யாத்திரை

ஜான் கால்ஸ்வொர்த்தி

     நான் ஹாமர்ஸ்மித் பஸ்ஸின் மேல்தட்டிலிருந்து பார்க்கும் பொழுது, அவர்கள் ஆல்பர்ட் ஹால் மெமோரியல் எதிரில் இருந்த ஒரு வீட்டு வாசல்படியில் உட்கார்ந்திருந்தனர். அன்று வெகு உஷ்ணம். வாடகை வண்டிகளும், நாகரிக மக்களின் உல்லாச வண்டிகளும் வெகுவேகமாகப் பறந்து கொண்டிருந்தன. ஜனங்கள் வெய்யிலில் நடமாடிக் கொண்டிருந்தனர். அந்த மூன்று சிறு யாத்திரிகர்களும் வாசல்படியில் மௌனமாக உட்கார்ந்திருந்தனர்.

     அவர்களுள் மூத்தவன் 6 - வயதுப் பையன். அவன் மடியில் ஒரு குழந்தை. குழந்தைக்குப் பெரிய தலை, அத்துடன் கழுத்தில் அம்மைக்கட்டு. வாயில் விரல்களுக்குப் பதிலாகக் கையையே திணித்துக்கொண்டிருந்தது. அதன் கண்கள் மேலே நோக்கியபடி இருந்தன. கால்கள் அக்குத் தொக்கில்லாமல் தொங்கிக் கொண்டிருந்த மாதிரி ஆடிக்கொண்டிருந்தன. அதை வைத்திருந்த பையன், அது வழுக்கிக் கீழே விழுந்துவிடாமல் அடிக்கடி இழுத்து இழுத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டிருந்தான்.

     பக்கத்திலிருந்தது ஒரு சிறு பெண் குழந்தை, பையனை விடச் சிறியது, சிறிது அழகு; ஆனால் அழுக்குப் படிந்த முகம், கண்ணைச் சுற்றி வளையம்போல் ரத்தம் கன்றிய தடம். சிறிய சட்டை; அதிலிருந்து மேல் ஜோடணியாத குட்டைக்கால்கள். முதுகை வாசல்படியில் சாயவைத்துக் கொண்டு தூங்கியது. அந்தப் பையன் விழித்தபடியே இருந்தான். அவன் தலைமயிர் கறுப்பு; எலிக்காதுகள்; நல்ல உடையானாலும் அழுக்குப் படிந்திருந்தது. அவன் கண்கள் சோர்ந்துபோயிருந்தன.

     நான் அவனையணுகிப் பேசினேன்.

     "அது உன் தங்கையா?"

     "இல்லை"

     "பின் யார்?"

     "எனக்குத் தெரிந்தவள்"

     "அது?"

     "என் தம்பி"

     "எங்கிருக்கிறீர்கள்?"

     "ரீஜன்ட் பார்க்கில்"

     "இவ்வளவு தூரம் எப்படி வந்தீர்கள்?"

     "ஆல்பர்ட் மெமோரியலைப் பார்க்க வந்தோம்."

     "உங்களுக்குக் களைப்பாக இருக்கிறதா? இந்தா ஒரு ஷில்லிங். இனி வீட்டிற்கு பஸ்ஸில் போகலாம்."

     பதில் இல்லை. சிரிப்பும் இல்லை. அந்த அழுக்குப் பிடித்த கை ஷில்லிங்கைப் பெற்றுக் கொண்டது.

     "அது எவ்வளவு என்று உனக்குத் தெரியுமா?"

     ஒரு கேவலப் பார்வை பார்த்தான். வழுக்கிக் கொண்டிருக்கும் குழந்தையை இழுத்து மடியில் வைத்துக் கொண்டான்.

     "பன்னிரண்டு பென்ஸ்."

     நான் திரும்பிப் பார்க்கும்பொழுது தனது பூட்ஸ் காலால் தனக்குத் 'தெரிந்தவளை' அந்த ஷில்லிங்கைப் பார்க்கும்படி எழுப்பிக்கொண்டு இருந்தான்.