ஓம் சாந்தி! சாந்தி!

எலியா எஹ்ரன் பர்க்

     (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன்னைப் பலிகொடுக்கத் தயாரானான். அதாவது தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகத் தன்னையே பலிகொடுக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்திக் கொண்டான்.

     மனித வம்சத்தின் உருப்படியான காரியாதிகள் எனக் கொள்ளப்படுபவைகளில் ரத்தக் கறை படியாத சித்தாந்தமில்லை; கற்பனையில்லை; இலட்சியமும் இல்லை. நமது கவிதாசாகரத்தின் செம்பாதியில் ரத்த ஆறுகளே ஓடுகின்றன. கொலைத் தொழில், கலையின் நுட்பத்தையும் நயத்தையும், ஒருங்கே திரை கொள்ளுகிறது. கம்ப காவியத்தில் பாதிக்கு மேல் நாங்கள் ஓட்டிச் செல்லும் கற்பனைப் படகு, ரத்தத்தில் தான் மிதந்து செல்லுகிறது. 'கால் தரை தேய நின்று' நம்மைக் காப்பாற்ற வந்த தெய்வங்களின் கை நிறைய ரத்தக்கறை பூசித் திருப்பியனுப்பாமல் நம் மனம் திருப்தி கொள்ள மாட்டேன் என்கிறது.

     மனித வம்சம் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தன்னையே பலிகொள்ளும் இம்முயற்சி ஒரு பெரும் புதிர்; ஆனால் அசட்டுத்தனமான புதிர்.

     இதை எலியா எஹ்ரன்பர்க் ஒரு கதையாக ஜோடித்திருக்கிறார். முதலாவது உலக மகாயுத்தத்தைச் சூழ்நிலையாகக் கொண்டு கதை எழுதப்பட்டிருக்கிறது.

     கதையிலே, சொல்லும் முறைதான் மகா அற்புதமாக அமைந்திருக்கிறது. மந்திரோச்சாடனம் போல... திரும்பத் திரும்ப... திரும்பத் திரும்ப... திரும்பத் திரும்ப... சொன்னதையே சொன்னதையே சொன்னதையே சொல்லிக்கொண்டு போகும் முறை வாசகன் மனதில் பூதாகாரமான கற்பனையை எழுப்புகிறது. உருண்டு தன் ஆகிருதியைப் பெருக்கிக் கொண்டுவந்து, கடைசியில் சப்தகோளங்களும் விண்டு விழும்படி பேரிரைச்சலுடன் தலை குப்புறப் பாதாளத்தில் விழுவது போல விழுந்தபின் நிசப்தம் கூடுவது போல அமைந்திருக்கிறது, கதையின் ஜோரான லேசான மகா அற்புதமான வார்ப்பு... மொழி பெயர்ப்பாளர்)

     அதோ கண்ணுக்குத் தெரிகிறதே, அந்த நட்சத்திரங்களிலிருந்து ஒளி ரேகைகள் வருவதற்கு எத்தனை ஆயிரம் வருஷங்கள் செல்லுகின்றன. அதன் யாத்திரையுடன் மனித வாழ்வை ஒப்பிட்டால் வெகு சுருக்கம். குழந்தைப் பருவம், விளையாட்டு, கலியாணம், உழைப்பு, வியாதி, மரணம் - எல்லா விவகாரங்களும் மிகச் சுருக்கம் தான். சக்தி வாய்ந்த தூரதிருஷ்டிக் கண்ணாடிகள், கணித சாஸ்திரத்தின் நுணுக்க வாய்ப்பாடுகள் எல்லாம் நம் வசம் இருக்கின்றன. ஆனால் நம்முடைய இந்தச் சுருக்க ஜீவியத்தின் கனத்தை நிறுக்கும் தராசை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? ஒரு தட்டில் அந்த ஓசைப்படாத ஒளி ரேகைகள், மறு தட்டில் வந்து வந்து மடிந்து கொண்டிருக்கும் மனித வித்துக்கள் - வருகிறது, பழுக்கிறது, கருகிவிடுகிறது. இப்படி அளந்து பார்க்கத் தராசு இருக்கிறதா?

