துன்பத்திற்கு மாற்று

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ - இத்தாலி

     நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத் தென்படும்.

     ஆமாம், இந்தச் சித்தாந்தம் எல்லாம் சரிதான்; நான் ஒப்புக் கொள்ளுகிறேன்; உமக்கு மிகவும் பிரியமான ஒருவர் இறந்து, இந்தப் பூமியிலேயே மண்ணோடு மண்ணாகக் கலந்து போகிறார் என்று வைத்துக் கொள்ளும் - அப்பொழுது நீர் என்ன செய்வீர்?

     கொஞ்சம் சிரமமான காரியந்தான். மேலும் அந்தப் பிரிவினால் ஏற்படும் துன்பத்தை மறக்க முயற்சிக்கையில்தான், இதன் சிரமம், பல மடங்கு பெரிதாக வளர்ந்து தோன்றும். ஏப்ரல் மாதத்தின் மனோகரமான அஸ்தமன சூரிய ஒளியில் மலர்ந்து தலை தூக்கும் வெள்ளைப் பூக்கள் உமது கண்களில் படுகின்றன. உமது மனத்தில் புதிய உணர்ச்சி பெருகுகிறது. ஆனால் அதே சமயத்திலே உமது மனத்தின் மூலையில், இறந்தவன் இனி இந்த அழகுகளை அநுபவிக்க முடியாதே என்ற எண்ணம் பிறக்கிறது.

     சரி, இந்த மாதிரிச் சமயத்தில் உனக்கு ஒரு மகன் இறந்துவிட்டால் பிரிவுத் துன்பம் எப்படி மறக்கும்? அதற்குத்தான் நான் ஒன்று சொல்லுகிறேன்; இத் துன்பத்திற்கு மாற்று இருக்கிறது என்று எதிர்பார்க்க வேண்டாம். இந்த எண்ணத்தினால் திருப்தியடையவும், இன்பத்திலும் துன்பத்திலும் என்ன இருக்கிறது? அவற்றை நாம் செவ்வாய் மண்டலத்துடனும், விருச்சிக நட்சத்திரத்துடனும் ஒப்பிடும் பொழுது, ஒன்றுமில்லைதான். அந்த எண்ணத்திலே திருப்தியடைந்து விடவும்.

     இந்தப் பழக்கம் லேசில் வந்துவிடாது. ஆனால், இது எளிதில் அடையக் கூடிய நிலை என்று நான் எப்பொழுதாவது சொன்னேனா? வான சாஸ்திரம் படித்து அறிந்து கொள்ளுவதற்கே கஷ்டம்; அதிலும் அதைக் கொண்டு வந்து நமது நடைமுறைச் சம்பவங்களுக்குள் புகுத்துவது என்றால் லேசான காரியமா?

     மேலும் உனது போக்கே விபரீதமானது. முன்னுக்குப் பின் சம்பந்தமில்லாதது. இந்த உலகத்துக்கு, ஆமாம், இந்தப் பூமி என்ற கிரக கோளத்திற்கு - ஒரு மதிப்பிருக்கிறது; மனித உணர்ச்சியுடன் ஒத்துப் பார்க்கும்பொழுது இந்தக் கிரகம் மற்றவைகளைவிட சின்ன விஷயமாகத் தெரியாது என்று நீர் சொல்லுகிறீர். அது உப்பில்லாப் பேச்சு. பட்டுப்பூச்சிப் புழு தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்ட கூண்டிலிருந்து சித்தாந்தம் செய்வது போல, நீரும் உமது பெரிய துன்பத்திலே சிரத்தையை லயிக்கவிட்டு, உம்மைச் சுற்றிலும் நடைபெறும் அகில சக்திகளின் கதியைக் கூடக் கவனிக்கத் திறமையற்று இருக்கிறீர்.

