உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சமத்துவம் ஒரு ருஷிய ஆசிரியர் நீலக் கடலின் அடிமட்டத்திலே, பிரமாண்டமான மீன் ஒன்று, இரை தேடிக்கொண்டு, உல்லாசமாக நீந்தி வருகிறது. எதிரே ஒரு சின்ன மீன் - அதன் உணவு. பெரிய மீன் அதை விழுங்குவதற்காக, தன் வாயை அகலத் திறக்கிறது. சின்னது இதைக் கண்டு பயந்து கீச்சிட்டுக் கத்துகிறது. "ஐயோ என்னை விழுங்காதே. நீ என்னைத் தின்பது நியாயமில்லை. இந்த உலகத்தில் வாழ, உன்னைப் போல, எனக்கும் உரிமையுண்டு. தர்மத்தின் எதிரில் எல்லா மீன்களும் சமம்." இதைக் கேட்ட பெரிய மீன் கர்ஜிக்கிறது... "அதற்கென்ன இப்பொழுது? உன்னிடம் சமத்துவத்தைப் பற்றி விவகாரம் பண்ண வரவில்லை. நான் உன்னைத் தின்ன வேண்டாம் என்றால், நீயே என்னை விழுங்கிவிடு. எங்கே பார்ப்போம்! பயப்படாதே! உம்!" சின்ன மீன், தன் வாயை முடிந்தவரை அகலத் திறந்து கொண்டு, அதை விழுங்குவதற்காகச் சுற்றிச் சுற்றி வந்து, முயற்சித்தது. பிறகு, கடைசியாக, ஒரு பெருமூச்சுவிட்டுக்கொண்டு சொல்லுகிறது: "நீதான் செய் - என்னை விழுங்கி விடு!..." |