உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சுவரில் வழி ஆர். முரே கில்கிரைஸ் - இங்கிலாந்து அன்று முற்பகல் சிறிது உஷ்ணமாகவே இருந்தது. பசும்புல் செழித்து வளர்ந்த மைதான வெளியில், ஆங்காங்கு குத்துக்குத்தாகப் பெயர் தெரியாத புஷ்பங்கள் எல்லாம் கணக்கற்று மலர்ந்து கண்ணுக்கு ரம்மியமாக இருந்தன. தூரத்திலே, எங்கோ, இரண்டு மூன்று 'அக்கா குருவிகள்' சோக கீதத்தை எதிரொலிப்பது போல் குரல் எழுப்பின. கூடு கட்டுவதில் மும்முரமாக ஈடுபடும் சிறுகுருவியொன்று கலகலவென்று சப்தித்துப் பறந்து கொண்டிருந்தது. அப்பொழுது கெஸயா அன்வின் என்பவள் ஹாதர்டன் வீட்டிற்குப் புறப்பட்டுச் செல்லுகிறாள். ரூவான்ரகம் வாத்து முட்டைகளை ஸ்ரீமதி புல்குரோவுக்குக் கொடுத்துவிட்டு வரலாம் என்ற நோக்கந்தான். அவளுடைய தகப்பனார் பண்ணை கோழி, வாத்து முதலியவற்றிற்குப் பிரசித்தி பெற்றது. கெஸயா இவற்றை நன்றாக வளர்ப்பதில் கெட்டிக்காரி. பட்சி வளர்ப்பின் சூட்சுமங்களில் உள்ள பெரிய சிக்கலான பிரச்சனைகளிலெல்லாம் அவள் முடிவு தான் வேதவாக்கு. இவ்வளவு சிறிய வயதிலேயே இந்த விஷயங்களையெல்லாம் எப்படி அறிந்துவிட்டாள் என்பதில் ஊராருக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம். இந்தத் தொழிலில் சம்பாதித்துத்தான் ஜீவனம் நடத்த வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கில்லை. ஊரிலே நல்ல பணக்காரன் அவள் தகப்பன். இம்மாதிரி பட்சி வளர்ப்பில் கிடைக்கும் பணத்தையெல்லாம் அவள், அழகான நாஸுக்கான உடைகளை வாங்கி அணிந்து, அந்தக் கிராமத்தாருக்குப் பட்டண மோஸ்தரைக் கொண்டு வந்து காண்பிப்பதிலேயே செலவு செய்வாள். அன்று நீலக் கவுன் ஒன்றையணிந்து நாஸுக்காக வெளியே புறப்பட்டாள். அழகான பெண் என்றால் ஊரிலுள்ள வாலிபர்கள் எல்லாரும் அவளைக் கலியாணம் செய்துகொள்ள ஆசைப்படமாட்டார்களா? அவர்கள் குலாசாரப்படி எத்தனையோ வாலிபர்கள் அவளைத் தமக்கு மனைவியாகும்படி கேட்பதற்காக வீட்டிற்கு வருவார்கள். கிழட்டுத் தகப்பனாருக்குத் தன் மீதுள்ள அத்யந்த சிநேகத்தால்தான் இவர்கள் வந்து சூழுகிறார்கள் என்ற நினைப்பு; அவர்களிடம் சாரமற்ற கதைகளை நீட்டிக்கொண்டு போவான். பாவம்! அந்த வாலிபர்கள் மெய் வருத்தம் பாரார் - பசி நோக்கார்! - இத்யாதி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இலட்சியம் பலிதமாகும் என்று காது கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். அவளை விரும்பிக் கேட்டவர் பலரை மறுத்துவிட்டாள் கெஸயா. இந்த மாதிரியான அநுபவத்தில் அவள் ஒன்று கற்றுக் கொண்டாள். மொட்டையாக 'மாட்டேன்' என்று சொல்லுவதை விட, வருகிற ஆசாமியை 'நையாண்டி' செய்து தலையிறங்க வைத்துவிட்டால் மறுப்பதில் ஒரு