உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ஷெஹர்ஜாதி - கதை சொல்லி ஹென்றி டிரெக்னியர் - பிரான்ஸ் அன்று இரவு ஷெஹர்ஜாதி நன்றாகத் தூங்கவேயில்லை. பகல் முழுவதும் சுட்டுப் பொசுக்கும் வெய்யில். அதனால் மூச்சுவிடக்கூட முடியாதபடி அவ்வளவு இறுக்கமாக இருந்தது. சிலந்தி வலையையும் தோற்கடிக்கும் மஸ்லின் உடையைக்கூட அவளால் தாங்க முடியவில்லை. ஷெஹர்ஜாதி அவ்வளவையும் கழற்றி எறிந்தாள். கழுத்தணிகள், கைவளை, ஏன் - எல்லா ஆபரணங்களையும் கழற்றிப் பக்கத்திலிருந்த தாம்பாளத்தில் வைத்தாள். கதை சொல்லி முடிந்த ஆயிரத்து ஓராவது நாள் சுல்தான் பரிசளித்த முத்திரை மோதிரத்தை - அவளை எந்தக் கஷ்டங்களும் அணுகாமல் காக்கும் அந்த மந்திர மோதிரத்தை - அதையும் கழற்றி வைத்தாள். சிறிதாவது சுகத்தையளிக்கும் என்று நினைத்து, அவள் நந்தவனத்துப் பளிங்கு மண்டபத்தையடைந்தாள். நிர்மலமான பளிங்கின் மீது செயற்கையூற்றின் பனித்துளிகள் தடவிக்கொடுத்தன. நாள் முழுவதையும் அங்கு கழித்தும் பயன் என்ன? சோர்வும் களைப்பும் தீர்ந்தபாடில்லை. தன்னுடைய உயிருக்குயிராகக் கருதி வளர்த்த மாடப்புறாக்களும் அவளுக்குக் குதூகலத்தையளிக்கவில்லை. இவ்வளவு களைத்த ஷெஹர்ஜாதி அன்று சாயங்காலம் என்ன கதை சொல்லுவது என்று ஆலோசியாது இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பகலைப்போல் இரவும் அவ்வளவு புழுக்கமாக இருந்தது. ஷெஹர்ஜாதி, அன்று உறங்கப் போனபொழுது, குதூகலமாகவோ அல்லது நிம்மதியாகவோ மஞ்சத்திற்குச் செல்லவில்லை. கொஞ்சக் காலமாக சுல்தான் அவளது தினசரிக் கதைகளைச் சிறிது அசட்டையாகவே கேட்டு வந்தான். கதை ஆரம்பித்த உடனேயே சுல்தானுடைய சுவாரஸ்யம் குறைந்தது, துன்பம் கவிந்த சிந்தனையில் ஆழ்ந்தான். நெரித்த புருவமும், ஒவ்வோரிடத்தில் நரையோடிய தாடியில் தேங்கித் தேங்கி உலாவும் விரல்களும், சிற்சில சமயங்களில் இரத்தினமிழைத்த வாளையோ, இடையில் சொருகிய கட்டாரியையோ தன்னையறியாமல் தடவும் கைகளும், சுல்தானின் துன்பச் சாயைகளைத்தான் அவளுக்குத் தோற்றுவித்தன. கதையை எவ்வளவு அற்புதமாகப் பின்னினாலும், கதையின் யக்ஷணியை என்ன நயமாகக் கொண்டு வந்தாலும், சுல்தானின் முகக்குறி மாறுவதேயில்லை. எப்பொழுதும் கதை முடிந்ததும், அவளைக் கதைக்காகப் புகழ்வான். அவளது களைப்பைப் போக்குவதற்காக மலைச் சிகரங்களிலிருந்து தருவித்த உறைபனியைத் தருவான். இவையும் நின்றுவிட்டன. சுல்தான் வேறு விஷயங்களில் தனது கவனங்களைச் செலுத்தி விட்டான் என்பதற்கு இவ்வளவு போதாதா? தன்னைப்போல் கதை சொல்லுகிறவர்கள் இந்தப் பூவுலகத்திலேயே கிடையாது என்று நினைத்திருந்தவளுக்கு, சுல்தானின் நடத்தை சிறிது மனத்தில் உறுத்தியது; அவளது