துறவி

ராபர்ட் நியூமான் - ஜெர்மனி

     "நான் முதல் முதலில் ஐரோப்பாவிலிருந்து இந்தக் கீழப் பிரதேசங்களுக்கு வந்தபொழுது அது நடந்தது" என்று அவன் ஆரம்பித்தான்.

     அவன் எங்கள் கப்பலின் காப்டன்; பெயர் வான்டர்லான். ஜாதியில் டச்சுக்காரன். நெட்டையான ஒல்லி ஆசாமி. வயசு அறுபது. கிழக்குப் பகுதிகளில் நீண்ட காலமாக வசித்ததின் பலன் அவனுக்குக் கிட்டியிருந்தாலும் முகத்தில் அறுபது வருஷங்களின் முத்திரை தென்படவில்லை. துறவி மனப்பான்மையும் அவனது தொழிலுக்கே இயற்கையாக அமைந்தது.

     "... இப்பொழுது நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ அப்படித்தான் அப்பொழுதும். அந்தக் காலத்தில் வயசு வாலிபத்தைத் தாண்டிவிட்டது. டச்சுக் கடற்படையில் லெப்டினன்ட் உத்தியோகம் எனக்கு.

     "பாக்ஸர் கலகத்தை அடக்க மற்ற வல்லரசுகளைப் போல ஹாலந்தும் ஒரு யுத்தக் கப்பல் அனுப்பியது; அதாவது, இங்குள்ள 'அயல்' நாட்டுக் குடியேற்றங்களை உள்ளூர்க்காரர் தாக்கிவிடாமல் பாதுகாக்க. எனக்கு அந்தக் கப்பலில்தான் வேலை.

     "இந்தக் கூட்டுக் கப்பல் படை பிரெஞ்சு அட்மிரல் பெல்லட் தலைமையில்தான் வந்தது என்பதை இப்பொழுது சொல்லுவதில் ஒன்றுமில்லை. இங்கிலீஷ் குரூய்ஸர் (யுத்தக் கப்பல்களில் ஒரு ரகம்) கென்டில் ஒரு நாட்டியம் நடந்தது; அப்பொழுதுதான் அவருக்குப் பரிச்சயம் செய்து வைக்கப்பட்டேன். அந்தத் தினத்திலிருந்து என்ன காரணமோ - என்னிடம் அந்தரங்கமாகிவிட்டார்.

     "ஸிங் - டாவ் அருகில் வந்தோம்; அங்குதான் ஐரோப்பியக் குடியேற்றம் ரொம்பக் கெடுபிடியாகத் தாக்கப்பட்டது.

     "நகரத்தின் மீதும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் குண்டுகளை வீசினோம். இரவோடு இரவாய்ச் சீனர்கள் பின் வாங்கி விட்டார்கள். மருந்துக்குக்கூட ஒரு அடையாளமில்லை. அப்படி ஓட்டம்! வடக்குப் பகுதிகளில் சென்று அமைதியையும் கட்டுப்பாட்டையும் நிலைநிறுத்த மறுநாள் காலை புறப்படுவது என்று நினைத்திருந்தோம். ஆனால் அந்த இராத்திரியே சீனர்கள் பெரும் படையுடன் வந்து, காவல் படைகள் மீது திடீரென்று பாய்ந்து தொலைத்துவிட்டு, இங்கிலீஷ் ஸ்தானீகர் காரியாலயத்தைத் தாக்கி, அங்கிருந்த இருபத்தெட்டு நபர்களைக் கொன்று, கட்டடத்தைத் தீ வைத்தார்கள். அதில் நல்ல விலையுயர்ந்த புஸ்தகங்கள் பல எரிந்து சாம்பலாயின. இந்தக் கலாட்டாவில் ஏற்பட்ட கூக்குரல் எங்களுக்குக் கேட்டது. ஓங்கி எரியும் தீ நாக்குகளும் எங்களுக்குத் தெரிந்தன. உதவி கோரி ஆள் வருமுன்பு பனிரண்டு படைகளை இறக்கி விட்டோ ம். அவையெல்லாம் ஜெர்மன், இங்கிலீஷ், இத்தாலிய, டச்சுப் படைகள். அதே இராத்திரி கை - மிஷின் பீரங்கிகளையும், கிரனேட்களையும் கொஞ்சம் தாராளமாகவே உபயோகித்தோம். கை - கிரனேட்கள் அப்பொழுதுதான் பழக்கத்தில் வந்து கொண்டிருந்தன. இரண்டு மணி நேரந்தான்; சிங்கிப் பயல்களை (சீனர்களை அவமதிக்க வெள்ளையர் உபயோகிக்கும் பதம்) விரட்டி விட்டோ ம். நானூறு பயல்கள் சாக்கடையில் செத்துக் கிடந்தார்கள். சுமார் இருநூற்று நாற்பது பயல்களைச் சிறைப் பிடித்து ஓடிப்போகாமல் கட்டிப் போட்டோம்.

