உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
வீடு திரும்பல் பீட்டர் எக் - நார்வே மாலுமி பெடர் ஸோல்பர்க்குடைய மனைவி வசித்த குடிசை, ஜனங்கள் பொதுவாக 'லூக்கள் தெரு' என்று சொல்லுவார்களே, அதற்கெதிரில் இருக்கிறது. குடிசையின் ஜன்னல் நன்றாகத் திறந்திருந்தது. அப்பொழுது பிற்பகல்; மேலும் ஜூன் மாதத்து மனோகரமான வெய்யிலடித்துக் கொண்டிருந்தது. விறைத்துப் போகும்படி குளிராட்டும் அந்தப் பகுதிகளில் சூரிய உஷ்ணம் லேசில் கிடைக்காத சுகம். தெருபக்கமாக முதுகைத் திருப்பிக் கொண்டு, மடியிலிருந்த துணிகளைத் தைத்துக் கொண்டிருந்தாள். தைத்த துணி சுத்தமாகப் பெருக்கப்பட்ட தரையில் விழுந்து கிடந்தது. சிறிது தூரத்தில் மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்த தையல் மிஷின்மீது குனிந்த வண்ணம் அவளது சிறிய மகள் உட்கார்ந்திருந்தாள். அவள் நேராகத் தாயாரைப் பார்த்தாள். அதற்கப்புறம் ஜன்னல் வழியாகத் தெரியும் தெருவையும் பார்த்தாள். குடிசையுள் எவ்வளவு அமைதியோ அவ்வளவு தெருவிலும். மிஷின் பக்கத்தில் ஒரு கடிதம். அதை அப்பொழுதுதான் தாயாருக்கு வாசித்துக் காட்டி முடித்தாள். இப்பொழுது இருவரும் பேசவில்லை. எல்லாம் அமைதி. அடிக்கடி கடிதத்தை எடுத்துப் பார்த்துவிட்டு மேஜையின்மீது வைத்துக் கொண்டிருந்தாள் மகள். அப்புறம் தாயைப் பார்த்தாள்; தெருவைப் பார்த்தாள். "இந்தத் தடவை சந்தேகமே இருக்க முடியாது" என்றாள் தாயார், தரையில் விழுந்த துணிகளைக் குனிந்து எடுத்துக்கொண்டு. "இல்லை! இந்தத் தடவை அப்பா நிச்சயமாக வந்து சேருவார்!" என்றாள் மகள். அவள் பெயர் குணேலி. நேற்று முந்திய தினம்தான் வேலைக் காலம் முடிந்து திரும்பி வந்தாள். (அங்கெல்லாம் வேலைக்காரர்கள் 'இத்தனை மாதம் உழைக்கிறோம்' என்று ஒப்பந்தம் செய்து கொள்வது வழக்கம்.) நாளை மறுநாள்தான் மறுபடியும் புது ஒப்பந்தப்படி வேலைக்குப் போக வேண்டும். அவளுக்குப் பதினெட்டு வயது கூடச் சரியாய் நிரம்பவில்லை. நன்றாக அகன்று பலம் பொருந்திய தோள்கள்; துன்பத்தில் கூட அமுக்க முடியாதவை போன்றிருந்தன. அதற்கேற்றாற் போல் மார்பும், எடுப்பாக முன் ஓங்கி, பிடிவாதக்காரக் குழந்தை மாதிரி நிமிர்ந்து நின்றது. "அடுத்த மாசம் ஆனால் போய் ஐந்து வருஷமாகும்." "ஆமா...ம்" என்றாள் குணேலி, மிஷினை ஓட்டிக் கொண்டு. தாயாரும் தைக்க ஆரம்பித்தாள். குணேலி, தங்கியிருக்கும் இரண்டு தினங்களையும் பயன்படுத்திக்கொள்ள அவள் நினைத்ததால் இருவரும் தகப்பனார் வரவு பற்றி மறுபடியும் ஒரு வார்த்தை கூடப் பேசாது, வேலை செய்ய ஆரம்பித்தார்கள். அன்று மாலை படுத்துக் கொள்ள உடைகளை அகற்றும்பொழுது, "நீ போகும்முன் அவர் வந்துவிட்டால், உனக்கு அங்கே படுக்கை