உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
நட்சத்திர இளவரசி ஒரு ஆசிரியர் - தென் கடல் தீவுகள் "நம்மிடம் இருப்பதையெல்லாம் சாப்பிட்டு விடுவோம்" என்றான் டபூதி. அவனது சகோதரனான அய்ட்டோ சந்தேகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். "அப்படியானால் நமக்கு மிகுந்த பலம் உண்டாகிவிடும்; நம்மை எதிர்க்க ஒருவருக்கும் தைரியம் வராது; அல்லது அப்படித் தைரியமாக நம்மை எதிர்த்தாலும், அவர்களைத் தோற்கடித்துப் புகழும், ஏராளமான செல்வமும் பெறலாம்" என்றான் டபூதி. "அவர்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு நம்மை எதிர்த்தால் நமது கதி என்ன?" என்றான் அய்ட்டோ. "நம்மிடம் அதற்கேற்ற தைரியம் இருந்தால் அவர்களை வெல்வோம், வா! நாமிருவரும் இத்தீவு முழுவதையும் சுற்றி இருக்கும் தலைவர்களையும் தைரியசாலிகளையும் வென்று, மங்கரேவா முழுவதிலுமே மிகுந்த வீரர்கள் நாம்தான் என்று புகழ் சூடிக் கொள்வோம்" என்றான். அய்ட்டோ அரைமனத்துடன் சம்மதித்தான். பின்பு இருவரும் தம் தீவிலிருந்த தேங்காய்களையும், வேறு கனிகளையும் சேகரித்தனர். இரண்டு பன்றிகளைக் கொன்று அவற்றை அப்படியே முழுசாகச் சுடுகற்கள் மீது வைத்து வாட்டினார்கள். மாலையில் தங்கள் குடிசை முன்பு இருந்த புல்தரையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். அய்ட்டோ விற்கு வரவரப் பசி குறைய ஆரம்பித்தது. மெதுவாகச் சுவைத்துச் சாப்பிட்டுக் கடைசியில் உண்ண மறுத்து விட்டான். "இதென்ன? நீ இப்படிச் சாப்பிடாவிட்டால் நாம் சண்டையில் வெற்றி பெறுவது எப்படி?" என்றான் டபூதி. முதலில் கெஞ்சினான், பின் பயமுறுத்தினான். ஒன்றிலும் பயனில்லை. அய்ட்டோ வேண்டாமெனத் தலையை அசைத்தான். "அவசியமானால், நீ தனியாகவே வேண்டுமானாலும் புறப்பட்டுப் போ; ஆனால் இனி என்னால் சாப்பிட முடியாது" என்றுவிட்டான் அய்ட்டோ. மனத் திருப்தியில்லாது டபூதி தன் பங்கைச் சாப்பிட்டான்; பின்பு அய்ட்டோ மீதி வைத்ததையும் உண்டான். அன்றிரவு உறங்கிவிட்டு, விடியற்காலம், உதயசூரியன் முதுகில் எரிக்க, கடற்கரை மார்க்கமாக நடந்தார்கள். சிறிது நேரம் கழித்து ஒரு கிராமத்தையடைந்தார்கள். அதன் நடுவில் பிரவேசித்து, டபூதி ஊரிலுள்ள தைரியசாலிகளைப் போருக்கு அழைத்தான். அவ்வூர்த் தலைவன் அதற்குப் பதில் சவால் கூறினான். ஊரில் தைரியசாலிகள் என்று கருதப்படும் மூவர் தங்கள் ஈட்டிகளை எடுத்து வந்தனர். தலைவனும் அம்மூவரும், ஈட்டிகளைச் சரித்துப் பதி வைத்து சகோதரர் இருவர் மீதும் பாய்ந்து