சிரமமும் இல்லை. இந்த மறுப்பு மான்மியத்தில் முக்கியமாக ஜான் ஹாரைக்கின் முயற்சிதான் பிரமாதமாக ஊரார் ஞாபகத்தில் இருக்கிறது. கெஸயா இதைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை. அவனே குடிவெறியில் உளறிக் கொட்டிவிட்டான். அவன் காதல் பித்தேறியவனாகக் காலில் விழுந்த பொழுது, தலையில் ஒரு வாளித் தண்ணீரைக் கொட்டிவிட்டு, பின்பு அவனிடம், "ஐயோ, பாவமே! உனக்கு வலிப்பு வந்துவிட்டது என்றல்லவோ பயந்துவிட்டேன்!" என்றாளாம். ஒரே ஒரு சமயந்தான் அவள் இதயம் சிறிது இளகியது. ராக்பி எட்ஜ் என்ற இடத்தைச் சேர்ந்த ரேவ் பார்மூர் தன்னைக் கலியாணம் செய்து கொள்ளும்படி அவளிடம் கேட்டான். அவள் இறுதியில் மறுத்துவிட்டாலும், மனம் சிறிது இரங்கியது என்பது மட்டிலும் நிச்சயம். காரணம் இருவரும் சிறு பிராயத்திலிருந்தே தோழராக விளையாடி வளர்ந்தார்கள் என்று கூறுகிறார்கள். அவள் மறுத்ததற்குக் காரணம் தன் ஏழ்மை ஸ்திதியே என்று அவன் கூறிக் கொண்டிருந்தான். பாதையில் ஒரு திருப்பம். குத்துச் செடிகள் நன்றாக முளைத்து அடர்ந்த இடம். கெஸயா அங்கு நின்று சிறிது யோசித்தாள். சாலை வழியாகவே நடப்பதென்றால் இன்னும் இரண்டு மைல் தூரம் புழுதியில் செல்லவேண்டும். குறுக்கு வழியாக இடையிலிருக்கும் குட்டிச் சுவர்களை ஏறிக் குதித்துச் சென்றால் கால்மணி நேரத்தில் ஹாதர்டன் வீட்டிற்குச் சென்று விடலாம். "போனால்தான் என்ன? ரேவ் பார்மூர் நிலந்தான். இப்பொழுது அங்கே நிற்கவா போகிறான்! வெயிலோ கொளுத்துகிறது!" என்று நினைத்தாள். இடையில் இருந்த கூடையைச் சிற்றோடையின் கரையில் வைத்துவிட்டு, மரத்து மூடுகளின் இடைவழியில் நுழைந்தாள். முதலில்தான் சிறிது கஷ்டம். பின்பு சிற்றோடையின் கரைமீது சாவதானமாக நடக்கலாம். வயல் வரப்புகளில் புஷ்பங்கள் செறிந்த குத்துச் செடிகள். இவற்றின் இடை வழியாக நடந்து, முதல் சுவர்ப் பக்கம் நெருங்கினாள். அந்த இடத்தில் சுவர் சிறிது உயரம். கொஞ்சதூரம் சென்றால் கழுத்தளவாவது இருக்கும். சிறிது சிரமப்பட்டு ஏறி, அப்புறம் குதித்து விடலாம். அவள் அதன் மீது கை வைத்து ஏறினதுதான் தாமதம். சுவர் கடகடவென்று ஆட ஆரம்பித்தது. நல்ல காலம், உடனே மறுபக்கம் குதித்துவிட்டாள். ஆனால் சுவர் இடிந்து, கற்கள் பொலபொல வென்று உதிர்ந்தன. மெதுவாக எழுந்து நின்றாள். அவள் மனத்தில் பயம் அகன்று, சற்று விஷமப் புன்சிரிப்புத் தோன்றியது. "வேணும், வேண்டுமானால் பார்மூர் திரும்பக் கட்டட்டுமே! இன்னொருத்தரானால், இந்த மாதிரி இடித்ததற்காகக் கட்டாயம் பணம் கொடுக்கத்தான் செய்வேன்! ரேவ் பார்மூர்தானே, திரும்பக் கட்டட்டுமே!" என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டு, மேலே