பளிங்குச் சிலை

வாலரி புருஸ்ஸாப்

     வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக் கதை.

     அவனுக்குத் திருட்டுக் குற்றத்திற்காக ஒரு வருஷம் கடுங்காவல் தண்டனை விதித்து சிறையிலிட்டார்கள். கோர்ட்டில் விசாரணை நடக்கும்பொழுது அந்தக் கிழவனுடைய நடத்தை என் மனத்தைப் பிடித்திழுத்தது. வழக்கும் விசித்திரமானதுதான். அனுமதி பெற்று அவனைச் சிறையில் பார்க்கச் சென்றேன். பார்க்க முதலில் மாட்டேன் என்றான். பிறகு என்னுடன் பேச மறுத்தான். கடைசியாக அவன் தனது கதையைச் சொன்னான்.

     'நீர் சொல்வது உண்மைதான். எப்பொழுதும் இதே மாதிரி நாடோ டியாகத் திரிந்து கொண்டிருக்கவில்லை. ஒரு காலத்தில் என்னிடம் பணம் இருந்தது. வாலிப முறுக்கு, குஷியாகச் செலவழித்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுது எனக்கு இஞ்ஜினீயர் வேலை. சாயங்காலத்தில் ஏதாவது ஒரு விருந்து அல்லது நாட்டியக் கச்சேரி, குடி - இதுதான் தினசரி. ஒவ்வொன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. எனது நினைவுகளில் எல்லாம் மறக்க முடியாத பொக்கிஷம், ஒரு வஸ்து இருக்கிறது. அவள்தான் நினா."

     "அவள் பெயர் நினா. ஆமாம், நினா. அதில் சந்தேகமில்லை. அவள் புருஷனுக்கு ரயில்வேயில் ஏதோ ஒரு சின்ன உத்தியோகம். ஏழைகள். அந்தச் சிறு வருமானத்தில் மிகவும் செட்டாகக் குடித்தனம் செய்ய அவளுக்குத் தெரியும். தொட்டதெல்லாம் பொன் தான். அவள்தான் அவ்வளவு வேலையும் செய்வாள். மலிவான உடைதான்; கிழிந்துகூட இருக்கும். ஆனால், அவளுக்குத்தான் உடை எப்படி உபயோகப்படுத்தவதென்று தெரியும். அவளைக் கண்டவர்கள் எல்லோரும் அவளைப் பற்றி வெறி கொண்ட மாதிரி போற்றுவார்கள். நானும் அவளைச் சந்தித்தேன். அவளால் புனிதமாக்கப்பட்டேன்.

     "என்னைக் காதலித்த குற்றத்திற்காக கடவுள் அவளை மன்னிக்க வேண்டும். அவளைச் சுற்றிலும் வறுமை, துன்பம். அவளால் என்னைக் காதலிக்காதிருக்க முடியவில்லை. அந்தக் காலத்தில் நானும் பார்ப்பதற்குச் சிறிது அழகாக இருப்பேன். எப்படி அவளைச் சந்தித்தேன்? - நன்றாக ஞாபகமில்லை. சென்ற நினைவுகள் என்ற இருளில் இருந்து பல்விதமான காட்சிகள் என் கண் முன்பு வருகின்றன. அவள் சந்தோஷமாக, உற்சாகமாக - இவை எல்லாம் அவளுக்கு விதிவிலக்கு - இருந்தாள். நாடகத்தில் ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே பருகிக் கொண்டிருந்தாள். அவளது புன்சிரிப்பு என் மனத்தை விட்டு மறையவில்லை. 'இந்த இன்பம் வெகுநாள் நீடிக்காது; பரவாயில்லை; அதையும் அனுபவித்து விட்டேன்' என்று இரகசியமாக என்னிடம் சொன்னாள். இந்த வார்த்தைகள் என் ஞாபகத்தில் இன்னும் இருக்கின்றன. அதன் பிறகு என்ன நடந்தது, இவையெல்லாம் நான் நினாவுடன் இருக்கும்பொழுது நடந்தனவா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