     "மறுநாட் காலை 8-மணி இருக்கும். அட்மிரல்கள் சபை கூடினார்கள். 8-15க்குள் அவ்வளவு பெயரையும் சுட்டுத் தள்ளி விடுவது என்று முடிவு கட்டப்பட்டது. ஐரோப்பியக் குடியேற்றத்திற்கும் சீனர்கள் வசிக்கும் இடத்திற்குமிடையில் வைத்து மற்றவர்களுக்கு எச்சரிக்கை காண்பிக்கச் சுட்டுக் கொல்வது என்று முடிவு கட்டப்பட்டது. இந்தச் சிங்கிப் பயல்கள் தண்டனையை நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது எங்கள் உத்தேசம்.

     "அரைமணி நேரம் கழித்து, கொலைத் தண்டனை அளிக்கும் பட்டாளத்தின் துப்பாக்கி உறுமல் கேட்டது.

     "நானும் எத்தனையோ தூக்குத் தண்டனைகளைப் பார்த்திருக்கிறேன்; மூன்று யுத்தகளங்களில் அவற்றைப் பார்த்திருக்கிறேன். ஒழுக்கத்தை நிலைநிறுத்துவதற்காக உள்ள ராணுவப் பகுதியில் உத்தியோக முறையில் சம்பந்தம் வைத்துக்கொண்டிருந்தபொழுதும் பார்த்திருக்கிறேன். பொழுது போகவில்லை. அதற்காக நான் அங்கு போனேன் என்று நான் சொல்லுவதை நீங்கள் நம்பவே நான் அதை உங்களுக்குச் சொன்னேன். நிஜமாக எனக்குப் பொழுது போகவில்லை.

     "நான் அங்கு போனேன். சுதேசிகள் வசிக்கும் இடத்திற்குச் சுமார் 400 கெஜ தூரத்திலுள்ள மைதான வெளி மைதானத்தின் அந்தப் பக்க ஓரத்தில் இரண்டு கிடங்குகள். ஜன்னலே கிடையாது. வெள்ளை வெளேர் என்று நீண்டு உயர்ந்த சுவர். நான் போகுமுன்பே தண்டனை உற்சவம் ஆரம்பித்து விட்டது. அந்த இருநூற்று நாற்பது கைதிகளில் நாற்பதுபேர் தரையில் பிரேதமாகக் கிடக்கின்றனர். மற்றவர்கள் யாவரும் சுவரோரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். கால்கள் மட்டிலும் கட்டப்பட்டிருக்கின்றன. எதிரே சுட்டுத் தள்ளிக்கொண்டிருக்கும் படை இத்தாலியப் படை - ஒரு ஜெர்மன் உத்தியோகஸ்தர் தலைமையில் நின்றது. அவன் குள்ளம்; தடியன். மீயர் என்பது அவன் பெயர் என்று இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதைப் போல, அன்றைக்கிருந்த சகிக்க முடியாத புழுக்கமும் நினைப்பில் இருக்கிறது. இந்தப் பக்கத்தில் ஆகஸ்ட் மாதமெல்லாம் இப்படித்தான். படையோ, சில மாதங்களுக்கு முன்புதான் திரட்டப்பட்டிருக்க வேண்டும். எல்லாம் சிறு பையன்கள். கொடுக்கப்பட்டிருக்கும் வேலையைக் கண்டு பயந்தே, அவர்கள் கண்கள் பீதியில் வெளியே தள்ளிக்கொண்டு நின்றன. நான் போன சமயத்தில் பீதி சோர்வாக மாறியது. குண்டுகள் மனிதக் குறிகளைத் தவறி சுவரில் பட்டுத் தெறித்தன. உஷ்ணமும் உணர்ச்சியும் உத்தியோகஸ்தரை ரொம்பப் பாதித்து விட்டது. செக்கச் சிவந்த முகம் வெளிறிக் கொண்டு வந்தது. நான் போன சமயத்தில், சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி கையமர்த்தி நிறுத்தினான் என்றால் நீங்கள் ஆச்சரியப்பட மாட்டீர்கள்.

