சூனியக்காரி

ரோனால்டு ஆக்டன் - இங்கிலாந்து

     அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல் இருக்கும். கருத்துச் சுருண்ட மயிர் செறிந்த தடியன்.

     திருட்டுத்தனமாகக் கண்ணி வைப்பதில் அவனுக்கு மிஞ்சியவன் அந்தப் பகுதியில் கிடையாது.

     எனக்கு வயசு பதினாறு.

     எனக்கு எப்பொழுதும் இருட்டு என்றால் ரொம்பப் பிரியம்.

     இருட்டு வந்தப்புறந்தான் எல்லாம் உயிர் பெற்று வாழ ஆரம்பிக்கிறது என்று எப்போதும் நினைப்பேன்.

     வீட்டுக்குள் விளக்கு வெளிச்சம் தெரிய ஆரம்பித்த பின்புதான் அது கண்ணை விழிக்கிறது போலத் தோன்றும். அந்த மாதிரி வீடுகளைப் பார்க்கிறதிலே, அவற்றின் பக்கத்தில் உள்ள பண்ணை மைதானத்தில் மனிதக் குரலும் நாய்களின் குரைப்பும் கேட்பதிலே, ஒரு சுகம். பகல் வெளிச்சத்தை விட அதில்தான் எனக்கு தைரியம்.

     நான் சின்னப் பையனாக இருக்கும்பொழுது எங்கப்பா கூடத் திருடப் போவேன். ஒரு வேளை அப்படித்தான் எனக்கு இந்தப் பழக்கம் வந்திருக்கும்.

     ஒருநாள் நான் ஒரு முசல் குட்டியைப் பிடித்தேன்...

     (எனக்கு இந்தப் பொஸ்தகம் மாதிரி எழுத வராது. அப்படி எழுதரதுன்னா மூச்செப் புடிக்கிற மாதிரி இருக்கு. எம் போக்கிலேயே எளுதிப் பாக்கறேன்.)

     அது ரொம்பச் சின்னது. அதனாலே அதை எங்கிட்டெயெ குடுத்துட்டாங்க; அதைத் தொட்டா மெத்துன்னு பட்டு மாதிரி இருக்கும். மூக்குக்கிட்ட கொண்டு போனா பச்சை வேர், மண்ணாங்கட்டி மாதிரி வாசனை வரும். முசலுங்களைக் கொல்லப்படாதுன்னு நெனச்சேன். ஆனா முடியுமா? அந்த மாதிரி மனசு கோழைப்பட்டுப் போகப் படாதுன்னு கட்டுப்படுத்தினேன். ஆனால், முடியலே.

     எனக்கு இந்தக் காட்டெலி எப்பவுமே பிடிக்காது. அதன் வெள்ளை மயிரைப் பார்த்தால், சூரியனே படாமல் பெட்டியடியிலே மொளைக்கிற காளான் மாதிரி இருக்கும். அதுக்கும் ரோஜா நெறக் கண்கள். வியாதி பிடித்த குழந்தைகள் அளுது அளுது ஓய்சு இருக்கிற மாதிரி இருக்கும்.

     சில சமயம் பல்லாலெ கடிச்சுடும். அதுக்காக எனக்கு அதுமேலே பயம் கிடையாது.

     அதுங்களைப் பார்த்தாலே புடிக்காது.

     அன்னிக்கு நிலா காஞ்சு கொண்டிருந்தது. ஆனா அவ்வளவு பிரகாசம் இல்லெ. தரைப் பக்கமெல்லாம் மஞ்சு (மூடுபனி) எல்லாத்துக்கும் ஒரு பொய்த் தோற்றத்தைக் கொடுத்தது. ஆனாக்க அவ்வளவு குளிரில்லை. ஜேக்குக்கு ரொம்ப குஷி என்னிக்கும் போலெ, கை நிறையக் கண்ணி.

     அதெப் பத்தி எனக்குக் கவலையில்லெ.

     அன்னிக்கி எம் மனது அப்படி இருந்தது. அதான் கவலையே தோணலே.

     நிலா என் உடம்புக்குள்ள ரெத்தத்தைக் குடிக்கிற மாதிரி, அதை நெருப்பாக்கிற மாதிரி இருந்தது. இஷ்டம் போலே ஆட்டம் போடணும்னு தோணுச்சு.

     காட்டுக்குள்ளே இருக்கும் ஒரு சின்ன மைதானத்துக்கு வந்தோம். ஜேக் கண்ணியை வைத்தான். அங்கே நிறைய முசல் துள்ளிக்கிட்டு கெடந்துச்சு. நாங்க வந்தோம். அப்படியே ஓடி ஒளிஞ்சிக்கிடுச்சு.

