மிளிஸ்

பிரட் ஹார்ட் - அமெரிக்கா

     ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் பிறந்த சுரங்க ஸ்தலம். தற்பொழுது அதற்கிருக்கும் பெருமையெல்லாம், புராணங்களைப் போல, பழம்பெருமைதான்.

     முதன் முதலில் ஸ்மித் என்ற ஆசாமி அங்கு சுரங்கம் வெட்டி 5,000 டாலர்கள் சம்பாதித்தான்; பின்பு அதில் மேற்கொண்டு 3,000 டாலர் செலவழித்து, தங்கம் இனிக் கிடைக்காது என்ற உண்மையைக் கண்டுபிடித்தான். பொன் என்றால் ஆசை யாரை விட்டது? அவனைத் தொடர்ந்து பல குடும்பங்கள் அங்கு குடியேறின. நாளாவிர்த்தியில் பள்ளிக்கூடமும், ஒரு மாதாகோயிலும் அங்கு தோன்றின. ஸ்ரீ. ஸ்மித் அவர்கள், படிப்படியாய்த் தங்க ஆராய்ச்சியிலிருந்து பலவித இன்ஜினியர் தொழில்கள் எல்லாம் அநுபவித்து கடைசியில் சாராயக் கடை வைத்தார். அதில் ஸ்ரீ. ஸ்மித் அவர்கள் பெற்ற லாபம் மிதமிஞ்சிக் குடிக்கப் பழகியதுதான்.

     அன்று பொழுது மங்கி வெகு நேரமாகிவிட்டது. ஸ்மித் பாக்கெட்டினுடைய எதிர்காலச் சமூகத்தைப் பண்படுத்தும் பொறுப்பை வகிக்கும் 'வாத்யாரய்யா', பள்ளிக்கூடத்திலே உட்கார்ந்து கொண்டு, காப்பிநோட்டுகளைத் திருத்திக் கொண்டிருக்கிறார். பள்ளிக்கூடக் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. அன்று முழுவதும் 'டொக்' 'டொக்' என்று கூரையின் மீது தட்டிக் கொண்டிருந்த மரங்கொத்திக் குருவிகளின் வேலையென்று நினைத்து அவர் பேசாமல் இருந்து பார்த்தார். சப்தம் ஓய்கிற பாட்டைக் காணோம்.

     "யாரது?" என்று ஏறிட்டுப் பார்த்தார்.

     ஒரு சிறு பெண். அழுக்குப் படிந்த உடை, கறுத்து விசாலமான கண்கள், கவனிப்பாரற்றுச் சடை ஏறிய தலை மயிர், - எல்லாம் அவள் யார் என்பதை நினைவிற்குக் கொண்டுவந்தன. அவள் வேறு யாருமில்லை. ஸ்மித் பாக்கெட்டின் நிர்மாணகர்த்தரான ஸ்ரீ. ஸ்மித் அவர்களின் ஏக புத்திரி ஸ்ரீமதி மெலிஸா ஸ்மித்; - சுருக்கமாக 'மிளிஸ்' என்று அழைப்பார்கள். தாயைப் போல் பிள்ளை என்ற பழமொழியை உத்தேசித்துத்தான் கடவுள் மிளிஸின் தாய்க்கு வசை ஏற்பட்டுவிடாதபடி குழந்தை பிறந்தவுடனேயே தம் பக்கம் அழைத்துக் கொண்டார் என்று கருத வேண்டியிருக்கிறது.

     "உனக்கு என்ன வேண்டும்?" என்றார் உபாத்தியாயர். மிளிஸ் கதை முழுவதும் அவருக்கு நன்றாகத் தெரியும். இயற்கையிலே வளர்ந்த பிள்ளை. ரெவரண்டு மக்ஸ்னாக்லி ஊருக்குப் பெரிய பாதிரியார். அவள் 'குணப்படுவதற்காக' (சீர்திருந்துவது என்பதற்கு கிறிஸ்தவப் பதப் பிரயோகம்) அவளை ஹோட்டலில் சிறு கையாளாக அமர்த்தினார். பின்பு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மதபோதனைப் பள்ளிக்கூடத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்கு இவளை அறிமுகம் செய்து வைத்தார். அந்தப் பெரிய குடும்பக் குழந்தைகளுக்கிடையே இவளது மட்டரக வேடிக்கைப் பேச்சுக்கள் ஒரு பெரும் புரட்சியை உண்டுபண்ணிவிடும் என்று பயந்து, பாதிரியார் அவளை வெளியே துரத்தி விட்டார். இதுதான் அவளது பூர்வகதை. அந்த மோசமான கிழிசல் உடைகளிலும் பளிச்சுப் பளிச்சென்று ஒளி வீசும் அவள் கண்கள் அவளுக்கு ஒரு கண்ணியத்தைத் தந்தன.

