பொய்

லியேனீட் ஆன்ட்ரீவ் - ருஷியா

     "நீ சொல்வது பொய், அது உனக்குத் தெரியும்!"

     "அதற்கேன் இப்படிக் கத்தவேண்டும்? பக்கத்திலிருக்கிறவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது."

     இப்பொழுதும் பொய் சொன்னாள். உண்மையில் நான் கூச்சல் போடவில்லை. மெதுவாகத்தான் சொன்னேன். அவளது கைகள் என் கைக்குள்ளிருந்தன. ஆனால் அந்தப் 'பொய்' என்ற வார்த்தை நாக சர்ப்பத்தின் சீறல் மாதிரி என் உதட்டை விட்டுப் புறப்பட்டது.

     "நான் உன்னைக் காதலிக்கிறேன். நீ என்னை நம்பத்தான் வேண்டும். இப்பொழுதாவது..." என்று எனக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். நான் அவளை மார்புறத் தழுவுவதற்காகக் கைகளை எடுக்குமுன் சென்று விட்டாள். நாங்கள் நின்று கொண்டிருந்த இடம் பாதி இருள். நான் அவள் பின்னாக, விருந்தினர்கள் கூடியிருந்த அறைக்குள் சென்றேன். விருந்து முடிவாகி எல்லோரும் புறப்பட வேண்டிய நேரம். இந்த விருந்து இங்கு நடக்கிறதென்று எனக்கெப்படித் தெரியும்? "நீயும் அங்கு வரலாம்" என்றாள்.

     அங்கு நடந்த நர்த்தனத்தைச் சென்று பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் யாரும் நெருங்கவில்லை. என்னிடம் யாரும் பேசவில்லை. அங்கிருந்தவர்களுக்கு என்னைத் தெரியாது. நான் வாத்தியக்காரர்கள் பக்கத்திலிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன். எனக்கு நேராக அந்தப் பித்தளைக் குழல்காரன் உட்கார்ந்துகொண்டு வாசித்தான். அவனது குழல் ஒவ்வொரு நிமிஷமும் "ஹோ", "ஹோ", "ஹோ" என்று என் காதில் சப்த அலைகளால் இடித்துக் கொண்டே இருந்தது.

     சிற்சில சமயம் என் பக்கத்தில் சுகந்த வாசனை தவழ்ந்தது. அருகில் அவள்தான். மற்றவர்கள் அறியாது என்னிடம் வருவதற்கு என்ன சாமர்த்தியம் செய்தாளோ! ஒரு நிமிஷம், ஒரு வினாடி, அவளது கரங்கள் எனது உடலைத் தழுவும், அவளது தோள் எனது தோளில் சற்று அழுத்தும், ஒரு வினாடி குனிந்து எனது கண்களால் வெள்ளுடையிலிருந்து எழும் வெண்மையான மாசு மருவற்ற கழுத்தை நோக்குவேன்; சற்று நிமிர்ந்து அவளது முகத்தை - வெண்மையான, மாசுமருவற்ற, சத்தியத்திற்கு இருப்பிடம் போன்ற முகத்தை - நோக்குவேன். அவள் முகம், கல்லறைகளின் மீது செதுக்கப்பட்டிருக்குமே, அந்தத் தெய்வப் பெண்கள், அவர்களுடைய முகத்தை என் நினைவிற்குக் கொண்டு வந்தது. அவள் கண்களில் நோக்கினேன். அவள் கருவிழிகள் நான் பார்க்கும் பொழுதெல்லாம், இன்னும் அதிகக் கருமையாக, எனது புலனுக்கு, அர்த்தத்திற்கு, எட்டாதபடி நோக்கின. ஒருவேளை, நான் சிறிது போதுதான் அவற்றுள் பார்த்திருக்கலாம் போலும்! ஆதலால்தான் எனது ஹிருதயம் அதில் சிறிதாவது தனது ஆசையைப் பதிய வையாது போயிருக்கலாம். ஆனால் எல்லையற்ற அன்பு, உணர்ச்சி என்பவற்றின் அர்த்தத்தை, அவற்றின் சக்தியை, அவற்றின் வேகத்தை, அவற்றின் பயங்கர உண்மையை அப்பொழுதுதான் அறிந்தேன். அவள் கண்களினின்றும் பாய்ந்த ஒளி ரேகையிலே எனது உயிரானது அவளிடம் மெதுவாக இழுக்கப்படுவதாக எனக்குப் பட்டது.