     "சுட்டுக் கொல்லப்படுவதற்காகக் காத்து நிற்கும் பயல்களை நெருங்கிக் கவனிக்க இதுதான் சந்தர்ப்பம். பல மாதிரி ஆசாமிகள். தலை நரைத்த கிழவன் முதல் பள்ளிக்கூடத்துப் பையன் வரை. கிழிந்த அழுக்குப் பிடித்த துணி அணிந்த தொழிலாளிகள்; நல்ல உடை அணிந்த பணக்காரர்கள். இவர்களுக்கும் கொலையாளிகளுக்கும் உள்ள வித்தியாசம்தான் என் கண்ணில் பட்டது. எல்லாரும், கிழவனானாலும் பையனானாலும், பணக்காரனோ ஏழையோ, யாவரும் கட்டப்பட்டிருந்தும், சந்தோஷமாக, சுமுகமாக, நின்று கொண்டிருந்தனர். தங்களுக்குச் சம்பந்தமில்லாத ஏதோ ஒன்றை வேடிக்கைப் பார்க்க வந்தவர்கள் போல நின்றுகொண்டிருந்தார்கள். அதில் இரண்டு பேருக்குள் தர்க்கம் மிக்க மரியாதையாக நடந்தது. மீயர் கையை உயர்த்திய பொழுது, அடுத்த குண்டு மாரிக்கு இலக்காக நிற்பவர்கள் இவ்விருவரும். ஒருவன் ஒல்லி, கிழவன்; மற்றவன் வாலிபன், - ஏதோ கௌரவத்திற்கு அறிகுறியான சங்கிலியை அணிந்திருந்தான். இருவரும் கைகளை ஆட்டிக்கொண்டு, புன்சிரிப்புடன், யார் முதலில் மறு உலகத்திற்குப் போகும் கௌரவத்தைப் பெறுவது என்பதைத் தர்க்கித்துக் கொண்டிருந்தார்கள். என்னால் நம்ப முடியவில்லை. இப்படியும் உண்டா? தடி உத்தியோகஸ்தன் மறுபடியும் கையை உயர்த்தினான். பனிரெண்டு வெடிகள் தீர்ந்தன. அந்த இரண்டு மரியாதைக்காரர்களும் புன்சிரிப்புடன் மஞ்சள் மண்ணைக் கவ்வினர்.

     "இது எனக்கு என்னமோ மாதிரியாக இருந்தது. ஆனால் நான் அதைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. சீட்டுக் கிழிக்கப்பட்ட லயன் வழியாக நடந்து நெஞ்சைத் திடப்படுத்திக் கொள்ள விரும்பினேன். தலையைத் திருப்பிப் பார்க்கவில்லை. என் பின்புறம் காது செவிடுபடும் ஓசைகளைக் கேட்காமல் இருக்கப் பிரம்மப் பிரயத்தனம் செய்தேன். இந்த இருநூற்றுச் சில்லறை அமைதியான முகங்களைத் தாண்டி கடைசி நபரண்டையில் வந்தேன்.

     "கடைசி ஆசாமி ரொம்ப நெட்டை; என் தலைக்கு மேல் உயரம். எனக்கு முப்பது வயசுக்கு மூத்தவன். இவன் கெடு வருவதற்கு இன்னும் 50 நபர்கள் தான் பாக்கி. நேரம் வரும் வரை, இந்த மனிதன், ஒரு புஸ்தகத்தை விரித்துப் பிடித்துக்கொண்டு காத்திருந்தான். அவன் படித்துக் கொண்டிருந்தான். அவனை நெருங்கினேன். அவன் ரொம்ப அழுக்குப் பிடித்த உடைகளை அணிந்துகொண்டிருந்தான். ஆனால் மூக்கைத் துருவும் ஒரு விதமான வாசனை. அந்தப் புஸ்தகத்தைக் கையில் வாங்கினேன். அது 'புத்த பகவான் உபதேசங்கள்' - இங்கிலீஷில்.