     "இன்று ராத்திரி நீர் தனியாக இருப்பீர் என்று தெரிந்துதான் இங்கே வந்தேன். அந்தக் குட்டிகள் இருக்கும்பொழுது எனக்கு வர இஷ்டமில்லை. ஏன், அவர்களைப் பிடிக்கவில்லை; அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை; அதுதான். நீர் பள்ளிக்கூடந்தானே வைத்திருக்கிறீர்? எனக்குப் படிக்க வேண்டும்" என்று திடுதிடுவென்று பேசினாள்.

     உபாத்தியாயர் பேசாமல் அவளைக் கவனித்தார்.

     "என் பெயர் மிளிஸ், மெலிஸா ஸ்மித். குடிகார ஸ்மித்தின் மகள். நான் பள்ளிக்கூடத்திற்கு வருகிறேன்."

     "அப்புறம்?" என்றார் வாத்தியார் வெகு சாவதானமாக.

     இதுவரை அவளை யாவரும் எதிர்த்தார்கள். அதில் பிறந்தது ஆரம்பத்திலேயே சூட்டுடன் பேசும் அவளது பாஷை. உபாத்தியாயரின் அமைதியை அவள் எதிர்பார்க்கவில்லை. முதலில் அவள் முகம் சிறிது வெட்கத்தால் சிவந்தது. பின்னர் மேஜையின் மீது குப்புறப் படுத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். இத் துக்க ஆவேசம் அடங்கும் வரை உபாத்தியாயர் அமைதியாக இருந்தார். அவள் தேம்பல்களுக்கிடையே, "இனி ஒழுங்காக இருப்பேன்" என்றாள்.

     உபாத்தியாயர், அவள் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடத்தை விட்டதற்குக் காரணத்தைக் கேட்டார்.

     "என்னை வெறுக்கும் கடவுளை நான் ஏன் மதிக்க வேண்டும்? எனக்கு அப்படி ஒன்றும் செய்ய வேண்டியதில்லை."

     "மக்ஸ்னாக்லியிடம் நீ அப்படியே சொன்னாயா?"

     "ஆமாம்! அப்படித்தான் சொன்னேன்."

     உபாத்தியாயருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

     அந்த நிசப்தமான மலைச்சரிவில், ஊருக்கு வெளியேயிருந்த பள்ளிக்கூடத்தில், வெளியே பைன் மரங்கள் பெருமூச்சு விடுவது போல் அலையும் காற்றில் ஒன்றுபடாது ஒலித்தது அவருடைய சிரிப்பு.

     அவள் தகப்பனார்?

     "அப்பாவைப் பற்றி எனக்கென்ன? அவர் எனக்கென்ன செய்திருக்கிறார்? நான் போகும்பொழுது 'குடிகார ஸ்மித் மகள் போகிறாள் பார்!' என்று பேசும்படியாக வைத்தார். அவர் செத்தாலும் நல்லதுதான். எல்லாரும் செத்தாலும் நல்லதுதான்!" மறுபடியும் அழுகை வந்தது அவளுக்கு.

     உபாத்தியாயர், தமது அமைதியான குரலில், "அம்மாதிரியெல்லாம் சொல்லக்கூடாது" என்று வெகு நேரம் போதனை செய்தார்.

     இப்படியாக ஆரம்பித்தது மிளிஸின் வித்தியாப்பியாசம்.

     மூன்று மாதங்கள் கழிந்தன.

     மறுபடியும், பொழுது சாய்ந்து வெகு நேரமாகியும் உபாத்தியாயர் 'காப்பி புஸ்தக' ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்பொழுது, மிளிஸ் திடுதிடுவென்று வந்தாள்.

     "என்ன ரொம்ப வேலையா, ஸார்?" என்றாள். "என்னுடன் வருவீர்களா?"

     அவர் தயாராக இருபப்தை அறிந்து, "அப்படியானால் உடன் புறப்படுங்கள்!" என்றாள்.

