உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
3 மாலை மணி ஐந்து இருக்கும். திருநெல்வேலி ஜங்ஷன் பிளாட்பாரத்தில் ஜனக் கூட்டம் நிறைந்து கலகலப்போடிருந்தது. சென்னைக்குச் செல்லும் பாஸ்ட் பாஸஞ்சர், செங்கோட்டை செல்லும் லோக்கல் பாஸஞ்சர், திருச்செந்தூர் செல்லும் ஷட்டில் மூன்றும் தத்தம் பிளாட்பாரங்களிலே நின்று கொண்டிருந்தன. வயிறாரத் தண்ணீர் குடித்துவிட்டு வந்திருந்த ரயில் இஞ்சின்கள் புஸ்ஸென்று இரைந்து கொண்டு பச்சைக் கொடியின் அசைவை எதிர்நோக்கி நின்றன. டவுனுக்கு வந்த சரக்கு வாங்கிச் செல்லும் அயலூர்ச் சிறு வியாபாரிகள், கூடைகளைக் காலி பண்ணிவிட்டு வீடு திரும்பும் தூக்கு வியாபாரிகள், ஸீஸன் டிக்கட்டில் கல்லூரிகளுக்கு வந்து செல்லும் மாணவர்கள் மற்றும் பற்பல பிரயாணிகள் முதலியோர் சுறுசுறுப்போடு, அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். முதல் பிளாட்பாரத்திலுள்ள இரண்டாம் வகுப்பு வெயிட்டிங் ரூமில் கமலா தன்னந்தனியாக அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் அடுக்காக இருந்த புத்தகங்கள் அவள் ஒரு மாணவி என்பதைப் பிறருக்குப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. பிளாட்பாரத்தில் திரிந்து கொண்டிருந்த மாணவர் திருக்கூட்டத்தில் சிலர் தங்கள் சட்டைக் காலர்களை முயல் காதுகளைப் போல் தூக்கி விட்டுக் கொண்டும், சிகரெட்டுக்களைப் புகைத்துக் கொண்டும், கலகலவென்று வெட்டிச் சிரிப்புச் சிரித்துக் கொண்டும் அவளது கவனத்தை கவர முயன்று கொண்டிருந்தனர். வேறு சிலர் அருகிலுள்ள ரயில்வே நிலையப் புத்தகக் கடையில் போய் நின்று கொண்டு, புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் அவள் ஒருத்தி இருக்கிறாள் என்ற பிரக்ஞையே அற்று தத்தம் போக்கில் சென்று கொண்டிருந்தனர். மாணவர்களின் வாலிபக் கண்களை அவள் கவர்ந்ததில் வியப்பொன்றும் இல்லை. உண்மையில், அவள் கண் நிறைந்த அழகியாகத்தான் இருந்தாள். கமலாவுக்கு மிஞ்சிப் போனால் இருபது வயதிருக்கலாம். மாணவிதான் என்றாலும், சோகை பற்றி வெளிறிப் பசந்து போய், கீரைத் தண்டு போல் மெலிந்து தோன்றும் இன்றையக் கல்லூரி மாணவியர் சிலரைப் போல் அவள் காட்சியளிக்கவில்லை. மேலும் நவநாகரிகம் என்ற பெயரால் முகத்தைச் சர்வ விகாரமாக்கிக் கொள்ளும் அன்னிய நாட்டு அலங்கார ஆடம்பரங்களும் அவளிடத்தில் காணப்படவில்லை. பொன்னிறமான மேனி, எடுப்பும் நிமிர்வும் கொண்ட வாளிப்பான உடற்கட்டு, கடைசல் பிடித்து மெருகு கூட்டியது போன்ற ‘மூக்கு முழி’ கச்சிதமான, கண்ணை உறுத்தாத ஆடையலங்காரம் முதலியவற்றோடு அவள் ஒரு சௌந்தர்ய விக்ரகம் போல் இருந்தாள். திறந்திருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக வந்து சாயும் அந்திநேரக் கதிரவனின் மஞ்சள் வெயில் அவளது மாம்பழக் கன்னக்கதுப்பில் விழுந்து