     அப்பொழுது போர் நடந்தது.

     இனிமேல், காலா காலத்தில் மனிதர்கள் அதற்கு 'மகா' என்றோ 'சின்ன' என்றோ, அடைமொழி சேர்த்து அடையாளம் போட்டு வைப்பார்கள். அந்தக் காலத்திலிருந்தவர்களுக்கு அது வெறும் யுத்தம்தான். பிளேக்குக்கு வேறு பெயர் உண்டா? மரணத்திற்கு வேறு பெயர் உண்டா? அதே மாதிரிதான்.

     ஒரு குறிப்பிட்ட சின்னப் புள்ளி போன்ற இடத்தில் சண்டை நடந்தது. இப்பொழுது வெறும் கல்லும் கட்டியுமாகக் கிடக்கிறதே, அதற்கு ஒரு காலத்தில் இட்பிரஸ் என்று பெயர். அதன் அருகில் அந்த வட்டாரத்தைச் சேராத மனிதர்கள் தூங்கினார்கள், எழுந்தார்கள், நடமாடினார்கள், சாப்பிட்டார்கள், செத்துப் போனார்கள். திடீரென்று கை காட்டி மரம் சரிந்த மாதிரி, கைகளை விரியப் போட்டு விழுந்து செத்துப் போனார்கள். அவர்களுக்குப் பிரெஞ்சுச் சேனையில் 118-வது பட்டாளம் என்று பெயர். இந்தப் பட்டாளம் தெற்கே பிராவன்ஸ் மாகாணத்தில் திரட்டப்பட்டது. அங்கே எல்லோரும் குடியானவர்கள். திராக்ஷைக்கொடித் தோட்டம் போடுகிறவர்கள், மேய்ப்பவர்கள். ஆறுமாதங்களாக அந்தச் சுருட்டைத்தலை மனிதர்கள் களிமண் தரையில் வெட்டப்பட்ட இந்தக் குழிகளில் இருந்து சாப்பிட்டார்கள், தூங்கினார்கள், துப்பாக்கிக்கொண்டு சுட்டார்கள், ஒருவர் ஒருவராகக் கையை விரித்துப் போட்டு விழுந்து மடிந்தார்கள். ராணுவத் தலைமைக் காரியாலயத்தில் இவர்கள் செய்யும் இந்த வேலை 'கரிசல் வாய்க்கால் அருகில் 118 - வது பட்டாளம் இடங்களைப் பாதுகாக்கின்றது' என்று பதிவு செய்யப்பட்டது.

     அவர்களுக்கு எதிராக 500 தப்படி தூரத்தில் வேறு மனிதர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களும் துப்பாக்கி கொண்டு சுட்டார்கள். அவர்கள் தலை மயிர் சணல் மாதிரி பழுப்பு வர்ணம் கொண்டது; கண்களும் சாம்பல் பூத்த மாதிரி இருக்கும். ஆகிருதியில் திராட்சை சாகுபடிக்காரர்களைவிடத் தடியர்கள். பழக்க லாவகத்தில் கிராமியர்கள்; அவர்கள் பொமெரியானாவில் கோதுமை சாகுபடி செய்கிறவர்கள். வேறு ஒரு ராணுவக் காரியாலயத்திற்கு அவர்கள் பிரஷ்ய ராணுவத்தின் 87-வது ரிசர்வ் பட்டாளம் எனத்தான் தெரியும்.

     இவ்விருவரும் பகைவர்கள். இவ்விரு பகைவர்களுக்கும் இடையில் ஒரு நிலம். திராட்சை சாகுபடி செய்கிறவர்களும் கோதுமைப் பயிர் இடுகிறவர்களும் அவை 'மனித சூன்யப் பிரதேசம்' என்று குறிப்பிட்டார்கள்.