     இருவரும் வெளியே சென்றார்கள். வழியில், "எதற்காக?" என்றார் உபாத்தியாயர்.

     "அப்பாவைப் பார்க்க" என்றாள் மிளிஸ். இதுவரை இதுதான் முதல் தடவையாகத் தகப்பனாரை 'அப்பா' என்று அவள் அழைத்தது.

     மிளிஸ் ஒவ்வொரு சாராயக் கடையாகத் தேடினாள். இவ்வாறு ஒரு மணி நேரம் கழிந்தது. காட்டாற்றுக்கு அப்பால் இருக்கும் மரக் குடிசையில் இருக்கலாம் என்று அங்கு சென்றார்கள். போகும் வழியிலே, நிசப்தமான இரவிலே, துப்பாக்கி வெடிச் சப்தம் கேட்டது. மிளிஸ் குறுக்குப் பாதைகள் வழியாக அவரை அழைத்துக் கொண்டு மரக் குடிசையை நோக்கி வேகமாகச் சென்றாள்.

     அவ்விடத்திலே திகிலடைந்த சிலர் கூடி நின்றனர். குழந்தை மிளிஸ் அவர்களைச் சட்டை செய்யாது, உபாத்தியாயரை அழைத்துக்கொண்டு அங்கு சென்றாள். அங்கே ஸ்மித், அந்த 'ஸ்மித் பாக்கெட்' கிராமம் உண்டாவதற்குக் காரணபூதரான ஸ்ரீமான் ஸ்மித், முதலில் தாம் அமைத்த மரக் குடிசையில் தமது பயனற்ற வாழ்வை ஒரு துப்பாக்கிக் குண்டிற்கு அர்ப்பணம் செய்துவிட்டுக் கிடந்தார். குழந்தை முகத்தில் அப்பொழுது வருத்தம் தோன்றவில்லை. குழம்பிய மனதுடைய ஆசிரியருக்கு, அவள் திருப்தியடைந்தது போன்ற முகக் குறியுடன் இருந்ததாகத் தென்பட்டது.

     மிளிஸ் உண்மையிலேயே அனாதையானாள்.

*****

     ஸ்மித்தின் மரணச் சடங்கும் ஒருவாறு முடிவடைந்தது.

     உபாத்தியாயர் மிஸிஸ் மார்பர் என்ற ஸ்திரீயின் வீட்டில் மிளிஸ் வசிப்பதற்கு ஏற்பாடு செய்து வைத்தார். மிஸிஸ் மார்பர் குழந்தை விவகாரத்தில் சிறிது தாராளம் என்று தான் சொல்லவேண்டும். அத்தனை குழந்தைகளுக்கும் நாகரிகமான லத்தின் பெயர்களும் கிரேக்கப் பெயர்களும் கொடுத்திருந்தாள். கஸாண்டிரா என்ன, அரிஸ்டைடீஸ் என்ன, கிளிஸ்டம்னஸ்டிரா என்ன! எல்லாம் பழைய பெயர்கள்தான். ஆனால் அவளுக்கு அத்தனை குழந்தைகளிலும் கிளிஸ்டம்னஸ்டிரா மீதுதான் அபார பிரேமை. செல்லமாகக் 'கிளைடி' என்று அவளை அழைப்பாள்.

     மிளிஸ் அவள் வீட்டிற்கு வந்ததிலிருந்து, 'கிளைடியைப்போல் பேசு' 'கிளைடியைப் போல் நட' என்ற மிஸிஸ் மார்பரின் ஓயாத உபதேசத்தைத்தான் அவள் கேட்கவேண்டியிருந்தது. இந்தக் கிளைடி மான்மியம் மிளிஸிற்கு வெறுப்பைத்தான் எழுப்பியது என்பது நிச்சயம்.

     கிளைடி வாலிபத்தின் அழகைப் பெற்றவள்; அதை உணர்ந்த அவளுடைய பாவனை நாணங்களும், ஒய்யார அபலைக் குணங்களும் புயல்காற்றைப் போன்ற மிளிஸிற்குப் பிடிக்கவில்லை.