     "நான் தான் முதலில் அவளைக் கைவிட்டேன் - இது இயற்கைதான். எனது நண்பர்கள் எல்லாம் அப்படித்தான் செய்து வந்தார்கள். கலியாணமான பெண்களுடன் சில காலம் பழகினார்கள். பிறகு கைவிட்டார்கள். நானும் எல்லோரையும் போலவே நடந்தேன். திருடுவது, வாங்கிய பணத்தை மோசடி செய்வது, கள்ளச் சாட்சி சொல்வது, இவை எல்லாம் குற்றந்தான். ஆனால், தான் காதலித்த பெண்ணைக் கைவிட்டு விடுவது உலக இயற்கை. எனக்கு இன்னும் எத்தனையோ நல்ல அதிர்ஷ்டங்கள் எல்லாம் ஏற்படும்பொழுது, அதற்காக ஒரு பெண்ணைக் கட்டிக்கொண்டு அழுவதா? முதலில் கஷ்டமாகத்தான் இருந்தது; ஆனால் கடைசியில் வெற்றி எனக்குத்தான். மனக்கஷ்டத்தை மன உறுதி வென்றது.

     "நினா தன்னுடைய புருஷனுடன் தெற்கே எங்கோ போனதாகவும் அதன் பிறகு இறந்துவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். ஆனால் எனது உள்ளத்தில் மட்டும் நினாவைப்பற்றிய நினைவுகள் உறுத்திக் கொண்டிருந்தன. அவளைப்பற்றி ஒரு சமாச்சாரமும் தெரிந்து கொள்ளாமல் அவளை மறக்க முயன்றேன்; அவள் படமோ, கடிதமோ ஒன்றும் வைத்துக் கொள்ளவில்லை. எங்கள் இருவருக்கும் தெரிந்த பொதுவான நண்பர்களும் கிடையாது. நினாவின் உருவம் சிறிது சிறிதாக என் உள்ளத்திலிருந்து மறைந்தது. அவளைப் பற்றியே ஒன்றும் என் வாழ்க்கையில் ஏற்படாததுபோல் அவ்வளவு பூரணமாக நான் மறந்தேன்.

     "காலாகாலத்தில் அதிர்ஷ்டமும் என்னை ஏறெடுத்துப் பார்த்தது. உலகத்திலே செல்வம், புகழ், இவற்றின்மீது என் ஆசை சென்றது. ஒரு தடவை என் நோக்கமும் பலித்தது. அப்பொழுது எனக்கு ஆயிரக்கணக்காகச் செலவு செய்ய முடியும். அவ்வளவு வருமானம்! கலியாணம் செய்து கொண்டேன். குழந்தைகள் பிறந்தன.

     "அதன் பிறகு எல்லாம் கீழ்நோக்கி உருண்டன. எனது மனைவி இறந்தாள். கை வைத்ததெல்லாம் நஷ்டம். குழந்தைகளைச் சுற்றத்தாரிடம் அனுப்பிவிட்டு - அதற்குக் கடவுள் என்னை மன்னிக்க வேண்டும்; அவர்கள் உயிரோடு இருக்கிறார்களோ என்னவோ? - கண்டபடி இருந்தேன். சீட்டாட்டம், குடி! ஏஜென்ஸி ஆரம்பித்தேன். அதிலும் நஷ்டந்தான். சூதாடி இழந்ததைப் பெறலாம் என்று நினைத்தேன். அவையும் போனதைத் தொடர்ந்து சென்றன. எனது நண்பர்களும் என்னைவிட்டு விலகினார்கள்.