     ஜேக் அதுகளைப் பார்த்து, சிரிச்சுக்கிட்டு "புடிக்கிறேன் பாரு"ன்னு வருமங் கூறினான். ஊர்க்காரங்க அவனெ பைத்தியம்னு நெனச்சாங்க. இந்தத் திருட்டுத் தொழிலிலெ, இத்தினி நாளும் ஆப்டாமெ காலந்தள்ரான்.

     கொஞ்ச நேரத்துலெ கண்ணிலெ எத்தினியோ மொசலுங்க ஆப்டுக்கிச்சி. அவன் சுத்திப் போய் பூட்ஸ் காலாலே ஒதிச்சி, கொன்னு கொன்னு சாக்குக்குள்ளே போட்டான். மொத்தம் பத்து மொசல் ஆப்டுச்சி.

     ஜேக் குஷியிலே, "அக் அக்" என்று சிரிச்சான்.

     அப்பொத்தான் நான் அந்தப் பொண்ணைப் பார்த்தேன்.

     அவ நெலா வெளிச்சத்திலே கூத்தாடிக்கிட்டிருந்தா, அம்மணமா!

     இதுக்கு மின்னாலெ நான் அப்படி ஒரு பொண்ணையும் பார்த்ததேயில்லே.

     அப்பொ திடீருன்னு மேலெல்லாம் ஒரேயடியா சில்லிட்டு வெரச்சுப் போச்சுதுன்னு நெனக்கிறேன்.

     அவளுக்கு என் வயசுக்கு மேலே இருக்காது. அவ கை காலை நீட்டி ஒரு மாதிரியா ஆடிக்கிட்டு கெடந்தா. அவ ஒடம்பு, வெள்ளரிக் கொடி இருக்கு பாரு, அது காத்துலே ஆடற மாதிரி இருந்தது.

     அவ ஒல்லி; சுண்டிவிட்ட சாட்டை மாதிரி நேராயிருந்தா, வெள்ளெ வெளேருன்னு. அவ கண்ணு வெறி புடிச்ச மாதிரி இருந்துச்சு, மொகம் நீண்டு மோவாக் கட்டை கூரா எறங்கி இருந்தது.

     அவ மூஞ்சி அளகா இருக்குதுன்னு நெனச்சேன். கண் எமெ இருக்கு பாரு, அது கன்னங் கரேலுன்னு இருந்துச்சு.

     அவளையே பாத்துகிட்டு நின்னேன்; அசையலே.

     அவளையே பாத்துகிட்டிருந்ததுலே ஜேக்கைக்கூட மறந்துட்டேன். நான் திரும்பிப் பாக்ரப்பொ அவம் போய்ட்டான்.

     மரத்து நெழலிலேயே பதுங்கிப் பதுங்கி அவ கிட்டப் போனேன்.

     நான் ரொம்பக் கிட்டப் போரவரை அவ பாக்கவேயில்லை.

     திடீலுன்னு நின்னா - என்னைப் பாத்துட்டா!

     "இங்கெ வா!"ன்னா. ஆடு மாதிரி முழிச்சுக்கிட்டு கிட்டப் போனேன். ஒரே எட்டா எட்டி, ஒரு குத்து வுட்டா!

     நல்ல குத்து. நான் தடுமாறிப் போனேன். மறுபடியும் ஒரு குத்து வுட்டா. அப்புறம் மூஞ்சிலே ஒரு குத்து. எம் மூக்லெ இருந்து ரெத்தம் சொட்டிச்சு. மறுபடியும் கண்ணெப் பாத்து ஒரு குத்து வுட்டா.

     மொதல்லெ எனக்குக் கோபம் வரலெ. வெவரம் புரியாமெ நின்னேன். அவகூட சண்டெபோட பிரியப்படலெ, ஆனா அவ குத்திக்கிட்டே இருந்தா, வேறே வழியில்லெ.

     நான் அவ மூஞ்சிலே ஒரு குத்து வுட்டேன்.

     நான் சின்னப்பயலா இருந்தப்ப ஒரு வஸ்தாது எனக்குக் குஸ்தி சொல்லிக் குடுத்திருந்தான். எங்கே எல்லாம் குத்துனா ஆளெ விளத்தட்டலாம்னு சொல்லிக்குடுத்திருந்தான்.

     இப்பொ எனக்கு அது நெனவுக்கு வந்துச்சு.

     அவ மூஞ்சிலே பலமா குத்தவேணும்னு நெனச்சேன். அவ மூஞ்சி ரொம்ப அளகா இருந்தது. நல்லா குறிபாத்து நெஞ்சுக்கு கொஞ்சம் கீழே ஒரு குத்துவிட்டேன்.

     காத்துப் போன பலூன் மாதிரி சுருண்டு வுளுந்தா.

