உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
காரையில் கண்ட முகம் இ.வி. லூக்காஸ் - இங்கிலாந்து நேற்று சாயங்காலம் எனது நண்பன் டாப்னி வீட்டில் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த அநுபவம் இன்னும் என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம் பேச்சு பூத பைசாசங்களைப் பற்றித் திரும்பியது. கூட்டத்தில் ஒவ்வொரு ஆசாமியும் தம் நண்பருடைய, நண்பருடைய, நண்பருடைய யாருக்கோ சம்பவித்த பைசாச அநுபவங்களைக் கூறி எங்களைப் பயப்படுத்தி நம்பவைக்க முயன்றார். அவையெல்லாம் உப்புச் சப்பற்று வெறும் முயற்சிகளாக ஒழிந்தன. அந்தக் கூட்டத்தில் எனக்குத் தெரியாத பலர் வந்திருந்தனர். என் நண்பன் ரட்சன் வெயிட் ஒரு மூஞ்சூறு ஆசாமியை அழைத்து வந்திருந்தான். அந்த ஆசாமி ஒவ்வொருவர் சொல்வதையும் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தான். கடைசியாக, அவன் பேச்சில் கலந்து கொள்ளாமல் இருப்பதைக் கவனித்த டாப்னி, "இம் மாதிரியான அநுபவங்கள் உங்களுக்கு ஏற்பட்டது கிடையாதோ?" என்று மரியாதையாகக் கேட்டான். அந்தப் புதிய ஆசாமி சிறிது நேரம் மௌனமாக யோசித்துவிட்டு, "உம்! சாதாரணமாக அதைக் கதை என்று விவரித்து விட முடியாது. உங்கள் அநுபவமெல்லாம் கேள்வி ஞானந்தானே! என்னுடையது அப்படிப்பட்டது அல்ல. உண்மை எப்பொழுதும் கதையைவிட விபரீதமானது என்று நான் நினைப்பவன். அத்துடன் உண்மை கதையை விட எப்பொழுதும் சுவாரஸ்யமானது. எனக்குச் சமீபத்தில் ஏற்பட்ட அநுபவத்தைக் கூறுகிறேன். அதிலும் ஆச்சரியம் என்னவெனில் இன்று மத்தியானம் தான் அக்கதை முடிவடைந்தது." அதை எங்களுக்குச் சொல்லுமாறு நாங்கள் அவனை வேண்டிக் கொண்டோம். "இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்பு ஹால்பார்ண் பகுதியில், பெரிய ஆர்மாண்ட் தெருவில் சில அறைகளில் வாடகைக்கு இருந்தேன். அங்கு படுக்கையறையில், முந்திக் குடியிருந்த ஆசாமி வெள்ளையடித்திருந்தான். அதனால் சுவர் முழுவதும் ஈரம் சுவறியதால் பாளம் பாளமாகக் காரை விழ ஆரம்பித்தது. அதில் ஒன்று - இது ஏற்படுவது மிகவும் சாதாரணம் - ஒரு மனிதனுடைய முகம்போலக் கறை படிந்திருந்தது. இதில் அதிசயம் என்னவென்றால் சாதாரணமாக எதிர்பார்ப்பதைவிட அதில் மனித முகஜாடை மிகவும் அதிகமாக இருந்தது. "காலையில் கண்விழித்தவுடன் எனக்கு உடனே எழுந்திருப்பதற்கு எப்பொழுதும் சோம்பல். அப்பொழுதெல்லாம் அந்தக் காரையில் காணப்பட்ட மனித முகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன். மற்ற இடங்களில் ஈரம் காய ஆரம்பித்ததும் கறைகள் மறைய ஆரம்பித்தாலும் அந்த முகம் மட்டும் மறையவே இல்லை. "அங்கு குடியிருக்கும்பொழுது எனக்கு ஒரு தடவை இன்புளூயன்ஸா ஜுரம் கண்டது. வியாதியாகப் படுக்கையில் கிடக்கும்பொழுது, வேறு வேலையொன்றும் இல்லாததினால், அதைப் பார்த்து, அதைப் பற்றி யோசித்துப் பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பேன். அதிலிருந்துதான் அந்த முகம் என் உள்ளத்தில் அதிகமாகப் பதிந்து படிந்து விட்டது. அதன் மீது எனக்கு நிஜமான உயிருள்ள மனிதன் போல ஆச்சரியமான பற்றுதல் எழுந்தது. இரவும் பகலும் அது என் மனத்தை ஒருங்கே கவ்வியது என்று கூறலாம். அந்த உருவத்திற்கு, மூக்கு சிறிது ஒரு பக்கம் வளைந்து, நெற்றி விசாலமாகச் சரிந்து உயர்ந்திருந்தது. அது சாதாரணமாகக் காணப்படுவதாயும், மனத்தில் பதியக் கூடாததாயுமுள்ள முகமில்லை; ஆயிரத்தில் ஒன்று; ஒரு முறை பார்த்தால் மனத்தை விட்டு அகலாது. "எனக்கு உடம்பு குணப்பட்டு வந்தது. ஆனால், அந்த முகம் என் மனத்தைக் கட்டுப்படுத்தியது. தெருவில் போகும் பொழுதெல்லாம் அதைப்போன்ற மனிதன் இருக்கின்றானா என்று தேட ஆரம்பித்தேன். 