காதல் கதை

வில்லியம் ஸரோயன்

     "இந்தப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுகிறீரா அல்லது அந்தப் பக்கமாக உட்காருகிறீரா?" என்று சிகப்புக் குல்லா* கேட்டான்.

     (* நம்மூர்களில் சிகப்புத் தலைப்பாய் என்றால் போலீஸ்காரன் என்பது வழக்கு; இங்கு ரயில்வே கண்டக்டரைக் குறிக்கிறது. அமெரிக்க ரயில்களில் கண்டக்டர் உண்டு; அவர்களில் பெரும்பான்மையாக நீக்ரோவர்கள்.)

     "ஊம் ம்...?" என்று அந்த வாலிபன் கேட்டான்.

     "இந்த பக்கமே சரிதானே?" என்று சிகப்புக் குல்லா கேட்டான்.

     "ஓ!" என்றான் வாலிபன். "சரிதான்."

     சிகப்புக் குல்லாவுக்கு ஒரு டைம் (அமெரிக்க சில்லறை) கொடுத்தான். சிகப்புக் குல்லா அந்த சின்ன மெல்லிய காசை வாங்கிக்கொண்டு வாலிபனுடைய கோட்டை மடித்து ஸீட்டில் வைத்தான்.

     "சிலருக்கு ஒரு பக்கம் பிடிக்கும், இன்னும் சிலருக்கு மறுபக்கம் பிரியம்" என்றான் அவன்...

     "என்ன?" என்றான் வாலிபன்.

     "சிலருக்கு ரயில்லே போகும்போது ஒரு பக்கத்திலிருந்து கொண்டு சிலதைத் தான் பார்க்கப் பிரியம். இன்னும் சிலருக்கு போகும்போது வரும்போது இரண்டு பக்கமும் எப்படி இருக்கு என்று பார்க்க ஆசை. ஆனால் இதற்கு எதிரிடையாகவும் மனுஷாள் இருக்கிறார்கள். ஒரு ஸ்திரீக்கு வெயில் மேலே படுவதிலே பிரியம். உடம்புக்கு நல்லது என்று படுத்திருப்பாள். வரும்போது அந்தப் பக்கத்தில் வெயிலிலே உட்காரணுமாம். இந்த மாதிரி இதை எல்லாம் வாலிபனுக்கு விவரமாச் சொல்லணுமா? எல்லாத்தையும் சொல்றதுன்னா ரொம்ப நேரமாகுமே. மேலும் இன்னிக்கி காலெ மொதல்லே இருந்தே உடம்புக்கு ஒரு மாதிரியாக இருக்கு. எல்லாவிடத்திலும் முகத்தை சிரிச்சாப்பிலே வைத்திருக்க முடியலியே, அப்படியிருந்தால்தானே நல்லது" என சிகப்புக் குல்லா நினைத்தான்.

     "நான் அப்படி இருக்கணும்னு தானே எல்லோரும் எதிர் பார்க்கிறார்கள்" என்றும் நினைத்தான்.

     இந்த வாலிபன் குமாஸ்தாவாக இருக்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமை லீவு - அதுதான் ஒரு பெரிய நகரத்திலிருந்து இன்னொரு சின்ன ஊருக்கு குசாலாகப் போயிட்டு அன்னிக்கே திரும்ப நினைச்சிருக்கான்; 'ஆனா' ஏன் இந்த வாலிபன் எதையோ பறிகொடுத்த மாதிரி, எல்லோரும் சொல்றாளே, - லோகத்துக்கே செத்துப்போன மாதிரி - ஏன் இருக்கணும்னுதான் புரியலெ. பையன் சிறிசு. காலேஜ் பட்டம் இருக்காது; ஹைஸ்கூல் வர படிச்சுப்புட்டு, ஏதாவது ஒரு ஆபீஸ்லெ வேலெ கெடச்சிருக்கும். இருபத்தி மூணு வயசுன்னு சொல்லலாம். காதலோ என்னமோ எப்படி இருந்தாலும் யார் மேலும் எந்த நிமிஷத்திலும் காதல் கொண்டு விடுவான். தூண்டுகோல் வேண்டாம் என சிகப்புக் குல்லா நினைத்தான்; சோகமோ கனவோ கண்ணில் குடியிருக்கு. வர்ணப் பட்டும் வளர்ந்த கேசமும், வயனமான மெதுவான சர்மமும் தென்பட்டால் கட்டாயம் காதல் கொள்ளுவான்.

     திடீரென்று விழித்துக்கொண்ட மாதிரி, வாலிபனுக்கு சொப்பனாவஸ்தை நீங்கினது; சிகப்புக் குல்லாவுக்கு என்னமோ ஒரு மாதிரியாகப் போச்சு.