போட்டுக்கொள்வது" என்று ஜன்னலுக்குக் கீழுள்ள மூலையைக் காண்பித்தாள் தாயார். "ஆமாம். அதை லேசாகச் செய்யலாம்" என்றாள் குணேலி. அதற்கப்புறம் வேறு எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். இரண்டாவது நாள் காலை புது எஜமான் வீட்டில் வேலை பார்க்கக் குணேலி புறப்பட்டுப் போனாள். காலில் மிதியடி போடாத பையன் அவளுடைய பெட்டியைக் கை வண்டியில் வைத்துத் தள்ளிச் சென்றான். பெடர் ஸோல்பர்க் வேலை செய்யும் படகு பிற்பகலில்தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது இங்கிலாந்திலிருந்து வருகிறது. லண்டனில் புறப்பட்டுவிட்டது என்பது நிச்சயம். எந்த நேரம் இங்கு வந்து சேரும் என்பது யாருக்கும் நிச்சயமில்லை. ஜல்தியாக வந்தாலும் வரலாம். நேரம் கழித்து வந்தாலும் வரலாம். அது வந்து சேருவது எத்தனையோ காரியங்களைப் பொறுத்தது. ஒன்று கப்பல் சாமான்; இன்னொன்று காற்று. அதனால் அவள் சாப்பிட்டுவிட்டுப் பாத்திரங்களையெல்லாம் கழுவி வைத்துவிட்டுத் தைக்க உட்கார்ந்தாள். மிஷின் இடைவிடாது வீரிட்டுக் கொண்டிருந்தது. அவசரப்படுகிறவள் போல் ரொம்ப ஜரூராக வேலை செய்தாள். ஆமாம், பெடருக்கு இப்பொழுது நாற்பத்தாறு வயது. தன் வயதுதான். இந்த விசை வரும்பொழுது எத்தனையோ மாறுதல்களைப் பார்ப்பான். இரட்டைக் குழந்தைகளான ஆந்தானும் ஜோஹனும் சென்ற வசந்தத்தில்தான் கப்பல் வேலையில் சேர்ந்து கொண்டார்கள். ஒரு வேளை அவனுக்கு அது தெரியாமலே இருக்கலாம்; அவர்களை ஏதாவது ஒரு துறைமுகத்தில் சந்தித்திருப்பான் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. கிரிஸ்டைன் இறந்து போனான். அது அவனுக்குத் தெரியும். அது தெரியாது என்று சொல்ல முடியாது. பெடருக்குக் கடுதாசி எழுத வராது... அவளுக்கும் அப்படித்தானே!... அவன் மறந்தே போய் விட்டான் என்று அவள் ஒரு முறை நினைத்தாள். அவன் வேலை பார்க்கும் இங்கிலீஷ் கப்பல் அப்படி வேலை வாங்குகிறது போலும். இத்தனை காலமாக வரவேண்டும் வரவேண்டும் என்றே நினைத்து வந்தான். ஆமாம். யாத்திரை ஜாஸ்தி. ரொம்ப வடக்கே போகவேண்டியிருந்தது. மேலும் பிரயாணச் செலவும் ஜாஸ்தி. மாலுமிகளின் சம்பளம் அதை எட்டாது. குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டாமா? இறந்தால் புதைக்க வேண்டாமா? அதனால் தான் ஊருக்கு வருவதை ஒத்திப்போட வேண்டியதாயிற்று. மிஷினை ஓட்டிக் கொண்டேயிருந்தாள், தலை நிமிரவேயில்லை. அவ்வளவு அவசரம்! மணி ஏழிருக்கும். யாரோ முற்றத்திலிருந்து சமையல் அறைக்குள் வந்தார்கள். ஏதோ கனமான சாமானை இழுத்து வந்தார்கள். வேகமாக எழுந்து வெளியே சென்றாள். அங்கு பெடர் ஸோல்பர்க் - புருஷன், கையில் பர்ஸை வைத்துக்கொண்டு நின்றான். பெட்டியை எடுத்து வைக்க