உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
எமனை ஏமாற்ற... மொங்காக்கு ஷோனின் என்ற மகடனான புத்த பிக்ஷு தான் எழுதியுள்ள கியோ-ஜியோ-ஷிந்ஷோ என்ற கிரந்தத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: "ஜனங்கள் வழிபடும் தெய்வங்களில் பல துர்தேவதைகளாகும். அவலோகிதன், தர்மம், பிக்ஷுக்கள் என்ற முத்திறங்களையும் மதித்து வழிபடுவோர் இந்தத் துர்தேவதைகளை வணங்கமாட்டார்கள். இந்தத் தேவதைகளிடமிருந்து இஷ்டசித்தி பெறுகிறவர்கள் முடிவில் தாம் பெற்ற வரத்தினாலேயே துன்பப்படுவார்கள்." நிபான் - ரீயி - இக்கி என்ற கிரந்தத்தில் உள்ள கதை இதற்குத் தகுந்த சான்று. ஷோசி மகாராஜா ஆட்சியின் போது ஸானூகி பிராந்தியத்தில் யமாத கோரி என்ற ஊரில் புக்ஷுகி நோஷின் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒத்தைக்கொரு குழந்தைதான் உண்டு. அது பெண்; அதன் பெயர் கினூமி. கினூமி நல்ல அழகி; வனப்பும் உருவும் ஒருங்கே அமைந்திருந்தன. அவளுக்கு வயது பதினெட்டான போது தேசத்தில் ஒரு கொடிய தொற்று நோய் கண்டது. அவளும் அந்த நோய்க்கு ஆளானாள். அவளுடைய பெற்றோரும் உறவினரும் ஒரு துர்தேவதையை வணங்கி அவள் உயிரைக் காப்பாற்றும்படி வரங் கிடந்தார்கள். பல நாட்கள் மயங்கிக் கிடந்த பெண் தெளிந்து ஒரு நாள் மாலை தான் கண்ட கனவைச் சொன்னாள். அந்த துர்தேவதை தன் முன் தோன்றி பின் வருமாறு சொல்லியதாம்: "உன்னுடைய பெற்றோர்கள் உருக்கமாக என்னை வழிபட்டதினால் உன்னைக் காப்பாற்ற விரும்புகிறேன். வேறு ஒருவருடைய உயிரை உனக்குக் கொடுக்காமல் உன்னை என்னால் காப்பாற்ற முடியாது. உன் பெயருள்ள பெண் யாரும் உனக்கு ஞாபகம் வருகிறதா?" என்று அந்த தெய்வம் கேட்டது. "உத்தரிகோரியில் என் பெயர் கொண்ட ஒரு பெண் இருக்கிறாள் என்று எனக்குத் தெரியும்" என்று கினூமி சொன்னாள். "அவளை எனக்குக் காட்டு" என தேவதை என்னைத் தொட்டது. அதன் ஸ்பரிசம் பட்டதும் நானும் உடன் எழுந்தேன். மறு க்ஷணத்தில் உத்தரிகோரி கினூமி வீட்டில் நின்றோம். "அதோ அந்தப் பெண்தான்" என்று யமாதகோரி கினூமி சொன்னாள். தேவதை சிகப்புப் பையிலிருந்து உறி மாதிரி ஏதோ ஒரு இரும்பு ஆயுதத்தை எடுத்தது. உத்தரிகோரி கினூமியின் வீட்டுக்குள் புகுந்து அவள் நெற்றியில் அதைச் சொருகியது. அலறிக்கொண்டு உத்தரிகோரி கினூமி தரையில் சாய்ந்தாள். யமாதகோரி கினூமி விழித்து இந்தக் கனவைத் தனது பெற்றோரிடம் சொன்னாள். இதைச் சொன்ன பிற்பாடு அவள் மறுபடியும் மயங்கி விட்டாள். மூன்று தினங்கள் உலகப் பிரக்ஞையே இல்லாமல் கிடந்தாள். உயிர் போய்விடுமோ என்று பெற்றோர் தவித்தனர். ஆனால் மறுபடியும் அவள் கண்ணை விழித்தாள். உடனே பாயிலிருந்து எழுந்தாள். சுற்றுமுற்றும் வெறித்துப் பார்த்துவிட்டு, இது என் வீடில்லையே, இது என் பெற்றோரில்லையே" என்று கத்திக்கொண்டு வெளியே ஓடினாள்... விபரீதமாக ஏதோ நிகழ்ந்துவிட்டது. உத்தரிகோரி கினூமி துர்தேவதையிடம் குத்துப்பட்டு மாண்டு போனாள். அவளுடைய பெற்றோர்கள் ரொம்பவும் வருந்தினார்கள். பௌத்த மடாலய பிஷுக்கள் அவளுக்கு பிரார்த்தனை நடத்தினார்கள். கிராமத்துக்கு வெளியே அவளது சடலத்தை எடுத்துச் சென்று எரித்து விட்டார்கள். பிறகு அவளது ஆவி மீய்டோ வுக்குச் சென்றது. அதை எம்மாதாவோ என்ற எமதர்மராஜன் சன்னதியில் கொண்டு