கலப்பு மணம்

கிரேஸியா டெலாடா - இத்தாலி

     அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்டிப் போர்வையிட்டு மூடிப் படுத்திருந்த பூமி, மலர்ச்சியின் அறிகுறியுடன் போர்வையை அகற்றிவிட்டது. அமைதியான அந்த இரவில் தளிர்ச் சுருணைகள் இரகசியமாக நிமிர்ந்தன. வயல் புறங்களில் பூக்கள் நட்சத்திர ரகசியத்தை ஏறிட்டு நோக்கின. வான வளையத்திலே மங்கலான வெளிச்சம்; ஆனால் காட்டுக்கப்புறம் தீ எரிவது மாதிரி, அதாவது காட்டுக்கு மணமும் வெதுவெதுப்பும் கொடுக்கிறது மாதிரி, சந்திரன் உதயமாகிக் கொண்டிருந்தது.

     மந்தை அருகில் படுத்திருந்த நாயும் தூங்கிக் கொண்டிருந்தது. குடிசையிலிருந்த மந்தைக்காரனும் தூங்கிக் கொண்டிருந்தான். ஏனென்றால், எஜமான் மாப்பிள்ளைக் கோலத்தில் பெண்டாட்டி 'சம்பாதிக்க'ப் பக்கத்தூருக்குச் சென்றிருந்தான். மேய்ப்பவனுக்குத் தன்னைவிடத் தன் நாயின் மீது அபார நம்பிக்கை. அது நல்ல குட்டி; சூட்டிகையும் வேகமும் அதிகம்; அதன் காவலில் ஒரு சின்ன ஆட்டுக்குட்டிக்குக் கூட ஆபத்து நேர்ந்ததில்லை. மேய்ப்பவனுக்குக் கடுந்தூக்கம்; கும்பகர்ண உபாசனை. நாய்க்கு அறிதுயில். 'இந்த மிருகங்களின் காவலாளி நான் மட்டுந்தான்' என்று நாய் தன் முழுப் பொறுப்பையும் உணர்ந்திருந்தது போலும். ஆனால், வசந்த இரவின் வெதுவெதுப்பு அதன் நரம்புகளையும் பாதித்தது. அதன் முதுகு அடிக்கடி குலுங்கியது; அதன் மயிர் காற்றில் அசைவது போல் தூக்கத்தில் மெதுவாக முனகிக் கொண்டது. புரியாத ஆசைகளும் உணர்ச்சிகளும் அதன் கனவுகளைத் தேக்கின - பருவத்தின் துடிதுடிப்பு. அது இன்னும் குட்டிதான். குலவிருத்தியில் ஈடுபடாத குட்டி.

     ஆனால் அந்த நரிகள் - பாறை ஓரத்தில் வளர்ந்து கிடந்த குத்துச் செடிகளில் பதுங்கிக் கிடந்த நரிகள், ஆணும் பெண்ணும், தூங்கவில்லை. அவைகளால் தூங்க முடியவில்லை. அவைகளுக்குப் பசி, நீண்ட பனிக்காலத்தின் பஞ்சம், வயிற்றை ஒட்டவைத்ததோடு புத்தியையும் கூர்மையாக்கியது.

     பருவத்தின் மாறுதலை உணர்ந்த நரிகள் சந்தர்ப்பம் வந்தது என்று நினைத்தன. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள ஆணுக்குப் புத்தியும் திறமையும் இருந்ததினால் வெளியேறி வந்தது. அது கறுப்பு நிறம், குள்ளம்; வால் நீளமாகவும் செழிப்பாகவும் இருந்தது. கண்கள் நட்சத்திரங்கள் போலச் சுடர்விட்டன. பெண் நரி பெரிது. கொஞ்சம் மங்கின சாம்பல் நிறம்; மழுமழுப்பாகவும் நீண்டும் இருந்தாலும், உடம்பைச் சுருக்கிக்கொண்டு, சின்னக் குருவிக் குஞ்சு மாதிரி, தரையோடு தரையாக ஒண்டிக் கிடக்கவும் அதற்குத் திறமையுண்டு.