     அதிலே, அந்த சுகத்திலே, ஒரு பயம், ஒரு வலி; என்னையே எனக்கு அந்நியனாக்கியது; என்னைத் தமியனாக்கியது; என்னை உயிரற்ற சவம் போலாக்கிவிட்டது. பிறகு என்னை விட்டுத் தனியாகப் போய்விடுகிறாள். அதுவும் என்னுடைய உயிருடன், அந்த நெட்டையான அந்நியனுடன் நர்த்தனம் செய்ய. அவனுடைய நடையுடை பாவனைகளைக் கவனித்தேன். அவனுடைய பூட்ஸின் வளைவுகளை, அவனுடைய நாட்டியத் திறமையை, தொங்கி ஆட்டத்தில் அலையும் அவனது சிகையை, கவனிக்கக் கவனிக்க, என்னை எனது உணர்ச்சிகள் சுவரோடு சுவராக ஒண்ட வைத்து, அந்தச் சுவரைப் போல, என்னையும் உயிரற்றவனாக்கி விட்டது.

     நெடு நேரமாகிவிட்டது.

     விளக்குகளை ஒவ்வொன்றாக அணைக்கவாரம்பித்தனர். உடனே நான் அவளிடம் சென்று, "போவதற்கு நேரமாகவில்லையா? போகும் பொழுது நான் உன்னுடன் வருகிறேன்" என்றேன்.

     அவள் ஆச்சரியமடைந்தவள் போல் புருவத்தைச் சற்று உயர்த்தினாள்.

     "நான் அவருடன் தான் போகிறேன்," என்று அந்த அந்நியனைச் சுட்டிக் காண்பித்தாள். அவன் எங்களைக் கவனிக்கவில்லை. யாருமற்ற ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்று என்னை முத்தமிட்டாள்.

     "நீ பொய் சொல்லுகிறாய்!" என்று மெதுவாகக் கூறினேன்.

     "நாளைக்கு நாம் சந்திப்போம். நீ அவசியம் வரவேண்டும்" என்பதுதான் அவள் பதில்.

     நான் வீட்டிற்கு வண்டியில் செல்லும்போது விடியற்காலமாகி விட்டது. சற்றுப் பச்சைப் பசேலென்ற வெளிச்சம் வீட்டுக் கூரைகளின் மேல் பரந்தது. எங்கு பார்த்தாலும் உறைந்த பனிக்கட்டி அந்தத் தெரு முழுவதிலும், என்னையும் அந்த ஸ்லெட்ஜ் (ருஷியாவில் மாரிக் காலத்தில் ஜலம் உறைந்து விடுவதால் சக்கரமற்ற வண்டியை உபயோகப்படுத்துவார்கள். அதற்கு ஸ்லெட்ஜ் என்று பெயர்) வண்டிக்காரனையும் தவிர வேறு ஒரு மனிதப் பிராணியும் கிடையாது. அவன் முகம்வரை மூடிக்கொண்டு வண்டியின் முன்பு குனிந்து உட்கார்ந்திருந்தான். நானும் அவனுக்குப் பின் நன்றாகப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். வண்டிக்காரன் மனத்தில் என்ன நினைவுகள் ஓடினவோ! ஆனால், என் மனத்தில்! இந்தத் தெரு வரிசையிலுள்ள வீடுகளுக்குள் எத்தனையாயிரம் மக்கள் கனவுகளுடன், எண்ணங்களுடன் உறங்கிக் கொண்டிருப்பார்கள்; அவளை நினைத்தேன். அவள் எப்படி பொய் சொன்னாள் என்பதையும் மரணத்தைப் பற்றியும் நினைத்தேன். ஆமாம் அந்தச் சுவர்கள், மங்கிய ஒளியில் ரெட்டை நெடுகலாக நிற்கும் சுவர்கள், அவைகள் என் மரணத்தைப் பற்றி ஒரு முடிவிற்கு வந்து விட்டன போலும். அதனால் தான் அப்படி நிற்கின்றன. அந்த ஸ்லெட்ஜ் வண்டிக்காரனின் நினைவுகள் என்னவென்று எனக்குத் தெரியுமா? பிறகு அந்தச் சுவரின் கனவுகளை நான் எப்படியறிய முடியும்? ஆமாம். அவர்களுக்கு எனது எண்ணங்களை, எனது ஓடிக் குவியும் நினைவுகளைப் பற்றி என்ன தெரியும்?

     வண்டியும் இந்த முடிவற்று நீளும் தெருக்களின் வழியாகச் சென்றது. உதயமும் கூரையின் மீது வெள்ளை வெளிச்சத்துடன் பரந்தது; பார்த்தவிடமெல்லாம் அசைவற்ற வெண்மை; கவிந்து தவழும் மஞ்சு என்னைச் சுற்றியது. எனது காதினுள், "ஹோ!" "ஹோ!" வென நகைத்தது.

2

     அவள் சொன்னது பொய். அவள் வரவேயில்லை. வீணாக அவளுக்காக காத்திருந்தேன். எங்கும் ஒன்று போல இருள் ஒளியற்ற வானத்தினின்றும் உலகைக் கவ்வியது. எப்பொழுது சாயங்காலம், அந்தி மாலையாகி இரவாக மாறியது என்ற உணர்ச்சியே அற்று இருந்தேன். எனக்கு அவ்வளவும் ஒரே இரவாகத்தான் இருந்தது.