தற்பெருமையின் ஜீவநாடியில் குத்தியது. ஸ்திரீகள் எல்லோரும் ஒருமுகமாக அவளைப் பெண் குலத்தின் வெற்றி என்று புகழவில்லையா? அவள்தான் சுல்தானின் குரூர மனவோட்டங்களைத் தடுத்தவள். தன் உயிருக்கே உலைவைத்த வலையிலிருந்து அவளுடைய தந்திரம் அவளைத் தப்புவித்தது. இதற்குமேல் பெண்ணின் பெருமைக்கு வேறு என்ன வேண்டும்? அவள் தன் பெருமைகளைப் பற்றி உணர்ந்தவள். அன்று சாயங்காலம் சுல்தான் ஷாரியார் நடந்துகொண்ட விதம் அவளது தற்பெருமையைச் சிறிது புண்படுத்தியது. அவன் பிரயோஜனமில்லை. ஷெஹர்ஜாதியின் கதை கேட்கும் பேறு பெற்றவர்கள் ஒரு வார்த்தையைக்கூட விடாது கேட்க வேண்டும். அவன் கதை கேட்கும்பொழுது சிடுசிடுவென்று முசுறுபோல் உட்கார்ந்திருக்கலாமா? சுல்தானின் ஞாபக மறதி அவள் மனத்தில் கோபத்தை எழுப்பியது. கற்பனைத் தேவியின் அருளைப் பெற்றவர்கள் எல்லாம் இந்த விஷயத்தில் லேசில் பொறுமையை இழந்துவிடுவார்கள். இவ்வளவிற்கும் மேலாக, அந்தந்தக் கதாபாத்திரங்களைப் பற்றி அடிக்கடி ஆவலுடன் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் ஷாரியார், அன்று பேசாது வாயடைத்துக் கிடந்தான். சுல்தான் அன்று கதையைக் கேட்கப் பிரியமில்லாமல்தான் கேட்டுக்கொண்டு இருந்தான் என்பதில் சந்தேகம் இல்லை. கதை முடிந்தவுடன், ஷெஹர்ஜாதியைக் கவனிக்காது, ஹுக்காவின் புகைமண்டலத்தில் மறைந்தான். பளிங்குத் தடாகத்தில் பிரதிபலிக்கும் தனது சிரித்த முகத்தில் தோன்றி மறையும் புன்சிரிப்பை லயமின்றி நோக்கினான். முதல் மந்திரி கெராந்தர், மாளிகையின் முற்றத்திற்கு வருமட்டும் சுல்தான் மௌனமாகவே இருந்தான். ஷெஹர்ஜாதிக்கு கெராந்தர் என்றால் பிடிக்கவே பிடிக்காது. அவன் தான் அவளுடைய சிறு சிறு ஆசைகளுக்குப் பங்கமாக நின்றவன். சுல்தானிடம் அவனுக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அவன் வார்த்தைக்கு சுல்தான் எப்பொழுதும் காது கொடுப்பான். கெராந்தர், சில சமயங்களில் அரசாங்கக் காரணங்களுக்காக சுல்தானிடம் கோபித்துக் கொள்ளுவதும் உண்டு. சுல்தான் ஷாரியாரின் வீரப்போர்களின் வெற்றிகளின் கலசம், ஏராளமான ஆள் சேதம், பொருள் நஷ்டம் என்ற அஸ்திவாரத்தின் மீது நிமிர்ந்து நின்றது. ஆனால் அதனால் பொக்கிஷம் காலி; நாட்டின் ஜனத்தொகையிலோ ஏராளமான குறைவு. இவை இரண்டு சுல்தானிடம் பிரஜைகளுக்கு வெறுப்பைத் தூண்டின. சிந்தி இறைப்பவன் என்று தூற்றப்பட்டான். கெராந்தருக்கு இவையெல்லாம் தெரியும். அவன் ஒற்றர் பலரை வைத்து, நாட்டிலும், நகரத்திலும், அரண்மனையிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து வந்தான். ஷெஹர்ஜாதியும் இவனுடைய ஒற்றர்களின் பார்வையிலிருந்து