லதீபா

மோஷி ஸ்மிலான் ஸ்கி

     "லதீபாவின் கண்களை நீ பார்த்திருக்காவிட்டால், கண்களுக்கு எவ்வளவு அழகு இருக்க முடியும் என்பது உனக்குத் தெரிந்தே இருக்காது."

     இப்படி நான் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். சிறு பிராயத்திலிருந்தே எனக்கு அவளைத் தெரியும். லதீபா ஒரு அழகிய சிறுமி.

     இப்பொழுதும் அப்படித்தான் சொல்லுவேன்.

     அப்பொழுது ஜனவரி மாதம்; நல்ல மழைக்காலம்.

     நான் வயலில் விவசாயத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அரபுகள் சிலர் என்கீழ் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் நான் எனது முதல் திராட்சைத் தோட்டம் போட நிலத்தைக் கொத்திக் கொடுத்துக் கொண்டிருந்தேன்; மனம் குதி போட்டுக் கொண்டிருந்தது. சூழ்நிலையும் அப்படியே குதிபோடுவதாக எனக்குப்பட்டது. நல்ல பிரகாசமான பகல்; காற்று ஜீவதாது ஏந்தி 'குளு குளு'வென்று அடித்தது; உடலுக்கும் மனதுக்கும் சுகத்தைக் கொடுத்தது. இன்னும் அதிகாலை சோபை மாறவில்லை, காலைக்கிரணங்களின் சிவப்பு வர்ணம் மாறவில்லை. நெஞ்சு கொண்ட மட்டும் மூச்சை இழுத்து வெளிவிடுவதிலேயே ஒரு சுகம் இருந்தது. பார்த்த இடமெல்லாம் பச்சைப் பசேல் என்று அழகாகத் தலையசைத்து நின்றது.

     கல்லையும் செத்தையையும் பொறுக்கி எறிந்து கொண்டிருந்த அரபுப் பெண்களிடையே ஒரு சிறுமியும் வேலை செய்து கொண்டிருந்தாள். பதினாலு வயதிருக்கும். ரொம்பத் 'துடி'. நீலச் சிற்றாடை அணிந்து தலையில் ஒரு துண்டின் முனையைக் கட்டியிருந்தாள். மறுமுனை தோளில் தொங்கியது.

     "உன் பெயரென்ன?" என்று கேட்டான்.

     சின்ன முகம் - வெயில் பட்டதால் கறுத்த முகம் - நாணத்துடன் என்னை நோக்கியது. இரு கண்கள் என்னை நோக்கி ஜொலித்தன.

     "லதீபா"

     அவள் கண்கள் - என்ன அழகு! அகன்று கறுத்து ஜொலித்தன. கருமணிகள் களையோடும் ஜீவகளையோடும் குதியாட்டம் போட்டன.

     "ஷெய்க்ஸூர்பாஜி மகள்" என்றான் பக்கத்திலிருந்த பெரிய கல்லைப் புரட்டிக் கொண்டிருந்த அட்டாலா என்ற வாலிப அரபு.

     "வேனில் இரவின் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் போல..." என ஆரம்பிக்கும் ஒரு அரபுப்பாட்டைப் பாட ஆரம்பித்தான்; அப்படிப் பாடுகையில் அவனது கண்கள் விஷமத்துடன் என்னைப் பார்த்தன.

     அன்றிலிருந்து என் வேலையில் எனக்கு ஒரு புதிய சிரத்தை தட்டியது. மனம் இருண்டு குமையும் பொழுதெல்லாம் லதீபாவைப் பார்ப்பேன், - கண்கள் எல்லாம் மணிமந்திர மாத்திரைக்கோல் வித்தை மாதிரி அதே கணத்தில் அகன்று விடும்.

     அவள் கண்கள் அடிக்கடி என்னைப் பார்ப்பதை நான் கவனித்திருக்கிறேன். அவை எப்பொழுதும் ஜொலிக்கும். ஆனால் சில சமயங்களில் அவைகளில் வருத்தம் தேங்கும்.

     ஒரு தடவை நான் வயல் காடுகளில் ஒரு கோவேறு கழுதைமேல் சவாரி போய்க் கொண்டிருந்தேன். கிணற்றருகில் லதீபாவைக் கண்டேன். தலையில் மண்ஜாடியை வைத்திருந்தாள்.

     "லதீபா - எப்படி?" என்று விசாரித்தேன்.

     "அப்பா என்னை இங்கே வந்து வேலை செய்யக்கூடாது என்கிறார்..."