     முன்னும் பின்னுமாக அளவு எடுத்து வைப்பது போல் நடந்து கொண்டே இருந்தேன். நம்பிக்கையும் நடையைப் போல் முன்னும் பின்னுமாகச் சென்றுகொண்டேயிருந்தது. அந்தப் பெரிய வீட்டண்டையில் நான் நெருங்கவில்லை. அதில்தான் அவள் வசிக்கிறாள். அந்த இரும்புக் கேட்டுக்குப் பின் உள்ளேயிருக்கும் மஞ்சள் வெளிச்சத்தைக் காண்பிக்கிறதே அந்தக் கண்ணாடிக்கதவு, அதன் பக்கம் செல்லவில்லை. அந்தத் தெருவின் எதிர்ப் பாரிசத்தில், முன்னும் பின்னுமாக நடந்து கொண்டேயிருந்தேன். வீட்டை நோக்கி முன் செல்லும்பொழுது, அந்தக் கண்ணாடிக் கதவில் வைத்த கண்ணை மாற்றவில்லை. திரும்பி வரும்பொழுது நின்ற பின்பக்கம் பார்த்துக் கொண்டே சென்றேன். உறைபனி ஊசி முனைபோல் முகத்தில் குத்தியது. அந்த உறைந்த பனி நீர் உள்ளத்திலேயே சென்று குத்தியது. துக்கமும் கோபமும் ஹிருதயத்தைச் சல்லடைக் கண்களாகத் துளைத்தன. வீணாகக் காத்திருந்தேன். என்ன பயன்? வாடைக்காற்று, ஒளியுள்ள வடக்கிலிருந்து இருள்கவ்விய தெற்கு நோக்கி அடித்தது; பனி உறைந்த கூரைகளில் 'உஸ்' என்ற சப்தத்துடன் விளையாடியது. உறைந்த பஞ்சு போன்ற பனிநீர் முகத்தில் குத்தியது. அர்த்தமற்ற விளக்குகளைத் தழுவியது. தீபம் குளிரில் வளைந்து அசைந்தாடியது. இரவில் மட்டும் உயிர் பெறும் அந்தத் தீபத்தைக் காண எனக்கு வேதனையாக இருந்தது. நான் சென்றவுடன் இந்தத் தெருவில் உயிர் முடிவடைந்து விடும். வெறும் பாழ் வெளியில்தான் இந்தப் பனிப் பஞ்சு விழும் என்று நினைத்தேன்; ஆனால் அந்தத் தீபம் மட்டிலும் குளிரில் வளைந்து நடுங்கும்.

     அவளுக்காகக் காத்திருந்தேன். அவள் வரவில்லை. அந்தத் துணையற்ற தீபமும் நானும் ஒன்றுதான் என்று எனக்குப் பட்டது. ஆனால், எனது உள்ளமாகிய தீபம் ஒன்றுமற்ற பாழ் அன்று. நான் அளவு போட்டு நடக்கும் அந்த ஆள் நடமாட்டமற்ற பாழில் சமயா சமயம் மனிதரும் காணப்பட்டனர். நான் பாராத சமயத்தில் எனக்குப் பின் இருண்ட சாயை போல் அவர்கள் முளைத்தார்கள். அருவங்கள் போல் மூலையைத் திரும்பி மறைந்தார்கள். மறுபடியும் அந்த மூலையிலிருந்து வந்தார்கள். என் பக்கத்தில் சென்றார்கள். பிறகு படிப்படியாகத் தூரத்திலே விழும் பனிக்கட்டியில் மறைந்தார்கள். அடையாளம் தெரிய முடியாதபடி மூடிச் சென்றதினால் அவர்கள் எல்லோரும் என்னைப் போல் முன்னும் பின்னுமாக நடந்து, என்னைப் போல் காத்து, என்னைப் போல் குளிரில் நடுநடுங்கி என்னைப் போலவே விடையற்ற புதிர் போன்ற எண்ணங்களை நினைத்திருப்பது போல் தோன்றியது.

     அவளுக்காகக் காத்திருந்தேன். அவள் வரவில்லை. துக்கத்தினால், அதன் உளைச்சலினால், வலியினால், ஏன் நான் அழவில்லை, கூச்சல் போடவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் ஏன் சிரித்தேன் என்று, ஏன் சந்தோஷமாக இருந்தேன் என்று, ஏன் என் கை விரல்களை மிருகத்தின் நகங்களைப் போல் வளைத்து, கையில் ஒரு சர்ப்பத்தைப் பிடித்திருப்பது போல் மடக்கினேனென்று புரியவில்லை. அந்தப் பொய்... அது கையை விட்டு நழுவி எனது ஹிருதயத்தில் கடித்தது. அந்த விஷத்தில் எனது தலை சுற்றியது. எல்லாம் பொய். வருங்காலத்திற்கும் இப்பொழுதிற்கும் இடையேயிருக்கும் எல்லைக்கோடு, இப்பொழுதிற்கும் சென்ற காலத்திற்கும் இடையில் இருக்கும் எல்லைக்கோடு... எல்லாம் மறைந்தன. நான் பிறப்பதற்கு முன், நான் பிறந்த பின், என்ற கால எல்லை மறைந்தது. நான் எப்பொழுதும் இருந்திருக்க வேண்டும்; அல்லது எப்பொழுதும் இல்லாமலிருந்திருக்க வேண்டும் என்று பட்டது. நான் இங்கு உயிருடனிருக்கு முன்னும், உயிருடன் வந்த பின்னும், எப்பொழுதும் அவள் மீது ஆட்சி கொண்டிருக்க வேண்டும்.