     "'உனக்கு இங்கிலீஷ் தெரியுமா?' என்று கேட்டேன்.

     "அவன் தலையை அசைத்தான்; கையிலிருந்த புஸ்தகத்தை வாங்கிக் கொண்டான். மரியாதையாக, தலையிட்டுத் தொந்தரவு செய்வதை விரும்பவில்லை என்பதைக் காண்பித்துக் கொண்டு, விட்ட இடத்தைத் தேடிப்பிடித்து, மறுபடியும் வாசிக்க ஆரம்பித்தான்.

     "'இந்தப் புஸ்தகம் உனக்கு எங்கு கிடைத்தது?'

     "'இங்கிலீஷ் ஸ்தானீகர் வாசகசாலையில்' என்று தலையை நிமிர்ந்து பார்க்காமலே சொன்னான்.

     "'நீ பௌத்தனா?' என்று கேட்டேன்.

     "'இல்லை. இதற்குமுன் இந்தப் புஸ்தகத்தைப் பார்த்ததுகூடக் கிடையாது.'

     "அவன் மேற்கொண்டு வாசித்துக்கொண்டே சென்றான். அவனைத் தனியாக விட்டுப்போக மனமில்லை. நான் ஆச்சரியத்தால் பிரமித்துப் போனேன்.

     "'பாரையா! இன்னும் இருபது பேர்கூட உயிருடன் இல்லை! நீ இன்னும் நாலு நிமிஷந்தான் உசிருடன் இருப்பாய்! இப்படி வாசித்துக்கொண்டு நிற்கிறாயே!' என்று கத்தினேன்.

     "முதல் முறையாக என்னை ஏறிட்டுப் பார்த்தான். சரியான வார்த்தைகளுக்காகத் தயங்கினான்; குளறிக் குளறி இங்கிலீஷ் பேசினான்; எப்பொழுதும் 'ர'கரத்திற்கு 'ல'கரம். (சீனக்காரர்களுக்கு 'ர'கரம் வராது ; 'ல'கரத்தையே உபயோகிப்பார்கள்.)

     "நான்கு பேர் ஒருவர் பின் ஒருவராக செத்து விழுந்தார்கள். புஸ்தகத்தை நிறுத்துப் பார்ப்பதுபோலத் தூக்கிப் பிடித்தான் அவன்.

     "'இது கனமானது; இது அதைவிட முக்கியமானது' என்றான்.

     "என்ன காரணமோ? அவன் பதில் எனக்குக் கோபமூட்டியது. ஒரு வேளை அந்த இரக்கமற்ற வெக்கைதான் காரணமாக இருக்கும்.

     "'உன்னைச் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்பதை நினைத்துப் பாரய்யா!' என்று இரைந்தேன்.

     "அவனது கண்கள் புஸ்தகத்தை விட்டு மாறின. வற்றலான நீண்ட கையை உயர்த்தினான். மீயரை நோக்கி நீட்டிக் காண்பித்தான். அவன் பத்துப் பதினைந்தடி தூரத்தில் நின்றுதான் உத்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறான். 'அந்த மனிதன் முதலில் செத்துப் போவான்!' அதற்கப்புறம் எதையோ தேடுவது போல் சுற்றிப் பார்த்துவிட்டு, என்னைச் சுட்டிக்காட்டி, 'அதற்கப்புறம் இந்தக் கனவானும்' என்று சொல்லிவிட்டுப் புஸ்தகத்தில் மௌனமாகி விட்டான்.

     "நான் கிழவன்; இந்த வயசிலே கயிறு திரிக்க மாட்டேன். நீங்கள் நம்பலாம். புஸ்தகத்தை வைத்துக் கொண்டிருந்தவனுடன் பனிரண்டு பேரும் சுவர் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். நான் எண்ணினேன். அதற்கப்புறம் நான்கு பேர் காலியானார்கள். எட்டுப்பேர் மீதி. தலைமை உத்தியோகஸ்தன் மீயர் ஒரு காலில் சரிந்தான்; மற்றொரு காலும் தள்ளாடியது. தரையில் உருண்டு விட்டான். டாக்டருக்கு ஆள் அனுப்பினார்கள். வலிப்பு.