தப்பவில்லை. இதனால் சுல்தானின் பொறாமையையும், ஷெஹர்ஜாதியின் வெறுப்பையும் ஏற்றான் கெராந்தர். இதனால் ஷெஹர்ஜாதி சுல்தானுடைய இல்லறப் புனிதத்திற்குப் பங்கம் விளைவிக்க ஆசைப்பட்டாள் என்று நினைத்து விடக்கூடாது. நிரந்தரமான சந்தேகத்தின் சாயையைத்தான் ஷெஹர்ஜாதி வெறுத்தாள். தன்னிஷ்டத்துடன், தன் பூரண மனத்துடன், சுல்தானுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். பலரும் தன்னை அழகிற்காக மரியாதை செலுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டாள். இவளைச் சூழ்ந்த இந்தச் சந்தேகத்தில் எந்தத் தைரியசாலியும் அவளை ஏறிட்டுப் பார்க்க அஞ்சுவான். அதிலும் கெராந்தர் முன்பு, நடக்காத காரியம். களங்கமற்றுத் தன் அழகிற்குப் பலர் மரியாதை செலுத்துவதை, அழகால் பலரை ஏறிட்டுப் பார்க்க வைப்பதை ஓரோர் சமயங்களில், சுல்தானின் சிடுசிடுத்த முகம் கெடுத்துவிடும். அது, புகையுண்ட ஓவியம் போல், மனத்தின் குதூகலத்தை விரட்டியது. கெராந்தர் சுல்தானுடன் இரகசியம் பேசப் பேச அவனுடைய சிடுசிடுப்பு அதிகரித்தது. தனது இடையில் தொங்கும் வாளின் இரத்தினப் பிடியை அவன் அடிக்கடி இறுக்கினான். கெராந்தர் கூறும் வதந்திகள் பொய்யல்ல. எங்கு பார்த்தாலும் கொந்தளிப்பு, பலர் வரி வசூலிப்பவர்களை எதிர்த்தனர். உழவர்களும் வியாபாரிகளும் தங்கள் லாபங்களைப் பதுக்கினர். பலர் நகரத்தைவிட்டு வெளியேறினர். மாலை நேரம் முழுவதும் வெறும் கதை கேட்பதில் கழித்து, நாட்டைக் கவனிக்காத சுல்தானைப் பற்றிக் குறை கூறுதல் அதிகரித்தது. ஷெஹர்ஜாதி, கெராந்தர் குறிப்பாகச் சொல்லுவதையெல்லாம் அறிந்துகொண்டாள். சுல்தானுக்கு எதிராகச் சதியாலோசனை நடக்கிறது. அரண்மனையைத் தாக்கி சுல்தானைக் கொல்லுவது என்று சிலர் இரகசியமாகச் சபதம் செய்திருக்கின்றனர். சதிக் கூட்டத்தின் தலைவர்கள் வெறியர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. கெராந்தரின் திறமையான ஒற்றர்கள் இருக்கும் சதிகளை எல்லாம் கண்டு பிடிக்காவிட்டால் பாக்தாத் நகரம் வசிக்க லாயக்கற்ற பேய்க் காடாகிவிடும். கெராந்தர் தன்னுடைய வேலையில் பெருமை பாராட்டிக் கொண்டான். அவனுடைய வேலையில் செலவு பிடிக்கும். கெராந்தருக்குப் பணம் சேகரிக்க வசதி கொடுத்தால், பிறகு அவன் ஜவாப்தாரி. இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த ஷாரியார், தாடியைத் தடவிக்கொண்டே, ஷெஹர்ஜாதியை ஏறிட்டுப் பார்க்காது, கெராந்தருடன் சென்று விட்டான். அவன் திரும்ப மாட்டான் என்று அறிந்த ஷெஹர்ஜாதி, தனது பணிப் பெண்களை அனுப்பிவிட்டு, வாசனையூட்டிய மஞ்சத்தில் சாய்ந்து படுத்தாள். இரவில் சிறிது புழுக்கம் குறைந்தது. சாளரங்களின் வழியாக அப்பொழுதுதான் புஷ்பிக்கும் ரோஜாவின் வாசனை