     அவளுக்கு ஒரு பெயர், ஒரு உடல், அவளுடைய ஜீவியத்திற்கு ஒரு ஆரம்பம், ஒரு முடிவு - எல்லாம் அதிசயமாகத்தான் இருக்கிறது! அவளுக்குப் பெயரே கிடையாது. அவள் பெயர் எப்பொழுதும் பொய் சொல்லுகிறவள், எப்பொழுதும் காத்திருக்க வைப்பவள்; ஆனால் ஒரு காலத்திலும் வராதவள் என்பதே. எனக்குக் காரணம் தெரியாது. ஆனால் நான் சிரித்தேன். என் ஹிருதயத்தில் கூர்மையான ஊசிகள் குத்தின. என் காதினுள் நான் காணாமல் யார் யாரோ "ஹோ ஹோ ஹோ!" என்று நகைத்தார்கள்.

     கண்களை விரியத் திறந்து, தீபம் பிரகாசித்த மாளிகை ஜன்னல்களைப் பார்த்தேன். அவை, சாந்தமாகக் கண்சிமிட்டும் நீலச் சிவப்பு ஒளி வார்த்தைகளில், "அவள் உன்னை ஏமாற்றி விட்டாள்! நீ காத்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்திலே அவள் ஒய்யாரமாக, நளினமாக, உன்னை வஞ்சித்து, உன்னை வெறுக்கும் அந்த ஒய்யார நெட்டையனின் காதல் மொழிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். கட்டுப்பாட்டை மீறி உள்ளே சென்று அவளைக் கொல்வதினால் நீ ஒரு நன்மையைச் செய்யலாம்; ஏனென்றால் நீ பொய்யைக் கொன்று விடுவாய்" என்று கூறியது. கையிலிருந்த கத்தியை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். "சரி, அவளைக் கொன்று விடுகிறேன்!" என்று சிரித்தேன்.

     அந்த ஜன்னல்கள், என்னைப் பரிதாபகரமாகப் பார்த்து "உன்னால் அவளைக் கொல்ல முடியாது; உன் கையிலிருக்கும் கத்தியும் அவள் கொடுத்த முத்தத்தைப் போல் ஒரு பொய்" என்று கூறின.

     என்னைப் போல் காத்திருந்த சாயைகள் மறைந்து வெகு நேரமாயிற்று. நிர்க்கதியாக நாவைப் போல் சுழலும் தீபவொளிகள், குளிராலும் ஏக்கத்தாலும் நடுங்கின. மாதா கோவில் கடிகாரம் மணியடிக்க ஆரம்பித்தது. அதன் ஹிருதயமற்ற உலோகத் தொனியும், கீழே விழுந்து மறையும் உறைபனி மாதிரி, நடுங்கி ஏக்கமிட்டு அழுது, வான வெளியிலே மறைந்தது. நானும் மணியை எண்ண ஆரம்பித்தேன். கூக்குரலிட்டுச் சிரித்தேன். அது 15 மணியடித்தது! மணிக் கூண்டும் கடிகாரத்தைப் போல வயது சென்ற கிழம்; கடிகாரம் மணியைச் சரியாகக் காண்பித்தாலும், கோயில் மணி அடிப்பவன் ஏறி நிறுத்தும்படி தாறு மாறாக அடிக்க ஆரம்பித்து விடும். இந்தக் குளிர்ந்த இரவைத் தழுவி, துயரம் நிறைந்து ஒடுங்கும் அந்த மணியொலி யாருக்காகப் பொய் சொல்ல வேண்டும்? இந்த பொய்யினால் என்ன பிரயோஜனம்? அதைக் கேட்கப் பரிதாபமாக இருந்தது.

     அந்தப் பொய் நிறைந்த மணிச் சப்தம் நின்றும் நிற்காமலும் இருக்கும் பொழுது, மாளிகையின் கதவைத் திறந்து கொண்டு, அந்த நெட்டையன் படிகளில் இறங்கி வந்தான்.