     நீர் என்ன பதில் சொல்லப் போகிறீர் என்று எனக்குத் தெரியும். உணர்ச்சி கண்ணை மறைக்கும் பொழுது, கற்பனை வேறு எதில் லயிக்க முடியும் என்று பதிலளிக்கிறீர்; ஆனால், நான் உம்மை அப்படி ஒன்றும் செய்யச் சொல்லவில்லையே! இருந்தாலும், உமது மனந்தான் நீர் செய்ய முடியாது என்று சொல்லுகிறது போல் செய்கிறது. 'அப்படி இருந்திருக்கக்கூடாதா? இப்படி இல்லாமல் இருந்திருக்கலாகாதா?' என்றெல்லாம் ஏங்குவதும் உமது மனந்தான்.

     ஆனால் இந்த ஆசைகளால் ஏதாவது பிரயோஜனம் உண்டா? உமது வாழ்க்கை இப்பொழுது இருப்பது போல இல்லாமலிருந்தால், உமக்குத் தற்பொழுது தோன்றும் உணர்ச்சிகள் - நம்பிக்கைகள் - ஆசைகள் - யாவும் ஏன் எழப் போகின்றன? இதனால் விளைவதென்ன தெரியுமா? நீர் நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து ஏங்கும் நிலைகள் இருக்கின்றனவே, அவற்றைப் பெற்றவர்களைக் கண்டால், உமக்குப் பிடிக்காது. காரணம் என்ன தெரியுமா? நீர் ஆசைப்படும் நிலையில் இருப்பவர்கள் அதை அநுபவிக்கத் திறமையற்று அலைகிறார்கள் என்று நினைக்கின்றீர். நீர் அந்த நிலையில் இருந்தால்...? எவ்வளவு தூரம் அவர்கள் திருப்தியடையத் திறமையற்றிருக்கிறார்கள் என்று அவர்கள் மீது உமக்குக் கோபம் வருகிறது. இந்த உணர்ச்சி அசட்டுத்தனமானது; இதற்குத்தான் பொறாமை என்று பெயர். நீர் உமது நிலையிலிருந்து மாறவேண்டும் என்று ஆசைப்படாவிட்டால், இது எழாது.

     எழாது என்பது திட்டந்தான். ஒரு உதாரணம் சொல்லுகிறேன் - அது என் அநுபவம்.

*****

     இந்த உண்மையை ஒரு நாள் இரவு கண்டுபிடித்தேன். எப்பொழுது தெரியுமா? எனது தாயார் உயிர்ப் பிணமாக, வாழ்க்கையின் எல்லைக் கோட்டில் அங்குமிங்குமாக இழுப்புண்பட்டிருக்கும் பொழுது. அவளுக்காக, அவள் சாவதற்காகப் பல மாதங்கள் வரை இரவு முழுவதும் கண் இமைக்காது அவள் பக்கத்தில் விழித்திருந்தேன். படுத்த படுக்கையாகப் பல மாதங்கள் வரை கிடந்தாள்.

     என் மனைவிக்கு அவள் மாமியார். குழந்தைகளுக்கு என்னைப் பெற்ற யாரோ ஒருத்தி. இதை எதற்காகச் சொல்லுகிறேன் தெரியுமா? நானும் என் மரணப் படுக்கையில் கிடக்கும்பொழுது அவர்களுள் ஒருவர் எனக்காகக் கண் விழித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அர்த்தமாகிறதா? அன்று இரவு இறப்பவள் என் தாயார்; அதனால் காத்திருக்கும் வேலை அவர்களுடையதல்ல, என்னுடையது.

     "இருந்தாலும் அவர்களுடைய பாட்டியார்தானே!" என்று நீர் சொல்லுகிறீர். ஆமாம்! அவர்களுடைய பாட்டியார்தான்; 'அருமைப் பாட்டி.' மேலும், பகல் முழுவதும் உடல் சோர உழைத்துவிட்டு, இரவின் குளிரில் இந்த மாதிரித் தனியாக நிற்க வைப்பதை விட்டுச் சிறிது இரக்கம் காண்பித்திருக்கலாம்.