     வார்த்தைகள் குமுறிக்கொண்டு வந்தன. மனதில் வெகு காலமாக அழுந்திக்கிடந்த ஏதோ ஒன்றைக் கொட்டுகிற மாதிரி, ஏதோ துன்பம் கவ்வியமாதிரி குரல் மட்டும் தேங்கியது.

     "ஏன், வீட்டிலேயே இருக்க உனக்குப் பிரியமில்லையா, வேலை எதற்குச் செய்யவேண்டும்?" என்றேன்.

     அவள் என்னைப் பார்த்தாள்; ஏதோ மேகம் படர்வது போல் கண்கள் சிறிது மங்கின. சில நிமிஷங்கள் மௌனமாயிருந்தாள்.

     "ஷெய்க் ஆகாருடைய மகனுக்கு என்னைக் கலியாணம் செய்துகொடுக்க அவர் ஆசைப்படுகிறார்."

     "நீ...?"

     "அதைவிடச் செத்துப்போவேன்!"

     சிறிது நேரம் மௌனமாயிருந்தாள்; பிறகு என்னைக் கேட்டாள்...

     "க்வாஜா! (எஜமான்) உங்களில் எல்லாம் ஒரே ஒரு பெண்ணைத் தானே கலியாணம் செய்து கொள்வீர்களாம், - வாஸ்தவமா?"

     "நாங்கள் ஒரே ஒரு பெண்ணைத்தான் லதீபா!"

     "உங்களில் பெண்களை அடிக்கமாட்டார்களாமே?"

     "ஆமாம், ஆசைப்பட்டவர்களை, நம்மேல் ஆசை கொண்டவர்களை எப்படி அடிக்கமுடியும்...?"

     "உங்களில் பெண்கள் ஆசைப்பட்டவர்களைத்தானே கலியாணம் செய்துகொள்ளுவார்களாம்...?"

     "ஆமாம். நிச்சயமாக அப்படித்தான்."

     "எங்களை ஆடுமாடு மாதிரி விற்கிறார்கள்."

     இப்படிப் பேசி வருகையில் அவள் கண்கள் கன்னக்கனிந்து இருண்டது, ஒளிவிட்டது.

     "எங்கப்பா சொல்லுகிறார்... நீங்கள் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டால் என்னை உங்களுக்குக் கலியாணம் செய்துகொடுக்கிறேன் என்று."

     "எனக்கா...?"

     என்னையும் மீறி விழுந்து சிரித்தேன். லதீபா என்னைப் பார்த்தாள். சொல்லமுடியாத மன உளைச்சல் கண்களை நிறைத்தது.

     "லதீபா, நீ யுதச்சியாகிவிடு; நான் உன்னைக் கலியாணம் செய்துகொள்ளுகிறேன்."

     "எங்கப்பா என்னையும் கொல்லுவார், - உங்களையும் கொல்லுவார்."

     மறுநாள் ஷெய்க் ஸூர்பாஜி என் திராட்சைத் தோட்டத்திற்கு வந்தான்.

     ரொம்பத் தொண்டு கிழவன். நீண்ட வெள்ளைத்தாடி, பெரிய தலைப்பாகை, - துள்ளிக் குதிபோடும் ஒரு வெள்ளைக் குதிரைமீது வந்தான். நிறுத்தியுங் கூட மண்ணைப் பிறாண்டிக் குதிபோட்டு நின்றது. என் வேலைக்காரர்களுக்குச் 'சலாம்' சொன்னான். வேலைக்காரர்கள் பணிந்து குனிந்து சலாமிட்டார்கள். என்னைக் கடுகடுப்போடு பார்த்து வந்தனம் செய்தான். வார்த்தை சீறிப் பாய்ந்தது. நானும் அமைதியாகப் பதில் சொன்னேன். குடியேற்றத்திற்கும் ஷெய்க்குக்கும் நட்புக் கிடையாது. யூதர்கள் மீது குரோதமே உருக்கொண்டு நின்றான் ஷெய்க்.

     தன் மகளைக் கண்டதும் ஷெய்க்குக்குக் கோப ஆவேசம் கொண்டது. "யூதனிடம் போகக்கூடாது என்று நான் உத்தரவு போடவில்லையா?" என இரைந்தான்.

     தொழிலாளர்களைப் பார்த்து, "நம்பிக்கையில்லாதவர்களிடம் உழைப்பை விற்கும் நீங்களும் மூன்களா? உங்களுக்கு வெட்கமில்லை!" என்றான்.

     அவன் கையிலிருந்த கம்பு பலமுறை லதீபா தலைமீதும் தோள்மீதும் விழுந்தது. எனக்குக் கோபம் வந்து விட்டது. நான் அவனை நெருங்கினேன். துயரம் நிறைந்த லதீபாவின் கருங்கண்கள் என்னைப் பேசாமல் இருக்கும்படி கெஞ்சின.