     எந்திரிச்சு நிக்கப் பாத்தா! முடியலெ. என் கண்ணப் பாத்தா. கண்ணு நெரஞ்சு போச்சு.

     நான் குனிஞ்சு அவ பக்கத்லெ உக்காந்தேன்.

     எனக்குள்ளே என்னமோ நடந்துச்சு. உள்ளார பெரிய வெளிச்சம் போட்ட மாதிரி இருந்திச்சு. என் ஒடம்பெ தண்ணியாலெ பண்ண மாதிரி கொளகொளன்னு ஆயிரிச்சு. அவ என்னை கெட்டியா புடிச்சுக்கிட்டா. நானும் அவளைப் புடிச்சிக்கிட்டேன்.

     எங் கோட்டே களத்திக் குடுத்துப்புட்டு அவளெ கெட்டியாப் புடிச்சுக்கிட்டேன். அவ அளுகிற மாதிரி இருந்திச்சு. சமாதானம் பண்ணப் பாத்தேன்.

     திடீலுன்னு எழுந்து முறிச்சுக்கிட்டு ஓடினா. அவ அந்த நெழலுக்குள்ள போய் மறையரப்போ என்னெ திரும்பிப் பார்த்து, ஒதட்டைத் தன் கையாலே தொட்டு முத்தம் போட்டுக் காமிச்சா. எங் கோட்டைக் கழத்தி விசிரிப்புட்டா.

     கொஞ்ச நேரம் பித்துப் புடிச்சப்பலே நின்னேன், "திரும்பி வா!"ன்னு கூப்ட்டேன். பதிலெக் காணோம்.

     நான் வூட்டுக்குத் திலும்புனப்ப தூக்கம் புடிக்கலெ. ஒடம்புக்குள்ளே என்னமோ எரியரங்காட்டியும் இருந்திச்சு. மறுபடியும் அவளெ கட்டாயம் பாக்கணும்போல இருந்திச்சு.

     மக்காநாள் காத்தாலே அந்த எடத்துக்குப் போனேன். அங்கெ அவளெ காங்கலெ.

     அண்ணைக்கி ராத்திரி ரொம்ப நேரம் அங்கெ போய் அவுளுக்காவ காத்துக்கிட்டிருந்தேன். அப்படி எத்தினியோ ராத்திரி.

     ஊர்க்காரனுங்க என்னப் பாத்து என்னடான்னு கேக்க ஆரம்பிச்சுட்டானுங்க.

     நான் என்னமோ ஒரு குட்டியெ சுத்திக்கிட்டுத் திரியரேன்னு கேலி பண்ரானுங்க.

     அவுங்க கிட்ட இத்தெ சொல்ல முடியுமா?

     சில சமயத்திலெ இது நெசமா நடந்துச்சான்னு கூட எனக்கு சந்தேகமா இருக்கு.

     நெலா வெளிச்சத்தைத் தவிர வேறே ஒண்ணும் பாக்கலேன்னு ஜேக் சொல்ரான். வேட்டெ புடிக்கரதுலே ரொம்ப கண்ணா இருந்துட்டிருப்பான். அதுனாலெதான் அப்படிச் சொல்ரான்.

     என்னைக் கூப்ட்டானாம்; நான் பதில் சொல்லலையம்; பின்னாலே வருவேன்னுப்புட்டு வூட்டுக்கு வந்துப்புட்டானாம்.

     மக்காநாள் காலம்பர என் ஒடம்பெல்லாம் காயமா இருந்திச்சு.

     'என்னடா'ன்னு கேட்டானுங்க. ஒரு பயகூட சண்டெ போட்டேன்னு பொய் சொன்னேன். யாருன்னு கேட்டாங்க; நான் சொல்ல மாட்டேன்னுப்புட்டேன்.

     ஒரு வேளை கொறத்தியா இருக்கும்.

     கொறக்கூட்டம் வந்தா அந்தப் பக்கத்லெதான் கூடாரமடிக்கும்; ஆனாக்க அவுங்க ஒடம்பெல்லாம் ஒரே கறுப்பு, அவ தந்தம் மாதிரி வெள்ள வெளேலுன்னு இருந்தா.

     இப்போ எனக்கு முப்பது வயசாயிப்போச்சு. இன்னம் என்னாலே அவளெ மறக்க முடியலெ.

     வெறும் நெனப்புத்தான்னு சொல்லலாம். பின்னெ எப்படி மேலே உடம்புலெ காயம்? மரத்தோட சண்டை போட்டேனா!

     அதுக்கப்ரம் நான் திருடப்போரதில்லெ. ஆனா நெலா வெளிச்சத்லெ எப்பவும் சுத்துவேன். ஒரு நா ராத்திரி அந்தக் காட்லே இன்னொரு பக்கத்திலே ஒரு பொணத்தெப் பார்த்தென், - ஆம்புளெ; மூஞ்சி அப்படியே செரஞ்சி போச்சு. கையிலெ யாரோ கடிச்சமாதிரி பல்லு அடையாளம். கழுத்து நெரிஞ்சு செத்த மாதிரி இருந்துச்சு.