     "ஓ! கோழிக் கனவு மாதிரி கண்டுகொண்டிருந்து விட்டேன்" என்றான் வாலிபன்.

     அவன் தனது தலையின் வலது பக்கத்தருகில் விரல்களை ஆட்டிக் காண்பித்தான். அந்தப் பக்கம்தான் கோழிக் கனவு தோணும் என்று நினைக்கிறவர்கள் செய்கிறமாதிரி.

     "உனக்கு பக்ஷிஷ் குடுத்தேனா?" என்றான்.

     சிகப்புக் குல்லாவுக்கு ஒரு மாதிரியாகப் போச்சு.

     "ஆமாம் சார்" என்றான்.

     வாலிபன் தன் முகத்துக்கு நேராக இடது விரல்களை ஆட்டினான்.

     "என்ன செய்கிறேன் என்பது எப்பவும் அடிக்கடி மறந்து போகும். ரொம்ப காலம் கழித்து, சில வருஷத்துக்கு அப்புறம் தான் ஞாபகம் வரும். நான் உனக்கு எவ்வளவு கொடுத்தேன்?"

     'பையன் என்ன விளையாடுறானோ, வேலை உடுறானா, என்னா நேத்து பொறந்தே எங்கிட்ட இந்த' - என நினைத்தான் சிகப்புக் குல்லாய். 'அவன் குடுத்தது ஒரு டைம் - ஐந்து டாலர் தங்க நாணயம் எதுவும் குடுத்தேன்னு கதைவுட்டான்னா இதுதான் குடுத்தேன்னு காமிச்சுப்புடுவேன்."

     "நீ ஒரு டைம் குடுத்தே" என்றான்.

     "வருத்தப்படறேன். இந்தா" என்றான் வாலிபன்.

     சிகப்பு குல்லாவுக்கு இன்னொரு டைம் கொடுத்தான்.

     "தாங்க்ஸ் சார்" என்றான் சிகப்புக் குல்லா.

     "நாம் வரும்போது என்னமோ சொன்னியே?" என்றான் வாலிபன்.

     "பிரமாதமா ஒண்ணுமில்லே. 'சில பேருக்கு ஒரு பக்கத்தில் உக்காரப் பிரியம். இன்னஞ் சில பேருக்கு அந்தப் பக்கத்திலே இருக்கப் பிரியம்'னேன்" என்றான் சிகப்புக் குல்லா.

     "அப்படியா, இது சரிதானே" என்றான் வாலிபன்.

     "சரிதான். வெயில் படாத இடத்திலே இருக்கணும்னு பிரியமில்லாட்டா" என்றான் சிகப்புக் குல்லா.

     "இல்லெ, எனக்கு வெயில்பட்டா பரவாயில்லே" என்றான் வாலிபன்.

     "சுகமா இருக்கு" என்றான் சிகப்புக்குல்லா.

     "அப்படித்தானா" என்று பகல் வெளிச்சத்தைப் பார்க்கிற மாதிரி வாலிபன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.

     "இங்கே எல்லாம் சூரியன் படாது. கூரை போட்டிருக்கிறார்கள். ஊருக்கு வெளியே வண்டி போறப்ப நல்லா வெயில் உழும். கலிபோர்னியாக்காராளுக்கு எல்லாம் அது பிடிக்கிறதில்லை. அந்தப் பக்கமாகப் போய் உட்கார்ந்து கொள்ளுவார்கள். நியூயார்க்கிலிருந்தா?" என்றான் சிகப்புக் குல்லா.

     அந்த வாலிபன் நியூயார்க்கிலிருந்துதான் வர்ரான் என்று சொல்லுவதற்கு ஆதாரமே இல்லை. வேறே எந்த எடத்திலிருந்து வர்ரான் என்று சொல்றதுக்குக் கூட அத்தாட்சி இல்லெ. அப்படி இருக்கலாமோன்னு சிகப்புக் குல்லா நெனச்சே, கேட்டான்.

     சிகப்புக் குல்லாவுக்கு அவசரம் ஒன்றுமில்லை. இருந்தாலும் ரயில்லெ நடமாட்டம் ஜாஸ்தியாயிட்டுது. ஜனங்கள் குப்பங்குப்பமாக வண்டிக்குள் வந்தார்கள். வேறு சிகப்புக் குல்லாக்கள் பெட்டியும் பையும் தூக்கிக் கொண்டு ஓடியாடித் திரிந்தார்கள். இருந்தாலும் அவன் 'காலைத் தேச்ச' மாதிரி நின்று பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த பெண் இவர்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தாள். வாலிபனும் தானும் அவள் மனசில் பதிகிறமாதிரி நினைத்துக்கொண்டான். அவன் என்ன நினைத்தால் என்ன, ரசமான பேச்சு, நல்லதனமாக வாழ்வு - அந்தஸ்தில் வேறு ஒரு துறையில் இருக்கும் இரண்டு மனிஷாளிடை அமெரிக்கருக்கும் மேற்கத்தியாருக்கும் உள்ள சகோதர பாவத்தோடு நடக்கிறது.