'அந்த முக ஜாடையுள்ள மனிதன் எங்கேயிருக்கிறான், அவனை அவசியம் சந்திக்க வேண்டும்' என்று என் மனத்தில் ஒரு பேய் ஆசை எழுந்தது. காரணம்? காரணம் எனக்கு விளங்கவில்லை; கூற முடியவில்லை. அவனையும் என்னையும் விதி ஒரே சங்கிலியால் பிணித்திருக்கிறது என்று திட்டமாக நம்பினேன். மனிதர்கள் ஏராளமாகக் கூடும் இடங்களுக்கு அடிக்கடி சென்று தேட ஆரம்பித்தேன். அரசியல் கூட்டங்கள், பந்து விளையாடும் மைதானங்கள், ரயில்வே ஸ்டேஷன் - இவற்றிலெல்லாம் தேடினேன். காலையிலும் மாலையிலும் சுற்றுப்புறங்களிலிருந்து நகரத்தில் வந்து திரளும் ஆயிரக்கணக்கான மக்களில் அவனும் இருக்கக்கூடாதா என்ற நினைப்பு. எல்லா முயற்சியும் வீணாயின. இந்தத் தோட்டத்திலிருந்துதான் மனித முக ஜாடைகளில் எவ்வளவு வித்தியாசமிருக்கிறது, அவற்றை எத்தனை பகுதியாகக் கூடப் பிரித்துத் தொகுத்துவிடலாம் என்று உணர்ந்தேன். "தேடியலையும் ஆசை என்னை ஒரு பைத்தியக்காரனாக்கியது. கூட்டமாக ஜனங்கள் நடமாடும் மூலைகளில் நின்று கொண்டு விழித்த கண் திறந்தபடி பார்த்திருப்பதைப் பலர் கவனிக்க ஆரம்பித்தார்கள். போலீஸ்காரர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு சந்தேகப்பட ஆரம்பித்தனர். நான் பெண்களை ஏறிட்டுக்கூடப் பார்ப்பதில்லை. எப்பொழுதும் ஆண்கள், ஆண்கள்..." மிகவும் சோர்ந்தவன் போல் அவன் நெற்றியைத் துடைத்துக்கொண்டு மேலும் கூற ஆரம்பித்தான்: "கடைசியாக நான் அவனைக் கண்டுபிடித்தேன். அப்பொழுது அவன் ஒரு வாடகை மோட்டாரில் ஏறிக்கொண்டு பிக்காடில்லியில் கிழக்குப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தான். சுற்றுமுற்றும் பார்த்தேன். பக்கத்தில் ஒரு காலி வாடகை மோட்டார் வண்டி நின்று கொண்டிருந்தது. அதில் துரிதமாக ஏறிக்கொண்டு முன்னே போகும் வண்டியைத் தொடரச் சொன்னேன். என்னுடைய மோட்டார் ஓட்டி அதை சாரிங் கிராஸ் ரயில்வே ஸ்டேஷன் வரை தொடர்ந்து சென்றான். நான் அதிலிருந்து இறங்கி ஸ்டேஷன் பிளாட்பாரத்திற்கு ஓடினேன். அந்த மனிதன் அங்கு இரண்டு ஸ்திரீகளுடனும் ஒரு சிறு பெண் குழந்தையுடனும் நின்று பேசிக் கொண்டிருந்தான். 2-20 க்குப் புறப்படும் வண்டியில் பிரான்ஸுக்குச் செல்லுவதாகத் தெரிந்தது. அவனிடம் ஒரு வார்த்தையாவது பேசலாம் என்று பக்கத்திலேயே நின்றிருந்தேன். முடியவில்லை. அவனுடைய மற்ற நண்பர்கள் திரண்டு எல்லோரும் ஒரே கூட்டமாக ரயிலில் சென்று ஏறினார்கள். "நானும், அவசர அவசரமாக, போக்ஸ்டனுக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டு, வண்டியில் ஏறினேன். அங்கு அவன் படகில் ஏறுமுன் சந்திக்கலாம் என்ற நினைப்புத்தான்; ஆனால் அவன் போக்ஸ்டனில் எனக்கு முந்திப் படகில் ஏறிவிட்டான். நானும் படகில் ஏறினேன். ஆனால் அவன் தனியாக ஒரு ஸலூன் பிடித்திருந்ததினால் எனது காபினுக்கும் அவனுடைய