     இந்த நிலம் ஜெர்மன் ஏகாதிபத்தியத்திற்கோ அல்லது பிரஞ்சுக் குடியாட்சிக்கோ அல்லது பெல்ஜிய முடியரசுக்கோ சொந்தமானதல்ல. வெடி குண்டுகளால் குண்டும் குழியுமாகத் தோண்டப்பட்டு நாலா பக்கமும் எலிவளை மாதிரி வெட்டி, நிர்மானுஷ்யமாகக் கிடக்கும் டிரஞ்சுகள் கொண்ட இந்த மண், மனித எலும்புகள், துருப்பிடித்த இரும்பு இவைகளால் உரமிடப்பட்டுக் கிடந்தது. இந்த நிலம் செத்துக் கிடந்தது. இது ஒருவருக்கும் சொந்தமில்லை. இந்த மண்ணில் ஒரு குத்துப் புல்கூட முளைக்கவில்லை. ஜூலை மத்தியானங்களில் வெடி மருந்து 'கரிந்த' நாற்றமும் ரத்த நெடியும்தான் வீசும். மனித வர்க்கம் கற்பகத்தருவுக்குக்கூட, இந்த அழுகி நாறும் மண்ணுக்குப் போரிடுவதுபோல, போரிட்டதில்லை. தினசரி பிரஞ்சுநிலத்திலிருந்தும் ஜெர்மன் நிலத்திலிருந்தும் மனிதர்கள் ஊர்ந்து வந்து பிசுபிசுவென்று ஒட்டும் தங்களுடைய ரத்தத்தை இந்த மஞ்சள் களிமண்ணுடன் கலப்பார்கள்.

     பிரான்ஸ் சுதந்திரத்திற்காகப் போர் புரிவதாகச் சிலர் சொல்லிக் கொண்டார்கள்; நிலக்கரியும் இரும்பும் பெறப் போர் புரிகிறது என்கிறார்கள் சிலர். ஆனால் பியரி துப்பாய் என்ற 118-வது பட்டாளத்துச் சிப்பாய் யுத்தம் என்பதற்காகத்தான் சண்டை போட்டான். யுத்தத்திற்கு முன் திராட்சைத் தோட்டம்தான் அவன் வாழ்வாக இருந்தது. மழை அமோகமாகப் பெய்தால், திராட்சைக் கொடிகளில் நோய் விழுந்தால், பியரிக்கு முகம் கருக்கும்; சுள்ளியைப் பொறுக்கித் தன் நாயை அடிப்பான், - கண்டபடி தின்று தொலைக்கிறதென்று. பயிர் நல்லபடி கண்டால் உடம்பில் வெளுத்த சட்டைதான். பக்கத்துப் பட்டணத்துக்குப் போவான். அங்குள்ள 'ராஜாக்கள் ஹோட்டல்' என்ற படாடோ ப விடுதியில் சில்லரையை வீசி, பாட்டுக் கேட்பான். வாயைப் பிளந்துகொண்டு, ஒரே ஒரு வருஷம் வியாதிகண்டு படுத்துக்கொண்டான். காதில் கட்டி புறப்பட்டது. அது ரொம்ப வலித்தது. சின்னப் பையனாக இருக்கும்பொழுது ஆட்டுக் குட்டிகள் மீது குதிரை - சவாரி செய்வான். அவன் மனைவியின் பெயர் ஜீனி. அவள் அங்கும் இங்கும் நடமாடுகையில் அவள் முதுகைத் தட்டிக் கொடுப்பதில் அவனுக்கு ஒரு குஷி. இதுதான் பியரி துப்பாய் வாழ்க்கை, பிரான்ஸ் சுதந்திரத்திற்கும் நிலக்கரிக்கும் போர் தொடுத்தபொழுது 118-வது பட்டாளத்தில் சேர்ந்தான்.