     அது ஆண் நரியைப் பின் தொடர்ந்தது. 'ஏன் தொடர்கிறோம்' என்ற யோசனை கூட இல்லாமல் அது நடக்கிற மாதிரியே உடம்பை ஆட்டிக்கொண்டு நடந்தது. முன்னங்காலடித்தடத்தில் பின்னங்காலடித் தடத்தைப் பதியவைத்து நடந்தது. வால் அடிச்சுவட்டை அழிக்காவிட்டால், ஏதோ இரண்டு கால் பட்சி நடந்தது மாதிரித் தோன்றும். சரிவில் இருந்த ஓடைப்பக்கமாக இரண்டும் வந்து சேர்ந்தன. இராத்திரி குரல் ஏதும் கேட்கிறதா என்று இரண்டும் கவனித்தன. சமீபத்தில் பெய்த மழையால் ஓடையில் வெள்ளம், கரையோரத்துச் செடிகளின் முறுமுறுப்புக்களைக் கவனியாது, பாய்ந்து சலசலத்தது.

     ஆண் நரி தண்ணீர் குடித்தது; தாகத்தால் அல்ல, மூக்கின் நுனியைக் குளிர வைத்துக்கொள்ள. பிறகு பின்புறமாகத் திரும்பி வாலைத் தண்ணீரில் தோய்த்து அலசியது, பெண்கள் தலையைக் கழுவுவது மாதிரி. பெண் நரியும் அதன் போக்கைத் தெரிந்து கொண்டு, அதைத் தொடர்ந்து மேட்டில் ஏறி, புல்வெளி வழியாக அதைப் பின்பற்றியது; ஆனால் அது தன் வாலால் தரையில் சுவடுகளை அழித்துக்கொண்டே சென்றது. எல்லாம் அவை விரும்பியபடியே இருந்தன. ஆண் நரி ஆட்டுக்கிடையிருந்த புல்வெளி ஓரத்தில் நின்றது. பெண் நரியும் நின்றது. இரண்டும் மோப்பம் பிடித்துக்கொண்டு நின்றன. துளிகூடச் சத்தம் இல்லை. பூமியில் பச்சிலை வாசனை; வைக்கோல், புல், காட்டுப் புஷ்பங்கள் இவற்றின் கதம்ப வாசனை. பெண் நரியும் இதை முகர்ந்தது.

     அதுதான் சொந்தமாக வேறு ஒரு பிளான் நினைத்திருந்தது. ஆண் நரியைக் குத்துச் செடியருகில் நிற்க வைத்து விட்டு, கன வேகமாகத் துள்ளி ஓடியது. வாலிபத் துடிப்பின் வெறி போதையாக மலர்ந்து, வேகத்தில், பலத்தில் இயங்கியது. அவளது ஒரே ஆசை துள்ளிக்குதித்து விளையாடுவதே. அவள் பசியை மறந்தாள். ஒரே குதூகலம். திருட்டை நினைக்காததினால், பசியற்ற, திருட்டு நினைப்பற்ற சகபாடியை எதிர்பார்த்தாள். பழைய குடும்ப சிநேகிதம் மாதிரி ஆட்டுமந்தையை அணுகினாள்.

     நாய் அவளையும் அவள் நோக்கத்தையும் அறிந்துகொண்டது; அதனால் தான் குரைக்கவில்லை. சடக்கென்று எழுந்து நின்றது. அவளைச் சந்திக்க ஓடியது. கழுத்தைப் பிடித்தது; வலிக்காமல் பிடித்தது. அவள் சடக்கென்று திரும்பிக் காதைக் கடித்தாள். அவள் கடிதத்தைவிட சற்று அதிகமாகப் பல் படும்படியாக (தேள் கொட்டியது மாதிரி) நாய் நடுங்கியது. அதன் முதுகு நரம்புகளில் இன்பம் நடுங்கிக் கொண்டு மிதந்து உடலில் பரவியது. நாய்க்கும் விளையாட வேண்டும் என்று வெறி கிளம்பி விட்டது. மனிதன் பூட்டிய அடிமை விலங்கையும், மிருங்கங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் உதறித் தள்ளிவிட்டு, தன் வாழ்க்கைச் சூனியத்திலிருந்து தப்பி ஓடத் தவித்தது. அவன் பெண் நரி மீதிருந்த பிடியை விட்டான். மறுபடியும் எட்டிப் பிடிப்பதில் உள்ள இன்பத்தை அநுபவிக்கத்தான். பெண் நரியைக் கீழே தள்ளி இரத்தம் வரும்படி உற்சாகத்தில் கடித்தான். திடீரென்று அவன் பிடியிலிருந்து தப்பி ஓட ஆரம்பித்தாள். இருட்டில் ஓடி மறைந்து கொண்டாள். நாயும், அவளைப் பார்த்து, தொடர்ந்து, வேகமாகப் புல் தரைமீது ஓடினான். சந்திரன் வயலில் வெள்ளிக்கோடு போட்ட இடத்தில் பெண் நரி நின்றாள். அதன் அருகில் நீலப்பாதாளம்; அங்கு எப்பொழுதோ ஒரு காலத்தில் ஒரு நதி ஓடியிருக்கலாம். அங்கு நின்று அவன் வந்ததும் அவனைப் பார்த்துத் திரும்பினாள். நாயும் அவள் மீது பாய்ந்தது. அவளும் அவன்மீது பாய்ந்தாள். இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொள்ளுவது போல இருந்தது. இருவரும் தரைமீது கட்டிப்பிடித்துக்கொண்டு விழுந்து சரிவில் புரண்டனர். விளையாட்டு, கடுமையாகவும் பயங்கரமாகவும், ஆனால் பரிவுகலந்த மென்மையுடனும் இருந்தது.