வந்தார்கள். டபூதி கோஷித்துக் கொண்டு அவர்கள் மீது பாய்ந்தான். அய்ட்டோ வும் பின்னால் பாய்ந்தான். சிறிது நேரத்தில் நான்கு வீரர்கள் பிணமாகச் சரிந்தனர். அய்ட்டோ , கிராமத்திலுள்ள மிகவும் வயோதிகப் பருவமடைந்த கிழவனிடம் சென்று, "நாங்கள் திரும்பி வரும்பொழுது அந்தத் தலைவனின் சொத்துக்களையும் மனைவி மக்களையும் கப்பமாக எடுத்துக் கொண்டு போவோம்" என்று சொன்னான். ***** இம்மாதிரி சகோதரர் இருவரும் கிராமம் கிராமமாகச் சென்று வெற்றி பெற்ற வண்ணம் பிரயாணம் செய்யலாயினர். அவர்கள் புகழ் தீவெங்கும் பரவியது. ஒருநாள், ஒரு கிராமத்தையடைந்தனர். அதற்கு ஒரு ஸ்திரீ தலைமை வகித்தாள். அவள் தீய பழக்கமுள்ளவள் என்பது பிரசித்தம். அவள் பெண்ணாகையால் இருவரும் போர் தொடுக்கவில்லை. அவள், அவர்கள் இருவரையும் வரவேற்று, உணவருந்திக் களைப்பாற்றிக் கொள்ளும்படி கேட்டாள். முதலில் டபூதி மறுத்தான். அவள் கட்டாயப்படுத்தி வேண்டிக் கொண்டதினால் ஒப்புக்கொண்டனர். சாப்பிட்டு முடிந்ததும் அவள் அவ்விருவரையும் இந்தப் போர்த் தொழிலை விட்டுத் தன்னுடன் சிறிது நாள் வசிக்கும்படி சொன்னாள். "கொஞ்ச காலம் தங்கலாமே" என்று அய்ட்டோ வும் அவள் அபிப்பிராயத்தை ஆமோதித்தான். குளிர் காய்வதற்காக எரிந்து கொண்டிருந்த தீயினுள் பார்த்துக் கொண்டிருந்த டபூதி, "முடியாது, முடியாது! இத்தீவிலேயே நாங்கள்தான் பலிஷ்டர்கள் என்று சொல்லப்படும்வரை ஓரிடத்திலும் தங்குவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறோம்" என்றான். மறுநாள் காலை இருவரும் புறப்பட்டுக் கடற்கரையை விட்டுச் செங்குத்தான மலைமீது ஏற ஆரம்பித்தார்கள். பகல் முழுவதும் உயரச் சென்றுகொண்டே யிருந்தனர். மாலையானதும் அய்ட்டோ விற்குக் களைத்துவிட்டது. "சிறிது சிரமபரிகாரம் செய்து கொள்ளுவோம்" என்று வேண்டினான். டபூதி தங்குவதற்கு மறுத்து, சகோதரனைப் பலமில்லாதவன் என்று கேலி செய்தான். இருவரும் சிரமப்பட்டுக்கொண்டு நடந்தார்கள். அய்ட்டோ சோர்ந்து விழுந்து விட்டான். டபூதிக்குக் கோபம் வந்துவிட்டது. அவன் இரவிற்குள் தூரத்தில் தெரியும் கணவாயை அடைந்து விட வேண்டும் என்று நினைத்திருந்தான். "இதுவரை பலமில்லாதவனையா அழைத்து வந்தேன்! இவ்வளவிற்கும் காரணம் நீ உன் பங்கைச் சாப்பிடாததுதான். உன்னால் தொடர்ந்து வர முடியாவிட்டால் நான் தனியாகவே போகப் போகிறேன்" என்று சொன்னான். அய்ட்டோ எழுந்திருக்க மறுத்துவிட்டான்; பாதையின் ஓரத்தில் களைத்துச் சாய்ந்தான். கோபாவேசனாக, டபூதி, மலைக் கணவாய் தெரியும் திசையில், சிரமத்தையும் பொருட்படுத்தாது