     "மற்றொரு உத்தியோகஸ்தன் தலைமை வகித்தான். அவன் உத்தரவில் நான்கு பேர் மிச்சம். அதில் ஒருவன் புஸ்தகத்தை வாசிக்கும் நபர். மீயர் செத்த பொழுது அவன் தலையை நிமிர்ந்து பார்க்கக்கூட இல்லை. அது அவனுக்கு ரொம்ப சகஜமான காரியமாகப் பட்டது. அந்தச் சமயத்தில் ஸீனியர் உத்தியோகஸ்தர்களும் அட்மிரல் பெல்லட்டும் வந்தனர். அட்மிரல் பெல்லட் நேராக என்னை நோக்கி வந்தார்.

     "'என்ன வான்டர்லான், உடம்புக்கென்ன? ஏன் இப்படி முகம் வெளிறிப் போயிருக்கிறது?' என்றார்.

     "நான் புஸ்தகம் வைத்திருப்பவனைச் சுட்டிக் காண்பித்தேன்.

     "'அவனை லயனில் இருந்து அப்புறப்படுத்த உத்தரவு கொடுங்கள்' என்று கேட்டுக்கொண்டேன்.

     "'அதற்கென்ன? அப்படியே செய்யேன்' என்றார் சிரித்துக்கொண்டு.

     "அவருக்கு வந்தனமளித்துவிட்டு அவன் கால் கட்டுக்களை அறுத்தெறிந்தேன். அவன் கையிலிருந்த புஸ்தகத்தை வாங்கி அவன் சட்டைப் பைக்குள் திணித்தேன். அவனை அழைத்துக்கொண்டு சுதேசிகள் வசிக்கும் பக்கத்தில் சென்றபொழுது, கடைசி மூன்று நபர்களும் மண்ணைக் கவ்வினர்.

     "அகழ் வெட்டியிருந்தது. அதற்குமேல் ஒரு பலகையைத் தூக்கிப் போட்டு, 'போய்விடு. நீ விடுதலை பெற்றாய்!' என்றேன்.

     "அவன் சுருக்கமாக, சிறிதும் ஆச்சரியம் தோன்றாமல், தலையை அசைத்தான். பரஸ்பரத் துப்பாக்கிப் பிரயோகம், அதாவது, யுத்தம் மறுபடியும் ஆரம்பித்து விட்டது. அகழிகளுக்கும் சீனர்கள் வசிக்குமிடத்திற்கும் இடையில் அவன் மெதுவாக நடந்து செல்லும் பொழுது, அவனைச் சுற்றி நாலா பக்கத்திலும் குண்டுகள் பறந்தன. முதல் வீட்டுக்கும் அவனிருந்த இடத்திற்கும் நூறு அடி இருக்கும். எதையோ நினைத்துக்கொண்டவன் போலத் திடீரென்று நின்றான். பையைத் தடவிப் பார்த்து 'புத்தனை' எடுத்தான்; விட்ட இடத்தைத் தேடிப் பிடித்து வாசித்துக் கொண்டே சென்றான்.

     "அவனைச் சூழ்ந்த நாலா பக்கத்திலும் குண்டுகள் பறந்தன.

     "ஏதோ ஒரு சந்தில் திரும்பி மறைந்தான். அதற்கப்புறம் நான் அவனைப் பார்க்கவில்லை."

     காப்டன் கதையைக் கேட்டு யாவரும் மௌனத்தில் ஆழ்ந்தனர்.

     முதலில் வாயைத் திறந்தவர் ஹெர் ஒபர் ஹாஸர்.

     "அந்தச் சீனன் உமக்கு முப்பது வயதுக்கு மூத்தவன் என்றீர். அவன் சாகுமுன் நீர் செத்துப் போவீர் என்று அவன் ஜோஸியம் சொன்னான். உமக்கு அறுபது வயது; அப்படியானால் சீனாக்காரனுக்குத் தொண்ணூறு வயது ஆகியிருக்க வேண்டுமே!" என்றார்.

     "அவனுக்குத் தொண்ணூறு வயதுதான் இப்பொழுது" என்றார் வான்டர்லான்.

     மற்றவர் பேசு முன் வேறொருவர் அந்நியர் மூலையிலிருந்து ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.