     எனக்கு அவன் முதுகுத்தான் தெரிந்தது. ஆனால் நான் நேற்றுப் பார்த்த அந்தப் பயல்தான் என்று தெரிந்து கொண்டேன். அந்தப் பெருமையும், மற்றவரை மதிக்காத நடையும் நேற்றுப் பார்க்கவில்லையா? அதே நடைதான் இன்றும். ஆனால் இன்று அவன் நடையிலே ஒரு நம்பிக்கையின் பாவனை, எப்பொழுதையும் விட, முக்கியமாக சாயங்காலம் இருந்ததை விட, அதிகமாக இருந்தது. பெண்ணின் பொய் முத்தம் பெற்ற ஒருவனின் நடைபோல் இருந்தது.

3

     நான் அவளைப் பயமுறுத்தினேன், கெஞ்சினேன், பற்களை நெறநெறவென்று கடித்துக் கொண்டு, "உண்மையைச் சொல்" என்றேன்.

     அவள் முகம் அந்த உறைந்த பனி போல் இருந்தது. புருவத்தின் கீழ், சலித்த கண்கள், அர்த்தம் புரியாத, ஆழம் அறியக் கூடாத கண்கள், சற்று ஆச்சரியத்தால் நோக்கின. ஆர்வமற்ற, அர்த்தம் புரியாத குரலில், "நான் உங்களிடம் பொய் சொல்லவில்லை," என்று சொன்னாள்.

     அவள் கூறுவது பொய் என்று என்னால் நிரூபிக்க முடியாதென்று அவளுக்குத் தெரியும். என்னுள்ளத்தில் குமுறிக் கொண்டிருக்கும் எண்ணக் கோட்டைகள் எல்லாம், அவள் கூறும் ஒரு வார்த்தையில், ஒரு பொய் வார்த்தையில் தகர்ந்துவிடும் என்று எனக்குத் தெரியும். அதனால் உண்மைபோல், அவள் அதரத்திலிருந்து, அந்தப் பாழ் இருட்டான உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்தன.

     "உங்களைக் காதலிக்கிறேன் - நான் தங்களுடையவளல்லாவா?"

     நாங்கள் இருந்த இடம் ஊருக்குச் சற்று வெளியே தள்ளி இருந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தால் உறைந்த பனி; பரந்த பாழ் வெளி; எங்கு பார்த்தாலும் இருள்; உறைந்த பனியின் மீது, அதைச் சுற்றித் தொடும் வான வளையத்தின் மீது இருள். அந்த இருளிலே, பனி உறைந்த பாழ் வெளி, சவத்தின் முகம் போல், வெளிறிக் கிடந்தது. நாங்கள் இருந்த அறையினுள் ஒரே ஒரு மெழுகுவத்தியின் வெளிச்சம் அறைக்குள்ளே ஏகமான உஷ்ணம். மெழுகு திரி அசைந்து அசைந்து எரிவது, உருகித் துடித்து உயிரை விடுவது போல் இருந்தது.

     "உண்மை என்ன துக்கத்தைக் கொடுத்தாலும், எனக்கு அது அவசியம் தெரிய வேண்டும். தெரிந்தால் ஒரு வேளை நான் இறந்து போகலாம். மரணம் இதை விட எவ்வளவோ மேலானது. உனது முத்தத்திலே, உனது ஆலிங்கனத்திலே பொய்யை ஸ்பரிசிக்கிறேன். உனது கண்களின் பிரகாசத்திலே அதைப் பார்க்கிறேன். உண்மையைச் சொல்லிவிடு. இனி உன்னைத் தொந்தரவு செய்யாமல் உன்னை விட்டே போய் விடுகிறேன்" என்றேன்.

     அதற்கு அவள் மௌனமாக இருந்தாள். அவளது முகத்திலுள்ள பார்வை உறைந்த பனிக்கட்டி மாதிரி உள்ளத்தில் பாய்ந்தது. எனது ஆவியையே துருவுவது போல் இருந்தது.

     "சொல், இல்லாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன்!" என்று இரைந்தேன்.

     "அப்படியே செய்து விடுங்கள்; சில சமயங்களில் இந்த வாழ்க்கையே எவ்வளவு சோர்வாக இருக்கிறது! ஆனால் உண்மையைப் பயமுறுத்திப் பறிக்க முடியுமா?" என்று மிகவும் சாந்தமாகக் கேட்டாள்.

     பிறகு அவள் காலடியில் வீழ்ந்தேன். அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு கெஞ்சினேன், அழுதேன், இரக்கப்பட்டு உண்மையைக் கூறும்படி அழுதேன்.

     அவள் கரங்களால் எனது தலையை மார்புடன் அணைத்தாள். "ஐயோ! ஐயோ! பாவம்!" என்றாள்.

     "என் மீது இரங்கு; எனக்குக் கட்டாயமாக உண்மை தெரிய வேண்டும்" என்றேன்.