நடந்து சென்றான். அதற்கப்புறம் டபூதி தனது சகோதரனை இவ்வுலகில் பார்க்கவேயில்லை. ஏனெனில், அன்றிரவை யாருடன் கழித்தார்களோ அந்த ஸ்திரீ இவர்களைத் தொடர்ந்துகொண்டே வந்திருந்தாள். டபூதியின் தலை மறைந்ததும் பாதையில் சோர்ந்து கிடக்கும் அய்ட்டோ வின் மார்பில் கத்தியைப் பாய்ச்சிவிட்டாள். டபூதி நெடுந்தூரம் அலைந்து கணவாய் வழியாக ஒரு அழகான பள்ளத்தாக்கை அடைந்தான். அங்கு கண்ணில் பட்டவிடமெல்லாம் வனத்தின் எழில் கொழித்தது. முல்லைக் கொடிகள் படர்ந்த ஒரு பாதை அவனைக் கடற்கரை அருகிலுள்ள கிராமத்திற்குக் கொண்டு விட்டது. அந்தப் பாதை வழியாகச் சென்று, ஊரின் மத்தியிலுள்ள பசும்புல் செழித்து வளர்ந்த மைதானத்தை அடைந்தான். சுற்றிலும் மரங்களின் அடியில் குடிசைகள். கிராமவாசிகள், இலட்சிய உலகத்தில் வசிப்பவர்கள் போலச் சிரித்து உல்லாசமாக விளையாடியும் தத்தம் வேலையைச் செய்தும் காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் மைதானத்தில் புஷ்பச் செண்டுகளை வீசி எறிந்து நடனங்கள் பயின்று கொண்டு தம்மை மறந்திருந்தனர். சற்றுத் தூரத்திலேயே பாறைகளில் மோதி உடையும் சமுத்திர அலைகளில் ஹூங்கார சப்தம் கேட்டது. அங்கிருந்து செம்படவர்கள், அப்பொழுதுதான் பிடித்த மீன்களை அவற்றின் அடிவயிறு சூரிய ஒளியைப் பிரதிபலிக்கத் தூக்கிக் கொண்டு சிரித்துப் பேசிய வண்ணம், கிராமத்தின் பக்கமாக வந்து கொண்டிருந்தனர். மீன்கள்தான் என்னென்ன வர்ணங்கள்! அவை காட்டுப் புஷ்பங்களின் சோபையைத் தோற்கடித்தன. டபூதி மைதானத்தின் நடு மத்தியில் சென்று நின்று, உரத்த குரலில் திறமை உள்ளவர்களைத் தன்னிடம் சண்டைக்கு வந்து பார்க்கும்படி கொக்கரித்தான். உடனே, இருந்த சிரிப்பும் பேச்சும் சட்டென்று நின்றன. எல்லோரும் ஆச்சரியப்பட்டு நின்றனர். காதில் விழுந்ததை நம்பாதவர் போல் அவனைப் பார்த்தனர். டபூதி மறுபடியும் அறைகூவினான். கடைசியாக அவ்வூர்த் தலைவன், அவன் பெரிய பராக்கிரமசாலி என்று பெயர் பெற்றவன் - டபூதியிடம் வந்து, "இங்கு பல வருஷங்கள் வரை யாரும் சண்டை போட்டுக் கொள்ளவில்லை என்றாலும், உன்னுடன் போர் செய்கிறேன் வா!" என்று கூறினான். இருவரும் புல் தரையில் நின்று ஒருவரையொருவர் தாக்கிப் போர் புரிந்தார்கள். நெடுநேரம் வரை இருவரும் சளைக்காமல் தாக்கிக் கொண்டார்கள். ஆனால் வர வரத் தலைவனுக்குப் பலம் குறைந்து கொண்டே வந்தது. கடைசியாக டபூதி அவன் நெஞ்சில் ஈட்டியைச் சொருகி அவனைத் தரையில் பிணமாகக் கிடத்தி