     பியரி துப்பாய்க்கு ஐந்நூறு தப்படி தூரத்தில் பீட்டர் தீயபு இருந்தான். அவன் வாழ்வு இவன் வாழ்வு மாதிரியல்ல. எங்காவது உருளைக்கிழங்கு திராட்சைப் பழம் மாதிரி இருக்குமா? ஆனால் உலகத்தின் பழவர்க்கங்களும் தேசங்களும் மனித வாழ்வும் எப்படி அடிப்படையில் ஒரே மாதிரியோ அப்படித்தான். பீட்டர் திராட்சைப் பழமே தின்றதில்லை. பணக்காரர்களுக்கு என்று தனியாகக் கடைகள் இருக்கிறதல்லவா, அதில் திராட்சைப் பழத்தைக் கண்ணால் பார்த்திருக்கிறான். அவனுக்குப் பாட்டுப் பிடிக்காது. சும்மா இருக்கும் நேரங்களில் கிட்டி விளையாடுவான். வெயில் ரொம்ப அடித்தால், மழை தவறினால் நிலம் வரண்டு போகும், பசுவின் மடுவில் பால் வற்றிவிடும், - அதனால் அவன் முகம் சுளிக்கும். அவனுக்குக் காதுக்குள் கட்டி புறப்படவில்லை. ஒரே ஒரு வருஷம் அவனுக்கு மார்பில் சளி கட்டிக்கொள்ள ஒருவாரம் காய்ச்சலாகப் படுக்கையில் படுத்தான். சிறு பையனாக இருக்கும் பொழுது தகப்பனார் வளர்த்த வேட்டை நாயுடன் விளையாடுவான். அவன் மனைவி ஜோஹான்னா பால் மாதிரி வெளுப்பு. உருளைக்கிழங்கு மாவு மூட்டை மாதிரி கொழு கொழு என்றிருப்பாள். அப்போது, - யாரோ சிலர் ஜெர்மனி சுதந்திரத்திற்காகச் சண்டை போடுகிறது என்றார்கள்; வேறு சிலர் நிலக்கரி, இரும்புக்காகச் சண்டை போடுகிறது என்றார்கள். பீட்டர் தீயபு 87 - வது ரிசர்வுப் பட்டாளத்தில் சேர்ந்தான்.

     மனித சூன்யப் பிரதேசத்தில் சுதந்திரமும் கிடையாது, நிலக்கரியும் கிடையாது. அங்கே மனித எலும்புகளும் வளைந்து நொறுங்கிய கம்பிகளும் தவிர வேறு ஒன்றும் கிடையாது. ஆனால் அங்குள்ள அந்த மனிதர்கள் எப்படியும் அதை ஆக்கிரமித்துக்கொள்ள விரும்பினார்கள். 1916 ஏப்ரல் 25-ந் தேதி லெட்டினண்ட், பியரி துப்பாயைத் தன்னிடம் அழைத்துக் 'காட்டுப் பூனை வழி' என்ற நடமாட்டம் ஒழிந்த டிரஞ்ச் வழியாக ஜெர்மன் அணிவகுப்பு வரை சென்று எதிரி நிலைமைகளை அறிந்து வரவேண்டும் என்ற உத்தரவு இட்டார்.

     பியரி துப்பாய்க்கு வயது இருபத்தெட்டு. அதொன்றும் பிரமாதமல்ல. அந்த நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளிரேகைகள் இப்படி எத்தனையோ நூற்றுக்கணக்கான வயது வரை வந்துகொண்டே இருக்க வில்லையா? உத்திரவைக் கேட்டவுடன் திராட்சைத் தோட்டத்தைப் பாழ்படுத்திய நோயைப் பற்றி நினைத்தான்; மனிதனுக்கு வரக்கூடிய கஷ்டங்கள் எல்லாவற்றையும் பற்றி நினைத்தான்; இப்பொழுது யுத்தமாகையினாலே ஒவ்வொருவனும் தன் வயதை வருஷம் வருஷமாகக் கணக்கு வைத்து எண்ணாமல் நாள்நாளாகக் கணக்குப் பண்ண வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். இராத்திரி இரண்டு மணிக்குத்தான் போக வேண்டும். போவதற்கு இன்னும் மூன்று மணி நேரம் பதினைந்து நிமிஷம் கிடக்கிறது. ஒரு பொத்தானைத் தைத்துவிட்டு ஜீனிக்குக் கடுதாசி எழுத நேரமிருந்தது. 'கொடிகளுக்குக் கந்தகப்பொடி தூவ மறந்து போக வேண்டாம்' என்று எழுதினான். சுடச் சுடக் கடுங்காப்பியை ரொம்ப ரசித்துக் குடித்தான்.