இடத்திற்கும் சம்பந்தமற்றுப் போய்விட்டது. "அங்கும் எனது முயற்சி பலனளிக்கவில்லை. அக்கரையில் இறங்குமுன் எப்படியாவது சந்தித்துவிட வேண்டுமென்று திடப்படுத்திக் கொண்டேன். பிறகு புறப்பட்டதும் அவனுடைய ஸ்திரீ நண்பர்கள் கப்பல் மேல்தட்டில் வந்து உலாவ ஆரம்பித்தனர். கையிருப்புப் பணம் எல்லாம் பொலான் (பிரெஞ்சுத் துறைமுகம்) வரை போவதற்கு மட்டுந்தான். அங்கு போய்த் தந்தியடித்தால் போகிறது. "நான் அந்த ஸலூன் கதவண்டையில் நின்று காத்திருந்தேன். அரை மணி நேரம் கழித்து ஒரு சிறு பெண்ணைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியே வந்தான். எனது இருதயம் கப்பலின் துழாவுக்கருவி மாதிரி படபடவென்று அடித்துக்கொண்டது. என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மேல் தட்டிற்குப் போகும் ஏணிப் படிகளை நெருங்கினான். "'மன்னியுங்கள்' என்று பதட்டத்துடன் நாத் தடுமாறக் கூறிவிட்டு, 'உங்கள் அறிமுகச் சீட்டைத் தருவீர்களா? உங்களுக்கு முக்கியமான விஷயம் ஒன்றைக் கூற விரும்புகிறேன்' என்று சொன்னேன். "அவன் ஆச்சரியத்துடன் என்னை மேலும் கீழுமாகக் கவனித்தான். அவன் நிலைமையில் அதுவும் இயற்கைதானே! ஆனால் அவன் என் ஆசையைப் பூர்த்தி செய்தான். தன் பையிலிருந்த ஒரு அறிமுகச் சீட்டை நிதானமாக எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டு, அந்தக் குழந்தையுடன் கப்பலின் மேல் கட்டிற்கு விரைந்து சென்றுவிட்டான். அவன் என்னைப் பைத்தியம் என்று திட்டமாக நம்பி, என் இஷ்டப்படி விடுவதே நல்லது என்று கருதிவிட்டான் போலும்! "அந்தச் சீட்டைக் கையில் இறுக்கிப் பிடித்துக்கொண்டு, யாருமற்ற ஒரு மூலையில் சென்று வாசித்தேன். என் பார்வை மறைந்தது; ஏனெனில் அதில் பின்வருமாறு எழுதியிருந்தது: ஸ்ரீ. ஆர்மான்ட் வால், பிட்ஸ்பர்க் (அமெரிக்கா). "பின்பு என்ன நடந்தது என்று எனக்கு ஞாபகம் இல்லை; எனக்குப் பிரக்ஞை வந்தபொழுது, நான் பொலான் துறைமுகத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் கிடந்தேன். பல வாரங்கள் எனது நிலைமை குணப்படவில்லை. நான் சமீபத்தில்தான் திரும்பினேன். வந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை." பின்பு, அவன் சிறிது நேரம் மௌனமாக இருந்தான். நாங்கள் எல்லோரும் அவனையே கவனித்தோம். பின், ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோ ம். அன்று சாயங்காலம் மற்றவர்கள் கூறியதெல்லாம் இந்த நோஞ்சான் ஆசாமியின் அநுபவத்திற்கு ஈடாகாது என்று உணர்ந்தோம். "நான் பின்பு பெரிய ஆர்மாண்ட் தெருவிற்குத் திரும்பினேன். அங்கிருந்துகொண்டு என் வாழ்க்கையில் ஆச்சரியகரமாகச் சம்பந்தப்பட்ட இந்த அமெரிக்கனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். நான் பிட்ஸ்பர்கிற்கு எழுதினேன். லண்டனில் வசித்துவரும் அமெரிக்கருடன் உறவாடினேன். ஆனால், அந்த மனிதன் ஒரு அமெரிக்கக் கோடீஸ்வரன் என்பதும், லண்டனில் வசித்த ஆங்கிலப் பெற்றோருக்குப் பிறந்தவன் என்பதும் தவிர, வேறு ஒரு விபரமும் என்னால் அறியமுடியவில்லை. லண்டனில் என்றால், எங்கு? இதற்குப் பதிலே கிடையாது. "இப்படியே நேற்று காலை வரை கழிந்தது. அதற்கு முந்திய தினம் சிறிது நேரம் கழித்துப் படுக்கச் சென்றதால் வெகுநேரம் கழித்தே