பளபளத்தது; அவளது காதில் தரித்திருந்த வைரக்கம்மல் மஞ்சள் வெயிலை சப்தவர்ண ஒளிரேகைகளாக மாற்றி அவளது கன்னக் கதுப்பில் தூவிச் சிதறி விளையாடியது. லயமுறிவின்றித் தாளமிடும் அவளது மெல்லிய சீரடிகள் அவள் ஏதோ ஒரு இசையை மனத்துக்குள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாள் என்பதைப் புலப்படுத்தின. கமலா அம்பாசமுத்திரம் பெரிய முதலாளி என்ற தாதுலிங்க முதலியாரின் புதல்வி. தாதுலிங்க முதலியாருக்குத் தம் மகளைப் பத்தாவதுக்கு மேல் படிக்க வைக்க விருப்பமில்லை. “இவள் என்ன படிச்சி உத்தியோகமா பார்க்கப் போகிறாள்? சொத்துச் சுகமோ இருக்கு. எங்கேயாவது ஒரு நல்ல இடமாப் பார்த்துக் கையைப் பிடிச்சிக் குடுத்திட வேண்டியதுதான்” என்றுதான் அவர் கருதி வந்தார். எனினும் கமலாவின் பிடிவாதமும், அவள் அண்ணன் சங்கரின் வற்புறுத்தலும்தான் தாதுலிங்க முதலியாரின் எண்ணத்தை முறியடித்தன. அதன் விளைவாக, கமலா கடந்த ஒரு வருஷ காலமாக, பாளையங்கோட்டையிலுள்ள மகளிர் கல்லூரியில் இண்டர் படித்து வந்தாள். கமலா இடையிடையே தன் கைக்கெடியாரத்தைப் பார்ப்பதும், தலை நிமிர்ந்து யாரையோ எதிர்பார்க்கும் பாவனையில் வாசலை நோக்குவதுமாக இருந்தாள். அவளது விழிக் கருமணிகளில் தோன்றிய ஆழமும் ஆர்வமும் அவளது ஆவலுணர்ச்சியைப் புலப்படுத்துவதாயிருந்தன. அவள் எதிர்பார்த்திருந்தது போலவே சிறிது நேரத்தில் ஒரு வாலிபன் கையில் சில புத்தகங்களைச் சுமந்து கொண்டு, அங்கு வந்தான். காலடியோசை கேட்டதும், அவள் தலை நிமிர்ந்தாள். அவளது சிவந்த இதழ்களில் அழகிஅ புன்னகை மலர்ந்து ஒளி வீசியது. “வாங்க அத்தான்” என்று அன்புடன் வரவேற்றாள் கமலா. “ஏது, ரயில்வே ஸ்டேஷனில் கூடப் படிப்புத்தானா?” என்று புன்னகையோடு கேட்டுக் கொண்டே எதிரே கிடந்த நாற்காலியில் அமர்ந்தான் அந்த வாலிபன். “இது பாடப் புத்தகமில்லை அத்தான். இது ‘சோஷியலிஸமும் பெண்களும்’ என்ற புத்தகம். அண்ணா வாங்கிக் கொடுத்தான்” என்று மணிக்குரலில் பதிலளித்தாள் கமலா. “யார்? சங்கரா வாங்கிக் கொடுத்தான்? ஏதேது? அவன் உன்னையும் தன் கட்சிக்கு இழுக்கத் தொடங்கி விட்டானா?” என்று மெல்லிய சிரிப்போடு கேட்டான் அவன். கமலா பதிலுக்கு லேசாகச் சிரித்துவிட்டு, புத்தகத்தில் கண்ணைத் திருப்பினாள். அந்த வாலிபனும் தானும் ஏதோ படிக்கப் போவது போல் கையில் ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். மணி என்ற அந்த வாலிபனுக்குச் சுமார் இருபத்தி மூன்று வயதிருக்கும். அவன் அம்பாசமுத்திரத்திலுள்ள ஜவுளி நூல் வியாபாரியான கைலாச முதலியாரின் தலைப் புதல்வன். சுருள் சுருளாகத் திரண்டிருக்கும் அவனது கரிய தலைமயிரும் வாய் நிறைந்த சிரிப்புக் களையும் அவனுக்கு ஒரு தனி வசீகரத்தைத் தந்து கொண்டிருந்தன. மணி திருநெல்வேலியில் ஜூனியர் பி.