     இராத்திரி இரண்டு மணிக்கு மனித சூன்யப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கு வழுக்கும் களிமண் பாதையில் ஊர்ந்து சென்றான்; அந்தப் பாதைக்குக் காட்டுப் பூனை வழியென்று பெயர். வழி ரொம்பக் கடுமை. ஒவ்வொரு அடியிலும் செத்த மனிதர் எலும்பும் முள் கம்பியும் தடுக்கிவிட்டது. அதனால் நடக்கத் தாமதப்பட்டது. கடைசியாகப் பாதையின் அந்தத்திற்கு வந்தான். இரண்டு பக்கமும் அது வேறு டிரஞ்சுகளுக்குக் கிளையாகப் பிரிந்தது. எந்த வழியாகப் போகலாம் என்று யோசித்தான். இரண்டும் பகைவர்கள் இடத்திற்கே, - மரணத்திற்குத்தான் - சென்றன. பியரி உட்கார்ந்து களைப்பாறத் தீர்மானித்தான்; ஒரு சுங்கானை - பட்டாளத்துச் சிப்பாயின் மலிவான சுங்கானை எடுத்துப் பற்றவைத்தான். அதன் மீது களிமண் ஒட்டிக் கொண்டிருந்தது; எங்கும் ரொம்ப அமைதியாக இருந்தது; சாதாரணமாகப் பகலில் இருவரும் பரிமாறிக்கொள்ளும் துப்பாக்கிச் சத்தம் பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கும். இராத்திரியிலே, சத்தமில்லாமல் ஒருவரையொருவர் கொன்று பாம்புபோல ஊர்ந்து சென்று குரோதம் மிகுந்த கண்ணிகளை வைக்கும்படி ஏவி விடுவார்கள்.

     பியரி 'பம் பம்' என்று புகைபிடித்து நட்சத்திரம் நிறைந்த வானத்தை அண்ணாந்து பார்த்தான். எட்ட நின்று பிரகாசிக்கும் அந்த உலகங்களைத் தன்னுடைய பிராவன்ஸ் மாகாணத்துடன் ஒப்பிட்டு அளந்தோ கணித்தோ அவன் பார்க்கவில்லை. தூரத்திலே, தெற்கிலும் இப்படித்தான் இருக்கும்; திராட்சைத் தோட்டத்திற்கு நல்லதுதான், ஜீனிக்கும் நல்லதுதான். "ஏனென்றால் ஜீனிக்கு இந்த மாதிரி ராத்திரிதான் பிடிக்கும்" எனச் சொல்லிக்கொண்டான். அவன் அங்கு படுத்துக்கிடந்து புகை குடித்தான்; அவனுடைய மயிர் செறிந்த மிருக உடம்பு அந்தச் செத்து மடிந்த மனித சூன்யப் பிரதேசத்திலே, கால் கைகளை இஷ்டம்போல அசைக்கக்கூடிய தெம்பிலே உயிருடன் இருப்பதையே ஒரு இன்பமாக ரசித்து, அனுபவித்துக்கொண்டிருந்தது.