     அந்த நெற்றியின் பின்பக்கம், மண்டையோட்டின் பின்னால் இருக்கும் உண்மை. உண்மையை உடைத்துப் பார்க்க வேண்டுமென்ற வெறி பிடித்தது. அவளது மார்பை, மாசுமருவற்ற கொங்கைகளைக் கிழித்து உள்ளிருக்கும் ஹிருதயத்தை எனது நகங்களால் பிய்த்து எடுக்க ஆசைப்பட்டேன். சிகரம் போன்ற தீபவொளி மஞ்சளாக எரிந்தது. சுவர்ப்பக்கம் எல்லாம் இருண்டது. அது தூரமாக விலகிச் செல்வது போல் தெரிந்தது. துக்ககரமாக, தனிமையாக, பயங்கரமாக இருந்தது.

     "ஐயோ பாவம்! ஐயோ! பாவம்!" என்றாள்.

     அந்த மஞ்சள் தீபம் நடுங்கியது, உள்ளடங்கியது, நீல நிறமாயிற்று. பிறகு, அணைந்து போயிற்று. இருள் எங்களை மூடியது. அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை; அவள் கண்களைப் பார்க்க முடியவில்லை. அவள் கரங்கள் எனது தலையைத் தழுவின. கண்களை மூடினேன். எண்ணமும் நின்றது. வாழ்க்கையும் நின்றது. அவள் கரங்களின் ஸ்பரிசம் தான் ஜீவித்தது. அது உண்மை போல் தோன்றியது. அந்த இருளில் மெதுவாகப் பேசினாள்; குரலில் பயம் தொனித்தது.

     "என்னைத் தழுவிக் கொள்ளுங்கள். எனக்குப் பயமாக இருக்கிறது!"

     மறுபடியும் மௌனம். மறுபடியும் மெதுவாகக் கூறினாள். குரலில் பயம் தொனித்தது.

     "நீங்கள் உண்மையைக் கேட்கிறீர்கள், அது எனக்குத் தெரியுமென்று நினைக்கிறீர்கள். ஐயோ! எனக்குத் தெரிந்திருக்கக்கூடாதா என்று இருக்கிறதே! என்னை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள். ஐயோ பயமாக இருக்கிறதே!"

     நான் கண்களைத் திறந்தேன். இருள், ஜன்னலருகிலிருந்த வெளிறிய இருள், அறையின் மூலைகளில் திரண்டு ஒளிந்தது. ஆனால், அந்த ஜன்னலின் வழியாக, ஏதோ ஒன்று பூதாகரமாகச் சவம்போல் வெளிறிப்போய் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. இறந்தவனுடைய கருவிழியற்ற வெள்ளைக் கண்கள் எங்களைத் தேடுவது மாதிரி, எங்கள் இருவரையும் அதன் உறைபனி போன்ற பார்வையில் கட்டிப் பிடிப்பது மாதிரி இருந்தது. நாங்கள் இருவரும் இறுகத் தழுவிக் கொண்டோ ம். "ஐயோ பயமாக இருக்கிறதே!" என்று மெதுவாகச் சொன்னாள்.

4

     நான் அவளைக் கொன்றேன். நானே அவளைக் கொன்றேன். அவள் உயிரற்று ஜன்னல் பக்கத்தில் கீழே கிடக்கும்பொழுது, அந்த ஜன்னலின் வெளியே, உயிரற்ற வெள்ளைப் பாழ் வெளி. அவள் சவத்தின் மீது காலை வைத்து மிதித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தேன். அது வெறியனின் நகைப்பல்ல. இல்லை, இல்லை, நான் நகைக்கும் பொழுது எனது நெஞ்சு பைத்தியக்காரனுடையது மாதிரி, படபடவென்று அடித்துக் கொள்ளவில்லை. எனது உள்ளத்திலே குதூகலம், சாந்தம்.

     என் ஹிருதயத்தைக் கடித்துத் தின்ற புழு விழுந்துவிட்டது. குனிந்து அவளது உயிரற்ற கண்களை நோக்கினேன். விரிந்து, வெளிச்சத்திற்காகத் தேடிப் பேராசைப்படுவது போல், திறந்தபடியிருந்தன. பீங்கான் பொம்மையின் கண்கள் மாதிரி இருந்தன. அவற்றை என் விரல்களால் தொட்டேன்; என் இஷ்டப்படி மூடினேன், திறந்தேன். எனக்கு அவற்றைப் பற்றி பயமில்லை. அந்தக் கருவிழிகளில், அர்த்தம் புரியாத கருவிழிகளில், எனது இரத்தத்தை உறிஞ்சிய பொய் என்ற பேய் ஜீவித்திருக்கவில்லை.

     அவர்கள் என்னைக் கைது செய்தபொழுது நான் சிரித்தேன். அவர்களுக்கு அது பயங்கரமாகவும், காட்டுத் தனமாகவும் இருந்தது. சிலர் என்னைப் பார்க்காமல் வெறுப்புற்று விலகிக் கொண்டார்கள். சிலர் என்னைப் பயமுறுத்திக் கொண்டு, திட்டிக்கொண்டு, நெருங்கினார்கள். குதூகலத்துடன் நோக்கும் என் கண்களைப் பார்த்தவுடன் அப்படியே மரம் போல் நின்றார்கள்.