மெதுவாக வீசியது. அஸ்தமன சந்திரன் சாளரங்கள் வழியாக அவளுடைய சயன அறையில் வெள்ளிக் கோணங்கள் கட்டினான். ஓரோர் சமயம் அரண்மனை வாசலை உருவிய கத்தியுடன் காவல் காக்கும் சேவகர்களின் குரல் கேட்கும். கீழே செல்ல வேண்டும் என்று ஷெஹர்ஜாதிக்கு ஓர் எண்ணம் உதிக்கும். இரவில் நந்தவனத்தில் உலாவி, தலையைச் சாய்த்து வெறும் தலையற்ற முண்டங்களைப் போல் உறங்கும் புறாக்களைக் கவனிப்பதில் அவளுக்கு எப்பொழுதும் ஆசையுண்டு. காலில் பாதரட்சையையும் அணியாமல் எழுந்து நடந்தாள். தனது குழந்தைப் பருவத்தில், தகப்பனார் வீட்டில் எப்பொழுதும் சளசளவென்று பேசிக் குதூகலம் விளைவித்துக் கொண்டிருந்த மைனாவின் மீது நினைவு சென்றது. அந்த ஏழைச் சக்கிலியக் குடும்பத்தில் அது ஒரு இன்பவிளக்கு. தகப்பனார் தோலில் செருப்புத் தைக்கும்பொழுது, அது பக்கத்திலிருந்து கீச்சிட்டுப் பாடிக்கொண்டிருக்கும். தகப்பனார் வேலை செய்துகொண்டிருந்த தோல் கிடங்கை அடிக்கடி ஷெஹர்ஜாதி நினைத்துக் கொள்ளுவாள். கிடைக்கும் பீற்றல் பாவாடையைக் கூட நயமாக உடுத்திக் கொண்டு, முலாம் பழத்துண்டைக் கடிக்கும் அந்தக் காலம் அவளுக்கு மனக்கண்ணின் முன்பு நின்று கொண்டேயிருக்கும். அந்தத் தோல் கிடங்கில் பலர் வருவார்கள். பல சமாசாரங்கள் அடிபடும். தகப்பனார் அதிகமாகப் பேசமாட்டார். ஆனால் அவர் வார்த்தைகள் அவருடைய தோல் கத்தி போலக் கூர்மையானவை. அவளுடைய தகப்பனாருடன் இருந்தே அவள் கதைகட்டுவதற்குக் கற்றுக் கொண்டாள். இப்ரஹீம் முதலிய சிலரிடமிருந்து காதல் என்றால் என்ன என்று கற்றுக் கொண்டாள். ஆனால், அவர்கள் இவளுடைய இதயத்தைத் தொடவேயில்லை. அவர்களுக்கு வாலிபமும் அழகும் கிடையாது. ஒருவேளை அவளுடைய ஏழைக் குடும்பத்திற்கும் அவளுடைய குழந்தை ஆசைகளுக்கும் பணம் கொடுக்கக்கூடிய நிலையில் இருந்தார்கள். அக்காலத்தில் ஷெஹர்ஜாதி தனது இன்பங்களை எல்லாம் கற்பனை உலகத்திலேயே பெற்றாள். இப்படிக் காலமும் சென்றது. தூக்கம் வராது கஷ்டப்படும் சுல்தான் ஷாரியாருக்குக் கதை சொல்லி உயிரை யிழக்கும் பெண்மணிகளின் வதந்தியைக் கேட்டாள். முயற்சியில் இருக்கும் அபாயத்தை அறிந்தாள்; ஆனால் அவளது ரகசிய ஆசை அவளைத் தள்ளிச் சென்றது. அவளுடைய முறை வந்தது. ஒரு முறை இருமுறையல்ல; அவளது கதைகள் சுல்தானை மயக்கியது. சுல்தானின் கனத்த மோதிரமணிந்த விரல்கள் அவளைத் தடவின. அவனது கறுத்த தாடி அவளது முகத்தில் கிளுகிளுத்தது. தோல் கிடங்கில் சொன்ன மாதிரி அரசன் சமஸ்தானத்தில் பின்னிய கதைகள் அவளை ஷாரியாரின் காதலியாக்கியது. பாக்தாத் நகரம் முழுவதும் அவள் அதிர்ஷ்டத்தில் பொறாமை கொண்டது. அவளது வாழ்க்கையே பெரிய கதையாக அடிக்கடி