ஏ. படித்துக் கொண்டிருந்தான். கமலாவுக்கு எதிரே அமர்ந்திருந்த மணி தானும், ஏதோ வாசிக்கப் போவதாகப் பாசாங்கு செய்தானே ஒழிய, உண்மையில் அவனது பார்வையெல்லாம் அந்தி ஒளியின் மஞ்சள் பிரவாகத்தில் சொர்ணச் சிலா வடிவம் போல் அழகு கொழித்து விளங்கும் கமலாவின் மீதே படிந்திருந்தது. அந்த அழகின் சோபையை வார்த்தைகளில் வடித்திறக்கி உருக் கொடுக்கத் தான் ஒரு கவியாக இல்லையே என்று அவனது ஊமை மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. மணி வந்த பிறகு கமலாவுக்குப் புத்தகத்தில் நாட்டம் நிலைக்கவில்லை. எனவே சீக்கிரமே புத்தகத்தை மூடி வைத்து விட்டு அவள் தலை நிமிர்ந்தாள். தலை நிமிர்ந்தவுடன் அவளது ஆழக் கருவிழிகள் இமை தட்டாது நிலைத்து நின்ற மணியின் கூரிய கண்களையே சந்தித்தன. உடனே இருவர் கண்களும் நிலை புரண்டு அசட்டுத்தனமாய்த் தத்தளித்துப் புரண்டன. இருவர் உதட்டிலும் அர்த்தபாவம் நிறைந்த அசட்டுப் புன்னகை கோடுகாட்டி மறைந்தது. நிலைமையைச் சமாளிப்பதற்காக, “என்ன கமலா, சங்கரை என்ன இன்னும் காணோம்?” என்று ஒரு கேல்வியை எழுப்பினான் மணி. “அவன் அப்போதே வந்து விட்டான். ஏதோ பத்திரிகை வாங்கணும்னு பஜார்ப் பக்கம் போனான்” என்றாள் கமலா. இதற்குள் சங்கரே உள்ளே நுழைந்து விட்டான். அவனைக் கண்டதும் மணி, “வாப்பா வா, உனக்கு நூறு வயசு. இப்போதான் உன்னை எங்கே என்று கேட்டேன்” என்று விசாரித்தான். சங்கரோ மணி கூறியதையே காதில் வாங்கிக் கொள்ளாமல், “சரிசரி, கிளம்புங்க சீக்கிரம் ரயிலுக்கு நேரமாச்சு” என்று அவசரப்படுத்தினான். உடனே அவர்கள் மூவரும் பாலமேறி இறங்கி இரண்டாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த செங்கோட்டை வண்டியில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஏறி அமர்ந்தார்கள். அவர்கள் உட்கார்ந்த இரண்டு நிமிஷங்களுக்குள் ரயில் வீறிட்டு அலறியது; இரைக்க இரைக்க மூச்சு வாங்கிக் கொண்டு புறப்பட்டுச் சென்றது. “பாத்தியாப்பா, மணி. நான் வந்து உங்கள் இரண்டு பேரையும் கிளப்பியிராவிட்டால், ரயிலைக் கோட்டை விட்டிருக்க வேண்டியதுதான்” என்றான் சங்கர். “எல்லாம் உன்னால் தான்” என்றான் மணி. “என்னாலேயா? நான் அப்பவே வந்து நீங்க ரெண்டு பேரும் ரயிலில் இருக்கிறீங்களான்னு பார்த்தேன். பிறகுதான் வெயிட்டிங் ரூமுக்கு வந்தேன். மணி என்ன என்று கூடப் பார்க்காமல் ரெண்டு பேரும் என்ன கோட்டையைக் கட்டி முடித்தீர்களோ, தெரியலை. கையிலே கடியாரம் கட்டியிருக்கிறது அலங்காரத்துக்கா?” என்று பதிலளித்தான் சங்கர். மணி பதில் சொல்வதற்கு முந்திக் கொண்டான்: “நாங்க ஒண்ணும் கோட்டையைக் கட்டவும் இல்லை; இடிக்கவும் இல்லை. உன்னைத்தான் எதிர்பார்த்துக் கிட்டிருந்தோம். நீ என்னவோ ரயில்வே ஸ்டாலில் கிடைக்காத பத்திரிகை மாதிரி, பத்திரிகை வாங்க பஜாருக்குப் புறப்பட்டுப் போயிட்டே!” “என்ன சொன்னே? ரயில்வே ஸ்டாலிலா?” என்று