     ஆனால் பியரியின் சுங்கான் நன்றாகக் கனிந்து பிடித்துக் கொள்ளுமுன் டிரஞ்ச் திருப்பத்தில் ஒரு முகம் தெரிந்தது. யாரோ ஒருவன் தனக்கு எதிராக ஊர்ந்து வருவதைக் கண்டான் பியரி. ஒரு தட்டையான அகன்ற முகத்தைப் பார்த்தான். பிராவன்ஸ் திராட்சைத் தோட்டக்காரர்கள், மேய்ப்பர்கள் ஜாடை அதில் இல்லை. வேறு நாட்டு முகம். அன்னியத் தொப்பி, அன்னிய நாட்டு ராணுவப் பொத்தான்கள். அவன் தான் பீட்டர்தீயபு. ஆனால் பியரிக்கு எதிரி. அவன் 'பகைவன்' 'யுத்தம்' 'சண்டையில் கொல்லப்பட்டான்' என்ற பதங்கள்போல வெறும் எதிரி. அன்று சாயங்காலம் ஜெர்மன் லெப்டினண்ட் பீட்டரைக் கூப்பிட்டன். உத்திரவு போட்டான். அவனும் கோட்டைப் பழுது பார்த்தான். ஜோஹன்னாவுக்குக் கடுதாசி எழுதினான். பசுவுக்கும் கன்றுக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை எழுத மறக்கவில்லை. அவனும் அசைபோட்டுத் தன் கஞ்சியை ரசித்துக் குடித்தான், - இவையெல்லாம் பியரிக்குத் தெரியாது; தெரிந்தாலும் புரிந்திருக்காது; ஏனென்றால் பூமியின் மேலுள்ள அந்தப் பாத்தியில், மற்ற எத்தனையோ பாத்திகளில் நடப்பது போல யுத்தம் அல்லவா? பியரிக்குப் பீட்டர் வெறும் பகைவன்; இப்பொழுது பகைவனுடைய முகத்துக்கு எதிராக, ஊர்ந்து வரும் பகைவனுக்கு எதிராக நிற்கிறான்; எதிரியின் மூச்சு இவன் நெற்றியில் படுகிறது. பியரி, புராதன காலத்து மூதாதைகளில் ஒருவன்போல, காட்டில் வசிக்கும் ஓநாய்போல அவன் மேல் பாய்ந்து விழுந்து பிடிக்கத் தயாரானான். பீட்டரும் தனக்கு எதிராகப் பகைவனைக் கண்டான்; பகைவனுடைய நெஞ்சு அடித்துக்கொள்ளுவது அவனுக்குக் கேட்டது. தனது புராதன காலத்து மூதாதைகளில் ஒருவன் மாதிரி, ஓநாய் மாதிரி கைகளைத் தளர்த்திக் காலை ஊன்றிப் பாய்வதற்குத் தூரத்தைக் கண்ணால் அளந்தான்.

     இருவரும் கொஞ்ச நேரம் ஒருவரை ஒருவர் பார்த்து மற்றவன் ஆரம்பிக்கட்டுமே என்ற காத்திருந்தனர். ஒருவன் மற்றவனுடைய கையைப் பார்க்க முடியும். அதை பரஸ்பரம் கூர்ந்து கவனித்துக் கொண்டனர்.

     இப்படியான சமயத்தில் பியரியின் சுங்கானிலிருந்து புகை எழுந்தது. இரு பகைவர்களும் எதிரெதிராகப் படுத்துக் கிடந்தனர். ஒருவரையொருவர் கொன்றுகொள்ள விரும்பவில்லை. ஆனால், கொன்று கொள்ள வேண்டும் என்பதைப் பரிபூரணமாக உணர்ந்தவர்கள் - முகத்துக்கு முகம் மூச்சுப்படும்படி கிடந்தனர்; மோந்து பார்த்துக் கொள்ளும் மிருகங்கள் மாதிரி இருந்தது அவர்கள் நிலை. இருவருடைய நாற்றமும் இருவரும் அறிந்ததுதான். நனைந்த கோட்டு நாற்றம், வேர்வை நாற்றம், சாப்பிட்ட ஸூப் நாற்றம், களிமண் நாற்றம், - எல்லாம் இருவரும் அறிந்ததுதான். அதில் ஒரு தொடர்பு.

     அவர்கள் தொலை தூரத்திலிருக்கும் பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள்; பிரான்ஸிலிருந்தும் பொமெரியானாவிலிருந்தும், இந்த இடத்திற்கு, இந்த மனித சூன்யப் பிரதேசத்திற்கு, இந்த அன்னிய நாட்டுக்கு வந்திருக்கின்றனர். இது அவர்களுக்குத் தெரியும். இதுதான் எதிரி, - அடியோடு நசித்துப் போவது. இருவரும் பேச முயற்சிக்கவில்லை; எத்தனையோ அன்னிய பாஷைகள். ஆனால் அவர்கள் முகத்துக்கு முகம் எதிராகக் கிடந்தனர். பியரியின் சுங்கான் புகைந்தது. தன் சுங்கனைப் பற்றவைக்க முடியாது என பீட்டருக்குத் தெரியும். கொஞ்சம் கை அசைந்தால் ஜீவ மரணப் போராட்டந்தான். அவன் மூக்கு மற்றவன் விட்ட புகையை உறிஞ்சியது; உதடுகள் விரிந்தபடி; பியரிக்குப் புரிந்தது. அவன் முகத்தை எட்டி நெருங்கினான். பீட்டர், பியரியின் பல்லிடையிலிருந்து சுங்கானைத் தன் பல்லால் பற்றிக் கொண்டான்.