     கிளைடியும் பள்ளிக்கூடம் வந்தாள். அவள் வாத்தியாருடன் பேசுவது முதல், அவர் காப்பி எழுதிக் கொடுக்கும் பொழுது அனாவசியமாக அவர் மீது படும்படி சாய்ந்திருப்பது வரை சாதாரணமாக ஏற்கத் தகுந்ததல்ல. நான் உங்களுக்கு ஒன்று சொல்ல மறந்து விட்டேன். உபாத்தியாயர் என்றதும் நரை திரை விழுந்த சம்பாதி என்று கருதிவிட வேண்டாம். ஆயினும், அவர் கிளைடியின் கண் வீச்சுக்களைப் பொருட்படுத்தவில்லை.

     மனவுறுதி படைத்தவர்; இவ்வாறு இந்திரியங்களைக் கட்டுப்படுத்த அவருக்கு உணவின்மையும் சிறிது துணை புரிந்தது என்று கூற வேண்டும். பொதுவாக அவர் கிளைடியை விட்டு விலகியே நடந்தார். ஒரு நாள் மாலை அவள் எதையோ வைத்து விட்டதாகப் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பி வந்து தேட ஆரம்பித்தாள். இருட்டும் வரை தேடியும் அது அகப்படாது போயிற்று. அன்று இரவு வாத்தியார் அவளுக்குத் துணையாக வீடுவரை சென்றார்.

     இது நடந்த மறுநாள் மிளிஸ் பள்ளிக்கூடம் வரவில்லை. அன்று முழுவதும் மிளிஸைக் காணவில்லை. உபாத்தியாயர், அவளை எல்லா இடத்திலும் தேடிவிட்டு, மிகுந்த வருத்தத்துடன் பள்ளிக்கூடத்திற்குத் திரும்பினார். மேஜையின் மேல் மிளிஸ் கையெழுத்தில் ஒரு கடிதம் இருந்தது. குறிப்புப் புஸ்தகத்திலிருந்த தாள் கிழிக்கப்பட்டு மெழுகு திரியில் உருகிய மெழுகினால் ஆறு இடங்களில் ஒட்டி வைக்கப்பட்டிருந்தது. அதைப் பிரித்து வாசித்தார்.

     'வாத்தியார் ஸாருக்கு,

     'நீங்கள் வாசிக்கும் பொழுது நான் ஓடிப்போய்விட்டேன். அப்புறம் திரும்பவே மாட்டேன். என் பாசி மணியை மேரி ஜென்னிங்ஸிற்குக் கொடுத்து விடுங்கள்.

     'என் பொம்மைப் படத்தை ஸாலிக்குக் கொடுத்து விடுங்கள், கிளைடிக்கு ஒன்றுமே கொடுக்கக் கூடாது. அவளைப் பற்றி என்ன நினைக்கிறேன் தெரியுமா? ரொம்ப மோசமானவள். அவ்வளவுதான். இனிமேல் ஒன்றும் இல்லை.

இப்படிக்கு,

மிளிஸ்.'

     உபாத்தியாயர் அதை வாசித்துவிட்டு நெடுநேரம் யோசித்த வண்ணம் இருந்தார். நெடு நேரங்கழித்துக் காகிதத்தை துண்டு துண்டாகக் கிழித்து ரோட்டில் எறிந்து விட்டார்.

     மறுநாள் விடியற்காலம்; உபாத்தியாயருக்கு மிளிஸ் எங்கு செல்லுவாள் என்று தெரியும். காட்டிலே மிளிஸிற்குத் தெரியாத இடம் கிடையாது. ஆனால் அதிலும் ஒரு பிரத்தியேக இடம் அவளுக்கு உண்டு. அவ்விடத்திற்குச் சென்றார்.

     அவள் அங்குதான் ஒளிந்து கொண்டிருந்தாள்.

     "என்ன வேண்டும்?" என்றாள் மிளிஸ்.

     எப்படி அவளிடம் பேசுவது என்று திட்டப்படுத்தி விட்டார் உபாத்தியாயர்.

     "தின்கிறாயே, அதில் எனக்கும் கொஞ்சம் வேண்டும்."

     "கொடுக்க முடியாது. வேண்டுமானால் கிளிஸ்டம்னஸ்டிராவிடம் கேளுங்கள்." மிளிஸிற்கு, கிளைடியின் முழுப் பெயரையும் நீட்டி முழங்குவது அவளைத் திட்டுவது என்று அர்த்தம்.

     "மிளிஸ், எனக்குப் பசியாக இருக்கிறது. கொஞ்சம்!"

     இப்படி மெதுவாக அவளைச் சமாதானம் செய்து அழைத்து வந்து விட்டார்.