லேசாகச் சிரித்தான் சங்கர். “ரயில்வேப் புத்தகக் கடையிலே எனக்கு வேண்டிய பத்திரிகைகள் எதுவும் கிடைக்காதப்பா. அங்கே ஒரே அமெரிக்கக் குப்பை இலக்கியம் தானே குவிஞ்சி கிடக்கு. ரசாபாசமான படங்கள்; ரசாபாசமான தலைப்புக்கள். பார்க்கச் சகிக்கலை. அமெரிக்கா நமது நாட்டை மட்டும் விலைக்கு வாங்க விரும்பவில்லை, நமது ஆத்மாவையே விலைக்கு வாங்கப் பார்க்கிறது. தெரிந்ததா?” என்று ஆத்திரத்தோடு சொன்னான் சங்கர். “போதும், பிரசங்கத்தை ஆரம்பித்து விடாதே” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு ரயில் ஜன்னலின் மீது சாய்ந்தான் மணி. சங்கரும் மேற்கொண்டு எதுவும் பேசாமல், வாங்கி வந்த பத்திரிகையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான். கமலாவும் ஜன்னல் விளிம்பின் மீது தலை சாய்த்துக் கொண்டும், எதிர்காற்றில் வரிசை குலைந்து நெற்றியில் விழுந்து உறவாடும் கேசச் சுருள்களை ஒதுக்கி விட்டுக் கொண்டே வெளியே தட்டாமாலை சுற்றிச் சுற்றி மறையும் மரங்களையும் வயல் வெளிகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து, கமலா திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டவளாய் தன் சகோதரனை நோக்கித் திரும்பினாள். “அண்ணா!” சங்கர் தலை நிமிர்ந்து “என்ன?” என்று அமைதியுடன் கேட்டான். “உன்னிடம் எங்கள் கல்லூரி ‘டிபேட்’டைப் பற்றிச் சொல்ல மறந்தே போயிட்டேன். நீ சொல்லிக் கொடுத்ததை யெல்லாம் நான் ஒன்று பாக்கியில்லாமல் சொல்லித் தீர்த்துட்டேன். பொருள் உற்பத்தியில் பெண்களும் நேரடியாகப் பங்கு பெறாதவரை, தனிச்சொத்துரிமை என்ற இன்றைய சமுதாய அமைப்பு மாறாத வரை, பெண்களுக்கு உண்மையான விடுதலை கிட்டப் போவதில்லை என்ற கருத்தைத் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டேன், அண்ணா” என்று உற்சாகத்தோடு பேசத் தொடங்கினாள் கமலா. “ம், அப்புறம்?” என்று ஆர்வத்தோடு கேட்டான் சங்கர். “அப்புறமென்ன? என் பேச்சு என் வகுப்பு மாணவிகள் பலருக்கும் ரொம்பவும் பிடித்துப் போச்சி, அண்ணா. ஆனால்...” என்று சோர்ந்தாற்போல் நீட்டினாள் கமலா. “ஆனால் என்ன?” “கூட்டம் முடிந்த பிறகு பிரின்ஸிபால் என்னைத் தனியே கூப்பிட்டு இந்த மாதிரிக் கருத்தையெல்லாம் நீ மேடையில் பேசக் கூடாது. வெளிநாட்டுப் பெண்களை யெல்லாம் உதாரணம் காட்டக் கூடாது. நமது நாட்டுப் பண்பாடு என்ன, பெண்மைக் குணம் என்ன? அப்படியிப்படின்னு கண்டிக்காத குறையாய்ப் புத்திமதி சொல்லத் தொடங்கி விட்டாள் அண்ணா” என்று செல்லக் குரலில் புகார் பண்ணினாள் தங்கை. அவளது உற்சாகம் திடீரென்று வாடி வதங்கி விட்டது. சங்கர் மெல்லச் சிரித்தான்; பிறகு ஆறுதலாகப் பேசத் தொடங்கினான். “இந்தா பாரு, கமலா எத்தனை எத்தனையோ தலைமுறைகளாக வேரோடி நிலைத்து வந்திருக்கும் மனப்பான்மையை ஒரு நாள் பேச்சில் பிடுங்கி எறிந்து விட முடியுமா? உங்கள் பிரின்ஸிபால் கண்டித்ததில் ஆச்சரியப் படுவதற்கே ஒன்றுமில்லை. அவளும் அந்தப் பரம்பரையின் பிரதிநிதிதானே? ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள். உன் மனத்துக்குச் சரியென்று படுவதை மட்டும் என்றும் துணிந்து சொல்வதற்குப் பயப்படாதே!” “அடேடே? உங்க காலேஜிலே ‘டிபேட்’ இருந்ததா? என்னிடம் கூட நீ அதைச் சொல்லவில்லையே!” என்று குறுக்கிட்டுக் கேட்டான் மணி. கமலா பதில் பேசாமல் மெல்லச் சிரித்தவாறே தலைகுனிந்தாள். இதற்குள் ரயில் சேரமாதேவி ஸ்டேஷனில் வந்து நின்றது. ரயில் நின்றதும் சங்கர தலையை நீட்டி வெளியே பார்த்தான். ரயிலிலிருந்து ஆட்கள் இறங்கவும் ஏறவுமாக இருந்தார்கள். திடீரென்று சங்கர் யாரையோ இனம் கண்டு கொண்டு, “டாக்டர் ஸார்” என்று கூப்பிட்டான். சங்கரின் குரல் கேட்டுத் திரும்பிய மனிதர் புன்னகை ததும்பும் முகத்தோடு சங்கர் இருந்த வண்டிக்குள் ஏறினார். சங்கர் அவருக்கு இடம் கொடுத்துச் சிறிது விலகி அமர்ந்து கொண்டான். கோட்டும் ஷூட்டும் அணிந்திருந்த அந்த வாலிப வயதுள்ள மனிதர் “என்ன மிஸ்டர் சங்கர். எங்கே? காலேஜிலிருந்தா?” என்று கேட்டுக் கொண்டே இடத்தில் அமர்ந்தார். “ஆமாம் டாக்டர், நீங்கள் எங்கே இப்படி?” என்று விசாரித்தான் சங்கர். “ஒன்றுமில்லை, அங்கு என் சிநேகிதர் ஒருத்தருக்கு உடம்புக்குக் குணமில்லை, வரச் சொல்லியிருந்தார். வந்தேன்” என்றார் டாக்டர். “மணி, உனக்கு இவாளைத் தெரியுமா? இவாள்தான் நம்ம ஊர் டாக்டர்; டாக்டர் நடராஜன்” என்று அறிமுகப்படுத்தினான், சங்கர். “கேள்விப்பட்டிருக்கிறேன். சந்தித்ததில்லை” என்று கூறியவாறே வணக்கம் செலுத்தினான், மணி. பிறகு சங்கர் டாக்டரிடம் திரும்பி, “இவன் தான் மணி; என் கிளாஸ்மேட், பந்து முறையில் எனக்கு மைத்துனன், படிப்பில் மகாக் கெட்டி என்றாலும், என்னை மாதிரி இவனுக்கு இன்னும் அரசியல் பைத்தியம் எதுவும் பிடிக்கவில்லை” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். டாக்டரும் பதிலுக்குச் சிரித்துக் கொண்டே பேசினார். “இந்த அரசியல் உணர்ச்சியே ஒட்டுவாரொட்டி வியாதி மாதிரிதான். உங்களோடு சேர்ந்து விட்டாரல்லவா? இனிமேல் மிஸ்டர் மணியும் தப்பிக்க முடியாது.” “ஏது, உங்கள் பாஷையிலேயே வியாக்கியானம் செய்றீங்களே!” என்றான் சங்கர். பிறகு போய் டாக்டர் ஏதோ யோசித்தவாறே, “மிஸ்டர் சங்கர், நீங்கள் கொடுத்த அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்தேன். உங்கள் கொள்கையை நான் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கூட, அதிலுள்ள உண்மைகளை நான் புறக்கணிக்க முடியாது!” என்று சொன்னார். “உண்மைகளிலிருந்துதானே ஸார், கொள்கையே உருவாகிறது! இல்லையா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நீங்கள் டாக்டரானது எப்படி? பௌதிக உண்மைகளை வைத்துத்தானே உங்கள் வைத்திய முறையே கொள்கையாக