உதவின பையனுக்கு ஒரு ஷில்லிங் கொடுத்துக் கொண்டிருந்தான். அதை மூலையில் வைத்தார்கள், பையன் வெளியே போனான். புருஷனும் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அப்புறம்தான் அவள் அவன் கையைப் பிடித்து, "வாருங்கள்!" என்று அழைத்தாள். "கப்பல் வந்து விட்டதா!" என்றாள் மறுபடியும். "ஆம், இப்பொழுதுதான் வந்தது!" என்றான் ஸோல் பர்க். அவனை உள்ளே அழைத்துச் சென்றாள். அவன் மெதுவாகத் தரையில் கனம்படத் தள்ளாடித் தொடர்ந்து நடந்தான். தலையில் இருந்த அகன்ற தொப்பியை எடுத்துவிட்டுக் கதவுப் பக்கத்தில் உட்கார்ந்தான். அவன் கண்கள் குழி விழுந்து கிடந்தன. பார்வை மாறுகண் போல் ஒரு பக்கமாகவே இருந்தது. முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ளப் பிரியப்படுவது போலிருந்தது. முகம் வெளிறி, நீண்ட தாடியுடன், ஒரு மாதிரியாக இருந்தது. "நீ ரொம்ப மாறிவிட்டாய்!" என்றாள். "ஆமாம், அப்படித்தான் நினைக்கிறேன்" என்றான். "இனிமேல் உடம்பு விழுந்து போச்சு!" என்றான் மீண்டும். "என் மனசிலும் அதுதான் கவலை. மத்யதரைக் கடலில் கப்பல் உடைந்ததே, அதில்தான் உன் உடம்பை இப்படி உடைச்சு விட்டதோ?" என்றாள். "ஆமாம்" "கப்பல் உடைந்ததும் நேராக இங்கு வந்திருந்தால் உடம்பு குணப்பட்டிருக்கும், இல்லையா?" என்று கேட்டாள். பதில் சொல்லுமுன் யோசிக்க வேண்டியிருப்பதுபோல் அவன் தயங்கினான். "உம் - இந்த இரண்டு வருஷங்களும் லேசில்லை; - லேசில்லை!" குனிந்து முழங்காலில் முழங்கைகளை ஊன்றிக்கொண்டான்; உடலுக்கு முட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது போலும். இன்னும் கையில் தொப்பியைப் பிடித்திருந்தான். "இன்னும் பையன்கள் வீட்டில்தான் இருக்கிறாங்களா?" என்றான், சிறிது நேரம் கழித்து. "வசந்த காலத்திலே போய்விட்டார்கள்." "நானும் அப்படித்தான் நினைத்தேன். போன வருஷம் நீ கூட எழுதியிருந்தாயே!" "ஆமாம்" இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். "சாப்பிட ஏதாவது எடுத்து வருகிறேன்" என்றாள். சமையலறைக்குள் கதவைத் திறந்தபடி விட்டுச் சென்றாள். அவன் உட்கார்ந்தே இருந்தான். ஒரு தடவை தலையைத் தூக்கி ஜன்னல் வழியாய்ப் பார்த்தான் - தான் அடையாளம் தெரிந்து கொண்டு பேசவேண்டிய யாரையோ பார்ப்பதுபோல. ஆனால் ஜன்னல் தூரத்தில் இருந்ததால் நிச்சயம் செய்து கொள்ள எழுந்து செல்லவில்லை. அடுப்பங்கரையில் நெருப்பு எரியும் சப்தம். மேலே காப்பிப்பாத்திரம் தளதளவென்று கொதிக்கிறது. அவள் ரொட்டி அறுப்பதும் கேட்டது. காப்பியைத் தெளிய வைத்துவிட்டு, உள்ளே வந்து தையல் துணிகளை எடுத்து ஒதுக்கமாக வைத்தாள். "உனக்குச் சரியாக வேலை கிடைக்கிறது போலிருக்கிறதே!" என்றான், துணிகளைப் பார்த்துக்கொண்டு. "ஆமாம், கொஞ்ச