     பீட்டர் நன்றாக ஒரு தம் உறிஞ்சிவிட்டுப் பியரிக்குக் கொடுத்தான். பியரி, தானும் உறிஞ்சிவிட்டு முன்போல் வேண்டுகோள் இல்லாமல் தன் எதிரிக்கு உடனே சுங்கானைக் கொடுத்தான். ஆனால் ஒரு நிமிஷம் அவர்கள் கண்கள், சர்வ ஜாக்கிரதையான, தளர்ந்த பாவனை முயற்சியில் கிடக்கும் கைகளைக் கவனித்துக்கொண்டன. அவர்கள் பலமுறை ரொம்ப ரசித்து அந்த பட்டாளத்துச் 'சிப்பாய்' சுங்கானைப் பிடித்தனர். மனித சூன்யப் பிரதேசத்தில் உள்ள அந்த அவர்கள் 'தம்' பிடித்தனர். அந்த நிலம் எப்படியாவது கைப்பற்றப்படவேண்டும்; அவர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக, ரொம்ப ரொம்ப மெதுவாகப் புகை பிடித்தனர். வரம்பற்ற வெளியில் ஒளி ரேகைகள் ஓசையில்லாது ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஓடித் திரிகின்றன.

     இந்த இரண்டு மனிதர்களுக்கும் குறைந்தபட்சம் தம்மில் யாராவது ஒருவருக்கு இதுதான் கடைசி 'தம் என்பது தெரியும். அப்புறம் வந்தது துரதிர்ஷ்டம். புகையிலை ஆகிவிடுமுன் குழல் அணைந்துவிட்டது. அந்த இருவரில் ஒருவன் சுங்கானின் 'அல்பாயுசை' நினைத்துப் பெருமூச்சு விட்டான். நினைவு வேறு திசை திரிந்தது. பியரி தன் ஜீனியைப் பற்றி நினைக்க ஆரம்பித்தானோ... அல்லது பீட்டர்தான் ஜோஹன்னாவை நினைக்க ஆரம்பித்து விட்டானோ? பையிலிருக்கும் தீப்பெட்டியை எடுக்க முடியாது என்பது இருவருக்கும் தெரியும். கொஞ்சம் அசைந்தால் மரணப் போர்தான். ஆனால் ஒருவன் எடுத்தே விடுவது என்று தீர்மானித்துவிட்டான். பிரஞ்சுக் குடியாட்சியைத் தற்காக்கும் பியரியோ அல்லது ஜெர்மன் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கும் பீட்டரோ?...

     இருவரில் ஒருவன் தான்...

     இருவரும் ஒருவரையொருவர் பற்றிக் கழுத்தை நெரிக்க முயன்றனர். சுங்கான் மண்ணுக்குள் விழுந்து புதையுண்டது. இருவரும் ஒருவரையொருவர் நெரித்துக் கொல்ல முயன்றனர். கட்டிப் புரண்டனர்; மேலெல்லாம் களிமண் ஒட்டிக்கொண்டது. இருவரும் ஒருவரையொருவர் வெல்ல முடியவில்லை. பற்கள் ஆயுதமாயின; சிரைக்காத முகத்தையும் தமக்குத் தெரிந்த நாற்றமெடுக்கும் முறுக்கேறிய கழுத்தையும் ஒருவரையொருவர் கடித்துக் கொண்டனர். தங்களுடைய பிசுபிசுத்த ரத்தத்தை மஞ்சள் களிமண்ணில் ஓடவிட்டுக் குழப்பினர். அப்புறம் ஒருவருக்கொருவர் அருகில் கிடந்தனர்; இப்பொழுது சுங்கான் இல்லை; செத்துப் போனார்கள்; செத்த மனித சூன்யப் பிரதேசத்தில் செத்துக் கிடந்தார்கள்; பூமிக்கு ஓசைப்படாமல் ஆயிரக்கணக்கான வருஷம் திரியும் ஒளி ரேகைகள் கொண்ட நட்சத்திரங்கள் மறைந்தன; பகல் வந்தது; இரவு மண்ணில் வளைதோண்டி ஒருவரை ஒருவர் கொன்று கொண்ட மனிதர்கள் இப்பொழுது சப்தம் மிகுந்த துப்பாக்கி வேட்டுக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். இரண்டு ராணுவத் தலைமைக் காரியாலயங்களிலும் இரு சிப்பாய்களின் பெயர்களுக்கு எதிரில் 'காணாமல் போனார்கள்' எனப் பதிவு செய்து கொண்டார்கள். மறுபடி ராத்திரி வந்ததும் பியரியும் பீட்டரும் போல மனித சூன்யப் பிரதேசத்திற்கு மற்றவர்கள் வந்தார்கள்.