     "பைத்தியம்!" என்றார்கள். அந்த வார்த்தை அவர்களுக்கு ஒரு சமாதானத்தையளித்தது போலும்! பிறகு காதலித்தவளைக் கொன்று விட்டு எப்படிச் சிரித்துக்கொண்டிருக்க முடியும்? அவர்களில் ஒருவன் கூறிய வார்த்தைகள் தான் எனது கண்களிலிருந்து களிப்பைப் போக்கியது.

     "ஐயோ பாவம்!" என்றான். அவன் குரலில் கோபமே இல்லை அவன் இரட்டை நாடி சரீரமுடையவன்; களிப்புத் தவழும் முகம்.

     "ஐயோ பாவம்!"

     "என்னை அப்படிச் சொல்லாதே!" என்று கத்தினேன்.

     ஏனென்று தெரியவில்லை! அவன் மீது பாய்ந்தேன். அவனைக் கொல்லவேண்டுமென்று அசைப்படவில்லை. அவனைத் தொடக்கூடப் பிரியமில்லை. பயந்து நின்றிருந்தவர்கள், பைத்தியம் பிடித்த கொலைக்காரப் பாவி என்று எண்ணி இன்னும் அதிகமாகப் பயந்து நடுங்கினார்கள். அவர்களைப் பார்ப்பதற்கு எனக்கு வேடிக்கையாக இருந்தது.

     அந்தப் பிணம் இருந்த அறையைவிட்டு என்னை அவர்கள் கூட்டிக்கொண்டு போகையில், அந்தத் தடித்த மனிதனைப் பார்த்துக் கொண்டே, "நான் சந்தோஷமாகவே இருக்கிறேன்; சந்தோஷமாகவே இருக்கிறேன்" என்று திருப்பித் திருப்பிச் சத்தம் போட்டுச் சொன்னேன்.

     அதுதான் நிஜம்.

     நான் சிறு பிள்ளையாக இருக்கும்பொழுது ஒரு சர்க்கஸ் கூண்டில் புலி ஒன்றைப் பார்த்தேன். அது எனது நினைவை விட்டு அகலவே இல்லை. அது மற்ற மிருகங்களைப் போல், கண்ணை மூடித் தூங்கிக் கொண்டோ , அல்லது பார்க்க வருபவர்களைப் பார்த்துக் கொண்டோ இருக்கவில்லை. கூண்டில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குக் கோடு கிழித்த மாதிரி, அது ஒரே பாதையில் நடந்துவந்து, கணக்குப் பார்த்ததுபோல், குறித்த ஓரிடத்தில் திரும்பி, கூண்டுக் கம்பியைத் தனது விலாவினால் உராய்ந்து கொண்டே நடந்தது. அதன் கூர்மையான பேய்ப்பசி தேங்கும் தலை குனிந்து, கண்கள் நேராக நோக்கியபடி இருந்தன. நாள் பூராவாகவும், இரைச்சல் போடும் கூட்டம் அதன் பக்கமாகப் போய்க் கொண்டே இருந்தது. ஆனால், அது கவனியாமல் நடந்து கொண்டேயிருந்தது. ஒரு தடவையாவது திரும்பிப் பார்க்கவில்லை. பார்க்க வந்தவர்கள் சிலர் சிரித்தார்கள். ஆனால் கூட்டத்தில் முக்கால்வாசிப் பேர் அதைப் பார்த்துச் சிரிக்கவில்லை. துக்கப்பட்டார்கள். நம்பிக்கையற்ற பிரயோஜனமற்ற, நினைவு குவிந்த அதன் நடையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுச் சென்றார்கள். போகும் பொழுது மறுபடியும் திரும்பிப் பார்த்தார்கள். பெருமூச்சு விட்டார்கள்.

     அவர்கள் சுதந்திரமாக இருந்தாலும் அதன் நிலைமைக்கும் அவர்கள் நிலைமைக்கும் ஒற்றுமை இருப்பதுபோலப் பெருமூச்சுவிட்டார்கள். நான் பெரியவனாக வளர்ந்த பிறகு, மனிதர்களும், புத்தகாசிரியர்களும், எல்லையற்ற காலத்தைப் பற்றி, நித்தியத்துவத்தைப் பற்றி, எனக்குச் சொன்னார்கள்.

     அப்பொழுதுதான், அந்தப் புலியைப் பற்றிய நினைவு வந்தது. காலமற்ற காலத்தைப் பற்றியும், அதன் கஷ்டங்களைப் பற்றியும் எனக்குத் தெரிந்ததுபோல் இருந்தது.

     எனது கல் கூண்டில் நானும் அந்தப் புலி மாதிரியானேன். நடந்தேன். நினைத்தேன். ஒரே கோட்டில் நடந்தேன். கூண்டின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு நடந்தேன். ஒரே பாதை வழியாகத்தான் எனது எண்ணங்கள் சென்றன. அவைகளின் கனம், கடைசியில், தலைக்குப் பதிலாக நான் ஒரு உலகத்தையே சுமக்கிற மாதிரி அழுத்தியது. அது ஒரே வார்த்தை. எவ்வளவு பெரியது! எவ்வளவு பயங்கரமானது!