விட்டான். உடனே கிராமம் முழுமையும் அழுகையும் கூக்குரலும் ஏகமாக எழுந்தது. ஏனெனில் ஜனங்கள் யாவரும் அத்தலைவனை நேசித்தார்கள். டபூதி இறந்தவன் கையில் கிடந்த ஈட்டியை எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்குள் சென்றான். அங்கு இறந்தவனின் மனைவி மக்கள் நடு நடுங்கி மூலையில் ஒண்டிக் கிடந்தார்கள். தலைவாசலண்டையிலேயே சென்றதும் அவன் நின்று விட்டான். தன் முன்னிலையில் இதுவரை பார்த்தேயிராத ஒரு ரூபவதியைக் கண்டான். அவள், மாண்ட அரசனின் புத்திரிகளில் ஒருத்தி. அவன் அந்த அரசன் வீட்டில், இளவரசியின் முன்பு உட்கார்ந்திருந்தான். "இவ்வளவு அழகாக, குற்றமே இல்லாத ஒன்று உலகத்திலே பிறக்க முடியுமா?" என்று ஆச்சரியப்பட்டான். அவள், அவன் முன்பு ஒரு காலை மற்றொரு கால் மீது போட்டு உட்கார்ந்து கொண்டு, கட்டை விரலால் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தாள். கறுத்தடர்ந்த கூந்தல், ஆசையை அடிமைப்படுத்தும் அதரங்கள், உலகத்தின் கற்பனையை அடக்கும் கண்கள், இவற்றைப் பார்த்த வண்ணமே இருந்துவிட்டான் டபூதி. வீட்டிலிருந்த யாவரும் வேலை காரணமாகச் சென்று விட்டார்கள். இருவரும் எதிரெதிரே உட்கார்ந்த வண்ணம் நெடுநேரம் வரை பேசாதிருந்தனர். கடைசியாக டபூதி மௌனத்தைக் கலைத்து, "பேதியா, உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்றான். அவள் கண்களில் சிறிது பயம் தோன்றியது போல் இருந்தது. ஆனால், கோபமாக, "என் தகப்பனாரைக் கொன்றதுமல்லாது, என்னையும் வலிந்து கொள்ளப் பார்க்கிறாயா?" என்றாள். பராக்கிரமசாலியான டபூதி சிறிது வெட்கினான். அவளைப் பார்க்காது தலையை வேறுபுறம் திருப்பிக் கொண்டான். "தோற்றவனது மகளை அடிமையாகவோ அல்லது மனைவியாகவோ எடுத்துக் கொள்ள எனக்கு உரிமையுண்டு. இப்பொழுது என்னைத் தூண்டுவது அந்த முரட்டு ஆசையன்று. ஒரு குழந்தையானது சூரியாஸ்தமனத்தை அடிக்கடி பார்த்திருந்தாலும், திடீரென்று ஒரு நாள் தான் அதன் அழகு அதற்குத் தெரிகிறது. அப்பொழுது அழகில் சொக்கிய அக்குழந்தைக்கு மூச்சுத் திணறுகிறது. அதன் மனத்தில் பெரிய பெரிய சிந்தனைகள், கற்பனைகள் வந்து குவிகின்றன. உன்னை அன்றைய தினம் முதல்முதலாகப் பார்த்த பொழுது, எனக்கு அப்படியிருந்தது. எனது பாவ ஜன்மம் உன் தந்தையைக் கொன்று, பாவமூட்டையை மும்மடங்கு அதிகரித்துக் கொண்டது. அதற்கு மாற்று இருந்தால் உடனே இயற்றுவேன். இந்த உலகத்தில் அது ஏது? பேதியா! நான் இன்று முதல் வேறு மனிதன். என்னைக் கலியாணம் செய்து கொள்" என்றான். இளவரசி, மெதுவாகத் தலையை