     "நானும் கலிபோர்னியாவைவிட்டு வெளியே போனதே இல்லெ"ங்கறான் சிகப்புக் குல்லா.

     "உன்னைப் பார்த்தா ரொம்ப சுத்தி இருப்பேன்னு சொல்லணும்" என்றான் வாலிபன்.

     "ஆமாம். அப்படித்தான். ரயில்லெதான வேலை அதுக்குப் பக்கத்திலையாவது. இப்படியா பதினெட்டு வயசிலெருந்து முப்பது வருஷத்தைக் கழித்துவிட்டேன். ஆனா இந்த மாகாண எல்லைக்கு அப்பாலெ காலடி வைக்கலென்றது நெசம்" என்றான் சிகப்புக் குல்லா.

     "ஆனா இந்தப் பக்கமாக வர்றவங்க ரொம்பப் பேரே பார்த்திருக்கேன்" என்றான் மீண்டும்.

     "நியூயார்க்குக்குப் போகப்படாதுன்னு இல்லெ. என்னிக்காவது போனாப் போச்சு" என்றான் வாலிபன்.

     "உன்னெப்போல வாலிபன் போகணும்னு ஆசெப்படறதிலே குத்தம் ஒண்ணுமில்லெ. இந்த வட்டாரத்திலெ நியூயார்க் ரொம்ப நல்லாத்தான் இருக்கணும்" என்றான் சிகப்புக்குல்லா.

     "லோகத்திலியே பெரிய பட்டணம்" என்றான் வாலிபன்.

     "ஆமாம்" என்றான் சிகப்புக்குல்லா. தன்னை ரொம்ப வருத்தத்தோடு இழுத்துக்கொண்டு போகிற மாதிரி அங்கிருந்து புறப்பட்டான்.

     "சுகமாய்ப் போய் வா" என்றான்.

     "நல்லது" என்றான் வாலிபன்.

     சிகப்புக் குல்லா வண்டியை விட்டுப் போய்விட்டான். வாலிபன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற பெண் தன்னைப் பார்க்கிறாள் என்பதை தலையை உள்ளே இழுக்கும்போது பார்த்துவிட்டான். அவள் அவசரமாகத் தலையை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டாள். அவளைத் தட்டுக்கெட வைக்காமல் இருக்க இவன் கழுத்து சுளுக்கிக் கொள்ளும்படி அவசரமாகத் திரும்பினான். வெளியே பார்த்துக்கொண்டு ஜன்னல் பக்கத்திலிருந்த தலையை உடனே திருப்பி பழைய இடத்துக்குக் கொண்டு வந்தான். அதே சமயத்தில், கடைசியாக எத்தனையோ இடத்துக்குப் போக ஆரம்பிச்சுட்டோம். அவளைப் போல பலரைப் பார்க்க ஆரம்பிச்சுட்டோ ம். யாராவது ஒருத்தியெ கலியாணம் பண்ணிக்கொண்டு எங்கேயாவது ஒரு இடத்திலே குடியேறி, வீடும் வாசலுமா கொஞ்ச நாளிலே குஞ்சும் குழந்தையுமா வாழ ஆரம்பிச்சுட்டோம் என நினைக்க ஆரம்பித்தான்.

     ரொம்ப ஆசையாத்தான் இருந்தது என்றாலும் அவளெ கொஞ்சநேரம் பாக்கெல. கடைசியா அவளைப் பார்த்தான். தட்டுக்கெட்டு முழித்தான். முகம் சிவந்தது. வாயை மென்று முழுங்கிக்கொண்டு சிரிக்க ரொம்ப சிரமப்பட்டு பார்த்தான். முடியல்லே. அந்தப் பெண்ணாலயும் முடியல்லெ.

     வண்டி புறப்பட்டு பத்து நிமிஷம் கழிச்சு நடந்தது. அப்பொ ரயில் ரசமான சத்தம் கொடுத்துக்கொண்டு மலைப் பாங்கு வழியாக ஓடிக்கொண்டிருந்தது. ஆச்சரியமான சக்தி, (காதல் மாதிரி) சிரித்துப் பேச, இயற்கையாய்ப் பேச வசதி. அவளை மெது மெதுவாகப் பேச்சுக் கொடுத்து கடைசியில் காதலிக்க வசதி, எல்லாவற்றையும் ரயில் அளித்தது.