போய் நிறுத்தினார்கள். எமன் அவளை ஏறிட்டுப் பார்த்தவுடன் "இது உத்தரிகோரி கினூமி அல்லவா. அவளை ஏன் இவ்வளவு சீக்கிரத்தில் அழைத்து வந்தீர்கள். ஷாபாலோகத்துக்கு (மானுட உலகத்துக்கு) அவளை உடனே அனுப்பிவிட்டு, யமாதகோரி கினூமியின் உயிரைக் கொண்டு வாருங்கள்" என்று உத்தரவிட்டான். உத்தரிகோரி கினூமி எமதர்மன் காலில் விழுந்து "தர்மராஜா நான் மாண்டு மூன்று நாட்கள் கழிந்து விட்டதே; என்னுடைய உடம்பை எரித்து விட்டிருப்பார்களே. என்னை ஷாபா உலகத்துக்கு அனுப்பினால் நான் என்ன செய்வேன். என் உடம்பு சாம்பலாகி விட்டதே. எனக்கு இனி உடம்பேது?" என்று அழுதாள். எமதர்மன் சொன்னான்: "பெண்ணே கவலைப்படாதே, யமாதகோரி கினூமியின் உடம்பை உனக்குக் கொடுக்கிறேன். அவள் உயிரைத்தான் இங்கு கொண்டு வரவேண்டும். உடம்பு எரிந்து போய்விட்டதே என்று கவலைப்படாதே. யமாதகோரியின் உடம்பும் உனக்குப் பிடித்திருக்கும்" என்றான். அவன் பேசி முடியுமுன் யமாதகோரி கினூமியின் உடம்பில் உத்தரியின் ஆவி புகுந்தது. நோயுற்ற பெண் எழுந்து ஓடுவதைக் கண்ட யமாதகோரி பெற்றோர்கள், முதலில் அவளுக்கு புத்தி கலங்கிவிட்டது என்று நினைத்தார்கள். "எங்கே ஓடுகிறாய்! ஓடாதே ஓடாதே" என்று தொடர்ந்தார்கள். சிறுமியோ நிற்காமல் நிலைக்காமல் உத்தரிகோரியில் உள்ள மாண்டுபோன கினூமியின் வீட்டுக்கு ஓடி வந்தாள். பெற்றோர்களைக் கண்டதும் வணங்கி, "மறுபடியும் வீட்டுக்குள் நுழைவது என்றால் எவ்வளவு சுகமாக இருக்கிறது நீங்கள் சுகமா?" என்று கேட்டாள். பெற்றோருக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. அவளுக்குப் பைத்தியமோ என்று நினைத்தார்கள். "நீ எங்கே இருந்து வருகிறாய் பெண்ணே?" என்ற தாயார் உருக்கமாக கேட்டாள். "நான் மீய்டோ விலிருந்து வருகிறேன். நான் உங்களுடைய குழந்தைதான்; ஆனால் உடம்புதான் வேறு" என்றாள் கினூமி. பிறகு நடந்ததையெல்லாம் பெற்றோருக்குச் சொன்னாள். முதியவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். நம்புவதா கூடாதா என்று தயங்கினார்கள். அந்தச் சமயத்தில் யமாதகோரி பெற்றோர்கள் குழந்தையைத் தொடர்ந்து உள்ளே நுழைந்தார்கள். இரண்டு குடும்பமும் பரஸ்பரம் கலந்து பேசி பெண்ணை நன்றாக விசாரித்துப் பார்த்தார்கள். வார்த்தைகளை நம்பத்தான் வேண்டி இருந்தது. யமாதகேரி கினூமியின் தாயார் தன் மகள் கண்ட கனவை விவரித்துவிட்டு, "பெண்ணின் உயிர் உங்கள் மகளின் உயிர் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் உடம்பு எங்கள் குழந்தையின் உடம்பு என்பதை நீங்கள் நினைவில் வைக்க வேண்டும். ஆகையால் இந்த இரண்டு குடும்பங்களுக்கும் இந்தக்குழந்தையில் பங்கு உண்டு. இனிமேல் இந்த இரண்டு குடும்பத்தின் குழந்தையாக நாம் இவளை மதிக்க வேண்டும்" என்றாள். உத்தரிகோரி பெற்றோர்கள் இதற்கு இணங்கினார்கள். கினூமிக்கு இவ்விரண்டு குடும்பங்களின் சொத்தும் கிடைத்தது என்று எழுதி வைத்திருக்கிறார்கள். (யுக்யோ - ஹ்யாக்வா - ஜென்ஷோ என்ற கிரந்தத்தை எழுதிய ஜப்பானியர், நிபான் - ரீயி - இக்கி என்ற புஸ்தகத்தில் முதல் பாகத்தில் பனிரெண்டாவது கடுதாசியில் இடது பக்கத்தில் இருக்கிறது" என்று எழுதுகிறார். எம்மோதாவோ என்ற வார்த்தையை எமதர்மன் என்று பெயர்த்திருக்கிறேன். ஷாபா உலகம் - சஹலோகம்) |