     வெயிற் காலம் வந்தது. அதற்குள் கிளைடிக்கும் மிளிஸிற்கும் இருந்த வெறுப்பு முறுகிக்கொண்டே வந்தது என்று கூற வேண்டும்.

     பரீட்சை என்ற ஒன்றும் வந்தது. ஸ்மித் பாக்கெட்டில் நடக்கும் பரீட்சை வழியே வேறு. சாட்சிகளைக் கூண்டிலடைத்துக் குறுக்குக் கேள்விகள் போட்டுத் திடுக்கிடச் செய்வது போல, ஊரில் பெரிய மனிதர்கள் எல்லாரும் கூடிக்கொண்டு, குழந்தைகளை அசந்தர்ப்பமான கேள்விகளைக் கேட்டுத் திருதிருவென்று விழிக்க வைத்துப் பரீட்சை பண்ணி மகிழ்வார்கள். இந்த விதமான சந்தர்ப்பங்களில் அசட்டுப் பதிலையும் முரட்டுத் தைரியத்துடன் சொல்லக் கூடிய குழந்தைகளே தேறும்.

     பரீட்சை நடந்தபொழுது கிளைடியும் மிளிஸும் அங்கு இருந்தவர்களைக் கவர்ச்சித்தார்கள் என்று கூற வேண்டும். கிளைடியின் நடை நொடி பாவனைகளும், மிளிஸின் உடன் பதிலும் எல்லோரையும் அவர்களைக் கவனிக்க வைத்தன.

     அன்று வான சாஸ்திரத்தில் பரீட்சை செய்தார்கள். மிஸிஸ் வானத்து அற்புதங்களநயெல்லாம் வாத்தியாரிடம் கேட்ட மாதிரி வருணித்து வந்தாள். பாதிரியார் மக்ஸ்னாக்லி அவளை இடைமறித்து, "என்னமோ சூரியன் சந்திரன் எல்லாம் சுற்றி வருகிறது என்று சொல்லுகிறாயே, அது சிருஷ்டி ஆரம்பத்திலிருந்து அப்படியேதான் சுற்றி வருகிறதா?" என்று கேட்டார்.

     "ஆமாம்!" என்றாள் மிளிஸ்.

     "அப்படித்தானா?" என்றார் பாதிரியார் மறுபடியும்.

     "அதையே சொல்" என்று வெளியிலிருந்து ஜன்னல் வழியாகத் தலை நீட்டிக் கவனிக்கும் பெரியார்கள் அவளுக்கு ஊக்கமளித்தார்கள்.

     மக்ஸ்னாக்லி, பெருமூச்செறிந்துவிட்டு, உபாத்தியாயரைப் பரிதாபகரமாகப் பார்த்தார்.

     கிளைடி, 'பதில் சொல்லட்டுமா?' என்று கேட்பது போல, உபாத்தியாயரை நோக்கினாள். அவர் தலையை அசைத்தார்.

     மெதுவாக எழுந்து, "ஜோஷுவா தீர்க்கதரிசி உத்தரவிட்டபொழுது சூரியன் அவர் கட்டளைபடி நின்றது" என்றாள்.

     எல்லோரும் கரகோஷம் செய்தனர். மக்ஸ்னாக்லி வெற்றி புன்முறுவலுடன் சுற்றும் முற்றும் கவனித்தார். அன்று வானசாஸ்திரம் முறியடிக்கப்பட்டு விவிலிய நூலின் காலடியில் விழுந்து மண்ணைக் கவ்வியது. மிளிஸ் வான சாஸ்திரப் புத்தகத்தைப் பரபரவென்று புரட்டிப் பார்த்தாள். சட்டென்று மூடிவைத்தாள். "அது பொய், அதை நான் நம்ப மாட்டேன்!" என்று மேஜையை ஒரு குத்து குத்திக்கொண்டு சொன்னாள்.

*****

     மழைக் காலம் முடிவடையும் சமயம் ஸ்மித் பாக்கெட்டிற்கு ஒரு நாடகக் கம்பெனி வந்தது. நோட்டீசுகள் ஒட்டப்பட்டன.