நாளாய். எனக்குத்தான் நன்றாகத் தைக்கத் தெரியாதே! கூலியும் அப்படி இப்படித்தான்!" "உனக்கு என்ன பலமான காயமா?" என்றாள், திடீரென்று அவனது கையைப் பார்த்து. அவன் தனது வலது கையைப் பார்த்தான். அதில் மோதிர விரலும் சிறு விரலும் போய்விட்டன. "இதைப் பத்தி எழுதவில்லையா?" என்றான். "இல்லை." "எழுதிவிட்டதாக நினைத்துக்கொண்டேன். டாக்டர் அதை எடுத்துவிட வேண்டியிருந்தது." சில நிமிஷங்கள் வரை சிதைந்த கையையே பார்த்துக் கொண்டிருந்தாள். "ஐயோ தெய்வமே!" என்றாள். காப்பியையும் சாப்பாட்டையும் எடுத்து வந்தாள். நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். நல்ல பசி. அவளுக்குப் பசியில்லை. காப்பியை சாஸரில் ஊற்றி ஆறவைத்துக் குடித்தான். பின்பு ஜன்னலண்டையில் போய்க் கதவைத் திறந்தான். இரவு பத்து மணி. அப்பொழுதுதான் சூரியாஸ்தமன சமயம். (துருவத்திற்கு அருகிலுள்ள வடக்கு ஐரோப்பிய பிரதேசங்களில் சூரியாஸ்தமனம் வெகு நேரங் கழித்து, அத்துடன் அந்தி மாலையும் வெகு நேரம் நீடித்திருக்கும்.) எங்கு பார்த்தாலும் வானத்தில் ஒரே சிவப்பு. நகரத்தின் மீதும் மஞ்சள் வெயில். பார்த்து அதைப் பற்றி ஒரு வார்த்தையாவது சொல்லாமல் இருக்க முடியாது. பூலோகத்திலுள்ள மற்றெல்லா இடங்களையும்விட இங்கு சூரியன் மிகவும் மனோகரமாகக் காய்வது போலிருந்தது. "இன்று மாலை மாதாகோவில் பூந்தோட்டமும் சாலையும் எவ்வளவு வாசனையாக இருந்தது, கவனித்தாயா?" என்றாள். "ஆமாம், நாம் போன அன்று இரவு இருந்த மாதிரி." "ஐந்து வருஷத்திற்கு முன் -" "ரொம்ப ஜாஸ்தியில்லே!" "அது போதாதா?" "நீ சொல்வது சரியாய்த் தானிருக்கும்." அவள் படுக்கையை எடுத்து விரித்தாள். அவன் இன்னும் மேஜையண்டையிலேயே உட்கார்ந்திருந்தான். இருவரும் பேசவில்லை. சிவப்பொளி மறைந்தது. வானம் நீலமாயிற்று. ஆனால் இருட்டு வந்துவிடவில்லை. வெளிச்சத்தை வைத்து நேரம் சொல்ல முடியாது. நல்ல தெளிவான அச்சுப் புஸ்தகத்தை வாசிக்க முடியும். "நான் என்ன செய்வது, - இனிமேல்தான் கப்பலில் வேலை செய்ய முடியாதே!" என்றான். "எனக்குத் தைக்கிறதற்குக் கையில் பலம் இருக்கிறவரை என்னோடேயே இருப்பாய்." இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். இருவரும் உடைகளை அகற்றிவிட்டுப் படுக்கைக்குப் போனார்கள். தனது பெரிய கரங்களில் அவன் அவளை வெகு நேரம் வரை இறுகப் பிடித்திருந்தான். "ஏதோ வீடு வந்து சேர்ந்துவிட்டேன்!" என்றான். அவன் குரல் தழுதழுத்தது. அவன் மார்பில் வைத்திருந்த தன் தலையை நிமிர்த்தி அவனது முகத்தைப் பார்த்தாள். அவள் கண் கலங்கியது; குரல் தழுதழுத்தது. "ஆமாம், தெய்வச் செயலாக உனக்கு இங்கு இடமிருக்கிறது. நாம் இருவருந்தானே!" என்றாள். |