலி ரோஜர்ஸ் வாக்குக் கொடுத்த கிரிஸ்மஸ் மரம் இன்னும் வருகிறது.

     கடைசியாக நாங்கள் ரொம்பக் கோலாகலமாகக் கிரிஸ்மஸ் பண்டிகை கொண்டாடினோம். "அடுத்த வருஷம் இந்தப் பூனைக்குட்டி வேண்டியிருக்காது!" என்று மெதுவாகச் சொன்னாள் இட்ஸன் பிளாஸ்.