உயர்த்தி, "உனக்காக நான் பரிதாபப்படலாம். இப்பொழுது சொன்னது உண்மையானால், நீ இவ்விடத்தைவிட்டுப் போய்விடுவாய்" என்றாள். டபூதி தலையை அசைத்தான். "அதைத்தான் நான் செய்யவே மாட்டேன். உன்னைப் பார்த்த பிறகு அன்பின் அழகையும் சக்தியையும் உணர்ந்து கொண்டேன். உன்னை விடமாட்டேன். உன்னை என் மனைவியாக்கிக் கொள்ளுவேன்." "அது உன்னால் முடியாது" என்றாள் பேதியா. டபூதி முன்னுக்குச் சரிந்து, "பேதியா! தயவு செய்து இரங்கு. புத்திசாலித்தனமாக நடந்து கொள். எனக்கு உன்மேல் அன்பு இருக்கிறது; உனக்கும் என் மேல் அன்பு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் உன்னை விட்டுச் சிறிதும் பிரியமாட்டேன்" என்றான். "இந்த ஜன்மத்தில் நான் உன்னைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டேன். இது நிச்சயம். என் பெயருக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?" "தெரியாது. ஆனால், ஒன்று தெரியும். பேதியா என்றால் இசையில் ஒரு ஸ்தானம்; அதன் அர்த்தம் நீதான்." இளவரசி, புன்சிரிப்புடன், "எங்கள் பாஷையில் நட்சத்திரம் என்று அர்த்தம். என்னை 'நட்சத்திர இளவரசி' என்று கூப்பிடுகிறார்கள்." "சரியான பெயர்தான் வைத்திருக்கிறார்கள். உனது கண்கள் நட்சத்திரம் போலப் பிரகாசிக்கின்றன." "காரணம் அதுவன்று. ஒரு கதை சொல்லுகிறேன் கேள்: பல காலமாக என் தகப்பனார் இந்த ஜனங்களுக்குத் தலைவராக இருந்தார். எல்லோரும் அவரை நேசித்தார்கள். அவர் ஆட்சியில் அமைதி இருந்தது. சண்டை வந்தபொழுது தைரியமாகப் படையின் முன் அணியில் சென்றார். ஆனால் எங்களுக்கு மலை அரண் இருப்பதால் சண்டை ஏற்படுவதே இல்லை. ஆனால் அவருக்கு ஒரு குறை இருந்தது. தன் பெயரை வகிக்க ஒரு குழந்தையும் இல்லையே என்று வெகுவாக வருந்தினார். மாலை நேரங்களில் உட்கார்ந்து குனிந்த வண்ணம் துயரத்தில் ஆழ்ந்து விடுவார். அவரைத் தேற்ற ஒருவராலும் முடியாது. ஒரு நாளிரவு, இதே அறையில் உட்கார்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். வானத்திலிருந்து தங்க மயமான ஒரு நட்சத்திரம் கீழ் நோக்கி விழுந்து கொண்டிருந்தது. அது வீட்டை நெருங்குவது போல் இருந்தது. கிட்ட வரவரப் பார்க்க முடியாதபடி கண் கூசியது. கண்ணை மூடினார். திறந்து பார்த்த பொழுது நட்சத்திரம் ஒன்றும் காணப்படவில்லை; வானம் பழையபடி எப்பொழுதும் போல இருந்தது; இது என்ன புதுமை என்று எண்ணியிருக்கும்போது, அடுத்த அறையில் ஒரு குழந்தையின் அழுகை கேட்டது. அவர் உள்ளே ஓடினார். என் தாயாரின் பக்கம் ஒரு