நடக்கத் திரும்பினாள். திரும்பியதுதான் தாமதம்! அவள் பக்கத்தில், சிறிது தூரத்தில், ரேவ் பார்மூர் உட்கார்ந்து கத்தியால் குச்சி முளைகளைச் சீவிக்கொண்டிருந்தான். அவன் ஒரு மாதிரி சிரித்துக் கொண்டு எழுந்தான். "கெஸயா, கொஞ்ச நேரத்திற்கு முன்பு என்ன சொன்னாய் என்று கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். இங்கு இருக்கும் வளமை தெரியுமா? இடித்தவர்தான் கட்டிக் கொடுக்க வேண்டும். நீதான் அதைச் செய்ய வேண்டும்." முறுக்காக அவனைத் திரும்பிப் பார்த்து, "மாட்டேன்" என்றாள் அவள். "நீ கட்டுவாய்; உன்னைக் கட்ட வைக்கிறேன், பார்!" அவள் முகம் சிவந்தது. "எனக்கு இஷ்ட மில்லாததைச் செய்ய வைக்கத் தைரியமிருக்கிறதோ? உன்னால் முடிந்தால் கெட்டிக்காரன்தான்! வழிவிடு, போகவேண்டும்!" "வழி விடமாட்டேன். என் நிலத்தை மிதித்துக்கொண்டு போவாயோ? போனால், துராக்கிருதமாய் நிலத்தில் பிரவேசித்தாய் என்று போலீசாருக்கு எழுதி வைப்பேன்." "வழி விடாவிட்டால் கத்துவேன். யாராவது உதவிக்கு வருவார்கள். அப்பொழுது!" "இஷ்டம் போல் கத்திப் பார்! யாரும் வர மாட்டார்கள். சுவரைக் கட்டிவிட்டு மற்ற வேலையைப் பார்!" "இம்மாதிரி என்னைத் தொந்திரவு செய்வதற்கு நீ ஒரு மிருக ஜன்மம்தான். சுவரைக் கட்ட எனக்கு எப்படித் தெரியும்?" அவளைச் சிறிது இரக்கத்துடன் பார்த்தான். "இன்றைக்கு நடப்பது உனக்கு ஒரு படிப்பினை. அன்றைக்கு என்னைக் கேலிசெய்தாய்! இன்றைக்கு நான் கேலி செய்கிறேன்! கீழே சரிந்ததே அதில் பெரிய கற்களை எடுத்து முதலில் அடுக்கு, பின்னால் சின்னது..." அவள் அவனை 'மணந்து கொள்ள மாட்டேன்' என்று சொன்ன பிறகு, இன்றுதான் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். உடனே பார்மூர், முகத்தைக் கோபம் போல் கடுகடுப்பாக்கிக்கொண்டு, 'உம்'மென்று நின்றான். அவள் உடனே கையிலிருந்த 'குளோவ்' என்ற கையுறையை எடுத்து விட்டாள். அவள் உதடுகள் சிறிது துடித்தன. சிரிப்போ அழுகையோ என்று அவளுக்கே தெரியவில்லை. கண்கள் பிரகாசித்தன. "மனுஷாள் என்றால் என்ன வெறுப்பாக இருக்கிறது! செய்துதான் ஆகவேண்டுமென்றால் செய்கிறேன், செய்தாலும் பரவாயில்லை!" என்றாள். உடனே பார்மூர் வாய்விட்டுச் சிரித்துவிட்டு, "உன் பாவம் என்னைச் சுற்ற வேண்டாம். சிரமம் அதிகமானதும் உன்னை விட்டு விடுகிறேன். பெரிய கல்லை நான் தூக்குகிறேன். சின்னதை நீ பொறுக்கு" என்றான். இருவரும் மௌனமாகக் கற்களை எடுத்து எடுத்து அடுக்க ஆரம்பித்தார்கள். அவள், உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு, வேண்டுமென்றே கழற்சிக்காய் போன்ற சின்னக் கற்களைப் பொறுக்கி வருவதைக் கவனித்தான். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து வர ஐந்து நிமிஷம். இரண்டு வரிசை வரை இருவரும் பேசவில்லை. "இந்த மாதிரி கல்லெடுத்தால் ஒரு நாள் பூரா ஆகும். மரத்தடியிலே சாப்பாடு இருக்கிறது. இரண்டு பேரும் சாப்பிடுவோமா?" "ஊரார் என்ன சொல்லுவார்கள்! நான் மாட்டவே மாட்டேன்" என்று மெதுவாகச் சொன்னாள். "தெரிந்தால் என்ன? நான் ஒருவரிடமும் சொல்லமாட்டேன்!" வேறு வழியில்லை. ரொட்டியும் பாலாடையும் தொண்டையில் விக்குவதுபோல் வெறுப்பாக இருந்தது. அவள் பாத்திரத்தில் வைத்திருந்ததில் ஒரு சொட்டுக்கூடக் குடிக்கவில்லை. கெஸயா சுவர் கட்டும் வேலையைச் சீக்கிரம் முடித்துவிட்டுப் போகத் தயாரானாள். "சாப்பிட்டதும் சுருட்டுப் பிடிக்காமல் ஒன்றும் முடியாது" என்று சொல்லிவிட்டுப் பழங்கதைகளைப் பேச ஆரம்பித்தான் பார்மூர். அவள் கேட்காதவள் போல் முகத்தை அப்புறம் திருப்பிக்கொண்டாள். ஆனால் பார்மூர் வாய் ஓய்வதாக இல்லை. கெஸயா எழுந்து கற்களைப் பொறுக்கிக் குவிக்க ஆரம்பித்தாள். வேகமாக வேலை செய்யச் செய்ய, கற்கள் தான் சேர்ந்த பாடில்லை. மாலை நான்கு மணி மட்டும் சுவரில் பாதிவரைதான் அடுக்கி முடிந்தது. கெஸயாவுக்கு அழுகை தொண்டையை அடைத்தது, அழுதுவிட்டாள். இதைப் பார்மூர் கேட்டுவிட்டான். "கெஸயா, நீ மிகவும் சோர்ந்துவிட்டாய். போய் வா! மீதியை நான் வைத்துக்கொள்ளுகிறேன்" என்றான் பார்மூர். அவள் அவன் சொல்வதைக் கேட்கவில்லை. கண்களைத் திறந்து துடைத்துக்கொண்டு, வெகு வேகமாகக் கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் மானத்துடன் வேலை செய்கிறாள் என்று கண்ட பார்மூர், வேகமாகக் கல்லை எடுத்து அடுக்க ஆரம்பித்தான். இரண்டு மணி நேரத்தில் சுவர் பழையபடியாயிற்று. கெஸயா, உடனே கூடையை எடுத்துக்கொண்டு, வீட்டை நோக்கி நடந்தாள். அவள், தலையைக் குனிந்துகொண்டு, ஒன்றும் பேசாது சோர்ந்து நடந்தாள். தான் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துவிட்டதாக நினைத்து, பார்மூர் மிகவும் வருந்தினான். அவன் மனத்தில் இரக்கம் உண்டாயிற்று. அவள் வெகு தூரம் போகுமுன் அவளிடம் ஓடிச் சென்று, "கெஸயா என்னை மன்னித்துக்கொள்!" என்றான். கூடையைக் கீழே இறக்கிவிட்டு, கைகளை அவனிடம் காண்பித்தாள். உள்ளங்கை, விரல் நுனிகளெல்லாம் கீறி ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இதைக் கண்டதும் அவன் கண்களில் நீர் ததும்பிற்று. "கெஸயா! என்னை மன்னிக்க மாட்டாயா?" அவள் முகம் சிறிது பிரகாச மடைந்தது. "நீ மிருகமாக நடந்தாய்! நான் உன்னை மன்னிக்கிறேன். மறுபடியும் உன் சுவரை இடிக்கிறேன், பார்!" "உன் மீது ஆசையில்லாவிட்டால் இம்மாதிரி செய்திருக்க மாட்டேன்." "அதெல்லாம் சரிதான் ரேவ். நீதான் எஜமான். ராஜா!" அவனுக்கு ஒரு முத்தமளித்து விட்டு ஓடி விட்டாள். |