     "கொஞ்சங் கொஞ்சமாக நான் இப்பொழுதிருக்கும் நிலையை அடைந்தேன். எப்பொழுதும் குடி. குடி மயக்கத்தில் இல்லாத பொழுது தொழிற்சாலைகளில் வேலை பார்த்தேன். குடிக்கும் நேரம் எல்லாம் கள்ளர்களும், சூதாடிகளும் கூடுமிடந்தான். எனக்குப் பார்த்தவர்கள் மேல் எல்லாம் வெறுப்பு ஏற்பட்டது. பழையபடி என் செல்வத்தை அடைவேன் என்று கனவுகாண ஆரம்பித்தேன். எனக்கு எங்கிருந்தோ எதிர்பாராத விதமாகப் பணம் வந்து குவியப் போகிறது என்று நம்பினேன். எனது நண்பர்கள் அவ்வாறு நம்பவில்லை. அதனால் அவர்கள் மீது எனக்கு வெறுப்பு.

     "ஒரு நாள் பசியும் குளிரும் என்னை வாட்டியது. காரணமில்லாது ஒரு வீட்டின் முற்றத்திற்குள் நுழைந்தேன். வீட்டின் சமையல்காரி, 'உனக்குப் பூட்டைச் சரியாக்கத் தெரியுமா?' என்றாள். 'தெரியும்' என்றேன். யாருடைய மேஜையின் பூட்டையோ சரிப்படுத்த வேண்டுமாம். என்னை உள்ளே அழைத்துச் சென்றாள். நல்ல சுகமான அறை. தங்கமும் படமும் செல்வ நிறைவைக் காண்பித்தன. என் வேலையைச் செய்தவுடன் அந்த வீட்டு எஜமானி எனக்கு ஒரு ரூபிள் (ருஷ்ய நாணயம்) கொடுத்தாள். அதைப் பெற்றுக்கொண்டு எதேச்சையாகத் திரும்பும் பொழுது...

     "திரும்பும்பொழுது என்னவென்று நினைக்கிறீர்? எனது கண் முன்பு ஒரு பளிங்குச்சிலையைக் கண்டேன். அது யாருடைய சிலை தெரியுமா? சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். நினாவினுடையது!

     "நான் அவளைப் பூரணமாக மறந்துவிட்டேன். அந்த நிமிஷத்தில், முக்கியமாக, அந்த நிமிஷத்தில்தான் அவளைப் பூரணமாக மறந்து விட்டேன் என்பதை உணர்ந்தேன். உடனே என் கண்கள் சுழன்றன. நினைவுகள், கனவுகள் எல்லாம் எங்கெங்கோ சென்றன. அந்தச் சிலையைப் பார்த்துக்கொண்டு பயத்துடன் 'அது யாருடைய சிலை?' என்று எஜமானியம்மாளைக் கேட்டேன்.

     "அதா! மிகவும் விலை உயர்ந்தது. 15வது நூற்றாண்டில் ஒரு இத்தாலியச் சிற்பி வடித்த சிலை. அதை வாங்கினதனால் இத்தாலிய அரசாங்கத்திற்கும் நமது அரசாங்கத்திற்கும் நீண்ட கடிதப் போக்குகூட நடந்துவிட்டது. அது நன்றாக இருக்கிறதென்றா சொல்லுகிறாய்? அதன் காதைப் பார்த்தாயா? அது சரியான இடத்திலா இருக்கிறது? மூக்கும் கொஞ்சம் கோணலாக இருக்கிறது பார்" - என்றெல்லாம் அவள் கூறினாள். பிறகு அவள் போய்விட்டாள்.

     "வீட்டைவிட்டு வேகமாக வெளியேறினேன். சிலையில் ஏதோ ஜாடை தென்பட்டது என்று சொல்லிவிட முடியாது. சிலை தத்ரூபம். பளிங்கில் மறுபடியும் உயிரைப் பெய்து வைத்த மாதிரி. 5 நூற்றாண்டுகளுக்கு முன்பு அதே மாதிரிக் கண்கள், காதுகள் எல்லாம் செதுக்கி வைத்த சிற்பியின் திறமை ஏதோ அமானுஷ்யமாக இருந்தது. 15வது நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் அதே மாதிரி தோற்றத்துடன் எப்படி இரண்டு பெண்கள் வாழமுடியும்? இந்தச் சிற்பி பார்த்துச் செதுக்கிய பெண்மணியும் நினாவின் குணமுடையவளாகவே இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.