சிறு பெண் குழந்தை இருந்தது. அதற்குப் பேதியா என்று பெயரிட்டார்கள். பேதியா என்றால் ஒரு நட்சத்திரம்." டபூதி அவள் சொன்ன கதையின் அர்த்தத்தைப் பற்றி யோசனை செய்து கொண்டே தலையைக் குனிந்திருந்தான். இளவரசி, மெதுவாக எழுந்து, ஜன்னலண்டை நின்று வானத்தைப் பார்த்துக்கொண்டு நின்றாள். மெதுவாக டபூதி தலையை நிமிர்த்திப் பார்க்கும்பொழுது அவள் நின்ற இடத்தைப் பார்த்தான். பேதியாவைக் காணோம். வானத்தில் தங்கமயமான நட்சத்திரந்தான் தெரிந்தது. அதை அவன் அதற்குமுன் பார்த்ததே இல்லை. ***** அவன் முன்னால் பாதை வளைந்து வளைந்து புதர்களுக்குள் மறைந்து சென்று பாறைகளை அடைந்தது. டபூதி பாறையில் சாய்ந்து தூரத்தில் தெரியும் சமுத்திரத்தைப் பார்த்தான். அவன் உள்ளத்திலும் உடலிலும் சோர்வு தட்டியது. ஏழு வருஷங்களாக இளவரசியைத் தேடி அலைந்தான். ஏழு வருஷங்களின் சம்பவங்களும் கண்முன் படம் போல் விரிந்து ஓடின. தீவு முழுவதும் தேடியாகிவிட்டது. அந்தத் தங்க மயமான நட்சத்திரம் தான் அவன் நினைவில் இருந்தது. அது தன்னை அவளிடம் சேர்ப்பிக்கும் என்று நம்பினான். அந்த நட்சத்திரம் தன்னை அவளுடன் இறுகப் பிணிப்பதாக நினைத்தான். ஏழு வருஷங்களின் அலைச்சல், அவசியம் அவன் பாவத்தைப் போக்கியிருக்க வேண்டும். அவள் நினைவு வரவர வளர்ந்து பக்திக் காதலாக மாறியது. இராத்திரி இராத்திரியாக நட்சத்திரம் வழிகாட்ட, தீவு தீவாக அலைந்தான். என்ன பயங்கர மனித ஜாதிகள், தலையைக் கொய்து திரியும் தலை வேட்டையாடிகள், தீயில் நடக்கும் மாந்திரீகர்கள், ஐமியோத் தீவில் பாறைகளில் வசிக்கும் ஓணான் மனிதர்கள், மனிதச் சிலைகள் பிரமாண்டமாக நிற்கும் தீவுகள்! எப்பொழுதும் நட்சத்திரம் அகலவே, எட்டவே இருந்தது. பல தடவை மரணத்தைச் சந்தித்தான். தங்கள் தெய்வத்திற்குப் பலி கொடுப்பதற்காக இவனை உயிருடன் பிடிக்கப் பதிவைத்துத் தாக்கிய போர்வீரர்களுடன் போராடி, ஒவ்வொரு அடியையும் திறமையால் தப்பி, படகின் பக்கம் வந்ததும், சுறாமீன் பற்களை அவர்கள் முன்பு வீசித் தப்பித்துக் கொண்டதும் நினைவுக்கு வந்தன. அடுத்த தடவை ரெஹுரெஹு தீவின் தலைவனுடைய மகள் அவனைத் தன்னுடன் இருக்கும்படி மன்றாடியதும், அவன் ஏறக்குறைய இசைந்ததும், அவர்கள் இருவரும் கடற்கரையில் உலாவும் பொழுது நட்சத்திர மீன் அவன் கண்ணில் பட்டதும், அன்றிரவே தோணியில் யாத்திரையை ஆரம்பித்ததும் ஞாபகத்திற்கு வந்தன. உயரே சிகரத்தில் ஏறிக்கொண்டே போனால் நட்சத்திரத்தை அடைய முடியும் என்று காலா காலத்தில் ஒரு யோசனை