     உண்மை என்னவென்றால், பாட்டியாரின் காலம் - அதாவது 'அருமைப் பாட்டி' யின் காலம் - வெகு நாட்களுக்கு முன்பே கழிந்து விட்டது. உடைந்த பொம்மை மீது குழந்தைகளுக்குப் பிரியமிருக்குமா? ஆபரேஷன் நடந்த அன்றைய தினத்திலிருந்து குழந்தைகளுக்கு அவள் மீது பிடிப்பு விட்டு விட்டது. படுத்த படுக்கையாய்விட்ட உயிர்ப் பிணமான பாட்டியினால் அவர்களுக்கு என்ன பெருமை! மேலும் பாட்டிக்குக் காதே கேட்காது. வயதோ எண்பத்தைந்து; சுற்றிலும் என்ன நடக்கிறது என்று உணரச் சக்தியில்லாத வெறும் சதைக் கோளம். அதைப் பொறுமையுடன் தாங்குவதற்கு அன்பு இல்லாவிட்டால் முடியுமா?

     ஆனால் தூக்கத்தின் முன்பு எந்த அன்புதான் நிற்கும்? வாழ்க்கையில் சில அவசியங்கள் உண்டு. எவ்வளவுதான் பாசம் இருந்தாலும் மனவுறுதிக்கு எதிராகவாவது அவற்றைச் சாந்தி செய்துதான் ஆக வேண்டும்.

     பகல் முழுவதும் நல்ல வேலை செய்துவிட்டு, இரண்டு மூன்று நாள் இரவில் தூங்காது இருந்து பாருங்கள். பகல் முழுவதும் ஒரு வேலையும் செய்யாது திரிந்துவிட்டு, இராத்திரியில் நிர்விசாரமாகப் போர்வைக்குள் கிடந்து அவர்கள் தூங்க வேண்டும்; நான் மருந்துப் பாட்டில்களின் அருகில் குளிரால் வெடவெடத்துக்கொண்டு விழித்திருக்க வேண்டும்! ஓடிச் சென்று அவர்களை உலுப்பி எழுப்பிக் குளிரில் என்னைப்போல் நிற்க வைக்க வேண்டும் என்ற பேயாசை எழுந்தது.

     ஆனால் அதே நிமிஷத்தில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதை என் உடலநுபவமாக உணர்ந்தேன். அவர்கள் மீது எழுந்த வெறுப்பு மறைந்தது. விதியின் கொடுமை மீது சாடினேன். "இவள் கஷ்டத்தை நிவர்த்திக்க ஆவியைப் போக்க மாட்டாயா, கடவுளே!" என்று கூட நினைத்து விட்டேன்.

     சிறிது நேரத்தில் இழுப்பும் பெருமூச்சும் நின்றது; அத்துடன் அவ்வளவுதான். அறை முழுதிலும் பயங்கர அமைதி நிறைந்தது. என்ன காரணம் என்று புரியவில்லை. நான் மெதுவாகத் தலையைத் திருப்பி அவள் இறந்து விட்டாளா என்று குனிந்து பார்க்கும்பொழுது சுவரில் இருந்த கண்ணாடியில் எனது பிம்பத்தைப் பார்த்தேன்.

     அதைப் பார்க்கவே பயமாக இருந்தது. அவள் இறக்கும் பொழுது என் முகத்தில் காணப்பட்ட குறி, பயமும் சந்தோஷமும் கலந்த குறி, அதில் தென்பட்டது.

     மூச்சு திக்குமுக்காடியது. திணறிக் கொண்டு, ஏதோ ஓர் பெரிய குற்றத்தைச் செய்தவன் போல் கைகளால் முகத்தை மறைத்தேன். உடனே எனக்கு அழுகை வந்தது; குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதேன்! எனது சிறு குழந்தைப் பருவத்திலிருந்து என்னைப் பார்த்து இதுவரை என்னுடன் வளர்ந்த அவளுடைய வாழ்க்கைப் படம் முன் விரிந்தது.