     "அன்று என் வாழ்க்கையின் போக்கு மாறியது. விதி எனக்கு அனுப்பிய சீதேவியை - நினாவை - அவளைக் கைவிட்டபொழுது, எனது முட்டாள்தனத்தினால் உதறித் தள்ளியதாகத் தோன்றியது. சென்றதை எப்படிக் கொண்டு வரமுடியும்? உடைந்த கிண்ணத்தின் துண்டுகள் போல், சிதறிக்கிடந்த என் எண்ணங்களை எப்படிக் கொண்டுவர முடியும்? அவற்றை எனது மனம் மறுபடியும் உயிர்ப்பித்தது. மணிக்கணக்காக அதில் லயித்திருப்பேன். பலர் என்னைக் கேலி செய்தார்கள். ஆனால், நான் சந்தோஷமாக இருந்தேன். எனது உள்ளத்து அழுக்குகளைத்துடைக்க இன்னும் அவகாசம் இருந்தது!

     "மறுபடியும் அச்சிலையைப் பார்க்கவேண்டும் என்று எனக்கு ஆசை எழுந்தது. ஜன்னலிலிருந்து வெகு தூரத்திலிருந்ததால், அதைப் பார்க்க முடியவில்லை. வீட்டு முன்பு இரவெல்லாம் கழித்தேன். வீட்டில் யாரெல்லாம் வசிக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். பிறகு வேலைக்காரனுடன் சினேகமானேன். கோடை காலத்திற்காக அந்த எஜமானியம்மாள், கிராம வாசத்திற்குச் சென்றுவிட்டாள். அந்தச் சிலையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கட்டுக்கடங்காது மீறியது. மறுபடி ஒருமுறை பார்த்துவிட்டால், நினாவைப்பற்றிய முழு நினைவும் ஒன்று கூட மறக்காமல் ஏற்படும் என்று நினைத்தேன். அதுதான் என் மோட்சம். இதற்காகத்தான் என்னைத் தண்டித்து விட்டார்கள். எப்படி எனது ஆசை ஈடேற முடியவில்லை என்பது உமக்குத் தெரியும். வீட்டுக் கூடத்திலேயே என்னைப் பிடித்துக்கொண்டார்கள். விசாரணையின் போது, பூட்டு சரிப்படுத்துபவன் மாதிரி அந்த அறைக்குள் வந்தது, அடிக்கடி வீட்டின் பக்கத்தில் காணப்பட்டது, நான் பிச்சைக்காரன், பூட்டை உடைக்கக் கூடியவன் என்பதெல்லாம் நிரூபிக்கப்பட்டன. இதுதான் என் கதை!" என்று முடித்தான் அந்தக் கிழவன்.

     "உனக்கு மறுபடியும் வேண்டுமானால் அப்பீல் செய்து பார்ப்போம்; உன்னை விடுவிப்பார்கள்" என்றேன் நான்.

     "என்னத்திற்கு? யார், என்னைத் தண்டித்ததற்காக வருந்தப் போகிறார்கள்? எனக்காக யார் ஜாமீன் கொடுக்கப் போகிறார்கள்? இங்கு இருந்தால் என்ன, சாராயக்கிடங்கில் இருந்தால் என்ன? எங்கிருந்தாலும் அவளை - நினாவைப் - பற்றி நினைக்க யார் தடை செய்யப் போகிறார்கள்?"

     என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. இந்தக் கிழவன் திடீரென்று என்னைப் பார்த்து "ஒன்றுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது; உண்மையில் நினா ஜீவிக்காமல், நான் சொன்னது, குடித்து பலவீனமான எனது மூளையின் கோளாறோ என்னவோ? பளிங்குச் சிலையைப் பார்க்கும்பொழுது இந்தக் கதை என் மூளையில் உதயமாகி இருக்கலாம், யாருக்கு என்ன தெரியும்?" என்றான் அக்கிழவன்.