தோன்றியது. தென் சமுத்திரத் தீவுகளிலேயே மிகவும் உயர்ந்த மலையை ஏறியாகிவிட்டது. இங்கும், அவனது ஆசைக்கும் அவனுக்கும் பழைய தூரமே இருந்தது. பெருமூச்செறிந்து மலையின் உச்சியைப் பார்த்து நடந்தான். வழியும் மெதுவாக உயர்ந்து சென்று செடிகொடியடங்கிய புதருக்குள் மறைந்தது. கை அரிவாளால் வழி செய்து கொண்டு புதர் வழியாக நடந்தான். சில சமயம் மக்கிப்போன மரத்துண்டுகள் சடக்கென்று ஒடிபட்டுக் கீழே விழும். புதரும் தாண்டியாய் விட்டது. எதிரே செங்குத்தான பாறை உயர்ந்து நிமிர்ந்தது. சளைக்காமல் ஏறினான். சூரிய உஷ்ணம் பொசுக்கியது. நாவரண்டது. கடைசியாக பாறையின் உச்சியை அடைந்தான். தென் உலகத்தின் முகட்டின் மேல் நின்றான். அவன் காலடியில், பாதாள லோகம் போல், தீவு கிடந்தது. தூரத்திலே கடலும் வானும் கலந்தன. சூரியன் பொன்மயமான துகிலுடுத்திச் சமுத்திரத்தில் மறைந்தான். உட்கார்ந்து மூச்சுவாங்கினான் டபூதி. அந்தி மாலை இரவாக மயங்கியது. உயரத்திலே, உச்சிக்கு மேல் தங்கமயமான நட்சத்திரம் பிரகாசித்தது - முன்போல்தான் - பழைய தூரந்தான். தலையைக் கைகளில் தாழ்த்தி விம்மி விம்மியழுதான். இரவு முழுதும் பாறையிடுக்கில் ஏமாற்றத்தால் விறைத்துக் கிடந்தான். மறுநாள் சிகரத்திலிருந்து இறங்கினான். இரண்டு நாட்கள் கழித்துக் கடற்கரையை அடைந்தான். அவன் கடற்கரையை அடைந்த பொழுது இருட்டி விட்டது. ஜலத்தின் ஓரத்தில் இருந்த பாறை மீது ஏறி, சந்திரனொளியில் மின்னும் கடல் அலைகளைக் கவனித்தான். நேராகக் குனிந்து தண்ணீரடியில் பார்க்கும்பொழுது, ஜலத்தினடியில் நட்சத்திரம் பிரகாசிப்பதைக் கண்டான். உள்ளத்தில் புது எண்ணம் உதயமாயிற்று. எழுந்தான். மூச்செடுத்து அடக்கி, நட்சத்திரத்தை நோக்கிக் கடலுக்குள் தலை குப்புறப் பாய்ந்தான். சொல்லமுடியாத ஆழம், பவளக் கொடிகளும், இருண்ட ஜல மட்டத்தின் கீழுள்ள குகைகளும் சந்திர ஒளியைப் பிரதிபலித்தன. பிரகாசமான மீன்கள் ஒளித் துண்டங்கள் போல் வளைந்து மின்னி மறைந்தன. ஆழக் குகைக்குள் சென்றான். எங்கும் பவளக் கொடிகள். பிரகாசம் அதிகமாவது போல் தெரிந்தது. பிரம்மாண்டமான மீன்கள் அவன்மீது உராய்ந்து சென்றன. பவளக்கொடிகள் வளைந்து உருமாறி மங்கி வளர்ந்தன. தீ ஒளி வரவரப் பிரகாசமடைந்தது. வெறும் புள்ளியாக இருந்த நட்சத்திரம் பிரம்மாண்டமான ஜோதியாக மாறியது. பூமியை விட, சூரியனை விட, இப்பிரபஞ்சத்தை விட, பிரம்மாண்டமாக வளர்ந்தது. பின் ஒளி மாறியது. அதன் மத்தியிலே பேதியா நட்சத்திர இளவரசி இரு கைகளையும் விரித்து நின்று இவனை வரவேற்றாள். |