     சிறிது நேரத்தில் எனக்கு அந்த அறையிலுள்ள ஒன்றையும் பார்க்கச் சகிக்கவில்லை. ஒன்றுந் தோன்றவில்லை. எனது சிறிய புத்திரியின் நாற்காலியில் உட்கார்ந்தேன். அவள் இன்னும் தன் பாடங்களைப் பாட்டியின் அறையிலேயே உட்கார்ந்து படித்தாள். அதற்கப்புறம் இரவு முழுவதும் எப்படிக் கழிந்தது என்று எனக்குத் தெரியாது. விடியற் காலையில் நான் அவளுடைய பூகோளப் புஸ்தகத்தில் 75-ம் பக்கத்தில் இருப்பதாக உணர்ந்தேன். இரவு முழுவதிலும் எத்தனை நாடுகள் சுற்றினேன் தெரியுமா? எத்தனை மலைச் சிகரங்கள், ஆற்றங்கரைகள், சமவெளிகள், பீடபூமிகள், தலைநகரங்கள்! - அது என்னுடைய சிறிய மகளின் பூகோளப் பாடப் புஸ்தகம்.

*****

     ஆமாம், துன்பத்திற்கு ஒரு மாற்றுக் கண்டுபிடித்துவிட்டேன். அது என்ன தெரியுமா? பூகோள சாஸ்திரம். நமது துன்பத்திற்குச் சிறிதும் சம்பந்தம் இல்லாத - தொடர்பில்லாத - ஒரு சமாசாரம், நமது விருப்பு வெறுப்புக்களைக் கவனியாது நடைபெறுகிறது என்று உணர வேண்டும். நமது துன்பத்தினால் ஜீலம் நதி வரண்டு விடப் போகிறதா? அல்லது நமது சந்தோஷத்தால் ஹிமாலய சிகரம் எழுந்து கூத்தாடப் போகிறதா? உலகில் உம்மைத் தவிர வேறு பல அம்சங்கள் இருக்கின்றன என்பதைப் பூகோள சாஸ்திரம் படித்தால்தான் அறியலாம். உண்மையை அன்று இரவு கண்டு பிடித்தேன்.

     தொந்தரவுகளிலிருந்து விடுதலையாவதற்கு ஒரு சுருக்கமான வழி கண்டுபிடித்தேன் - பூகோள சாஸ்திரத்திலிருந்து என் நான்கு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு தனிப் பிரதேசம் ஒதுக்கினேன். என் மனைவிக்கு மட்டிலும் ஒரு தனி நாடு. உதாரணமாக அவள் தொந்தரவு கொடுக்கிறாள் என்று வைத்துக்கொள்ளும், அவளுக்குக் கொடுக்கப்பட்ட நாடு வட இந்தியா. நான் விந்திய மலை மீது நின்று கொண்டு, "கங்கை, ஸிந்து, பிரம்மபுத்திரா!" என்பேன்.

     "உமக்கென்ன பைத்தியமா?" என்பாள்.

     "இல்லையடி - அவை வட இந்தியாவிலுள்ள நதிகள்!"

     "வட இந்தியாவிலுள்ள நதிகள்! அவைகளைப் பற்றி எனக்கென்ன?"

     "ஒன்றுமில்லை - அவைகள் இப்பொழுது ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. அதை உன்னால் மறுக்க முடியாது. அவற்றின் கரையோரங்களில் நாணல் புல் முளைத்திருக்கும். நாணலுக்கும் அந்த ஆறுகளுக்கும் என்ன சம்பந்தம்! ஒன்றுமில்லைதான்."

     "என்ன சும்மா பொரிகிறீர்களே! அர்த்தமில்லாத பேச்சு. நான் உங்களை என்ன கேட்டேன் தெரியுமா?"

     "ஆமாடி! நீ என்னவோ கேட்டாய். இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் வட இந்தியா இருக்கிறதே -"

     இதுதான் என் தந்திரம். நான் கண்டு பிடித்த உண்மை.