சொல்லப்பட்டது. இதையெல்லாம் நினைத்த ஷெஹர்ஜாதிக்கு இமைகள் சொக்கின. கீழ்வானத்தில் உஷையின் வெள்ளைச் சிரிப்பு சாளரத்தி வழியாய் எட்டியது. தான் ஏழைச் சக்கிலியின் மகளானாலும், அரசாங்கக் காரியத்திற்காக உடனே எழுந்திருக்கும் சுல்தானைப் போல அல்லாது, இஷ்டப்படி உறங்கலாம் என்று அவள் உணர்ந்தாள். அன்று அவளுக்கு உறக்கம் கிடையாது. கண்ணை மூடியதும் என்றுமிராத சப்தங்கள் கேட்டன. அரண்மனை முழுவதும் காலடிச் சத்தம். எங்கு பார்த்தாலும் கூப்பாடு. என்ன, பூகம்பமா? அல்லது மாளிகை தீப்பற்றி விட்டதா? கலகமா? தன் கற்பனைதான் இந்த விபரீதக் கோளாறுகளை ஏற்றுக் கூத்தாடுகிறதா? அட! பக்கத்தில் பாகையவிழ்ந்து ஒரு கையை உயரத் தூக்கிய வண்ணம் நிற்கும் அந்த மனிதன் பொய்த் தோற்றமல்ல! அந்த வெளிறிய தோற்றம், கோணல் கண்கள், நீண்ட மூக்கு, - அவன் தான் கெராந்தர்! கண்களில் என்ன மிரட்சி! வாய் அப்படியே திறந்தபடி இருக்கிறது! கையிலும் உடம்பிலும் இரத்தக்கறை! அவன் நடந்துவந்த திக்கிலெல்லாம் இரத்தத் துளிகள். சுல்தானை யாரோ கொன்றுவிட்டார்கள். அவனது காவலாட்கள் வெளியே கழுத்து நெரிக்கப்பட்டுக் கிடந்தனர். காலையில் இதைக் கண்டான் கெராந்தர். அதைக் கண்டுவிட்டு காரியம் மிஞ்சிவிட்டது என்று இவளிடம் அறிவிக்க ஓடி வந்திருக்கிறான். ஷெஹர்ஜாதியின் அழகையும் மேதையையும் பாக்தாத் நன்கறியும்; அவளைப் பாக்தாத் மக்கள் அதிகமாக நேசித்தார்கள். அவளைப் பிரதிநிதி என்று முரசறைவித்தால், தன் கையில் மந்திரிப் பதவி இருக்குமட்டும் கவலை இல்லை என்று கூறினான். அவள் அதற்கு மறுத்தால், நாடு மோஸூல்காரனிடம் சென்றுவிடும். சிறைவாசமோ, மரணமோ சம்பவிப்பதில் சந்தேகமில்லை. தனது அற்புதமான சரித்திரத்தின் சிகரமாக ஏன் ராஜ்யதிகாரம் இருக்கக் கூடாது? இனி தன் இஷ்டம் போல் இருக்கலாம். மனம் சோர்ந்த சமயத்தில் இன்னொருவரின் கட்டாயத்திற்காகக் கதை சொல்ல வேண்டாம். எனவே, அதை ஏற்றுக் கொண்டாள். ஷாரியாரின் மரணச் சடங்கு நடந்தபிறகு, அவளுக்கு ராஜ்யாதிகாரமும், சிம்மாசனமும் வந்தன. வந்த கொஞ்ச காலத்திற்கெல்லாம் கெராந்தர் தூக்கு மேடையில் தொங்கினான். காரணம், அவனே ஷாரியாரைக் கொன்றான் என்ற சந்தேகம். பாக்தாத் நீதிபதிகள், சாட்சிகள் இல்லாவிட்டாலும், ஏகமனதாகத் தீர்ப்புக் கூறினார்கள். ஆமாம், வேறு என்ன செய்வது? சுல்தானின் கொலையாளி யாரோ ஒருவன் தான். அன்று இரவு வந்து ரத்தக் கறை படிந்த கைகளுடன் முன் நின்றதை ஷெஹர்ஜாதி மறக்க முடியவில்லை, மன்னிக்கவும் முடியவில்லை. ஷெஹர்ஜாதியின் அரசாட்சியில் முதல் பாதி தொந்திரவு இல்லாது கழிந்தது; பாக்தாத் மக்கள் பழைய துன்பங்களை அநுபவித்துத்தான் வந்தார்கள்; ஆனால் அவர்கள் ஷாரியாரை