     ஷெய்க் மகளை அழைத்துக்கொண்டு போய்விட்டான். வேலைக்காரர்கள் பயம் தெளிந்து மூச்சு விட்டார்கள்.

     "ஷெய்க் ஸூர்பாஜி இரக்கமில்லாதவர்" என்றான் ஒருவன்.

     "வேலைக்காரர்களை முன்போல் பாதிக் கூலிக்கு அமர்த்தி உழைக்க வைக்க முடியவில்லை; அதுதான் கோபம், - யூதர்கள் போட்டி போடுகிறார்கள்" என்றான் மற்றொருவன்.

     "இன்றைய கோபத்துக்குக் காரணம் எனக்குத் தெரியும்" என்றான் அட்டாலா. அவன் உதட்டில் குசும்புச் சிரிப்புத் தோன்றிப் படர்ந்தது.

     அப்புறம் லதீபா வேலைக்கு வரவில்லை.

*****

     சிலவாரங்கள் கழித்து ஒருநாள் மத்தியானம், நான் வாடிக்கையாகச் சாப்பிடும் வீட்டிலிருந்து சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வருகிற வழியில் அவளைக் கண்டேன்.

     அவள் வெளியே தரையில் உட்கார்ந்துகொண்டு கோழிக் குஞ்சு விற்றுக் கொண்டிருந்தாள். அவள் என்னைக் கண்டதும் எழுந்து நின்றாள். கண்களின் அழகும் பெருகியிருந்தது; துயரமும் பெருகியிருந்தது.

     "லதீபா எப்படியிருக்கே?"

     "வந்தனம் க்வாஜா!" என்றாள். அவள் குரல் கம்மியது.

     லதீபா கோழிக்குஞ்சு விற்க வருவாள்; எப்பொழுதும் அந்த மத்தியான நேரத்தில்தான்...

     ஒருநாள் அட்டாலா என்னிடம் சொன்னான்...

     "கவாஜா, லதீபா ஆகாருக்குப் போய்விட்டாள். ரொம்பக் குள்ளமான குரூபி..."

     இந்த வார்த்தைகள் என் நெஞ்சில் குத்தி ஏறின.

     அப்புறம் கேள்விப்பட்டேன்... லதீபாவின் புருஷன் வீடு தீப்பற்றிக்கொண்டது; அவள் தகப்பன் வீட்டுக்கு ஓடி வந்து விட்டாள். அவள் இஷ்டத்துக்கு விரோதமாக அவளைப் புருஷன் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டு விட்டார்களென்று கேள்விப்பட்டேன்.

     சில வருஷங்கள் கழிந்தன. எனக்கு என்று நான் கட்டிக்கொண்ட வீட்டில் வசித்து வந்தேன். வேறு கருங்கண்கள் லதீபாவின் கண்களை மறக்கடித்தன.

     ஒருநாள் காலை நான் வெளியே வந்தேன். இரண்டு அரபுக் கிழவிகள் கோழிக்குஞ்சுகளை வைத்துக்கொண்டு நின்றிருந்தனர்.

     "என்ன வேண்டும்?" என்று கேட்டேன்.

     ஒருத்தி எழுந்து நின்று என்னைப் பார்த்தாள்.

     "க்வாஜா மூஸா!"

     "லதீபா?"

     ஆமாம், லதீபாதான். முகத்தில் சுருங்கலும் திரையும் விழுந்த கிழவி லதீபாதான். வயதாகிவிட்டது; இருந்தும் கண்களில் பழைய பிரகாசம் மாறவில்லை.

     "உங்களுக்கும் தாடி வளர்ந்துவிட்டதே, - எப்படி மாறி விட்டீர்கள்" என்றாள். அவள் கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தன.

     "நீ எப்படி இருக்கிறாய், ஏன் இப்படி மாறிப் போனாய்?"

     "எல்லாம் அல்லாஹ்தாலா விட்டவழி, க்வாஜா மூஸா! கலியாணம் செய்து கொண்டீர்களா?"

     "ஆமாம், லதீபா."

     "நான் பார்க்கவேணுமே..."

     நான் என் மனைவியை வெளியே கூப்பிட்டேன்.

     லதீபா அவளையே வெகுநேரம் பார்த்துக் கொண்டு நின்றாள்.

     அவள் கண்களில் நீர் ததும்பியது...

     அதற்கப்புறம் லதீபாவை நான் பார்க்கவேயில்லை.