     அந்த வருஷம், 'யுத்தம்'.

     பிரான்ஸில் உள்ள குக்கிராமத்தில் ஜீனி பியரிக்காக அழுதாள்; திராட்சைக் கொடிகளில் கந்தகப் பொடியைத் தூவினாள். அழுது அழுது ஓய்ந்த பிறகு புதுக் கணவன் பாலுக்கு வாசல் கதவைத் திறக்க ஆரம்பித்தாள். திராட்சையை அறுக்க ஒரு ஆள் வேண்டாமா? அங்கும் இங்கும் நடமாடுகையில் முதுகைத் தட்டிக் கொடுக்க ஒரு ஆள் வேண்டாமா? ரொம்பத் தூரத்திலே, பூமிக்கும் நட்சத்திரத்திற்குமிடையில் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரத்திலே, அருகிலே, பொமெரியானாவில் ஒரு குக்கிராமத்திலே பசுவுக்கும் கன்றுக்கும் புல்லெடுத்து வைக்கும்பொழுது ஜோஹன்னா கண்ணீர் சிந்தினாள். பசுக்களைப் பார்த்துக் கொள்வதே பெரிய வேலை; மேலும் தனியாக எப்படி வாழ முடியும்? வீட்டுக்குப் புதிய புருஷன் வந்தான்; அவன் பெயர் பால். அந்த வருஷம் மற்ற வருஷங்களைப் போல வாழ்வுதான்.

     1917-ம் வருஷம் ஏப்ரல் மாதம் மனித சூன்யப் பிரதேசம் யாருக்கும் சொந்தமற்றது என்ற தன்மையை இழந்தது. ஒரு தெளிவான பகலில் பலருடைய ரத்தத்தால் செழிப்பான மண் யாருக்கோ சட்டப்படி சொந்தமாயிற்று. முதல் முதலாகக் காட்டுப் பூனைப்பாதை என்ற டிரெஞ்சில் மனிதர்கள் பயமில்லாமல் நடந்தார்கள்; குனியாமல், ஊர்ந்து போகாமல் நடந்தார்கள். அந்தப் பாதையின் அந்தத்தில் இரண்டு எலும்புக்கூடுகள் திடீரென்று மாண்ட காதலர்கள் மாதிரி கட்டித் தழுவிக் கிடப்பதைக் கண்டார்கள். அவைகளுக்கு அருகில் ஒரு சுங்கான் கிடந்தது.

     நான் எழுதிக் கொண்டிருக்கையில் அதோ அது என் முன்னால் கிடக்கிறது. வெறும் சிப்பாய் சுங்கான் தான்; ஆனால் யுத்தம் உற்பத்தி செய்த சமாதானக் குழல். சாம்பல் ஒட்டிக் கிடக்கிறது அதில் இரண்டு ஜீவன்களின், புகையிலையை விடச் சீக்கிரம் கரிந்து போன இரண்டு ஜீவன்களின் சின்னம்; அற்பமானதுதான், ஆனால் அழகானது. அந்த ஓசைப்படாத ஆயிர வருஷ ஒளி ரேகைகளை ஒரு தட்டில் போட்டு மறு தட்டில் இழுப்பை இழுத்த சிப்பாயின் சுங்கானைப் போட்டு மனித வித்தின் மடிவை நிறுக்கும் தராசை நாம் எப்படிச் செய்வது...?