     பல்லுக்குறி அளகா, வரிசையா இருந்திச்சு. அந்தப் பொண்ணு கடிச்சா அப்படித்தான் இருக்கும்.

     தரைலே காலடித் தடமே இல்லெ. இல்லாட்டா நான் தான் கொன்னுப்புட்டேன்னு என்னைத் 'தூக்கி'யிருப்பாங்கள்.

     ஊர்க்காரனுங்க இந்தப் பொணத்தைப் பார்த்தப்புறம் அந்தக் காட்லெ சூனியக்காரி ஒருத்தி இருக்கிரான்னு சொல்ராங்க. 'அவ அம்மணமா ஆடராப்பா தெனம்'னு எத்தினியோ பேரு சொல்ரானுங்க. அப்ரம் ஒத்தரும் தனியா அந்தப் பக்கம் போரதில்லெ.

     போனா நான் தனியாத்தான் போவேன்; அதுனாலெ நான் அப்ரம் அந்தப் பக்கத்திலே போரதில்லெ.

     ஆனாக்க, இதுவரைக்கும் ஒருத்தரும் அவளைப் பாக்கலே.

     ஒருவேளெ அந்தப் பய வாங்கிக்கிட்டது சரியாத்தான் இருக்கும். அவன் ஒரு தடிப் பன்னி. எனக்கு அந்தப் பயலெ புடிக்கவே புடிக்காது.

     இப்போ நான் ஒரு மரக்கெடங்கிலே வேலை பாக்ரேன். கொஞ்சம் படிக்கக்கூடத் தெரியும். எப்படியோ கவலையில்லாமே களியுது. மனசிலே நிம்மதியாக் கூட இருக்குது.

     ஆனாக்க இந்த எலை எல்லாம் உதிர்ர காலந்தான் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு.

     அந்தக் காட்டுக்கு மேலே, செகப்பு ரெத்தக்கறை மாதிரி மானம் தெரியும். நான் அதையே பாத்துக்கிட்டிருப்பேன், பொளுது போயிரும்.

     சமயா சமயத்திலே பீர் கடைக்குப் போவேன். ஜேக் என்னெப் பாத்தப்போ எல்லாம் அதுஇதுன்னு கேலி பண்ணுவான். ஊர்க்காரனுங்க எல்லாம், என்னப் பாத்தா, இவன் ஒரு மாதிரின்னு பேசிக்கிராங்க. ஏன் தெரியுமா? நான் படிக்கிரனாம். தனியா காட்லெ சுத்தரனாம். ஆனாக்க எனக்கு பீரும் பேச்சும்னா ரொம்பப் புடிச்சிருக்கும்.

     இப்பொ எத்தினியோ திருடனுங்க இருக்கிரானுங்க. அவங்க அந்த 'சூனியக்காரி' காட்டுப்பக்கம் போரதில்லெ. அவனுங்க வச்ச பேருதான்.

     ஒசர மானத்திலே நெலா நீஞ்சலடிக்கிர மாதிரி போரப்ப எல்லாம் எனக்கு ஒடம்பு நடுக்கும்; அவுமானமா இருக்கும்; அதோட 'குளு குளு'ன்னு ரொம்ப குஷியா இருக்கும்.

     நம்ம வாழ்வு இருக்கே அது என்னெவிட்டு விலகிகிட்டுப் போயிட்டுது. என்னெ ஆசெகாட்டி ஏமாத்திப்புடுச்சு. அந்த ராத்திரியோட நெனப்பு இன்னம் என்னெ கேலி பண்ணிக்கிட்டிருக்கு.

     நான் கண்ணாலத்தெப் பண்ணிக்கிட்டு பெத்துப் பெருகி இருக்கணும்னு சொல்லுவிங்க. ஊர்லெ பொண்ணுங்களுக்கா கொறச்சல் - நல்லாத்தான் இருக்காங்க - இருந்தாலும் அது எனக்குப் புடிக்கலெ.

     அவுங்களெ பாத்தா மூஞ்சிலெ அசடு வழியுது. மந்தி மாதிரி, கல்லுப்புள்ளையார் மாதிரி இருக்குதுங்க.

     ஜேக் சொல்ராப்லெ, நான் சூனியக்காரி மேலயோ மோஹினி மேலயோ ஆசைவச்சுமிருக்கலாம்.

     நான் அப்படி நெனக்கலெ.

     மோகினினாக்க அப்படிச் சண்டை போடுமா, - நீ தாஞ் சொல்லு!