வெறுத்தார்கள். ஷெஹர்ஜாதியைப் பிரியப்பட்டார்கள். பொதுமக்கள் நிலைமை எப்பொழுதுமே அப்படித்தான். அவர்களுடைய சுகம் எல்லாம் வெறும் கற்பனை. அவளுடைய அரசாட்சி ஓர் பெரும் பேறு என்று அவர்கள் கூறினார்கள். இவ்வாறு அவர்கள் சொல்லும்பொழுது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் சொன்ன அந்த இன்பங்கள் தனக்குத் தென்படவில்லையே என்று எண்ணினாள். தன் பங்கு என்ன? இவர்களுடையதை விட சொத்தைப் பங்கா? அதிகாரம் தன் கையில் வந்துவிட்டதினால் பொக்கிஷத்தில் இருக்கும் ஆபரணங்களை எல்லாம் அவள் அணிந்து கொள்ள முடிந்தது; வெளிவரும் சமயங்களில் எல்லாம், மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள். நந்தவனத்தைப் புதுப்பித்தாள். அதில் இருந்த பளிங்கு மண்டபங்களையும், கொடிகள் படர்ந்த நிழல் மேடைகளையும் இடம் மாற்றியமைத்தாள். என்ன செய்தும் சுல்தானின் காலத்தில் அநுபவித்ததை விட இன்பம் ஒரு துளியாவது அதிகரித்ததாக அவளுக்குப் படவில்லை. அவள் கூரிய அறிவு படைத்தவள். ஆகையால் கதை சொல்லும் வேலைதான் முன்பு உற்சாகத்தையளித்து வந்தது என்று உணர்ந்தாள். இப்பொழுது என்ன செய்வது? தனது பரிஜனங்களைக் கூட்டிக் கதை சொல்ல ஆரம்பித்தால் மனமறிந்த பொய்களைப் பிதற்றுவார்கள். இம்மாதிரியான போலிப் புகழுரைகளை ஷெஹர்ஜாதி வெறுத்தாள்; பின்னிய கதைகளை எல்லாம் எழுதலாம்; ஆனால் குரலின் பேதம், முகநொடிப்பின் நயம் எல்லாவற்றையும் இழந்து, வெறும் மொட்டையாக, அவளது அபூர்வப் புன்சிரிப்பின் தேசுபடாது இருக்கும். அதனால் தனது பெயருக்குக்கூடப் பங்கம் வந்துவிடும் என்று பயந்தாள். பகலும் மணிச் சங்கிலிகளாக நீண்டது; ஆனால் இராத்திரியின் வரவு அவளை அஞ்சுவித்தது. பொழுதைப் போக்குவதற்கு மௌனமான - ஆனால், இன்பகரமான விளையாட்டுக்கள் இருக்கின்றன. இந்திரிய போகங்களை அநுபவிக்கச் சக்கிலியப் பெண்ணுக்கிருக்கும் உரிமைதான் ராஜப்பிரதிநிதிக்கும் உண்டு என்று உணர்ந்தாள். யாரை எல்லோரும் மதித்து, மரியாதை செய்து, புகழ்ந்து, அஞ்சுகிறார்களோ, அவர் காதலை ஒரு இடத்திலாவது எதிர்பார்க்க முடியாது. பழைய நந்தவனத்தில் இடம் மாறாது இருந்த பழைய பளிங்கு மண்டபத்திலிருந்து அவள் இவ்வாறு எண்ணமிடலானால். நீரோடைகளின் சலசலப்பு அவளுக்கு நிம்மதியளித்தது. அவற்றின் இனிய குரல்கள் ஏதோ அற்புதமான இன்பக் கதையைக் கூறுவது போல் எண்ணினாள். ஆனால் நீரோடையின் சலசலப்பு மனித உள்ளத்தின் குரலாகுமா? உடனே ஒரு எண்ணம் தோன்றியது. கதைப் பரீட்சைகள் ஏற்படுத்தி, அவளை இன்பப்படுத்தாதவர்களின் காதை அறுத்துத் தண்டித்தால் என்ன?... அதை நகரத்தில் முரசறைவிக்க வேண்டும். இவளுடைய கதையைச் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்ட