     அப்புறம் ஒரு நிமிஷம் வரை இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்புறம் நாலு நிமிஷம் கழித்து அப்படியே பார்த்தார்கள். எதிர்ப் பக்கத்தில் ஜன்னல் வழியாகத் தெரிவதைப் பார்ப்பது போல பாவனை செய்து கொண்டு பார்த்தார்கள். கடைசியாக இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே இருந்தார்கள், வெளியில் பார்க்கிற மாதிரி.

     கடைசியாக வாலிபன் கேட்டான், "நியூயார்க்கிலிருந்து வருகிறாயா" என்று.

     என்ன சொல்லுகிறோம் என்று அவனுக்குத் தெரியல்லே. என்னடா அசட்டுத்தனமா இருக்கேன்னு நினைத்துக் கொண்டான். சினிமாப் படங்கள்ளெ இந்த ரயில் காட்சியில் தோன்றும் வாலிபர் மாதிரி இருக்க முடியல்லெ.

     "ஆமாம். அங்கிருந்துதான் வரேன்" என்றாள் அந்தப் பெண்.

     "என்ன?" என்று கேட்டான் வாலிபன்.

     "நியூயார்க்கிலிருந்து வருகிறாயான்னு என்னைக் கேட்கலெ?" என்றாள் பெண்.

     "ஓ ஆமாம், கேட்டேன்" என்றான் வாலிபன்.

     "ஆமாம் அங்கிருந்துதான்" என்றாள் பெண்.

     "நீ நியூயார்க்கிலிருந்து வருகிறாய் என்று எனக்குத் தெரியாது" என்றான் வாலிபன்.

     "உனக்குத் தெரியாதுன்னு எனக்குத் தெரியும்" என்றாள் அவள்.

     சினிமா படத்திலே அந்த வாலிபர்கள் சிரிக்கிற மாதிரி சிரிக்க அந்த வாலிபன் ரொம்ப கஷ்டப்பட்டான்.

     "உனக்கு எப்படி தெரியும்?" என்றான் அவன்.

     "ஓ எனக்குத் தெரியாது" என்றாள். "சேக்ரமன்டோ வுக்குப் போகிறியா?"

     "ஆமாம்" என்றான். "நீ?"

     "நானுந்தான்" என்றாள்.

     "ஊரெ விட்டுவிட்டு அவ்வளவு தூரத்திலே என்ன செய்யரே" என்றான்.

     "நியூயார்க் என் ஊரில்லெ. அங்கே நான் பிறந்தேன். வளர்ந்ததெல்லாம் ஸான்பிரான்ஸிஸ்கோவில்தான்" என்றாள்.

     "நானும் அங்கேதான் வளர்ந்தேன். அங்கெயே தான்" என்றான்.

     "நானும் அப்படித்தான். சில மாசமாத்தான் நியூயார்க்கிலிருக்கேன்" என்றாள்.

     "நான் பிறந்தது ஸான் பிரான்ஸிஸ்கோவில்" என்றான். "இங்கே நிறைய எடமிருக்கே. வெயில் சுகமாக இருக்கும்" என்றான் வாலிபன் ரொம்ப சிரமத்தின் பேரில்.

     "சரி" என்றாள்.

     நடை பாதையைத் தாண்டி அவன் உட்கார்ந்திருப்பதைத் தாண்டி உட்கார்ந்தாள்.

     "ஞாயிற்றுக்கிழமெ டிக்கட் குறைச்சல் இல்லியா, சேக்ரமென்டோ வுக்குப் போகலாம்னு நெனச்சேன்" என்றான்.

     "நான் அந்த எடத்திற்கு மூன்று தடவை போயிருக்கிறேன்" என்றாள்.

     வாலிபனுக்கு சந்தோஷமாக இருந்தது. வெயிலும் சுள் என்று சுகமாகக் காய்ந்தது. பெண்ணும் அற்புதமாக இருந்தாள். அவன் நினைப்பு தப்பாதெ போனாக்காத் திங்கட்கிழமை காலையில் வேலை சீட்டுக் கிழியாமப் போனாக்கா, - ஆரம்பிச்சா சிப்பாயாகச் சேர்ந்து காரணமே இல்லாமெ செத்து விழ வேண்டியதுதான், - என்னிக்காவது ஒருநாள் முயன்று அவளைப் பழக்கம் பிடிச்சு கலியாணம் செய்துகொண்டு குடியும் குடித்தனமுமாக...

     அவனும் வெயிலில் சாய்ந்து கொண்டான். ரயில் ரசமாக சப்தித்து ஓடியது. காதலோடு சிரித்தான். அவளும் காதலுக்குத் தயாரானாள்.