     இதற்குள் ஆண் நரி நேராகக் கிடைக்குள் சென்றது. அடர்ந்த ரோமத்துடன் கொழுத்துத் தூங்கும் ஆடுகளை அது ஒன்றும் செய்யவில்லை. அதன் நோக்கம் புதிதாகப் பிறந்த பன்றிக் குட்டிகளே. பெண் பன்றியுடன் அவை ஒரு மூலையில் கிடந்தன. தாய் அவைகளைக் காப்பாற்ற முயன்றது. ஆனால், ஆண் நரி, மண் ஒட்டின தன் ஈர வாலை அதன் கண்களில் அடித்து அதைக் குருடாக்கியது. பிறகு அந்தக் கொடுமையான பகையாளி, தன் கூர்மையான எஃகுப் பல் நுனிகளால் பன்றிக் குட்டிகள் கழுத்தில் இறுக்கி, ஒவ்வொன்றாக ஐந்து குட்டிகளைத் தூக்கிச் சென்றது. முதலில் மைதானத்தின் ஓரத்திற்கும், அப்புறம் தன் இருப்பிடத்திற்கும் இரண்டு நடையாகத் தூக்கிச் சென்றது. அங்கு வந்தபின், உடனே 'விருந்து பண்ண' ஆரம்பித்தது. வெகு நேரம் கழித்துப் பெண் நரி வியர்க்க இளைக்கத் திரும்பி ஓடி வந்த பொழுது பசி அதிகம்; ஒரு முழுக் குட்டியையும் தோலைக்கூட விடாமல் தின்றுவிட்டது.

     விடியற்காலையில் மேய்ப்பன் பன்றிக்குட்டிகள் பறி போயின என்று கண்டான்; ஆனால் அதற்காக அவன் கவலைப்படவில்லை. கவலையீனத்திற்காக மனசாட்சி அவனைப் பாதிக்கவில்லை. நாயும் குரைக்காமல் தூங்கியது; இரவு முழுவதும் தன் கடமையைச் செய்ததால் களைத்தது போல இன்னும் தூங்கிக்கொண்டிருந்தது. "பாவம்! திருட்டுப் பசங்கள் மந்திரம் போட்டு உன் வாயைக் கட்டிப் போட்டான்கள். அது உன் குற்றம் அல்ல; என் குற்றமும் அல்ல. எஜமானுக்கும் பேச வாயில்லை. ஒரு பெண்பிள்ளை மந்திரம் போட்டு அவர் வாயையும் கட்டிவிட்டாள். அவரையும் சரியாகக் கட்டிப் போட்டாச்சு."

     விபரீத வேடிக்கையான அந்த நிலைமையின் முழு அர்த்தத்தையும் உணராமலே அதற்குத் தலை குனிந்தான்.

     சில நாள் கழித்து காட்டில் சுற்றிக்கொண்டு வரும்பொழுது நரிப்பொந்தை அணுகினான். இரண்டு நாய்க் குட்டிகள் சுற்றிச் சுற்றி ஓடி ஒன்றையொன்று கடித்து விளையாடிக்கொண்டிருந்தன. அவன் நெருங்கியபோதும் தப்பித்து ஓட முயலவில்லை. அவனை ரொம்பக் காலமாகத் தெரிந்தது மாதிரி பார்த்துக் கொண்டு நின்றன. நரியும் ஏமாற்றித் தப்பி ஓடிவிட முடியாத கலப்பு ஜாதி என்பதை அவன் கண்டான்.