பலர், நகரம் முழுவதும் இருந்தனர். அதைச் சொல்லுவதே இலக்கியப் பயிற்சியாயிற்று. அதில் எத்தனை கட்சிகள்! ஒவ்வொருவரும் வந்து காதைப் பறிகொடுத்ததுதான் மிச்சம். மார்தூக் கதை சொல்லுவதில் யாரையும் மயக்கி விட முடியும் என்பதில் தற்பெருமை கொண்டவன். ஆனால் அவனுக்கும் மன்மத ரூபத்திற்கும் வெகுதூரம். அரண்மனைக்குள் பெருமிதமாக வந்தான். போகும்போது... ஆமாம் போகும் போது... பாகை கலைந்து, காதைக் கையில் ஏந்திக் கொண்டு மறைந்தான். ஆனால், ஆசை யாரைவிட்டது, மார்தூக்கின் விதி மற்றவர்களை வந்து காதுகளை இழக்கத்தான் தூண்டியது. ஷெஹர்ஜாதிக்கு அசட்டுக் கதைகளைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துவிட்டது. அரண்மனை உப்பரிகையில் நின்று வானத்தைத் தழுவும் திசை மூலையை நோக்கினாள். யாத்திரை செய்ய வேண்டும் என்ற வேட்கை யிருந்தது; வானத்தில் ஒய்யாரமாக வட்டமிடும் கறுப்புப் புள்ளிகள் போன்ற பருந்துகளைப் போல் உயரப் பறந்து நின்று உலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மிகுந்தது. அன்று ஒரு புதிய ஒட்டகைக் கூட்டத்துடன், எங்கிருந்தோ ஒரு அரச குமாரன் கதை சொல்ல வந்திருக்கிறானாம். என்ன தைரியம்! அவன் அசட்டுத் தைரியத்திற்குக் காதுகளைக் குருத்துடன் வெட்டியனுப்ப வேண்டும். அன்றிரவு சிறிது உஷ்ணமாகவே இருந்தது. ஷாரியார் கொலை செய்யப்பட்ட அன்றுபோல் வானக் கம்பளத்தில் இருட்டுத் தேவன் நட்சத்திரங்களை வாரி இறைத்து வேலை செய்தான். ஷெஹர்ஜாதி வாசனை பரிமளிக்கும் மஞ்சத்தில் சயனித்து அவன் வரவை எதிர்பார்த்திருந்தாள். தேகமாத்யந்தமும் கொதித்தது. பளிங்குத் தடாகத்தில், பிறந்த கோலத்தில் முங்கிக் குளித்து நீந்த வேண்டும் என்று தேகம் கட்டுக்கடங்காது தவித்தது. முதலில் அந்தக் கதை - சொல்லியைக் கேட்டு விட்டு... அவனும் வந்தான். அவன் கம்பீரமாக உயர்ந்து வளர்ந்த ஆண் சிங்கம். முகத்தையும் தேகத்தையும் அடையாளம் தெரியாதபடி மூடியிருந்தாலும், அழகை மறைக்க முடியவில்லை. அவள் முன் வந்து அவன் நமஸ்கரிக்கவில்லை. ஷெஹர்ஜாதிக்குத் திடீரென்று அவன் மீது ஒரு பிரேமை ஏற்பட்டது. உடனே மஞ்சமும் நிலவும் என்றுமில்லாதபடி ரம்மியமாகத் தேகத்தில் ஓர் விவரிக்க முடியாத உணர்ச்சியைப் பாய்ச்சின. ஓர் அன்றில் பேடு குரலெடுப்பியது; ஷெஹர்ஜாதி மௌனமாகத் தலை குனிந்தாள், அவள் இதயம் படபடத்தது. வந்தவன், முகத் திரையைக் களைந்து விட்டு இமை கொட்டாமல் அவளை நோக்கினான். அவன் அழகன். பஞ்ச பூதத்தின் அழகு அவனைப் போல்தான் இருக்க வேண்டும். அவன் பேசவில்லை. ஆனால் ஷெஹர்ஜாதி அன்றுதான், அந்த மௌனத்தில், மரணத்தின், வாழ்க்கையின் அற்புதமான கதையைக் கேட்டாள்; - அதுதான் காதல். |