     "பொய்!"

     அதுதான் அந்த வார்த்தை.

     அது மறுபடியும் பாம்பு மாதிரிச் சீறிக்கொண்டு எனது ஆவியைப் பின்னியது. ஆனால் இப்பொழுது அது சிறிய பாம்பாக இராமல் கிருஷ்ண சர்ப்பம்போல் மாறியது. அது என்னைக் கடித்தது. அது தனது இரும்பு போன்ற உடல் சுருணையில் என்னை அமுக்கியது. வலி பொறுக்க மாட்டாமல் கூவியழுதேன். எனது நெஞ்சினுள் பாம்புகள் கூட்டம் கூட்டமாக நெளிந்தன; என்னால் அந்த ஒரு வார்த்தையைத்தான் கூற முடிந்தது.

     "பொய்!"

     நான் நடக்கும் பொழுதும், எண்ணும் பொழுதும், கருங்கல் தளவரிசை ஆழங்காண முடியாத பாதாளம் போல் தோன்றியது. எனது பாதம் தரையைத் தொடுவதாக உணர்ச்சியில்லை. மூடுபனிக்கு மஞ்சிற்கும் மேல் எங்கோ உயரப் போவது போல் தோன்றியது. எனது உள்ளம் 'உஸ்' ஸென்று குமுறியது. கீழிருந்த மேகப்படலம் மெதுவாக எதிரொலித்தது. ஆயிரம் வருஷங்களுக்கப்புறம் இருந்து வருவது போல் மெதுவாகக் காதில் வந்து தொனித்தது. சில சமயம் முடுபனி விலகியது. சப்தம் சிறிது குறைந்தது. ஆனால் கீழே, காற்று மரங்களுக்கிடையில் இரைந்து கொண்டிருப்பது எனக்குத் தெரியும். மெதுவாக அந்த வார்த்தைகள் காதுக்கெட்டின.

     "பொய்"

     இந்த அசட்டுத்தனமான மெல்லிய குரல் எனக்குக் கோபமூட்டியது. தரையைக் காலால் உதைத்துக் கொண்டு கத்தினேன்.

     "பொய்யே கிடையாது - பொய்யைக் கொன்று விட்டேன்!"

     எனக்குத் தெரியும். அதற்காகவே தலையைத் திரும்பிக் கொண்டேன். அது பதில் சொல்லும் என்று எனக்குத் தெரியும். பதிலும் அடியற்ற பாதாளத்திலிருந்து வந்தது.

     "பொய்!"

     நீங்கள் இதற்குள் அறிந்து கொண்டிருப்பீர்கள். உண்மை என்னவென்றால், நான் ஒரு தவறு செய்து விட்டேன். பெண்ணைக் கொன்று, பொய்யை நித்திய வஸ்துவாக்கி விட்டேன். 'மன்றாடியும், தீயில் போட்டும், சித்திரவதை செய்தும், உண்மையை அறிகிறவரை, அவள் உள்ளத்திலிருந்து பிடுங்குகிறவரை, நீ எதையும் கொல்லாதே!'

     இப்படி நினைத்தவண்ணம் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு நடந்து கொண்டிருந்தேன்.

     அவள் உண்மையையும், பொய்யையும் கொண்டு சென்ற இடம் பயங்கரமானது. அந்தகாரம் நிறைந்தது. நானும் இங்கேதான் போகிறேன். சாத்தானின் சிங்காதனத்தின் முன்பு அவளை எட்டிப்பிடித்து அவள் காலில் விழுந்து, "உண்மையைச் சொல்லு!" என்று அழுவேன்.

     ஐயோ கடவுளே! இதுவும் ஒரு பொய்தானே! அங்கே... அங்கே அந்தகாரம், அங்கே யுகத்தின் பாழ்வெளி. அங்கே எல்லையற்ற அகண்டம்... அங்கே அவள் இல்லை. அவள் ஒரு இடத்திலும் இல்லை. ஆனால் பொய் இருக்கிறது. நித்திய வஸ்துவாக இருக்கிறது. காற்றின் ஒவ்வொரு அணுவிலும் அதை உணருகிறேன். நான் மூச்சை இழுக்கும் பொழுது எனது நெஞ்சில் 'உஸ்' ஸென்ற சப்தத்துடன் செல்லுகிறது. பிறகு நெஞ்சைக் கிழிக்கிறது - ஆமாம், கிழிக்கிறது.

     ஐயோ! என்ன பைத்தியக்காரத்தனம் - மனிதனாக இருந்து கொண்டு பிறகு சத்தியத்தைத் தேடுவது! என்ன கஷ்டம்! என்ன பைத்தியம் இது!