ஒரு கட்டுக்கதை

பிரான்ஸ் காப்கா - ஆஸ்திரியா

     எலி சொல்லுகிறது...

     "ஐயோ, உலகம் தினம் தினம் எவ்வளவு சின்னதாகிக் கொண்டே வருகிறது! முதலில் ரொம்பப் பெரிதாக, நான் பயப்படும்படியாக, அவ்வளவு பெரிதாக இருந்தது. நான் ஓடிக்கொண்டே இருந்தேன்; ஓடிய வண்ணம் இருந்தேன். இரண்டு பக்கத்துச் சுவர்களும் தூரத்திலேதான் தெரிந்தன. ஆனால் அந்தச் சுவர்கள் எவ்வளவு வேகமாக நெருங்கி விட்டன. கடைசியாக அறைக்குள்ளேயே வந்து விட்டேனே! அதோ தெரிகிறதே பொறி, அதில் அல்லவோ நான் போய் விழவேண்டும்..."

     "நீ இந்தப் பக்கமாகத் திரும்பி ஓடினால் பொறியில் விழ வேண்டியிருக்காது!" என்று சொல்லிக்கொண்டே அதைப் பிடித்து விழுங்கிவிட்டது ஒரு பூனை.