விழித்தேன். நான் எழுந்தபொழுது சூரியன் ஒளி முகத்தில் அடித்துக் கொண்டிருந்தது. கண்ணைத் துடைத்துக்கொண்டு எப்பொழுதும்போல் சுவரில் காணப்படும் உருவத்தைப் பார்த்தேன். சூரியன் கண்ணைக் கூசவைக்கவில்லை. ஆனால் கண்களைத் துடைத்துக் கொண்டு பயத்துடன் பதறி எழுந்து சுவரைப் பார்த்தேன். உருவம் மிகவும் மங்கலாகத் தெரிந்தது! அதற்கு முந்திய தினம் எப்பொழுதும்போல் ஸ்பஷ்டமாக இருந்தது; ஆனால், இன்று மிகவும் மங்கிய அதன் சாயை தான் காணப்பட்டது. "நான் மிகவும் சோர்ந்து, மூளை குழம்பி, வெளியே எழுந்து சென்றேன். "அன்று மாலையில் பத்திரிகை விளம்பரங்களில் 'அமெரிக்கக் கோடீஸ்வரனுக்கு மோட்டார் விபத்து' என்று காணப்பட்டது! நீங்கள் எல்லோரும் கூட அதைப் பார்த்திருக்கலாம். உடனே ஒரு பத்திரிகையை வாங்கிப் பிரித்துப் பார்த்தேன். அங்கு நான் எதிர்பார்த்தபடியேதான் இருந்தது. 'அமெரிக்கக் கோடீஸ்வரரான ஸ்ரீ. ஆர்மான்ட் வாலும் அவரது கோஷ்டியினரும் ஸ்பீஸாவிலிருந்த பைஸா நகரத்திற்கு மோட்டாரில் செல்லும் பொழுது ஒரு வண்டியில் மோதியதால் மோட்டார் கவிழ்ந்து விட்டது! ஸ்ரீ. வாலின் நிலைமை கவலைக்கிடமாகக் கருதப்படுகிறது. "நான் மூளை குழம்பி எனது அறையை அடைந்தேன். என் படுக்கையின்மீது உட்கார்ந்து கொண்டு அந்தப் பிம்பத்தையே கவனித்துக் கொண்டிருந்தேன். பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே அது திடீரென்று மறைந்துவிட்டது! "பின்னர், ஸ்ரீ வால் அதே நிமிஷத்தில் இறந்தார் என்று அறிந்தேன்." அந்த மெலிந்த தேகி பின்னும் சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்தான். "ஆச்சரியம்! ஆச்சரியம்!" என்றோம். "ஆமாம்! இதில் மூன்று ஆச்சரியமான விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. முதலாவதாக லண்டன் குடிக்கூலி வீட்டு ஒரு அறையின் காரைச் சுவர், அமெரிக்க மனிதர் ஒருவரின் முகஜாடையைத் தோற்றுவிப்பது மட்டுமல்லாது அவருடைய வாழ்க்கைக்கு நெருங்கிய சம்பந்தமுடையதாக இருப்பது. இரண்டாவதாக, அந்த மனிதர் பெயருக்கும் அந்த உருவம் தோன்றிய இடத்தின் பெயருக்கும் ஒற்றுமை இருப்பதும் பெரிய ஆச்சரியம். அப்படி நீங்கள் நினைக்கவில்லையா?" அவன் சொல்வதை அப்படியே ஆமோதித்தோம். பூத பைசாச விவரம் முன்னிலும் பன்மடங்கு உற்சாகத்துடன் விவாதிக்கப்பட்டது. எங்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் அந்த மனிதன் எழுந்து, "நேரமாகிறது, நான் போய் வருகிறேன்" என்று சொல்லியதையும் கவனிக்கவில்லை. அவன் கதவண்டை நெருங்கியதும் எங்களில் ஒருவன் - அவன் தான் ஸ்டான்டன் - "மூன்றாவது ஆச்சரியமான விஷயத்தைப் பற்றிச் சொல்லவில்லையே?" என்று கேட்டான். "ஆமாம்! மூன்றாவது விஷயம்! எனக்குக்கூடச் சொல்ல மறந்து விட்டது! இந்த அநுபவத்தில் மூன்றாவது ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நான் இந்தக் கதையை அரைமணி நேரத்திற்கு முன்புதான் ஜோடித்தேன்! போய் வருகிறேன்! நேரமாகிறது!" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். இந்த நோஞ்சல் பயல் எங்களைக் கிண்டல் செய்தது தூக்கிவாரிப் போட்டது. ஆச்சரியம் தீர்ந்ததும், சுற்றிப் பார்க்கிறோம்; இந்தப் பெருத்த மோசடியை அழைத்து வந்த ரட்ஸன் வெயிட்டும் கம்பி நீட்டி விட்டான்! |