     இந்த விஷயங்கள் எல்லாம் ஸ்மித் பாக்கெட்டிற்கு விதிவிலக்காகையால் மிளிஸை அதற்கு அழைத்துச் செல்லுவதாக உபாத்தியாயர் வாக்களித்திருந்தார். டிராமா எல்லாம் அப்படியப்படித்தான். ஆனால் இதுவரை ஒன்றுமே பார்த்திராத மிளிஸின் கற்பனை உள்ளம் அந்த மோசமான கோரத்தையும், தனது கனவு பொதிந்த உள்ளத்தின் துணையால், பிரமாதமாக எண்ணிவிட்டது. நாடக உலகத்தில் காணும் இளவரச இளவரசிகள் போல் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நினைத்து விட்டாள். டிராமாவில் சேரவேண்டும் என்ற ஆசை தோன்றிவிட்டது.

     நாடகக் கம்பெனி வந்து இரண்டு மூன்று நாள் கழித்து, வெள்ளிக்கிழமை மாலை மிளிஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்து விட்டாள் என்ற செய்தியை உபாத்தியாயர் ஸ்ரீமதி மார்பரின் குழந்தைகளில் ஒன்றினால் அறிந்து கொண்டார்.

     நேராகச் சாராயக் கடைக்குச் சென்றார். அங்கே நாடகக் கம்பெனியில் ராஜபார்ட் போட்டு நடித்த ஒருவன் மேஜையருகில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தான்.

     உபாத்தியாயர் நேராக அவனிடம் சென்று, "மிளிஸ் எங்கே?" என்றார்.

     அவன் சடக்கென்று திமிரான பதில் ஒன்று சொன்னான்.

     வாக்குவாதம் பலத்தது; அடிதடியில் இறங்கியது. நாடகக்காரன் பதில் அவருக்குக் கோப மூட்டியதால் ஒரு குத்து விட்டார். பின்னர் ஏக தடபுடல். இரண்டு துப்பாக்கி வெடி கேட்டது. அந்தச் சந்தடியில் யாரோ அவர் கையில் ஒரு கத்தியைத் திணித்தார்கள்.

     கூட்டம் விலகியதும், குண்டு தன் கையில் பாய்ந்து காயப்படுத்திவிட்டது என்று உணர்ந்தார். கையில் கத்தியை யார் கொடுத்தது என்று ஒன்றும் புரியவில்லை.

     பள்ளிக்கூட ஆசிரியர், மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டியவர்; இந்த வெறும் அற்பத்தனமான சண்டையில் இறங்குவதா? அவசரத்தில் புத்தியிழந்ததற்கு மனம் நொந்து தலை குனிந்த வண்ணம் வெளியேறி நடந்தார்.

     வழியிலே ஸ்ரீ. மார்பர், "மிளிஸ் வந்துவிட்டாள். உம்மை யாரோ கொல்லுகிறார்கள் என்றல்லவா உளறினாள்!" என்று சொல்லிக்கொண்டு வேறு பக்கமாக நடந்தார்.

     உபாத்தியாயர் நேராகப் பள்ளிக்கூடத்திற்குச் சென்றார். அங்கு மிளிஸ் நின்றுகொண்டிருந்தாள்.

     "மிளிஸ், எனக்கு வேலையிருக்கிறது. நீ போ!"

     மிளிஸ் அதற்குப் பதில் சொல்லவில்லை. "அவனைக் கொன்று விட்டீர்களா?" என்றாள்.

     "யாரை?"

     "நாடகக்காரனை! நான் தானே கையில் கத்தியைக் கொடுத்தேன். பின் எதற்கு?"

     "நீ ஏன் ஓடிப் போனாய்?" என்றார் ஆசிரியர்.

     "நீங்கள் பாதிரியாரிடம் இந்த ஊரை விட்டே போகப் போகிறதாகச் சொன்னீர்களே! நான் மட்டும் இங்கே ஏன் தனியாக இருக்கவேண்டும்?" என்றாள் மிளிஸ்.

     உபாத்தியாயர் வெகு நேரம் பேசாமல் இருந்தார். பின்பு அவளைப் பார்த்து, "மிளிஸ், நீயும் என்னுடன் வருகிறாயா?" என்றார்.

     "எப்பொழுது?"

     "இப்பொழுதே - ராத்திரிக்கு!" என்றார் ஆசிரியர்.

     மிளிஸ் ஒரே பாய்ச்சலில் அவரைக் கட்டிக்கொண்டாள்.

     இருவரும் சாலையில் இறங்கி அந்த நிசப்தமான இரவிலே நடந்தார்கள்.