உருவெடுத்தது!” என்று அவருக்குச் சட்டென்று பதில் கொடுத்தான் சங்கர்! அந்தக் கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்ல டாக்டருக்கு வாய் வரவில்லை. ‘ம்’ என்று வாய்க்குள் முனகியவராய் சிறிது நேரம் சும்மாயிருந்தார். பிறகு சங்கரும் அவரும் பேச்சை அப்படியே விட்டுவிட்டு, வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள்; கமலாவும் மணியும் அவர்கள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதற்குள் ரயில் ஆற்றுப்பாலத்தைத் தாண்டி அம்பாசமுத்திர எல்லைக்குள் பிரவேசித்து விட்டது. அம்பாசமுத்திரம் ஸ்டேஷனில் ரயில் நின்றதும் அவர்கள் நால்வரும் கீழிறங்கி வெளியே வந்தார்கள். ஸ்டேஷனுக்கு வெளியே சங்கரையும் கமலாவையும் அழைத்துச் செல்வதற்காக அழகிய பியூக் கார் காத்துக் கொண்டு நின்றது. அவர்கள் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும், தலையில் முண்டாசு கட்டிய ஒரு நபர் மணியை நோக்கி ஓடி வந்தார். அவருக்குச் சுமார் ஐம்பது வயதிருக்கும். வாழ்க்கையில் மிகவும் அடிபட்டு நொந்தவர் என்பதை அந்த மனிதரின் கறுத்துப்போன உடலும் சுருக்கம் விழுந்து தொய்ந்து போன சதையும், பாளம் விழுந்து வரிக் கோடுகள் நிறைந்த நெற்றிச் சுருக்கமும் புலப்படுத்தின. அவரைக் கண்டதும் மணி அவரருகே சென்று, “என்ன இருளப்பக் கோனாரே, எங்கே வந்தீங்க?” என்று அன்புடன் கேட்டான். “என்ன தம்பி; அப்பா இந்த வண்டியிலியும் வரலியா? அம்மா பாத்துட்டு வரச் சொன்னாங்க. இன்னிக்குச் சாயரட்சைக்குள்ளே வாரதாகத்தான் தாக்கல் சொல்லிட்டுப் போனாகளாம்” என்றார் இருளப்பக் கோனார். “ஒரு வேளை பஸ்ஸில் வந்தாலும் வரலாம்” என்று கூறி விட்டு மேலே நடந்தான் மணி. இதற்குள் சங்கர் மணியைக் கூப்பிட்டவாறே, “வாப்பா மணி டாக்டரும் நீயும் வீட்டுக்கு வந்து காப்பி சாப்பிட்டுட்டுப் போகலாம்” என்றான். சங்கரின் உத்தரவைத் தட்டிக்கழிக்க முடியாது என்று மணிக்குத் தெரியும். எனவே கையிலிருந்த புத்தகங்களை இருளப்பக் கோனாரிடம் கொடுத்து, வீட்டுக்குக் கொண்டு போகச் சொல்லிவிட்டு, காரை நோக்கி நடந்தான் மணி. சிறிது நேரத்தில் அந்த பியூக் கார் மெல்லிய உறுமலோடு மங்களபவனத்தை நோக்கிப் பறந்து சென்றது. புழுதி மண்டலத்தைப் பின் தங்க விட்டுவிட்டுச் செல்லும் அந்தக் காரையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார் இருளப்பக் கோனார். சிறிது நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு, துடிதுடிக்கும் உதடுகள் படபடக்க, அவரது வாய், “என்னவோ இந்தப் புள்ளைக சிநேகம் இன்னிக்கிப் போலே என்னைக்கும் நிலைச்சி நிக்கணும்” என்று தனக்குத்தானே சொல்லி ஆசீர்வதித்தது. அதே கணத்தில் அவரது கண்ணிலிருந்து ஒரு சொட்டு சூடு நிறைந்த கண்ணீர்த் துளியும் அவரது கையிலிருந்த புத்தகங்களின் மீது விழுந்து தெறித்தது. |